Matchstick Men (2003) – English

by Rajesh March 4, 2010   English films

Sharing is caring!

போன பதிவான 8மிமியை எழுதும்போதே, இந்தப் படத்தைப் பற்றி நினைத்துக் கொண்டேன். இப்படத்தைப் பற்றி எழுதாமல் இன்னமும் இருக்கிறோமே என்று. பின்னூட்டத்திலும் விஸ்வா இப்படத்தைப் பற்றிச் சொல்ல, இதோ பதிவு ரெடி.

இப்படத்தைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால், ‘கான் ஆர்டிஸ்ட்’ என்ற வார்த்தையைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும். ‘பலே கில்லாடி’ என்று நம்மூரில் அழைக்கப்படுபவன் தான் இந்தக் கான் ஆர்டிஸ்ட். ஒரு நபருடன் நெருங்கிப் பழகி, அவர்களது நம்பிக்கையைச் சம்பாதித்துக் கொண்டு, பின்னர் எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு கம்பியை நீட்டுபவனே இந்தக் கான் ஆர்டிஸ்ட். சில வாழும் உதாரணங்களைச் சொல்லப்போனால், நம்ம ஃப்ரான்க் அபக்னாலி (கேட்ச் மி இஃப் யு கேன் நினைவிருக்கிறதா), நம்மூரு போலி சாமியார்கள் போன்ற பலரைச் சொல்லலாம்.

ஓகே. லாஸ் ஏஞ்ஜலீஸில், இப்படிப்பட்ட ஒரு கான் ஆர்டிஸ்ட் – பலே கில்லாடியாக வாழ்ந்து கொண்டிருப்பவனே ராய். ராய் வாலர் (நிகொலஸ் கேஜ்). அடுத்தவர்களை ஏமாற்றிப் பிழைக்கும் ஒரு ஆளாக இருந்தாலும், அவனுக்குப் பல்வேறு விதமான டிஸார்டர்கள் இருக்கின்றன – தூசியைப் பார்த்தாலே அலர்ஜி வரும் மைஸோஃபோபியா, அதிர்ச்சிகளைத் தாங்க முடியாத அகோராஃபோபியா (என்னது அகோரியா !?), நிறையப் பேருக்குத் தெரிந்த அப்ஸஸிவ் கம்பல்ஸிவ் டிஸார்டர் இன்னபிற. இத்தோடு கூட, திடீர் திடீரென அதிர்ச்சியடையும் ஒரு மனிதனாக வேறு அவன் இருக்கிறான்.

இப்படி நாளொரு ஃபோபியாவும் பொழுதொரு அதிர்ச்சியும் அடைந்து அவனது வாழ்க்கை போய்க்கொண்டிருக்கையில், ஒரு நாள் திடீரென உடல்நலக் குறைவுக்கு உள்ளாகிறான். அப்பொழுது, அவனது நண்பனான ஃப்ராங்க், ஒரு மருத்துவரைப் பரிந்துரைக்கிறான்.

அந்த மருத்துவரான க்ளெய்ன், ராயைப் பரிசோதித்துவிட்டு, அவனது ஸ்ட்ரெஸ் குறைவதற்காக, அவனது பழைய வாழ்க்கையைப் பற்றிக் கேட்கிறார். நிறைமாதமாக இருந்த மனைவியை ராய் விவாகரத்து செய்ததை அறிகிறார். அவளுக்கு என்னவாயிற்று என்ற ஆர்வமும் ராய்க்கு இருப்பதை அறியும் க்ளெய்ன், சில நாட்கள் கழித்து, அவளிடம் பேசி, அவளுக்கு ஒரு பதிநான்கு வயது மகள் இருப்பதை அறிகிறார். அவள் பெயர் ஏஞ்சலா.

தனக்கு ஒரு மகள் இருப்பதை எண்ணி ஆனந்தமடையும் ராய், க்ளெய்னின் மூலமாக ஏஞ்சலாவைச் சந்திக்கிறான். அவளோ, இவனுக்கு நேர் எதிராக இருக்கிறாள். எப்பொழுது பார்த்தாலும் சந்தோஷமாக, வாழ்க்கையைக் கொண்டாடுபவளாக, ஒரு பட்டாம்பூச்சியைப் போல் பறந்துகொண்டிருக்கிறாள். மகளைச் சந்தித்த மகிழ்ச்சியில், தனது தோழன் ஃப்ராங்க் சொல்லும் ஒரு ‘வேட்டையை’ நடத்தச் சம்மதிக்கிறான்.

