வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 4

by Rajesh February 10, 2012   Alien series

Sharing is caring!

விண்கலத்திலிருந்து இறங்கிவந்த அந்த ‘மனிதர்’, க்ளாடிடம் என்ன பேசினார்?

இதைப்பற்றிக் க்ளாட் ஒரு முழு புத்தகமே எழுதியிருக்கிறார். ‘Intelligent Design‘ என்ற அந்தப் புத்தகம், அவரது தளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. அப்புத்தகத்தை இங்கே தரவிறக்கிக்கொள்ளலாம்.

அதில் அவர் எழுதியுள்ளதைச் சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், பூமிக்கு வெகு தொலைவில் இருக்கக்கூடிய ஒரு கிரகம். அதில், மொத்தம் ஏழு பில்லியன் மாந்தர்கள் வசிக்கிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் – சரியாகச் சொல்லவேண்டும் என்றால் 25,000 ஆண்டுகளுக்கு முன் – தொழில்நுட்பத்தில் வெகுவாக முன்னேறியிருந்த அவர்களுக்கு, அவர்களது விஞ்ஞானப் பரிசோதனைகளை நிகழ்த்த ஒரு களம் வேண்டியிருந்ததால் (உள்நாட்டில் அவைகளை நிகழ்த்தத் தடை இருந்ததாம்), அவர்கள் விண்வெளியெங்கும் தேடிக் கண்டுபிடித்த ஒரு கிரகமே நமது பூமி. இங்கே வந்து இறங்கிய அவர்களது விஞ்ஞானிகள், பல குழுக்களாகப் பிரிந்து பூமியெங்கும் சென்று, ஒவ்வொரு இடத்திலும் நிகழ்த்திய பல பரிசோதனைகளின் விளைவே மனிதர்கள். ஒவ்வொரு குழுவும் ஒவ்வொருவகையில் தங்களது சிருஷ்டிக்கும் திறனைத் திறம்பட நிகழ்த்தியது. மனிதர்களை மட்டுமல்லாமல், அதற்கு முன்னரே பல்வேறு செடிகொடிகளைப் படைத்து, அதன்பின் பல மிருகங்கள், பறவைகள் முதலிய உயிரினங்களைப் படைத்தனர். அதில் திருப்தி அடையாமல், தங்களைப்போலவே சில உயிரினங்களைப் படைக்க முயன்றதன் பலனே மனிதனின் பிறப்பு.

இப்படிப் பல ஆண்டு காலம் அவர்கள் நமது பூமியில் தங்கியிருந்து, பூமியை உயிர்ப்பித்தனர். மனிதன் பிறந்து, பல்கிப் பெருகும் வரை அந்த விஞ்ஞானிகள் இங்கேயே தங்கியிருந்தனர். அந்த மனிதக் கூட்டங்களில், இந்த விஞ்ஞானிகளின் அறிவுத்திறனுக்கு ஏற்ப வளர்ந்திருந்த ஒரு குழு, இப்போது இஸ்ரேல் என்று அழைக்கப்படும் இடத்தில் இருந்தது. இந்த விஞ்ஞானிகளின் தொழில்நுட்பத்தை அறிய அவர்கள் முயன்றனர். அவர்கள் மேல் கருணை கொண்ட சில விஞ்ஞானிகள், படைப்பின் ரகசியத்தை – அதாவது, இவர்கள் மேற்கொண்ட விஞ்ஞானப் பரிசோதனைகளை – அந்த மனிதர்களுக்கு சொல்லிக்கொடுக்கத் தலைப்பட்டனர். எங்கே தாங்கள் படைத்த உயிர்கள் தங்களது தொழில்நுட்பத்தை அறிந்துகொண்டு தங்களுக்கே எமனாகிவிடுவார்களோ என்று பயந்த பிற விஞ்ஞானிகள், அவர்களது கிரகத்தில் இருக்கும் அரசுக்குத் தகவல் கொடுக்க, இந்த குறிப்பிட்ட சில ‘துரோகி’ விஞ்ஞானிகளை மட்டும் பூமியிலேயே விட்டுவிட்டு, பிறரை உடனடியாகக் கிளம்பி வரச்சொல்லிவிட்டது அவர்களது அரசு. இதனால் பூமியின் அத்தனை பகுதிகளிலும் இருந்த விஞ்ஞானிகள் அத்தனைபேரும் அவர்களது கிரகத்துக்குக் கிளம்பிவிட்டனர். இஸ்ரேல் பகுதியில் இருந்த விஞ்ஞானிகள் மட்டும் மாட்டிக்கொண்டுவிட்டனர். அவர்கள், ஒரு குகையில் சிறைவைக்கப்பட்டனர். மனிதர்கள் அவர்களை அணுகமுடியாதவாறு, சக்திவாய்ந்த ஆயுதங்கள் மூலம் அவர்கள் பாதுகாக்கப்பட்டனர்.

