வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 3

by Rajesh February 8, 2012   Alien series

Sharing is caring!

‘அளப்பரிய அண்டவெளியில், பூமியில் மட்டுமே உயிர்கள் இருக்கின்றன என்று சொல்வது எப்படியிருக்கிறது என்றால், தானியங்கள் விதைக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய வயல்வெளியில், ஒரே ஒரு நெல் மட்டுமே விளையும் என்று சொல்வது போல இருக்கிறது’ – Metrodorus of Chios 4th century B.C

சென்ற கட்டுரையில் விமானங்களைப் பற்றிய புராண விளக்கங்களைப் பார்த்தோம். இப்போது, ஓரிரு கேள்விகளைப் பார்த்துவிட்டு மேலே செல்லலாம்.

முதலில், புராணம் என்ற கற்பனைக்கதையை நாம் ஏன் மதிக்கவேண்டும்? தற்காலத்தில் நாம் எழுதுவதே வருங்காலத்தில் புராணங்கள் ஆகின்றன அல்லவா? அதில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்களுக்கு ஏன் மதிப்பைக் கொடுத்து ஆராய வேண்டும்?

இந்தியப் புராணங்களில் மட்டும் இந்த பறக்கும் தட்டுகள் கொடுக்கப்படவில்லை; மாறாக உலகின் வேறு பல புராணங்களிலும் அவைகளைப்பற்றிய செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன என்று ஏலியன் ஆராய்ச்சியாளர்கள் சொல்லிவருகின்றனர். அவற்றைப் பற்றி விரிவாகப் பார்க்க ஆரம்பிக்கலாம்.

இந்த இடத்தில், இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பண்டையகால கிரேக்கப் பழமொழியை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இப்போது ஒரு சிறிய கற்பனை. இது, எரிக் வான் டேனிக்கென் சொன்னது.

