சூது கவ்வும் (2013) – தமிழ்

by Rajesh May 12, 2013   Tamil cinema

Sharing is caring!

முன்கதை

2012 ஜூலையன்று நண்பர் முரளி குமார் அழைத்திருந்தார். நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் குறும்படங்களை திரையிட்ட நலன் குமரசாமி என்ற இயக்குநரின் திரைக்கதை ஒன்று இருப்பதாகவும், அந்தத் திரைக்கதையைப் படித்து, அதன் குறைகள்/பிரச்னைகள் ஆகியவற்றை சுட்டிக்காட்ட முடியுமா என்று கேட்டார். அவசியம் முடியும் என்று சொன்னேன். அதன்பின்னர் நலன் அழைத்தார். அவரிடம் பேசியபின்னர், திரைக்கதையை நன்றாகப் படித்தேன். அதன்பின்னர் திரைக்கதையின் சில விஷயங்களைப் பற்றி மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் பேசினோம். நலனுக்கு சில சந்தேகங்கள் இருந்தன. அவற்றை விரிவாக அனுப்பியிருந்தார். அவற்றுக்கு எனது கருத்துகளையும் விரிவாக அனுப்பினேன்.

எங்கள் விவாதம் முடிவடைந்த பிறகு, கொஞ்ச நாட்களில் அதனை மறந்தும் விட்டேன். அதன்பின்னர் ஒரு நாள் நலன் அழைத்திருந்தார். திரைக்கதைக்கு ஒரு நல்ல தயாரிப்பாளர் கிடைத்துவிட்டதாகவும், படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் சொன்னார். அதன்பின்னர் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போதும் பேசினார். பின்னர் படப்பிடிப்பு முடிந்து, பாடல் வெளியீட்டு விழாவுக்கு அழைத்தார். பின்னர், பட வெளியீட்டைப் பற்றியும் பேசினார்.

படமும் வெளியாகிவிட்டது. பலருக்கும் பிடித்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன். ஆனால் பெங்களூரில் வெளியாகவில்லை. இங்கு படம் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் வெள்ளியன்று வெளிவந்ததால், அன்றே மாலையில் படத்தைப் பார்த்துவிட்டோம்.

நலனின் திரைக்கதையைப் படித்தபோது, அந்தத் திரைக்கதையில் வழக்கமான தமிழ்ப்படங்களில் காணப்படும் சில விஷயங்கள் இல்லாதது ஆறுதலாக இருந்தது (கதாநாயகி இல்லை. ஆகவே டூயட்கள் இல்லை. ஃப்ளாஷ்பேக் இல்லை. ஆகவே மெதுவாக நகரும் காட்சிகள் படத்தில் இல்லை.பாடல்கள் மிகக்குறைவு. பேசவே பேசாத இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் இத்யாதி). அந்தத் திரைக்கதை அப்படியே எடுக்கப்பட்டால் அவசியம் தமிழில் ஒரு வித்தியாசமான genreல் வெளிவந்து வெற்றி அடையும் என்பது என் கருத்து.

அதேபோல் படம் அட்டகாசமான வெற்றி அடைந்திருக்கிறது. இந்தப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி என்பதில் சந்தேகம் இல்லை. ‘அது எப்புடி வித்தியாசம்? அப்புடி இன்னாபா கீது இதுல?’ என்று கேள்விகளை எழுப்பும் நண்பர்களுக்கு, இதோ படத்தைப் பற்றிய விபரமான விஷயங்கள்.

[divider]

’ஓரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் கண்ணுக்கு மட்டும் தெரியும் பெண்’ என்பது தமிழில் மிக அரிது. பொதுவாக ஹாலிவுட் படங்களில்தான் இப்படிப்பட்ட விஷயங்கள் இருக்கும். எனக்குத் தெரிந்து, பாலசந்தரின் ‘பொய்க்கால் குதிரை’ படத்தில் சலூன் வைத்திருக்கும் ரவீந்தரிடம், சலூன் புகைப்படத்தில் இருக்கும் கமல்ஹாஸன் பேசுவார். ரவீந்தரின் காதல் வெற்றியடைய வழிகளை சொல்லுவார். அதுவும் மிகச்சில காட்சிகளில் மட்டும்தான் வரும்.

பொதுவாக இப்படி ஒரு கதாபாத்திரம் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். தமிழ்ப்படங்களில் அது எப்படி காட்டப்படும் என்றால், படத்தின் இறுதியில் வில்லனால் அடிபட்டு சாகும் நிலையில் இருக்கும் ஹீரோவின் கண்களுக்கு முன்னர் மட்டும் இறந்துபோன கதாநாயகி தெரிவாள். உடனேயே ‘டாய்ய்ய்ய்ய்ய்’ என்று அலறிக்கொண்டு வில்லனை ஒரே அடியில் வீழ்த்துவார் ஹீரோ. இல்லையெனில், எதாவது பாடலில் ஹீரோ ஜாலியாக எங்காவது செல்லும்போது அங்கே கதாநாயகி தெரிவாள்.

இந்தப்படத்தில் இருப்பதுபோன்ற ஜாலியான ஒரு பெண் கதாபாத்திரத்தைப் பார்த்து மிக நீண்ட நாட்களாகிவிட்டன. அதிலும், படத்தின் கடைசியில் இந்த உண்மையை சொல்லி ஆடியன்ஸை தலைவேதனைக்கு உள்ளாக்கும் படமாக இது இல்லாமல் (தலாஷ் ஒரு உதாரணம்) படத்தின் ஆரம்பத்திலேயே தாஸ் தனது வியாதியைப் பற்றிச் சொல்லிவிடுகிறார். இதனால் படத்தின் வெவ்வேறு கதாபாத்திரங்கள் அந்தப் பெண் கதாபாத்திரத்துடன் உரையாடும் தாஸைப் பார்த்து ரியாக்ட் செய்வது நன்றாக வந்திருக்கிறது. நகைச்சுவையாகவும் இருக்கிறது. இந்தக் கதாபாத்திரம் நகைச்சுவையாக உபயோகப்படுத்தப்பட்டிருப்பதை நான் பார்த்ததில்லை. தலாஷ், The Sixth Sense போன்ற படங்கலில் மிக சீரியஸாகவே இதைப்போன்ற சித்தரிப்புகள் இருக்கும்.

சரி. எந்தக் காரணமுமில்லாமல் ஏன் இப்படி ஒரு கதாபாத்திரம் என்ற கேள்வியை ஒருசில விமர்சனங்களில் படிக்க நேர்ந்தது. காரணம், தாஸின் மனவியாதி என்பதைத்தான் அவரே சொல்கிறாரே?

