The Three Musketeers (3D) : 2011 – English

by Rajesh October 17, 2011   English films

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

அலெக்ஸாண்டர் டூமாவின் ‘Three Musketeers’ நாவலை நான் முதன்முதலில் படித்த அனுபவம், அலாதியானது. எனது பள்ளிப் பருவத்தில், ‘பைகோ க்ளாசிக்ஸ்’ (paico classics) என்ற தமிழ் மாதாந்திர காமிக்ஸ் வெளிவந்துகொண்டிருந்தது. மிக அட்டகாசமான ஆங்கில நாவல்களைக் காமிக்ஸாக வெளியிட்டுக்கொண்டிருந்த நிறுவனம் அது. பூந்தளிரின் சகோதர நிறுவனம். அதில்தான் ‘Man in the Iron mask’ என்ற கதையைப் படித்தேன். அருமையான படங்கள். அதைப் படித்து, ஆங்கில வந்தியத்தேவனைப் பார்த்ததுபோல் இறும்பூது எய்தியிருக்கிறேன். உடனேயே இயக்குநர் ஸ்ரீதர் கல்கியில் அந்நாட்களில் எழுதிக்கொண்டிருந்த ‘திரும்பிப்பார்க்கிறேன்’ என்ற தொடரில், தனது உத்தமபுத்திரன் படத்தின் மூல வடிவம், இந்த பிரெஞ்ச் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பே என்று அவர் சொன்னதையும் படித்து, வீடியோ கடையில் உத்தமபுத்திரன் படத்தை வாடகைக்கு எடுத்தும் பார்த்திருக்கிறேன். இதைத்தொடர்ந்து, ஆங்கிலப்பாடத்தின் non – detail துணைப்பாடப்புத்தகத்தை வாங்கப் பள்ளி சென்ற எனக்கு, இன்னொரு அதிர்ச்சி. அந்த வருடத்திய புத்தகமாக, ‘Three Musketeers’ இருந்தது. பயங்கர மகிழ்ச்சியில், ஆதோஸ், போர்த்தோஸ், அராமிஸ் மற்றும் டா’ர்டக்ஞ்யன் பற்றி எனது சக மாணவர்களிடம் வீர உரை ஆற்ற, அவர்கள் என்னை எதுவும் புரியாமல் பார்த்தது நன்கு நினைவிருக்கிறது. வீடு திரும்பி, ஒரே மூச்சில் அந்தக் கதையைப் படித்தேன்.

இது, எனது ஏழாவது வகுப்பில்.

இதன்பின், கல்லூரியில் (CIT – கோவை), ‘Man in the Iron mask’ படம் வெளிவந்தது. ஆண்டு, 1998 . உடனடியாக அதனையும் கோவை மாருதியில் பார்த்தேன்.

இப்போது, Three Musketeers. முகுந்தாவில் பார்த்த கையோடு இதனை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

படத்தைப் பற்றிப் பார்ப்பதற்குமுன், ஒருமுறை இந்நாவலின் பிரதான கதாபாத்திரங்களைப் பற்றிப் பார்த்து விடுவோம். படத்தையும், நாவலையும் புரிந்துகொள்வதற்கு அது உதவலாம்.

முதலில், ஆதோஸ் – மூன்று மஸ்கட்டீர்களில் மூத்தவர். கம்பீரமான ஆகிருதி கொண்டவர். குடிப்பது, இவருக்கு மிகப்பிடித்தமானது. இந்தப் படத்தில் நாம் பார்க்கப்போகும் வில்லி மிலேடிக்கும் இவருக்கும் இருக்கும் ரகசியமான பந்தம் …….. என்ன?

அடுத்து – போர்த்தோஸ். மஸ்கட்டீர்களின் பீமன். பெருங்குடியர். பெண்களும் மதுவுமே இவரது வாழ்வின் லட்சியங்கள். எப்போதுமே ஜாலியாக இருக்கும் பேர்வழி. கதைகளில் காமெடியன் இவரே. ஆனால், அதே சமயம், வீரரும் கூட.

அராமிஸ் -மஸ்கட்டீர்களிலேயே மர்மமானவர். அவரது நோக்கம், சாணக்கியமானது. தான் செய்யும் ஒவ்வொரு செயலும், தனக்குப் புகழை வரவழைக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர். புத்திசாலி. எல்லாவற்றுக்கும் மேலாக, ஆதோஸ், போர்த்தோஸ் மற்றும் டா’ர்டக்ஞ்யன் மீது உயிரையே வைத்திருப்பவர். இறுதியில், ஒரு பாதிரியாராக மாறி, மஸ்கட்டீர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியவர்.

டா’ர்ட்டக்ஞ்யன் – இந்தக் கதையின் கதாநாயகன். கிராமம் ஒன்றிலிருந்து, மஸ்கட்டீர்களில் ஒருவனாகவேண்டும் என்ற லட்சியத்தோடு ஃப்ரான்ஸ் வரும் இளைஞன்.

