திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 18

by Rajesh May 4, 2012   series

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

திரைக்கதை எழுதத் தேவையான அத்தனை விஷயங்களையும் இதுவரை பார்த்தாயிற்று. இனி, இந்த விஷயங்களை எப்படி இணைத்து, ஒரு திரைக்கதையை உருவாக்குவது என்று ஸிட் ஃபீல்டின் கூற்றைப் பார்ப்போம்.

Chapter 10 – The Scene

ஒரு கதை.

திரைக்கதையின் கதாநாயகி, தனது இளம் பருவத்தில், இளைஞன் ஒருவனைக் காதலிக்கிறாள். அவனும். இவர்களது காதல் வாழ்வு அருமையாக, ஒரு கவிதை போலச் செல்கிறது. ஆனால், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து, எல்லா ஏற்பாடுகளும் முடிந்த பின்னர், பதிவாளர் அலுவலகத்தில் காதலன் காத்திருக்க, அங்கு அப்போது வரவேண்டிய அந்தப் பெண் அவனை விட்டுவிட்டு மாயமாக மறைகிறாள். அவளது தொலைபேசி எண் மாற்றப்பட்டுவிடுகிறது. முகவரியும். அந்த ஊரிலேயே அவள் இல்லை. காதலன் வெறியனாக மாறுகிறான். அவனது உள்ளம் கல்நெஞ்சமாக மாறுகிறது. அவனும் ஊரைவிட்டு இந்தியாவின் வடபகுதிக்கு சென்றுவிடுகிறான். அந்தப் பெண்ணின் பெயர் – ஜெஸ்ஸி.

ஐந்தாண்டுகள் கழிகின்றன. கதாநாயகன், இப்போது வட இந்திய  எல்லையில் ஒரு முக்கிய புள்ளி (அவன் எப்படி அங்கே வந்தான் என்பதெல்லாம் ஃப்ளாஷ்பேக்கில் பார்த்துக்கொள்ளலாம். அது இப்போது முக்கியமில்லை). கதாநாயகனின் பெயர் – விக்ரம் என்று வைத்துக்கொள்ளலாம். விக்ரமால் யாரை வேண்டுமானாலும் உரிய ஆவணங்களோடு அண்டை நாட்டுக்குள் அனுப்ப முடியும். அதில் அவன் ஸ்பெஷலிஸ்ட். இப்படி இருக்கையில், அவனுக்கு ஒரு செய்தி வருகிறது. இந்தியாவில் உள்ள ஒரு சிறிய தீவிரவாத கும்பலின் தலைவன், அண்டை நாட்டுக்குள் சென்றே ஆக வேண்டும். மிக முக்கியம். இதற்காக அவனுக்குப் பெரும் பணம் தரப்படுகிறது. இரண்டு ஆவணங்கள் தயார் செய்ய வேண்டும். தலைவனுக்கும் அவனது மனைவிக்கும். இது ஏன் என்றால், இந்திய அரசாங்கமே, ஒரு ஸ்டிங் ஆபரேஷனுக்காக, தீவிரவாத கும்பலில் எப்போதோ ஊடுருவி அதன்  தலைவனாக இப்போது உருவாயுள்ள தனுஷ் என்றவனை அண்டை நாட்டுக்குள் அனுப்பி, அங்குள்ள தீவிரவாதிகளுக்கு இடையில் குழப்பம் விளைவிக்க முனைகிறது.

ஆவணங்களைத் தயாரிக்கிறான் விக்ரம். தனுஷ்ஷின் ஆவணங்களைப் படிக்கையில்தான், அவனது மனைவியின் பெயர் ஜெஸ்ஸி என்று விக்ரமுக்குத் தெரிகிறது. அப்பெயர், அவனுள் பல நினைவுகளைக் கிளறுகிறது. கட்.