அடுத்தது, ஆள் கடத்தலைப்பற்றிய ஜாலியான பார்வை. இதற்கு முன்னர் மும்பை எக்ஸ்ப்ரஸில் இந்தக் கரு கையாளப்பட்டிருக்கும். ஆனால் மும்பை எக்ஸ்ப்ரஸில் கதை தடாலென்று மனீஷா கதாபாத்திரம், அவருக்கும் கமலுக்கும் நிலவும் காதல் என்று தடம்மாறி, அலுக்க ஆரம்பித்துவிடும் (கதை விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருக்கும்போது இப்படி எதாவது வைத்து கதையை மெதுவாக ஆக்குவது கமலின் வழக்கம்.  அது அவரது பாணி. படிக்க – ‘அன்பே சிவம் ஏன் ஓடவில்லை?’ & ‘அன்பே சிவம் – ஒரு கட்டுரையும் அதன் எதிர்வினையும்’.). இந்தப்படத்தில் காதலே இல்லாததால், அப்படிப்பட்ட திசைமாற்றக் காட்சிகள் எதுவும் இல்லாமல் படம் சுவாரஸ்யமாகச் செல்கிறது.

இன்னொரு நல்ல விஷயம் என்னவென்றால், படத்தில் வரும் ஜாலியான திருப்பங்கள்.ஆங்காங்கே வரும் இந்த ட்விஸ்ட்கள், படத்தை சுவாரஸ்யமாக்குகின்றன. உதாரணம்: ஆட்டோவில் சென்றுகொண்டிருக்கும்போது பாக்கெட்டில் இருக்கும் பென் ட்ரைவ் சிதறுவது. இந்தப்படத்தில் வரும் ட்விஸ்ட்கள் மிகப்பெரிய திருப்பங்கள் அல்ல. ஆனால் படத்தை அலுக்காமல் கொண்டுசெல்ல அவை உதவுகின்றன.

நகைச்சுவை ஒன் லைனர்கள், இந்தப்படத்தின் இன்னொரு பலம். படம் முழுக்கவே ஆங்காங்கே இவை இருக்கின்றன. ஹாலிவுட்டில் பல கேங்ஸ்டர் படங்களில் இப்படிப்பட்ட நகைச்சுவை வசனங்களை பார்த்திருக்கிறேன். தமிழில் முழுநீளமாக அவைகளைப் பார்ப்பது இப்போதுதான். உதாரணத்துக்கு, 2003ல் வெளிவந்த CrimeSpree (என் விமர்சனத்தை க்ளிக்கிப் படிக்கலாம்) படத்தில் இப்படிப்பட்ட காட்சிகள் இருக்கும். அதேபோல் கை ரிட்சியின் கேங்ஸ்டர் படங்களிலும் இப்படிப்பட்ட வசனங்கள் & காட்சிகள் இருக்கும் (RocknRolla & Revolver).

பொதுவாக ஒரு திரைப்படம் சுவாரஸ்யமாக இருக்கிறது என்றால், கதாபாத்திரங்களின் பின்னணியை நன்றாக தயார் செய்திருத்தல் வேண்டும். திரைப்படத்தில் இடம்பெறாவிட்டாலும் பரவாயில்லை. அந்தப் பின்னணியை நினைவுபடுத்தும் வகையில் ஆங்காங்கே காட்சிகள் வைத்திருந்தால் போதுமானது. இந்தப் படத்தில் மேட்டர் படம் எடுக்கும் டாக்டரின் கதாபாத்திரம் அப்படிப்பட்டது. அதேபோல், எந்தத் திரைக்கதையாக இருந்தாலும் சரி, அதில் வரும் காட்சிகளை ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்துதல் அவசியம். இது பாக்யராஜின் படங்களில் இருக்கும். படத்தின் முதல்பாதியில் ஒரு காட்சி, இரண்டம் பாதியில் வரும் காட்சியோடு கோர்க்கப்பட்டிருக்கும். இதுபோன்ற தொடர்புள்ள காட்சிகள், படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும். இந்தப் படத்தில் கிட்டத்தட்ட பல காட்சிகள் அப்படி இருக்கின்றன. இதோ இரண்டு உதாரணங்கள்:

படத்தில் பாப் மார்லியின் கெட்டப்பில் வந்து தாஸை அடிக்கும் இளைஞன் – இந்த இளைஞன், சும்மா அறிமுகமாகும் காட்சியில் மட்டுமே வருவான் என்றே நாம் நினைக்கக்கூடும். ஆனால், ‘சில்லரை இல்லப்பா’ என்று தாஸினால் இன்சல்ட் செய்யப்படும் இவன், அதன்பின் டாஸ்மாக் சண்டையில் முக்கியப்பங்கு வகிப்பான். அதேபோல் படத்தின் கடைசிக் காட்சியிலும் வருவான்.

படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே பிரம்மா & மேட்டர் டாக்டர் ஆகியவர்களைப் பற்றிய செய்தித்தாள் ந்யூஸ் – இது, படத்தில் போகப்போக இவர்கள் இருவரும் உள்ளே நுழைவார்கள் என்பதற்கான ட்ரெய்லர். அதேபோல் படம் ஆரம்பித்து பாதியைக் கடந்தபின் தடாலென்று ஒரு கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தக்கூடாது என்பது திரைக்கதை ரூல். இதில் முதல் காட்சியிலேயே நமக்கு அக்கதாபாத்திரங்களைப் பற்றிய க்ளூ கிடைத்துவிடுகிறது.

படத்தின் இறுதியில் பிரம்மாவினால் அடிக்கப்பட்டு இறக்கும் தருவாயில் இருக்கும் தாஸ், ஒருகணம் நினைவு தப்பி கிட்டத்தட்ட மரணத்தை அனுபவிக்கிறான். அப்போது அவனது காதலி ஷாலு அவனை சந்தித்து, அவனுக்காக ஒரு சிறிய பாடலைப் பாடுவாள். இதேல்லாம் தமிழில் யோசிக்க முடியாதது. Again, ஹாலிவுட்டில்தான் இதைப்போன்ற காட்சிகளை பார்த்திருக்கிறேன். அதேபோல், படத்தின் முடிவில் அப்படத்தின் பிரதான கதாபாத்திரங்கள் அதற்குப்பின்னர் என்ன செய்தார்கள் என்று விளக்குவதும் ஹாலிவுட் ஸ்டைல்தான்.

