How to train your Dragon (2010) – 3D – English

by Rajesh April 24, 2010   English films

Sharing is caring!

வைக்கிங்குகளைப் பற்றி நமது அபிப்பிராயம் என்ன? அவர்கள் காட்டுமிராண்டிகள்; மலையையொத்த உருவம் படைத்தவர்கள்; மூளையில்லாதவர்கள் இத்யாதி இத்யாதி. தமிழில் வைக்கிங்குகளைப் பற்றி பெரும்பாலும் இதுவரை எந்த இலக்கியமும் வரவில்லை. எனக்குத் தெரிந்து, லயன் காமிக்ஸில் வெளிவந்த ‘வைக்கிங் தீவு மர்மம்’ ஒன்றுதான் நான் இதுவரை படித்தது. அது ஒரு டெக்ஸ் வில்லர் சாகசம்.

இத்தகைய வைக்கிங்குகளில் கூட ஒரு இதயமுள்ள உயிர் இருந்தால்? இதற்கு விடையே இப்படம்.

பெர்க் என்ற தீவில், வைக்கிங்குகள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் அரசனின் பெயர், ’ஸ்டாய்க் த வாஸ்ட்’ (Stoick the Vast). அவ்வரசனின் மகன், ‘ஹிக்கப்’. அவனுக்குப் பதினோரு வயது. மற்ற வைக்கிங்குகள் போல் அல்லாது, அவனுக்கு யுத்தம் செய்யப் பிடிப்பதில்லை. ஒரு கொல்லன் பட்டறையில் வேலை செய்து வருகிறான் ஹிக்கப்.

அந்தத் தீவில் உள்ள ஒரு பெரும் பிரச்னை என்னவென்றால், அத்தீவு, அடிக்கடி, டிராகன்களின் தாக்குதலுக்கு உள்ளாவது தான். இந்த டிராகன்கள் பலவகை. நெருப்புக் கக்கும் டிராகன், தடிகுண்டு டிராகன், குள்ள டிராகன், ஒளிப்பிழம்பைக் கக்கும் டிராகன், ஆர்டினரி (வெத்துவேட்டு) டிராகன் என. இந்த டிராகன்கள், வைக்கிங்குகளின் கால்நடைகளைக் கவ்விக்கொண்டு சென்றுவிடுகின்றன. இப்படிப் பலமுறை நடக்கிறது. தலைகீழாக நின்றும் வைக்கிங்குகளால் ஒன்றும் செய்ய முடிவதில்லை.

இப்படி இருக்கையில், ஒருமுறை, டிராகன்கள் அட்டாக் செய்யும்போது, இந்த ஹிக்கப், தானும் ஒரு வைக்கிங் வீரனாகவேண்டும் என்ற ஆசையால், வலையை வீசும் கருவி ஒன்றைத் தயார்செய்து, அதன்மூலம் டிராகன்களைத் தாக்கத் தலைப்படுகிறான்.

அட்டாக் பாண்டிகளான டிராகன்களில் ஒரு ஸ்பெஷல் வகை உண்டு. அதன் பெயர், ’நைட் ஃப்யூரி’ (Night Fury). இதன் விசேஷம் என்னவெனில், இரவில், கண்ணுக்கே தெரியாமல் ஒளிப்பிழம்பைக் கக்குவதில் இது கில்லாடி. வைக்கிங்குகள் தயாரித்து வைத்திருக்கும் டிராகன்களின் அகராதியில், இந்த நைட் ஃப்யூரியைப் பற்றி மட்டும் எந்தத் தகவலும் இல்லை. அந்த அளவுக்கு, ராத்திரி ரவுண்ட் அப் செய்வதில் இது ஜித்தன்.

இத்தகைய நைட் ஃப்யூரி ஒன்றின் மேல் குறிபார்த்து ஹிக்கப் செலுத்தும் வலை போய் விழுகிறது. ஆனால், இதனுள், மற்ற டிராகன்கள் செய்துவிட்ட பேரழிவு மிகவும் அதிகமாகிவிடுகிறது. தான் ஒரு டிராகனை அடித்துவிட்டதை ஹிக்கப் சொல்ல, யாரும் நம்புவதில்லை. அவன் ஏளனம் செய்யப்படுகிறான்.

