Dev Anand – அபி ந ஜாவோ சோட் கர் . . .
Eulogy என்ற இரங்கல் கட்டுரைகள் எழுதுவது எனக்குப் பிடிக்காத ஒன்று. இதுவரை அப்படி எதையும் எழுதியதில்லை. ஆனால், இப்போது எழுதாமலும் இருக்கமுடியவில்லை. இதை எழுதுவதற்குக் காரணம், தேவ் ஆனந்த் பற்றி எழுதவேண்டும் என்று சென்றவருடமே நினைத்தேன். எனக்கு ஹிந்தியில் பிடித்த ஆளுமைகள், மூன்று பேர். அவர்களில் எப்போதும் முதலாவது நபர், கிஷோர் குமார். அவரைப் பற்றி சென்ற வருடம் ஒரு கட்டுரை (க்ளிக்கிப் படிக்கலாம்) எழுதியிருந்தேன். அதற்கு அடுத்ததாக எழுதவேண்டும் என்று நினைத்தது தேவ் ஆனந்த் பற்றி. ஆனால், என்னுடைய சோம்பேறித்தனத்தால் அதனைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்து, இப்போது தேவ் ஆனந்த் இறந்தே விட்டார். இந்த சூழ்நிலையில் Eulogy எழுதினால், இப்படி இரங்கல் கட்டுரை எழுதுவதையே ஹாபியாக வைத்திருக்கும் எழுத்தாளர் ஒருவருக்குப் போட்டியாக என்னை நினைத்துவிட வாய்ப்பு இருக்கிறது (??!!). அதையும் மீறி எழுதுவதற்குக் காரணம், இறக்கும் தருணம் வரை வாழ்வை அனுபவித்து வாழ்ந்த மனிதரான தேவ் ஆனந்தை என்னால் மறக்க இயலாததே.
சரி. என்னென்ன வேலைகள் உங்களுக்கு இருக்கின்றனவோ அத்தனையையும் கொஞ்ச நேரம் ஒத்திப்போடுங்கள். மனதை அமைதிப்படுத்திக்கொள்ளுங்கள். ஆயிற்றா? முடிந்தால் உங்களுக்குப் பிடித்த மதுபானம் ஒன்றைத் தயார் செய்துவைத்துக்கொள்ளுதல் நலம் (அல்லது பழரசம்).
இப்போது இந்தப் பாடலைப் பாருங்கள். Hum Dono (1961) என்ற படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடல் இது. மொஹ்மத் ரஃபியின் இனிமையான குரலில், ஜெய்தேவின் அருமையான இசையில், தேவ் ஆனந்த் மற்றும் ஸாத்னா ஷிவ்தஸானி நடித்த பாடல்.
பார்த்தாயிற்றா? பழைய ஹிந்தித் திரைப்படப் பாடல்களின் ரசிகராக நீங்கள் இருந்தால், இக்கட்டுரை உங்களுக்குப் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. ஹிந்திப் பாடலா? அடப்போய்யா என்று நினைக்கும் நபராக நீங்கள் இருந்தால் கூட, சற்றே இங்கே நான் தரப்போகும் பாடல்களை ஒருமுறையாவது பார்க்க முயற்சி செய்யுங்கள். உங்கள் நினைப்பை அவை மாற்றக்கூடும்.
தரம்தேவ் பிஷோரி ஆனந்த்.
இதுதான் தேவ் ஆனந்தின் இயற்பெயர். தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில், 1923 ல் பிறந்தவர் தேவ் ஆனந்த். லாஹூரில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, பம்பாய்க்கு வேலை நிமித்தமாக நாற்பதுகளில் குடிபெயர்ந்தவர். எப்போது பம்பாய் வந்தாரோ, அதிலிருந்து அவரது வாழ்க்கை முற்றிலுமாக மாறியது என்றே சொல்லிவிடலாம். மேலும் தொடருமுன், ஒரு விஷயத்தை சொல்லிவிடுகிறேன். தமிழ்த் திரையுலகில் எப்படி ஜெமினி கணேசனோ, அப்படி ஹிந்தித் திரையுலகில் தேவ் ஆனந்த். இந்தக் கருத்தை, Facebook ல் நண்பராக இருக்கும் கணேசன், தேவ் ஆனந்த் இறந்த அன்று எனது சுவரில் எழுதியிருந்தார். ஆச்சரியகரமான ஒப்பீடு! இதே கருத்தை, நானும் சில முறை நினைத்துப் பார்த்திருக்கிறேன். தேவ் ஆனந்தையும் ஜெமினியையும் ஒப்பிடுவதற்குக் காரணம்? மேற்கொண்டு விரிவாகப் பார்க்கலாம்.