’பீட்ஸா’ திரைப்படத்தை நான் பார்த்தபோது எனக்கு விஜய் சேதுபதியின் நடிப்பு பிடிக்கவில்லை. அதை அந்த விமர்சனத்திலும் எழுதி இருந்தேன். ஆனால் இந்தப் படத்தில் அவரது நடிப்பில் எந்தக் குறையும் தெரியவில்லை.  ஒரு மிகப்பெரிய ரவுண்ட் தமிழில் வரப்போகும் நடிகர் இவர் என்பது இந்தப் படத்தில் தெரிகிறது. படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேருமே கேஷுவலாகவே நடித்திருக்கிறார்கள் . இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் – சந்தோஷ் நாராயணனின் இசை. கிதார், லோக்கல் தப்பட்டை போன்ற பலவிதமான இசைக்கருவிகளை வைத்துக்கொண்டு நன்றாக இசையமைத்திருக்கிறார். இது மட்டும் இல்லாமல், பாடல்களில் வித்தியாசம் காட்டியிருப்பது எனக்குப் பிடித்தது (குறிப்பாக ‘மாமா டவுசர் கழண்டுச்சி’, ’எல்லாம் கடந்து போகுமடா’ மற்றும் தீம் இசை-Sudden Light). இந்தப் பாடல்களைப் போல ஒரு பரிசோதனை முயற்சி எனக்குத் தெரிந்து தமிழில் அரிது (பாடல்களின் quality அல்ல நான் சொல்வது. பாடல்களின் பல்வேறு genreகளின் முயற்சியையே சொல்கிறேன்). சந்தோஷ் நாராயணன் கண்டிப்பாக தமிழ்ப் படங்களில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்துக்குச் செல்வதற்கு அத்தனை தகுதிகளும் அவருக்கு இருக்கிறது. அவசியம் செல்வார் என்று நம்புகிறேன்.

படத்தின் நெகட்டிவ் அம்சங்கள்?

படத்தின் இண்டர்வெல் ப்ளாக்கில் வரும் விபத்து, சரியாகப் படமாக்கப்படவில்லை. அது மிகவும் செயற்கையாக தெரிகிறது. நன்றாகப் படமாக்கப்பட்டிருக்கும் ஒரு மசாலாவில் இது கொஞ்சம் உறுத்தியது. படத்தின் இரண்டாம் பாதி தொய்வாக இருக்கிறது என்று ஃபேஸ்புக்கில் படித்தேன். ஆனால் எனக்கு அப்படித் தெரியவில்லை. ஏற்கெனவே திரைக்கதையை படித்திருந்ததாலோ என்னமோ இரண்டாம் பாதியும் மிகவும் விறுவிறுப்பாகவே சென்றது. மிகச்சில காட்சிகளில் இசைக்கருவிகளின் இரைச்சல் காதுகளைப் பதமாக்கியது. அவ்வளவே. உதயம் NH4 படத்தின் விமர்சனத்தில் எழுதியிருந்ததுபோல், ஒரு மசாலாவில் லாஜிகல் விஷயங்களைப் பார்க்கக்கூடாது என்பது என் கொள்கை. மசாலாவின் எல்லைகளுக்கு உட்பட்டு ஒரு படம் எப்படி நன்றாகப் படமாக்கப்பட்டிருக்கிறது என்பதே ஒரே மேட்டர்.

தமிழில் சூது கவ்வும் படத்தைப் போன்ற முயற்சிகள், தமிழ்ப்படங்களின் genre மாறிவருவதையே காட்டுகின்றன. தமிழில் ஒரு கை ரிட்சியின் படத்தைப் பார்ப்பது போன்ற அனுபவம் கொடுக்கும் இப்படிப்பட்ட படங்கள் வருவதை வரவேற்கிறேன்.

பி.கு

1. படத்தை நாங்கள் பார்த்தது, பெங்களூரின் ஃபேம் லிடோவில். ஹிந்திக்காரர்களைப் போன்று தோற்றம் தந்த ஒரு பெரிய குடும்பம் வந்திருந்தது. அவர்களைப் பார்த்து நாங்கள் குழம்பி, தியேட்டர் மாறி வந்துவிட்டோமோ என்று எண்ணிய காமெடியும் நடந்தது. ஆனால் அவர்கள்தான் விழுந்து புரண்டு சிரித்துக்கொண்டிருந்தனர். ’ஹை க்ளாஸ்’ தமிழர்கள் போலும்.

2. தியேட்டரில் ஆடியன்ஸின் எதிர்வினை அபாரமாக இருந்தது. படத்தின் ஒவ்வொரு திருப்பத்தின்போதும் சிரிப்பொலி. அத்தனை பேரும் படத்தை எஞ்சாய் செய்ததைப் பார்த்தேன்.

3. படத்தில் மிகச்சிறிய பங்காற்றியிருக்கும் ஒருவன் (நான்), படத்தை விமர்சிப்பது தகுமா? அது நடுநிலைமை என்ற கான்செப்டையே தகர்க்கிறதே? இந்தக் கேள்வி, விமர்சனமெழுத அமருமுன்னரே எனக்கு இருந்தது. ஆனால், எனக்கு ஒருவேளை இந்தப் படம் பிடித்திருக்காவிடில், பிடிக்கவில்லை என்றுதான் எழுதியிருப்பேன். அதில் சந்தேகமில்லை என்பதால், பிடித்திருக்கிறது என்றும் எழுத எந்தத் தயக்கமும் இல்லை. உண்மையில் திரைக்கதையைப் படித்த சமயத்திலேயே அதன் வித்தியாசமான தன்மை எனக்குப் பிடித்தது.

Facebook Comments

Sharing is caring!

fb Comments

comments

  Comments

34 Comments

 1. sundar

  I like that movie…

  Reply
 2. Arun

  // ஆட்டோவில் சென்றுகொண்டிருக்கும்போது பாக்கெட்டில் இருக்கும் பென் ட்ரைவ் சிதறுவது.// adhu pen drivea illa cassettea?

  Reply
  • அந்த பெண்ட்ரைவ் அல்லது டேப் – மேட்டர் முக்கியமில்லை பாஸ். அந்தக் காட்சி சொல்லும் விஷயமே முக்கியம் இல்லையா? :-)… ஸோ அதை ஃப்ரீயாக விட்டுவிடுவோம்.

   Reply
   • Arun

    Sari…vitruvom 😉

    Reply
   • Mohammed Arafath

    oru vimarsanam eluthuravar avar mela ulla thappa othukanum.. matravarkal thappa neenga sutti katum pothu unga thappa matum free ya vida solrathu niyayamaa?

