Avengers – 1- Stan Lee

by Rajesh April 18, 2012   English films

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

அடுத்த வாரம் Avengers படம் வெளியாகிறது. அதில் இடம் பெற்றிருப்பவர்கள் யார்? இந்த கும்பல் ஏன் அவெஞ்சர்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள்? இவர்கள் எப்படி உருவானார்கள்? இதுபோன்ற சில விஷயங்களை ஓரிரு கட்டுரைகளில் பார்த்துவிடுவதே நோக்கம். இந்தக் கட்டுரைகளைப் படித்துவிட்டு இப்படத்தைப் பார்த்தால், படம் பார்க்கும் அனுபவம் இன்னமும் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். மட்டுமல்லாமல், இந்தப் படத்தின் கதாநாயகர்கள் நடித்த படங்களைத் தவறாமல் பார்த்தும் வந்திருக்கிறேன். ஆகையால், இந்தக் கட்டுரைகள் ஓரளவாவது சுவாரஸ்யமாக இருக்கும் என நம்புகிறேன். அடுத்த வாரம் Avengers திரைப்படம் வெளியாகும்போது இந்த மினி கட்டுரைத்தொடர் முடிவடைந்துவிடும்.


ஸ்டான்லி மார்ட்டின் லீபர் என்ற மனிதரின் பிறப்பிலிருந்து இந்த அவெஞ்சர்ஸின் கதை துவங்குகிறது. 1922ல் ந்யூயார்க்கில் பிறந்த லீபர், இன்று 89 வயது ஆகியும், உலகம் முழுக்கப் புகழ் பெற்று விளங்கும் நபர். ஸ்பைடர் மேன், X Men, Fantastic Four, Daredevil ஆகிய கதாபாத்திரங்களை உருவாக்கிய மனிதர் இவர். காமிக்ஸ் பிதாமகர் என்று இன்று அழைக்கப்படும் இவரது இப்போதைய புகழ்பெற்ற பெயர் – ஸ்டான் லீ.

முப்பதுகளில், ஹாலிவுட்டில், எர்ரால் ஃப்ளின் என்ற நபர் படுபாப்புலராக இருந்தவர். எம்ஜியாரின் முன்னோடி என்றே இவரைச் சொல்லலாம். கத்திச்சண்டைகளில் கைதேர்ந்தவர். அக்காலப் படங்களில் ராபின்ஹூட்டாக நடித்துப் புகழ்பெற்றவர். இவரது படங்கள் என்றால் சிறுவன் ஸ்டான் லீக்கு உயிர். இவரது படங்களைப் பார்த்து, ஃபாண்டஸி உலகில் மிதந்தான் குட்டி ஸ்டான் லீ. அக்காலகட்டத்தில் அவனிடம் யாராவது அவனது வாழ்க்கை லட்சியத்தைப் பற்றிக் கேள்வி கேட்டிருந்தால், இதே போன்று படங்கள் எடுக்க வேண்டும்; அல்லது நாவல்கள் எழுத வேண்டும் என்றே சொல்லியிருப்பான். அவனது இந்த ஆசையை, பெரியவன் ஆனபிற்பாடும் அணையாது பாதுகாத்து வந்தான்.

பள்ளியை முடித்த பதினாறரை வயது ஸ்டான் லீ, ‘டைம்லி காமிக்ஸ்‘ என்ற அலுவலகத்தில், ஆஃபீஸ் பாயாக வேலைக்குச் சேர்ந்தான். அக்காலத்தில் – 1939ல் – காமிக்ஸ் வரையும் ஆர்டிஸ்ட்கள், இங்க் புட்டிகளில் பேனாக்களை அவ்வப்போது தோய்த்தே படங்கள் வரைவது வழக்கம். அந்த இங்க் புட்டிகளை நிரப்புவது இளைஞன் ஸ்டான் லீயின் பிரதான வேலையாக இருந்தது. கூடவே, ஆர்டிஸ்ட்களுக்கு உணவு வாங்கி வருவது, அவர்களது பென்ஸில் ஆர்ட்வொர்க்கை  முடிந்துவிட்ட பிரதிகளிலிருந்து அழிப்பது, அவ்வப்போது ப்ரூஃப் பார்ப்பது ஆகியவையும் அவனது வேலைகளாக இருந்தன.

