மெதட் ஆக்டிங் என்றால் என்ன? -2- ஸ்ட்ராஸ்பெர்க் & ஸ்டெல்லா அட்லர்

by Rajesh March 5, 2013   Cinema articles

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

‘Acting is relaxation for me. I understand what the director wants more than he does himself’ – Lee Strasberg

சென்ற கட்டுரையில் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி பற்றியும், அவர் வடிவமைத்த நடிப்பு இலக்கணம் பற்றியும் பார்த்தோம். ஆனால், குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவெனில், ஸ்டானிஸ்லாவ்ஸ்கி, அவர் உருவாகிய முறைமைக்கு ‘system’ என்றே பெயரிட்டார். அவர் இந்த முறையை உருவாக்கி பல ஆண்டுகள் கழித்துதான் மெதட் ஆக்டிங் என்ற பதம் உருவாக்கப்பட்டது.

இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கும்போது ஒரு சுவையான தகவல் பார்க்கலாம். ‘காட்ஃபாதர் 2’ திரைப்படம் 1974ல் வெளிவந்தது தெரியுமல்லவா? இந்தப் படத்தில் நடித்ததற்காக, ‘சிறந்த துணை நடிகர்’ பிரிவில் இருவர் நாமினேட் செய்யப்பட்டனர். அந்த இருவரில் ஒருவர் குரு. இன்னொருவர் அந்த குருவின் சிஷ்யர். ஒரே சமயத்தில் ஒரே படத்துக்காக நாமினேட் செய்யப்பட்ட இந்த குரு-சிஷ்ய ஜோடியில் பரிசை இறுதியில் வென்றது – குருவல்ல. சிஷ்யரே குருவையும் விஞ்சி நடித்தமைக்காக சிறந்த துணை நடிகர் பரிசை வென்றார்.

அந்த சிஷ்யரின் பெயர் – ராபர்ட் டி நீரோ. அவரது குருநாதர், டி நீரோவுக்கு மட்டுமல்லாமல் அல் பசீனோ, மர்லின் மன்றோ, ஜேம்ஸ் டீன், டஸ்டின் ஹாஃப்மேன், பால் ந்யூமேன் போன்ற ஒரு டஜன் நடிகர்களுக்கு குருவாக விளங்கினார். ‘ஹாலிவுட்டில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்’ என்ற புகழுக்கு சொந்தக்காரர். மர்லின் மன்றோ இறந்த சமயத்தில், அவரது உயிலின்படி அவரது சொத்துக்களில் 75 சதவிகிதத்தை இந்த நபருக்கு எழுதி வைத்தார். காரணம் – ‘அவர் எனக்கு ஒரு தந்தையைப் போல. அவரிடம் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். நான் புகழின் உச்சியை அடைய முழுமுதல் காரணம் இவர்தான்’ என்று சொல்லியிருக்கிறார் மன்றோ.

அவர்தான் லீ ஸ்ட்ராஸ்பெர்க்.

’ஸ்டானிஸ்லாவ்ஸ்கி அவரது சிஸ்டத்தை உருவாக்கிக்கொண்டிருந்த வருடத்தில்-1901-புட்ஸானோவ் என்ற ஊரில் (தற்போது புடானோவ் என்று அழைக்கப்படும் உக்ரேனிய ஊர்) பிறந்தது ஒரு குழந்தை’ என்று செண்டிமெண்டலாக (என்னுடைய டெம்ப்ளேட்படி) இந்தப் பகுதியை ஆரம்பிக்கலாமா என்று யோசித்தேன். அது சரிவராது என்பதால், லீ ஸ்ட்ராஸ்பெர்க்கைப்பற்றி நேரடியாகவே பார்த்துவிடுவோம்.

