திரைக்கதை எழுதுவது 'இப்படி' – 6

by Rajesh September 20, 2011   series

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

சென்ற அத்தியாயத்தில், ஒரு கதாபாத்திரத்தை எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றி விரிவாகப் பார்த்தோம். இனி, சிட் ஃபீல்டின் புத்தகத்தின் நான்காவது அத்தியாயத்தை விரிவாக அலசுவோம்.

Chapter 4: Building a Character

Sam Peckinpah என்ற இயக்குனரைப் பற்றிய குறிப்போடு இந்த அத்தியாயம் தொடங்குகிறது. ‘The Wild Bunch’ என்ற புகழ்பெற்ற படத்தின் இயக்குனர் இவர். இவருடன் சேர்ந்து சிட் ஃபீல்ட் சில நாட்கள் வேலை செய்திருக்கிறார். அந்த நாட்களில், பெக்கின்பா எப்படித் திரைக்கதையை செதுக்குகிறார் என்பதை மிக அருகில் இருந்து கவனித்திருக்கிறார் சிட் ஃபீல்ட். அதுவே அவரது திரைக்கதை பற்றிய புரிதலை மேலும் தெளிவாக்கியது. பெக்கின்பாவின் திரைக்கதை மாந்தர்கள், பெரும்பாலும் ஒரே குணத்தைக் கொண்டிருப்பார்கள். அதாவது, உறுதியான நோக்குடன் இருக்கும் ஒரு கதாபாத்திரம், தன்னைச் சுற்றிக் காலம் மாறுகையில் எப்படி அதனை எதிர்கொள்கிறது? என்பதே அவரது கரு. அத்தனை படங்களிலும். ஆனால், ஒரே கரு இருந்தாலுமே, ஒவ்வொரு படத்தையுமே வெகுவாக சுவாரஸ்யப்படுத்தியவர் பெக்கின்பா. அது எப்படி நிகழ்ந்தது?

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை எழுதுவதைத் தவிர்க்க முடியவில்லை. ‘மகாநதி’ திரைப்படம் வெளியானபோது, ஜூனியர் விகடனில், கமலைப் பேட்டி கண்டார் மதன். அது மூன்று வாரங்கள் வெளிவந்தது. மகாநதியைப் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் அதில் இருக்கும். அதில், ஒரு கேள்வியை எழுப்பியிருப்பார் மதன். அதாவது, கமலின் அக்காலத்தைய படங்கள் பெரும்பாலுமே ஒரே விதமான கருவையே கொண்டிருக்கும். ஒரு அப்பாவி மனிதன், தன்னைச்சுற்றிய ஒரு பெரும் சதியில் அல்லது குழப்பத்தில் மாட்டிக்கொண்டு, எப்படி மீள்கிறான் என்பதே அந்தக் கரு. இந்தக் கேள்விக்கு கமலின் பதிலும் சுவாரஸ்யமாக இருக்கும். அதேபோல், மகாநதிக்கு ஆரம்பத்தில் கமல் யோசித்து வைத்திருந்த கதையையும் அவர் சொல்லியிருப்பார். ஒரு பலே திருடன். ஆனால் திருட்டில் நேரடியாக சம்மந்தப்படாமல், திருட்டுக்கு ப்ளான் மட்டும் போட்டுக்கொடுத்து, திருட்டு நடக்கையில், அந்த வீட்டைச் சுற்றிப்பார்ப்பான். அந்த வீட்டின் நூலகத்தில் இருந்து புத்தகங்களைப் படித்துக்கொண்டிருப்பான். இந்த ரீதியில் செல்லும் அந்தக் கதை (எந்த உலகப்படமோ?) . ஆனால், நல்லவேளையாக இக்கதை கைவிடப்பட்டு தற்போதைய மகாநதி எடுக்கப்பட்டது.

சரி. பெக்கின்பா, தனது பல திரைக்கதைகளையும் சிட் ஃபீல்டிடம் கொடுத்து, படிக்கச் சொல்லியிருக்கிறார். அந்தத் திரைக்கதைகளை அலசுகையில், சிட் ஃபீல்டுக்குப் பிடிபட்ட விஷயங்களைப் பற்றித்தான் இந்த அத்தியாயம். அதாவது, ஒரு கதாபாத்திரத்தை எப்படித் தயார் செய்வது?

ஒரு கதாபாத்திரம், நன்கு குணங்களைக் கொண்டிருந்தால், அது வெற்றிகரமான, உயிர்ப்புள்ள, ஸ்வாரஸ்யமான கதாபாத்திரமாக ஆகிறது.