    Reply
    • சொல்லவந்த கருத்து தான் முக்கியம்னு நினைக்கிறேன் அராஃபத். இதெல்லாம் ஒரு டைபோ மாதிரி தானே? தகவல் பிழை. இப்போ, அந்த இடத்துல பென் டிரைவ்ன்னு சொன்னாலோ, வீடியோ டேப்னு சொன்னாலோ, இல்லாட்டி LCD ப்ரோஜக்டர்னு சொன்னாலோ அதுனால சொல்லவந்த கருத்து மாறிடாது இல்லையா? அதுனால அது பிரச்னை இல்லன்னு நினைக்கிறேன்.

     ஆனா, அதே சமயம், இப்போ சூது கவ்வும் ஒரு ஐரோபிய படம்ன்னு சொன்னா அது தப்பு. அதுக்காக மன்னிப்பு கேட்பேன். இதுதான் என் கருத்து. மற்றவர்களின் தப்பு என்பது இந்த மாதிரி ட்ரிவியல் விஷயமா இருந்தா அதை சுட்டி காட்ட மாட்டேன். ஆனா நான் சொன்னமாதிரி ஏதாவது பெரிய விஷயமா இருந்தா சுட்டுவேன்.

     Reply
 3. மிகச் சில இடங்களில் உறுத்தினாலும் தமிழில் மிக அருமையான முழு நீள நகைச்சுவை திரைப்படம்.

  நானும் Fame Lido வில் தான் பார்த்தேன் (6.45 show). நீங்கள் இருந்தீர்கள் என்று தெரிந்திருந்தால் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும். 🙂

  Reply
  • அதே ஷோதான் நானும் 🙂 .. படம் பார்க்கப்போறதை ஃபேஸ்புக்ல போடல. தட்’ஸ் ஓகே.. இன்னொரு முறை மீட் பண்ணுவோம் ப்ரபு 🙂

   Reply
 4. எனக்கு ஒரு மிகப்பெரிய டவுட்டு, ஜிபிஎஸ் அ வண்டில தான வைப்பாங்க ? #பட் எல்லா விமர்சனத்துலையும் பைல வச்சுருந்தாங்க. ஆனா பாலோ பண்ணிட்டு போலன்னு வரும். ஆமாம் ஜிபிஎஸ் அ எங்க போகுதுன்னு கூடவா ட்ராக் பண்ணாம இருப்பாங்க :((( #மிடியல

  Reply
 5. saravana jackie

  ஐயோ உங்க பேர் வந்துச்ச கிரேட் ராஜேஷ் நா கவனிக்கவில்லை 🙁 அப்படி கவனிசீ இருந்த தியேட்டர்ல ohhhhh நு சவுண்ட் குடுத்து இருப. எனக்கு படம் ரொம்ப பிடிச்சே இருந்துது , screenplaly super, screenplay nambha nenaichatha yamatheketa erunthathu, unga name vanthathu enaku rombha santhosam rajesh 🙂 keep rocking …………………..
  (tamil la type pananum enaku asaithan aanal kastama eruku so enevarum comment ah na tamil ah type panna try panra boss 🙁 )

  Reply
 6. Balaji R

  Nice Review!!

  I just saw the movie Yestrerday in Karur and was surprised to see a note of thanks against your name and was guessing what part you might have played, now it is clear, Kudos Rajesh!!

  I completely enjoyed the movie. Interestingly i happend to saw Guy Ritchie’s movie “Snatch” a couple of weeks before and it kept me laughing from the start and i watched it a couple of times. I got the same feeling when i saw Suthu Kavvum, it is similar to Snatch and a great initiative from the part of Nalan. Hopefully he will go places from here!!

  Reply
 7. Sujatha

  இந்த படத்தின் மிக சிறப்பான அம்சமாக இருப்பது, பேசி வைத்துக் கொண்டது போல ஒவ்வொரு காட்சியையும் தமிழ் சினிமாவின் வழக்கத்திற்கு மாறாக எதிர்வினை படுத்துவதே…உதாரணம்

  1. கடத்தல்காரன் கொடூர வில்லன் இல்லை
  2. மிக நேர்மையான அரசியல்வாதி
  3. அலாரம் வைத்து காலைகடன்களை முடித்துவிட்டு பின்னர் குடிப்பது(பொதுவாக மாலை நேரங்களில் மட்டுமே இது நடக்கும்)
  4. இறந்து போன கதாநாயகி சோககீதம் வாசிக்காமல் ஹாலுசினஷனில் வந்து குஷிபடுத்துவது.
  5. போலீஸ் வில்லன் வசனம் பேசியே கொல்லாமல் மெளனமாக இருப்பது.
  6. முதல்வர் ராதாரவி பீசா சாப்பிடுவது
  7. வில்லன் அடிக்க அடிக்க வலியால் துடிக்காமல் விழுந்து விழுந்து சிரிப்பது

  போன்றவை…
  இது போன்றவை காலம் காலமாக தமிழ் சினிமாவை பார்த்து நொந்து போயிருக்கும் ரசிகனுக்கு ஒரு வித்தியாசமான பரிச்சயத்தையும் சிரிப்பை வரவழைக்கவும் ஏதுவாகிறது..ஒரு காட்சியின் நியதியை(லாஜிக்) வேறு வேறு கோணங்களில் யோசித்து அதில் சிறப்பான ஒன்றை தேர்ந்தெடுத்த யுக்தி தெரிகிறது. இது மிக சிறப்பு.

  இடைவேளைக்கப்புறம் படம் ஒரு பத்து நிமிடம் நொண்டுவது உண்மை. ஆனால் பின்னர் வரும் காட்சிகள் அந்த குறையை மறைக்கின்றன.

  மற்றபடி நல்ல ஒரு பொழுதுபோக்கு படம்.

  Reply
 8. Sivapathasundharam B

  தாங்கள் கூறி உள்ளதைப்போல் இது வி்த்தியாசமான முயற்சி என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் உங்களின் விமர்சனத்தின் நடுநிலை மீதுதான் சந்தேகம் எழுவதை பின் குறிப்பிட்ட காரணங்களால் தவிர்க்க முடியவில்லை.
  (1)ஓரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் கண்ணுக்கு மட்டும் தெரியும் பெண்’ என்பது தமிழில் மிக அரிது.
  கரு. பழநியப்பனின் ‘மந்திரப்புன்னகை’ ஏன் ஞாபகம் வரவில்லை(ஒரு வேளை அது பெண் இல்லை எனபதாலா?. சில தமிழ் குறும்படங்களிலும் இத்தகைய கருத்தாக்கம் வந்துள்ளதே?
  (2)ப்யூட்டி புல் மைண்ட் படத்தின் சில ஷாட்டுகளை பிரதி எடுத்திருப்பதை ஏன் கவனிக்கவில்லை?