எப்படி ரஷ்யாவில் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி நடிகர்களை அவதானித்து அவரது சிஸ்டத்தை உருவாக்கினாரோ, அப்படி ஸ்ட்ராஸ்பெர்க்குக்கு ஸ்டானிஸ்லாவ்ஸ்கி ஒரு கிரியா ஊக்கியாக இருந்தார் என்று அறிகிறோம். A Streetcar named Desire (1954) படம் நினைவிருக்கிறதா? மார்லன் ப்ராண்டோவை உலகுக்கே அறிமுகப்படுத்திய படம். இந்தப் படத்தின் இயக்குநரின் பெயர் – எலியா கஸான் (Elia Kazan). ஹாலிவுட்டின் மிகப்பிரபல இயக்குநர்களில் ஒருவர். இவருக்கும் ஸ்ட்ராஸ்பெர்க்குக்கும் நெருங்கிய சம்மந்தம் உண்டு (தொடர்பு என்று போட்டால் அது வேறு பொருளைத் தரும் என்பதால் சம்மந்தம்). அது என்ன என்பதைப் பின்னால் பார்க்கலாம். இந்த கஸானைப் பற்றி ஒரு புத்தகம் உண்டு. புத்தகத்தின் பெயர் – ’Elia Kazan: A Biography’. இந்தப் புத்தகத்தில் ஸ்ட்ராஸ்பெர்க்கைப் பற்றிய பல தகவல்கள் உண்டு. அதில் முக்கியமானது, ஸ்ட்ராஸ்பெர்க் எப்படி நடிப்பின் பக்கம் ஈர்க்கப்பட்டார் என்பது.

ஸ்ட்ராஸ்பெர்க்கின் இளமைப்பருவத்தில் ஒருமுறை ரஷ்யாவிலிருந்து ஸ்டானிஸ்லாவ்ஸ்கி தனது அற்புதமான நாடகக்குழுவினருடன் அமெரிக்கச் சுற்றுப்பயணம் நிகழ்த்தினார். இருமுறை – 1923 மற்றும் 1924 ஆகிய இரண்டு வருடங்கள் இந்த சுற்றுப்பயணம் நிகழ்ந்தது. ரஷ்யாவின் மிகப்பிரபலமான எழுத்தாளர்களின் கதைகளை நாடகமாக ரஷ்ய மொழியில் நிகழ்த்தினர் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் குழுவினர். அமெரிக்க ராணுவம் அப்போது ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் குழுவினர் ரஷ்யாவிலிருந்து வந்திருப்பதால் அவர்கள் கம்யூனிஸ்ட் அரசின் கொள்கைப் பிரச்சாரங்களை மேற்கொள்ளக்கூடும் என்று ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் சுற்றுப்பயணத்தை எதிர்த்தது. ‘நாங்கள் கலையில் மட்டுமே ஆர்வம் உள்ளவர்கள். அரசியலில் அல்ல’ என்று சொல்லி இதனைக் கடுமையாக எதிர்த்தார் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி. ஸ்ட்ராஸ்பெர்க் இந்தக் குழுவினரின் நாடகங்களைப் பார்க்க நேர்ந்தது. அமெரிக்க நாடகங்களின் தரத்தையும் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் குழுவினரின் தரத்தையும் உடனடியாகக் கண்டுகொண்டார் ஸ்ட்ராஸ்பெர்க். அதுவரை ஸ்ட்ராஸ்பெர்க் பார்த்த அமெரிக்க நாடகங்கள் அவருக்குப் பிடித்தே இருந்தன. ஆனால், தனது வாழ்நாளில் பார்த்த்திராத அருமையான நடிப்பை ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் குழுவினரின் மூலம் உணர்ந்தார் ஸ்ட்ராஸ்பெர்க். எந்த நடிகரும் கதாபாத்திரத்தை விட்டு வெளியே வராமல், கதாபாத்திரமாகவே வாழ்ந்த அற்புதத்தைக் கண்டார். அவர் அப்போது ஒரு சிறிய நாடகக்குழுவில் இணைந்திருந்ததால், அவரால் இத்தகைய நடிப்பு சார்ந்த விஷயங்களை உடனைடியாக உணர முடிந்தது. ஸ்டானிஸ்லாவ்ஸ்கி தனது சிஸ்டத்தை உருவாகி கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்ததால், அவரது நடிகர்கள் அவரது பயிற்சியின் கீழ் உடல் மற்றும் உணர்வு சார்ந்த நடிப்பினை நன்றாகக் கற்றுத் தேர்ந்து, அட்டகாசமான நடிகர்களாக மாறியிருந்தனர்.