இப்படி இருந்துகொண்டிருந்தபோது, என்ன இருந்தாலும் மனிதர்கள் எப்படியும் ஒருநாள் தங்களது ரகசியங்களை அறியமுற்படுவார்கள் என்று அஞ்சிய வேற்றுக்கிரக அரசு, உலகில் இருக்கும் அத்தனை உயிர்களையும் அழித்துவிட்டு, உலகைப் பழையபடி வெற்று நிலமாக ஆக்கிவிடலாம் என்று முடிவு செய்தது. இந்த முடிவை அறிந்துகொண்ட சிறைப்பட்ட விஞ்ஞானிகள், நோவா (Noah) என்று அழைக்கப்பட்ட மனிதர்களின் தலைவர்களில் ஒருவரை அழைத்து, ஒரு விண்கலம் கட்டும்படியும், வருங்கால உலகத்துக்குத் தேவையான பல உயிரினங்களில் ஒவ்வொரு ஜோடியை அதில் வைத்துக்கொண்டு, பூமியிலிருந்து தப்பித்து, பூமியை விண்வெளியில் சுற்றிவரவேண்டும் என்றும் அவனிடம் கூறினர், தங்களின் படைப்பாளர்களின் ஆணையை ஏற்றுக்கொண்ட நோவா, அவர்களது மேற்பார்வையில் ஒரு விண்கலத்தை உருவாக்கினார். அப்படி உருவாக்கப்பட்ட விண்கலத்தில், ஒவ்வொரு உயிரினத்தின் ஒவ்வொரு செல் மட்டும் பாதுகாக்கப்பட்டது. அதன்பின் அந்த விண்கலம், பூமிக்கு மேல் பறக்கத்துவங்கியது. இதை அறியாத வேற்றுக்கிரக அரசு, ஒரு மிகப்பெரிய கடல் கொந்தளிப்பின் மூலம் உலகை அழித்தது. பூமியில் இருந்த அத்தனை உயிர்களும் அழிந்தன. பெரும் பிரளயம் நிகழ்ந்தது.

சில காலத்துக்குப் பிறகு, இந்த அழிவின் கதிரியக்கம் முற்றிலும் செயலிழந்த பிறகு, நோவாவின் விண்கலம் பூமியில் மறுபடி இறங்கியது. அதில் காப்பாற்றப்பட்டுவந்த செல்களை வைத்து, மறுபடியும் உயிர்கள் படைக்கப்பட்டன.

இதன்பின், இஸ்ரேல் பகுதியில் வாழ்ந்துவந்த மனிதர்கள், ஒரு மிகப்பெரிய ராக்கெட்டை உறுவாக்கினர். இது ஏனெனில், வேற்றுக்கிரகத்துக்கே சென்று, அவர்களின் மன்னிப்பைப் பெற்றுத் திரும்பவே. அதுதான் பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் பேபல் டவர் (Tower of Babel). ஆனால், இது தெரிந்த வேற்றுக்கிரக அரசு, மறுபடியும் பயந்து, இந்த இஸ்ரேல் பகுதி மனிதர்களை சிறைப்படுத்தி, உலகின் பல்வேறு பகுதியில் வாழ்ந்துவந்த அறிவு குறைந்த மனிதர்களிடையே விட்டுவிட்டது. இதனால், அம்மனிதர்கள் தொழில்நுட்பமே தெரியாத பிற மனிதர்களிடம் எதையும் சொல்ல முடியாமல், அவர்களோடு சேர்ந்து வாழத் துவங்கினர்.

