The Artist (2011) – French

by Rajesh February 25, 2012   world cinema

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

பல நாட்களாகவே, இந்தப் படத்தைப் பற்றிப் பல விஷயங்கள் கேள்விப்பட்டுக்கொண்டே இருந்தேன். அத்தனையுமே, இது ஒரு டாப்க்ளாஸ் படம், இதுவரை இப்படியொரு படம் வந்ததில்லை, அற்புதம், அபாரம் என்ற முறையிலேயே இருந்தன. ஆகவே, இயல்பாகவே, இப்படத்தைப் பார்க்கும் ஆர்வம் எனக்கு இருந்தது. கடைசியாக, இன்று படத்தைப் பார்த்தே விட்டேன். படம் எப்படி? அது தெரிவதற்கு முன், இன்னொரு விஷயத்தைப் பற்றிப் பார்த்தே ஆக வேண்டும்.


ஹாலிவுட்டில் Silent Films என்று அழைக்கப்பட்டுவந்த ‘ஊமைப்படங்கள்’ வெளிவந்த காலங்களில், பல சூப்பர்ஸ்டார்கள் சிறந்து விளங்கினர். இதைப்ப்ற்றி எனது பள்ளிநாட்களில், ‘பாக்யா’ பத்திரிகையில் ஒரு அற்புதமான தொடர் வெளிவந்தது நினைவிருக்கிறது. அதில், ஹாலிவுட் உருவான காலத்தில் இருந்து தொண்ணூறுகளின் நடுப்பகுதி வரை (ஜுராஸிக் பார்க் & ஷிண்ட்லர்’ஸ் லிஸ்ட் காலம்) என்னென்ன நடந்தன, யாரெல்லாம் சூப்பர் ஸ்டார்களாக இருந்தனர், அந்தக் காலகட்டங்களின் கதை ஆகிய அத்தனை விஷயங்களும் சுவாரஸ்யமான முறையில் விளக்கப்பட்டு வந்தன. அதனைக் கிழித்தெடுத்து ‘பைண்ட்’ செய்தும் வைத்திருந்தேன். அதில்தான் ஹாலிவுட்டைப் பற்றி முதன்முறையாகக் கவரப்பட்டேன். அந்தத் தொடரில், ஸைலண்ட் படங்கள் பற்றிப் படித்ததும் நன்றாக நினைவிருக்கிறது. என் நினைவிலிருந்தும், இணையத்திலிருந்தும் திரட்டிய சில தகவல்கள் இங்கே.

’ஸைலண்ட் எரா’ என்று அழைக்கப்பட்டு வந்த காலம் – 1894 முதல் 1929 வரை. இந்தக் காலகட்டம் வரை, குரல் என்பது திரைப்படங்களுக்குத் தேவையே இல்லாத விஷயமாகவே இருந்துவந்தது. நடிகர்களின் பாடி லேங்வேஜ் மட்டுமே திரைப்படத்துக்குத் தேவைப்பட்டது. இப்படி இருந்த காலத்தில், பிரபல சூப்பர்ஸ்டார்களாக விளங்கியவர்கள் பலர். ஆங்கிலமோ அல்லது வேறு மொழிகளோ தெரியாமல் இருந்தால் கூட, நல்ல முகவெட்டு இருந்தால் ஒரு திரைப்படத்தில் நடித்துப் பேர் வாங்கி விடலாம். முதல் உலகப்போர் வரையிலும், ஐரோப்பா – குறிப்பாக ஃப்ரான்ஸே இந்த மௌனப்படங்களில் சிறந்துவிளங்கிவந்தது என்ற செய்தி, ஹாலிவுட் ரசிகர்களுக்கு சற்றே வியப்பாக இருக்கலாம். அதுதான் உண்மை. உலகப்போர், ஐரோப்பாவின்மீது தீவிரமானதொரு தாக்கத்தை ஏற்படுத்தியதால், திரைத்தொழில் அங்கே வலுவிழந்தது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் ஐரோப்பாவைப் பார்த்துத் தொழில் கற்றுக்கொள்ளத் துவங்கியிருந்த ஹாலிவுட், சட்டென்று விழித்துக்கொண்டது.

