திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 19

by Rajesh May 20, 2012   series

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

Chapter 10 – The Scene (Contd…)

சென்ற கட்டுரையில், ஸீன் என்பதன் பொதுவான அம்சங்கள் சிலவற்றைப் பார்த்தோம். இந்தக் கட்டுரையில், இன்னமும் கொஞ்சம் விரிவாக ஸிட் ஃபீல்ட் விளக்கும் விஷயங்களை நோக்கலாம்.

ஸீன் என்பதை, இரண்டு நோக்கங்களோடு நாம் அணுகப்போகிறோம் என்கிறார் ஸிட் ஃபீல்ட். அவையாவன:

 1. ஸீனின் பொதுவான வடிவம்.
 2. ஸீனை உருவாக்கும் விதம் – ஸீனினுள் இருக்கும் அம்சங்களிலிருந்து (கதாபாத்திரங்கள், இடங்கள், பொருட்கள்) எப்படி ஒரு ஸீனை உருவாக்குவது?

முதலில், ஸீனின் வடிவம். நாம் எழுதும் ஒவ்வொரு ஸீனிலும் இரண்டு விஷயங்கள் இருந்தேயாக வேண்டும். அவை இருந்தால்தான் அது ஸீன் என்று அழைக்கப்படும். இந்த இரண்டு விஷயங்கள்தான் ஸீனின் நிகழ்வுகளில் ஒத்திசைவைக் கொண்டுவருகின்றன. அந்த இரண்டு விஷயங்கள்:

இடம் மற்றும் காலம்.

ஒவ்வொரு ஸீனும் ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட காலத்தில் நடக்கிறது.உங்கள் ஸீன் எங்கே நடக்கிறது?

ஒரு மருத்துவமனையிலா? ஒரு பள்ளியிலா? ஒரு மலையுச்சியிலா? ஒரு மழைக்கால கடற்கரையிலா? ஒரு மார்க்கெட்டிலா? ஒரு வீட்டுக்குள்ளா? ஸீனின் லொகேஷன் – அதாவது, இடம் – என்ன? ஏதாவது இடத்தின் உள்ளே நடக்கிறதா அல்லது வெளியிலா? உள்ளே நடக்கிறது என்றால் INT. (அல்லது) ‘உள்’ என்றும், வெளியே நடைபெற்றால் EXT. (அல்லது) ‘வெளி’ என்றும் எழுதுங்கள் என்கிறார் ஸிட் ஃபீல்ட் (இந்த ‘உள்’ ‘வெளி’ போன்ற வார்த்தைகள் நமது இஷ்டம்தான். பொதுவாக ஆங்கில திரைக்கதைகளில் எப்போதுமே INT. அல்லது EXT. ஆகியவை உள்ளே வெளியே என்ற இடங்களை விளக்கப் பயன்பட்டாலும், தமிழில் இப்படிப்பட்ட இடங்களைக் குறிப்பதற்கு இன்னமும் யாரும் எந்த வார்த்தைகளையும் திரைக்கதை அமைப்பில் விளக்கி, பாடமாக வைத்திருக்கவில்லை. ஆகையால், நமது இஷ்டத்துக்கு இந்த வார்த்தைகளை உபயோகப்படுத்தலாம். என்ன? இறுதியில் திரைக்கதையைப் படிக்கும்போது, ஸீன் நடப்பது உள்ளேயா அல்லது வெளியிலா என்பது, இந்த வார்த்தைகளைப் படித்ததும் புரிந்தால் சரி).

‘இடம்’ என்பதைப் பார்த்தாயிற்று. அடுத்து, ‘காலம்’.

உங்கள் ஸீன் நடப்பது பகலிலா இரவிலா அல்லது மாலையிலா அல்லது மதியத்திலா அல்லது பின்னிரவா அல்லது முன்னிரவா அல்லது ரெண்டுங்கெட்டான் நேரத்திலா? பல சமயங்களில், மிகவும் குறிப்பாக, ‘மதியத்தின் வெயில் மெல்ல விடைபெற்றுக்கொண்டிருந்த மாலையின் துவக்கம் நேரும் முன்னர்’ என்றெல்லாம் ஒரு காலத்தை நீங்கள் உணர்த்த முயற்சிக்கலாம். ஆகவே, கதை நிகழும் வேளையை குறிப்பாக எழுத வேண்டும். அந்தந்த வேளைக்கு ஏற்ப ஒளியை அமைக்க வேண்டுமல்லவா? அதுவும் ஒரு காரணம் என்கிறார் ஸிட். ஆகவே, பகல் அல்லது இரவு அல்லது குறிப்பான வேளையை எழுத வேண்டும்.