மறுநாள், சோகத்துடன் காட்டில் உலவும் ஹிக்கப், ஒரு சீறும் சத்தம் கேட்டு, அங்கு செல்கிறான். இவனால் வீழ்த்தப்பட்ட ஒரு நைட் ஃப்யூரி டிராகன், அங்கு கட்டுண்டு கிடக்கிறது. அதனைப் பார்த்தவுடன் தன்னிடமுள்ள (மிகக்)குறும் கத்தியை எடுக்கிறான் ஹிக்கப். இந்த டிராகனைக் கொன்று வீழ்த்தினால், இனி வரும் வைக்கிங் சந்ததிகள், இவனது உதாரணத்தைப் பார்த்துப் பயனடைவார்கள் என்ற ஒரு நப்பாசை அவனுக்கு.

ஆனால், தனது இயல்பான கருணை குணத்தினால், கட்டுண்டு கிடக்கும் ஒரு நிராயுதபாணி (பிகேபியின் காமெடி கதையான ‘பிருந்தாவனமும் நொந்த குமாரனும்’ல், நிரோத்பிரியாணி என்று சொல்லியிருப்பார்) நைட் ஃப்யூரி டிராகனைக் கொல்ல மனமில்லாமல், அதன் கட்டுகளை அறுத்து வீசிவிடுகிறான்.

அங்கிருந்து தப்பித்து ஓடும் டிராகன், ஒரு பள்ளத்தாக்கினுள் விழுந்து விடுகிறது.

இந்த மிதிவண்டி கேப்பில், வைக்கிங் அரசனான ஸ்டாய்க், இந்த டிராகன்களின் மேல் படையெடுத்து, அவைகளைக் கொன்று ஒழிக்க, ஒரு பெரும் கடற்படையோடு கிளம்புகிறான். கிளம்புகையில், தனது நண்பனான கொல்லனை அழைத்து, ஹிக்கப்பை ஒரு மாவீர வைக்கிங்காக மாற்றிவிடச்சொல்லிவிட்டுக் கிளம்புகிறான்.

மறுநாளில் இருந்து, வைக்கிங் பொடிசுகளுக்கு, சிறைபட்டுக் கிடக்கும் டிராகன்களோடு மோத வேண்டிய பயிற்சி. இதில் ஹிக்கப்பும் ஒருவன். அன்று, தனியனாகக் காட்டில் உலவுகையில், பள்ளத்தாக்கில் விழுந்த டிராகனின் தடங்களைக் கண்டு, அவற்றைத் தொடர்ந்து போகிறான். அங்கு, தனது வாலில் உள்ள ஒரு பக்கத் துடுப்பு பிய்ந்துவிட்டதால், பறக்க இயலாமல், தத்தித்தத்திப் பறக்க முயன்று, டங்குடக்கென்று எல்லா இடத்திலும் மோதி காயம்படும் இந்த நைட் ஃப்யூரி டிராகனைப் பார்க்கிறான். அதுவும் அவனைக் கண்டுவிடுகிறது, படுபயங்கரக் கோபத்தோடு அவன் மீது பாய்கிறது.

மறுநாளிலிருந்து, இந்த டிராகன்களோடு வைக்கும் அத்தனை சண்டைகளிலும், அந்த டிராகன்கள் ஹிக்கப்பிடம் கன்னாபின்னாவென்று பணிகின்றன. இதன் ரகசியம் என்னவெனில், ஹிக்கப் அந்த நைட் ஃப்யூரி டிராகனை மெல்ல மெல்லப் பழக்கி விடுவது தான். அது இவனிடம் மிகவும் நட்பாகிவிடுகிறது. அதற்கு, ‘டூத்லெஸ்’ என்ற செல்லப் பெயரும் வைக்கிறான் ஹிக்கப். அதற்கு ஒரு செயற்கைத் துடுப்பைச் செய்துகொடுக்கும் ஹிக்கப், அதனைப் பறக்க வைக்கிறான். இதனிடம் உபயோகித்த அதே டெக்கினிக்கிகளைத் தன்னோடு சண்டையிடும் மற்ற பயிற்சி டிராகன்களிடமும் காண்பித்து, அவற்றையும் அடக்கி விடுகிறான்.

போர் செய்யச்சென்ற வைக்கிங்குகள், டிராகன்களின் மறைவிடம் தெரியாமல் திரும்பிவருகின்றனர். அப்பொழுது, இந்த நைட் ஃப்யூரி ட்ராகன் டிரைனிங் விஷயம், அரசனுக்குத் தெரியவருகிறது.

எனவே, இந்த டிராகனைச் சிறைப்படுத்தி, அதனை வைத்து டிராகன்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது அரசனின் தந்திரமான மூளையில் உதிக்கும் ஒரு ஐடியா.