தற்காலத்தில், அண்டவெளியின் எந்த மூலைக்கும் சென்றுவரக்கூடிய அதிவேக ராக்கெட் ஒன்றைக் கண்டுபிடிக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். நமது முதல் நோக்கம் என்னவாக இருக்கும்? நமது பால்வீதிக்கு மிகப் பக்கலில் இருக்கும் ஏதாவது ஒரு பால்வீதிக்குச் சென்று ஆராய வேண்டும் என்பதே நமது நோக்கமாக இருக்கும் அல்லவா? அப்படி ஒரு பால்வீதிக்குள் இருக்கும் ஒரு நட்சத்திரத்தையோ அல்லது கிரகத்தையோ குறி வைத்து அந்த ராக்கெட்டில் நாம் பயணிக்கிறோம். ராக்கெட் அதிவேகத்தில் செல்வதால், சில வருடங்களில் அந்த கிரகத்தை அடைகிறோம்.அங்கே தரையிறங்கும்போது, அந்த கிரகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் உயிர்கள் – நமது நாகரிகத்தை விடப் பன்மடங்கு பின்தங்கியிருக்கும் உயிர்கள் இவை – நமது ராக்கெட்டைப் பார்த்து மிரட்சியடைந்து ஓடி ஒளிகின்றன. நாம் அங்கே இறங்கி, நமது ஆராய்ச்சியை ஆரம்பிக்கிறோம். கொஞ்ச காலத்தில், மெதுவாக வெளியே வரும் அந்த கிரகத்தின் உயிர்களிடம் பேசும் முயற்சியை நாம் ஆரம்பிக்கிறோம். நம்மிடம் பேசுவதற்கே அவர்கள் வெகுவாக பயந்துகொள்கின்றனர். எப்படியோ நம்மிடம் தொடர்பு கொள்ள ஆரம்பிக்கும் அவர்கள், நம்மிடம் இருக்கும் கருவிகளைக் கண்டு நடுங்குகின்றனர் (நெருப்பைக் கக்கும் கை இத்யாதி). மெதுவாகத் தங்களது இனப் பெண் உயிர்களை நமக்கு அனுப்பி, அவர்களைக் காப்பாற்றச் சொல்லிக் கேட்டுக்கொள்கின்றனர். இந்தப் பெண்களுடன் நாம் உறவு கொள்வதன் மூலமாக சில புதிய, அறிவில் சற்றே மேம்பட்ட உயிர்கள் தோன்றுகின்றன. நமது ஆராய்ச்சி முடிந்ததும் அங்கிருந்து நாம் கிளம்பி விடுகிறோம். அதன்பின் வழிவழியாக வரும் அந்த கிரகத்தின் மக்கள், நம்மைப்பற்றிப் புராணங்களையும் கதைகளையும் எழுதுகின்றனர். நம்மைப் பற்றிய கோயில்கள் கட்டப்படுகின்றன. தற்காலத்தில் அங்கு சென்று பார்த்தால், நாம் தான் கடவுளர்கள் என்று நம்பி நம்மை அவர்கள் வழிபட்டுக்கொண்டிருப்பதைக் காணலாம். இன்னொரு கும்பல்,நாம் ஏலியன்கள் தான் என்று நிரூபிக்க முயற்சி செய்துகொண்டிருக்கும். ஆனால் – மைன்ட் யூ – அவர்களிடம், தற்போது (ஏலியன்களாகிய) நம்மிடம் இருப்பதைப்போல் அதிவேகமாக கிரகங்களுக்குச் செல்லும் ராக்கெட்கள் இல்லை. ஆகையால், அவர்களால் எதையும் நிரூபித்து அறிந்துகொள்ள இயலாது. அதற்கு அவர்களுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும். அந்த இடைவெளியில் – அவர்கள் அறிவினால் முன்னேறும் அந்தக் காலகட்டத்தில் – நமது தொழில்நுட்பமும் எக்கச்சக்கமாக முன்னேறிவிடும். ஆகையால், எப்படியானாலும், நாம்தான் அவர்களைவிட மேம்பட்டவர்களாக இருப்போம். நாம் எப்போது நினைத்தாலும் அவர்களின் கிரகத்துக்கு விஸிட் அடிக்க முடியும். ஆனால், அவர்கள் என்னதான் முயன்றாலும், அடுத்த சில நூறு வருடங்கள் வரை அவர்களால் அவர்களது பால்வீதியையே முழுதாக சுற்ற முடியாத நிலை.

நினைத்துப் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறதல்லவா?

இதுதான் பூமியில் கடவுளர்கள் வந்த கதை. ஏன் இப்படி நடந்திருக்கக்கூடாது என்பது எரிக் வான் டானிக்கென் போன்ற நபர்கள் எடுத்துவைக்கும் வாதம். இது உண்மையாக இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் உண்டா? அல்லது இதெல்லாம் டுபாக்கூரா என்பதை, கட்டுரைகளின் போக்கில் அலசலாம்.

அத்தியாயம் 2 : Claude Vorilhon (AKA Raël)

இந்த ஏலியன் தியரிகளை உலகெங்கும் பரப்பி வரும் ஒரு நபரைப் பற்றி இப்போது பார்க்கலாம். இவர் பெயர் Claude Vorilhon. நமது வசதிக்காக, இவரை க்ளாட் என்று அழைப்போம்.

இப்போது நான் சொல்லப்போகும் விஷயங்கள், எனது சொந்த சரக்கு அல்ல. இது க்ளாட் எழுதிய புத்தகங்களிலிருந்து தொகுக்கப்பட்டது. ஒருவேளை இது எவரது நம்பிக்கையையாவது காயப்படுத்தினால், அதற்கு முழுப்பொறுப்பு வகிக்கக்கூடியவர் இந்த க்ளாட் மட்டுமே. நானல்ல. ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு நாவலுக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் இவரது புத்தகங்களில் உண்டு.