தனுஷ் அண்டை நாட்டுக்குள் தப்பிக்கும் காலம் வருகிறது. தனுஷ் விக்ரமைச் சந்திக்கிறான். அவனுடன் வரும் அவனது மனைவி – விக்ரமின் பழைய காதலியான ஜெஸ்ஸி. அவளைப் பார்த்தவுடன், அவளைக் கொன்றே ஆகவேண்டும் என்ற வெறியில் துடிக்கிறான் விக்ரம். வஞ்சித்துவிட்டு ஓடியவளாயிற்றே. ஜெஸ்ஸி விக்ரமைப் பார்த்து திடுக்கிடுகிறாள். இருவரும் ஒருசில நிமிடங்கள் தனியாகச் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு. சீறும் விக்ரமிடம், அன்று ஏன் ஓடவேண்டி வந்தது என்பதைக் கண்ணீரின் மத்தியில் விவரிக்கிறாள் ஜெஸ்ஸி. இவளது கணவன் தனுஷ், இந்திய ராணுவத்தால் பயிற்றுவிக்கப்படுவதற்காக, இறந்துவிட்டதுபோல் ஒரு செட்டப் செய்துவிட்டு, சில வருடங்கள் காணாமல் போன காலத்தில்தான் விக்ரமைப் பார்த்திருக்கிறாள் ஜெஸ்ஸி. இறுதியில், பதிவாளர் அலுவலகத்துக்கு அவள் வந்துகொண்டிருக்கையில், தனுஷ் அவளை சந்திக்கிறான். தன்னுடன் வந்துவிடும்படி நிர்ப்பந்தித்து, அவளை அழைத்துக்கொண்டு சென்றுவிடுகிறான்.

இந்தக் கதையைக் கேட்கும் விக்ரமின் மனது, முதன்முறையாக இளகுகிறது. ஐந்து வருடங்களுக்குப் பின்னர் விக்ரமைப் பார்த்ததில் ஜெஸ்ஸிக்கும் சந்தோஷம். விக்ரம் அவளிடம் உருக்கமாகப் பேசியதில், அவள் குழப்பத்துக்கு உள்ளாகிறாள். கட்.

இப்போது தனுஷ் விக்ரமைச் சந்தித்துப் பேசுகிறான். அண்டை நாட்டுக்குள் நுழைவதில் பல ஆபத்துகள் இருக்கின்றன என்றும், தன்னுடன் ஜெஸ்ஸி வந்தால் அவளும் சாக நேரிடலாம் என்றும், இவர்களது பழைய காதல் பற்றித் தனக்குத் தெரியும் என்றும், விக்ரமும் ஜெஸ்ஸியும் சேர்ந்து வாழ்வதே நல்லது என்றும் சொல்கிறான். ஆகவே, மறுநாள் தனுஷ் அண்டைநாட்டுக்குத் தனியாகத்தான் செல்லப்போவதாக ஜெஸ்ஸியிடம் சொல்லி அவளது மனதை மாற்றுகிறான்.

க்ளைமாக்ஸ். தனுஷ் விக்ரமுடன் பக்கத்து நாட்டுக்குள் நுழைவதற்காக ரகசிய வழியில் செல்கிறான். எங்கும் துப்பாக்கிச் சத்தம். வீரர்கள். யாருக்கும் தெரியாமல் ரகசியமாக எல்லைக்குச் சென்றுவிடுகிறார்கள் மூவரும். தனுஷ்ஷை வழியனுப்பவே இவர்களுடன் வருகிறாள் ஜெஸ்ஸி. பக்கத்து நாட்டில் இருக்கும் விக்ரமின் ஏஜென்ட் மாறுவேடத்தில் தனுஷ்ஷை பிக்கப் செய்ய வந்திருக்கிறார். அவருடன் வண்டியில் தனுஷ் ஏறுகிறான். கடைசி முறையாக தனது மனைவியைப் பார்க்கிறான். அவன் கண்களில் கண்ணீர். ஜெஸ்ஸியும் அழுகிறாள். வண்டி கிளம்புகிறது.

