வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 2

by Rajesh February 3, 2012   Alien series

Sharing is caring!

சென்ற கட்டுரையில், மஹாபாரதத்தில் ந்யூக்ளியர் குண்டுகளின் வர்ணனை வருவதைப்பற்றிப் பார்த்தோம். மேலே தொடருமுன்னர், சில சந்தேகங்களைப் பார்க்கலாம்.

யோவ். மஹாபாரதம் என்பதே ஒரு கதை. கதையில் கண்டபடி எதைவேண்டுமானாலும் எழுதலாமே? அப்படியிருக்கும்போது அதை உண்மை என்று நம்பி, ஏலியன்கள் அவர்களது ஆயுதங்களை உபயோகித்தார்கள் என்று எப்படி எடுத்துக்கொள்ளமுடியும்? இது ஒரு கோணம்.

மஹாபாரதத்தையும், மற்ற உலகின் புராணங்களையும் ஏன் கதை என்று எடுத்துக்கொள்ளவேண்டும்? உண்மையில் நடந்த நிகழ்ச்சிகளின் ஆவணங்களாகக்கூட அவை இருக்கலாமே? இது இன்னொரு கோணம்.

நம்மைப்பொறுத்தவரை, புராணங்கள் உண்மையா பொய்யா என்று அலசுவது இந்தக் கட்டுரைகளின் நோக்கம் அல்ல. அவற்றில் தரப்பட்டிருக்கும் பல்வேறு ஏலியன் சம்மந்தமான விஷயங்களை எடுத்துக்கொண்டு அவற்றை அலசுவதே நோக்கம். புராணங்கள் பொய்யாகவும் இருக்கலாம்; அல்லது அவை உண்மை என்றும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், எந்த contextல் அவை இந்த extra terrestrial தகவல்களைத் தருகின்றன என்பதை மட்டுமே நோக்கப்போகிறோம்.

இன்னொரு விஷயம் – இந்தப் புராணங்கள் அடியோடு பொய் என்றோ, அல்லது அப்பட்டமான உண்மை என்றோ நூறு சதவிகிதம் நிரூபிக்கக்கூடிய எந்தத் தகவலும் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை என்பதும் உண்மை. ஆகவே, எந்தப் பக்கமும் சாயாமல், இரண்டு கோணங்களிலும் இந்த சுவாரஸ்யமான விஷயங்களை நோக்கலாம்.

இந்திய புராணங்களில் விமானங்கள்

பழங்கால இந்தியாவில், விமானங்களை உருவாக்குவதற்கான அறிவும் ஆற்றலும் கட்டாயம் இருந்தது என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அதற்குக் காரணம், புராணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் விமானங்கள் செய்யும் வழிமுறைதான். குறிப்பாக, ‘வைமானிக சாஸ்த்ரம்’ என்று ஒரு நூல் – மகர்ஷி பாரத்வாஜரால் செய்யப்பட்டது – இந்த ஆராய்ச்சியாளர்களுக்கு ஆதாரமாகக் கிடைத்துள்ளது. அந்த நூலைப்பற்றித்தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

யந்த்ர சர்வஸ்வம் என்பதுதான் பாரத்வாஜர் எழுதிய மூல நூல் என்று தெரிகிறது. அதன் ஒரு பகுதியே இந்த வைமானிக சாஸ்த்ரம்.

யந்த்ர சர்வஸ்வம் என்ற இந்த நூல், யந்திரங்கள் என்ற கருவிகள் பற்றிச் சொல்வதாகச் சொல்லப்படுகிறது. இந்த யந்திரங்கள் என்பன தகடில் கோடு கிழித்து உருவாக்கப்படும் தற்கால யந்திரங்கள் அல்ல. முற்காலத்தில், மனிதனால் ஆட்டுவிக்கப்படும் கருவிகளே யந்திரங்கள் என்று அழைக்கப்பட்டு வந்தன. அப்படிப்பட்ட யந்திரங்களைப் பற்றிச் சொல்கையில், விமானங்களைப் பற்றியும் இந்நூல் சொல்வதாகக் கருதப்படுகிறது. இந்த நூலில் இருந்து ஒரு சில எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம். அதன்பின், இந்த நூலின் நம்பகத்தன்மை குறித்தும் விவாதிக்கலாம்.