இதுதான் ஸ்ட்ராஸ்பெர்க்கை தீவிரமான நடிப்பை நோக்கி ஈர்த்த விஷயம்.

இதன்பின் ஸ்ட்ராஸ்பெர்க் அவர் என்ன செய்ய வெண்டும் என்று தெளிவாக உணர்ந்துகொண்டார். ஸ்ட்ராஸ்பெர்க்கின் முதல் நடிப்பு வெளிப்பாடு, ’Processional’ என்ற நாடகத்தில் அமைந்தது. வருடம் 1924. இதன்பிறகு மளமளவென்று அந்நாடகத்தைத் தயாரித்திருந்த ‘Theatre Guild’ என்ற அமைப்பில் வளர்ந்தார். அந்த அமைப்பு தயாரிக்கும் நாடகங்களில் ப்ரொடக்‌ஷன் மேனேஜராகப் பணிபுரிய ஆரம்பித்தார். கூடவே நாடகங்களில் நடிக்கவும் செய்தார். ஏழு வருடங்கள் கழித்து, 1931ல் ‘Group Theatre’ என்ற அமைப்பை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தார் ஸ்ட்ராஸ்பெர்க். இவருடன் சேர்ந்து அந்த அமைப்பை உருவாக்கியவர்கள்: ஹெரால்ட் க்ளர்மேன் (Herold Clurman) மற்றும் ஷெரில் க்ராஃபோர்ட் (Cheryl Crawford) ஆகியவர்கள். இதில் ஹெரால்ட் க்ளர்மேன், ஸ்ட்ராஸ்பெர்க் இருந்த தியேட்டர் கில்ட் அமைப்பில் ஸ்டேஜ் மேனேஜராக இருந்தவர். இருவருக்கும் ஒத்த எண்ணங்களே இருந்திருக்கின்றன. அதேபோல் ஷெரில் க்ராஃபோர்டும் அதே தியேட்டர் கில்டில் அடிமட்ட வேலைகளிலிருந்து பல பொறுப்புகளை வகித்துவந்த பெண்ணாவார். இந்த மூவருக்கும் ஒரே வயது என்பதால், ஒரு ஆழமான நாடக அமைப்பை உருவாக்குவதைப் பற்றிய பல விவாதங்கள் இவர்களுக்குள் நிகழ்ந்தன. இதன் விளைவாக, மூவரும் சேர்ந்து Group Theatre அமைப்பை உருவாக்கினர். அந்த அமைப்பு உருவாகும் தருணத்தில் க்ளர்மேன் நடிப்பைப் பற்றிய லெக்சர்கள் கொடுக்க ஆரம்பித்திருந்தார். அவரது லெக்சர்களில் கலந்துகொண்ட 28 இளம் நடிகர்களை வைத்தே இந்த அமைப்பு துவங்கப்பட்டது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவெனில், இந்த மூவரில் இருவர் 1901ல் பிறந்தவர்கள். ஒருவர் மட்டும் 1902. மூவரும் இறந்த வருடங்களும் கிட்டத்தட்ட ஒரு சில வருடங்கள் முன்னும் பின்னும் தான்.

இந்த க்ரூப் தியேட்டர் அமைப்பில் ஸ்ட்ராஸ்பெர்க் உருவாக்கிய விஷயமே ’மெதட் ஆக்டிங்’ எனப்படுகிறது.

மெதட் ஆக்டிங்கைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர், ஸ்ட்ராஸ்பெர்க்குடன் க்ரூப் தியேட்டரில் இடம்பெற்று, நடிப்பில் சிறந்து விளங்கி, அதன்பின்னர் ஸ்ட்ராஸ்பெர்க்குடன் சண்டையிட்டுப் பிரிந்து, புதிதாக ஒரு அமைப்பு உருவாக்கி, ஸ்ட்ராஸ்பெர்க்கைப் போலவே புகழ்பெற்று விளங்கிய ஒரு பெண்ணைப் பற்றியும் கொஞ்சம் பார்ப்போம். இந்தப் பெண்ணின் சிறப்பம்சம் என்னவெனில், ஸ்டானிஸ்லாவ்ஸ்கியுடன் நேரில் பழகி அவரது முறைமைகளைப் படித்த ஒரே அமெரிக்கர் இவர்தான். ஸ்ட்ராஸ்பெர்க் கூட அதைச் செய்ததில்லை. இந்தப் பெண்ணின் பெயர் – ஸ்டெல்லா அட்லர் (ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளில் வரும் ‘ஐரீன் அட்லர்’ கதாபாத்திரத்துடன் இவரைக் குழப்பிக்கொண்டுவிட வேண்டாம்). இந்தப் பெண்மணியின் சிஷ்யர்களில் தலையாய பிரதான சீடரின் பெயர் – மார்லன் ப்ராண்டோ.

