திரைக்கதை எழுதுவது 'இப்படி' – 13

by Rajesh January 9, 2012   series

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

சென்ற அத்தியாயத்தில், ஒரு திரைக்கதையை எப்படி அமைப்பது – கதையை எப்படி ஆரம்பிப்பது ஆகிய விஷயங்களைப் பற்றி சிட் ஃபீல்ட் என்ன சொல்லியிருக்கிறார் என்று கவனித்தோம். இப்போது, திரைக்கதையை அமைக்கத் தேவையான இரண்டு பிரதான சம்பவங்களைப் பற்றி இனி அலசலாம்.

Chapter 8 – The Two Incidents

Incident (சம்பவம்): ஏதாவது ஒரு குறிப்பிட்ட விஷயத்தோடு தொடர்புடைய நிகழ்ச்சி அல்லது நிகழ்வு.

ஜோ எஸ்டெர்ஹாஸ் (Joe Eszterhas) என்று ஒரு புகழ்பெற்ற திரைக்கதையாசிரியர் ஹாலிவுட்டில் உண்டு. இவரது சிறந்த திரைக்கதைகள்: Basic Instinct, Sliver, Showgirls, Flashdance, Jade முதலியன. இவரைப் பற்றிய ஒரு சம்பவத்தோடு இந்த அத்தியாயத்தைத் துவக்குகிறார் சிட் பீஃல்ட்.

ஜோ எஸ்டெர்ஹாஸின் திரைக்கதைகள் சம்மந்தப்பட்ட ஒரு வழக்கில், ஜோவின் திரைக்கதைகளின் பாணியைக் கண்டறியும் பொறுப்பு, சிட் ஃபீல்டுக்கு ஒருமுறை வழங்கப்பட்டது. அதாவது, ஜோவின் திரைக்கதைகளில் உள்ள அந்த பிரத்யேகத்தன்மை என்ன? எதனால் அவை தனிப்பட்டுத் தெரிகின்றன? எப்படி அவற்றைப் பிற திரைக்கதைகளில் இருந்து தனியே அடையாளம் காணமுடியும்?

ஜோவின் திரைக்கதைகளை ஒவ்வொன்றாக இவ்விதம் படிக்க ஆரம்பித்தார் சிட் ஃபீல்ட். அப்படிப் படிக்கப்படிக்க, ஜோவின் தனித்தன்மையைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தார். அதாவது, ஜோவின் திரைக்கதைகள், நிஜவாழ்வில் நிஜமான மனிதர்கள் அனுபவிக்கும் பிரச்னைகளைப் பற்றியே அமைந்திருந்தன. சாதாரண மனிதர்கள், அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளிலிருந்து எப்படி விடுபடுகிறார்கள் என்பதை மிகச் சுவாரஸ்யமாகச் சொல்லியிருந்தார் ஜோ என்பது சிட் ஃபீல்டின் கணிப்பு.

ஜோவின் பெரும்பான்மையான திரைக்கதைகளின் பாணி என்னவெனில், தொடங்கும்போதே ஒரு action சீக்வென்ஸ்; அந்த சம்பவத்தில், படம் பார்க்கும் ஆடியன்ஸை நேரடியாக ஈடுபடுத்துவது; அதனால் திரைக்கதையின் சுவாரஸ்யம் அதிகரிப்பது என்றவாறே அவை இருந்தன. அதாவது, இதுதான் ஜோவின் டெம்ப்ளேட்.

உதாரணமாக, Basic Instinct திரைப்படத்தின் திரைக்கதை எப்படி ஆரம்பிக்கிறது என்று எழுதியுள்ளார் சிட் ஃபீல்ட். அதனை இப்போது பார்க்கலாம்.

‘இருட்டு… எதனையும் தெளிவாகப் பார்க்க முடியாத சூழல்’ என்று தொடங்குகிறது அந்தத் திரைக்கதை. ‘ஒரு ஆணும் பெண்ணும் படுக்கையின் மேல் உறவு கொள்கிறார்கள். சுவர்களிலும் படுக்கைக்கு மேலே உள்ள கூரையிலும், கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருக்கின்றன. படுக்கைக்குப் பக்கத்தில் இருக்கும் மேஜையின் மீது ஒரு கண்ணாடி. அதில் கொக்கேய்னின் சிதறல்கள். ரொமாண்டிக்கான பாடல் ஒன்று டேப்பில் இழைந்துகொண்டிருக்கிறது’.

இப்படித் தொடங்குகிறது திரைக்கதை.