அதற்கு முன், இந்தப் புத்தகத்தின் சுலோகங்களில் இருந்தே இதைச் செய்தவர் பாரத்வாஜர் என்று தெரிகிறது. இது எந்த வருடத்தில் செய்யப்பட்டது என்றோ, இது ஒரு பழங்காலப் புத்தகம் என்றோ வேறு எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

'வைமானிக சாஸ்த்ரம்' புத்தகத்தின் விபரங்களுக்கு ஏற்ப வரையப்பட்ட மாதிரி வரைபடம்

‘வைமானிக சாஸ்த்ரம்’ புத்தகத்தின் விபரங்களுக்கு ஏற்ப வரையப்பட்ட மாதிரி வரைபடம்


இந்த வைமானிக சாஸ்திரத்தின் முதல் அத்தியாயத்தில், பாரத்வாஜ ரிஷி, விமானம் என்ற வார்த்தைக்குப் பொருள் தருகிறார். அப்படித் தரும்போதே, அவருக்கு முன்னால் வாழ்ந்து மறைந்த ரிஷிகள், இந்த விமானம் என்ற வார்த்தையை எவ்வாறாக விளக்கியிருக்கிறார்கள் என்றே அதன் பலவிதமான அர்த்தங்களை விவரிக்கிறார்.

“தரைமேலும் கடலின்மேலும் தனது சொந்த சக்தியினால் பறவையைப்போல் காற்றில் சீறிப்பாயும் ஒன்றே விமானம் எனப்படுகிறது”.

“விமான சாஸ்திரத்தை நன்கு தெரிந்தவர்கள், காற்றில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்லும் ஒரு பொருளையே விமானம் என்று அழைக்கிறார்கள்”

“காற்றில் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கும், ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்கும், ஒரு உலகத்தில் இருந்து மற்றொரு உலகத்துக்கும் செல்லும் திறன் படைத்த ஒன்றையே விமானம் என்று அழைக்கிறார்கள்”

இந்த மூன்று விளக்கங்களால் விமானம் என்ற பொருளை விளக்கியபின்னர், விமானத்தை செலுத்தக்கூடிய நபர் எப்படி இருக்கவேண்டும், எந்த உடை அணிந்திருக்கவேண்டும், விமானத்தைப் பற்றி எந்தவிதமான தகவல்கள் அவனுக்குத் தெரிந்திருக்கவேண்டும் ஆகிய விஷயங்களை மிகவிளக்கமாக விவரித்திருக்கிறார் பாரத்வாஜர். ஒரு விமானிக்கு இதுவிதமாக 32 ரகசியங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவருடைய கூற்று. இதைத்தவிர, தனக்கு முன்னால் இருந்த ரிஷிகள் சொல்லியவற்றையும் அவர் எழுதுகிறார். இப்படிப் பல ரிஷிகளின் கூற்றாக ஒரு விமானிக்கு எவையெல்லாம் தெரிந்திருக்கவேண்டும் என்று விளக்குகிறார் பாரத்வாஜர்.

இதற்குப் பிறகு, ஒரு விமானி உண்ணக்கூடிய உணவுகளைப் பற்றிய விவரணை வருகிறது. எந்தெந்த நேரங்களில் விமானி உணவு உண்ணவேண்டும் என்பதும் சொல்லப்படுகிறது. இதற்குப்பிறகு, விமானத்தின் அங்கமாக இருக்கும் பல்வேறு உலோக வகைகளையும் விளக்குகிறார். அந்த உலோகங்களும் கனிமங்களும் பூமியில் எங்கு கிடைக்கும் என்றும் விளக்கம் வருகிறது. உலோகங்கள் இருப்பது இரண்டாம் அத்தியாயம். மூன்றாவது அத்தியாயத்தில், ஒரு விமானத்தில் எங்கெல்லாம் கண்ணாடிகள் இருக்கவேண்டும் என்பது சொல்லப்படுகிறது. அக்கண்ணாடிகளை எப்படி உருவாக்குவது, அவற்றின் பயன்கள் என்ன என்பதும் மிக விரிவாக இதில் இருக்கின்றன.

நான்காவது அத்தியாயத்தில், விமானத்திற்கு எப்படிப் பறப்பதற்கான சக்தி கிடைக்கிறது என்பது சொல்லப்படுகிறது. அச்சக்திகளை உருவாக்கத் தேவையான கருவிகளும் விவரிக்கப்படுகின்றன. ஐந்தாவது அத்தியாயத்தில் இந்தக் கருவிகளை இயக்கம் சூத்திரங்கள் உள்ளன. இந்தப் பலவிதமான கருவிகளை இணைக்கும் ரகசியமும் இதில் உள்ளது. அவை எப்படிச் செயல்படுகின்றன என்பதும் இதிலேயே வந்துவிடுகிறது. இந்த ஐந்தாவது அத்தியாயம்தான் இருப்பதிலேயே பெரிய அத்தியாயமும் கூட.