 1. கதாபாத்திரத்துக்கு ஒரு தெளிவான தேவை இருக்க வேண்டும் (dramatic need)
 2. கதாபாத்திரத்துக்கு ஒரு கருத்து நிலை இருக்கவேண்டும் (point of view)
 3. கதாபாத்திரத்துக்கு ஒரு உறுதியான மனநிலை இருக்கவேண்டும் (attitude)
 4. திரைக்கதையில், ஒரு மாற்றத்தை அந்தக் கதாபாத்திரம் அடையவேண்டும் (Transformation)

இந்த நான்கு விஷயங்களும் ஒரு கதாபாத்திரத்துக்கு இருந்தால், அக்கதாபாத்திரம் மறக்கமுடியாத கதாபாத்திரமாக மாறுகிறது.

1 . Dramatic Need

தேவை. அதாவது, கதாபாத்திரம், அந்தத் திரைக்கதையில் எதை அடைய நினைக்கிறது? கதாபாத்திரம் ஒரு விளையாட்டில் வெற்றிபெற நினைக்கிறதா? யாரையாவது மணமுடிக்க நினைக்கிறதா? வில்லனைக் கொல்ல வேண்டுமா? புதையலை அடைய வேண்டுமா? இவையே, கதாபாத்திரத்தின் தேவை எனப்படுகிறது.

கதாபாத்திரத்தின் தேவை என்ன என்பதை ஓரிரு வரிகளில் நம்மால் சொல்லமுடிய வேண்டும். அப்போதுதான், அதில் நாம் தெளிவாக இருக்கிறோம் என்று பொருள். சில உதாரணங்களைப் பார்ப்போம்.

விக்ரம் திரைப்படத்தில், கதாநாயகனின் தேவை என்ன? அக்னிபுத்திரன் என்ற ராக்கெட்டைக் கண்டுபிடிப்பது. சுகிர்தராஜாவைக் கொல்லவேண்டும் என்பது உப தேவை.

மகாநதியில் கதாநாயகனின் தேவை, இழந்த குடும்பத்துடன் சேர்வது.

லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படத்தில் கதாநாயகன் ஃப்ரோடோவின் தேவை – மோதிரத்தை அழிப்பது.

இதுபோல், உங்களுக்குப் பிடித்த படங்களில், கதாநாயகனின் தேவை என்பது தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறதா என்று கவனியுங்கள். படத்தில் கதாநாயகன் என்ன செய்கிறான் என்பதே தெரியாமல் சில படங்களில் வழவழா கொழ கொழா என்று இருக்கும். அப்படங்களில் நமது கவனம் வெகுசீக்கிரம் சிதறிவிடும்.

சில படங்களில், கதாபாத்திரத்தின் தேவை மாறக்கூடும். அதாவது, கொஞ்ச நேரம் ஒரு விதமான தேவை இருக்கும். ஆனால், சீக்கிரம் அது மாறும். தெளிவாக, உதாரணத்தோடு பார்ப்போம். மகாநதி திரைப்படம். அதில், பட ஆரம்பத்தில் கதாநாயகனின் தேவை என்பது என்னவாக இருக்கிறது? நகரத்தில் ஃசிட்பண்ட் தொடங்கவேண்டும். ஆனால், கதை செல்லச்செல்ல, அவனது குடும்பம் சிதறி, அதனைக் கண்டுபிடிப்பதே அவனது தேவை என்று ஆகிறதல்லவா? இப்படி இருப்பதும் ஓகேதான் என்கிறார் சிட் ஃபீல்ட். ஆங்கிலப்படங்களைப் பொறுத்தவரையில், இப்படி மாறும் தேவை என்பது, plot point 1 ல் இருக்கும். அதுவரை ஒருவிதமான விஷயத்தை நோக்கிக் கதாபாத்திரம் நகர்ந்துகொண்டிருக்கும். முதல் பிளாட் பாயிண்ட் முடிந்ததும், கதாபாத்திரத்தின் உண்மையான தேவை விளக்கப்பட்டுவிடும்.

ஆக, கதாபாத்திரத்தை விளக்கக்கூடிய முதல் விஷயம், கதாபாத்திரத்துக்கு என்ன தேவைப்படுகிறது என்பது.

2. Point of View

நோக்கு. கண்ணோட்டம்.

ஒரு விஷயம் என்று இருந்தால், ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான கருத்து இருக்கும். ஒரு விஷயத்தை ஒரு கதாபாத்திரம் எவ்விதம் நோக்குகிறது? அதுவே Point of View .

