Tamil film reviews| Hollywood reviews| World Cinema reviews| PS3 Game reviews| Book reviews

 
 
Random Article

 
20
Posted December 4, 2009 at 5:38 PM. by Rajesh Da Scorp in English films
 
 

From Hell (2001) – English

From Hell
From Hell

சரித்திரத்தின் ரத்தக்கறை படிந்த பக்கங்களில் பல மர்மங்கள் அடங்கியுள்ளன. இந்த மர்மங்களின் காரணகர்த்தாக்கள், பல நூற்றாண்டுகள் சென்ற பிறகும், இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். ஒவ்வொருமுறை இந்தச் சம்பவங்களைப் பற்றிப் படிக்கும்போதெல்லாம், அவர்கள் உயிர்த்தெழுகின்றனர். அந்த மர்மங்களுக்குப் பின்னால் நிகழ்ந்த நிகழ்வுகளைப் பற்றி, அவைகளை நிகழ்த்திய நபர்களுக்கே தெரியும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை நாம் உடனிருந்து பார்த்தால் எப்படி இருக்கும்?

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், இங்கிலாந்தில், ஐந்து விலைமாதுகள், மிகவும் குரூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். அக்கொலைகளின் குரூரம், ஒவ்வொரு கொலைக்குப்பின்னும் அதிகரித்தது. கொலைசெய்யப்பட்டவர்களின் உடல் கிழிக்கப்பட்டு, முகம் சிதைக்கப்பட்டு, உள்ளுறுப்புக்கள் அகற்றப்பட்டிருந்தன (கடைசியாக அவன் கொலை செய்த பெண்ணின் குடலை நிஜமாகவே உருவி, அறையெங்கும் மாலையாகத் தொங்கவிட்டிருந்தான்). இக்கொலைகளின் காரணம் யாருக்கும் தெரியவில்லை. கொலையாளியையும் கண்டுபிடிக்க முடியவில்லை. கொலையாளியைப் பற்றிய ஒரே ஒரு விஷயம் மட்டுமே தெரிந்தது. அக்கொலையாளி, ஒரு இடதுகைப்பழக்கம் உடைய நபராக இருக்கலாம் என்பதே அது. மேலும், உறுப்புக்கள் அகற்றப்பட்டிருந்தமையால், கொலையாளி ஒரு கைதேர்ந்த மருத்துவராக இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம் என்றும் கருதப்பட்டது.

இருந்தாலும், கொலையாளியைப் பற்றிய ஒரு துப்பு கூட கிடைக்கவில்லை. அதேபோல், இந்த ஐந்து கொலைகளுக்குப் பின்னர், கொலையாளி மாயமாக மறைந்து போனான். அதற்குப்பிறகும் சில கொலைகள் நடந்தாலும், அது இவனால் நிகழ்த்தப்படவில்லை என்ற முடிவிற்கு ஸ்காட்லாந்து யார்டு வந்தது.

இவன் யார்? இக்கொலைகளுக்குக் காரணம் என்ன? அவன் எங்கு போனான்? ஒரு கேள்விக்கும் இன்னமும் விடை கிடைக்கவில்லை. இவர்தான் கொலையாளி, அவர்தான் கொலையாளி என்று பலர் மேல் சந்தேகம் இருந்தாலும், எதுவும் நிரூபிக்கப்படவில்லை. அவனுக்கு ஸ்காட்லாந்து யார்டு வைத்த பெயர் தான் . . . .

‘ஜாக் த ரிப்பர்’.

இந்த ஜாக் த ரிப்பரை வைத்து பல கதைகள் எழுதப்பட்டுள்ளன. இதனை வைத்து ஒரு கிராஃபிக் நாவல் (லயன் காமிக்ஸின் ‘ஏஜென்ட் XIII – நினைவிருக்கிறதா?) உருவாக்கப்பட்டது. இந்த கிராஃபிக் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் ‘From Hell’.

வருடம்: 1888. இங்கிலாந்தின் வைட்சாப்பல் என்ற இடம். அந்த ஊரின் அழுக்கான, ஆபத்தான பகுதி. மேரியும் இன்னும் சில பெண்களும் அங்கு உடலை விற்றுப் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கின்றனர். மேரியும் இன்னும் நான்கு பெண்களும் நெருக்கமான தோழிகள். திடீரென்று ஒரு நாள், அவர்களில் ஒரு பெண் காணாமல் போகிறாள். சிறிது நாட்களிலேயே, மற்றொரு பெண்ணும் கொலை செய்யப்படுகிறாள்.

