தில் தோ பச்சா ஹை ஜி . . .

by Rajesh April 25, 2010   Hindi Reviews

Sharing is caring!

சமீபகாலங்களில் நான் பார்த்த ஒரு மிக அருமையான, அழகான படம், இஷ்கியா. இதைப் போன்ற ஒரு படத்தைப் பார்த்துப் பல காலமாகிவிட்டது. காதல், நகைச்சுவை இவ்விரண்டையும் சரி விகிதத்தில் கலந்து கொடுத்துள்ள இப்படம், ஹிந்திப் படங்களில் முத்திரை பதித்துக் கொண்டிருக்கும் விஷால் பரத்வாஜின் உதவியாளர் அபிஷேக் சௌபே எடுத்துள்ள படம். விஷால் பரத்வாஜ், இப்படத்துக்கு இசை மற்றும் வசனம். ஹிந்திப் படங்கள் உயரத்துக்குப் போய்க்கொண்டிருப்பதற்கு, விஷால் பரத்வாஜ் மற்றும் அனுராக் காஷ்யப்பின் பங்கு மகத்தானது. தேவ் டி மற்றும் குலால் – அனுராக் காஷ்யப்பின் மேதமைக்குச் சான்று.

இந்த இஷ்கியாவில் நஸ்ருதீன் ஷாவின் நடிப்பைப் பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை. அர்ஷத் வார்ஸியுடன் சேர்ந்து அவர் அடித்திருக்கும் லூட்டிக்கு ஒரே ஒரு வார்த்தை தான் சொல்லவேண்டும். அராஜகம் !! இந்தப் படத்தைத் தமிழில் (ஒருக்கால்) எடுத்து, அதில் கமல் நடித்துவிடுவாரோ என்று இப்படம் பார்த்துக்கொண்டிருக்கையில் பயந்துவிட்டேன். நஸ்ருதீன் ஷாவின் நடிப்பு, இந்திய நடிகர்கள் அனைவருக்கும் ஒரு உதாரணம். மிகையே இல்லாமல், அவ்வளவு இயல்பாக உள்ளது.

சரி. இந்த இஷ்கியா படத்தில் ஒரு பாடல். கடந்த இரண்டு வாரங்களில், இப்பாடலை ஒரு 200 முறை கேட்டிருப்பேன். இசை – விஷால் பரத்வாஜே தான். பாடல்களைப் பற்றிய பதிவு எழுதி மிக அதிக நாட்களாகிவிட்டபடியால், இதோ, சமீப காலங்களில் வந்துள்ள மிக அழகான ஒரு பாடலைப் பற்றிப் பார்ப்போம்.

பாடலின் சிச்சுவேஷன் – காதல். ஐம்பது வயதைக் கடந்துவிட்ட ஒருவன். வாழ்க்கை முழுவதும் ஓடிக்கொண்டே இருப்பவன். திருடன். அவன், ஒரு பெண்ணைப் பார்க்கிறான். இதுவரையில் அவனது வாழ்க்கையில் வந்திராத ஒரு அபூர்வமான உணர்வு அவனது மனதில் துளிர்விடுகிறது. அந்த உணர்வை அவன் அனுபவிக்க விரும்புகிறான். அது அவனுக்கு ஒரு நிம்மதியை அளிக்கிறது. அதே சமயம், அவன் மனதில் ஒரு ஆற்றாமையும் எழுகிறது. இவ்வளவு வயதிற்கு மேல் அப்பெண் தன்னை விரும்புவாளா என்பதே அது.

இத்தனை உணர்வுகள் அவனது உள்ளத்தில் அலைமோத, பின்னணியில் அவனது உள்ளம் ஒரு பாடலை இசைக்கிறது. அப்பாடலே, ‘தில் தோ பச்சா ஹை ஜி’.

’அவளை வெறுமனே பார்த்தாலே, என்னால் பார்வையைத் திருப்ப முடிவதில்லை;

என்னால் இந்தப் பட்டு நூலைக் கிழித்தெறிய முடியவில்லை;

எனது வயது அதிகரித்து, நான் வெள்ளையாக மாறியாகிவிட்டது;

இருப்பினும், இளமையின் கருமேகங்கள் என்னை விட்டு நீங்க மறுக்கின்றன;

ஓ. என்னுடைய இதயத்துடிப்பும் இப்பொழுது எகிறுகின்றது;

எனது முகத்திலிருந்து அதன் வண்ணங்கள் வடிகின்றன;

தனிமையான இரவுகளைக் கண்டு பயமாக இருக்கிறது;

எனது உள்ளம் ஒரு அப்பாவிக் குழந்தையே தான் . . .