அந்தப் பணக்காரனின் பெயர் ’சக்’. இவர்கள் இலக்கு: அவனது பெரும் பணம். ஒரு பிஸினஸ்மேன் போல் நடித்து, அவனது பணத்தை ஒரு இடத்துக்குக் கொண்டுவர வைத்து, அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதை விடப் பெரும் பணம் அளிப்பது போன்ற ஒரு வியாபாரத்தைக் கச்சிதமாக செட் செய்கிறார்கள் இருவரும். சக்கும் இவர்களை நம்பிவிடுகிறான்.

இந்நிலையில், ஒரு நாள் ஏஞ்சலா, ராயின் வீட்டிற்கு வந்து விடுகிறாள். தனது தாயோடு சண்டையிட்டுவிட்டு, அங்கு வந்துவிட்டதாக அழும் அவள், அங்கு சில நாட்கள் தங்கிக்கொள்வதற்கு ராயின் அனுமதி கேட்கிறாள். தனது பல ஃபோபியாக்களால், ஒரு கட்டுக்கோப்பான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் ராய், ஆரம்பத்தில் எரிச்சல் அடைந்தாலும், தன்னுடைய மகள் அருகில் இருப்பது அவனுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கிறது.

ஒருநாள், ஏஞ்சலாவுக்கு ராயின் தொழில் தெரிந்துபோய் விடுகிறது. அவனை விட்டுவிட்டுப் போய்விடுவாள் என்று ராய் நினைக்கும் நேரத்தில், தனக்கும் இத்தொழிலைக் கற்றுக்கொடுக்கச் சொல்லிக் கெஞ்சுகிறாள் ஏஞ்சலா. மகள் மீது வைத்திருக்கும் அன்பினால், ராயும் அவளுக்குக் கற்றுக் கொடுக்கிறான்.

திடீரென, தாங்கள் சக்கைச் சந்திப்பதற்கு முடிவு செய்திருந்த நாள், ஒரு நாள் முன்னதாக மாற்றப்பட்டுள்ளதாக ஃப்ராங்க் வந்து சொல்கிறான். சக்கின் நேரமின்மையால், ஒரு நாள் முன்னதாகவே சந்திப்பு நடக்கிறது. என்ன செய்வதென்றே தெரியாத ராய், வேறு வழியில்லாமல், மகளையும் கூட்டு சேர்த்துக் கொள்கிறான்.

ப்ளான்படி, ஏஞ்சலா சக்கை திசைதிருப்புகையில், சூட்கேஸை எடுத்துக்கொண்டு ஃப்ராங்க்கும் ராயும் ஓடிவிட வேண்டும். அத்தனையும் கச்சிதமாக நடக்கிறது. ஆனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்துகொண்ட சக், இவர்களைத் துப்பாக்கியுடன் துரத்துகிறான். ஆனால், அனைவரும் பணத்துடன் தப்பிவிடுகிறார்கள்.

ராய் ஏஞ்சலாவிடம், தன்னை வந்து கொஞ்ச நாட்கள் சந்திக்க வேண்டாம் என்று சொல்கிறான். அவளது பாதுகாப்புக்காக. மகள் இல்லாமல், மறுபடி நோய்வாய்ப்படும் ராய், மருத்துவர் க்ளெய்னிடமே மறுபடி செல்கிறான். அவர் கொடுத்த மருந்து, சாதாரண சர்க்கரை மாத்திரை என்பதைத் தெரிந்து கொள்கிறான். அவன் மனதில்தான் எல்லாமே உள்ளது என்று சொல்லும் க்ளெய்ன், அவன் மனது வைத்தால் எல்லாமே சரியாகி விடும் என்றும் சொல்கிறார். எனவே, மகளுடன் இருந்தாலே எல்லாமே சரியாகிவிடும் என்பதை உணரும் ராய், திருட்டுத்தனத்தை விட்டுவிட்டு, ஏதாவது வேலை செய்து, ஏஞ்சலாவுடன் வாழ்ந்து விடலாம் என்று முடிவெடுக்கிறான். இது, அவனது நண்பனான ஃப்ராங்குக்குப் பிடிப்பதில்லை.