‘Filler’ என்ற பதம், காமிக்ஸ் உலகில் வெகு சாதாரணமாக அடிபடும் ஒன்று. அதாவது, குறிப்பிட்ட ஆர்டிஸ்டோ அல்லது கதை எழுதுபவரோ, வேலையை முடித்த பின்னர், சில சமயம், காமிக்ஸின் ஓரிரு பக்கங்களோ அல்லது அதற்கு மேலோ, பக்கங்களை நிரப்புவதற்கு மேலும் மெடீரியல் தேவைப்படும். அப்போது யாரையாவது அழைத்து அந்தப் பக்கங்களை நிரப்பச் சொல்வது வழக்கம் (நமது லயன் காமிக்ஸில் அவ்வப்போது தலைகாட்டும் ரிப் கிர்பி கதைகள் இந்த ரகமே. மெயின் கதை முடிந்தபின்னர் ரிப் கிர்பி கதைகள் அந்தக் காமிக்ஸில் இருப்பதை எத்தனை முறை கண்டிருக்கிறோம்?). அப்படி ஒரு வாய்ப்பு, ஸ்டான் லீக்கு, அவரது 19வது வயதில் கிடைத்தது. அவரது துறுதுறுப்பைப் பார்த்த நிர்வாகிகள், ‘Captain America Foils the Traitor’s Revenge‘ என்ற சிறு காமிக்ஸ் கதையை எழுதும் வாய்ப்பை அவருக்கு அளித்தனர். இந்தக் கதை, மே மாதம் 1941ல், கேப்டன் அமெரிக்கா காமிக்ஸ் கதை # 3றாக வெளிவந்த காமிக்ஸில் இருக்கிறது. கிடைத்த மிகச்சிறு வாய்ப்பை அட்டகாசமாக உபயோகித்துக்கொண்டார் லீ. எப்படியென்றால், பின்னாளில் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தின் மிக முக்கிய மூவ் – தனது கேடயத்தை எதிரிகளை நோக்கி வீசி, அது அவர்களைத் தாக்கிய பின்னர் திரும்ப இவரிடமே வந்து சேர்வது – ஸ்டான் லீயாலேயே உருவாக்கப்பட்டது. அவரது சிறிய ஃபில்லர் கதையில். அந்த மூவ், பல ரசிகர்களுக்கும் பிடித்திருந்தது (லீயின் பதினெட்டரையாவது வயது).

இதன்பின் வெகுசீக்கிரமே, அடுத்த மூன்றே மாதங்களில், மெயின் காமிக்ஸ் உலகில் நுழைந்தார் லீ. ‘டெஸ்ட்ராயர்’ (Destroyer) என்ற கதாபாத்திரத்தை 1941 ஆகஸ்டில் உருவாக்கினார். அதே மாதத்தில், ‘ஜாக் ஃப்ராஸ்ட்’ (Jack Frost) மற்றும் ‘ஃபாதர் டைம்’ (Father Time) ஆகிய இரண்டு கதாபாத்திரங்களையும் படைத்து, காமிக்ஸ் உலகில் நடமாட விட்டார் லீ.

ஸ்டான் லீ என்ற மனிதனை, காமிக்ஸ் ரசிகர்கள் புரிந்துகொண்ட காலகட்டம் உருவானது அப்போதுதான்.

அதே வருடத்தில் (1941), லீயின் வேகத்தைப் பார்த்து பிரமித்துப்போன டைம்லி காமிக்ஸ் நிறுவனர் மார்ட்டின் குட்மேன், இடைக்கால எடிட்டராக பதினெட்டரை வயது லீயை நியமித்தார் (அப்போது குட்மேனுக்கு வயது முப்பது). வேலைக்குச் சேர்ந்த இரண்டே வருடங்களில், அந்தப் பிரிவுக்கு எடிட்டராக லீ மாறியதற்கு அவரது உழைப்பு மட்டுமல்லாது, அப்போதைய எடிட்டர் குட்மேனுடன் சண்டையிட்டுப் பிரிந்ததும் ஒரு காரணம். ஆக, உழைப்பு மற்றும் அதிர்ஷ்டம் ஆகிய இரண்டும் லீயைப் பார்த்துப் புன்னகைக்கத் துவங்கியிருந்தன.