ஆறாவது அத்தியாயத்தில், பலவகையான விமானங்களைப் பற்றி இருக்கிறது. ஒவ்வொரு யுகத்துக்கும் ஒரு வகையான விமானம். முதல் யுகமான கிருத யுகத்தில் விமானங்கள் இல்லை. ஆகமொத்தம் மூன்று வகையான விமானங்கள் இருக்கின்றன என்பது இதில் உள்ளது. அதன்பிறகு, இந்த மூன்று வகைகளிலும் உள்ள எண்ணிறந்த உள்வகைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதன்பிறகு, விமானங்களின் பல்வேறு பாகங்கள்; அவற்றின் நீள அகலங்கள் ஆகியவை சொல்லப்பட்டிருக்கின்றன.

இப்படியாக அந்தப் புத்தகம் முடிகிறது.

விரிவாகப் பல விமானங்களைப் பற்றிச் சொல்லியிருந்தாலும், இந்த விமானங்கள் எப்படிப் பறக்கின்றன என்பது இந்தப் புத்தகத்தில் இல்லை. அதாவது, இதன் செயல்முறை விளக்கம்.

இந்தப் புத்தகத்தின் முதல் பிரதி, 1973ல் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. சுப்பராய சாஸ்திரி என்பவர், 1914ல் தனது நினைவில் இருந்து இந்த சமஸ்கிருத ஸ்லோகங்களைச் சொன்னதாகவும், அவற்றைப் பிரதி எடுத்து, 20 ஆண்டுகள் மொழிபெயர்க்கப்பட்டு அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து 1973ல் இப்புத்தகம் உருவாக்கப்பட்டதாக இதனைத் தொகுத்த G.R ஜோஸ்யர் என்பவர் புத்தகத்தின் முன்னுரையில் எழுதியிருக்கிறார்.

இந்த வைமானிக சாஸ்திரத்தின் சுலோகங்களை முதன்முதலில் வெளியிட்ட சுப்பராய சாஸ்திரியின் மேற்பார்வையில், ஷிவ்கர் பாபுஜி தல்படே என்ற மகராஷ்ட்ர ஆசாமி, 1895ல் ஒரு விமானத்தை உருவாக்கியதாகவும், அதில் கொஞ்ச நேரம் பறந்ததாகவும் ஒரு குறிப்பு இருக்கிறது. இதைப்பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் செய்தி வந்திருக்கிறது (க்ளிக்கிப் படிக்கலாம்).

ரைட் சகோதரர்களுக்கு எட்டு வருடங்கள் முன்னரே இது நடந்துவிட்டது என்றும், ஆகையால் இவர்தான் உலகின் முதல் விமானத்தில் பறந்தவர் என்றும் இந்தச் செய்தி சொல்கிறது. ஆனால் இதைப்பற்றிய எந்த ஆவணமும் இதுவரை கிடைக்கவில்லை. தல்படே உருவாக்கிய விமானத்தின் பெயர் ‘மாருத்சஹா’. இந்த விமானத்தின் மாடல், பெங்களூர் HALல் இருக்கிறது என்றும் இன்னொரு செய்தி உலவிக்கொண்டிருக்கிறது.

இந்த வைமானிக சாஸ்த்ரம் உண்மையா? அல்லது பொய்யா?

ஒருவேளை இது உண்மை என்றே வைத்துக்கொள்ளலாம். அப்படியென்றால், பழங்கால மக்களுக்கு விமானங்கள் செய்யக் கற்றுக்கொடுத்தது யார்? வேற்றுக்கிரகங்களிலிருந்து பூமிக்கு வந்த மனிதர்களா?

பழங்கால இந்திய புராணங்களில், பூமியிலிருந்து வேறு உலகங்களுக்குச் சென்ற மனிதர்களைப் பற்றிப் பல கதைகள் இருக்கின்றன. நமது ஔவையாரே பூமியில் இருந்து சுயநினைவுடன் கைலாசத்துக்கு ஒரே ஜம்ப்பில் சென்று அடைந்ததாக ஒரு கதை இருக்கிறதே? அவரை அப்படித் தூக்கிவிட்டவர் பிள்ளையார் என்றும் அதே கதை சொல்கிறது.

ஒருவேளை இந்த வைமானிக சாஸ்த்ரம் பொய் என்று வைத்துக்கொண்டால்? அதையும் விபரமாகப் பார்க்கத்தான் போகிறோம்.

தொடரும் . . .