சில நாட்கள் கழித்து ஏஞ்சலாவைச் சந்திக்கும் ராய், திடீரென அங்கு, தன்னிடம் பணத்தை இழந்த சக், ஃப்ராங்க்கை அடித்துப் போட்டு, துப்பாக்கியுடன் நிற்பதைப் பார்த்து விடுகிறான். திடீரென செயல்படும் ஏஞ்சலா, சக்கைச் சுட்டுவிட்டு, ஃப்ராங்கை விடுவித்து, அவனுடன் தப்பித்துவிடுகிறாள். அவர்களுடனே ஓட எத்தனிக்கும் ராயை, குண்டடிபட்ட சக்கின் அடி, மயக்கமுற வைக்கிறது.

கண்விழிக்கும் ராய் இருப்பது, மருத்துவர் க்ளெய்னின் மருத்துவமனையில். ராய் விழிப்பதற்காகக் காத்திருக்கும் போலீஸ்காரர்கள், சக், குண்டடியால் இறந்துவிட்டதையும், ஃப்ராங்க்கையும் ஏஞ்சலாவையும் கண்டுபிடிக்க இயலவில்லை என்பதையும் ராயிடம் சொல்கின்றனர். வருத்தமுறும் ராய், அவர்கள் சென்ற பின், தன்னுடைய வங்கி லாக்கரின் பாஸ்வேர்டைக் க்ளெய்னிடம் கொடுத்து, எப்படியாவது ஏஞ்சலாவிடம் தான் இதுவரை சேர்த்துவைத்திருந்த பணம் அனைத்தையும் கொடுக்கச் சொல்கிறான். க்ளெய்னும் சம்மதிக்கிறார்.

இதன்பின் என்னவாயிற்று? போலீஸினால் ஏஞ்சலாவைப் பிடிக்க முடிந்ததா? தந்தையும் மகளும் ஒன்று சேர்ந்தார்களா? ராய் பிழைத்துக் கொண்டானா? படத்தில் காணுங்கள். ஆனால் ஒன்று – நீங்கள் சற்றும் எதிர்பாராத க்ளைமேக்ஸ் உங்களை அசர அடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இப்படத்தின் இயக்குநர், ரிட்லி ஸ்காட். இவரைப் பற்றி எதுவுமே சொல்லத் தேவையே இல்லை. மிகப்பிரபலமான, அருமையான, ஒரு வெர்ஸடைல் இயக்குநர். பல பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்களைக் கொடுத்தவர்.

நிகொலஸ் கேஜ், மறுபடியும் பிரமாதமான நடிப்பை நல்கியிருக்கிறார். ஒரு அப்ஸெஸிவ் கம்பல்ஸிவ் டிஸார்டர் பேஷண்டாக, ஒரு கான் ஆர்டிஸ்டாக, ஒரு தந்தையாக, ஒரு நண்பனாக – இப்படிப் பல தரப்பட்ட வேடங்களைத் திறம்பட செய்திருக்கிறார்.

இப்படம், ‘ப்ளஃப்மாஸ்டர்’ என்ற பெயரில், ஹிந்தியில் சுடப்பட்டது. அபிஷேக்கிற்கு ஒரு நல்ல ப்ரேக்காக அமைந்த இப்படம், அவரது பிந்நாளைய ஹிட்களுக்கு அடித்தளம் போட்டுக் கொடுத்தது என்றே சொல்லலாம்.

படு விறுவிறுப்பாகச் செல்லும் இப்படம், கட்டாயமாக உங்கள் முகத்தில் ஒரு புன்முறுவலை வரவழைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மேட்ச்ஸ்டிக் மென் படத்தின் ட்ரைலர் இங்கே.

Facebook Comments

Sharing is caring!

fb Comments

comments

  Comments

25 Comments

 1. தமிலிஷ் படுத்துருச்சு (வழக்கப்படி) . .இனிமே நானு காலைல தான் நெட்டு செக் பண்ணுவேன் .. நண்பர்கள் யாராவது தமிலிஷ்ல ஆட் பண்ண முடியுமா . .