இதன்பின் லீ திரும்பியே பார்க்கவில்லை (படுபயங்கர க்ளிஷேடான ஒரு வாக்கியம் இது). இடையே சில வருடங்கள் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிவிட்டு, திரும்பி வந்த வேகத்தில் பல்வேறு வகையான கதைகளை எழுதிக் குவித்தார் லீ. 1947ல் திருமணம். அந்தக் காலகட்டத்தில், டைம்லி காமிக்ஸ் நிறுவனம், அட்லஸ் காமிக்ஸ் என்று பெயர் மாற்றம் அடைந்தது. 1950களில், அதுவரை சரமாரியாகக் கதைகளை எழுதிவந்த லீ, ஒரே போன்று சென்றுகொண்டிருந்த வாழ்க்கையினால் அலுப்படைந்தார். பணத்துக்கு எந்தக் குறைவுமில்லாமல் இருந்தாலும், எத்தனை காலம்தான் சண்டை, வெஸ்டர்ன்ஸ், வில்லன்கள், ஹீரோக்கள் ஆகியவர்களால் ஆன உலகத்தில் உழல்வது? ஆகவே, வேலையை விட்டுவிட்டு, வேறு ஏதாவது வேலையில் ஈடுபடலாம் என்பது லீயின் முடிவாக இருந்தது.

அப்போதுதான் விதி லீயைப் பார்த்து மறுபடியும் புன்னகைத்தது (இதுவும் மற்றொரு க்ளிஷே தான்).


வருடம் – 1956. அமெரிக்காவின் புகழ்பெற்ற DC காமிக்ஸ் நிறுவனம், ஃப்ளாஷ் (Flash) என்ற ஒரு சூப்பர்ஹீரோ கும்பலை தூசிதட்டி எடுத்து உலவ விட்டிருந்த காலம். அந்த சீரீஸ் நன்றாகவே வெற்றியடைந்ததால், உடனேயே ‘ஜஸ்டிஸ் லீக்’ (Justice League) வெளியே விடப்பட்டது. அதுவும் வெற்றியடைந்தது. அப்போதுதான் லீயின் திறமை பற்றி நன்றாகத் தெரிந்துவைத்திருந்த குட்மேன், லீயிடம் வந்து, போட்டி நிறுவனமான DC காமிக்ஸுக்கு சவால் விடும்வகையில் ஏதாவது ஒரு சூப்பர்ஹீரோ கும்பலை உருவாக்கும்படி கேட்டுக்கொண்டார். லீக்கு அதில் இஷ்டமில்லை. வேலையையே விட்டுவிடும் முடிவுக்கு அவர் வந்திருந்தார். அப்போது, அவரது மனைவி Joanன் வற்புறுத்தலுக்கு இணங்கி, ஒருமுறை எதையாவது செய்துபார்ப்போமே என்று அவர் உருவாக்கிய ஹீரோ கும்பலின் பெயர் – Fantastic Four.