இதுதான் கதைச்சுருக்கம். இன்னும் எக்கச்சக்கமான விஷயங்களை அப்புத்தகத்தில் கிளாட் எழுதியிருக்கிறார்.

இந்தத் தகவல்களை க்ளாடிடம் சொன்ன அந்த வேற்றுக்கிரக மனிதர், க்ளாடை ஒரு இயக்கம் ஆரம்பிக்கச் சொல்கிறார். அதன்படி, உலகம் முழுவதும் இத்தகவல்கள் பரப்பப்படவேண்டும் என்று சொல்லி, உலக மாந்தர்கள் அனைவருக்கும் தங்களது படைப்பாளர்களைப் பற்றிய தகவல்கள் போய்ச்சேர்ந்தால்தான் உலகம் இனிமேல் சண்டை சச்சரவு இல்லாமல் அமைதியாக இருக்கும் என்றும் சொல்கிறார். சொல்லிவிட்டு, அவ்வப்போது க்ளாடிடம் பேசப்போவதாகச் சொல்லிவிட்டு, பைபிளில் இருக்கும் பல அத்தியாயங்களின் பின்னால் இருக்கும் ‘உண்மைகளை’ டிக்டேட்டும் செய்துவிட்டு, மறைந்துவிடுகிறார்.

இதன்பின் கிளாட் ஆரம்பித்த இயக்கமே ‘Raelism‘. இந்த இயக்கத்துக்குத் தற்போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உண்டு. இந்த இயக்கத்தின் பிதாமகராக விளங்குகிறார் கிளாட். தனது பெயரை ‘Rael‘ என்று மாற்றிக்கொண்டு, உலகெங்கும் பிரசங்கங்கள் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.

இத்தோடு கதை முடியவில்லை. முதல் சந்திப்பின் பின், இரண்டு ஆண்டுகள் கழித்து, க்ளாடின் முயற்சிகளில் திருப்தியடைந்த அந்த வேற்றுக்கிரக மனிதர், க்ளாடை அவர்களது கிரகத்துக்கே அழைத்துச் சென்ற விபரங்களையும் அதே புத்தகத்தில் விலாவாரியாக எழுதிவைத்திருக்கிறார் கிளாட். அந்த கிரகத்தில், இயேசு, முகம்மது, புத்தர் ஆகிய மூவரையும் சந்தித்ததாகவும், அக்கிரகத்திலிருந்து க்ளாடுக்குக் கிடைத்த செய்திகளையும் எழுதிவைத்திருக்கிறார்.

க்ளாடின் கோட்பாடுகளின்படி, கடவுள் என்ற வஸ்து கிடையவே கிடையாது. காரணம், நம்மைப் படைத்தவர்கள் வேற்றுக்கிரக மனிதர்கள் மட்டுமே. அப்படியென்றால் அவர்களைப் படைத்தது யார் என்று அவரிடம் கேட்டால், அவர்களுக்கு முன்னர் வாழ்ந்த இன்னொரு இனம் என்று பதில் அளிக்கிறார். இப்படி அது ஒரு Chain Reaction போலவே செல்கிறது.

இப்படிப்பட்ட கோட்பாடுகளில் இருந்து உருவாக்கப்பட்ட புதிய உலகுக்கான சட்டங்கள் எல்லாவற்றையும் தனது புத்தகத்தில் எழுதியும் வைத்திருக்கிறார். உலகில் ஒரே ஒரு அரசுதான் இருக்கவேண்டும்; அத்தனை மக்களும் ஒருங்கிணைந்து தங்களைப் படைத்த வேற்றுக்கிரக மக்களை டெலிபதியின் மூலம் அழைக்க வேண்டும். அப்போதுதான் அவர்களது வருகை நிகழும். அதன்பின் உலகம் அமைதிப்பூங்காவாக மாறிவிடும். இதுதான் க்ளாடின் கோட்பாடு.

இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இப்படிப்பட்ட ஒரு லட்சம் உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட எக்கச்சக்கப் பணத்தில் ஒரு பெரிய மாளிகை கட்டிக்கொண்டு (ஏலியன்கள் வருகைதந்தால் இங்கே தங்குவார்கள்) அதில் சொகுசாக வாழ்ந்துவருகிறார் கிளாட்.