‘ ஹம் ஏக் ஹைன்’ (Hum Ek Hain) என்ற திரைப்படமே தேவ் ஆனந்தின் முதல் படம். இப்படத்தில் அவருடன் நடித்தவர், ஹிந்தித் திரையுலகின் (வருங்கால) நட்சத்திரமான குருதத். இப்படத்தில் நடிக்கையில், இருவருக்கும் ஆழ்ந்த நட்பு ஏற்பட்டு, இருவரும் ஒரு உடன்படிக்கை செய்துகொள்வதில் முடிந்தது. தேவ் ஆனந்த் ஒரு திரைப்படம் தயாரித்தால், அதனை குருதத் இயக்கவேண்டும் என்றும், குருதத் ஒரு திரைப்படத்தை இயக்கினால், அதில் தேவ் ஆனந்த் நடிக்கவேண்டும் என்றும் இருவரும் முடிவு செய்துகொண்டனர். அதன்படியே வருங்காலத்தில் நடந்தது. அதனை சிறிது பத்திகள் கழித்துப் படிக்கலாம்.
தேவ் ஆனந்தின் காதல்கள், ஹிந்தித் திரையுலகில் பெரும்புகழ் பெற்றவை. அவரது காதல் வாழ்க்கைக்கு அடித்தளம், பூனாவிற்கு அவர் முதல் வகுப்பில் பயணமுற்ற ஒரு புகைவண்டியில் அமைந்தது. அவரது இருபதுகளில், அந்த இரவில், அவருடன் இருந்த பார்ஸி நடுத்தர வயது மாது, அவருடன் வலுக்கட்டாயமாக உறவு கொண்டார். அதிலிருந்து, கூட நடித்த சில நடிகையர்கள், விமானப் பணிப்பெண்கள் சிலர், வெய்ட்ரஸ்கள், நர்ஸ்கள், பதிநான்கு – பதினாறு வயதில் நடிப்பதற்காக பம்பாய் வந்த அழகிகள், இன்னும் பலருடன் அவருடைய ஆழமான காதல்களை அவரது சுயசரிதையான ‘Romancing with Life‘ விவரிக்கிறது. ஜெமினியுடன் தேவ் ஆனந்தை ஒப்பிடும் காரணம் இதுதான்.
‘ஹம் ஏக் ஹைன்’ படத்துக்குப் பிறகு, அப்போதைய ஹிந்தித் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த ஸுரையாவுடன், 1948 ல் இருந்து 1951 வரை ஆறு படங்களில் நடித்தார் தேவ் ஆனந்த். அப்படங்களில் ஒன்றான ‘வித்யா’ (Vidhya -1948)வில், ’கினாரே கினாரே சலே ஜாயேங்கே’ என்ற பாடல் படப்பிடிப்பின்போது ஸுரையா நடித்துக்கொண்டிருந்த படகு கவிழ, அவரைக் காப்பாற்றினார் தேவ் ஆனந்த். அதிலிருந்து, இருவரும் ஒருவரையொருவர் விரும்பத் துவங்கினர். இதற்கடுத்த படமான ‘ஜீத்’ (Jeet – 1949) படப்பிடிப்பில், தேவ் ஆனந்த் ஸுரையாவிடம் தனது காதலைச் சொல்ல, சம்மதித்தார் ஸுரையா. அப்போது தேவ் ஆனந்த் கொடுத்த மோதிரத்தின் விலை – 3000/-. ஆனால், ஸுரையாவின் தாய்வழிப் பாட்டி இக்காதலைக் கடுமையாக எதிர்த்தார். காரணம் – ஸுரையா முஸ்லிம். தேவ் ஆனந்தோ ஹிந்து. எவ்வளவோ மன்றாடியும் இவர்களது காதலைப் பாட்டி ஏற்றுக்கொள்ளாததால், வாழ்நாள் முழுதும் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்துவிடத் தீர்மானித்தார் ஸுரையா. இருவரது காதலும் முறிந்தது. இருவரும் சேர்ந்து நடித்த ‘தோ சிதாரே’ (Do Sithaare – 1951), இந்தப் புகழ்பெற்ற காதல் ஜோடியின் கடைசிப் படமாகவும் அமைந்தது. 2004ல், தான் இறக்கும்வரை, பம்பாயின் மெரைன் டிரைவில் தனது அபார்ட்மென்ட்டிலேயே வாழ்ந்து மறைந்தார் ஸுரையா.