எனவே, ஒரு திரைக்கதையின் ஒரு ஸீன், இப்படி ஆரம்பிக்கிறது.

INT. BEDROOM – NIGHT (அல்லது) EXT. MARKET – DAY 

(இங்கே கேபிடல் எழுத்துகளில் கொடுத்திருப்பது, ஆங்கில திரைக்கதை எழுதும் முறை. இடங்கள், பெயர்கள், காலம் போன்றவற்றை கேபிடல் எழுத்துக்களிலேயே எழுதுவதே அங்கே வழக்கம்)

இதுதான் ஒரு ஸீனின் ஆரம்ப வரியாக இருத்தல் வேண்டும். அப்போதுதான், அதனைப் பார்த்தவுடன், தெளிவாக கேமராவை வைத்தல், லைட்டிங் அமைத்தல் ஆகியவையெல்லாம் சாத்தியப்படும்.

இடம் மற்றும் காலம் ஆகிய இந்த இரண்டுதான் ஒரு ஸீனின் வடிவத்தின் இன்றியமையாத அம்சங்கள். ஒரு ஸீனை எழுதத் துவங்குமுன்னர், இந்த இரண்டும் தெளிவாக நமக்குத் தெரிந்திருக்கவேண்டும். இடத்தையோ காலத்தையோ மாற்ற நேர்ந்தால், அது ஒரு புதிய ஸீனாக ஆகிறது. ஏன்? ஒவ்வொரு முறையும் இந்த இரண்டில் எதுவாவது மாற்றப்படும்போது, கேமரா, லைட்டிங், படப்பிடிப்புக் கருவிகள் ஆகிய அனைத்தையுமே ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு மாற்ற நேர்வதால்.

ஒரு உதாரணமாக, இதோ இந்த சிச்சுவேஷனை எடுத்துக்கொள்ளலாம்.

படத்தின் நாயகனும் நாயகியும், சமையலறையில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எதுவோ காரசாரமான விவாதம். நாயகியைத் திட்டுகிறான் நாயகன். திட்டியபடியே சமையலறையிலிருந்து வெளியே வரவேற்பறைக்கு வருகிறான். நாயகியும் அவனைப் பின்தொடர்கிறாள். அங்கே விவாதம் உச்சத்துக்குச் சென்று, நாயகியை அறைந்துவிடுகிறான் நாயகன். அதன்பின் விறுவிறுவென்று வீட்டுக்கு வெளியே வராந்தாவுக்கு வந்து, அங்கே ஒரு நாற்காலியில் அமர்ந்துகொள்கிறான்.

மேலே விளக்கப்பட்ட உதாரணத்தில் எத்தனை ஸீன்கள் இருக்கின்றன?

ஒரு ஸீன்தான் இருக்கிறது என்று நீங்கள் பதிலளித்தால், அது தவறு. உண்மையில் மேலே மூன்று ஸீன்கள் இருக்கின்றன.

சமயலறையில் பேசிக்கொள்ளும் ஸீன்.
வெளியே வரவேற்பறையில் நடக்கும் ‘அறை’ ஸீன்
வராந்தாவில் கதாநாயகன் சென்று அமரும் ஸீன்.

ஏன் மூன்று ஸீன்கள் என்பது புரிகிறதல்லவா? ‘இடம்’ என்பது இங்கே மாறுகிறது. சமையலறை என்பது ஒரு இடம். வரவேற்பறை என்பது மற்றொரு இடம். அதேபோல், வராந்தாவும் இன்னொரு இடம். இந்த ஒவ்வொரு இடத்திலும் கேமராவை வைக்கவேண்டுமே?

இன்னொரு உதாரணம். இரவு நேரம். இப்போது, வராந்தாவில் இரண்டு நாற்காலிகள். கதாநாயகனும் நாயகியும் அவற்றில் அமர்ந்துகொண்டு, பேசிக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். கேமரா அப்படியே மேலே செல்கிறது. நிலாவைப் பார்க்கிறோம். நிலா அப்படியே சூரியனாக மாறுகிறது. கேமரா கீழே வருகிறது. அதே இடம். அதே வராந்தா. அதே நாற்காலிகள். அதே இரண்டு கதாபாத்திரங்களும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

இதில் எத்தனை ஸீன்கள் இருக்கின்றன?