ஸ்ட்ராஸ்பெர்க், க்ளர்மேன் மற்றும் க்ராஃபோர்ட் ஆகியவர்களால் துவங்கப்பட்ட க்ரூப் தியேட்டர் அமைப்பில் அதே வருடம் சேர்ந்த நடிகை இவர். அதற்கு முன்னரே மிகப்பிரபலமாக விளங்கியவர். க்ரூப் தியேட்டரில் சேர்வதற்கு முன்னர் அவர் இருந்த ’அமெரிக்கன் லேபரட்டரி தியேட்டர்’ அமைப்பில்தான் 1925ல் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் சிஸ்டத்தைப் பற்றி முதன்முதலில் அறிந்தார் ஸ்டெல்லா. அந்த அமைப்பில் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் இரண்டு சீடர்கள் இருந்ததே காரணம் (Richard Boleslavsky மற்றும் Maria Ouspenskaya). இவர்களே அமெரிக்கன் லேபரட்டரி தியேட்டர் அமைப்பை உருவாக்கியவர்களும் கூட. இந்த அமைப்பில் தனது சிறுவயதில் பயின்றவர்தான் ஸ்ட்ராஸ்பெர்க். அவருடன் க்ளர்மேனும் பயின்றார். ஆகவே, ஸ்ட்ராஸ்பெர்க் மற்றும் ஸ்டெல்லா அட்லர் ஆகிய இருவருக்கும் பல வருடப் பழக்கம் இருந்திருக்கிறது.

க்ரூப் தியேட்டரில் சேர்ந்த பின்னர், 1934ல் ஸ்டெல்லா அட்லர் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியை சந்தித்தார். அவருடன் ஐந்து வாரங்கள் தங்கி, ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் சிஸ்டத்தை நன்கு கற்றார். அப்போதுதான் ஸ்ட்ராஸ்பெர்க் உருவாக்கியிருந்த மெதட் ஆக்டிங் முறைக்கும் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் சிஸ்டத்துக்கும் இருந்த அடிப்படை வேறுபாட்டை ஸ்டெல்லா உணர்ந்தார். ஸ்ட்ராஸ்பெர்க் உருவாக்கிய மெதட் ஆக்டிங் முறைக்கு மூல காரணம் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் சிஸ்டம் தான். ஆனால், ஸ்ட்ராஸ்பெர்க் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியுடன் பழகியவர் அல்ல என்பதால், ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் புத்தகங்களை வைத்துதான் அவரது மெதட் ஆக்டிங்கை உருவாக்கியிருந்தார். ஸ்டெல்லா ஸ்டானிஸ்லாவ்ஸ்கியுடன் பழகியதால், அவர் சிஸ்டத்தை உருவாக்கியிருந்த ஆரம்ப வருடங்களில் இருந்த சிஸ்டத்தை இப்போது அவரே மாற்றியிருப்பதை உணர்ந்துகொண்டார்.

ஸ்டானிஸ்லாவ்ஸ்கி 1900களில் உருவாக்கியிருந்த சிஸ்டத்துக்கும் தற்போது 1934ல் அவரே பயிற்றுவித்துக்கொண்டிருந்த சிஸ்டத்துக்கும் என்ன வேறுபாடு? எளிதாக இதனைப் பார்க்க முயல்வோம்.

