Sanctum (2011) – English

by Rajesh February 5, 2011   English films

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

மனிதனின் அலுக்காத ஆசைகளில் ஒன்று, இந்த உலகில் இதுவரை யாருமே சென்றறியாத இடங்களை ஆராய்வது. அப்படி சில மனிதர்கள் மேற்கொண்ட முயற்சிகளாலேயே நமக்குப் பல நாடுகள் கிடைத்துள்ளன. அதே சமயத்தில், இந்த முயற்சிகளால் ஏற்படும் உயிர் இழப்புகளும் எண்ணிலடங்கா. எத்தனை ஆபத்துகள் இருந்தாலும், புதிய இடங்களைக் கண்டறியும் ஆசையுடன், அந்த இடத்துடன், இனி வருங்காலம் முழுவதும் தனது பெயரையும் சேர்த்தே சரித்திரம் நினைவு கொள்ளும் என்ற வெறியும் சேர்வதால், மனிதன் மேற்கொள்ளும் அபாயகரமான பயணங்கள் பெரும்பாலும் அழிவிலேயே முடிகின்றன.

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், பல வருடங்களுக்கு முன்னர் – 1989ல் இயக்கிய படம், ‘The Abyss’. இப்படத்தின் கதை நினைவிருக்கிறதா? ஆழ்கடலில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கிவிட, அக்கப்பல் மூழ்கிய காரணத்தை அறிய ஒரு பயணத்தை மேற்கொள்ளும் குழுவினரைப் பற்றிய படம் அது. அப்படி ஆழ்கடலில் தேடும் படலத்தை நிகழ்த்துகையில், அவர்களுக்கு நிகழும் அனுபவங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். நான் இப்படத்தை மிகச்சிறு வயதில், கோவையில் ஒரு தீபாவளியன்று (அல்லது பொங்கல்) பார்த்தேன் (இதனுடன் வெளியான மற்ற படங்கள்: குணா, தளபதி, பிரம்மா, தாலாட்டு கேக்குதம்மா). எந்தப் படத்துக்கும் டிக்கட் கிடைக்காமல், அபைஸ் சென்றோம். வெளியே வந்தபோது, படம் எனக்கு மிகப்பிடித்திருந்தது. இந்தப் படத்தை நினைவு கொள்ளுங்கள்.

அதேபோல், ‘The Descent’ என்றொரு திகில் படம். யாருமே சென்றறியாத ஒரு குகையை ஆராயச் செல்லும் ஒரு குழு – முழுவதும் பெண்கள் – என்னவாகிறது என்பதே படம். இந்தப் படத்தில், அந்தக் குகையினுள் வாழும் விசித்திர ஜந்துக்களால் உண்ணப்பட்டு ஒரு பெண்ணைத் தவிர அனைவரும் இறந்துவிடுவார்கள். இப்படத்தையும் நினைவு கொள்ளவும்.

சரி. இப்போது, ஸாங்க்டம் படத்தைப் பார்ப்போம்.

பஸிஃபிக் கடலில், ஆஸ்த்ரேலியாவுக்குச் சற்று மேலே, பாபுவா ந்யூ கினி தீவுகளில் இருக்கும் ஒரு மிகப்பெரிய குகையே எஸா – ஆலா. பூமியின் பரப்பில் மிகப் பிரம்மாண்டமான ஒரு பாழி. அந்தப் பாழியினுள், கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் இந்தக் குகை தொடங்குகிறது. எண்ணிலடங்கா சிறிய குகைகளும் பாதைகளும் கொண்டு, இதுவரை யாருமே சென்றறியாத ஒரு பாதாள உலகமாக விளங்குகிறது இது. ஃப்ராங்க் மெகையர் என்ற உலகின் மிகப் பிரசித்தி பெற்ற குகை ஆய்வாளர், இரண்டு வருடங்களாக முயற்சி செய்து, இந்தக் குகையின் ஒரு குறிப்பிட்ட இடம் வரை சென்றடைந்து இருக்கிறார். அதற்கு மேல் என்ன இருக்கிறது என்பது யாருக்குமே தெரியாது. அதே சமயம், இந்த ஆராய்ச்சியை ஸ்பான்ஸர் செய்யும் கார்ல் ஹக்ஸ்லி என்ற அமெரிக்கச் செல்வந்தர், பல நாட்களாகக் காத்திருந்தும், இந்தக் குறிப்பிட்ட இடத்துக்கு மேல் ஃப்ராங்க் உள்ளே செல்லாததால், இந்த முயற்சியே இன்னும் சில நாட்களில் கைவிடப்பட இருக்கிறது என்று எச்சரிப்பதோடு மட்டுமல்லாமல், தானே இந்த குகைக்கும் வருகிறார். உடன் வருவது, அவரது காதலி விக்டோரியா மற்றும் ஃப்ராங்க்கின் மகனான ஜோஷ்.