  Reply
 2. அதாவது, கருந்தேளை தவிர.

  எனக்கு பிடித்த ஒரு படத்தை பற்றி உடனடியாக பதிவிட்டமைக்கு நன்றி.

  Reply
 3. //சில வாழும் உதாரணங்களைச் சொல்லப்போனால், நம்ம ஃப்ரான்க் அபக்னாலி (கேட்ச் மி இஃப் யு கேன் நினைவிருக்கிறதா)//

  தல, உண்மையை சொல்லப்போனால் இவர்களுக்கு எல்லாம் தகப்பன் ஒருவர் இருக்கிறார். Ferdinand Waldo Demara Jr என்ற பெயரை கூகிளில் இட்டு பாருங்கள். இவரை வைத்து தான் பல கான் ஆர்டிஸ்ட் கதைகளும் படங்களும் எடுக்கப்படுகின்றன. பத்து வருடங்களுக்கு முன்பு ஸ்டார் வேர்ல்ட் சேனலில் The Pretender என்ற தொடர் வந்து புகழ் பற்றது நினைவிருக்கலாம் (எனக்கு மிகவும் பிடித்த தொடர் அது). அந்த தொடருக்கும் இந்த மனிதர் தான் இன்ஸ்பிரேஷன்.

  இவரை வைத்து தான் பல கான் ஆர்டிஸ்ட் கதைகள் இன்றளவும் பின்னப்படுகின்றன.

  Reply
 4. //இப்படம், ‘ப்ளஃப்மாஸ்டர்’ என்ற பெயரில், ஹிந்தியில் சுடப்பட்டது. அபிஷேக்கிற்கு ஒரு நல்ல ப்ரேக்காக அமைந்த இப்படம், //

  சம்பந்தம் இல்லாத மற்றுமொரு உபரி தகவல். இந்த ப்ளஃப்மாஸ்டர் ரிலீஸ் ஆனா அதே நாளில் தான் சஞ்சய் தத் நடித்த ஜிந்தா என்ற படமும் ரிலீஸ் ஆனது (என்று நினைக்கிறேன்) . அன்று நான் முதலில் ஜிந்தா படத்தையும் அடுத்த இரவுக் காட்சியில் இந்த படத்தையும் பார்த்தேன். இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால் அந்த ஜிந்தா படம் நம்ம Park Chaan Wook டைரக்ட் பண்ண ஓல்ட் பாய் படத்தின் இந்தியாக்கம்.

  அதனால் ஒரேநாளில் நான் ரசித்த இரண்டு படங்களின் இந்தியாக்கத்தை பார்த்தேன்.

  Reply
 5. இந்த படத்தில் நிகோலஸ் கேஜ் அவர்களுக்கு இருக்கும் பல போபியாவில் ஒன்று டஸ்ட் அலர்ஜி. அதனால் அவர் கார்பெட்டை அடிக்கடி துடைப்பதும், கிளீன் செய்வதும் அவரின் பார்ட்னர் அழுக்கு ஷூவுடன் வருவதும், அதனால் கேஜ் ஆத்திரம் ஆவதும் என்று பல காட்சிகள்.

  Reply
 6. வழக்கம் போல மிகவும் அருமையாக எழுதி இருக்கிறீர்கள் கருந்தேள்.

  அடுத்த அதிரடி என்ன?

  Reply
 7. நல்லதொரு விமர்சனம் மறுப்படியும். Bluffmaster பார்த்து இருக்கேன். இதையும் பார்ப்போம்.

  உங்ககிட்ட மத்ததெல்லாம் ஓகே. ஆனா இந்த ‘இந்திய எதிர்ப்பு’ மட்டும் தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அதுசரி அது உங்கள் தனிப்பட்ட ‘விருப்புவெறுப்பு’. !!

  Reply
 8. நண்பரே,

  விறுவிறுப்பாக எழுதியிருக்கிறீர்கள். போலிச் சாமியார் என்று எழுதி என் மனதை புண்படுத்தி விட்டீர்கள். நான் தியானம் செய்யப் போகிறேன். சிறப்பான பதிவு.