ஒரே இடம்தான் காட்டப்படுகிறது. இரண்டே கதாபாத்திரங்கள். ஆனால், காலம் மட்டும், இரவிலிருந்து பகலுக்கு மாறுகிறது. அப்படியென்றால், இது ஒரே ஸீனா அல்லது இரண்டா?

சந்தேகமே இல்லை. இரண்டு ஸீன்கள்தான். காரணம், ‘காலம்’ என்பது மாறிவிட்டது அல்லவா? இரவிலிருந்து பகலுக்கு காலம் மாறும்போது, மறுபடியும் லைட்டிங்கை அதற்கேற்றவாறு அமைக்கவேண்டுமே?

(இந்த இடத்தில் ஒரு விளக்கம். கேமராவை மாற்றுவதுதான் ஒரு ஸீனுக்கும் மற்றொரு ஸீனுக்கும் வித்தியாசம் என்றால், ஒவ்வொரு ஷாட்டுமே ஒரு ஸீன்தானே என்று குதர்க்கமாக வாதம் செய்யக்கூடாது. கேமராவின் இடத்தை மாற்றாமல் படமாக்குவதே ஒரு ஷாட். ஒரு ஸீனில் இப்படிப்பட்ட பல ஷாட்கள் இருக்கலாம். அப்படியென்றால், ஒரு ஸீன் என்பதன் விளக்கம் என்ன? திரைக்கதையில் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நடப்பதை விளக்கும் ஷாட்களின் தொகுப்பே ஒரு ஸீன். வங்கிக்கொள்ளை என்பது ஒரு ஸீன். திருமணம் நடப்பது என்பது ஒரு ஸீன். காரசாரமான விவாதம் என்பதும் ஒரு ஸீன்தான். ஆனால், ஒரே விஷயம் என்னவென்றால், ஒரு நிகழ்ச்சியை விவரிக்கும்போது, அது நடைபெறும் இடமோ காலமோ அல்லது இந்த இரண்டுமோ திரைக்கதையில் மாறிவிட்டால், அது வேறு ஸீன். உதாரணத்துக்கு, வங்கியைக் கொள்ளையடித்துவிட்டு வெளியே வந்தால், அது வேறு ஒரு ஸீன்).

ஸிட் ஃபீல்ட் ஒரு அருமையான உதாரணம் கொடுக்கிறார். ஒரு மலைப்பாதையில் கார் ஒன்று செல்வதை நாம் காட்ட விரும்பினால், அதனை ஒரே ஷாட்டில் காட்டிவிடலாம். அல்லது, அந்த மலைப்பாதையின் பல லொகேஷன்களில் அந்தக் கார் செல்வதை விதவிதமாகக் காட்டலாம். அப்படி விதவிதமாகக் காட்டும்போது, அந்த ஒவ்வொரு காட்சியும் ஒரு ஸீன். ஏனெனில், அந்தக் கார் சென்றுகொண்டிருக்கும் இடம் மாறிக்கொண்டே இருக்கிறது அல்லவா?

ஒவ்வொரு ஸீனுக்கும் கேமராவை மாற்றும் அவசியம் இருப்பதால்தான் படப்பிடிப்பு என்பது ஒரு காஸ்ட்லி விஷயமாக இருக்கிறது என்கிறார் ஸிட். கேமராவை மட்டுமன்றி, அத்தனை படப்பிடிப்புக் கருவிகளையும் மாற்றவேண்டும் அல்லவா? சில வருடங்களுக்கு முன்புவரை, ஹாலிவுட்டில் ஒரு திரைப்படத்தைப் படமாக்க, ஒரு நிமிடத்திற்கு 10,000 டாலர்களோ அல்லது அதற்கு மேலோ செலவாகிக்கொண்டிருந்தன. ஒரு நிமிடத்திற்கே இத்தனை!

ஸீனின் பொதுவான வடிவமாகிய இடம் மற்றும் காலம் ஆகியவற்றைப் பார்த்துவிட்டோம். அடுத்து, ஒரு ஸீனை எப்படி உருவாக்குவது என்று ஸிட் ஃபீல்டின் கருத்தைப் பார்க்கலாம்.