அப்போது – சரேல் என்று ஜெஸ்ஸியின் கைகளில் அவளது ஆவணங்களைத் திணித்து, அவளையும் வண்டியில் ஏற்றுகிறான் விக்ரம். அவன் அப்போது சொல்லும் டயலாக் – ‘இன்னிக்கி நீ தனுஷ் கூட போகாததைப் பத்தி வருத்தப்படாம இருக்கலாம். ஆனா என்னிக்காவது ஒரு நாள் அவனை நினைச்சி வருத்தப்படுவ. அதுக்கப்புறம் தினமும். வாழ்க்கை பூரா. உன்னை அப்படிப் பார்க்கிறது, என் மனசை அறுத்துரும். நீ தனுஷ் கூட இருக்குறதுதான் எனக்கு சந்தோஷம் ஜெஸ்ஸி’. திரும்பிப் பார்க்காமல் இந்திய எல்லைக்குள் சென்று மறைகிறான் விக்ரம். ஜெஸ்ஸியின் வண்டி, மெதுவாக எழும் புகைக்குள் சென்று மறைகிறது.


கதை எப்படி? திராபையாக இருந்தால் என்னைத் திட்டாதீர்கள். ஏனெனில், ஆங்கிலத்தில் இன்றுவரை இறவாக்காவியமாக அமைந்த ‘Casablanca’ படத்தின் கதையைத்தான் நான் கொஞ்சம் கைமா பண்ணி நம்மூருக்கு ஏற்ற மாதிரி மாற்றியிருக்கிறேன் (கூடவே, குருதிப்புனல் தனுஷ் கதையையும் சுட்டுவிட்டேன்).

இப்போது, இந்தக் கதையைக் கவனியுங்கள். இதில் வரும் நாயகன் விக்ரம் என்ன செய்கிறான்? அவனுக்கு ஜெஸ்ஸியுடன் வாழவேண்டும் என்று இருந்தாலும், அதைவிட உயர்ந்த ஒரு நோக்கத்திற்காக (இந்திய ராணுவ ஆபரேஷன்) தனது காதலைத் தியாகம் செய்கிறான். இவனும் ஜெஸ்ஸியும் சந்தோஷமாக வாழ்வதை விட, இந்தியாவுக்காக அண்டை நாட்டில் உழைக்கப்போகும் தனுஷுக்கு பக்கபலமாக ஜெஸ்ஸி இருப்பதே முறை என்று முடிவு செய்து, நாட்டுக்காக காதலைத் தியாகம் செய்துவிடுகிறான் விக்ரம். இந்தப் படத்தின் உயிர்நாடியே இந்தத் தியாகம்தான். கூடவே, பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகமான ‘தியாக சிகரம்’ சொல்லும் செய்தியையும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அருள்மொழிவர்மன், தனது சிறிய தந்தையின்  புதல்வனான சேந்தன் அமுதன் என்ற மதுராந்தகனுக்காக தனது சிம்மாதன உரிமையைத் தியாகம் செய்து அழியாப் புகழ் பெற்றான் (ஆனால் இதன்பின்னர் மதுராந்தகன் விரைவிலேயே கைலாசம் சென்றதன் உட்காரணம் எனக்குத் தெரியாது).

ஆக, ஹீரோ  என்றால் நிஜமான ஹீரோவாக இருந்தான் விக்ரம். நிஜ ஹீரோவின் குணாம்சங்களில் ஒன்று – அவன் மாற்றமடைகிறான் (Transformation என்ற அருமையான ஆங்கில வார்த்தைக்கு ‘மாற்றம் ‘என்ற  தட்டையான தமிழ் வார்த்தைதான் யோசிக்கமுடிந்தது. வேறு எதாவது வார்த்தை இருக்கிறதா?). மாற்றமடைதலுக்கு இன்னொரு உதாரணம் – நாம் சென்ற அத்தியாயத்தில் பார்த்த மேட்ரிக்ஸ் கதாநாயகன் நியோ. சாதாரண மனிதனாக இருந்துவந்த அவன், ஒரு ஹீரோவாக இறுதியில் மாற்றமடைந்து, மனிதகுலத்தின் மேன்மைக்காகப் பாடுபடுகிறான் அல்லவா? அப்படி மாற்றமடைந்தவன்தான் நமது விக்ரமும். அவனைப்பொறுத்தவரையில் அவன் செய்தது தியாகம் அல்ல. நாட்டுக்காக அவனால் முடிந்த ஒரு சிறு முயற்சி. ஆனால், இந்தக் கதையைப் படிக்கும் நமக்கு அது தியாகமாகத் தெரிகிறது.