சுருக்கமாக நம்மூர் கார்ப்பரேட் சாமியார்களின் வாழ்வு முறையை வரிக்கு வரி கடைப்பிடித்து வாழ்கிறார் கிளாட். இவரது கோட்பாடு உண்மையா? இவர் உண்மையிலேயே ஏலியன்களின் கிரகத்துக்கு சென்று வந்தாரா? இதுவரை ஒரு ஆதாரத்தையும் இந்த ரீதியாக அவர் காட்டியிருக்கவில்லை. கேட்டால், ஆதாரம் இல்லாமல் ஏலியன்களின் கோட்பாட்டை நாம் நம்ப வேண்டும் என்கிறார்.

க்ளாடின் புத்தகத்தைத் தரவிறக்கி, நேரம் கிடைக்கையில் மேய்ந்துபாருங்கள். நான் ஏற்கெனவே சொல்லியிருந்தபடி, படுசுவாரஸ்யமான திரைக்கதையை இதிலிருந்து உருவாக்கிவிட முடியும்.

அதேபோல், இதோ க்ளாடின் வீடியோ பேட்டி. இதில், அவர் ஏலியனை சந்தித்ததைப் பற்றி விளக்குகிறார்.

யோசித்துப் பார்த்தால், க்ளாடின் கருத்து வசீகரமானது. நம்மைப் படைத்தவர்களையும் வேறு யாரோ படைத்திருக்கிறார்கள் என்பதே அவரது கூற்று. இது ஒரு முடிவில்லாத சுழல் போல. எப்படி இருந்தாலும், இந்த சங்கிலியின் ஆரம்பம் என்று ஒன்று இருக்கவேண்டும் அல்லவா? அது என்ன? என்ற கேள்விக்கு இதுவரை க்ளாடிடம் இருந்து பதிலில்லை.

இவரது ஒரு நிறுவனத்தின் மூலம் (Clonaid), 2002ல் முதல் மனித க்ளோனிங் நடைபெற்றுவிட்டது என்று இன்றுவரை சொல்லிக்கொண்டும் இருக்கிறார். ஆனால் அதற்கும் ஆதாரத்தைத் தரமறுக்கிறார்.

இவரது தகவல்களைக் கொஞ்சம் அலசினாலே அவை ஆதாரமற்ற கூற்றுகள் என்று புரிந்துவிடும். ஆனால், க்ளாடின் சிஷ்யர்களுக்கோ, அவர் சொல்வதே வேதம். ஆகவே, தங்களைப் படைத்த ஏலியன்களை எதிர்நோக்கி வாழ்ந்துவருகிறார்கள் இவரது குழுமத்தினர்.

க்ளாடைப் பற்றிய தகவல்கள், நவீன கால ஏலியன் நம்பிக்கைகளைப் பற்றியது. ஆனால், பண்டைய காலத்திலிருந்து பல புரிபடாத மர்மங்கள் இருக்கின்றனவே? இன்றுவரை எந்த விளக்கமும் இல்லாத, சில்லிட வைக்கும் மர்மங்கள் அவை. அவற்றைப் பற்றி இனி வரும் கட்டுரைகளில் விவாதிக்கலாம்.

இந்த மர்மங்களுக்கு ஏதேனும் ஏலியன் தொடர்புகள் இருக்கின்றனவா?

தொடரும் . . .

Facebook Comments

Sharing is caring!

fb Comments

comments

  Comments

17 Comments

 1. //க்ளாடின் கருத்து வசீகரமானது.//…correct than..appo namma makkalum oru puthu specices a padipanga nu solrara…

  Reply
 2. nan Charles Darwin theory a nambaren thala..itha namba mudiyala…

  Reply
 3. இவரின் கற்பனை உச்சத்தின் உச்சம். பைபிளின் முக்கிய விடயங்களை எவ்வளவு அழகா ஏலியன்ஸோட மாட்ச் பண்ணிட்டாருய்யா? 25,000 ஆண்டுகளுக்கு முன்பு தான் ஏலியன்ஸ் மனிதர்களையும் மற்ற செடிகளையும் படைத்தார்கள் என்றால், மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய டைனோஸர் எச்சங்களை, ஏலியன்ஸை படைத்த ஏலியன்ஸ் வைத்துவிட்டு போனார்களா?