எவருக்குத் தெரியும்; எனது உள்ளம் இப்படி ஒரு ரௌடியாக இருக்கும் என்று;

அது எப்பொழுதும் என்னைப்போல் தூயதாக இருக்கும் என்றல்லவா நான் எண்ணினேன்;

அது சத்தமிடுகிறது; முக்கியமில்லாத, வெறும் பேச்சின் மேல் கவனம் கொள்கிறது;

இத்தகைய ஒரு உள்ளத்தைப் போன்ற ஒரு கயவன் வேறு யாருமில்லை;

யாராவது என்னை நிறுத்துங்கள்; யாராவது என்னைப் பிடியுங்கள்;

இல்லையெனில், இந்த வயதில், நான் ஏமாற்றப்பட்டு விடுவேன்;

காதலில் விழுந்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்;

எனது உள்ளம், ஒரு குழந்தையாகவே இருக்கிறது;

இத்தகைய மென்சோகம் உள்ளம் முழுக்க விரவியிருக்கிறது; புன்னகைப்பதற்கும் அஞ்சுகிறேன்;

எனது இளமை முழுதும் துண்டுகளாகவே கழிந்துவிட்டது; இப்பொழுது, வயதும் ஆகி விட்டது;

இதயம் வேகமாகத் துடிக்கிறது; அவள் அருகில் வருகிறாள்; ஆனால், என்னை அவள் பார்ப்பதில்லை;

இதயம், காதலின் கத்தியைப் பாய்ச்சுகிறது;

ஐயோ. . இந்தக் கணங்கள் ஏன் நகர மறுக்கின்றன;

ஏன் இவை எனது கண்களிலிருந்து மறைய மறுக்கின்றன;

என்னிடம் இதைச் சொல்லவே எனக்குப் பயமாக இருக்கிறது;

எனது உள்ளம், ஒரு குழந்தையாகவே இருக்கிறது;’

இரவில், இப்பாடலைக் கேளுங்கள். ராஹத் ஃபதே அலி கானின் குரல், உங்கள் உள்ளத்தைக் கிழிக்கும்.

ஒரு மிக மிக பச்சையான குரலில், எந்த மாய்மாலமும் செய்யாமல், ஒரே டேக்கில், அருமையாகப் பாடியிருக்கிறார் இப்பாடலை.

கேட்டுவிட்டுச் சொல்லுங்கள்.

.பாடலின் வீடியோவை இங்கே பார்க்கலாம். வீடியோவும் மிக அழகாக எடுக்கப்பட்டிருக்கிறது.

பி.கு – இப்படத்தைப் பற்றி, நமது சாரு ஏற்கெனெவே எழுதியிருக்கிறார். அந்த விமர்சனத்தை இங்கே காணலாம். அதே போல், நமது மயில்ராவணனின் விமர்சனத்தையும் இங்கே காணலாம்.

Facebook Comments

Sharing is caring!

fb Comments

comments

  Comments

19 Comments

 1. நண்பரே,

  பாடலைக் கேட்டேன் மிகவும் இனிமையாக உணர்ந்தேன். இசைக்கு உதவிய வாத்தியக் கருவிகளை கை விரல்களில் எண்ணிடலாம். அக்கோர்டியன் இசை இதயத்தின் மென்வலி அலையாக மெல்ல எழுகிறது. பாடகரின் குரலும் நீங்கள் எழுதியுள்ளபடியே எந்த விளையாட்டுக்களையும் காட்டாது நேரே உள்ளத்தில் இருந்து வருகிறது. நஸ்ருதீன் ஷாவின் பக்குவமான நடிப்பு அருமை. அதிலும் பெண்கள் நிறைந்த பஸ்ஸில் கனவில் இருந்து விழித்தெழுந்து அவர் சிரிக்கும் அந்த சிரிப்பு அபாரம்.

  சிறப்பான பாடலை அருமையாக மொழிபெயர்த்து அதனை ரசிக்க உதவியதற்கு நன்றி நண்பரே. அருமையான பதிவு.

  Reply
 2. இந்த படத்த பார்க்கனும்னு படம் வெளியானதிலிருந்து நினைச்சுக்கிட்டிருந்தேன். பாட்ட பத்திவேற எழுதிட்டீங்க.

  கை குருகுருன்னு டோரண்ட தேட ஆரம்பிச்சிடுச்சு. அறிமுகத்திற்கு நன்றி.