இந்தப் பீடிகையுடன், மேலே தொடருவோம்.

ஆண்டு 1973. தேதி – டிஸம்பர் 13. ஃப்ரான்ஸின் Clermont -Ferrand பகுதியில், ஒரு எரிமலை. பெயர், Puy -de -Lassolas. அதனுள் ஜாக்கிங் செய்துகொண்டிருக்கிறார் க்ளாட். அன்றைய நாள் வரை அவர் ஒரு ரேஸ் கார் டிரைவர். அவ்வப்போது அந்த எரிமலைக்கு அவரது குடும்பத்தோடு அவர் வருவதுண்டு.

வானமெங்கும் மெல்லிய பனிப்புகை படர்ந்திருக்கிறது. அங்கிருந்து அவர் கிளம்பும் நேரம். கடைசியாக ஒருமுறை, எரிமலையின் உச்சியைச் சுற்றிப் படர்ந்துள்ள பனியைப் பார்க்கிறார் க்ளாட்.

பனியின் மத்தியில் செந்நிற ஒளி. சிறிது நேரத்தில், ஒரு சிறிய ஹெலிகாப்டர் அவரைநோக்கி வருகிறது. பக்கத்தில் வந்ததும், அது ஒரு ஹெலிகாப்டர் அல்ல என்று தெரிகிறது. எங்கும் நிசப்தம். இவரைநோக்கி இறங்கி வரும் ‘அதிலிருந்து’ ஒரு சிறிய சத்தம் கூட வரவில்லை.

ஆம். அது ஒரு பறக்கும் தட்டு.

கூம்பு வடிவில் அமைந்திருக்கும் அந்தக் கலம், அடியில் மிகவும் தட்டையாக இருக்கிறது. அடிப்பாகத்திலிருந்துதான் அந்த செந்நிற ஒளி வந்துகொண்டிருக்கிறது. கூம்பின் உச்சியில் இருந்து கண்களைக்கூசவைக்கும் வெண்ணிற ஒளி. இவரது அருகில், தரையிலிருந்து இரண்டு மீட்டர்கள் அளவில், அந்தரத்தில் எந்தச் சத்தமும் இன்றி நிற்கிறது அந்தக் கலம். அதன் அடிப்பாகத்திலிருந்து ஒருவிதமான படி தரையை நோக்கி நீள்கிறது.

இதோ… யாரோ அதில் இருந்து இறங்கி வரப்போகிறார்கள். பயமும் எதிர்பார்ப்பும் அவரது இதயத்தைப் பிளக்கின்றன. கடைசியாக, இரண்டு பாதங்கள் அப்படிகளில் இறங்குகின்றன. பாதங்களைத் தொடர்ந்து, இரண்டு கால்கள். இப்போது, க்ளாட் சற்றே ஆசுவாசம் அடைகிறார். காரணம், ஒரு மனிதனைச் சந்திக்கப்போகிறோம் என்பதை, அக்கால்களைக் கண்டதிலிருந்து அவர் புரிந்துகொண்டதே. அதனைத் தொடர்ந்து, நான்கு அடியே உள்ள ஒரு குழந்தை – இல்லையில்லை – ஒரு மனிதன் – இவரை நோக்கி மெதுவாக நடந்துவருகிறான். கருப்பு வண்ண நீள்முடி, தாடி இவற்றோடு சேர்ந்து ஒருவிதமான பச்சை வண்ண நீளமான உடையும் அணிந்திருக்கிறான்.

க்ளாடை நோக்கி மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்க்கிறார் ‘அம்மனிதர்’. க்ளாடின் மனதில் ஆயிரம் கேள்விகள் எழுகின்றன.

அம்மனிதனிடம் ஃப்ரெஞ்ச்சில் பேசத் தலைப்படுகிறார் க்ளாட்.

“எங்கிருந்து வருகிறீர்கள்?”