நமது ‘ஹாய்’ மதன், அடிக்கடி கமலின் நகைச்சுவையை ‘பஸ்டர் கீட்டன்’ (Bustor Keaton) என்ற நடிகரோடு ஒப்பிடுவதை, மதன் விசிறிகள் அறிந்திருக்கலாம். இந்த பஸ்டர் கீட்டன், ஹாலிவுட்டின் புகழ்பெற்ற மௌனப்பட நடிகர். இவரோடு சேர்ந்து பிரபலமானவர், சார்லி சாப்ளின். இவர்கள் காமெடிப் படங்களில் சிறந்து விளங்க, அதிரடி ஆக்‌ஷன் படங்களின் சூப்பர் ஸ்டாராக மாறியவர், டக்ளஸ் ஃபேர்பேங்க்ஸ் (Douglas Fairbanks). ரொமான்ஸில் அசத்திய க்ளாரா போ (Clara Bow) என்ற நடிகை, மற்றொரு பிரபலம். இந்தக் காலத்தில் – அதாவது 1920களில், ஹாலிவுட், வருடத்துக்கு 800 படங்களைத் தயாரித்து வெளியிட்டுக்கொண்டிருந்தது. அத்தனையும் மௌனப்படங்களே. உலகின் திரைப்படங்களில் 82 சதவிகிதம் அது!

அக்காலகட்டத்தில், ஸ்டுடியோக்களே ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தன. எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் சரி, ஸ்டுடியோவின் ஆதரவு இல்லையெனில், ஒரு ஸ்டாரின் திரைவாழ்க்கை நாசமாகிவிடும். இதற்கு யாருமே விதிவிலக்கில்லை.

மௌனப்படங்கள் வெளிவண்டுகொண்டிருந்த காலத்தில்தான் ஒலியின் புரட்சி தொடங்கியது. 1890களிலிருந்தே எடிசன் கம்பெனியினர் ஒலியில் பல பரிசோதனைகள் நிகழ்த்திக்கொண்டிருந்தாலும், ஹாலிவுட்டில் ஒலி மெதுவாகத்தான் நுழைந்தது. இதற்குப் பல காரணங்கள். முதலாவது, ஒலியின் அவசியம் அங்கே தேவைப்படவேயில்லை. இரண்டாவது, நடிகர்களின் ஈகோ. மூன்றாவது, ஒலிக்குத் தேவைப்பட்ட பெரும் பணம்.

Gretta Garbo

Gretta Garbo

இத்தனை தடைகளையும் மீறி, The Jazz Singer (1927) படத்தின் ஒருசில காட்சிகளில் ஒலியைப் புகுத்தியது வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம். ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வசனங்கள் மற்றும் இசை ஆகியவற்றை வெற்றிகரமாக மௌனப்படங்களின் பின்னணியில் புகுத்தியது. அது, பெருவெற்றியும் அடைந்தது.

ஆனால், இதில் மௌனப்படங்களில் கோலோச்சிவந்த நடிகர்களின் பாடு திண்டாட்டமாகிப்போனது. காரணம், பெரும்பாலானவர்கள் ஆங்கிலம் சரியாகத் தெரியாதவர்கள். உச்சரிப்பு சுத்தம் இல்லாதவர்கள். ஆகவே, இவர்களுக்கு ஆங்கில ட்யூஷன் வகுப்புகள் துவங்கப்பட்டன. இன்னொரு ப்ரச்னை என்னவெனில், பல நடிகர்கள்,ஒலிக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.ஆகவே,சொந்தமாகவே மௌனப்படமெடுத்து வெளியிடத் தலைப்பட்டு, அதனால் அவர்களின் வாழ்க்கையே தொலைந்துபோன கதைகளும் உண்டு.

1927ல் நுழைந்த ஒலி, இரண்டே வருடங்களில் ஒரு இன்றியமையாத இடத்தைப் பிடித்துக்கொண்டுவிட்டது. ஒலிக்குத் தக்கவாறு தங்களை மாற்றியமைத்துக்கொண்ட பிரபல சூப்பர்ஸ்டார்களும் இல்லாமல் போய்விடவில்லை. சில ஸ்டார்களைப்பற்றிச் சுருக்கமாகப் பார்த்துவிட்டு, படத்தைப் பற்றிப் பார்க்கலாம்.