  Reply
  • Rajesh Da Scorp

   நான் இன்னும் மந்திரப்புன்னகை பார்க்கவில்லை நண்பரே.. குறும்படங்கள் தமிழில் நான் இதுவரை பார்த்தது மிகச்சில படங்கள்தான். இன்னொன்று – நான் மிக அரிது என்றுதான் சொல்லியிருக்கிறேனே ஒழிய இல்லவேயில்லை என்று சொல்லவில்லையல்லவா? அதேபோல், ப்யூட்டிஃபுல் மைண்ட் படத்தின் காட்சிகளை பிரதி எடுத்திருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். என்னென்ன காட்சிகள் என்று சொன்னால் நானும் உணர்ந்துகொள்வேன்.

   Reply
   • முஹம்மது யூசுப்

    தற்பொழுதுதான் A Life Less Ordinary பார்த்தேன். தங்களது அந்திமழை கடத்தல் பற்றிய சினிமாக்கள் கட்டுரை வாயிலாகக் கேள்விப்பட்டு.

    அதில் வரும் சில காட்சிகள், சூது கவ்வும் படத்திற்கு inspiration ஆக அமைந்துள்ளது தெரிகிறது. கடத்தப்பட்டவர் தொலைபேசியில் தந்தையுடன் பயப்படுவதுபோல் நடிப்பது. கதாநாயகன் மிகத் தீவிரமான சூழ் நிலையில் சாதாரணமாக ஒரு Wrong Number பெண்மணியுடன் பேசுவது.

    இதனை ஒரு நல்ல inspiration க்கு உதாரணமாகக் கருதுகிறேன் நான். அப்பட்டமான உருவலாக இல்லாமல் சிறப்பாக எடுத்தாளப்பட்டுள்ளது.

    Reply
 9. boss…theatre la unga name ah kavanikka miss panten…inga FB la paathu thaan சூது கவ்வும் padathula unga pangum ithula irukunu therinju kitten…paathathum romba happy ah irunthuchu….vaazhthukkal…!!!!!!

  Reply
 10. karthick Nagendran

  எல்லோரும் கோர்ட் சீன் ஏன் மறந்தாற்கள், தமிழ் சினிமாவில் இந்த அளவிற்க்கு மிகவும் எதார்தமாக ( வழக்கத்தில் எப்படி ஒரு கோர்ட் இயங்குமோ அப்படி) இருக்கிறது ( எதார்த்த படங்கள் எடுக்கிறேன் எனக்கூறியவர்கள் கூட இதுவரை எடுத்ததில்லை) எ.கா வக்கில்: இவங்கதான் உன்ன கடத்துனாங்களா? அ நா : தலையாட்டுவார் , வக்கில் : தலையெல்லாம் ஆட்டக்கூடாது, ( உன்மையில் பாராசக்தி சிவாஜி போல் பக்கம் பக்கமாக எல்லாம் வசனம் பேச முடியாது , வக்கில் கேட்கிற கேள்விக்கு ,மட்டும்தான் பதில் சொல்ல முடியும்) , பி.கு ( கோர்டில் என் சொந்த அனுபவம்)

  Reply
 11. this is good comedy film in tamil film @also masala film..ok
  “the hero only can able to saw the heroine”.. you mentioned this is new try in tamil cinema but, i disagree this because (i thought you didn’t saw the “David” film) In “David” film vikram’s father character is designed like this..
  i also enjoy this film.. but 2nd half having too many logic mistakes& little boring
  the characters in this film designed very well..
  it having so many repeated scenes in tamil film….

  and i feel the film”David” is good one..in the film David i can’t remember any other movie scenes repeated.
  maybe it’s wrong sorry

  Reply
  • Rajesh Da Scorp

   Vasanth.. I have mentioned ‘அரிது’, having taken in to consideration the few attempts before. I have not seen David yet boss. But apart from David, I know there have been a few occurances of this type of characterization before. that’s y I mentioned that it’s rare. Thanks for the comment.

   Reply
 12. The character only visible to the hero is also tried in the film February 14. A cartoon character will be visible only to Bharat. The Lady character in this film is unnecessary but it is very interesting. Its a good one. But I believe the best one is yet to come. The director could have avoided drinking and smoking scenes. It makes the audience to feel that they are sitting in bar instead of theatre. This is my opinion.

  Reply
  • Sorry
   ” Its a good one. But I believe the best one is yet to come.”
   These lines should be
   “Its a good movie. But i believe the best one is yet to come from this director”

   Reply
 13. ஆடுகளம் டாப்ஸிக்கு அதையடுத்து நடித்த எந்த படமும் கைகொடுக்கவில்லை. ஏதோ மார்க்கெட்டில் இருந்தாலும் பேசப்படும் இடத்தில் இல்லை. இருப்பினும் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்காமல் விடமாட்டேன் என்று தொடர்ந்து போராடி வருகிறார். அதனால்தான், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள வலை படத்திற்கான அழைப்பு வந்ததும் உடனே ஓ.கே சொன்னார். அதே படததில் நயன்தாரா இருந்தபோதும் தான் ஓரங்கட்டப்படுவோம் என்பது தெரிந்தும் ஏற்று நடித்தார். ஆனால் இப்போதோ புலம்பிக்கொண்டு திரிகிறார் டாப்ஸி. காரணம், அப்படத்தில் இரண்டு ஹீரோயினிகளில் ஒருத்தி என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவருக்கான கேரக்டர் இல்லையாம். ஏதோ ஒரு கேரக்டரில்தான் வருகிறாராம். அதனால், அடுத்து தனது முழு நம்பிக்கையையும் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ள முனி மூன்றாம் பாகமான கங்கா படத்தின் மீது திருப்பியிருக்கிறார் அவர்.