  Reply
 3. மீ த …………, சரி விடுங்க கருந்தேள்,

  பயணத்தில் இருப்பதால் இன்று முதல் நாம பின்னூட்ட போட்டிக்கு வரவே முடியாது. ஏற்கனவே நிறைய கேள்விப்பட்டுள்ளேன். நசீரின் நடிப்பு பற்றி சொல்லவே வேண்டாம்.

  Reply
 4. //எனது உள்ளம், ஒரு குழந்தையாகவே இருக்கிறது//

  யாருப்பா அது, என்னைப்பற்றி எழுதுவது? எனக்கு தான் விளம்பரமே பிடிக்காது என்பது தெரியாதா?

  Reply
 5. ரொம்ப சரி…காலைல இதப் படிச்சிட்டு இது வரை ஒரு 20௦ வாட்டி கேட்டுருப்பேன்…சூப்பர் பாட்டு…

  அந்த பஸ்ல எல்லா பொண்ணுங்களும் இவரப் பார்த்து சிரிக்கும் போது…இவரு குடுக்குற ரியாக்ஷன் பயங்கரமா இருக்குது…இது வரை கமல் மட்டும் தான் நடிகன்னு நெனச்சேன்…இவரு கமலுக்கு தாத்தா போல….

  நீங்களும் கரெக்ட்ட அந்த ஸ்டில் தான் போட்ட்ருக்கீங்க…same same..u like ..me like…

  இன்னும் நல்லா இந்த மாதிரி பாட்டப் பத்தியும் எழுதுங்க….

  Reply
 6. அப்பிடியே விமர்சனம் இங்கிட்டு போய் படிங்கன்னு எம்பட லிங்க் மொடுத்திருந்தீங்கன்னா சந்தோசமா இருந்திருக்கும்…சரி வுடுங்க்…அந்த பாடல் தான் உங்க காலர் ட்யூன் போல……..நல்லா எழுதியிருக்கீங்க புதுமாப்ள!

  Reply
 7. @ காதலரே – மிக்க நன்றி . . பாடலைப் பற்றி உங்களது கருத்தைப் பதிந்தமைக்கு . . என்னைப் பொறுத்தவரையில், விஷால் பரத்வாஜ், மக்களின் உணர்வுகளை இசையின் மூலமாக அளிப்பதில் வித்தகர். அவரது ஒவ்வொரு பாடலுமே மண்ணின் மணத்தைப் பிழிந்தளிக்கும். . நீங்கள் குறிப்பிட்ட அந்தப் பேருந்துக் காட்சிதான் எனது ஃபேவரைட் காட்சியுமாகும் 🙂 . . தங்கலது அழகான கருத்துக்கு நன்றி நண்பரே ..

  @ ஜீவன்பென்னி- என்ன நண்பா இன்னும் பார்க்கலையா? உடனே பாருங்கோள் !! மிக்க நன்றி . .:-)

  @ விஸ்வா – நம்ம நசீர் சும்மா பின்னியெடுத்துருக்காரு . . நீங்க பயணத்துக்கு போயிட்டபடியால், இனி நானும் பின்னூட்டப் போட்டிகளைப் புறக்கணிக்கிறேன் . . 🙂 நீங்க திரும்ப வாங்க . . அப்பறம் வெளாடலாம் . . 🙂

  //யாருப்பா அது, என்னைப்பற்றி எழுதுவது? எனக்கு தான் விளம்பரமே பிடிக்காது என்பது தெரியாதா?//

  அடடே . . அது நானே என்னைப் பத்தி எளுதுனதுன்னில்ல நினைச்சிகினு இருந்தேன் . . சேம் பின்ச் !! 🙂

  @ அஷ்வின் – மிக்க நன்றி, இப்பாட்டு உங்களுக்குப் பிடித்திருப்பது மகிழ்வைத் தருகிறது நண்பா . .

  @ பருப்பு – அது !! அந்த பஸ் காட்சி, மனசைத் தொடும்.. அதுவும் அல்லாமல், அந்த பஸ்ல அவரு அந்தப் பொண்ணப் பத்திக் கனவு காணிக்கிட்டே, நைட்டு வீட்டுக்குத் திரும்பி வருவாரு . . அப்ப அங்க என்ன நடக்கும்னா . .. நீங்களே பாருங்க . . எனக்கு கொஞ்ச நாளா நசிருத்தீன் ஷா கேரக்டர் மேல ஒரு பரிதாபம் இருந்துக்கினே இருக்கு . . அதான் அவரோட நடிப்பின் வெற்றி . . !! அதே போல், கமல இவுரு கூட கம்பேரே பண்ண முடியாது பாஸ். . இவரு இமயம்னா, கமல் அப்புடியே சிவாஜியின் மறு அவதாரம்.. ஓவர் ஆக்டிங் பண்ணி அந்தக் கேரக்டரையே சொதப்புறதுல. . இது என்னோட தனிப்பட்ட அபிப்பிராயம் . .