ஃபராங்க், குகையின் அடியாழத்தில் இருக்கிறார். அவருக்கு முன்னே, ஒரு பெரிய ஆறு. அங்கே, பல மில்லியன் வருடங்களாகப் பெய்த மழையின் காரணமாக, குகையின் இந்தப் பகுதியில் இருந்து, அந்த ஆறு தொடங்குகிறது. இனி மேற்கொண்டு செல்லவேண்டும் என்றால், இந்த ஆற்றின் உள்ளே நீந்தி, அதன் அடியாழத்துக்குச் சென்று, அங்கிருந்து பயணத்தைத் தொடர வேண்டும். அது மிக ஆபத்தாக இருக்கலாம் என்பதனாலேயேதான் ஃப்ராங்க் மேற்கொண்டு செல்லாமல் இருக்கிறார். ஆனால், கார்ல், பண உதவியை நிறுத்தப்போவதாகச் சொல்வது, ஃப்ராங்க்கினுள் இருக்கும் வெறிகொண்ட ஆராய்ச்சியாளரை உசுப்பிவிடுகிறது. எனவே, மேற்கொண்டு தனது பயணத்தைத் தொடர முடிவு செய்கிறார்.

மேலே, கார்ல், விக்டோரியா மற்றும் ஜோஷ் குழுவினர், குகைக்குள் நுழைகிறார்கள்.

இதுதான் படத்தின் துவக்கம். இதற்குப்பின் என்ன ஆகிறது என்று மிகச்சில படங்கள் பார்த்திருக்கும் குழந்தை கூட சொல்லிவிடும்.

வழக்கமான அட்வென்ச்சர் படங்களைப்போலவே, இதிலும் பல ‘க்ளிஷே’க்கள் பொங்கி வழிகின்றன. ஒரு பயணம் என்றால், அதில் இருப்பவர்கள் பலரும் இறந்துவிட வேண்டும் என்ற ஹாலிவுட் விதி, இதில் தப்பாமல் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல், எந்தப் பயணத்திலும், எப்படியும் ஓரிரண்டு பெண்கள் இடம்பெறுவது ஹாலிவுட் வழக்கமல்லவா? அதேபோல் இதிலும். அப்பெண்களுக்கு வழக்கமாக நேரும் முடிவே இப்படத்தின் பெண்களுக்கும் தப்பாமல் நேர்கிறது. முடிவில் யார் உயிர் பிழைப்பார்கள் என்பது, படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நமக்குத் தெரிந்துவிடுவது, இப்படத்தின்
பலவீனம். இந்தப் படத்தில் லாஜிக்கை எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை என்றாலும், படத்தின் கதாபாத்திரங்கள் திடீர் திடீரென, பள்ளிக் குழந்தைகளைப் போல் எடுக்கும் முட்டாள்தனமான முடிவுகள், சற்றே எரிச்சலை வரவழைக்கின்றன. அதேபோல், பெண்கள் இதுபோன்ற பயணங்களுக்கு லாயக்கற்றவர்கள் என்ற மடத்தனமான ஹாலிவுட் க்ளிஷே இதில் இருமுறை நமக்குச் சொல்லப்படுகிறது.

படத்தில் அவர்கள் சொல்ல முயன்றிருக்கும் ஒரு விஷயம் – ஃப்ராங்க்குக்கும் ஜோஷுக்கும் இடையே நிலவும் தந்தை – மகன் உறவு – முதல் சில காட்சிகளில் அப்பட்டமாகப் பொய்த்துவிட்டாலும், படத்தின் இறுதியில் சற்றே வொர்க் ஔட் ஆகிறது. இப்படத்தில், கார்ல் செய்யும் குரங்கு சேஷ்டைகளைப் பார்க்கையில், எனக்கு நாம் மேலே பார்த்த The Descent படத்தின் ஜந்துக்கள் நினைவு வந்தன.