யோகவாசிஷ்டம் என்ற பழங்கால இந்திய நூலில் இருந்து ஒரு உதாரணத்தை விளக்குகிறார் சிட் ஃபீல்ட் (இந்த நூல், ‘வாசிட்டம்’ என்ற பெயரில் தமிழிலும் இருக்கிறது). ‘The world is as you see it’ . அதாவது, உலகம் என்பது, உனது கண்ணோட்டத்தில்தான் இருக்கிறது. பொதுவாகவே, நமது மனதில் இருக்கும் எண்ணங்கள், நமது நம்பிக்கைகள், நமது கலாசாரம் ஆகியவற்றில் இருந்துதான் நாம் வெளியுலகைப் பார்க்கிறோம். நம் நம்பிக்கைக்கு எதிராக ஒருவன் நடந்துகொண்டால், நாம் இருக்கும் நிலைக்குத் தகுந்தவாறு, அவனை வெறுக்கிறோம் அல்லது விலகிப்போகிறோம் அல்லது ஆள் வைத்து அவனைக் கொல்கிறோம் அல்லது அவனுடன் சேர்கிறோம் அல்லவா? இந்த வெளியுலகை நோக்கும் பார்வையே Point of View . அதுவே எந்த ஒரு விஷயத்தையும் எடுத்துக்கொண்டால், அதைப்பற்றிய நமது கருத்தாகவும் இருக்கிறது (நரேந்திர மோடிதான் அடுத்த பிரதமர் என்பது ஒரு Point of View . மோடியைக் கொல்லவேண்டும் என்பதும் ஒரு Point of View)

திரைக்கதையில் நமது பிரதான கதாபாத்திரம் ஒரு தந்தையாகோ தாயாகவோ இருந்தால், ஒரு தந்தையின் / தாயின் Point of View பிரதிபலிக்கப்படவேண்டும். ஒருவேளை கதாபாத்திரம் ஒரு மாணவனாக இருந்தால், வெளியுலகை ஒரு மாணவனின் கண்ணோட்டத்தில் அவன் காணவேண்டும்.

உங்கள் கதாபாத்திரத்தின் Point of View என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா?

உங்கள் கதாபாத்திரம் ஒரு போலீஸ்காரரா? அல்லது ஒரு சைக்கோ கொலைகாரரா? விதியிலும் ஜோதிடத்திலும் நம்பிக்கை உடையவரா? பில்லி சூனியத்தை நம்புபவரா? எதிலுமே நம்பிக்கையில்லாமல் திரியும் மனிதனா? சமூகத்தின் மேல் கோபம் உடைய கதாபாத்திரமா? உங்கள் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும், அதற்கேற்ற Point of View விளக்கப்பட்டிருக்கிறதா?

Point of View என்பது, நாம் நம்பும் விஷயங்களைப் பொறுத்தே அமைகிறது. கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்பது ஒரு Point of View . கடவுள் நம்பிக்கை இல்லை என்பதும் ஒரு Point of View தான். கடவுள் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை என்பது? கட்டாயம் ஒரு Point of View. இதில் எதிலுமே நல்லது, கெட்டது போன்ற எதுவும் இல்லை. Point of view என்பது அப்படித்தான். அதை நல்லது / கெட்டது என்று தரம்பிரித்துவிடமுடியாது. ஒருவருக்கு நல்லதாக இருக்கும் Point of View அடுத்தவருக்குக் கெடுதலாக இருக்க முடியும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனிப்பட்ட Point of View உள்ளது என்பதை மட்டும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.

நமது கதாபாத்திரத்தின் Point of Viewவை விளக்கும் வகையில் ஏதேனும் சம்பவங்கள் எழுதப்பட்டிருந்தால், அது திரைக்கதைக்கு வலு சேர்க்கும் என்பது சிட் ஃபீல்டின் கூற்று. கதாபாத்திரம் அண்ணா ஹசாரேவை ஆதரிக்கிறதா? ஒரு ஷாட் – அண்ணா ஹசாரே டி ஷர்ட் அணிந்துகொண்டு உண்ணாவிரதத்தில் அது அமர்ந்திருப்பது போன்ற ஒரு ஷாட் – போதுமானது.

ஒரு அற்புதமான உதாரணம் இதைப்பற்றி சிட் ஃபீல்ட் தருகிறார்.

