மொத்தக் கதைகள் 36 – 4

by Rajesh May 2, 2013   Cinema articles

Sharing is caring!

இதுவரை எழுதப்பட்ட நான்கு கட்டுரைகளை இங்கே படிக்கலாம். இது ஐந்தாவது கட்டுரை.

மொத்தக் கதைகள் 36
மொத்தக் கதைகள் 36 – 1
மொத்தக் கதைகள் 36 – 2
மொத்தக் கதைகள் 36 – 3

Situation 16: Madness – வெறித்தனம்

தேவையான கதாபாத்திரங்கள்:

கதாபாத்திரம் 1 – பித்துப் பிடித்த நபர் (அல்லது) கோபத்தின் உச்சமான வெறியில் இருப்பவர்
கதாபாத்திரம் 2 – முதல் கதாபாத்திரத்தால் பாதிக்கப்படும் நபர்.

வாழ்வின் சில கோரமான தருணங்களில், மிகவும் சாதுவாக இருக்கும் ஒரு நபர் கொடிய வெறிச்செயல் ஒன்றைப் புரிவதைப் பற்றிப் பலமுறை படித்திருக்கிறோம். அப்படிப்பட்ட வெறிதான் இந்த சிச்சுவேஷன். நாமேகூட பலமுறை நமக்கு நெருங்கியவர்களிடம் இப்படி நடந்துகொண்டிருப்போம் (செயலில் அல்ல. அட்லீஸ்ட் பேச்சில்). இப்படிப்பட்ட உச்சபட்ச வெறித்தனத்தின் பல வெளிப்பாடுகள் இதோ.

1.
A. உறவினர்கள் வெறித்தனத்தால் கொல்லப்படுதல். இதைச்செய்பவருக்கு அவர்கள் உறவாக இருக்கவேண்டும்.
B. காதலனோ காதலியோ, காதலி அல்லது காதலனின் வெறியால் கொல்லப்படுதல்
C. வெறித்தனத்தால், இதுவரை வெறுக்கப்படாத நபர் ஒருவரைக் கொல்லுதல் (அல்லது) காயப்படுத்துதல். வெறி கிளம்பும்போது சிலமுறை நமக்குப் பிடித்த நபர்களை நாம் காயப்படுத்துவது உண்டு. அப்படிப்பட்டது இது.

2. கோபவெறியால் தனக்குத்தானே அவப்பெயரை உண்டுசெய்துகொள்ளல்
3. நம்மால் அன்புசெலுத்தப்பட்டவர்களை இப்படிப்பட்ட வெறியால் இழத்தல் (இங்குதான் காளிதாஸரின் சாகுந்தலம் உதாரணமாக வருகிறது. துஷ்யந்தன் அம்னீஷியாவால் பாதிக்கப்பட்டு சாகுந்தலையை தெரியவே தெரியாது என்று கோபமாக மறுத்தல்).
4. வம்சாவழியின் மரபுவழியாக வரும் பித்துநிலையைப் பற்றிய பயத்தாலேயே வெறியடைதல்

இந்த நான்கு வகைகளில் ’வெறி’ என்ற வார்த்தையால் குறிக்கப்படுவது பைத்தியமாகவும் இருக்கலாம். மனநோய்கள், உளவியல் பிரச்னைகள் போன்றவையும் இந்த வகைகளில் அடங்கும். திடீரென உள்ளிருந்து கிளம்பும் கோபம், சில நேரங்களில் மனநோயாக இருக்க வாய்ப்பு உண்டு.

Situation 17: Fatal Imprudence – உயிராபத்தான மதியீனம்

மதியீனம் என்பது எப்போதாவது எல்லாருக்கும் நேர்வது. வரப்போகும் சூழ்நிலையின் முக்கியத்துவம் தெரியாமல் மதியிழந்து அவசர முடிவு எடுத்து அதனால் பாதிக்கப்படுவதே இந்த சிச்சுவேஷன். பாதிக்கப்படுதல் என்பது, மரணமாகக்கூட இருக்கலாம். அதேபோல் இந்த பாதிப்பு பல விதங்களில் முடியலாம். இந்த சிச்சுவேஷன் மூன்றுவகைப்படும்.