சார்ஜெண்ட் பீட்டருக்கு நெருக்கடி. கொலையாளி யாரென்று கண்டுபிடித்தாக வேண்டிய சூழ்நிலை. வேறு வழி இல்லாமல், இன்ஸ்பெக்டர் ஃப்ரெடரிக்கிடம் இந்தக் கேஸ் ஒப்படைக்கப்படுகிறது. இவரிடம் இப்பணியைக் கொடுக்கத் தயங்கிய காரணம், அவர் ஒரு கஞ்சா பார்ட்டி. எப்பொழுது பார்த்தாலும், கஞ்சா அடித்துவிட்டு, கிறங்கிக்கிடக்கும் ஒரு ஆள். ஆனால், மிகுந்த திறமைசாலி. கேஸைக் கையிலெடுக்கும் ஃப்ரெடரிக், மர்மத்தின் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கிறார். அவருக்கு உள்ள விசேட சக்தியின் மூலம், அவருக்கு அவ்வப்போது ஏதாவது முக்கியத் தடயம் அவர் மூளையில் தெரிகிறது. எனினும், இதற்குள் கொலையாளி, நான்குபேரைக் கொன்றுவிடுகிறான். அவன் அடுத்துக் கொல்லப்போவது மேரியைத் தான் என்று அவருக்குத் தெரிகிறது.

அந்த நாளும் வருகிறது. கொலைகாரனை நாம் பார்க்கிறோம். அவன் வெகுநேர்த்தியாக உடையணிந்துகொண்டு, உபகரணங்களைத் தேர்வு செய்து கொண்டு, தனது கோச்சுவண்டியில் கிளம்புகிறான். அவனது முகத்தை நம்மால் காண முடியவில்லை.

அவன் மேரியைக் கொன்றானா? அவன் உண்மையில் யார்? அவனது நோக்கம் என்ன? ஒரு திடுக்கிடும் உண்மையோடு, இக்கேள்விகளுக்கு விடை, படத்தில் கிடைக்கிறது.

இன்ஸ்பெக்டர் ஃப்ரெடரிக்காக, ஜானி டெப். இப்படம் வெளிவந்த காலத்தில், அவர் தொடர்ச்சியாக இம்மாதிரி சரித்திர மர்மப் படங்களாகவே நடித்து வந்தார் (ஸ்லீப்பி ஹாலோ மற்றொரு உதாரணம்). மிகையில்லாத நல்ல நடிப்புக்குச் சொந்தக்காரர். கஞ்சா அடித்ததுபோன்ற ஒரு நிலைகுத்திய பார்வையோடு, படம் முழுவதும் வருகிறார். இவரின் நடிப்பு பற்றி நான் சொல்லவே தேவையில்லை.

மேரியாக ஹெதர் க்ரஹாம். மிக அழகான இந்த நடிகை, ஏனோ ஹாலிவுட்டில் சோபிக்கத் தவறிவிட்டதாகவே எனக்குப்படுகிறது. சார்ஜெண்ட் பீட்டராக, கோல்டன் ஐ மற்றும் த வோர்ல்ட் ஈஸ் நாட் எனஃப்(பாண்டிடம் திட்டு வாங்கும் தாதாவாக வருவாரே) புகழ் ராப்பி கோல்த்ரேன்.

மொத்தத்தில், ஒரு நல்ல த்ரில்லர். பழமையான இங்கிலாந்து, அதன் பனிபடர்ந்த வீதிகள், கோச்சு வண்டிகள், இடையே மர்மங்கள்.. இம்மாதிரி விஷயங்கள் உங்களுக்குப் பிடிக்கும் என்றால், இப்படமும் பிடிக்கும்.

பின்குறிப்பு:- ஜாக் த ரிப்பரைப் பற்றி நான் முதன்முதலில் படித்துத் தெரிந்துகொண்டது, நம் சுஜாதாவின் ‘ஏன், எதற்கு, எப்படி’ புத்தகத்தில். அவர் இடது கைப்பழக்கம் உள்ளவர்களைப் பற்றிச் சொல்லும்போது, ரிப்பரைப் பற்றியும் சொல்லியிருப்பார்.

ஃப்ரம் ஹெல் படத்தின் டிரைலரைக் காண, இங்கே.

Facebook comments

comments


20 Comments


 1.  

  அய்யா நான் இங்கிலீஷ்லதான் தமிலிஷ் தலைப்பு குடுத்தேன். ஆனா அது தமிழ்ல கண்டபடி மாறினதைக் கவனிக்கல.. கண்டுக்காதீங்க.. :)
 2.  

  ஹியர் யு கோ…!

  ட்ராஃப்டில் இருந்து ஒருப் படம் போச்சி! :) :)
 3.  

  தமிழிஷோட.. டெக்ஸ்ட் பாக்ஸை உபயோகிக்கக் கூடாதுங்க. அங்க காப்பி பேஸ்ட் மட்டும்தான் பண்ணனும்.
 4.  

  திரும்ப.. நீங்க எடிட் பண்னலாம்..
 5.  