ஆங்கிலத்தில் Casablanca பார்த்த அனைவருக்கும் இந்தத் தியாகம் மனதை விட்டு அகலாத ஒரு உணர்வாக இருந்தது. இதனாலேயே படமும் பெருவெற்றி அடைந்தது. முக்கோணக்காதல் என்ற விஷயம் இந்தப் படத்துக்குப் பின்னர்தான் பிரபலமடைந்தது

ஆக, இந்தக் கதையை எடுத்துக்கொண்டால், விக்ரமின் மனதில் என்ன இருந்திருந்தாலும் சரி – அவனது செயலே  – action – இந்தக் கதையையும் அவனது உருவாக்கத்தையும் மக்களால் என்றும் நினைவுகொள்ளத்தக்க வகையில் ஒரு ஹீரோவாக மாற்றுகிறது.

இதைப்போன்ற நல்ல காட்சிகளே ஒரு திரைப்படத்தை மக்களின் மனதில் நிறுத்துகின்றன என்கிறார் ஸிட் ஃபீல்ட். ஒரு திரைப்படத்தைப் பற்றி நினைத்துப் பார்த்தால், அதன் காட்சிகள்தானே நமது மனதில் நிற்கின்றன? உதாரணத்துக்கு குருதிப்புனலை எடுத்துக்கொண்டால், அதன் க்ளைமேக்ஸ் காட்சி – ஆதிநாராயணன், தான் பயிற்றுவித்த தீவிரவாதியின் முகமூடி கிழிந்துவிடக்கூடாது  என்று முடிவுசெய்துதானே தன்னை சுடச்செய்கிறார்? இதுவும் தியாகம்தான். கதாபாத்திரம் ஹீரோவாக மாறுதல். இந்தக் காட்சியைத்தானே இப்போதும் ‘குருதிப்புனல்’ என்றவுடனே நம்மால் நினைவுகூர முடிகிறது? அதேபோல், அலைபாயுதே படத்தை எடுத்துக்கொண்டால், முழுப்படமுமா நமது நினைவில் வந்து நிற்கிறது? மாதவன் ரயிலில் ப்ரபோஸ் செய்யும் காட்சி, மருத்துவமனையில் நிகழும் அழுத்தமான க்ளைமேக்ஸ் போன்ற வெகு சில காட்சிகள்தானே நமது மனத்திரையில் நிழலாடுகின்றன?

இந்த ரீதியில், தற்போது வெளிவந்திருக்கும் ‘அவெஞ்சர்ஸ்‘ (click to read) திரைப்படத்தை எடுத்துக்கொண்டால், ஹல்க் வில்லனை அடி புரட்டியெடுக்கும் காட்சிதான் அனைவருக்கும் உடனடியாக நினைவு வரும் காட்சி. அதேபோல் உங்களுக்குப் பிடித்த எந்தப் படத்தை வேண்டுமானாலும் நினைத்துப்பாருங்கள். உடனடியாக எந்தக் காட்சி நினைவுவருகிறதோ, அந்தக் காட்சிபோன்ற சில காட்சிகள்தான் அந்தப் படத்தை உங்கள் மனதில் தங்கச்செய்கின்றன.

நல்ல காட்சிகள் தான் ஒரு திரைப்படத்தை மக்களது மனதில் நிறுத்துகின்றன என்பது ஸிட் ஃபீல்ட் நிறுவும் உண்மை.

இப்படிப்பட்ட காட்சிகளைத்தான் ‘ஸீன்’ என்ற சொல்லால் குறிக்கிறோம்.