1.
A. மதியீனத்தால் தனக்குத்தானே கேடு விளைவித்துக்கொள்வது (அல்லது) துரதிருஷ்டம் அடைவது
B. மதியீனத்தால் தனக்குத்தானே அவப்பெயரை வரவழைத்துக்கொள்ளல்

2.
A. அதீதமான ஆர்வத்தால் (curiosity) தனக்குத்தானே கேடு விளைவித்துக்கொள்ளல்
B. அதீதமான ஆர்வத்தால் தனக்கு விருப்பமான நபர்களை இழத்தல்

3.
A. தனது அதீதமான ஆர்வத்தால் பிறருக்குக் கெடுதலோ மரணமோ நேருதல்
B. தனது மதியீனத்தால் உறவினருடைய மரணம் நிகழ்தல்
C. தனது மதியீனத்தால் காதலன் அல்லது காதலியின் மரணம் நிகழ்ந்துவிடுதல்
D. தனது இளிச்சவாய்த்தனத்தால் (அல்லது) ஏமாளித்தனத்தால் உறவினர்களின் மரணம் நிகழ்தல்

பொதுவாக imprudence என்னும் மதியீனம் எதனால் நிகழ்கிறது என்று பார்த்தால், ஒன்று – அதீதமான ஆர்வம் அல்லது ஏமாளித்தனம் என்ற இரண்டு சிச்சுவேஷன்கள் நமது மனதில் வராமல் போகாது. எதாவது விஷயத்தில் மூக்கை நுழைக்கும் ஆர்வம் இருந்தால், முன்யோசனை அங்கு இல்லாமல் போய்விடும். அதனால் ஆபத்து (தனக்கோ பிறருக்கோ) நேரலாம். அல்லது, ஏமாளியாக இருந்துவிட்டால், பிறரைப்பற்றிய சிந்தனை இல்லாமல் போய், அதனால் ஆபத்து நேரலாம். (’விக்ரம்’(1986) படத்தில், அந்நிய நாட்டு உளவாளியான ராகவேந்தரைத் தேடி கமல் வருவார். ஆனால் ஆபத்தை உணராத அவரது ஏமாளி மனைவியோ, ராகவேந்தர் வீட்டில் இல்லை என்று கமலிடம் வழிவார். அது ராகவேந்தர் கமலிடம் பிடிபட்டு கண்டபடி சித்ரவதை செய்யப்பட்டு, இறுதியில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வதில் முடியும். இது, தன்னுடைய ஏமாளித்தனத்தால் கணவனின் மரணம் நிகழ்தல் என்ற 3C சிச்சுவேஷனுக்கு உதாரணம்).

இப்படி அதீத ஆர்வம் & ஏமாளித்தனம் என்பன பிரதான விஷயங்களாக இருக்க, பொறாமை, மனிதனின் தேவைகளான தூக்கம், பசி, மோகம், காமம், பகட்டு போன்றவையும் சிலசமயங்கள் மதியீனத்தை நோக்கி கதாபாத்திரங்களை இழுத்துச் செல்கின்றன. இது போன்ற தேவைகளின் மீதான ஆசை அதிகமாகும்போது (அல்லது) இவற்றுக்கான தேவைகள் மனதை அலைக்கழிக்கும்போது, மதியீனம் ஏற்படுகிறது.

Situation 18: Involuntary Crimes of Love – காதலால் நிகழும் தற்செயலான குற்றங்கள்

ஒரு பெண்ணை ஒருவன் காதலிக்கிறான். மணந்துகொள்கிறான். ஆனால் அதன்பின்னர்தான், அந்தப்பெண் உறவுமுறையில் அவனுக்கு சகோதரி முறை என்று தெரிகிறது. அப்போது மணந்தவனின் மனநிலை எப்படி இருக்கும்? இதுபோன்ற உறவுமுறை சிக்கல்கள், பொதுவாக போல்டியின் காலத்தில் இரண்டுவகையில் நாடகங்களைப் பார்க்கும் ஆடியன்ஸுக்கு வெளிப்படுத்தப்பட்டன. ஒன்று – குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு உண்மை தெரியும் அதே நேரத்தில்தான் ஆடியன்ஸுக்கும் அது தெரியவரும். இதனால் கதையின் ஒரே கோணமே மேடையிலும் ஆடியன்ஸின் மனதிலும் ஓடும். இரண்டாவது வகை கொஞ்சம் சுவாரஸ்யமானது. ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் உள்ள இந்த உறவு சிக்கல் யாரேனும் ஒரு நபருக்குத் தெரிந்துவிடுகிறது. ஆனால் அந்த நபர் தனது சுய லாபத்துக்காக அதனைப் பயன்படுத்திக் கொள்கிறான். ஆகவே, இந்த சிக்கல் ஆடியன்ஸுக்கு முதலிலேயே தெரிந்துவிடுகிறது. பதைபதைக்கும் மனதுடன், பொறியை நோக்கி செல்லும் அந்த ஹீரோவையும் ஹீரோயினையும் பார்த்து பதைபதைப்பார்கள் ஆடியன்ஸ். இந்த இரண்டாவது வகைதான் ஹிட்ச்காக்கின் அத்தனை படங்களிலும் இருக்கும். அதாவது, உண்மையை ஆடியன்ஸுக்கு முதலில் சொல்லிவிடுதல். ஆனால் கதாபாத்திரங்களுக்கு அது தெரியாது. இதனால் பல சஸ்பென்ஸ் தருணங்களை உருவாக்க முடியும். ஹிட்ச்காக் இதனை கச்சிதமாக உபயோகப்படுத்திக்கொண்டவர்.