க்ரேட்டா கார்போ (Gretta Garbo) – 1925ல் ஹாலிவுட்டில் அறிமுகமான கனவுக்கன்னி. மொத்தம் பத்து மௌனப்படங்களில் தலைசிறந்து விளங்கி, பலரது தூக்கத்தையும் வசனமே பேசாமல் கெடுத்தவர். MGM ஸ்டுடியோவினால் வளர்த்துவிடப்பட்டவர். ஒலி உள்ளே நுழைந்தபிறகும், இவரது ஸ்வீடிஷ் ஆங்கிலம், படத்தின் வசூலைப் பாதிக்கும் என்று கருதிய MGM, இவரது படங்களை மட்டும் மௌனப் படங்களாகவே எடுத்துத் தள்ளியது. அத்தனையும் சூப்பர்ஹிட். ஒருவழியாக, ஒலியின் அவசியத்தைப் புரிந்துகொண்ட MGM, ‘அன்னா க்ரிஸ்டி’ (Anna Christie) என்ற படத்தில், 1930ல், கார்போவைப் பேச வைத்தது. இப்படத்துக்கு MGM கையாண்ட விளம்பர உத்தி, இன்றும் பேசப்படும் ஒன்று. அப்படி என்ன நடந்தது? ‘Garbo Talks!’ என்ற இரண்டே வார்த்தைகள், அமெரிக்காவெங்கும் பரப்பப்பட்டன. தங்களின் கனவுக்கன்னி முதன்முதலாகப் பேசப்போகும் ஆசை வார்த்தைகளைக் கேட்க யாருக்குத்தான் மனமிருக்காது? மக்கள் வெள்ளம் படையெடுக்க, மௌனப்படங்களின் காலத்திலிருந்து ஒலிக்குத் தன்னை மாற்றியமைத்துக்கொண்ட கார்போவைத் தொடர்ந்தது வெற்றி.

Douglas Fairbanks

Douglas Fairbanks

டக்ளஸ் ஃபேர்பேங்க்ஸ் (Douglas Fairbanks) – மௌனப்படங்களின் படையெடுப்பின்போது, புகழின் உச்சத்தில் விளங்கியவர். ராபின்ஹூட், மாஸ்க் ஆஃப் ஸாரோ, தீஃப் ஆஃப் பாக்தாத் ஆகிய படங்களில் அதிரடியாக நடித்து மக்களைக் கவர்ந்தவர். மக்களின் பேராதரவைப் பெற்றிருந்த எம்.ஜி.ஆர் போன்று விளங்கியவர். சார்லி சாப்ளினோடு சேர்ந்து (யெஸ்!) யுனைடட் ஆர்டிஸ்ட்ஸ் (United Artists) நிறுவனத்தைத் தொடங்கியவர் (மற்ற இரண்டு பங்குதாரர்கள்: D.W Griffith & Mary Pickford). ஆஸ்கர்கள் தொடங்கிய வருடமான 1927ல், Motion Picture Academy of Arts and Sciences தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் ஆஸ்கர்களை வழங்கியவர்.

இத்தனை பெருமைகள் இருந்தும், ஒலியின் வருகை இவரைப் பதற்றத்துக்குள்ளாக்கியது. ஒலிப்படங்கள் புகழ்பெறத் துவங்குகையில், மெதுவே திரையுலகை விட்டு ஒதுங்கியிருக்கத் துவங்கினார். உடல்நிலை மோசமாக ஆரம்பித்தது இன்னொரு காரணம். செய்ன் ஸ்மோக்கரான ஃபேர்பேங்க்ஸ், 1929ல் Taming of the Shrew என்ற ஷேக்ஸ்பியர் நாடகத்தின் திரையாக்கத்தில், முதன்முறையாக வசனம் பேசி நடித்தார். அது ஃப்ளாப் ஆனது. உற்சாகம் இழந்த ஃபேர்பேங்க்ஸ், இன்னும் சில படங்களில் நடித்துவிட்டு இறந்துபோனார்.