Vymanik Sasthra Photo Courtesy

Facebook Comments

Sharing is caring!

fb Comments

comments

  Comments

13 Comments

 1. வணக்கம்,
  சார் தொடர்ச்சி அருமையாக இருக்கிறது..அப்படியே மூழ்கிவிட்டேன்..நீங்கள் சொன்ன பல தகவல்களை இப்பொழுதுதான் கேள்வியேப்படுகிறேன்..அடுத்த பாகத்தை எதிர்ப்பார்க்கிறேன்.நன்றி.

  Reply
 2. எத்தனையோ புரியாத புதிர்கள் நம் இந்துமதத்தில் உண்டு என கேள்விப்பட்டிருக்கேன். வாசிக்க வாசிக்கத் தான் புரியுது. எங்கிருந்து இத்தனை தகவல்களையும் தேடி எடுத்தீங்களோ அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம். அடுத்த பாகம் விரைவில் எதிர்ப்பார்க்கிறேன்.

  Reply
 3. hindhuism explains about evolution ? , பாகவத புராணத்தில் மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் அதன் அடிப்படையிலேயே உள்ளது என தோன்றுகிறது ,நமக்கு புரியும் வகையில் நமது முன்னோர்கள் இவ்வாறு விளக்கி உள்ளார்களோ ?
  மத்ஸ்ய – மீன் , நீரில் தோன்றின உயிர்கள்
  கூர்மம் – ஆமை , நிலத்தை நோக்கி வந்தன
  வராகம் – பன்றி , நிலத்தில் வாழும் உயிரினங்கள்
  நரசிம்ஹம் – பாதி மிருகம் பாதி மனிதன் ( primates ? )
  வாமணன் – pigmy man
  பரசுராமன் – கோடரி கொண்ட ரிஷி , காட்டு வாழ் மனிதன் ?
  ராமன் – அரசன் , நாகரீக மனிதன்
  கிருஷ்ணன் – போகி
  Gautama புத்தன் – மோட்சம்
  கல்கி – மனிதனின் அடுத்த பரிணாம நிலை ? (http://en.wikipedia.org/wiki/Avatar )

  Reply
 4. பயங்கர இன்-டெப்த்தான தகவல்கள்.உங்க கடும் உழைப்புக்கு ஒரு சல்யூட்…எத்தன தொடர்கள்.யப்பா..

  Reply
 5. fantasy கதைகளில் இதுமாதிரி விவரணைகள் வருவது சகஜம் தானே ? பறவைகள் – விலங்குகள பாத்து பாத்து வளரந்ததுனால, பறப்பது மாதிரியான விஷயங்கள் கதைகளில் வருவது மிக இயல்பான விஷயம் தான. தவிர, அந்த காலகட்டத்தில் தான் யாகங்கள் போன்ற விஷயங்கள் வளரத் தொடங்கியது. அதுனால, தீடீர்னு மறையுறது – பறப்பது – இதுபோன்ற குறிப்புகள் சாதாரனமல்லவா. அப்படியே இத சீரியஸா எடுத்தாலும், பின்னாளில் இதுமாதிரியான விஷயங்கள் வேற காப்பியங்களில் இலக்கியங்களில் வரல. வாய்வழி கதை கேட்டே வளர்ந்த சமூகம் நமது. இதுபோன்ற விஷயங்கள் நடந்திருந்தா தலைமுறை தலைமுறையா பேசியிருக்க மாட்டாங்க. இல்லாத அவதாரங்கள் குறித்து நுணுக்கமா பதிவு செய்து வழிவழியா சொல்லி குடுத்துட்டு வந்திருக்கும் போது, இந்த மாதிரி பறக்கும் தட்டுகள் – ஏலியன்கள் சமாச்சாரம் நடந்திருந்தா, ஏன் பதிவு செய்யப்படல ? மகாபாரதம் – விமானம், அப்ப நோவா’s ஆர்க் – கப்பல் கட்டும் டெக்னாலஜி அப்பவே இருந்ததுன்னு எடுத்துக்கலாமா ?

  Reply
  • எனக்கென்னவோ இதெல்லாம் ஒருபொய்யான விளக்கமே.எல்லாமே மணிதனால் எழுதப்பட்ட கதைகளிலிருந்து வந்தவையே.