இறுக்கமான, வேகமான, காமம் ததும்பும் காட்சி அது. காட்சி விளக்கப்படப்பட, வார்த்தைகள் குறைகின்றன. ‘அவன் அவளுக்குள் இருக்கிறான். கைகள் மேலே கட்டப்பட்டிருக்கின்றன. மல்லாந்து, கண்களை மூடிக்கொண்டு படுத்திருக்கிறான்…அவன்மேல் அவள்…தீவிரமாக அசைந்துகொண்டிருக்கிறாள்..அவளுக்காக அவன் தாபத்தில் துடிக்கிறான்…அவளை நோக்கி எழ முயல்கிறான்…அவனது தலை பின்னே சாய்கிறது…தலையைப் பின்னால் இழுப்பதால் அவனது தொண்டை வெளுக்கிறது…அவளும் துடிப்பில் பின்னால் வளைகிறாள்…அவளது இடுப்பு அவன்மேல் தீவிரமாக இயங்குகிறது…அவளது மார்புகள் விம்முகின்றன…’

காமத்தின் உச்சத்தில் இதன் பின் நடப்பது என்ன?

‘அவளது முதுகு, பின்னால் வளைந்துகொண்…..டே இருக்கிறது… கைகளை விரிக்கிறாள்… அவளது வலதுகை, திடீரென்று அவன்மேல் இறங்குகிறது….கத்தியின் மின்னும் வெளிச்சம்…அவனது தொண்டை வெளுத்திருக்கிறது…அவன் துடிக்கிறான்… அவளைநோக்கி வேகமாக எழ முயல்கிறான்…துடிக்கிறான்….எழ முயல்கிறான்…அவளது கையில் இருக்கும் கத்தி மேலும் கீழும் இயங்குகிறது…மேலும்… கீழும்…மேலும்… கீழும்…

இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள். இரு உடல்கள்… காமம்… ரத்தம்.. இசை…

இந்தக் காட்சியைப் படித்தவுடன், மேலும் மேலும் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளும் வெறி சிட் ஃபீல்டுக்கு ஏற்பட்டதாக அவர் சொல்கிறார். படிக்கப்படிக்க, திரைக்கதையின்பால் மேலும் மேலும் தூண்டப்பட்டிருக்கிறார். திரைக்கதையின் இந்த முதல் பக்கம் நமக்குத் தெரிவிக்கும் விஷுவல் action அவரை அந்தத் திரைக்கதையின் ரசிகராக மாற்றிவிட்டது.

சிட் ஃபீல்டைப் பொறுத்தவரையில், படிக்கும் நபரின் கழுத்தை இறுக்கிப் பிடித்து, திரைக்கதையின் மேல் ஈடுபாடு கொள்ளச் செய்வது இப்படிப்பட்ட திரைக்கதைகள்தான் என்று சொல்கிறார். பொங்கும் உணர்ச்சி, தீவிரமான காமம், கோரமான ஒரு கொலை.. மொத்தத்தில், பேரழிவு ஒன்று. இத்தகைய தொடக்கம் இருந்தால், எந்தத் திரைக்கதையும், ஆடியன்ஸை வெகுவாகத் தன்பால் ஈர்த்துவிடும் அல்லவா?

இங்கே ஒரு வார்த்தை. இது, சிட் ஃபீல்ட் கொடுக்கும் ஏராளமான உதாரணங்களில் ஒன்று மட்டுமே. இதுதவிர, லார்ட் ஆஃப் த ரிங்ஸ், மேட்ரிக்ஸ், டெர்மினேட்டர் ஆகிய பல படங்களின் திரைக்கதைகளையும் அவர் சிலாகித்து எழுதியிருக்கிறார். ஆகவே, சிட் ஃபீல்ட் பாராட்டிய ஒரே காரணத்துக்காக, பேஸிக் இன்ஸ்டிங்ட் போன்ற திரைக்கதைகளை மட்டுமே எழுதவேண்டும் என்று நாம் முடிவுகட்டிவிடக்கூடாது. பேஸிக் இன்ஸ்டிங்ட்டில் இருப்பது போன்ற வேகம், நமது திரைக்கதைகளில் இருக்கவேண்டும் என்பதே இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம்.

பேஸிக் இன்ஸ்டிங்ட்டில், மேலே சொன்ன சம்பவம் நிகழ்ந்தபின்னர் என்ன ஆகிறது?

போலீஸ் துறையில் இருக்கும் கதாநாயகன் மைக்கேல் டக்ளஸ் இந்தக் கொலையைத் துப்பறிய வருகிறார் . அதன்பின் டக்ளஸுக்கும் கதாநாயகி ஷரோன் ஸ்டோனுக்கும் உறவு ஏற்படுகிறது. கதாநாயகியின் மேல் பைத்தியமாகவே ஆகிப்போகிறான் கதாநாயகன். அதன்பின் என்ன நடக்கிறது என்பதே படம்.