ஒரு திரைக்கதையின் மிகமுக்கியமான பகுதியாக, ஸீன் என்பது விளங்குகிறது என்கிறார் ஸிட் ஃபீல்ட். திரைக்கதை என்பதை ஒரு கட்டிடமாக உருவகப்படுத்திக்கொண்டால், அந்தக் கட்டிடத்தின் ஒரு தனிப்பட்ட செங்கல்லே ஒரு ஸீன். எனவே, ஏதாவது ஒரு செங்கல்லை ஒரு குறிப்பிட்ட விதத்தில் அமைத்தால், அந்தக் கட்டிடத்தின் அமைப்பும் (மிக லேசாகவாவது) மாறுகிறது. இப்படியே, ஒரு ஸீனில் நாம் சொல்லும் ஏதோ ஒரு விஷயம், இறுதியாக அந்தத் திரைக்கதையின் போக்கையும் தீர்மானிக்கிறது. இப்படிப்பட்ட பல ஸீன்கள் சேர்ந்துதான் ஒரு திரைக்கதையை உருவாக்குகின்றன. இந்த ஸீன் எனப்படும் விஷயத்தில்தான் எப்போதும் எதுவாவது நடந்துகொண்டே இருக்கிறது. அதாவது, ‘குறிப்பிட்ட’ எதுவோ நடக்கிறது. இன்னும் விளக்கப்போனால், நமது கதை சம்மந்தப்பட்ட குறிப்பான சம்பவம் ஒன்று நடக்கிறது.

ஒரு ஸீனை எடுத்துக்கொண்டால், அதற்கு இரண்டு குறிக்கோள்கள் இருக்கின்றன என்கிறார் ஸிட் ஃபீல்ட்.

சொல்லப்படும் கதையை முன்னால் நகர்த்துவது  (அல்லது)
கதாபாத்திரத்தைப் பற்றிய செய்திகள் கொடுப்பது

இந்த இரண்டில் ஏதாவது ஒன்றையோ அல்லது இரண்டையுமோ பூர்த்தி செய்யாத ஸீன்கள் ஒரு திரைக்கதைக்கே தேவையில்லை என்று உறுதி செய்கிறார் ஸிட் ஃபீல்ட்.

ஒரு ஸீன் என்பது எப்படி இருக்கலாம்?

எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம். கதையைச் சொல்லும் ஒரு ஸீன்; ஒரு கார் சீறிப்பறக்கும் ஒரே ஒரு ஷாட்; மிக சிக்கலான ஒரு மூன்று பக்க வசனம்; ஒரு ஃப்ளாஷ்பேக்; பொறிபறக்கும் ஒரு சண்டை. இப்படி, நாம் அந்த ஸீன் எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறோமோ அப்படியெல்லாமே அந்த ஸீன் இருக்கலாம் என்பதே அதன் சிறப்பம்சம்.

நமது கதையே ஒரு ஸீன் எப்படி இருக்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது. கதையைச் சொல். பிறகு ஸீன்கள் தானாக உருவாகிக்கொண்டு போகும் என்பது ஸிட் ஃபீல்டின் கூற்று.

ஸிட் ஃபீல்டின் மாணவர்களைப் பொறுத்தவரையில், ஒரு குறிப்பிட்ட திரைப்படத்தின் முதல் அங்கத்தில் 20 ஸீன்கள் இருக்கின்றன என்றால், அவர்கள் எழுதப்போகும் திரைக்கதையிலும் அதேபோல் 20 ஸீன்கள் வரவேண்டும் என்று நினைப்பார்களாம். ஒருவேளை அப்படி வராமல், அந்த முதல் அங்கம் 15 ஸீன்களுடன் முடிந்துவிட்டால், பரபரப்பாக ஸிட் ஃபீல்டிடம் வந்து வருத்தப்படுவார்களாம். அப்போதெல்லாம் ஸிட் ஃபீல்ட் சொல்லும் ஒரே வாக்கியம்: “அதனால் என்ன?” என்பதே. வெறும் நம்பர்களை வைத்துக்கொண்டு ஒரு திரைக்கதையை உருவாக்கிவிடமுடியாது என்கிறார் அவர். இந்தப் புத்தகத்தில் அவர் சொல்லியிருக்கும் திரைக்கதை அமைப்பு (முதல் அங்கம் எவ்வளவு பக்கங்கள் இத்யாதி) என்பது வெறும் guide மட்டுமே. அதுவே சத்தியம் என்பது வேலைக்கு ஆகாது என்று அவரே சொல்கிறார். நமது கதையை மட்டும் நம்புவோம். கதையே இந்த ஸீன்களை விளக்கிவிடும் என்று மீண்டும் மீண்டும் இந்தப் புத்தகத்தில் அவர் அடித்துச் சொல்கிறார். திரைக்கதையமைப்பில் மூன்று அங்கங்கள் உள்ளன – ஆரம்பம், நடுப்பகுதி மற்றும் முடிவு. அவ்வளவே. மற்ற நம்பர்கள் எல்லாம் நமக்கு ஒரு reference மட்டுமே.