  Reply
 14. மார்ட்டி, தனது திரைக்கதையான Seven Psychopaths பற்றி பில்லியிடம் ஒருநாள் பேசிக் கொண்டிருக்கிறான். புத்தமத சைக்கோ தான் படத்தின் பிரதானம், வழமையான ஹாலிவுட் ஜல்லியடிப்புகளற்ற, எந்நேரமும் கைகளில் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு சுத்தும் ஆட்களற்ற (சுருள்: In Bruges படக்கதை) திரைக்கதையை எழுதுவதே தனது விருப்பம். படம், பிற்பகுதியில் மெர்குரியைப் போல வெகுஇயல்பாக அன்பு & அமைதியை நோக்கிச் செல்ல வேண்டும் என்றவாறேல்லாம் பேசிக் கொண்டிருக்கிறான். திடீரென பில்லி, “Jack of diamonds” என்ற சீரியல் சைக்கோ கொலைகாரன் பற்றி பேப்பரில் வந்த செய்தியை மார்ட்டியிடம் காண்பிக்கிறான். இந்த சைக்கோவிற்கென்று ஒரு கொள்கை உள்ளது: மற்ற சீரியல் கில்லர்களை மட்டுமே இந்த சீரியல் கில்லர் கொல்வான் என்று பில்லி கூறுகிறான். இந்த கில்லரின் கொள்கைப் பிடிப்பினால் கவரப்பட்டு, மார்ட்டி இவனையே தனது தனது திரைக்கதையின் முதல் சைக்கோவாக முடிவு செய்கிறான். இதற்கிடையில், Dognapperசான பில்லியும் ஹன்ஸும் Costello என்பவனது ஷி ஷூ (Shih Tzu, படம் முழுக்க ஷிட் ஷூ என்றே சொல்வார்கள்) வகை நாயான bonnyயை கடத்திவிடுகின்றனர். இந்த காஸ்டெல்லோ ஒரு/பல மார்க்கமான பேர்வழி. சுருக்காமாக, மார்ட்டியின் திரைக்கதையில் – சைக்கோ: 3.

  Reply
 15. GP.Sakthivel

  padam nalla entertainment.hit film ana padathoda msg thavaraga thonalaya ungalukku.velai kidaikada oruvanum herovudan sernthu kadathal seivadu patri neenga eduvume sollala

  Reply
  • Rajesh Da Scorp

   படத்தோட மெசேஜ்ல எதுவும் பிரச்னை இல்லன்னு தான எனக்கு தோணுது சக்திவேல். என் பாயிண்ட் ஆஃப் வ்யூ என்னன்னா, ஒரு படத்துல கன்வே பண்ணுற செய்தி, நம்பவே முடியாட்டி மட்டுமே அது பத்தி விமர்சிக்க முடியும். ரியல் லைஃப்ல இந்த மாதிரி திருடர்கள் சேர்ந்து பண்ணுற பிரச்னைகளை எவ்வளவு படிச்சிருக்கோம்? எல்லாமே ஆல்ரெடி நடந்ததுதானே? அதுனால அதுல எனக்கு பெர்சனலா பிரச்னை இல்ல.

   Reply
 16. G.P.Sakthivel

  mannikkavum rajesh….

  nan yen padathin karuvai pattri ketten yenral ungal karuthu nadunilamaiyodu irukkiratha illai oru sarar sarnthu irukkiratha enpathai therindhu kolvatharkaka than….

  matra padi padam enakkum pidithirunthadu athil enda vitha matramum illai. puthiyavargalin padaippugali parattuvathu santhosathirkku uriyathe…

  oru padam vetriyadainthal muthalil santhosa padupavan nane. yen entral oru padam vettri petral adhil pani purintha anaivarukkum oru life kidaikkum…

  antha vagaiyil neengal vimarsanam ezhuthumpodhu sila visayangalai yosithu ezhudha vendum enpadhu en thaimaiyana vendukolaga kettukolkiren…

  ungal valai thalathirkku niraya pathivargal irukkirargal.niraya rasigarkal irukkirargal.ungal vimarsanathil oru padathin kuraigalai mattum sollamal,padathin niraigalai solli, sila thavirkka mudiyatha kuraigalai mattum solla vendum enpathu en thaimaiyana karuthu. yen entral ungal pathivargal yarum padam release anavudan,padathai parpathillai.ungal vimarsanathai partha pirage padathai parkkalama illai vendama entru mudivu seikirargal.(pathivargalin karuthukkalai vaithu solkiren) aagave ungal vimarsanam koncham menmaiyaga irukkalam endru ninaikkiren.

  yen entral cinemavil ungalai pontra pathirikkaiyalarin panku mukkiyamanathaga irukkiradu.oru padam sariyillai endru ezhuthuvathal athanal pathikka pada povadhu andha director mattum alla. athan producer mattrum athil panipurindha athanai perin vazhkkaiyum than…

  cinemavil ethanaiyo aandugal pasi pattiniyodu kanavugalai mattum thangi kondu entravadhu oru nal cinemavil sathithu vidalam endra avragalin kanavugalum pathikkappadum enpathu en karuthu. en enral indru anaithum internet mayamaga agivitta karanathal….

  athe pola neengal adikadi tamil cinemavai udharanam katti tamil cinemavil varuvadhu pola illamal endru solvathu tamil cinemavai kochai paduthuvadu pola ulladu. neengal merkkol katti sollum aangila iyakkunargal valarntha vidhamum valarum vidhamum veru. nam valarntha vidhamum valarum vidhamum veru… valarntha valarum vidham than oruvanin ennangalai theermanikiradhu….

  neengal solvadhu pola tamil cinemavil opening song,4 fight,3 duet song,koncham comedy ipadi than irukkiradhu adhu unmai than endralum, athai endha iyakkunarum vendum endru seivathillai.oru cinema edukka niraiya perai thirupthi padutha vendirukku.producer,actor,distributer, ipadi niraiya pera thirupthi padutha vendirukku.avargalayum thappu solla mudiyadhu…

  idhai oru udharanamaga solgiren….

  endhiran padathin vasul 300 cr

  thuppakki padathin vasul 200 cr

  kanna lattu thinna aasai padathin vsul 23 cr

  kalakalappu padathin vasul 18 cr

  aaranyakaandam …..?

  ippadi irukkum podhu oru producero,directoro endha mathiriyana padangalai edukkanum nu ninaippanga….?

  inga 90% audience entertainment padamathan irukkanum nu aasai paduranga. 2 1/2 mani nera cinema la avan rasithu sirithu vittu veliyil vanthal podhum nu than ninaikiranga.meethi iruukka 10% audience aaranyakaandam pontra padangali virumpuranga. andha 10% audience ah thirupthi padutha padam edutha,rendavadhu padam panna endha producer m chance kudukka mattanga.apparam namma life m andha oru padathoda mudichidum. adukku payandhe pala per andha mathiriyana padangalai kodupathillai.