மௌனப்பட உலகின் இன்னுமொரு உதாரணமான சார்லி சாப்ளின், ஒலிப்படங்கள் பெருமளவில் ஹிட்டான 1930களிலும் பிடிவாதமாக மௌனப்படங்களையே எடுத்துவந்தார். அவையும் ஹிட்கள்தான். ஒலி அறிமுகமான 1929ல் இருந்து, 1940 வரை, பதினோரு வருடங்கள் மௌனப்படங்களை மட்டுமே எடுத்து வெளியிட்டுக்கொண்டிருந்தார் சாப்ளின்! காரணம், ’வார்த்தைகள் ஒரு விஷயத்தைத் தவறாகவே புரிந்துகொள்ள உதவுகின்றன’ என்ற சாப்ளினின் கோட்பாடுதான். கூடவே, அவரே அவரது படங்களைத் தயாரித்ததால், எந்த ஸ்டுடியோவின் நிர்ப்பந்தங்களும் அவருக்குத் தடையாக இருக்கவில்லை. ஒருவழியாக, மௌனப்படங்கள் அழிந்தேவிட்ட 1940ல், சாப்ளின் முதன்முதலாக நடித்த ஒலிப்படம் – எவராலும் மறக்க இயலாத படம். அதுதான் ‘The Great Dictator’.

இப்படி, மௌனப்படங்கள் ஹாலிவுட்டில் ஏற்படுத்திய தாக்கத்தை முழுமையாகப் புரிந்துகொண்டால்தான் ‘The Artist’ படத்தைப் பற்றி நாம் தெளிவாகப் பார்க்க முடியும். ஏனெனில், ஆர்டிஸ்ட் படம், ஒரு ஆவணப்படத்தைப் போன்று, ஹாலிவுட்டின் ஒரு புகழ்பெற்ற, மறக்கடிக்கப்பட்ட காலத்தைப் பதிவு செய்கிறது.


ஆர்டிஸ்டின் கதை என்ன என்பது இதைப் படிக்கும் நண்பர்கள் அத்தனைபேருக்கும் தெரிந்திருக்கும். நான் மேலே சொல்லியிருக்கும் விஷயங்களின் கலவையே அதன் கதை. மௌனப்படங்கள் எடுக்கப்பட்ட காலத்தில், ஹாலிவுட்டில் ஃபேர்பேங்க்ஸ் போலப் புகழுடன் விளங்கும் ஒரு நடிகன்; ஒலிப்படங்கள் என்று அழைக்கப்பட்ட ‘டாக்கிகள்’ பிரபலமாகத் துவங்கியபோது, க்ரேட்டா கார்போவைப் போல் புகழுடன் விளங்கும் ஒரு நடிகை; இந்த இருவருக்கும் இடையில் ஏற்படும் காதல்; கதாநாயகன் ஒலிப்படங்களை மறுதளிக்கிறான்; அதனால் சொந்தமாகவே மௌனப்படம் எடுத்து நொடித்துப்போகிறான்; கதாநாயகி பெரும் புகழ் அடைகிறாள்; இறுதியில் என்ன ஆகிறது என்பதே கதை.

கதைக்காக இப்படத்தின் இயக்குநர் மைக்கேல் ஹஸானாவிஷியஸ் அலட்டிக்கொள்ளவே இல்லை. அதுதான் ஹாலிவுட்டின் மௌனப்படங்களின் கதை அவர் முன்னர் நடமாடிக்கொண்டிருந்ததே? நான் மேலே கூறியுள்ள விஷயங்களை, எவர் வேண்டுமானாலும் இணையத்தில் இருந்து பெற்றுவிடலாம். என்னைப்பொறுத்தவரையில், பள்ளி நாட்களில் ‘பாக்யா’வில் படித்த தகவல்கள் மறக்கவே இல்லை. அதைப்போல், அவர் எங்காவது இதுபோன்ற விபரங்களைப் படித்திருக்கலாம்.

மிக மெதுவாக நகர்கிறது படம். ஆரம்பத்தில் கதாநாயகனான ஜார்ஜ் வேலண்டின், மௌனப்படங்களில் நடிப்பதைக் காட்டுகிறார்கள். ஆனால், அதற்காக, அக்காலத்தில் நடைபெற்ற கதைகளைப்போலவே படு ஸ்லோவாகவே காட்டுவதால், படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் எனது சுவாரஸ்யம் குன்றிவிட்டது. அதுமட்டுமல்ல; படத்தில் சுவாரஸ்யமான சம்பவம் என்று எதுவுமே இல்லாததும் ஒரு காரணம். ஆவணப்படம் ஒன்றை இயக்கும் போர்வையில்தான் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், திரைக்கதையின் சார்பில், இப்படத்தில், பிரமாதம் என்று சொல்ல எதுவுமே இல்லை. வெறுமனே முதல் பத்தியில் கொடுத்திருக்கும் ஒன் லைனரை வைத்தே இப்படம் முழுமையும் எடுக்கப்பட்டிருப்பதால், ஆரம்பத்தில் தொடங்கிய அலுப்பு, படம் முழுமையும் நீடித்தது. இந்தப்படம் எப்போது முடியும் என்று எதிர்பார்க்கத் துவங்கினேன்.