   Reply
 6. @குமரன் – நன்றி. அடுத்த பாகம் இதோ வந்துகொண்டே இருக்கிறது. ‘சார்’ மட்டும் வேண்டாமே. ராஜேஷ் என்றே அழையுங்கள்

  @ ஹாலிவுட் ரசிகன் – இந்து மதத்தில் மட்டுமில்லை. வேறு பல மதங்களிலும் இப்படிப்பட்ட விஷயங்கள் நிறைந்து கிடக்கின்றன. அவற்றில் ஏலியன் தொடர்புடைய விஷயங்கள் எல்லாவற்றையும் இந்தத் தொடரில் அலசிவிடுவோம் 🙂

  @ De. Dolittle – நீங்கள் சொன்ன இந்த பாகவத evolution தகவல் எனக்கும் நன்றாகவே தெரியும். ஆனால், அது ஒரு co-incidence போலத்தான் எனக்குத் தெரிகிறது. இருந்தாலும், முடிந்தால் அதையும் பார்த்துவிடுவோம் (இனிவரும் கட்டுரைகளில்)

  @ கொழந்த – உலகின் பண்டைய மதங்களைப் பொறுத்தவரை, பறக்கும் தட்டுகள் என்ற ஒன்றே இல்லை. காரணம், அவைகள் காடவுளரின் ரதங்கள் என்றும், அவற்றில் வந்தவர்கள் கடவுளர்கள் என்றும் அவர்கள் நினைத்து வந்ததே என்று ஏலியன் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அவற்றைப்பற்றிதான் இனிவரும் கட்டுரைகளில் பார்க்கப்போகிறோம். ஆகவே, அப்போது அலசுவோம்.

  Reply
 7. ! நன்றி !

  Reply
 8. இந்த தொடரை விரும்பி படிக்க ஆரம்பித்து உள்ளேன். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பாக்கியராஜின் அசிஸ்டென்ட் ஒருவர் (பேர் மறந்து போச்சு) ஆரம்பித்த ஒரு மாத நாவலில் இப்படி பல வேற்றுகிரக விஷயங்களை பற்றிய தொடர் வந்தது நினைவிருக்கிறதா?

  தமிழ் சினிமா உலகம்

  மெரினா: 03.02.2012 – திரைவிமர்சனம்!

  Reply
 9. ராமயணம் முழுக்க பறக்கும் தட்டு(?) வச்சிருந்தது இராவணன் மட்டும்தான். எதுனா… ஃப்யூயல் ஷார்ட்டேஜ் அல்லது தட்டு ஷார்ட்டேஜா இருந்திருக்கனும்.

  இராவணனோ தமிழன். அப்ப இராவணனுக்கு தட்டு வேற கடவுள்கிட்ட கிஃப்டாதான் வந்திருக்கும்னு நினைக்கிறேன். அவன் கிட்ட எப்படி அந்த புஷ்பக விமானம் வந்துசிங்கறதுக்கு எதுனா கிளைக்கதை இருக்கா தல?

  ——

  இன்னொரு வேலிட் க்வொஸ்டின் இருக்கு. இந்த விமானத்துக்கெல்லாம்.. எங்கிருந்து பெட்ரோல் ஊத்தினாங்க? அல்லது… வேற என்ன பவர் ஸோர்ஸ் இருந்திருக்கும்?

  எகிப்த்தில்.. எல்லா ப்ரமீடுக்கும்.. ஒரு ‘இறந்த அரசன்’ கதையிருக்கும். ஆனா ”த க்ரேட் ப்ரமீட்”-க்கு மட்டும்.. அப்படியெதுவும் கிடையாது. ஏலியன் ஆராய்ச்சியாளர்கள்.. அதுதான் ப்ரமீட் கட்டின ஏலியன்களின் பவர் சோர்ஸ்-ன்னு சொல்லிட்டு இருக்காங்க.

  நம்மூரில் அந்த மாதிரி கூட எதுவுமில்லையே?

  Reply
 10. //இராவணனோ தமிழன். அப்ப இராவணனுக்கு தட்டு வேற கடவுள்கிட்ட கிஃப்டாதான் வந்திருக்கும்னு நினைக்கிறேன். அவன் கிட்ட எப்படி அந்த புஷ்பக விமானம் வந்துசிங்கறதுக்கு எதுனா கிளைக்கதை இருக்கா//

  இராவணன் அதை குபேரனிடம் இருந்து பெற்றான்( பறித்தான் ) , இராவணன் ஒரு sub கடவுள் தான் ( முற்பிறப்பில் விஷ்ணுவின் வாயிற்காவலர்களில் ஒருவன் ) அதுவும் இராவணன் ஒரு பிராமணன் ( அவனை கொன்றதால் ராமருக்கு பிரம்மஹத்தி பிடித்தது ) .

  Reply
 11. அண்ணாமலை, விமானாஸ் குறித்த ஒரு ஒளி படம் இங்கே.

  Reply
 12. srinivasan

  நண்பரே 13000 வருடங்களாக ஒரு விமானம் விண்வெளியில் சுற்றி வருகிரது

  Reply

Join the conversation