  @ மயிலு – சத்தியமா சொல்லணும்னா, பதிவின் ஆரம்பத்துலயே உங்க பதிவுக்கு ஒரு சுட்டி போடணும்னு நினைச்சிட்டேன் . . ஆனால், இந்தப் பாட்ட பார்த்துக்கினே பதிவு எழுதினதுனால, டோட்டலா மறந்துட்டேன் நண்பா . . அதுனால என்ன. . இப்போ பதிவப் பாருங்களேன் . . 🙂

  ஆமா.. இந்தப் பாட்டு தான் என்னோட காலர் ட்யூனா இருந்திச்சு ரொம்ப நாளா. . இப்போ மாத்திபுட்டேன் . . நிலா அது வானத்து மேலே . . !! 🙂

  Reply
  • I have a question about yours.Why does it matter so muhclTeccniha?ly, there is no reason not to allow spaces. Tags can be arbitrary strings as long as there is a way for seperating them, which can (but does not have to) be based on separator characters (like space or comma).The user experience is definitely different when spaces are forbidden, but i don’t think this is really important because the user experience of tags is pretty technical anyway.I prefer systems without spaces in tags, but consider this a question of taste, not reason.

   Reply
 8. நல்ல படம் தேள் இது. முதல் ஒரு முறை பார்த்து சில காட்சிகள் புரியாமல் போய், நண்பர் மயிலின் விமர்சனத்தை படித்து படத்தை மற்றுமொருதரம் பார்த்தேன். ஷாவின் நடிப்பை பற்றி சொல்லனும்னா அவர் அந்த கேரக்டாராக அப்படியெ வாழ்ந்திருக்கிறார் இந்த படத்தில். இருந்தாலும் என்னை பொருத்த மட்டில் வித்யாபாலந்தான் இந்த படத்தின் ஸ்பெஷல்.

  Reply
 9. தல இப்போ இந்த பாட்ட பார்க்கும் போது..இந்த ஏழைத் தமிழன் மனதில் உதித்த ஒரு ஆசை …

  இந்தப் பாட்டுல 2011 ல எப்டியாவது ஆட்சியப் புடிச்சிரலாம்ன்னு தட்டளிஞ்சுகிட்டு வர்ற நம்ம லட்சிய தி.மு.க தலைவர்..சகலகலா வல்லவர் மாண்புமிகு திரு. விஜய T ராஜேந்தர் நடிச்சிருந்தா எப்டி இருக்கும்….

  அதுவும் நமக்கு புடிச்ச அந்த பஸ் சீன்ல…

  Reply
 10. …greatest actors in all of film history

  Robert De Niro
  Al Pacino
  Naseeruddin Shah
  Dustin Hoffman

  its a sheer joy to watch this film for the performances alone.

  Reply
 11. @ இராமசாமி கண்ணன் – ஊங்களுக்குப் படம் பிடிச்சது பத்தி சந்தோஷம் . .:-) ஷா பின்னியெடுத்துட்டாருல்ல . . 🙂 நன்றி பாஸ் ..

  @ பருப்பு – அங்க புடிச்சீங்க பாயிண்ட்ட . .நம்ம விஜய ராஜேந்தர் மட்டும் அந்தக் காட்சில நடிச்சிருந்தாரு, உலகமே அளிஞ்சிருக்காது ?? 🙂

  அதுலயும், அந்தச் சிரிப்ப மட்டும் அவுரு சிரிச்சிருந்தாரு…. மக்கா டிரஸ்ஸ கிளிச்சிகிட்டு நாம தியேட்டர உட்டு ஓடிருக்கமாட்டோம் ?? 🙂

  @ கமல் – யெஸ் . இவங்க படங்களப் பார்ப்பதே ஒரு அனுபவம் . . க்ளாஸ் ஆக்டர்ஸ் . . வாரே வாஹ் . .