இந்த சிச்சுவேஷனுக்குத் தேவையான கதாபாத்திரங்கள் மூன்று.

கதாபாத்திரம் 1 & 2: காதலில் விழும் ஜோடி.
கதாபாத்திரம் 3: உண்மையை வெளிப்படுத்துபவர்

இந்த சிச்சுவேஷன் மொத்தம் நான்கு வகை.

1.
A. தனது தாயை திருமணம் செய்துகொண்டுவிட்டோம் என்ற உண்மை புரிதல் (இதெல்லாம் கிரேக்க நாடகங்களில் சாதாரணம். ’ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் (Oedipus complex)’ என்ற பிரபலமான வார்த்தை பலருக்குத் தெரிந்திருக்கலாம். இதை உருவாக்கியவர் ஸிக்மண்ட் ஃப்ராய்ட். தனது தாயை ஒரு ஆண்பிள்ளை நேசிப்பது. இதற்கு எதிர்வெட்டாக கார்ல் கஸ்டாவ் ஜங் (Carl Gustav Jung) உருவாக்கிய வார்த்தை Electra complex. தந்தையின் அன்பைப் பெறுவதற்கான முயற்சியில் தாயை முந்திக்கொள்ளவேண்டும் என்று ஒரு பெண் குழந்தை நினைப்பதே இது. சிறுகச்சிறுக தந்தையின்மீது ஒரு ஈர்ப்பு ஏடுபட்டு, சில பெண்கள் தந்தையை மானசீகமாக காதலிக்கவே ஆரம்பித்துவிடுவது).

B. தனது காதலி, உண்மையில் தனக்கு சகோதரி முறை என்பதை தற்செயலாக ஹீரோ தெரிந்துகொள்வது

2.
A. தனது சகோதரியைத்தான் திருமணம் செய்துகொண்டிருக்கிறோம் என்பதை ஹீரோ தெரிந்துகொள்வது
B. ஹீரோ அவனது சகோதரியைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று யாரேனும் சதித்திட்டம் தீட்டி, அதனை நிறைவேற்றுவது (சகோதரி என்பது சகோதரி முறையாகக்கூட இருக்கலாம். அல்லது தொலைந்துபோன சகோதரி- பல வருடங்கள் கழித்து அவளை சந்திக்கும் ஹீரோ காதல்வசப்பட்டு மணந்துகொள்வது – அதன்பின் உண்மை தெரிவது என்றும் இருக்கலாம்).
C. சகோதரன், அவனது சகோதரியை காதலிக்க முனைவது (அதாவது, இன்னும் காதலிக்கவில்லை. ஆனால் அதற்கான விருப்பம் இருக்கிறது. உண்மையைத் தெரிந்துகொண்ட யாரேனும் இதைப்பற்றி ஹீரோவிடம் சொல்லாமல் இருக்கலாம்).