கதாநாயகன் ழான் டுழார்தின் (Jean Dujardin – ஃப்ரென்ச்சின் ‘zha’ என்ற உச்சரிப்புக்குத் தேவையான வார்த்தை நம்மிடம் இல்லாததால் எவ்வளவு கஷ்டம்!) செய்யும் சேஷ்டைகளும், அவரது நடன அசைவுகளும் நன்றாக இருக்கின்றன. ஆனால் அதற்காக, கதையே இல்லாத ஒரு படத்தின் நடிப்பை எப்படிப் பாராட்ட முடியும்? இதுவேதான் கதாநாயகி பெரனீஸ் பெஜோவ்வுக்கும் (Bérénice Bejo).

நம்மூரைப்பொறுத்தவரை, நாஸ்டால்ஜியா என்ற ஒரே வார்த்தை, ஒரு படத்தையே ஹிட் செய்துவிடுவது பலமுறை நடந்துள்ள விஷயம் (மதராசப்பட்டினம் ஒரு உதாரணம்). அதைப்போலவே, உலகெங்கும் இந்த நாஸ்டால்ஜியா என்ற வார்த்தை இதேபோலத்தான் கையாளப்பட்டுவருகிறது என்பதை இப்படம் பார்த்துப் புரிந்துகொண்டேன். என்னளவில், என்னுள் ஒரு சிறு நரம்பைக் கூட அசைக்காத ஒரு படமாக இது அமைந்திருக்கிறது. இப்படத்துடன் ஒப்பிட்டால், கமல் நடித்த ‘பேசும்படம்’ ஒரு க்ளாஸிக் என்றே சொல்லிவிடுவேன். அந்த அளவுக்கு, பேசும்படத்தில் கதை இருந்தது. இதில் கதை டோட்டலாக மிஸ்ஸிங். வெறும் நாஸ்டால்ஜியாவுக்காகவே ஒருவேளை இது ஆஸ்கர் வாங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி வாங்கினால், கடந்த சில வருடத்தின் மோசமான ஆஸ்கர் படமாக இது விளங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

நான் பார்த்தவரையில், The Descendants (click and read) படம், சிறந்த ஆஸ்கர் திரைப்படமாவதற்கு சகல தகுதிகளும் வாய்ந்த படம். சிறந்த நடிகராகவும் ஜார்ஜ் க்ளூனியை இம்முறை அகாதெமி தேர்ந்தடுக்க விரும்புகிறேன். சிறந்த இயக்குநர் விருது – ஸ்பீல்பெர்க்குக்கு இல்லை. அது, Descendants இயக்குநர் Alexander Payneக்கே கிடைக்கவேண்டும் என்பது என அவா. The Help படம், லகான் போல. குறிப்பிட்ட ஒரு கும்பலைத் தாக்கும் படம். அதற்கு விருதுகள் கிடைப்பது அரிது என்று தோன்றுகிறது. Warhorse படமோ, ஷிண்ட்லர்’ஸ் லிஸ்ட் எடுத்த ஸ்பீல்பெர்க்கின் திறமைக்கு உறைபோடக்கூடக் காணாது. Midnight in Paris படம் ஒரு எண்டர்டெய்னர் மட்டுமே. அமெரிக்க வாழ்வுமுறையை வைத்து எடுக்கப்படும் படங்கள் வெல்வதே ஆஸ்கரின் வழக்கம். அப்படிப்பார்த்தால், Descendants முக்கிய விருதுகளை clean sweep செய்ய வாய்ப்புகள் உள்ளன.