ஏனோதானோவென்று அமர்ந்தாலும், இந்த ஹீரோக்களின் படைப்பில் லீ செய்த மாற்றம் ஒன்று இன்றளவும் பல ஹீரோக்களின் உருவாக்கத்தில் உதவி செய்துள்ளது. அந்தக் காலகட்டம் வரை, சூப்பர் ஹீரோ என்றால் நிஜமாகவே ஹீரோதான். அதாவது, அந்த ஹீரோவிடம் எந்தக் குறையும் இருக்காது. நல்லவனாக, அபரிமிதமான சக்தியுடன், அடக்கமானவனாக, மக்களை வில்லனிடமிருந்து காப்பவனே அபோதைய சூப்பர் ஹீரோ. உதாரணத்துக்கு: சூப்பர்மேன் மற்றும் கேப்டன் அமெரிக்கா. ஆனால், வில்லனை அடி பின்னியபின் ஹீரோ என்ன செய்வான்? இங்குதான் லீயின் மூளை குறுக்கில் வேலை செய்தது. லீயின் ஹீரோக்கள், தங்களின் சக்திகளைப் பற்றி ஜம்பம் அடித்தனர். தங்களின் வாழ்க்கைத் தேவைகளுக்குப் பணம் சம்பாதிப்பது எப்படி என்று யோசித்தனர். ஹீரோயின்களை எப்படி மடக்குவது என்று சிந்தித்தனர். தங்களுக்குள்ளேயே ஈகோ மிகுந்து அடித்துக்கொண்டனர். நோய்வாய்ப்பட்டனர்.

இந்த Fantastic Four கதாபாத்திரங்களைப் படமாக வரைந்தவர் புகழ்பெற்ற ஆர்டிஸ்ட் ஜாக் கிர்பி.

வெளிவந்தவுடன், அட்டகாச ஹிட்டாக மாறியது இந்த சீரீஸ். பயங்கர நல்லவர்களாக இல்லாமல், சாதாரண மனிதர்களாக இருந்த இந்தக் கதாபாத்திரங்கள், காமிக்ஸ் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தன. அக்காலகட்டம் வரை (1956), அமெரிக்க காமிக்ஸ் உலகின் முடிசூடா மன்னனாக விளங்கியது, DC காமிக்ஸ் நிறுவனம்தான். ஆனால், தொடர்ந்து ஸ்டீரியோடைப் நல்ல ஹீரோக்களையே உற்பத்தி செய்துவந்ததால், அந்நிறுவனம் ஒருவித மந்தநிலையில் விளங்கிவந்த நேரத்தில், லீயின் கதாபாத்திரங்கள் புயலைப் போல் காமிக்ஸ் மார்க்கெட்டில் நுழைந்தன. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவையும் பெற்றன.

காமிக்ஸ் ரசிகர்களுக்கு இப்போது ஒரு கேள்வி எழலாம். DC காமிக்ஸ் என்றாலே டக்கென்று நினைவு வருவது Batman ஆயிற்றே? பேட்மேன் கூடவா DC காமிக்ஸை காப்பாற்ற முடியவில்லை?


பேட்மேன், பாப் கேனால் 1939லேயே உருவாக்கப்பட்டு, ஐம்பதுகளில் இன்றியமையாத ஒரு கதாபாத்திரமாக இருந்துவந்தது. ஆனால், இந்தக் காலகட்டத்தில், தொடர்ந்து ராபினோடு சேர்ந்து பேட்மேன் செய்த சாகசங்களால், பேட்மேனும் ராபினும் gayக்கள் என்று ரசிகர்கள் நகைச்சுவையாகக் குறிப்பிடும் அளவு அந்தக் காமிக்ஸ் மாறிவிட்டிருந்தது. ஆகையால், Batwoman (1956) போன்ற கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டு, இந்த இமேஜை மாற்றுவதற்காக எத்தனம் செய்யப்பட்டுவந்த காலம் அது. என்ன செய்தாலும், பேட்மேனின் வீழ்ச்சியைத் தடுக்க முடியவில்லை. இந்த வீழ்ச்சி, 1986ல், ஃப்ராங்க் மில்லர் ‘The Dark Knight Returns‘ வெளியிட்டபின்னர்தான் மாறியது. அது வேறு கதை. இப்போது வேண்டாம்.