முதன்முதலில் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி அவரது சிஸ்டத்தை உருவாக்கியபோது, நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள் சில உணர்வுபூர்வமான காட்சிகளில் நடிக்கையில் அவர்களது அனுபவங்களிலிருந்து அவர்கள் அடைந்த உணர்வுகளை மனதில் நினைத்துப்பார்க்க வேண்டும் என்று எழுதியிருந்தார். சென்ற கட்டுரையில் நாம் பார்த்த உதாரணம்: ஒரு நடிகர், அந்தக் காட்சி முடிந்தபின்னும் அழுதுகொண்டிருந்தது – அப்போதுதான் நடந்தது. காரணம், நாடகத்தில் வருவதுபோன்ற அதே சம்பவம் அவரது வாழ்க்கையில் நிஜமாக நடந்திருந்தது (தாயின் மரணம்). அதனைப் பற்றிய எண்ணங்களை அவர் அந்தக் காட்சியில் உணர முயற்சித்தபோதுதான், அவரால் தாங்க முடியாமல் அந்த உணர்வுகள் அவரை முற்றிலுமாக மூடிக்கொண்டுவிட்டிருந்தன.

இந்த நேரத்தில்தான் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் புத்தகம் ஒன்று வெளிவந்தது (’An actor prepares’). இந்தப் புத்தகத்தில் இருந்த சிஸ்டத்தின் நடிப்பு முறைமைகளையே பெரும்பாலும் எடுத்துக்கொண்டு ஸ்ட்ராஸ்பெர்க் அவரது மெதட் ஆக்டிங்கை வடிவமைத்திருந்தார். இதன்பின்னர்தான் ஸ்டெல்லா அட்லர் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியை நேரில் சந்தித்தார். அப்போதுதான் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி, An actor prepares புத்தகத்தில் அவர் விளக்கியிருந்த உணர்வுபூர்வ நடிப்பை மாற்றியமைத்திருந்ததை உணர்ந்தார்.

மாற்றியமைக்கப்பட்ட உணர்வுபூர்வ நடிப்பு முறைமையில், நடிகர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்திருந்த உணர்வுபூர்வமான சம்பவங்களை அவர்கள் நினைவுகூர்வதற்குப் பதில், முற்றிலும் கற்பனையான சம்பவங்களை எண்ணிப் பார்த்து அந்த உணர்வுகளை நாடகத்தில் கொண்டுவந்து நடிப்பதற்கான பயிற்சிகளை ஸ்டானிஸ்லாவ்ஸ்கி எழுதியிருந்தார். இந்த முறைமைகள் அடங்கிய புத்தகம், அப்போதுதான் வெளிவந்தும் இருந்தது (’Building a Character’). ஆனால் இது ஸ்ட்ராஸ்பெர்க்குக்குத் தெரியவில்லை. ஆகையால், வாழ்க்கையில் இடம்பெற்ற உணர்வுபூர்வமான சம்பவங்களை நடிகர்கள் நினைத்துப் பார்ப்பது இன்றும் ஸ்ட்ராஸ்பெர்க்கின் மெதட் ஆக்டிங் பயிற்சிகளில் இடம்பெற்றிருக்கிறது. இதைப்பற்றி ஸ்டானிஸ்லாவ்ஸ்கியுடன் விவாதித்துவிட்டு ஸ்ட்ராஸ்பெர்க்கிடம் வந்து அவரது மெதட் ஆக்டிங் முறையில் இருக்கும் தவறை எடுத்துச் சொன்ன ஸ்டெல்லா அட்லரை ஸ்ட்ராஸ்பெர்க் புறக்கணித்தார். இதன்விளைவாக ஸ்ட்ராஸ்பெர்க்கை விட்டுப் பிரிந்த ஸ்டெல்லா, சில ஹாலிவுட் படங்களில் நடித்துவிட்டு, 1949ல் ’ஸ்டெல்லா அட்லர் ஸ்டுடியோ ஆஃப் ஆக்டிங்’ என்ற அமைப்பைத் துவக்கினார்.