கார்டினல் ரிச்ல்யூ – ஃப்ரான்ஸை நிழல் ஆட்சி புரிந்துவரும் தலைமைப்பாதிரியார். மன்னன் லூயிஸ் XIII, இளவயது மன்னனாக இருந்ததால், அவருக்குப்பதில் ஆட்சி செய்த மனிதர். இவர், நிஜமாகவே இருந்திருக்கிறார்.

ரோச்ஃபோர்ட் – கார்டினலின் வலதுகை. டா’ர்டக்ஞனுடன் கதையின் ஆரம்பத்தில் சண்டையிடும் மனிதன். இவனைப் பழிவாங்கவேண்டும் என்றே டா’ர்டக்ஞ்யன் கடைசிவரை கறுவிக்கொண்டிருப்பான்.

மிலேடி – கதையின் முக்கியமான வில்லி. ஆதோஸுக்கும் இவளுக்கும் ஏதோ தொடர்பு உண்டு.

பக்கிங்ஹாம் – கதையின் இன்னொரு வில்லன்.

ரைட். ஒரிஜினல் கதையை இப்போது பார்ப்போம்.

டா’ர்டக்ஞ்யன், ஏழை இளைஞன். மஸ்கட்டீர் ஆகவேண்டும் என்ற கனவோடு ஃப்ரான்ஸ் வருகிறான். வரும் வழியில், யாரோ ஒரு மனிதன், இவனது குதிரைப் பார்த்துக் கிண்டலடிக்க, கோபத்தில் அவனைத் தாக்கச்செல்லும் டா’ர்டக்ஞனை, அம்மனிதனின் ஆட்கள் தாக்கி மயக்கமுற வைக்கின்றனர். அதன்பின் ஃப்ரான்ஸில் எங்கு சென்றாலும் அம்மனிதனைத் தேடிக்கொண்டே இருக்கிறான் டா’ர்டக்ஞ்யன். இதற்கிடையில், ஆதோஸ், போர்த்தோஸ் மற்றும் அராமிஸோடு சிறிய சண்டைகளில் சிக்கிக்கொள்ளும் டா’ர்ட்டக்ஞ்யன், அவர்களுடன் சேர்ந்து கார்டினலின் ஆட்களை அடித்து வீழ்த்திவிடுகிறான். இதன்பின் கான்ஸ்டன்ஸ் பொனாஸ்யூ என்ற பெண்ணைப் பார்த்து மனதைப் பறிகொடுக்கிறான். ராணியான ஆனிடம் பணிப்பெண்ணாக இருக்கிறாள் கான்ஸ்டன்ஸ்.

இதற்கிடையில், ஃப்ரான்ஸ் ராணி ஆனுக்கும், பக்கிங்ஹாமின் பிரபுவுக்கும் காதல். இதனால், பக்கிங்ஹாமுக்கு, ஃப்ரான்ஸ் அரசரான லூயிஸ் XIII பரிசளித்த வைர அட்டிகையின் ஒருசில வைரங்களைத் தனது நினைவாகப் பரிசளிக்கிறாள் ஆன். இது தெரிந்து, ஃப்ரான்ஸுக்கும் இங்க்லாந்துக்கும் போர் மூட்டிவிட வேண்டும் என்று நினைக்கும் கார்டினல், அரசரிடம் சொல்லி, ஒரு விருந்து ஏற்பாடு செய்யவைத்து, அதில் அந்த அட்டிகையை ராணி அணிந்துவரவேண்டும் என்று மன்னரைச் சொல்லவைத்துவிடுகிறார். திகைக்கும் ராணி, பணிப்பெண்ணிடம் விஷயத்தைச் சொல்ல, அவள்மூலமாக டா’ர்டக்ஞ்யனும் மூன்று மஸ்கட்டீர்களும் இங்க்லாந்து சென்று பக்கிங்ஹாமிடம் பேசி, அட்டிகையை மீட்டு வருகின்றனர்.

தனது நம்பிக்கைக்குரிய அடியாளான மிலேடி என்ற அழகியிடம், பக்கிங்ஹாமைக் கொல்லுமாறு கார்டினல் உத்தரவிடுகிறார். அவரைக் கொன்றுவிட்டு வரும் வழியில் கான்ஸ்டன்ஸைச் சந்திக்கும் மிலேடி, அவளையும் விஷம் வைத்துக் கொன்றுவிடுகிறாள்.

ஆதோஸ், மிலேடியைத் தேடிவந்து, அவளைப் பிடித்து விடுகிறார். மரண தண்டனை, மிலேடிக்கு மஸ்கட்டீர்களால் விதிக்கப்படுகிறது. அரசாங்கக் கொலையாளி ஒருவன் மூலம், மிலேடியின் தலை வெட்டப்படுகிறது. ஃப்ரான்ஸ் திரும்பும் மஸ்கட்டீர்களில், போர்த்தோஸ் மற்றும் அராமிஸ் (பாதிரியார் ஆகிவிடுகிறார்) ரிடையர் ஆக, ஆதோஸ் மட்டும் டா’ர்டக்ஞ்யனின் தலைமைக்குக்கீழ் மஸ்கட்டீராகவே சில காலம் இருந்து, அவரும் ஓய்வுபெற்றுவிடுகிறார்.