ஒருவேளை தப்பித்தவறி Artist படத்துக்கு ஆஸ்கர்கள் கிடைத்துவிட்டால்….? அடப்போங்கய்யா… நம்மூர் ஏழாம் அறிவு, ஹாலிவுட்டுக்குப் போட்டியாக எடுக்கப்பட்ட படம் என்று ஒருகாலத்தில் விளம்பரப்படுத்தப்பட்டதே? அதைப்போன்ற ஜோக்காக எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்.

பி.கு – எப்படி மதராசப்பட்டினம் பண்டையகாலத்து சென்னையைத் திறம்படக் காட்டியதோ, அப்படி இப்படத்திலும் தொழில்நுட்பத்தில் புகுந்து விளையாடியிருக்கிறார்கள். அதேபோல், ஒரு முழுப்படத்தையும் மௌனப்படமாக எடுப்பது சாதாரணமானதல்ல. இருந்தாலும், நல்ல கதை அமையாமல் ஒரு படம் முழுமை பெறவே முடியாது. ஆகவே, கதையைத் தவிர பாக்கி அத்தனை விஷயங்களும் நன்றாக இருக்கும்போதிலும், என்னைப்பொறுத்தவரை இது ஒரு மொக்கை.

The Artist = sucks to the core !

Facebook Comments

Sharing is caring!

Related Posts

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

8 Comments

 1. எனக்கும் லைட்டா டவுட்டு இருந்துச்சி இப்போ 100% முடிவே பண்ணிட்டேன் வேண்டாமுன்னு ;-))

  \நான் பார்த்தவரையில்\

  இந்த பத்தியில் இருக்கும் விஷயங்கள் ஆஸ்கார் 2012ன்னு போட்டு ஒரு தொடர் போடுற அளவுக்கு இருக்கு…ஆனா அதை இப்படி ரொம்ப சுருக்கமாக போட்டுபுட்டிங்க..அடுத்த சில பதிவுகள் 2012 ஆஸ்காரை பத்தி போட்டால் நல்லாயிருக்கும் ;-))

  Reply
 2. நானும் இன்னும் படம் பார்க்கல பாஸ் … நேத்து ஃபேஸ்புக்குல நீங்க அப்டேட் போட்டதும் படம் மேல டவுட்டு வந்துருச்சு. சுறாவையே பாத்துட்டோம் … நமக்கு இதெல்லாம் ஜுஜுபி சாப்பிடுற மாதிரி. ஒருமுறை பார்க்கலாம் போல.

  Reply
 3. திரைப்படத்துடன் சேர்த்து பல தகவல்களை அறிந்துக்கொள்ள மிக பெரிய உதவி புரிந்தது தங்களது பதிவு.நன்றி.

  Reply
 4. ayyayo intha padam oscar vaangiruchu…..

  Reply
 5. details…details…details…..thala antha climax dance nalla irunthuchu illa…padam enaku pdithathu…

  Reply
 6. சாருவுக்கே இது பிடிச்சிருக்கா? குட்..:)

  Reply
 7. @ கோபிநாத் – ஆஸ்கர் பற்றிப் பதிவு போடணும்னு எனக்கும் ஆசைதான். ஆனா அது இந்த வாட்டி முடியல. அடுத்த வாட்டி எதுனா போடமுடியுமான்னு பார்ப்போம்

  @ ஹாலிவுட் ரசிகன் – ஹாஹ்ஹா … ஆமாம். ஒருவாட்டி பார்க்கலாம் 🙂

  @ குமரன் – நன்றி பாஸ்

  @ scenecreator – 🙂 ஆமாம் பாஸ். வாங்கிருச்சி. என்ன பண்ணுறது? நாஸ்டால்ஜியா, திறமையை அமுக்குவது ஆஸ்கருக்குப் புதுசில்லையே

  @ இளம்பரிதி – க்ளைமேக்ஸ் டான்ஸ் நல்லாத்தான் இருந்தது. அதாவது, படத்தின் தனிப்பட்ட அம்சங்கள் (மௌனம், ஒளிப்பதிவு, இசை) எல்லாமே நல்லா இருந்தாலும், திரைக்கதையில் கோட்டை விட்டுவிட்டார்கள் என்பதுதான் என் கருத்து.

  @ சமுத்ரா – 🙂

  Reply
 8. Sorry to be rude, You are one sick and mean attention seeker. “The Artist” is a fine movie which is worth the time spend.Grow up from being a hypocrite.

  Reply

Join the conversation