Shawshank Redemption திரைப்படத்தைப் பார்க்காத நபர் இருக்க முடியாது. அதில், கதாநாயகன் Andy யை நினைவிருக்கிறதா? எப்போதும் அமைதியாக, சிரித்துக்கொண்டே இருக்கும் மனிதன். அவனது நண்பன் Red – ஒவ்வொரு வருடமும் பரோலில் விடுவிக்கப்படும் நேர்முகத் தேர்வில் பங்குபெற்றுவிட்டு, ஒவ்வொருமுறையும் நிராகரிக்கப்பட்டு, வாழ்க்கையில் நம்பிக்கையையே தொலைத்துவிட்டவன். ஆண்டியும் ரெட்டும் பேசிக்கொள்ளும் காட்சி ஒன்று திரைப்படத்தில் வருகிறது. அதில், நம்பிக்கை என்பதே ஒரு ஆபத்தான விஷயம் என்று ரெட் குமுறுகிறான். ‘சிறையில் நம்பிக்கைக்கே இடமில்லை. எனவே, நம்பிக்கையை உனது மனதில் இருந்து வெட்டி வீசிவிடு’ என்று ஆண்டியிடம் சொல்லவும் செய்கிறான். ஆனால் இறுதியில் என்ன நடக்கிறது? சிறையில் இருந்து விடுவிக்கப்படும் ரெட், ஆண்டியைத் தேடித் தொலைதூரம் வருகிறான். ‘எல்லையைத் தாண்டி எனது நண்பன் ஆண்டியைப் பார்க்க முடியும் என்று நம்புகிறேன்; பசிஃபிக் கடலின் நீலம் , எனது கனவுகளில் வந்ததைப் போலவே இருக்கும் என்று நம்புகிறேன்’ என்று சொல்கிறான். அதாவது, நம்பிக்கையின்மையில் இருந்து நம்பிக்கையை நோக்கிய அவனது பயணம், இவ்வாறாக விளக்கப்படுகிறது. அவனது Point of View மாறுகிறது. அதுவே ஆண்டியை நோக்கினால், அவனது மனதில் இருந்துகொண்டே இருந்த நம்பிக்கைதான் அவனைத் தப்ப வைத்தது என்பது தெரியும். அது ஆண்டியின் Point of View.

3. Attitude

மனப்பான்மை.

Attitude என்பது, ஒரு மனிதனின் மனதில் இருக்கும் கருத்தை வெளிப்படுத்தக்கூடிய வகையில் நடந்துகொள்வது. அதாவது, இது ஒரு அறிவுசார்ந்த முடிவு. அதுவே Attitude மற்றும் Point of View ஆகிய இரண்டையும் வித்தியாசப்படுத்துகிறது. Point of View என்பதில் நல்லது / கெட்டது ஆகிய தரம்பிரித்தல் இல்லை. ஆனால், Attitude என்பதில், அறிவுசார்ந்த தரம்பிரித்தல் எப்போதும் உண்டு. ஒரு சிறிய உதாரணம் மூலமாக இதைப் புரியவைக்கமுடியும்.

அலுவலகம் செல்கிறீர்கள். நீங்கள் அணிந்திருப்பது ஜீன்ஸும் டி ஷர்ட்டும். மேலதிகாரி, பான்ட் சட்டை அணிந்து ‘இன்’ செய்து, டை கட்டிக்கொண்டு வராமல் இப்படி வந்ததற்காக உங்களைக் காய்ச்சி எடுக்கிறார். அவரது மனதில், அப்படித்தான் வர வேண்டும் என்ற எண்ணம் உறுதிப்பட்டிருக்கிறது. தான் செய்வது சரி; நீங்கள் செய்தது தவறு என்ற அறிவு சார்ந்த முடிவையும் அவர் எடுத்துவிட்டிருக்கிறார். ஆகவே, அவரது கோபம், அவரது Attitude இன் வெளிப்பாடு. இன் செய்து வர வேண்டும் என்பது அவரது Point of View ஆக இருந்திருந்தால், கோபம் அடைந்திருக்கமாட்டார். இன் செய்து வருவது எனது Point of View ; ஆனால் ஜீன்ஸ் அணிந்துவருவது இவரது Point of View . எனவே, ஃப்ரீயாக விட்டுவிடலாம் என்பதே அவரது எண்ணமாக இருந்திருக்கும்.

ஆக, அறிவுசார்ந்த ஒரு முடிவை எடுத்து, தான் செய்வது சரி என்ற எண்ணத்தை, உறுதியாக வெளிப்படுத்தினால் அது Attitude .

இப்படிப்பட்ட ஒரு Attitude – மனப்பான்மை – நமது கதாபாத்திரத்துக்கு இருக்கிறதா?