  Reply
 9. @ விஸ்வா – ஸ்டாட்டிஸ்டிகல் டேட்டாவுடன் பின்னூட்டமிட்டு, பின்னி விட்டீர்கள். நீங்கள் சொல்லியுள்ள அந்த ஃப்ராடுப்பயலைப் பற்றி இதோ படிக்கிறேன். . அப்புறம், ஹிந்திப்படங்களை வெறித்தனமாகப் பார்த்திருக்கிறீர்கள். . நல்லா இருக்கே . . ஜிந்தா படத்தப் பத்தி நீங்கள் சொல்லியுள்ள தகவல் மிகப்புதியது. அப்படத்தையும் பார்த்து விடுவோமே . . 🙂 . அந்த டஸ்ட் அலர்ஜி பற்றிய சீன்கள் பயஙகர காமெடி . .:-) நன்றி. .

  @ அண்ணாமலையான் – அப்படிச் சொல்லுங்க தல !!

  @ வினோத் கௌதம் – அது ஏன்னா, பல தடவ பட்டுப் பட்டு, ஒரு எரிச்சலே வந்துருச்சு பாஸு . .நிறைய தடவைகள் இந்தக் கொடுமைகளை நான் அனுபவித்திருக்கிறேன். . ஹூம். . அதுபற்றி ஒரு பதிவே , பின்னாட்களில் இடுவதாவ உத்தேசம் . .:-)

  @ காதலரே – நானும் வருகிறேன் .. ‘தியானம்’ செய்ய . .எனக்கு இன்று காலையிலிருந்து, ‘போலித் தவமிருக்கும் பொய்யான சாமிகளேஏஏஏஏ’ என்று அந்த ஒரு நிமிடம் படத்தில் கமலும் ஒய் ஜி மகேந்திரனும் பாடும் பாடல் நினைவுக்கு வந்து கொண்டே இருக்கிறது . . . டவுன்லோட் செய்ய உத்தேசம் . . 🙂 நன்றி..

  @ கார்த்திகேயன் – டவுன்லோடிருங்க நண்பா . .ரசிச்சி, சிரிச்சி பார்க்கலாம் . .. 🙂 நேத்துல இருந்து தமிலிஷ் மகா ப்ரச்னை பண்ணுது . . சீக்கிரம் சரியாயிட்டா நல்லது . .

  @ இராமசாமி – சூப்பர் பாஸு . . பட்டைய கிளப்புங்க !!

  Reply
 10. //போலிச் சாமியார் என்று எழுதி என் மனதை புண்படுத்தி விட்டீர்கள். நான் தியானம் செய்யப் போகிறேன்//

  நண்பர் கனவுகளின் காதலர் தற்போது தியானம் செய்வதால் புத்தம் புதிய சிஷ்யைகள் என்னை தொடர்பு கொள்ளலாம்.

  Reply
 11. நல்ல விமர்சனம். தொடர்ந்து நல்ல படங்களை அறிமுகப்படுத்துங்கள்.நன்றி.

  Reply
 12. ஒவ்வொரு முறையும் ஹாலிபாலில பார்த்து மிஸ்பண்ணிட்டே இருந்துட்டேன்.. இன்னிலேர்ந்து ஃபாலோயிங்..:)) கலக்குங்க…:)

  Reply
 13. @ மைதீன் – கண்டிப்பாக பாஸு . .உங்கள் ஆதரவோடு உறுதியாய் அறிமுகப்படுத்துவேன் . .

  @ ஷங்கர் – வாருங்கள் வாருங்கள் . .:-) நல்வரவு ஆகுக . .மிக்க நன்றி . .

  Reply
 14. க்ளைமேக்ஸ் ட்விஸ்ட் சூப்பரா இருக்கும்.

  புது டெம்ளேட் நல்லாயிருக்கு. நல்ல வேளை தேளை விட்டுடீங்க. 🙂

  Reply
 15. அட பின்னோக்கி . . இப்பதான் டெம்ப்ளேட் பாக்குறீங்களா . . .என்ன கொடும இது. . நீங்க ரொம்ப நாளா அப்ஸ்காண்ட் ஆயிட்டீங்க . . .மறுபடி வருக . . 🙂

  Reply
 16. Viswa

  Rajesh, you made me aware of many best films!!! thanks!!!

  Reply
  • Rajesh Da Scorp

   Thanks for the kind comment Vishwa

   Reply

Join the conversation