  innum sila visayangalai pagirnthu kolla aasai padukiren…

  neengal adikadi aaranyakaandam padathai patri merkol katti solvirgal… athargaga than idhayum solla vendum endru ninaikiren, idhu cinemavil namba thagundha vattrangal solliyethe…

  padathin perumpalana seengal eduthu muditha piragu,padathai pottu partha director, than ninaithadhai pola varavillai enpathargaga anaithayum thooki pottu vittu thirumpavum shoot seithirukkirar. idhanal padathin shooting days 200 days thandi pochu.so budget 9 cr mela poiuducham. adhanal padatha virga mudila. idhanal padatha own release seiya vendiya kattaym vadhuduchi. idhanala directorkkum,producerkkum karuthu veru padu vandhu, padatha promote panna mudiyadhunu pathiyile vittutaram. director ah pazhi vangave original dvd kuda vidalanu solranga…

  iyakkunarai enakku romba pidikkum. aana than ninaitha mathiri vara vendum enral mudhalile plan seithu eduthirukka venum. ada vittu vittu thirumpavum shoot seithu thayarippalarai lose aga vaippadhu enda vidhathil niyayam endru enakku theriya villai.

  idhu varai neengal migavum nalla padangalukkum sila thavarana padangalukkum vimarsanam ezhuthirgal. inimel koncham parava illai. sila visayangalai sari panninuraundhal innum sirappaga irukkum enpadhu pondra padangalukkum neengal ezhutha vendum entru anbudan kettu kolkiren.

  idhuvarai nan solliyavaigalil thavarana thagavalo illai thavarana karutho irundhal mannikkavum

  anbudan

  G.P.Sakthivel

  Reply
  • Rajesh Da Scorp

   உங்கள் கருத்தை புரிந்துகொண்டேன் சக்திவேல்.

   முதலில் நான் சொல்லவிரும்பும் விஷயம் என்னவென்றால், நான் தமிழ் சினிமாவின் ரசிகன் என்பதே. சிறுவயதிலிருந்து தமிழ் சினிமா பார்த்து வளர்ந்தவன் நான். இங்க்லீஷ் படங்கள், பிற மொழிப்படங்கள் எல்லாமே பின்னால் வந்தவை. அவைகளைப் பார்க்குமுன்னர் என் புரிதலும் ரசனையும் வேறு; பார்த்தபின்னர் அது வேறாக மாறிவிட்டது. அதனால், உலகின் சிறந்த படங்கள் வரிசையில் நம்மூர் படங்கள் இல்லையே என்ற ஆதங்கத்தின் விளைவே என் விமர்சனங்கள். அதனால்தான் அவை சற்றே harshஆக இருக்கின்றன.

   இன்னொன்று – காப்பிகள். மிக சகஜமாக பல தமிழ்ப்படங்கள் சுடப்படுவதால் அவைகளைப் பற்றியும் என் கருத்து கடுமையாக இருக்கும்.

   மற்றபடி, ஒரு திரைப்படத்தின் பின்னால் உள்ள உழைப்பு பற்றி எனக்கு மிக நன்றாகவே தெரியும். ஒரு படத்தை நான் பார்க்கப்போகும் முன்னால் எனக்கு அந்தப் படத்தைப் பற்றிய எந்த நெகட்டிவ் கருத்தும் இருக்காது. படம் பார்க்கும்போது எனக்கு அந்தப் படம் என்ன அனுபவத்தைக் கொடுக்கிறது என்பதை வைத்தே நான் என் கருத்தை எழுதுவேன்.

   ஒரு படத்தின் கூட்டு முயற்சியால் அந்தப் படம் ஓடினால் அதில் இருக்கும் அனைவரும் வாழ்வு பெறுவார்கள் என்பது உண்மைதான். ஆனால், படத்தின் உயிர்நாடியான கதை+திரைக்கதை மிகவும் சாதாரணமாக இருந்து, படத்தை பாடல்கள்+காமெடி மூலம் ஒப்பேற்றுவது சரியாகாதல்லவா? உதாரணமாக முதல் மரியாதை, மகாநதி, வேதம் புதிது, மைனா, கடலோரக்கவிதைகள், நாயகன் போன்ற சில படங்கள் நன்றாகத்தானே ஓடியிருக்கின்றன? அவற்றில் கமர்ஷியல் அயிட்டங்கள் இருந்தாலும், கதையும் திரைக்கதையும் மிக நன்றாக உருவாக்கப்பட்டிருந்ததை மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

   ஆரண்ய காண்டத்தைப் பற்றிய உங்கள் கருத்து எனக்குப் புதிது. இயக்குனர் முதலிலேயே தெளிவான திட்டம் இட்டு அதன்படி படம் எடுக்க வேண்டும் என்ற கருத்துக்கு நானும் உடன்படுகிறேன். அதேசமயம், அந்தப் படத்தின் தனித்தன்மையையும் (மறுமுறை படமாக்கப்பட்டிருந்தாலும்) என்னால் மறுக்க முடியாது.

   இனிமேல் பார்க்க இருக்கும் தமிழ்ப்படங்களில் நீங்கள் சொன்னதுபோல நல்ல விஷயங்களை எழுத முயற்சிக்கிறேன். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. Feedback என்பது மிகவும் நல்ல விஷயம் என்று நினைப்பவன் நான். அது, நம்மை நாமே திருத்திக்கொள்ள உதவும். Cheers 🙂

   Reply
 17. G.P.சக்திவேல்

  மிக்க நன்றி ராஜேஷ்….

  இந்த பதிலை நான் உங்களிடம் இருந்து எதிர்ப்பார்க்கவில்லை. இனிமேல் பார்க்க இருக்கும் தமிழ்ப்படங்களில் நீங்கள் சொன்னதுபோல நல்ல விஷயங்களை எழுத முயற்ச்சிக்கிறேன் என்று சொன்னது உண்மையில் பாராட்டுக்குறியதே அதற்காக ஒரு நன்றி.

  இன்னொன்று – காப்பிகள். மிக சகஜமாக பல தமிழ்ப்படங்கள் சுடப்படுவதால் அவைகளைப் பற்றியும் என் கருத்து கடுமையாக இருக்கும் என்ற உங்கள் கருத்துக்கு சில உதாராணங்களை கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். அதற்காக நான் காப்பிகளை ஆதரிப்பதாகவோ அல்லது உங்களிடம் வாதத்திற்காக பேசுவதாகவோ நினைக்க மாட்டீா்கள் என்று நம்புகிறேன்.

  காப்பிகள் என்பது இன்று நேற்றல்ல சினிமா என்பது உருவானதில் இருந்தே இருந்து கொண்டுதான் இருக்கிறது. லஞ்சத்தை எப்படி ஒழிக்க முடியாதோ அதே போல இந்த காப்பிகளையும் ஒழிப்பது மிக கடினமே. ஏன் என்றால் எம்.ஜி.ஆா், சிவாஜி காலத்திலேயே காப்பிகள் தொடங்கி விட்டது. இன்று அது ஆலமரம் போல் வளா்ந்து விட்டது.