  இதோ சரிபண்ணிட்டேன் . . .மறுபடியும் நன்றி பாலா… :) . .அடடா நீங்களும் எழுத நினைச்சீங்களா.. இது தெரியாமப் போச்சே. :(
 6.  

  கண்ணாயிர‌ம் க‌ண‌க்குனு புதுசா ப‌ட‌ லிஸ்ட் ஆர‌ம்பிக்க‌ வேண்டிய‌து தான். ந‌ல்லா இருக்குங்க‌.

  -Toto
  http://www.pixmonk.com
 7.  

  @ Toto – உங்க வாழ்த்துகளுக்கு நன்றிங்க . . மறுபடி வாங்க . .
 8.  

  விமர்சனத்திற்கு நன்றி தலைவரே.. அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்..
 9.  

  மீ டூ வெயிட்டிங். சீக்கிரமா தலிவரே…
 10.  

  Nice review. I will watch this movie today and come back with my comments.
 11.  

  @ சென்ஷி, @ முரளிகுமார் – இதோ அடுத்த பதிவு வந்துக்கினே இருக்கு… வீக்எண்ட் ஆச்சுங்களா.. கொஞ்சம் அவுட்டிங் போயிட்டேன்.. ஹீ ஹீ . .

  @ கோழிப்பையன் – பாருங்க.. பார்த்துட்டு சொல்லுங்க..
 12.  

  நல்ல படம். யாரும் ஊகிக்க முடியாத கிளைமேஸ்.
 13.  
  Anonymous

  From Parithi:

  Agent XIII in Lion comics. are you mentioning about “Iratha padalam”?
  If you have meant that then XIII is not the story about jack the ripper it is about a man who lost his memory and is involved in the assasination similar to Rober Ludlum’s Bourne series.
 14.  

  @ பரிதி – நான், கிராபிக்ஸ் நாவல்கள் பற்றி சொல்லும்போது தான், அதற்கு ஒரு உதாரணமாக, ரத்தப்படலமும் ஒரு கிராபிக்ஸ் நாவல் என்று சொன்னேன். அதன் பரம ரசிகன் நான் :) . . இரத்தப்படலம் தான் from hell என்று சொல்லவில்லை. . தெளிவுபடுத்திவிட்டேன் என நினைக்கிறேன். உங்கள் கருத்துக்கு நன்றி.
 15.  

  நண்பரே,

  காமிக்ஸ் வாசகர் ஒருவரை சினிமாப் பதிவுகள் மூலம் கண்டு கொண்டதில் மகிழ்ச்சி.

  இத்திரைப்படத்தினை நான் பார்க்கவில்லை ஆனால் ஆலன் மூர் எழுதிய கிராபிக் நாவலைப் படித்திருக்கிறேன். அருமையான நாவல் அது. அது குறித்த பதிவு என் வலைப்பூவில் உண்டு.
  [சுட்டி இதோhttp://kanuvukalinkathalan.blogspot.com/search/label/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D]
  நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். நல்ல வலைப்பூக்களில் என் வலைப்பூவை இணைத்தது உங்கள் பெருந்தன்மை. ஆனால் அந்தப் பெயரைக் காப்பாற்ற முயல்கிறேன். என் நேர வசதிப்படி உங்கள் பதிவுகளைப் படித்துவிட்டு கருத்துக்களைப் பதிகிறேன்.
 16.  

  நண்பரே,

  நீங்களும் இடது கைக்காரர் என்று கிலியை ஏற்படுத்துகிறீர்களே :))
 17.  

  @ காதலரே – உங்கள் வலைப்பூவை நேற்றுதான் பாத்தேன். . லக்கி லூக் பட விமரிசனம் மூலமாக. பார்த்தவுடன் பயங்கர சந்தோஷம் அடைந்தேன். . அதில் உள்ள காமிக்ஸ்களின் விபரங்களைக் கண்டு! இனி அதன் தீவிர வாசகன் நான்! உங்கள் சுட்டியைப் படித்துவிட்டு என் கருத்தைப் பதிகிறேன்.

  அப்புறம், அந்த இடது கை பற்றி – ஆமாம்! நான் இடதுகைக்காரன் என்பதை, இந்தப்பதிவிலேயே போட்டு, ஒரு கிலியை ஏற்படுத்தலாம் என்று இருந்தேன் :). சரி வேண்டாம் என்று விட்டுவிட்டேன் :) . நீங்கள், எனது புரோபைலில் இருந்து கச்சிதமாக இதனைப் படித்து, எழுதி உள்ளீர்கள்! நல்ல கவனிப்பு :)

  @ வாலு – உங்கள் விமரிசனம் சூப்பர் ! நானும் ஸ்டார் மூவிசின் ரசிகன்தான்! பட்டைய கிளப்புங்க !

Leave a Reply