தங்கப்பதக்கம் படத்தில் தனது மகன் குற்றவாளி என்று தெரிந்ததும் அவனையே சுட்டுக்கொல்கிறாரே அந்தப் போலீஸ் ஆஃபீசர் – அது அவரது Attitude . அதாவது, தவறு செய்பவன் எவனாக இருந்தாலும் விடமாட்டேன் என்ற உறுதியான மனப்பான்மை.

இப்படிப்பட்ட Attitude , கதாபாத்திரத்துக்கு மேலும் வலு சேர்க்கும்.

4 . Transformation

மாறுதல். மாற்றம்.

உங்கள் கதாபாத்திரம், திரைக்கதையின் முடிவில் ஏதாவது மாற்றத்தை அடைகிறதா? அந்த மாற்றம் என்ன என்று உங்களால் விளக்க முடியுமா?

கதைப்படி எந்த மாற்றத்தையும் கதாபாத்திரம் அடையவில்லை எனில், சிட் ஃபீல்ட் சொல்லியிருக்கிறார் என்ற ஒரே காரணத்தினால், ஏதோ ஒரு மாற்றத்தை வலிந்து திணிப்பது ஒத்து வராது. ஒருவேளை கதாபாத்திரம் மாற்றமடைவதுபோல் நமது கதை இருந்திருந்தால் மட்டுமே மாற்றத்தைப் பற்றி சிந்திக்கவேண்டும்.

ஆக , இந்த நான்கு விஷயங்களும், ஒரு கதாபாத்திரத்தை விளக்கப் பயன்படக்கூடியவை.

இதுதவிர, இன்னும் ஒரு விஷயமும் இருக்கிறது. அதைச்சொல்லிவிட்டு, இந்த அத்தியாயத்தை சிட் ஃபீல்ட் முடிக்கிறார்.

நமது கதாபாத்திரம், எப்போதும் செயல்பட்டுக்கொண்டு இருக்கவேண்டும். அதாவது, இயக்கம். எப்போது பார்த்தாலும், தனக்கு நடக்கும் சம்பவங்களுக்கு ரியாக்ட் செய்துகொண்டே இருந்தால், கதை அலுத்துவிடும். ஆகவே, ரியாக்ட் செய்வதை விட்டுவிட்டு, கதாபாத்திரம் செய்யும் செயல்களால் கதை நகருமாறு இருக்கவேண்டும். கதையின் ஒரு அளவு வரை ரியாக்ட் செய்யலாம். அதன்பின் சடாரென்று அந்தக் கதாபாத்திரம் இயங்க ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் படம் பார்க்கும் ஆடியன்ஸ் , கதையில் சுவாரஸ்யம் காட்ட ஆரம்பிப்பார்கள்.

இத்துடன் நான்காம் அத்தியாயமான Building a Character– கதாபாத்திரத்தைக் கட்டமைத்தல் – முடிகிறது.

அடுத்து …..

தொடரும் . . .

Facebook Comments

Sharing is caring!

Related Posts

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

7 Comments

 1. திரைக்கதை எழுத ஆரம்பித்து இருக்கும் என் போன்றவர்கள் மனதில் நிறுத்த வேண்டிய பதிவு.
  நன்றி!

  Reply
 2. நண்பா,
  கட்டுரையும் மேற்கோள்களும் அருமை,ஆண்டி டூஃப்ரேன் உதாரணம் ரசித்தேன்

  Reply
 3. Cristal clear////..
  .
  .
  ஆங்கிலமும் ஒழுங்கா தெரியாம தமிழும் தெரியாம ஒரு அபாயமான தலைமுறை உருவாக்கி வருது!
  ***
  .
  .
  அப்புறம் ஹாலிவுட் பாலாவுக்கு ஒரு சதுர் தேங்காயை ஓடைச்சுட்டு நல்லபடியா ஆரம்பிங்க தம்பி!

  Reply
 4. இந்த பாகம் ரொம்ப நல்லா இருக்கு!

  Reply
 5. Cristal clear////..
  .
  .
  ஆங்கிலமும் ஒழுங்கா தெரியாம தமிழும் தெரியாம ஒரு அபாயமான தலைமுறை உருவாக்கி வருது!
  ———————————————–
  மன்னிக்கணும் நண்பா. எனக்கு ஆங்கிலம் நன்றாக தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் நன்றாகவே தெரியும்.
  Crystal clear என்று திருத்த விருப்பம் இல்லை. சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

  Reply

Join the conversation