என்ன நடந்தது? டிராகன்கள் கொல்லப்பட்டனவா? அரசனுக்கு என்ன ஆயிற்று? விடை, த்ரீ டி திரையில்.

நான் இந்தக் கதையில் பல இடங்களை சொல்லாமலேயே விட்டுவிட்டேன். அவைகளைப் பார்க்கையில், உங்களுக்கு சஸ்பென்ஸ் போய்விடக்கூடாது என்பதனால் தான்.

உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், ஒரு துளிக்கூட போரே அடிக்காமல், சர்ர்ரென்று சென்ற திரைப்படம் இது. த்ரீ டி கிராஃபிக்ஸ் ஒரு அற்புதம் என்றுதான் சொல்லவேண்டும். அருமையான விஷுவல் எஃபக்ட்ஸ். வாரே வாஹ் !!

ஒருவகையில், அவதாரின் வழியைப் பின்பற்றி இப்படம் சென்றிருந்தாலும், படு சுவாரஸ்யமாக இப்படத்தை நமக்கு அளித்துள்ளனர் ட்ரீம்வொர்க்ஸ் நிறுவனத்தார். அதிலும், ஹிக்கப்பையும், அந்த நைட் ஃப்யூரி டிராகனையும் காட்டும் காட்சிகளில், திரையரங்கில் விசில் பறந்ததை நான் என் காதால் கேட்டேன். என்னுடன், மொத்தத் திரையரங்கும், மிகவும் ஒன்றிப் போய்ப் பார்த்துக்கொண்டிருந்தது.

வைக்கிங்குகளின் உருவம், நமது ‘ஆஸ்டரிக்ஸ்’ கதையில் வரும் ஓப்ளிக்ஸின் உருவத்தைப் பெரும்பாலும் ஒத்திருக்கிறது. அதில் கால் (Gaul) கிராமம். இதில், பெர்க் தீவு.

இக்கதை, உண்மையில் குழந்தைகள் நாவலாக 2003ல் க்ரெஸிடா கொவெல் என்ற அம்மணியால் எழுத்தப்பட்ட இதே பெயருடைய ஒரு புத்தகத்தில் இருந்து எடுத்தாளப்பட்ட ஒரு கதையாகும். இதில் மேட்டர் என்னவெனில், இதற்கு இன்னும் 7 சீக்வெல்கள் உள்ளன என்பதேயாகும். மொத்தம் எட்டுப் புத்தகங்களை எழுதிக் குவித்துவிட்டார் அம்மணி. அவையும் திரைக்கு வருமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

ஜாலியாக ஃபேமிலியுடன் போய்ப் பார்க்க ஏதுவான படம் இது. எஞ்சாய் !!

ஹௌ டு ட்ரெயின் எ டிராகன் படத்தின் டிரைலர் இங்கே.

Sharing is caring!

Related Posts

fb Comments

comments

  Comments

10 Comments

 1. படம் எதிர்பார்த்த வெற்றியில்லைங்க ராஜேஷ். இரண்டாம் பாகம் வருமாங்கறது டவுட்தான்.

  ஆலிஸ்-க்கு $14 கொடுத்து போனவங்க நொந்து நூலாகி.. அடுத்த வாரமே வந்த இந்தப் படத்துக்கு இன்னொரு $14-ன்னு நினைச்சி போகாம இருந்துட்டாங்க போலயிருக்கு.

  கொடுமை.. அதுக்கடுத்த வாரமே க்ளாஷ் வந்து க்ளாஷ் பண்ணிடுச்சி. இப்ப 3டி தியேட்டர் கிடைக்காம திண்டாடுறாங்க.

  Reply
 2. I read blueberry u gave… was interesting… anything else like that?

  NHm writer makkar panudhu… tats why english…

  Reply
 3. வணக்கம் பாலா . . . நானு இந்தப் படத்தப் பத்தி நெட்ல பார்த்தேன் . . இது அங்க நல்ல சக்சஸ்ன்னு தான் போட்ருந்துச்சு . . இதுவரை அங்க 158 மில்லியன் வசூல்ன்னு இருந்திச்சு . . ஆனா, நீங்க சொல்றத பார்த்தா, மத்த ரெண்டு 3டி படங்க, இதோட ரெபுடேஷன கொறச்சிருச்சி போல . . இது தான் கொடும . . நானு ஆலீஸ் பாக்கணும்னு நினைச்சேன் . . டிம் பர்ட்டன் ப்ளஸ் ஜானி டெப் ஆச்சே . . ஆனா அதுவும் மொக்கையா . . சாமி !!