நாம் சொல்லப்போகும் கதையைப் பொறுத்து, ஒரு ஸீனை எப்படி வேண்டுமானாலும் உருவாக்கலாம். ஆரம்பம், நடுப்பகுதி மற்றும் முடிவு ஆகிய கட்டமைப்பை முக்கியமாக வைத்து ஒரு ஸீன் உருவாக்கப்படுவது ஒருவிதம். அதாவது, ஒரு கதாபாத்திரம் ஒரு இடத்தில் நுழைகிறது. அங்கே அந்த ஸீன் நடைபெறுகிறது. அதன்பின் அந்த இடத்தில் இருந்து அந்தக் கதாபாத்திரம் வெளியேறுகிறது. ஒரு உதாரணமாக, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், கொலை நடந்த ஒரு வீட்டில் நுழைகிறார். அங்கே இருப்பவர்களிடம் விசாரணை செய்கிறார். அதன்பின் அங்கிருந்து வெளியேறுகிறார். இது ஒருவகை.

அல்லது, ஃப்ளாஷ்பேக் மூலமாகவும் ஒரு ஸீனைக் காண்பிக்கலாம். ஒரு ஸீனை ஆரம்பித்துவிட்டு, ஃப்ளாஷ்பேக்குக்கு கட் செய்துவிட்டு, அதன்பின் மறுபடியும் நிகழ்காலத்தைக் காண்பித்து அந்த ஸீனை முடிக்கலாம். உதாரணத்துக்கு, இப்படிக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.

ஒரு பெண், டிபார்ட்மெண்டல் ஸ்டோரிலிருந்து வேகமாக ஓடிவந்து, ஒரு காரில் ஏறுகிறாள். கார் அவசரமாகக் கிளம்புகிறது. காரினுள் இருக்கும் தோழி, என்ன நடந்தது என்று கேட்கிறாள். ஃப்ளாஷ்பேக் ஆரம்பிக்கிறது. டிபார்ட்மெண்டல் ஸ்டோரில், துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கிறாள் முதல் பெண். அவள் துப்பாக்கியை நீட்டிக்கொண்டிருக்கும் காட்சியில் இருந்து கேமரா மெல்ல மெல்ல பின்னால் வருகிறது. இறுதியில், ஒரு தொலைக்காட்சியில் தெரியும் இந்தக் காட்சியின் வழியாகப் பின்னால் வரும் கேமராவினால், அந்த வீடியோவை போலீஸ் அதிகாரிகள் போட்டுப்பார்த்துக்கொண்டிருப்பதை அறிகிறோம். காட்சி முடிகிறது (Thelma & Louise படத்தின் ஒரு காட்சி இது).

எனவே, ஒரு ஸீனை உருவாக்குவதில் எந்த விதியும் இல்லை. ஸிட் ஃபீல்ட் கொடுக்கும் ஒரு டிப்ஸ் என்னவெனில், எந்த ஒரு ஸீனையும் ஆரம்பம், நடுப்பகுதி & முடிவு என்று பிரித்து விபரமாக எழுதிக்கொண்டு, அவற்றிலிருந்து குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் படமாக்கலாம். அதாவது, ஆரம்பத்தின் கடைசிப்பகுதி; நடுப்பகுதி முழுதும்; இறுதியின் ஆரம்ப சில நிமிடங்கள் இப்படி. அல்லது, இதையே வேறுமாதிரி மாற்றியும் படமாக்கலாம். இந்த வகையில், ஒரு ஸீனின் வேகம் அதிகரிக்கும்.

எந்த ஒரு ஸீனிலும், கதையின் ஒரு விஷயத்தையாவது ஆடியன்ஸுக்கு விளக்கவேண்டும் என்கிறார் ஸிட் ஃபீல்ட். அதாவது, கதை எங்கே சென்றுகொண்டிருக்கிறது என்பது, ஸீனின் மூலம் புரியவேண்டும். கதைக்கு சம்மந்தமில்லாத விஷயங்கள் காட்டப்படக்கூடாது.

பொதுவாக, இரண்டு விதமான ஸீன்களை நாம் பார்க்கலாம். விஷுவலாக எதாவது நடக்கும் ஸீன்கள் – ஆக்‌ஷன் காட்சிகள் இந்த வகையில் அடங்கும் – மற்றும் டயலாக் ஸீன்கள். பல ஸீன்கள், இவற்றின் காம்பினேஷனாக இருக்கின்றன. ஆக்‌ஷன் காட்சிகளில் சிறிது டயலாக் நடப்பதும், விரிவான டயலாக் காட்சிகளில் சிறிது ஆக்‌ஷன் நடப்பதுமாக.