இதற்கிடையில், செட்டுகளில் அலைந்துகொண்டிருந்த தேவ் ஆனந்த், அஷோக் குமாரின் (கிஷோர் குமாரின் அண்ணன்; ஹிந்தித் திரையுலகின் நாகையா) கண்களில் பட, தனது ‘ஸித்தி’ (Ziddi – 1948) படத்தில் அவரைக் கதாநாயகனாக ஆக்கினார் அஷோக் குமார். அதுதான் தேவ் ஆனந்தின் முதல் ஹீரோ வாய்ப்பு. அப்படத்தில் இன்னொரு விசேஷம் என்னவெனில், புகழ்பெற்ற பின்னணிப் பாடல் ஜோடியான கிஷோர் குமார் – லதா மங்கேஷ்கர் இருவரின் முதல் டூயட் இடம்பெற்ற படமும் அதேதான் (‘Ye Kaun aayaa re’).
இப்படம் வெளியானவுடன், தேவ் ஆனந்த், தனது சொந்தத் திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கினார். அதுதான் நவ்கேதன். இதன் சிறப்பு என்னவெனில், இரண்டு நாட்கள் முன்புவரை, உலகிலேயே, நாற்பதுகளில் தொடங்கிய நிறுவனராலேயே நடத்தப்பட்டு வந்த ஒரே திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் இதுதான்.
இதன்பின்னர், உற்ற நண்பன் குருதத்துக்குச் செய்துகொடுத்த சத்தியத்தை மறவாமல் தேவ் ஆனந்த் தயாரித்த படம் தான் ‘பாஸி’ (Baazi – 1951). பாம்பேயில் தயாரிக்கப்பட்ட க்ரைம் த்ரில்லர்களில் தலைசிறந்து விளங்கிய படம் இது. சூப்பர்ஹிட் ஆனது. அந்தப் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த கல்பனா கார்த்திக் என்ற நடிகையைக் காதலித்து மணந்துகொண்டார் தேவ் ஆனந்த். ஆண்டு – 1954. அதற்கு முன்னரே கல்பனாவுடன் நான்கு படங்களில் நடித்து முடித்திருந்தார் தேவ் ஆனந்த்.
வெற்றிகள் தேவ் ஆனந்தைத் தொடர ஆரம்பித்திருந்தன. ஐம்பதுகளில் பம்பாய்த் திரைப்பட உலகில் தலைசிறந்து விளங்கிய கதாநாயகர்கள் மூவர். திலீப் குமார், ராஜ் கபூர் மற்றும் தேவ் ஆனந்த். நடிப்பில் பவர்ஹௌஸ்களாக விளங்கிய ராஜ் கபூர் மற்றும் திலீப் குமார் ஆகியவர்களுக்கு ஈடுகொடுத்து ஜாலியான ரொமாண்டிக் ஹீரோவாக நடித்துத் திரைப்பட ரசிகர்களை மகிழ்வித்துவந்தார் தேவ் ஆனந்த் (தமிழில் எம்ஜியாருக்கும் சிவாஜிக்கும் ஈடுகொடுத்து ஜாலியாக நடித்த ஜெமினியின் நினைவு வருகிறதல்லவா?).
தேவ் ஆனந்த், ராஜ்கபூர் மற்றும் திலீப் குமார்.
இந்தக் காலகட்டத்தில்தான் அட்டகாசமான பல பாடல்கள் தேவ் ஆனந்துக்கு அமைந்தன.