3.தனது மகள் என்பது தெரியாமல் காதலிக்கவோ அல்லது மணம் புரியவோ நினைத்தல்

4.
A. உறவுமுறையில் இருக்கும் பிரச்னை தெரியாமல், திருமணத்துக்கு மீறிய உறவில் ஈடுபட நினைப்பது (அதாவது அடல்ட்ரியில் ஈடுபட முனைவது. சகோதரி அல்லது மகளுடன். இந்த உறவுமுறை ஹீரோவுக்குத் தெரிவதில்லை)
B. உறவுமுறையில் இருக்கும் பிரச்னை தெரியாமல் திருமணத்துக்கு மீறிய உறவில் ஈடுபட்டே விடுவது

Situation 19: Slaying of a kinsman unrecognized – யாரென்றே தெரியாமல் ஒரு உறவினரைக் கொன்றுவிடுவது

ஒரு நபரை இன்னொரு நபர் கொன்றுவிடுகிறார். ஆனால் கொன்ரபின்னர்தான் அவர் இவரது நெருங்கிய உறவினர் (அல்லது) ரத்த சம்மந்தம் உள்ளவர் என்பது புரிகிறது. அந்த சூழ்நிலை எத்தகைய சோகத்தைக் கொண்டுவரும் என்பது நன்றாகப் புரிகிறதல்லவா?

இதற்குத் தேவைப்படும் கதாபாத்திரங்கள் இரண்டு.

கதாபாத்திரம் 1: கொலை செய்பவர்
கதாபாத்திரம் 2: அடையாளம் தெரியாமல் முதல் கதாபாத்திரத்தால் பாதிக்கப்படும் நபர்

இந்த சிச்சுவேஷன் ஏழு வகைப்படுகிறது.

1.
A. யாரேனும் ஆரூடம் சொல்லியதால் (அல்லது) தெய்வீக ஆணையால், மகளை தெரியாமல் கொலைசெய்யப்போகும் தருணம்வரை வந்துவிட்ட தந்தை. (தந்தைக்கு, அவர் கொல்லப்போவது தனது மகள் என்றே தெரியாமல் இருப்பது).

அசரீரி சொல்லிய வார்த்தைகளை தவறாகப் புரிந்துகொண்டு மகளைக் கொல்லச் சென்ற தந்தையைப்பற்றி இங்கே இருக்கிறது. கிரேக்க நூல் ஒன்று (Demaphon). நம்மூரில்கூட யாரேனும் போலி சாமியார் அல்லது பூசாரி சொன்னதால் பெற்ற மகளை நரபலி கொடுக்க எத்தனித்தவர்களைப் பற்றிப் படிக்கிறோம் அல்லவா?

B. அரசியல் நெருக்கடியால் மகளைத் தெரியாமல் கொலைசெய்ய எத்தனிக்கும் தந்தை
C. காதலில் நேரும் விரோதத்தால் மகளைத் தெரியாமல் கொலைசெய்ய எத்தனிக்கும் தந்தை
D. தனது மகள் என்று தெரியாமல் இருக்கும் பெண்ணின் காதலன் தன்மீது கொண்ட வெறுப்பினால் அந்தப் பெண்ணைக் கொல்ல எத்தனிக்கும் தந்தை

2.
A. மகன் என்று தெரியாமல் அவனைக் கொல்ல எத்தனிக்கும் தந்தை. இதன் உட்பிரிவு, மகன் என்று தெரியாமல் அவனைக் கொன்றே விட்ட தந்தை.
B. மேலே பார்த்த அதே சிச்சுவேஷன். ஆனால் இங்கே மகனைக் கொல்ல நினைப்பது (அல்லது) கொன்றுவிட்டது ஏனெனில், சுயநலம் மற்றும் சூது ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதே. அதாவது, தந்தை இங்கே நிஜமான வில்லன்.
C. இது, மேலே பார்த்த Bயுடன், உறவினர்களின்மேல் தீராத வெறுப்பும் சேர்ந்துகொள்ளல். உதாரணம்: தாத்தாவுக்குப் பேரன் மேல் இருக்கும் வெறுப்பு

3. சகோதரனை யாரென்று தெரியாமல் கொல்ல எத்தனிப்பது. அதேபோல் ஒரு சகோதரி தனது சகோதரன் அல்லது சகோதரியை, பணி நிமித்தமாக கொல்வது.

4. தாயை யாரென்று தெரியாமல் கொன்றுவிடுவது.
5. சூது, கபடம் ஆகியவற்றால் மனது திசைதிருப்பப்பட்டு, தந்தையை அடையாளம் தெரியாமல் கொன்றுவிடுதல். அதேபோல், எந்தக் கபடமும் இன்றி, வெறுமனே தந்தையை யாரென்றே தெரியாமல் கொல்லுதல். போலவே தந்தையை அடையாளம் தெரியாமல் கொல்ல எத்தனித்தல். அதேபோல் தந்தையை அடையாளம் தெரியாமல் அவமானப்படுத்துதல்.