  நான் இப்போதைக்கு நம்ம டார்வின் கூர்ப்பு தியரியுடன் ஒத்துப் போகிறேன். சிலவேளை ஏலியன்ஸ் வந்தால் க்ளாட்டின் கூட்டத்துடன் சேர்ந்து கொள்கிறேன்.

  Reply
 4. //நம்மைப் படைத்தவர்களையும் வேறு யாரோ படைத்திருக்கிறார்கள்// மிக அருமையான வசனம்! (என்னது வசனமா?) ஆனா, நீங்க ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க! ஆத்திகனாக இருந்து, கொஞ்சம் கொஞ்சமாய் நாத்திகனாய் மாறி வந்து கொண்டிருந்தேன்! இடையில் நீங்களும் குழப்புகிறீர்கள்! சரி! வெறுமனே வேடிக்கை மட்டும் இனி பார்ப்போம்!

  Reply
 5. உண்மையிலே இத வெச்சு ஒரு படுசுவாரஸியமான திரைக்கதை பண்ணலாம்…! அவர் சொல்றது புருடாவா இருந்தாலும் நல்ல கற்பனை வளம் அவருக்கு…! அத எவ்வளவு அழக்க்கா எடுத்து சொன்ன நம்ம கருந்தேள் பாஸுக்கு hats off….! 🙂

  Reply
 6. This comment has been removed by the author.

  Reply
 7. இது சுஜாதா சொல்ற மாதிரி வெறும் பதினைஞ்சு நிமிஷ (அல்லது வருஷ) புகழுக்ககத்தான்.. என்னத்த சொன்னாலும் நம்புறதுக்கு ஒரு கூட்டம் இருக்குங்கறது உண்மைதான்.

  நம்ம அறிவியலால ஆல்மொஸ்ட் எல்லாத்தையும் (பிரபஞ்ச பிறப்பு, உயிரின் ஆரம்பம் போன்ற சில தவிர) துல்லியமா விளக்க முடியுது. அப்படிப்பட்ட விஞ்ஞானத்துல கடவுளுக்கோ வேற படைப்பாளிக்கோ இடமில்லை.

  அதுசரி சார், LOTR series எப்போ continue பண்ணப்போறீங்க?

  Reply
 8. இஸ்ரேல் காரன் தான் அறிவு ஜீவின்னு காமிக்க புனையப் பட்ட நல்ல புருடா, கப்சா……

  Reply
 9. @ Elamparuthi – கிளாட் இன்னும் நிறைய சொல்றாரு. யெஸ். நாம இன்னும் பல வருஷம் கழிச்சி புதுசா ஒரு ஸ்பீசீஸ் உருவாக்க முடியும்; அது எப்போன்னா, நம்மைப் படைச்ச ஏலியன்ஸ் பூமிக்கு வந்து அவங்க ரகசியத்தை நமக்கு சொன்னப்புறம் :). . டார்வின் தியரி ஓகேதான். ஆனா, இன்னும் பல வருஷம் கழிச்சி ஏலியன் உண்மைகள் நமக்குப் புரியும்னு அவரு சொல்றாரு 🙂

  @ ஹாலிவுட் ரசிகன் – டைனோசார் எச்சங்கள் பத்தியும் அவரு சொல்லிருக்காரே… அதாவது, பூமியை 25000 வருஷங்கள் முன்னால இந்த ஏலியன்கள் பயன்படுத்தின மாதிரி, லட்சக்கனக்கான வருஷங்கள் முன்னால வேற ஏலியன்ஸ் பயன்படுத்திருக்கலாம். அவங்களோட பரிசோதனைகள் தான் அந்த டைனோசார்கள் என்பது க்லாடின் கருத்து ஆச்சே 🙂 ….