சிலஅருமையான தேவ் ஆனந்த் பாடல்களை இங்கே கொடுக்கிறேன். தவறாமல் பாருங்கள். எனக்கு மிகப்பிடித்த பாடல்களில் இவையும் அடக்கம்.
Hum Dono – Main Zindagi Ka Saath Nibhata Chala Gaya
Tere Ghar Ke Samne – Dil Ka Bhanwar Kare Pukar
Kala Pani – Achcha Ji Mein Haari
Paying Guest – Mana Janaab Ne Pukaaraa Nahin
Kala Bazaar – Khoya Khoya Chand
இத்துடன், இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நான் கொடுத்திருந்த ஹம் தோனோ பாடலான ‘அபி ந ஜாவோ சோட் கர்’ பாடலையும் காணலாம்.
1965 ல் வெளிவந்த ‘கைட்’ (Guide) திரைப்படம், தேவ் ஆனந்தின் திரைப்பட வாழ்வில் ஒரு மைல்கல். ஏனெனில், அப்படம்தான் முதன்முதலில் இந்திய – ஹாலிவுட் கூட்டுமுயற்சியில் உருவான படம். ஆர்.கே. நாராயணின் நாவலான இப்படத்தின் ஆங்கில வடிவத்துக்கு, புகழ்பெற்ற நாவலாசிரியரான Pearl S Buck திரைக்கதை எழுதினார். இப்படத்துக்கு முன்னரே, பியர்ல் பக், தேவ் ஆனந்தை, ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க அழைத்திருந்தார். கைட் நாவலைப் படித்த தேவ் ஆனந்த், அதனால் ஈர்க்கப்பட, இந்திய ஹாலிவுட் கூட்டு முயற்சியாக உருவானது அப்படம். இந்தியாவில் வசூல் சாதனை படைத்த படங்களில் இதுவும் ஒன்று. வெளியான இடங்களில் எல்லாம் பிய்த்துக்கொண்டு ஓடிய படம். இப்படத்தை இயக்கியவர், தேவ் ஆனந்தின் இளைய சகோதரர் விஜய் ஆனந்த்.
Guide படத்தின் புகழ்பெற்ற பாடலான ‘Gata rahe mera dil‘ பாடலை இங்கே காணலாம்.
கைட் படத்துக்குப் பின்னர், தனது சகோதரர் விஜய் ஆனந்தோடு மறுபடியும் தேவ் ஆனந்த் இணைந்த படம், ஜ்வெல் தீஃப் (Jewel Thief – 1967). படத்தின் அனைத்துப் பாடல்களும் ஹிட். இசையமைத்தவர், தேவ் ஆனந்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் S.D பர்மன் (R.D பர்மனின் தந்தை). இப்படத்தைப் பற்றிய இன்னொரு சுவாரஸ்யமான தகவல் – இந்தச் சமயங்களில், ஹிந்தித் திரையுலகில் மறுபடி விறுவிறுவென்று புகழ் ஏணியில் ஏறிக்கொண்டிருந்தார் கிஷோர் குமார். ஐம்பதுகளில் மிகப் புகழ்பெற்று விளங்கி, இடையில் எந்த வாய்ப்புகளும் இல்லாத நிலையில், S.D பர்மனால் மறுபடியும் வாய்ப்புகள் பெற்று, அதிவேகமாக முன்னேறிக்கொண்டிருந்தார் அவர் (ஆராதனா படம் இன்னும் வெளிவந்திருக்கவில்லை. அப்படம் வந்தவுடன், 1969ல் இருந்து 1987ல் இறக்கும்வரை அவர்தான் நம்பர் ஒன்). கிஷோர் குமார் – தேவ் ஆனந்த் ஜோடி, அறுபதுகளின் இறுதியிலிருந்து எழுபதுகளின் இறுதிவரை மிகப் புகழ் பெற்று விளங்கியது.
ஜ்வெல் தீஃப் படத்தின் புகழ்பெற்ற தேவ் ஆனந்த் பாடல் இதோ. கிஷோர் குமாரின் மேஜிக்கை இப்பாடலில் வெகுவாக உணரமுடியும்.