ஆகவே, இந்தத் திரைக்கதையின் பிரதான சம்பவமாக, தொடக்கத்தில் வரும் கொலை இருக்கிறது என்பதை சிட் ஃபீல்ட் புரிந்துகொண்டார். இந்தத் துவக்கக் காட்சியும் படத்தின் கதையும் இப்படியாக, நேரடியான தொடர்பில் இருக்கின்றன. ஒப்பனிங் காட்சி இல்லையெனில் படமே இல்லை.

படத்தின் துவக்கக் காட்சியான இந்தக் கொலையும், கதாநாயகன் தனது இச்சைகளுக்குப் பணிந்து நடப்பதுமான படத்தின் மீதிக் கதையும், கதாபாத்திரத்தின் குணாதிசயம் மற்றும் சம்பவம் ஆகிய இரண்டு விஷயங்களை நன்றாகவே புரிய வைக்கின்றன என்கிறார் சிட் ஃபீல்ட். இந்தத் தொடரின் ஆரம்பத்தில் நாம் பார்த்த ஒரு மேற்கோள் நினைவு இருக்கிறதா?
What is character but the determination of incident? And what is incident but the illumination of character?
கதாபாத்திரத்தின் குணாதிசயம் என்பது, ஒரு சம்பவத்தினால் உறுதிப்படுத்தப்படுவது அல்லவா? அதேபோல், சம்பவம் என்பது, கதாபாத்திரத்தின் குணாதிசயத்தால் விளக்கப்படுவது அல்லவா?
ஒரு சம்பவத்துக்கு ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் எப்படி எதிர்வினை புரிகிறது என்பதை விளக்காமல், அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றிப் படம் பார்க்கும் மக்களுக்குப் புரியவைக்க முடியாது.

உதாரணத்துக்கு, தெருவில் ஒரு முதியவரை ஒரு ஆள், மாட்டை அடிப்பது போல் அடித்துக்கொண்டிருக்கிறான். அப்போது அவனைத் தாண்டிச் செல்லும் ஒரு கதாபாத்திரம்,

 1. அவனுடன் சேர்ந்துகொண்டு அந்த முதியவரை அடிக்கிறது
 2. தலையைக் குனிந்துகொண்டு அந்த இடத்தை விட்டு வேகமாக அகன்றுவிடுகிறது
 3. ‘அவரை விட்றா’ என்று ஆவேசமாக அலறிக்கொண்டே அவனை அடி புரட்டி எடுக்கிறது

இந்த மூன்று கதாபாத்திர விளக்கங்களில், கதாநாயகன், வில்லனின் அடியாள் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்கள் யார் யார் என்பது தெளிவாகப் புரிந்துவிடுகிறதல்லவா?

இதுதான் – ‘கதாபாத்திரத்தின் குணாதிசயம் என்பது, ஒரு சம்பவத்தினால் உறுதிப்படுத்தப்படுவது அல்லவா?’ என்பதன் விளக்கம்.

அதேபோல், இன்னொரு சம்பவம்.

இங்கே, படத்தின் கதாநாயகன், ஒரு குறிப்பிட்ட இடத்தில், அவனுடைய நன்னடத்தைக்கு சோதனை வரும் நேரத்தில், பாசிடிவாகவேதான் நடந்துகொள்வான். அதுவே வில்லனாக இருந்தால், கட்டாயம் தீய செயல்களை மட்டுமே புரிவான். இதுதான் ‘சம்பவம் என்பது, கதாபாத்திரத்தின் குணாதிசயத்தால் விளக்கப்படுவது அல்லவா?’ என்பதற்கு உதாரணம். அதாவது, கதாபாத்திரத்தின் குணம் என்னவோ, அதைப்பொறுத்து, அக்கதாபாத்திரத்தின் எதிர்வினைகள் அமைகின்றன.

இதையே பேஸிக் இன்ஸ்டிங்ட்டுக்குப் பொருத்திப் பார்த்தால், படத்தின் துவக்கத்தில் நடக்கும் கொலையால், கதாநாயகியை விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரிக்கு, அவள்மேல் பைத்தியம் ஏற்படுகிறது (கதாநாயகனின் குணம்). அதனாலேயே படத்தின் இரண்டாம் பாதியில் வரும் சம்பவங்கள் அமைகின்றன. இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்கிறார் சிட் ஃபீல்ட்.