அதிசயிக்கத்தக்கவிதமாக, ஃப்ரெஞ்ச்சிலேயே பதில் வருகிறது. “மிகத்தொலைவிலிருந்து வருகிறேன்”.

“உங்களுக்கு எப்படி ஃப்ரெஞ்ச் புரிகிறது?”

“எனக்கு உலகின் எல்லா மொழிகளும் தெரியும்”.

இதன்பின் க்ளாட் அந்த மனிதரிடம் பேசியதாக வெளியிட்டிருக்கும் தகவல்கள் நம்மை அதிரவைக்கக்கூடியவை (என்கிறார் க்ளாட்). படுபயங்கர விறுவிறுப்பான ஒரு படத்தை, இத்தகவல்களை வைத்து எடுக்க முடியும்.

அவை…….?

தொடரும்……..

Facebook Comments

Sharing is caring!

fb Comments

comments

  Comments

11 Comments

 1. ஆஆஆஆஆ … ரொம்ப முக்கியமான இடத்தில் மெகாசீரியல் மாதிரி தொடருமுன்னு போட்டுட்டீங்களே? சீக்கிரம் அடுத்த பதிவை ட்ராஃப்ட்ல வச்சிருக்காம போடுங்க.

  Reply
 2. உங்கள் வாசகனாக “நீங்கள் இன்னும் நிறைய சினிமா பற்றிய விமர்சனங்கள் எழுத வேண்டும்”

  Reply
 3. இந்த இடத்துல போயு தொடரும் என்று போட்டுட்டீங்களே அட வட போச்சே..சீக்கிரமா போட்டுருங்க..ரொம்ப காத்திருக்கிறேன்..
  சுவாரஸ்யமான பதிவு..பல சுவைகளை சேர்த்து நல்ல விருந்தாக தந்துக்கொண்டிருக்கும் தங்களுக்கு எனது நன்றிகள்.

  Reply
 4. சீக்கிரம் பாஸ்…! சீக்கிரம்…! அவங்க என்ன பேசிக்கிட்டாங்க.,…! இன்னைக்கு மதியத்துக்குள்ள சொல்லிடுங்க…….!!! ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்……..!!!

  Reply
 5. நண்பரே!
  எல்லா சப்ஜக்ட்லயும் பூந்து விளையாடறீங்க…வாழ்த்துக்கள்.

  அப்புறம் எங்கள மாதிரி உலகசினிமா ஆளுங்களுக்கும் தீனி போடுங்க…ரொம்ப காஞ்சு கிடக்குறோம்.

  Reply
 6. //குமரன்…

  இந்த இடத்துல போயு தொடரும் என்று போட்டுட்டீங்களே அட வட போச்சே..சீக்கிரமா போட்டுருங்க..ரொம்ப காத்திருக்கிறேன்..
  சுவாரஸ்யமான பதிவு..பல சுவைகளை சேர்த்து நல்ல விருந்தாக தந்துக்கொண்டிருக்கும் தங்களுக்கு எனது நன்றிகள்.//

  என் கருத்தும் இதுவே..
  :))

  Reply
 7. template comment than…vera enna parathu thala…romba deep a eluthuringa……adutha chapter eppo?…

  Reply
 8. சார், ஏலியன்ஸ் இருக்கிறார்களா இல்லையா என நாம் அனுமானிப்பதைவிட விஞ்ஞானிகள் தத்துவம், கணிதம், இயற்பியல் சாத்தியக்கூறுகள் என பலவற்றையும் கலந்து சிலபல ஊகங்களை அளித்திருக்கிறார்கள். உங்கள் கருத்துக்களுக்கான பதில்களை அருண் நரசிம்மன் எனும் ஒரு ஆய்வாளர் வலையில் தெளிவான பல கட்டுரைகள் (பிற விஞ்ஞானிகளின் கருத்துக்களின் தொகுப்புக்கள் மூலம்) விளக்கி இருக்கிறார். தயவு செய்து படித்துப் பார்க்கவும். நன்றி.