  @ பப்பு – அது மாதிரி ஒரு சமுத்திரமே இருக்கு . . நீங்க XIII காமிக்ஸ் படிச்சிருக்கீங்களா . . என்னோட ரெண்டு போஸ்ட்டுக்கு முந்தின போஸ்ட் பாருங்க . . அது உங்கலை கண்டிப்பா அசர வெக்கும் . . . நனு உங்களுக்கு மெயில் பண்றேன் . . வெல்கம் டு காமிக்ஸ் க்ளப் பாஸ் . .:-)

  Reply
 4. கடுமையாக உழைத்து விட்டு மிகவும் லேட்டாக வீடு திரும்பிய (முன்னாள்) பின்னூட்ட புலி இஸ் தி மீ த ஃபோர்த்து.

  Reply
 5. நண்பரே,

  ஜாலியான ஒரு படத்தைப் பற்றி அருமையான பதிவு. நான் அண்மைக் காலங்களில் ரசித்துப் பார்த்த படங்களில் இதுவும் ஒன்று. டூத்லெஸ் அடிக்கும் குறும்புகள் சுகமானவை. இறுதி ஆக்‌ஷன் காட்சியும் அருமை.

  Reply
 6. பல பிரபல பதிவர்களின் பதிவுகளில் வந்து பின்னூட்டம் மட்டுமே இடும் எங்கள் “அமெரிக்க கேப்டன் விஜயகாந்த்”, “இந்தியாவின் ஒபாமா”, “ஆசியாவின் மண்டேலா”, அண்ணன் ஹாலிவுட் பாலாவை வன்மையாக கண்டிக்கிறேன். உடனடியாக அவர் பதிவொன்றை இடாவிட்டால் வரும் வெள்ளியன்று ரிலீஸ் ஆகும் சுறா படத்தை பேக்-டு-பேக் ஆக நான்கு காட்சிகளும் முதல் நாளே பார்க்க வேண்டி உத்தரவிடுகிறேன்.

  Reply
 7. //ஜாலியாக ஃபேமிலியுடன் போய்ப் பார்க்க ஏதுவான படம் இது.//

  என்னை மாதிரி “கொழந்தைகளுக்கு” விடுமுறை கொண்டாட்டம் என்று சொல்லுங்கள்.

  Reply
 8. wow…looks very interesting…nice review…let me watch the movie tommorrow

  Reply
 9. என்ன ஏதுன்னு தெரியாம டவுன்லோட் பண்ணி வெச்சிருந்தேன். இப்போ பாத்துரவேண்டிதான்.நன்றி நியூமாப்ள.

  Reply
 10. @ விஸ்வா – அடடே . . இன்னும் கொஞ்ச நாளு நீங்க ரேஸ்ல வர மாட்டீங்களா . . அப்ப நானும் இந்தப் பந்தயத்தைப் புறக்கணிக்கிறேன் . . 🙂
  அப்பறம், இன்னாது சுறாவா? அத பாலா பாக்கணுமா? நல்லாக்கீதே இது ! அவர கட்டி வெச்சி, அத அவரு முன்னால போட்ரலாம் . . 🙂
  அதே மேரி, அது உங்கள மாதிரி கொளந்தைகள் இல்ல. . நம்மள மாதிரி கொளந்தைகள் ன்னு சொல்லுங்க . . 🙂

  @ காதலரே – நீங்களும் இப்படம் குறித்து மகிழ்வது குறித்து எனக்குச் சந்தோஷம். . டூத்லெஸ்ஸை எனக்கு மிகவும் பிடித்தது .. கடைசி ஆக்‌ஷன் காட்சிகளைப் பார்க்கையில், சீட்டின் நுனிக்கு வந்துவிட்டேன் . . உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே. .

  @ இன்ஃபோபீடியாஆன்லைன்ஹியர் – நன்றி நண்பா . . பாருங்கள் . . பார்த்துவிட்டு, உங்கள் கருத்தைப் பதியுங்கள்.

  @ மயிலு – நானு நியூ மாப்ள இல்ல. . அதான் கல்யாணம் ஆகி ஒரு மாஆஆஅசம் ஆயிருச்சில்ல . . 🙂 கட்டாயம் பார்த்துபுட்டு சொல்லுங்கோள் . .

  Reply

Join the conversation