  @ கணேசன் – கவலைப்படாதீங்க…இந்தக் குழப்பம் நல்லதுக்குதான். அப்போதான் நிறைய கேள்விகள் கேட்க முடியும் …நீங்க இப்போ இருக்குற க்ளப்ல (ஆத்திகன்… நாத்திகன்) நானும் இருக்கேன் 🙂

  @ அபராஜிதன் – LOTR சீரீஸ் முடியப்போகுது. சீக்கிரம் மிச்சம் இருக்குற எபிசோடுகள் எல்லாத்தையும் எழுதி முடிச்சு E Book போட்டுறலாம் …அண்ட், இந்த மாதிர் ஆட்கள் என்ன சொன்னாலும் நம்பும் கூட்டம் ஒண்ணு இருக்கு. அப்புடி நம்பும் வரை இவங்க காட்டுல மழைதான்

  @ JayadevDas – 🙂 அப்புடித்தான் பலபேரு சொல்றாங்க 🙂

  Reply
 10. @ Logu – ஹீ ஹீ … இன்னும் நிறைய இருக்கு.. ஆனா அதையெல்லாம் நான் எழுதுனா என்னையும் ஒரு மெண்டல்னு முடிவு பண்ணிருவாய்ங்க 🙂

  Reply
 11. வணக்கம் தல. ரொம்ப சுவாரசியமா போகுது. என்க்கு இந்த மாதிரி விசயத்துல கொஞ்சம் ஈடுபாடு அதிகம். இன்னமும் நிறையா தகவல் கொடுங்க. இங்க என்னகு தெரிஞ்ச ஒரு விஷயம் நான் ஷேர் பண்றேன். (12monkeys கதைய search பண்றப்போ இந்த சைட் தெரிஞ்சுகிட்டேன்.) நீங்க முதல் பாகத்துல சொன்ன அணு குண்டு விஷயம் இருக்கு பாருங்க. பெரிய கட்டுரை, ஆனா நம்ம மகாபாரதம் பத்தி இதுல இருக்கு. அப்பறம் ஹரப்பா, ராஜஸ்தான் பத்தி எலாம் நெறைய விஷயம் இருக்கு. நான் இதை 3 வருஷம் முன்னாடி படிக்கும் பொது ஆச்சர்யமா இருந்துச்சு. உங்க தொடர் படிச்சதும் spark ஆச்சு! 😀

  Reply
 12. சில வேலை காரணமாக வலை பக்கம் வர இயலவில்லை.தாமதமாக பின்னூட்டம் இடுவதற்கு மன்னிக்கவும்..
  இந்த தொடர் இவ்வளவு சுவாரஸ்யமாகவும் சுவையாகவும் அமைவதை கண்டு மகிழ்கிறேன்..
  முதல் பாகம் தொடர்ந்து படித்து வருவதால் நான்காவது பாகத்தை சற்று புரிந்துக்கொள்ள முடிகிறது..நீங்கள் தந்த புத்தகத்தையும் படித்து பார்க்கிறேன்.மிகவும் அருமையான பதிவு..ஆவலை அதிகரிக்கிறது.

  Reply
 13. அருமையான தொடர் ராஜேஷ்.. இந்த லிங்க கொஞ்சம் பாருங்க
  http://static.flabber.net/files/scale-of-the-universe-2.swf

  வேற்றுகிரகவாசிங்க இருக்காங்கனு எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை வரும்.

  Reply
 14. @ரவிகாந்த் சார்,

  அந்த லிங்க் பாத்துட்டேன். வேற்றுக்கிரகவாசிங்க நிச்சயமா இருக்காங்கங்கிறதோட அவங்களோட நாம தொடர்பாடல் வச்சுக்க முடியாதுன்னும் நம்பிக்கை வருது.

  Reply
 15. பயபுள்ள அட்டகாசத்துக்கு அளவே இல்ல. ஒரு லட்சம் பேருக்கு இவருதான் கடவுள்னு சொல்லுங்க.#இது என்னடா புது பிசினஸ் டீலிங்கா இருக்கு. இதையும் பாப்பமடா.

  Reply
 16. vetrukiraga manitharkal irukkangannu na oththukiren aana ivaru pesi irukkarunu solluruthulam suththa poi, vetrukiraga vaasikal entha school la poiye english paduchuchchu?……………….

  Reply
 17. அது உண்மைதான் bro. நீங்க சொன்னது..நானும் நம்புறேன் ஏலியன் இருக்குனு..ஆனா கிளாட் ரொம்ப சொகுசாதான் இருக்காரு.. அவரோட websiteku போயிட்டு பார்த்தால் தெரியும்…

  Reply

Join the conversation