Ye dil na hota bechara
ஜ்வெல் தீஃப் படத்தின் இன்னொரு புகழ்பெற்ற பாடல் இங்கே.
Hoton pe aisi baat mein
மேலே இருக்கும் இரண்டு பாடல்களிலும், தேவ் ஆனந்தின் சிக்நேச்சர் மூவ்மெண்ட்டான தலையாட்டுதலைக் கவனிக்க முடியும். அவரது இந்த மூவ்மெண்ட், மிகப்பிரபலம்.
ஜ்வெல் தீஃப் படத்துக்குப் பின்னர், விஜய் ஆனந்தின் இயக்கத்தில் மறுபடி தேவ் ஆனந்த் நடித்த படம் தான் ‘ஜான்னி மேரா நாம்’ (Johnny Mera Naam – 1970). இப்படத்தில் தேவ் ஆனந்துக்கு ஜோடி – தமிழில் இயக்குநர் ஸ்ரீதரால் மிகவும் ஒல்லியாக இருக்கிறார் என்று நிராகரிக்கப்பட்ட பெண் ஒருவர். அவரது பெயர் – ஹேமமாலினி. இப்படம் அவரை நம்பர் ஒன் ஸ்தானத்தில் நிறுத்தியது. அதன்பின்னர் ஹேமமாலினி திரும்பிப் பார்க்கவேயில்லை (ஹேமமாலினி – ஸ்ரீதர் பற்றிய ரசமான தகவல் ஒன்று உண்டு. இப்படத்துக்குப் பின்னர், ஒருமுறை விமானநிலையத்தில் இருவரும் சந்தித்தனர். அப்போது, இதற்குமுன்னர், தன்னை நிராகரித்த ஸ்ரீதரை விமர்சித்து ஹேமமாலினி ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் கொடுத்திருந்த பேட்டியைப் படித்திருந்தார் ஸ்ரீதர். இயல்பில் கோபம் கொஞ்சம் அதிகமான மனிதர் என்பதால், ஹேமமாலினியிடம், “உன்னை நான் நிராகரிக்கும்போது நீ எப்படி இருந்தேன்னு உன்னோட அந்த சமயத்து ஃபோட்டோஸ் என் கிட்ட இன்னும் இருக்கு. நீ பேட்டி குடுத்தது போல, நானும் அந்த ஃபோட்டோஸ் எல்லாம் டிஸ்ட்ரிப்யூட் பண்ணட்டுமா? அப்போ தெரிஞ்சிக்குவாங்க உன்னை நான் நிராகரிச்ச காரணம்” என்று ஹேமமாலினியிடம் அமைதியாக ஸ்ரீதர் பேச, நிலைமையைப் புரிந்துகொண்ட ஹேமமாலினி, ஸ்ரீதரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்).
ஜான்னி மேரா நாம் படம், தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. அப்படத்தின் பெயர் – ராஜா. ஹீரோவாக நடித்தவர் – சிவாஜி. ஜான்னி மேரா நாம் படமும் சூப்பர்ஹிட். பாடல்கள் அத்தனையும் அட்டகாசமாக இருக்கும்.
இதோ ஜான்னி மேரா நாம் படத்தின் பிரபலமான பாடல் ஒன்று. பாடியவர் – வேறு யார்? கிஷோர் குமார் தான்.
Pal Bar ke Liye Koi hume Pyar Kar le
’ஜான்னி மேரா நாம்’ படத்துக்குப் பின்னர், தேவ் ஆனந்த் இயக்கிய முதல் படம் வெளியானது. பெயர் – ப்ரேம் புஜாரி (Prem Pujari – 1970). இப்படம் தோல்வியடைந்தாலும், படத்தின் பாடல்களால் இன்னும் பேசப்படுகிறது. அப்படத்தில் இடம்பெற்ற பாடலான ‘பூலோன் கே ரங்ஸே.. தில் கீ கலம் ஸே’ என்ற கிஷோர் குமார் பாடலைக் கேட்காதவர்கள் யாருமே இருந்திருக்க முடியாது எனலாம். அப்பாடலை இங்கே காணலாம். படத்துக்கு இசையமைத்தவர் – S.D பர்மன்.
Phoolon ke rang se.. Dil ki kalam se..