இப்படத்தின் சந்தேகமில்லாத, மிகச்சிறப்பான பலம் – படத்தில் வரும் குகை. அட்டகாசமான ஒரு மர்ம உலகம், நமது கண் முன் மெதுவாக விரிகிறது. ஆராய்ச்சியாளர்களின் பார்வையின் ஊடாகவே நமக்குக் காட்டப்படும் இக்குகை, இயற்கையின் முன், மனிதன் ஒரு பேக்டீரியாவுக்குச் சமம் என்று தெளிவாக உணர்த்திவிடுகிறது.

படத்தின் சில காட்சிகள், Abyss படத்தை ஒத்திருக்கின்றன. எனவே, கட்டாயம் அதேபோன்ற ஒரு ஜந்து இதில் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் நல்லவேளையாக எந்த ஜந்துவும் வரவில்லை. அந்த மட்டில், இயக்குநர் பிழைத்தார்.

இறுதியாக, படத்தைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றால், இதன் சிஜிக்காக ஒருமுறை தியேடரில் பார்க்கலாம். இதனை டவுன்லோட் செய்து பார்த்தால், படம் கட்டாயம் சற்றே மொக்கை போடும். எனவே, 3D திரையரங்கில் சென்று பாருங்கள்.

பி.கு – ஜேம்ஸ் கேமரூன், இப்படத்தின் இணைத்தயாரிப்பாளர் மட்டுமே.

Facebook Comments

Sharing is caring!

Related Posts

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

16 Comments

 1. அவ்வ்வ்வ்…. யோவ் என்னையா படம் பார்த்தாச்சா, கடுப்பேத்துறாங்க மை லார்ட்…. 🙂
  இருங்க படிச்சிட்டு வரேன்

  Reply
 2. இதன் trailer கொஞ்ச நாள்களுக்கு முன் பார்த்தேன்,கொஞ்சம் மொக்கையாக தான் இருந்தது,இப்ப உறுதியாகிவிட்டது,

  Reply
 3. நண்பர்களின் பதிவுகளின் பக்கம் இப்போதைக்கு வர இயலாது. இன்னும் ஓரிரு நாட்களில் கட்டாயம் வந்துவிடுவேன். பொறுத்தருளவும் 🙂

  Reply
 4. என்ன தல இப்படியே ரொம்ப நாலா சொல்லிக்கிட்டு இருக்கீங்க,சீக்கரம் வாங்க,கொழந்த ,சு மோகன் ,எஸ் கே யாரையும் காணவில்லை

  Reply
 5. ட்ரெயிலர் பார்த்தபோதே எதிர்பார்த்ததுதான்.
  அட்வென்ஜர் படம் வழக்கம்போல நிறையபேரு சாவானுங்க கொஞ்சம்பேர் பிழைப்பானுங்க…இந்த கான்செப்டை விடவே மாட்டானுங்க போல…:)
  இந்த படத்தோட அபிசியல் வெப்சைட் டிசைன் பண்ணது செமையா இருந்துச்சு…

  Reply
 6. எல்லாருக்கும் எதிர்மறையாக கரெக்டாக செயல்படும் ஹீரோ இல்லையா தலைவா

  Reply
 7. இந்த படத்தோட ப்லாட் தெரிஞ்சதும் பார்க்கற ஆர்வமே போயிடுச்சு……

  Reply
 8. நண்பரே,

  பிரபலங்களின் பெயர்களை போஸ்டர்களில் முன்னிறுத்தி விளம்பரப்படுத்தி இவ்வகையான சில படங்களை வசூல் பண்ண ஹாலிவூட் முயன்று கொண்டேதான் இருக்கிறது. இங்கு வந்தால் பார்த்து விட முயல்கிறேன்.

  Reply
 9. நண்பா
  சேட்லயே வர்லயே?
  நண்பா,இந்த படம் அப்போ பார்க்க வேண்டாம்னு சொல்றீங்களா?
  யுத்தம் செய் பார்த்தாச்சா?படம் பற்றிய உங்கள் பார்வைக்கு வெயிட்டிங்.ஆடுகளம் பார்த்திருந்தால் அதையும் எழுதவும்.
  straw dogs என்னும் டஸ்டின் ஹாஃப்மேனின் 1971 வந்த படம் நேரம் கிடைத்தால் பார்க்கவும்.