திரைக்கதையின் ஒரு பக்கம், திரைப்படத்தின் ஒரு நிமிடம் என்பதை நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். ஆகவே, ஒரு டயலாக் காட்சியில், அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று பக்கங்கள் திரைக்கதை எழுதினால் போதுமானது. அதற்குமேல் இருந்தால், ஆடியன்ஸின் பொறுமையை அது சோதிக்கும். அதேபோல், இத்தகைய இரண்டு மூன்று பக்க டயலாக் காட்சிகளிலும், பின்னணியில் விறுவிறுப்பான ஆக்‌ஷன் நடப்பதாகக் காட்டமுடியும். அப்படி செய்தால், அந்தக் காட்சி அட்டகாசமாக இருக்கும். உதாரணம்:Collateral படத்தின் பல காட்சிகள், மாக்ஸ் மற்றும் வின்ஸெண்ட்டுக்குள் நடக்கும் விவாதங்களே. இந்தக் காட்சிகளிலெல்லாம், மாக்ஸ் டாக்ஸி ஓட்டும் விஷயமும் பின்னணியில் இருக்கும். அதனாலேயே அந்தக் காட்சிகளின் விறுவிறுப்பும் அதிகரிக்கும்.

ஸீன் என்ற அமைப்பினுள், எப்போதும் எதாவது நடந்துகொண்டே இருக்கிறது. அதாவது, ஒரு கதாபாத்திரம் எதாவது முடிவு எடுக்கிறது. அல்லது இன்னொரு கதாபாத்திரம், உணர்ச்சிவயமான சூழலில் திருந்துகிறது. இப்படி, எப்போதும் எதாவது நடந்துகொண்டே இருப்பதால், நமது கதையும் முன்னோக்கி நகர்கிறது. அந்த ஸீனே ஒரு ஃப்ளாஷ்பேக்காக இருந்தால்கூட, திரைக்கதை எப்படியும் முன்னோக்கித்தானே நகர்கிறது? இதுதான் ஒரு ஸீனின் நோக்கமாக இருக்கவேண்டும் என்கிறார் ஸிட் ஃபீல்ட்.

ஓகே. ஸீன் பற்றிய அனைத்து முக்கியமான விஷயங்களையும் பார்த்தாயிற்று. அடுத்து? ஸீனை உருவாக்குவதுதான்.

தொடரும் . . .

Facebook Comments

Sharing is caring!

Related Posts

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

7 Comments

 1. Me the first………..(இந்த வசனத்த ரொம்ப நாளா சொல்ல நினைச்சேன்!இன்னக்கிதான் முடிஞ்சது!!)

  Reply
 2. இந்த கட்டுரையை படிக்கையில் “எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலில் ராதா தவறவிட்ட குடம் மைசூர் அரண்மனை படிக்கட்டுகளில் உருள்வதை திரையரங்கில் பார்த்தபோதுதான் திரைப்படம் என்றால் என்ன என்று எனக்கு புரிந்தது” என்று இயக்குனர் பாலா சொன்னதுதான் எனக்கு நினைவில் வந்தது. ஸீன் அப்படின்னா என்னன்னு எங்களுக்கும் இப்போ ரொம்ப நல்லா புரிஞ்சது……..

  Reply
 3. //திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ // இது என்னடா மொக்க topicநு இவ்ளோ நாளா படிக்கலை… இன்னைக்கு வேற விதியில்லாம படிச்சேன்…
  Very nice… இதுல இவ்ளோ விஷயம் இருக்கா!!!!!!!! மத்த Chaptersயும் படிச்சிடறேன்….

  Reply
 4. //இது என்னடா மொக்க topic/// ??????

  Enna koduma saravanan!!!!!!!!!!!

  Reply
 5. //Enna koduma saravanan!!!!!!!!!!!
  // amam enna kodumai idhu… saravanan badhil sollunga….

  Reply
 6. இன்றுதான் இந்த ஸிரீஸை பார்த்தேன். விரைவில் முழுதும் படிக்க வேண்டும். Nice One!! Pls Continue!!

  Reply
 7. நான் தினகரன் பார்த்து தான் இந்த வலை பதிவை பார்த்தேன் மிக நன்று.
  திரைக்கதை எழுதுவது இப்படி சூப்பர். இதை வார் ஆப் த ரிங் போல் மின்புத்தகமாக வெளியிட்டால் மிக நன்றாக இருக்கும்.

  Reply

Join the conversation