இதன்பின் ஸ்ட்ராஸ்பெர்க் மற்றும் ஸ்டெல்லா ஆகிய இருவரும் மிகப் புகழ்பெற்று விளங்கினர் (எம்.ஜி.ஆர் & கருணாநிதி போல). ஒரே சமயத்தில் இருவரிடமும் பயின்ற நடிகர்கள் பலர். ஸ்ட்ராஸ்பெர்க்கிடம் பயின்ற நடிகர்கள் பட்டியலை முதலில் பார்த்தோம். இதோ ஸ்டெல்லா அட்லரிடம் பயின்ற நடிகர்கள்: மார்லன் ப்ராண்டோ, மார்ட்டின் ஷீன், வாரன் பெட்டி, ஹாலிவுட்டின் எம். ஆர் ராதா ஹார்வி கீட்டல் (இது என் பர்ஸனல் கருத்து), ஜூடி கார்லாண்ட் மற்றும் ராபர்ட் டி நீரோ (இருவரிடமும் பயின்றவர்) மற்றும் பலர். இவர்களில் மார்லன் ப்ராண்டோ சிறிது காலம் ஸ்ட்ராஸ்பெர்க் பிற்காலத்தில் (1951ல் இருந்து) தலைமைப்பொறுப்பை ஏற்ற Actors Studio அமைப்பில் பயின்றிருந்தாலும், ’ஸ்ட்ராஸ்பெர்க்கிடமிருந்து எதையுமே நான் பெறவில்லை. ஸ்டெல்லா தான் என் குரு’ என்று ஸ்டெல்லாவுக்கு புகழாரம் சூட்டினார்.

இப்படியாக, ஹாலிவுட்டில் மெதட் ஆக்டிங் ஸ்ட்ராஸ்பெர்க் மற்றும் ஸ்டெல்லா அட்லரால் புகழ்பெற்று விளங்கியது. இதில் ஸ்டெல்லாவின் முறைமைகளே ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் முறைமைகளுக்கு மிகவும் அருகில் இருந்தன.

அடுத்த கட்டுரையில், மெதட் ஆக்டிங் என்றால் என்ன என்பதை முழுதாக நோக்க முயலலாம். அப்படியே ஸ்ட்ராஸ்பெர்க் மற்றும் ஸ்டெல்லா ஆகியவர்களின் வாழ்வில் நிகழ்ந்த ரசமான சம்பவங்களையும் பார்ப்போம்.

தொடரும்….

Facebook Comments

Sharing is caring!

Related Posts

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

5 Comments

 1. பெயர்கள் அதிகம் இருந்தாலும் அருமையான பதிவு தல ,மெதட் ஆக்டிங் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக அடுத்த பதிவில் விளக்குவீர்கள் என எதிர்ப் பார்கிறேன் ,

  Reply
 2. அண்ணே.. நீங்க எழுதுன “வார் ஆஃப் தெ ரிங்க்ஸ்” புத்தக ரிலீஸ் பதிவோட லிங்க் என்னோட பதிவுல கொடுத்திருக்கேன்..

  http://killadiranga.blogspot.com/2013/03/1.html இங்கே க்ளிக் பண்ணிப் பாருங்க..

  (இந்த லிங்க்-யும் டெலீட் பண்ணிட்டு தான் போஸ்ட் பண்ணுவீங்களா..!!!???)

  Reply
  • Rajesh Da Scorp

   ச்சே ச்சே :)… இதோ போட்டுட்டனே … தப்பா எடுத்துக்காதிங்க பாஸ். பல ஸ்பேம் லின்க்ஸ் வர்ரதுனால இந்த ஏற்பாடு. மிக்க நன்றி உங்க பதிவுக்கு. இதை ஃபேஸ்புக்ல ஷேர் பண்ணிருக்கேன்.

   Reply
 3. Kannan

  Thala Write about Paradesi movie… Eagerly Waiting for your review..

  Reply
 4. Nafeess

  நல்லா இருக்கு ராஜேஷ். தியரடிகலா படிக்கும் போது நெறய பெயர் வருவதை தவிர்க்க இயலாது என்றே நினைக்கிறேன். நீங்க இத மினி சீரீஸ் ன்னு சொல்றீங்க ஆனா செம டீடைலா இருக்கு.

  ஒரே ஒரு கேள்வி ராஜேஷ். சாட் ல கேக்குறேன் 🙂

  Reply

Join the conversation