6.
A. பழிவாங்கும் வெறியின்கீழ் தாத்தாவை அடையாளம் தெரியாமல் கொல்லுதல். இந்தக் கொலைக்குக் காரணம் பிறரது தூண்டுதலாக இருக்கும்.
B. எந்தத் தூண்டுதலும் இல்லாமல், தாத்தாவை அடையாளம் தெரியாமல் கொல்லுதல்
C. மனைவியின் தந்தையை எவரது தூண்டுதலும் இல்லாமல் தானாகவே (அடையாளம் தெரியாமல்) கொல்லுதல்

7.
A. காதலுக்குரிய ஒரு பெண்ணை அனிச்சையாகக் கொல்லுதல்
B. காதலுக்குரிய பெண்ணையோ ஆணையோ அடையாளம் தெரியாமல் கொல்ல முனைதல்
C. அடையாளம் தெரியாத மகனைக் காப்பாற்றுதலில் தோல்வி

இந்த பத்தொன்பதாம் சிச்சுவேஷனின் இறுதியில் இருக்கும் துணுக்குச்செய்தி என்னவெனில், ஷேக்ஸ்பியர் இந்த சிச்சுவேஷனை அவரது ஒரு நாடகத்தில் கூட பயன்படுத்தவில்லை என்பதே.

Situation 21: Self Sacrificing for an ideal – குறிக்கோளுக்காக தியாகம் செய்தல் (அல்லது) உயிர்துறத்தல்

நமது அரசியல் தலைவர்கள் அடிக்கடி இந்தப் பதத்தை உபயோகப்படுத்துவதைக் காணலாம். ஆனால் அவர்களின் பேச்சால் தூண்டப்பட்டு தற்கொலை செய்துகொள்வது, அவர்களது தொண்டர்கள் மட்டுமே. தலைவர்கள் ஜாலியாகப் பேசிவிட்டு பங்களாவில் ஓய்வெடுப்பதைக் காணலாம்.

ஏதேனும் ஒரு குறிக்கோளுக்காக உயிரைத் துறத்தல் என்பது சரித்திர காலத்தில் ஒரு மாண்பாகக் கருதப்பட்டது. அத்தகைய சிச்சுவேஷனான இதில் தேவையான கதாபாத்திரங்கள் இரண்டு.

கதாபாத்திரம் 1: ஹீரோ
கதாபாத்திரம் 2: ஹீரோ உயிர்துறக்கும் குறிக்கோள். இது ஒரு மனிதனாகவோ ஒரு பொருளாகவோ இருக்கலாம்.

இந்த சிச்சுவேஷன் நான்கு வகைப்படும்.

1. A. தான் சொன்ன வார்த்தை (அல்லது) கொடுத்த வாக்குக்காக உயிர்துறத்தல்
B. தனது மக்களின் வெற்றிக்காக உயிர்துறத்தல்
C. தனது பெற்றோருக்காகவோ அல்லது மூதாதையர்களுக்காகவோ உயிர்துறத்தல்
D. தனது மதத்துக்காக (அல்லது) தனது கண்டுபிடிப்பு, கொள்கை போன்றவற்றுக்காக உயிர்துறத்தல் (கலிலியோ ஒரு உதாரணம்). அதேபோல் தனது மன்னனுக்காக உயிர்துறத்தல்

2. A. அன்பு, காதல் போன்றவையும், அதன்பின்னர் உயிரும், மதத்துக்காக (அல்லது) தனது கண்டுபிடிப்பு, கொள்கை போன்றவற்றுக்காக துறத்தல்
B. அன்பு, காதல் போன்றவையும், அதன்பின்னர் உயிரும், ஒரு லட்சியத்துக்காக துறத்தல்
C. தனது நாட்டுக்காக காதலைத் துறத்தல்

3. வாழ்க்கை வசதிகளை, கடமைக்காக துறத்தல்
4. மரியாதை, மதிப்பு, புகழ் போன்றவைகளை தனது நம்பிக்கை (அல்லது) மதம் (அல்லது) கொள்கை போன்றவற்றுக்காக தியாகம் செய்தல்

(தொடரும்)…

Facebook Comments

Sharing is caring!