  Reply
 12. viki

  இந்தப் படத்தைத் தமிழில் (ஒருக்கால்) எடுத்து, அதில் கமல் நடித்துவிடுவாரோ என்று இப்படம் பார்த்துக்கொண்டிருக்கையில் பயந்துவிட்டேன். நஸ்ருதீன் ஷாவின் நடிப்பு, இந்திய நடிகர்கள் அனைவருக்கும் ஒரு உதாரணம். மிகையே இல்லாமல், அவ்வளவு இயல்பாக உள்ளது.////
  .
  .
  அட ஏற்கெனவே “A Wednesday” படத்தை அப்படி ரீமகே செய்து அதில் அரைகுறை நடிப்பை வெளிப்படுத்தினார் கமல்.இப்போதும் அதையே செய்து விடுவார் என நீங்கள் அஞ்சுவதற்கு அர்த்தம் இருக்கிறது.வேலை அதிகம் இருப்பதால் இப்படத்தை மற்றும் பல படங்கள்(பதிவிறக்கம் செய்து வைத்திருந்தாலும்) பார்க்க இயலவில்லை .நண்பர்கள் சிலர் “உனக்கு classic டேஸ்டுடா “என்கின்றனர்.அதற்கு காரணம்சாரு,எஸ் ராமகிருஷ்ணன் மற்றும் உங்களின் வலைதளமும் கூட.மூவருக்கும் நன்றி நல்ல சினிமாவை புரிய வைத்ததற்கு.
  சமீபத்தில்தான் Dev.D பார்த்தேன் நீங்கள்(மற்றும் சாரு ) சொல்வதுபோல் அனுராக் கஷ்யப் மற்றும் விஷால் பரத்வாஜ்(கமீனேயில் பின்னி எடுத்திருப்பார்) ஹிந்தி சினிமாவை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்கின்றனர்.ஆனால் நம் தமிழ் சினிமாவில் ஒன்று எடுத்தால் மசாலா படம், இல்லையேல் விளக்கெண்ணை வழியும் நான்கு தறுதலை ஆண்கள் மற்றும் ஒரு பெண் ..இந்த இரு கதைகளை தாண்டி என்றுமே தமிழ் சினிமா வரப்போவதாக எனக்கு தோன்றவில்லை.
  இங்கு நடிப்பு என்பதே மிகையாகத்தான் செய்யப்படுகிறது.மற்றபடி நஸ்ருதீன் போல் இங்கு நடிப்பதாவது நீங்க வேற..

  Reply
 13. இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்ங்க… அதோட தமிழ் விளக்கம் கொடுத்ததுக்கு நன்றிங்க 🙂 🙂

  Reply
 14. @ Viki – நம்ம தமிழ்ப்படங்களைப் பொறுத்தவரையில், எக்ஸ்பரிமெண்டேஷன் நடந்துகொண்டு இருக்கிறது. . ஆனால், தமிழ் சினிமாவின் அவசியமான அபத்தங்கள் (என்ன ஒரு ஆக்ஸிமோரான்) அவற்றில் திணிக்கப்பட்டு விடுகின்றன. மணிரத்னத்தின் படங்களே இதற்கு விதிவிலக்கல்ல. . இவை போய், நேச்சுரல் படங்கள் எடுக்கப்பட்டால் தான் தமிழில் தற்போது ஹிந்தியில் வருவதைப் போன்ற அருமையான படங்கள் வரும் என்பது எனது தாழ்மையான கருத்து . .

  மற்றபடி, சாருவும் ராமகிருஷ்ணனும் எப்பொழுதும் நல்ல படங்களைப் பற்றி எழுதிக்கொண்டு தான் இருப்பார்கள். அதுதான், நம்மைப் போன்றவர்கள் நல்ல படங்களைப் பார்க்க வைக்கும் காரணிகளாக அமைகின்றன.

  நன்றி . .

  @ கனகு – உங்களுக்கு மிகவும் பிடித்த பாட்டு இங்கே இடம்பெற்றது குறித்து மிகவும் மகிழ்ச்சி . . அடிக்கடி வாருங்கள் நண்பா . .

  Reply
 15. இப்போதான் இந்த பதிவைப் பார்த்தேன்.

  இந்த பதிவில் ரஹத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாம உட்டுட்டீங்களே…

  இந்தப் பாடலைக் கேட்ட பிறகு ரஹத் ஃபத்தே அலிகானின் பாடல்களைத் தேடிக் கேட்க ஆரம்பித்தேன். கலியுக்கில் வரும் ஜியா தடுக் தடுக்… என்னுடைய இன்னொரு favourite

  Reply
 16. என்னவென்று சொல்லுவது …. பாடலின் வரிகளா … இல்லை தமிழில் உயிர்பித்த உங்களின் மொழிகளா … அருமை என்று சொல்லுவதை தவிர … எனக்கு வேறு வார்த்தைகள் இல்லை …. கவிபேரரசுகள் …. வாங்க வேண்டும் பிச்சை

  Reply

Join the conversation