ஆக, ஸ்டான் லீ ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் காமிக்ஸ் உலகில் முடிசூடா மன்னராக விளங்கினார் என்பது வரலாறு. அப்போது லீ செய்த இன்னொரு காரியம், காமிக்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பிற கலைஞர்கள் இவரை நன்றியோடு நினைத்துப் பார்க்கவும் காரணமாக இருந்தது. காமிக்ஸ் தயாரிக்கும்போது எழுத்தாளர், ஆர்டிஸ்ட்  ஆகிய இருவர் மட்டுமல்லாது, வண்ண இங்க்களைப் பதிப்பவர், லெட்டரர் எனப்படும் எழுத்துக்களை ஒழுங்குபடுத்தி வசன பலூனுக்குள் பொருத்துபவர் ஆகியவர்களின் உழைப்பும் சம அளவில் இருந்துவந்தது. ஆனால், ஐம்பதுகளின் இறுதிவரை, வசனகர்த்தா மற்றும் ஆர்டிஸ்ட் ஆகியவர்களின் விபரங்களே காமிக்ஸின் creditsல் வெளியிடப்பட்டு வந்தன. இந்த முறையை மாற்றி, Creditsகளில் இங்க்கர் மற்றும் லெட்டரர்களின் விபரங்களும் இடம்பெறுமாறு செய்தார் ஸ்டான் லீ. இது மட்டுமல்லாது, மார்வெலின் (ஆம். 1961ல், அட்லஸ் காமிக்ஸ் என்பது மார்வெல் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது) நிர்வாகக் குழுமத்தில் நடைபெறும் மீட்டிங்குகள், இனிவரப்போகும் கதைகளின் ட்ரெய்லர்கள் ஆகியவைகளையும் காமிக்ஸ்களில் இடம்பெறச் செய்தார் லீ. இது, அப்போதைய காலகட்டத்தில் ஒரு வெல்கம் சேஞ்சாக அமைந்தது.

லயனின் ‘ஹாட்லைன்’ போல, ஸ்டான் லீயின் பத்தி, ஒவ்வொரு காமிக்ஸிலும் இடம்பெற்றது. அதன் பெயர்: Stan’s Soapbox. அந்தக் காலகட்டத்தில், தனது வேலைப்பளுவின் காரணமாக, பழைய காமிக்ஸ் தயாரிப்பு முறை ஒன்றை தூசிதட்டி எடுத்தார் லீ. அதன் பாப்புலாரிட்டி காரணமாக, ‘Marvel Method‘ என்றே புகழடைந்தது அந்த முறை. ஒவ்வொரு காமிக்ஸ் தயாரிப்பின்போதும், ஆர்டிஸ்டுடன் ஒரு மீட்டிங் போடுவார் லீ. அந்த மீட்டிங்கில், கதையின் ஒன்லைன் ரெடியாகிவிடும். கூடவே, கதையின் பிரதான சம்பவங்களும் (Plot Points??). இதன்பின், ஆர்டிஸ்ட் விரிவாக படங்களை வரைந்து லீக்கு அனுப்புவார் (storyboards). அதன்பின் லீ டயலாக் எழுதுவார். கூடவே, ஆர்டிஸ்டின் படங்களிலும் சில திருத்தங்கள் சொல்லுவார். அதன்பின் காமிக்ஸ் கடைசியாக ரெடியாகும். இதன்மூலம், ஆர்டிஸ்ட்களும் காமிக்ஸ் தயாரிப்பில் நேரடிப் பங்கு பெற்றனர் (இதனால், ஸ்பைடர்மேன் மற்றும் Fantastic Four திரைப்படங்களில், இணை உருவாக்கம் என்றுதான் லீயின் பெயர் இருக்கும். இவரோடு திரையில் இணை உருவாக்க Credits பெற்றது அப்போதைய காமிக்ஸ் ஓவியங்களை வரைந்த ஜாக் கிர்பி மற்றும் ஸ்டீவ் டிட்கோ).


இந்த முறையைப் பற்றி எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லாதபோதும், மிக மிக ஆச்சரியகரமாக, பீட்டர் ஜாக்ஸன், ‘லார்ட் ஆஃப் த ரிங்ஸ்’ படங்களை அச்சாக இதே முறையில்தான் உருவாக்கினார் என்பது ஆச்சரியகரமான தகவல்தானே?