fb Comments

comments

  Comments

8 Comments

 1. கார்த்திக்

  Situation 16: Madness – வெறித்தனம்
  ஜானி ( ரஜினி காதலியை கொலை செய்தல்)

  Situation 17: Fatal Imprudence – உயிராபத்தான மதியீனம்
  சந்திரமுகி (ஜோதிகாவின் அதீத ஆர்வத்தில் சந்திரமுகியின் அறையில் நுழைவது அதன் மூலம் பல துன்பங்கள் ஏற்படுதல் )

  Situation 18: Involuntary Crimes of Love – காதலால் நிகழும் தற்செயலான குற்றங்கள்

  உயிர் படத்தை ஒரு குறைந்தபச்ச உதாரணமாக கூறலாம் ( கொளுந்தனை அடைய துடக்கும் அண்ணி)

  இந்த சுச்சுவேசனில் ஒரு படம் வந்தால்தான் தமிழ் சினிமாவின் அடுத்தகட்டம் ஆரம்பமாகும்.
  ( நான் என் நன்பர்களிடம் ஒரு கதை சொன்னேன் அது ஒரு time paralyzing story கதை எல்லோருக்கும் பிடித்தது அனால் கதை முடிவில் வரும் ஒரு திருப்பத்தை யாரும் ஏற்க்கவில்லை காரணம் அது ஒரு insight relationship story எனவே நண்பர்களே இது போன்ற கதைகள் ஏற்றுக்கொள்வதில்லை எங்கிறிந்து என் மேன்மை தமிழ் சமுதாயம் )

  Situation 19: Slaying of a kinsman unrecognized – யாரென்றே தெரியாமல் ஒரு உறவினரைக் கொன்றுவிடுவது

  தமிழர்கள் ரொம்ப பாசக்கார பயலுகள் பாம்பும் கிரிக்குமே கடைசிவரை சண்ட விடாமல் புச்சாண்டி மட்டும்தான் காட்டுவானுங்க சொந்தகாரங்களை கொல்ல விட்டுடுவாங்கலா என்ன? sorry I can’t say example for this

  Situation 21: Self Sacrificing for an ideal – குறிக்கோளுக்காக தியாகம் செய்தல் (அல்லது) உயிர்துறத்தல்

  நாட்டாமை ( யாராக இருந்தாலும் சரியான தீர்ப்பு கொடுக்கவேண்டும் என்பதால் தன் தங்கையின் மகனுக்கு எதிராக தீர்பு கூறி
  அதற்க்காக கொல்லப்பட்டு இறக்கும் விஜயகுமார்)

  நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு

  பி கு
  Situation 18: Involuntary Crimes of Love – காதலால் நிகழும் தற்செயலான குற்றங்கள்
  Situation 19: Slaying of a kinsman unrecognized – யாரென்றே தெரியாமல் ஒரு உறவினரைக் கொன்றுவிடுவது

  மேலை நாடுகளில் கலை, இலக்கியம், சினிமா என்பதெல்லாம் கற்பனை ஊடகங்கள் அதனால் நாம் கூறவருவதை எந்த தடையின்றி கூறலாம், அனால் நாம் கலை என்பது நம் கலாச்சாரத்தை பேணிபாதுகாக்கும் ஊடகமாகவே பாவித்து வருகிறோம் ஆனால் அதையும் ஒழுங்காக செய்வதில்லை ( insight sex யை சினிமாவில் காட்ட தடுக்கும் நம் சமுகம் தொப்புள்களில் பம்பரம்விடுவதையும் ஆம்லேட் போடுவதையும் தடுத்திற்க்க வேண்டும் அட போங்கப்பா )

  Reply
 2. Situation 18: Involuntary Crimes of Love – காதலால் நிகழும் தற்செயலான குற்றங்கள்

  இதுல 2வது உட்பிரிவுக்கு சிறந்த உதாரணமா “OLD BOY(2003)” படம் தோணுது.

  Reply
 3. premkumar

  sir balance pathivugal eppothu

  Reply
  • Rajesh Da Scorp

   குட். கண்டுபுடிச்சிட்டீங்க 🙂 .. யாரும் படிப்பது இல்லைன்னுதான் பாக்கி போடாம விட்டுட்டேன் ப்ரேம்.

   Reply
 4. Arun

  sir.. its going good.. pls continue

  Reply
 5. sir its going to good pls completed the other situationvations

  Reply

Join the conversation