  I’d like to quote few lines from his posts.

  “இதுதான் அறிவியலுக்கும் புரட்டிற்கும் வித்தியாசம். முதல் சாதகமான அறிகுறியிலேயே செத்தபிறகும் குட்டித்தாயி பேசுவதாகவும், எங்கேயென்றால் வீட்டுக்கொல்லையில் குதிரை வாயிலாக என்றும் புரட்டு நம்பும், நம்பவைக்கும் (பிறகு நம்பியதற்கு காசு கேட்கும்). அறிவியல் பத்து சாதக அறிகுறிக்கு பிறகும் தட்டுப்படும் ஒரு பாதக யேஷ்யத்தில் தன்னையே திருத்தி தடுக்கிவிழுந்தே முன்னேறும்.”

  also check this article titled “ஏலியபுராணம்” : http://www.ommachi.net/archives/2045

  Reply
 9. என்னைப் பொறுத்தவரை ஏலியன்ஸ் இருக்கிறார்கள். அவற்றில் சிந்திக்கக்கூடிய இனங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படியே அவர்கள் எம்மைத் தொடர்பு கொள்ள முயன்றால் மின்காந்த சமிக்ஞைகள் இங்கு வந்து திரும்புவதற்குள்ளே எமது கிரக ஆயுள் முடிந்துவிடலாம். மற்றபடி அவர்கள் வந்து போவது.. almost impossible.

  [ஏலியன்ஸ் இருக்கக்கூடிய நிகழ்தகவு, தொடர்பாடல் பிரச்சனைகள், அறிவுள்ள உயிர் தழைக்ககூடிய மிக மிக அரிய நிகழ்தகவு போன்றவை அருண் சாரின் வலையில் விளக்கப்பட்டுள்ளன.]

  Reply
 10. @ ஹாலிவுட் ரசிகன் – அடுத்த பார்ட் இன்று இரவு… வருது…

  @ டெனிம் – கட்டாயமா விமரிசனமும் போட்ரலாம் சீக்கிரம்

  @ குமரன் & லோகு – நைட்டு படிங்க அடுத்த பார்ட்டு…எனக்குமே இதைப்பத்தி படிக்கிறது சுவாரஸ்யமா தான் இருக்கு 🙂

  @ உலக சினிமா ரசிகரே – நீங்க சொன்னா அப்பீல் ஏது? 🙂 . .. போட்டுறலாம் உலகப்பட விமரிசனம். ஓடுறதுக்கு ரெடியா இருங்க 🙂

  @ இந்திரா – நன்றிகள் பல

  @ Elamparuthi – டெம்ப்ளேட் பதில் தான் 🙂 . அடுத்த பார்ட் இன்று இரவு 🙂

  @ அபராஜிதன் – விளக்கமான பின்னூட்டத்துக்கு நன்றி. அருண் நரசிம்மனது கட்டுரையைப் படித்தேன். நகைச்சுவையாக விளக்கியிருக்கிறார். மெதுவாக அவரது ஒவ்வொரு கட்டுரையாகப் படிக்கிறேன். ஏலியன்கள் பற்றிய உங்களது கருத்து ரசிக்க வைப்பதாக உள்ளது. விவாதிக்கலாம் கட்டாயம். அப்புறம், ‘சார்’ என்பது வேண்டாம் தலைவா.. ராஜேஷ் என்றே அழையுங்கள்.

  Reply
 11. மிகவும் சுவாரசியமாக எடுத்துச் செல்கிறீர்கள் ராஜேஷ். அப்படியே தொடருங்கள். கடவுளர்கள் பற்றிய அந்த கற்பனை மிகவும் யோசிக்க வேண்டிய ஒன்று. அப்படியே கடவுளர்கள் வந்திருந்தாலும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்பு வந்திருப்பார்கள் என யோசனை நீள்வது உங்கள் கட்டுரையின் சிறப்பு.

  Reply

Join the conversation