  Reply
 10. இன்னா நையினா எப்படி இருக்கீங்க..

  Reply
 11. //straw dogs என்னும் டஸ்டின் ஹாஃப்மேனின் 1971 வந்த படம் நேரம் கிடைத்தால் பார்க்கவும்//

  என்ன கொடுமை இது? இப்பவும் மக்கள் அந்த மேதையோட (அதாவது இயக்குனர்) படங்களை பாக்குறாங்களா?

  இந்த பதிவில் இருக்கும் படத்தை பொறுத்த வரையில், ரெண்டே ரெண்டு தியேட்டரில், நமக்கு செட் ஆகாத ஷோக்கலாக படம் வந்து இருந்தால் எப்படி பார்ப்பதாம்?

  கிங் விஸ்வா
  தமிழ் காமிக்ஸ் உலகம் – சமீபத்திய வார இதழ்களில் வந்த காமிக்ஸ் பற்றிய நிகழ்வுகள்

  Reply
 12. இதனுடைய ஒரிஜினல் காமிக்ஸ் புத்தகம் படித்து இருக்கிறேன்.அதற்கும் இதற்கும் சம்பந்தம் மிகக் குறைவு போல தெரிகிறது.அதுவும் ஒரு ஓகே கதை தான்.அதிலும் பெரிதாய் சொல்லிக்கொள்ள எதுவும் கிடையாது,ஆரம்ப இதழை தவிர்த்து.

  Reply
 13. வெள்ளையா இருக்கறவனெல்லாம் வெள்ளைக்காரன்னு சொல்லுற மாறி.. இங்கிலிபீஜு பேசற படமெல்லாம் ஹாலிவுட் படம்னு சொல்லி எங்க மானத்தை வாங்கறீங்களே தல?! 🙂 🙂

  இது ஆஸ்த்ரேலிய தயாரிப்பு+இயக்கம். ஜேம்ஸ் அண்ணன் பண்ணினது எல்லாம்.. அவரோட 3டி கேமராவை வாடகைக்கு கொடுத்ததுதான். அந்தப் பேர் கூட போடலைன்னா இங்க பப்பு வேகாது. அதான்…!

  Reply
 14. @ நாஞ்சில் – 🙂 ஹீ ஹீ.. அதே கான்செப்ட் தான் இங்கயும் 🙂 .. வெப்சைட் இன்னும் பார்க்கல.. இதோ போறேன்..

  @ லக்கி – எல்லோருக்கும் எதிர்மறையா செயல்படும் கதாபாத்திரம் கட்டாயம் உண்டு 🙂 ..

  @ நாஞ்சில் மனோ – அட்றா சக்க அட்றா சக்க அட்றா சக்க 🙂

  @ ஆதவா – அட இதுல வர்ர குகையைப் பார்க்குறதுக்கே இத 3டில பாக்கலாம் பாஸ்.. போங்க.. போயி பாருங்க

  @ காதலரே – 3டில பாருங்க.. கிராஃபிக்ஸ் நல்லா இருக்கும்..

  @ இராமசாமி – நைனா.. நானு நல்லாக்கீறேன்… நீங்க சவுக்கியமா.. உங்க நண்பர் எப்ப மறுபடி இன்னிங்ஸை ஆரம்பிக்கப்போறாரு ? 🙂

  @ விஸ்வா – அது பரவால்ல… நைட் ஷோ போயி பாருங்க.. 🙂 தமிழ்ல ரிலீஸாயிருந்தா இன்னும் ஜோரா காமிக்ஸ் மாதிரியே இருக்கும்ல

  @ இலுமி – ஒருவேளை இந்தப் பேரை வெச்சாலே விளங்காம போயிருமோ? # டவுட்டு

  @ வெளங்காத தமிழ் அனானி – அதா தல.. பதிவு போட்டப்புறம் தான் இது ஆலிவுட்டு இல்லன்னு தெரிஞ்சது.. ஹீ ஹீ.. 🙂 கேமரூன் பேரைப் போட்டதுக்கே இது இந்த ஓட்டம் ஓடுது.. 🙂 .. நீங்க பார்த்தாச்சா?

  Reply

Join the conversation