படத்தின் துவக்கத்தில் நிகழும் கொலை – அந்தச் சம்பவம் – Inciting incident என்று அழைக்கப்படுகிறது. Incite என்ற ஆங்கில வார்த்தைக்கு, ‘தூண்டுதல்’ என்பது பொருள். அதாவது, படத்தின் கதையைத் தூண்டும் ஒரு சம்பவமே inciting incident என்று அழைக்கப்படுகிறது. அதேபோல், கொலைக்குப்பின்னர் என்ன ஆகிறது? படத்தின் கதை துவங்குகிறது. அதாவது, கதையின் முக்கியமான பகுதி. ஆகவே, இந்த முக்கியமான பகுதி, Key incident என்று அழைக்கப்படுகிறது.

எனவே, திரைக்கதைக்கு பலமான ஒரு ஓப்பனிங் கொடுப்பதே inciting incident என்பது சிட் ஃபீல்டின் விளக்கம். இந்த inciting incident மூலம், படம் பார்க்கும் ஆடியன்ஸுக்கு, படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு – ஈர்ப்பு – ஏற்படுகிறது. ஒரு திரைப்படத்தின் ஒப்பனிங் காட்சி இப்படி அமைந்துவிட்டால், அதுவே அப்படம் சுவாரஸ்யமாகச் செல்வதற்கு ஒரு காரணம்.

Inciting incident மற்றும் Key incident ஆகிய இரண்டு சம்பவங்களே, ஒரு திரைக்கதையின் பிரதான சம்பவங்கள்.

இந்த அடிப்படையில், ஒருசில தமிழ்ப்படங்களைப் பார்ப்போமா?

காக்க காக்க – இந்தப் படத்தின் inciting incident, சூர்யா தூக்கி எறியப்படும் முதல் காட்சி. சூர்யா ஏன் தூக்கி எறியப்பட்டார்? என்ற கேள்வியின் பின்னர்தான் படத்தின் கதையே இருக்கிறது. Key incident என்பது, படத்தில் அதன்பின் என்ன நடக்கிறது என்பதே.

விக்ரம் – Inciting incident எது? அக்னிபுத்திரன் என்ற ராக்கெட் கடத்தப்படுவதே. அதன்பின் என்ன ஆகிறது என்பது Key incident.

ஒரு சிறந்த action படத்துக்கோ அல்லது த்ரில்லர் படத்துக்கோ அல்லது ஒரு மர்மப் படத்துக்கோ, இந்த inciting incident என்பது அவசியம் தேவை என்கிறார் சிட் ஃபீல்ட்.

இந்த இரு சம்பவங்களைப் பற்றி மேலும் பல சுவையான தகவல்கள் – அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

தொடரும்…

Facebook Comments

Sharing is caring!

Related Posts

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

9 Comments

 1. வழக்கம்போல ஜூப்பர் பாஸூ……………….!!!

  Reply
 2. நானும் அட்டெண்டன்ஸ் போடணும்ல…………………. ரொம்ப இன் டெப்த்தாக போய்க்கொண்டிருக்கிறது…………….

  “என்னமோ திட்டம் இருக்கு” போல……………….

  Reply
 3. // அடுத்த புத்தக கண்காட்சியில் – ராஜேஷ் எழுதிய ‘திரைக்கதை எழுதுவது ‘இப்படி’…?” பரபரப்பான விற்பனையில்…!! 🙂 🙂 🙂 //

  இது கட்டாயம் நடக்கும். மொதல்ல தமிழ் சினிமாக்கு கதை எழுதறவங்களுக்கு ஒரு காப்பி அனுப்பிருங்க. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ராஜேஷ்.

  Reply
 4. சிறப்பான பதிவு. திரைக்கதை எழுதுவது எப்படி என்ற சுஜாதாவின் நூலிலும் இந்த விவரங்கள்
  இந்திய திரைக்கதைகளை வைத்து விளக்கப்பட்டுள்ளது.

  Reply
 5. நான் சொல்ல நினைத்ததை திருவாருர் சுதர்சன் சொல்லிவிட்டார்

  Reply
 6. i wrote to a good story. how register my story.

  Reply
 7. நான் சினிமாவுக்கு ஒரு கதை எழுதி இருக்கிறேன். அந்த கதையை என் அனுமதி இன்றி பிறர் பயன்படுத்தாமல் இருக்க எங்கு, எப்படி பதிவு செய்ய வேண்டும்.
  தயவு செய்து என் e.mail க்கு தகவல் தரவும்.
  my e.mail ID: arunaisivakumar@gmail.com

  Reply

Join the conversation