தேவ் ஆனந்த் முதன்முறையாக இயக்கிய படம் தோல்வியடைந்தாலும், அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய படம், சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்தியா முழுதும் இன்றும் புகழ்பெற்று விளங்கும் ‘தம் மரு தம்’ (க்ளிக்கிப் பார்க்கலாம்) பாடல் இடம்பெற்ற படம் அது. படத்தின் பெயர் – ‘ஹரே ராமா ஹரே க்ருஷ்ணா’. ஆண்டு – 1971. அப்படத்தில் தேவ் ஆனந்த் அறிமுகப்படுத்திய நடிகைதான் ஸீனத் அமன். அதற்குப் பிறகு புகழின் உச்சத்துக்கே சென்ற நடிகை. இப்படத்திலும் கிஷோர் குமார் பாடிப பாடல்கள் படு பிரபலம். இதோ ஒரு அருமையான பாடல். இப்பாடலை மேடையில் எப்போது பாடினாலும், இது தங்கைகளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது என்று சொல்லியே இப்பாடலை கிஷோர் குமார் பாடுவது வழக்கம்.
Phoolon ka thaaron ka sabka kehna hai
1970களின் மத்தி. தேவ் ஆனந்துடன் ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் பரிமளித்த இருவரில் ஒருவரான ராஜ் கபூர், தந்தை வேடங்களில் நடிக்க ஆரம்பித்திருந்தார். இன்னொருவரான திலீப் குமாரின் படங்கள், தோல்வியைத் தழுவிக்கொண்டிருந்தன. அப்போதும்கூட, தனது ஐம்பதாவது வயதைத் தாண்டிய நிலையிலும், வரிசையாக ஹிட்களைக் கொடுத்தார் தேவ் ஆனந்த். அப்படங்களில் ஒன்றான ‘ச்சுப்பா ருஸ்தம்’ (Chhupa Rustam – 1973) படத்தின் இனிமையான கிஷோர் குமார் பாடல் ஒன்றினை இங்கே பார்க்கலாம். இப்பாடல், நாற்பதுகளில் S.D பர்மன் இசையமைத்து வைத்திருந்த பாடல். அவரது புதல்வர் R.D பர்மனாலும் கிஷோர் குமாராலும் தூசி தட்டியெடுக்கப்பட்டு, மீண்டும் உபயோகப்படுத்தப்பட்டது.
Dheere se jaana Khatiyan mein
தனது ஐம்பத்தைந்தாவது வயதில் தேவ் ஆனந்த் இயக்கிய படம் – தேஸ் பர்தேஸ் (Des Pardes – 1978). அதில் அறிமுகமானவர் – டினா முனிம். வயது இருபது. இவர்தான் பிந்நாளில் டினா அம்பானியாக மாறியவர்.
எண்பதுகளின் துவக்கத்திலும் சளைக்காமல் ஹிட்களைக் கொடுத்தார் தேவ் ஆனந்த். லூட்மார் (Lootmaar – 1982) என்று ஒரு படம். அப்படத்தில் ஒரு ஜாலியான பாடல் எனக்குப் பிடிக்கும். அது இங்கே. பாடியவர் கிஷோரே தான்.
Piya Hum Saat mulk ka pani
இந்த நேரத்தில்தான், தனது மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தி ஒரு திரைப்படம் எடுத்தார் தேவ் ஆனந்த் (Anand aur Anand – 1984). படம் படுதோல்வி அடைந்தது.
இதன்பின் வெளிவந்த ஓரிரண்டு படங்கள் ஓரளவு ஓடின (Hum Naujawan – 1985 – இதில் அறிமுகமான தபு, அதன்பின் எட்டு வருடங்கள் படமே இல்லாமல், 1993ல் தான் மறுபடி நடித்துப் பிரபலமானார்).
பின்னர் தொண்ணூறுகளில் தேவ் ஆனந்த் எடுத்த படங்கள் எதுவும் ஓடாமல் இருந்தாலும், சென்ற வருடம் வரை படங்கள் எடுத்துக்கொண்டே தான் இருந்தார்.