திரைக்கதையின் இரண்டு தளங்களைப் பற்றி ஸிட் ஃபீல்ட் அடுத்து விளக்குகிறார். அவை……

தொடரும் . . .

Facebook Comments

Sharing is caring!

Related Posts

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

7 Comments

 1. //இந்த இரண்டில் ஏதாவது ஒன்றையோ அல்லது இரண்டையுமோ பூர்த்தி செய்யாத ஸீன்கள் ஒரு திரைக்கதைக்கே தேவையில்லை//

  சார், அப்ப வேகமாகச் செல்லும் திரைக்கதையை குறைத்து நடுநிலைப்படுத்த / பொழுதுபோக்குக்காக போடப்படும் நகைச்சுவை சீன்களெல்லாம் தேவையில்லாதவைதானா?

  Reply
 2. //அப்ப வேகமாகச் செல்லும் திரைக்கதையை குறைத்து நடுநிலைப்படுத்த / பொழுதுபோக்குக்காக போடப்படும் நகைச்சுவை சீன்களெல்லாம் தேவையில்லாதவைதானா?// – ஸிட் ஃபீல்டைக் கேட்டா வேணாம்னு தான் சொல்லுவாரு. ஏன்னா, ஹாலிவுட் திரைக்கதை வடிவம் மிகக் கச்சிதமானது. மூன்று வடிவங்கள் உள்ள ஸ்ட்ரக்சர் அது. தமிழ்ல, மணிரத்னத்தின் பல படங்கள் இந்த மாதிரி எடுக்கப்படுபவையே. லேட்டஸ்டா, ஆரண்ய காண்டம். இந்த நடுவுல ரெண்டு ஜோக், நாலு பாட்டு, மூணு ஃபைட் இதெல்லாம் இந்திய திரைவடிவம். அதன் இன்றியமையாத அம்சங்கள். நம்மால் இந்த வடிவம் ஒரு பயங்கர குழப்பமான நிலையை இப்போ வந்து அடைஞ்சிருக்கு. மசாலா என்ற கருத்தை வைத்து எடுத்தாலும், அதுலயும் பக்கா க்வாலிட்டி இருக்கணும் (சத்யா, ஆரண்யகாண்டம், நாயகன்) என்பது ஸிட் சொல்லும் முறை. அதே மசாலா என்ற மேட்டரை வைத்து, நீங்க சொன்ன மாதிரி வடிவமே இல்லாம சும்மா காமெடி டயலாக் வெச்சே நிரப்புறதும் இங்க ஓடிக்கிட்டு இருக்கு. ரெண்டும் தப்பில்லை தலைவா.. அவங்கவங்களுக்கு எப்படி எடுக்கணுமோ அப்புடி எடுத்துக்கட்டும் 🙂

  Reply
 3. ரொம்ப டைட்(“அந்த” டைட் இல்ல வேலை டைட்) வர முடிவதில்லை.இருந்தாலும் அடிக்கடி இங்கே வர முயற்சிக்கிறேன்!
  அடங்கப்பா அதற்குள் எவ்வளவு விமர்சனங்கள் விளக்கங்கள் கட்டுரைகள்..கண்டின்யூ….
  அப்புறம் தனுஷ் வேறு நாட்டுக்கு போறார்னு சொன்னதும் யப்பா கொசுத்தொல்ல ஒன்ஜுது என நினைக்கும்போது அதை கதைன்னு சொல்லி கடுப்பேத்துரீங்க .
  காசாப்லான்காவை தழுவி A good German எடுக்கப்பட்டதை சொல்லவே இல்லை!

  Reply
 4. நல்ல மொழி நடையில் பகிர்ந்நிருக்கிறீர்கள்… மிக்க நன்றிகள்… சகோ

  Reply
 5. aangila padaththai nallaa paarpeenga pola!

  nalla mozhi maatram!

  Reply

Join the conversation