இத்துடன் நாவல் முடிகிறது. ஆனால், இதற்கு அடுத்த பாகமாக ஒரு பெரும் நாவலையும் எழுதினார் டூமா. அந்நாவலின் கடைசியான நான்காம் பாகம்தான் Man in the Iron mask.

இது, ஒரிஜினல் கதை.

திரைப்படத்தில், கதையின் முக்கிய சம்பவங்கள் எல்லாமே வைத்துக்கொள்ளப்பட்டு, நடுவில் வரும் அத்தனை சம்பவங்களும் மசாலா பூசப்பட்டிருக்கின்றன. திரைப்படத்தில், மிலேடி இறப்பதில்லை. பக்கிங்ஹாம், வில்லன்களில் ஒருவராகக் காட்டப்பட்டிருக்கிறார்.

இதைத்தவிர, நாவலின் கதையே திரைப்படத்தின் கதையுமாகும்.

படத்தில், ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் அதன் முத்திரைக் காட்சிகள் உண்டு. உதாரணத்துக்கு, ஆதோஸின் கம்பீரம், அராமிஸின் கடவுள் பக்தி, போர்த்தோஸின் பலம் ஆகியன நன்றாகவே காட்டப்பட்டிருக்கின்றன. படத்தில் டா’ர்டக்ஞ்யனுடன் வம்பு செய்யும் ‘man from meung’ கதாபாத்திரமாக, பாண்ட் வில்லன் மாட்ஸ் மிக்கெல்ஸன் (casino royale & Quantum of solace). வில்லி மிலேடியாக, மிலா ஜோவோவிச். பக்கிங்ஹமாக, ஆர்லாண்டோ ப்ளூம்.

மஸ்கட்டீர்களைப் பற்றி எதுவும் தெரியவில்லையெனில், கதை புரியாது. அட்லீஸ்ட் இந்தக் கட்டுரையையாவது படித்துவிட்டுச் சென்றால் நலம். என்னைப்பொறுத்தவரை, செத்தாலும் இக்கதையை மறக்கமாட்டேன் என்பதால், ஒவ்வொரு காட்சியையும் அனுபவித்துப் பார்த்தேன் (ஆனால், இதைவிட, 1998ல் வெளியான இதன் இரண்டாம் பாகமான Man in the iron mask எனக்குப் பிடித்தது).

கதையில் இல்லாத பல அம்சங்கள் படத்தில் உண்டு. உதாரணம்: லியனார்தோ டவின்ச்சியின் வரைபடங்கள், அவற்றை வைத்துத் தயாரிக்கப்படும் உபகரணங்கள் முதலியன. அதேபோல், படத்தின் க்ளைமேக்ஸ், நாவலில் இல்லவே இல்லை. படம் முடிகையில், இரண்டாம் பாகத்துக்கு அஸ்திவாரம் பலமாகவே இட்டுவிடுகிறார்கள்.

மொத்தத்தில், படம் ஓகே. மஸ்கட்டீர்களைப் பிடித்தால், படமும் பிடிக்கும்.

The Three Musketeers படத்தின் ட்ரய்லர் இங்கே காணலாம்.

பி.கு – Three Musketeers நாவலுக்கும், பொன்னியின் செல்வன் நாவலுக்கும் உள்ள ஒற்றுமைகளை யாராவது கவனித்திருக்கிறீர்களா? குறிப்பாக டா’ர்டாஞ்யன் – வந்தியத்தேவன், மிலேடி – நந்தினி, ஆழ்வார்க்கடியான் – அராமிஸ், டா’ர்டாஞ்யனின் குதிரை கிண்டல் செய்யப்படுவது – வந்தியத்தேவனின் குதிரை கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் கிண்டல் செய்யப்படுவது etc..

Facebook Comments

Sharing is caring!

Related Posts

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

5 Comments

 1. he he good i didnt go before reading the review…
  will watch…

  Reply
 2. appa பொன்னியின் செல்வன் காப்பியா.? யாராவது கல்கிக்கு மெயில் அனுப்புங்கப்பா:)))

  Reply
 3. என்னாது பொன்னியின் செல்வன் காப்பியா? இது என்ன புது கதையா இருக்கு? 🙂 . நான் ஒற்றுமைன்னு சொன்னா அது உங்களுக்குக் காப்பியா? :-). கல்கிக்கு ஈமெயில் படிக்கத் தெரியாது. அதுக்குள்ளாற போயிட்டாரு பாவம்

  Reply
 4. Veera

  //CIT – கோவை

  அது ஒரு கனாக்காலம் 🙂

  Reply

Join the conversation