எழுபதுகளில், ஸீனத் அமன் மேல் தான் கொண்ட காதலையும், ராஜ் கபூர், ஸீனத்துக்குக் கொடுத்த ஒரே முத்தத்தில் அக்காதல் உடைந்தது பற்றியும் தனது சுயசரிதையில் குமுறியிருக்கிறார் தேவ் ஆனந்த்.
தேவ் ஆனந்தின் அருமையான பாடல்களில் இன்னும் சிலவற்றை இங்கே கொடுக்கிறேன். மறக்காமல் பாருங்கள்.
Darling Darling – Aise na mujhe tum deko (நதியா நதியா நைல் நதியா பாடல்)
Gambler – Choodi nahi ye mera dil
Joshila – Kiska Rastha Dekhe (மிக மிக அருமையான கிஷோர் குமார் பாடல்)
Jhonny Mera Naam – Nafrat karne walon ke seene me pyar
இறுதியாக, இக்கட்டுரையின் தொடக்கத்தில் நாம் கறுப்பு வெள்ளையில் கண்ட ‘ஹம் தோனோ’ படத்தின் இரண்டு பாடல்கள், இப்போது முழு வண்ணத்தில் காணலாம். தேவ் ஆனந்தின் முழு ஆளுமையும் வெளிப்படும் இரண்டு அற்புதங்கள் அவை. இப்பாடல்களைக் கண்டு, தேவ் ஆனந்த் இத்தனை நாள் நம்மை மகிழ்வித்ததை எண்ணிப்பார்க்கிறேன்.
Hum Dono – Abhi Na jao chod kar in color
Hum Dono – Mein zindagi ke saath in color
Rest in Peace Dev Anand… Your songs are there, forever, to remind ur persona . .
நன்றி – இணையதளம் மற்றும் எனது மூளையில் பதிந்துள்ள பழைய ஹிந்திப் படங்களைப் பற்றிய விவரங்கள்.









vada
batta jilebi ..
.
.
.
.
side dish
good one mate ..!
im not a fan of hindhi songs or anything (coz i dont understand ‘em )
but these that u mentioned really cracked me up …
thanks for this post … !!
sir ,pechuku solla villai…ungal ulaipum,arpanipum intha post la theriuthu…. master piece of K K ….
போன வருடம் அவரோட பிறந்தநாளுக்கு நான் ஒரு பதிவு போட்டிருந்தேன்….. இந்த வருடம் போய்ட்டாரு..:(( ஒருமுறை உ.பி.யில் நடந்த ஷுட்டிங் போது அவரை பார்க்க பெருங்கூட்டம் கூடியது, வழக்கம்போல பெண்களின் கூட்டம்… அதில் வீட்டின் மொட்டை மாடியிலிருந்த பார்த்த ஒரு பெண் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் கீழே விழுந்து இறந்தபோனதாக கேட்டிருக்கிறேன்…. …. அவரின் காஸ்ட்யும் எனக்கு ரொம்ப பிடிக்கும், அப்புறம் தலைய சரிச்சு ஒரு நடை நடப்பாரு…..கிரேட் ஆக்டர்…
ஐசே ந முஜே தும் தேக்கோ சீனே சே லகாலுங்கா… – இந்தப்பாட்டு எனக்கு மனப்பாடம்
))
அட்டகாசமான கட்டுரை………..ஆனா அவர் இறப்புக்கு பிறகு வர மாதிரி ஆகிப் போச்சே…
எனக்கு தேவ் ஆனந்த் தெரிய வந்தது, ரங்கோலி மூலமாக தான்……The Guideன்னு நெனைக்கிறேன்…….மாடிப்படிகளில் ஒரு பாட்டு வருமே………
ஷம்மி கபூரும் – தேவ் ஆனந்தும் தான் அப்ப எனக்கு புடிச்சது….(இப்பவும் தான்)…..ஒரு ஸ்டைல் இருக்கும்……பின்னாடி, 2000ஆம் ஆண்டு வாக்குல அவர் டைரக்ட் செஞ்ச படத்த பாத்து மெர்சலாயிருச்சு……..
க்கோயா கோயா சாந்த்….. my first style icon.
Guide ஒரு வெற்றி படமில்லை நண்பரே!!! இதை தேவ் ஆனந்தே ஒட்டரும் கொண்டு விட்டார்….