இதன்பின் லீயின் வளர்ச்சி அபரிமிதமான ஒன்று. மார்வெல் காமிக்ஸின் தலைமைப் பொறுப்பிலும் அமர்ந்தார் லீ. மார்வெல் என்றாலே லீதான் ரசிகர்களுக்கு நினைவு வந்த அளவு பாப்புலர் ஆனார்.

தற்போது வாழ்க்கையை என்ஜாய் செய்துகொண்டிருக்கும் இந்த எண்பத்தொன்பது வயது கிழவர், இப்போதும் பல காமிக்ஸ் ஆர்வலர்களுக்கு கடவுள் ஸ்தானத்தில் இருந்து வருகிறார். பல படங்களிலும் ஜாலியாக முகத்தைக் காட்டி கௌரவ வேடங்களில் நடித்தும் இருக்கிறார் லீ.

சரி. லீக்கும் Avengersக்கும் என்னய்யா சம்மந்தம் என்று கேட்பவரா நீங்கள்? பொறுமை அவசியம் நண்பரே…

தொடரும் . . . .

பி.கு – இதில் உள்ள அனைத்து விபரங்களும் இணையத்திலிருந்தும் விகிபீடியாவிலிருந்தும் எடுக்கப்பட்டவையே. சொந்தமாக என் மூளையில் உதித்த தகவல்கள் அல்ல.

Facebook Comments

Sharing is caring!

Related Posts

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

8 Comments

 1. சந்தர்ப்பத்திற்கேற்ற பதிவு. நிறைய விடயங்கள் புதிது… மற்றவையையும் சீக்கிரம் எதிர்ப்பார்க்கிறேன்.

  ஸ்டான் லீயின் அமேஸிங் ஸ்பைடர்மேன் காமிக்ஸ் மட்டும் தொடராக 150க்கு மேல் வாசித்திருக்கிறேன். மற்றவை கிடைக்கவில்லை.

  //இதன்பின் லீயின் வளர்ச்சி அபரிமிதமான ஒன்று. மார்வெல் காமிக்ஸின் தலைமைப் பொறுப்பிலும் அமர்ந்தார் லீ. மார்வெல் என்றாலே லீதான் ரசிகர்களுக்கு நினைவு வந்த அளவு பாப்புலர் ஆனார்.//

  மிகவும் உண்மை. சிறுவயதில் நானும் இப்படித் தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

  Reply
 2. நல்ல கட்டுரை சார், நிறைய புதிய விஷயங்களை அறிந்துக்கொள்ள வழி செய்து விட்டது.மிக்க நன்றி.

  Reply
 3. சூப்பர் அருமையான மினி தொடர்…பல சுவையான விபரங்களை கொடுத்துள்ளீர்கள். அடுத்த பதிவை விரைவில் இடவும். எனக்கு பிடித்த சூப்பர் ஹீரோ spiderman. spiderman ஏதாவது சுவையான விபரங்கள் தெரிந்தாலும் பதியவும்

  Reply
 4. ஸ்டான் லீயோட வளர்ச்சி வாசிக்க வியக்க வைக்குது..
  ஒரே வாரத்தில் முடிந்து விடும் கட்டுரைத்தொடரா?? ஜாலி!

  Reply
 5. thala avuru ungala kizha veshathula patha mariye irukkuthu atanga stann- lee

  Reply
 6. @ ஹாலிவுட் ரசிகன், குமரன், லக்கி, JZ – மிக்க நன்றி நண்பர்களே..

  @ ஆள்தோட்ட பூபதி – இந்த நக்கல் தானே வாணாங்குறது 🙂

  @ Sathish – அடப்பாவி… ஏன் இந்த கொலைவெறி 🙂 … இருந்தாலும் பரவால்ல.. வயசான காலத்துல கெட்டப்புக்கு அலைய வேண்டாம்.. இதையே மெயின்டெயின் பண்ணிடுறேன் 🙂

  Reply
 7. அருமையான பதிவு….. அடுத்து பீட்டர் பாக்கர்(spider man) பத்தி சொல்லும்…..

  Reply

Join the conversation