  காப்பிகள் பற்றி என் சந்தேகம் இது….

  முதல் மரியாதை, மகாநதி, வேதம் புதிது, மைனா, கடலோரக்கவிதைகள், நாயகன் போன்ற சில படங்கள் நன்றாகத்தானே ஓடியிருக்கின்றன என்று சொல்லும் நீங்கள் இந்த படங்களில் மகாநதி, மைனா, நாயகன் போன்ற படங்கள் காப்பிகள் என்பதை தாங்கள் அறிவீா்கள் (முதல் மரியாதை, கடலோர கவிதைகள், வேதம் புதிது படங்கள் எனக்கு தெரியவில்லை) இவை அனைத்தும் வெற்றிப் படங்களே. அதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை. இவற்றையெல்லாம் நீங்கள் வெற்றிபடங்களாக ஏற்றுக் கொள்ளும் போது கதை,திரைக்கதை சரியாக கையாண்டால் காப்பிகள் தப்பில்லை என்றுதானே அா்த்தம்.

  நாம் அணிந்திருக்கும் உடைகள் முதற்க் கொண்டு நாம் உண்ணும் உணவு, கலாச்சாரம் என்று எல்லாமே காப்பிகள்தான். அதையெல்லாம் நாகாீக வளா்ச்சி என்று எடுத்துக் கொள்ளும் நீங்கள் ஏன் சினிமாவை அப்படி ஏற்றுக் கொள்ள மறுக்கிறீா்கள்.

  ஒரு பத்திரிக்கையாளனாகிய நீங்கள் பார்த்த, படித்த புத்தகத்தில் திரைக்கதையை பற்றி இத்தனை விஷயங்கள் உள்ளனவா என்று ஆச்சா்யபட்டு, இதை நாம் மட்டும் புரிந்து கொண்டால் போதாது, நம் நண்பா்களும் சினிமாவை பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி அதை உங்கள் வலை தளத்திலும் இன்று தினகரன் இதழிலும் எழுதுகிறீா்கள்.(இதற்காக நீங்கள் ஸிட் பீல்டிடம் அனுமதி வாங்கீனீா்களா?,அல்லது அது தேவையில்லையா? என்று எனக்கு தெரியாது) ஒரு எழுத்தாளனாகவும் உங்களுக்கு இந்த யோசனை தோன்றும் போது, ஒரு இயக்குனராக தான் பார்த்த படங்களை, தான் ரசித்த சீன்களை தமிழ் ஆடியன்ஸ் பார்க்க வேண்டும் என்று எண்ணத்தில் வைத்தால் அதை மட்டும் எதிர்ப்பது ஏன்….?

  இதில் தவறான கருத்துக்களோ, தவறான தகவல்களோ இருந்தால் மன்னிக்கவும் ராஜேஷ்….

  அன்புடன்
  G.P.Sakthivel

  Reply
  • Rajesh Da Scorp

   ரைட். காப்பிகள் பற்றி என் கருத்தை தெளிவாக சொல்லிவிடுகிறேன்.

   நாயகன், காப்பி அல்ல. காட்ஃபாதர், ஒன்ஸ் அபான் அ டைம் இன் அமெரிக்கா ஆகிய படங்களின் இன்ஸ்பிரேஷனால் உருவாக்கப்பட்டது. அதில் ஓரிரண்டு காட்சிகள் காப்பி அடிக்கப்பட்டிருக்கும். முழுப்படமும் அல்ல. இன்ஸ்பையர் ஆகி படம் எடுப்பது மற்றும் அப்பட்ட காப்பி அடிப்பது ஆகிய இரண்டு விஷயங்களுமே ஆதியில் இருந்தே இருக்கின்றன. உண்மைதான். ஆனால், இன்ஸ்பையர் ஆகி எடுக்கும் படைப்பு, சில சமயம் ஒரிஜினல் படைப்பையும் விட சிறந்த கலை அனுபவத்தை அளிக்க வல்லது. அப்படி இருந்தால் அது அந்த ஒரிஜினலுக்குக் கிடைக்கும் மரியாதைதான். அப்படிப்பட்ட படங்களில் காப்பியடித்த மனப்பான்மை வராது. மாறாக, இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து சந்தோஷப்படவே தோன்றும். ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களை குரஸவா படமாக எடுத்திருக்கிறார். அது காப்பி அல்ல. அவை, ஷேக்ஸ்பியரின் நாடகங்களைவிடவும் சிறப்பாகவே இருக்கும். இது ஒரு உதாரணம்.

   அடுத்து, உடை, உணவு, கலாச்சாரம் ஆகியன காப்பிகள் என்று நீங்கள் சொல்லியிருப்பது பற்றி…

   உடைக்கும், உணவுக்கும், கலாச்சாரத்துக்கும் காப்புரிமை வழங்கப்பட்டிருக்கவில்லை. உடை என்பது ஒரு டெம்ப்ளேட் மட்டுமே. அந்த டெம்ப்ளேட்டுக்குள் ஒவ்வொரு நிறுவனமும் அவர்களின் பிரத்யேக வண்ணங்கள் மற்றும் இன்னபிற அம்சங்களை வார்த்து உடைகளை வடிக்கின்றன. உணவு, கலாச்சாரம் ஆகியனவும் அப்படியே. அவற்றுக்கெல்லாம் காப்புரிமை சட்டங்கள் இல்லை. ஆனால் திரைப்படம் என்பதும் திரைக்கதை என்பதும் ஒரு படைப்பு. தெளிவாக காப்புரிமை பெறப்பட்டது. எப்படி இன்னொருவரின் கண்டுபிடிப்பையோ கதையையோ நாம் நமது பெயரில் போட்டுக்கொள்வது குற்றமோ அப்படித்தான் திரைத்திருட்டும்.

   நான் மேலே சொல்லியிருக்கும் நாயகன் படத்தில் இருக்கும் காப்பியடிக்கப்பட்ட ஸீன்களைப் பார்த்துவிட்டு ஒரிஜினல் ஹாலிவுட் நிறுவனம் வழக்கு தொடர்ந்தால், திரைப்படத்தின் தயாரிப்பாளர் அவசியம் அவர்கள் கேட்கும் பணத்தை அளிக்கத்தான் வேண்டும். அவர்கள் செய்திருப்பது தண்டனைக்குரிய குற்றமே.

   நான் ஸிட் ஃபீல்ட் தொடரை அவருக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக தமிழில் வழங்கவில்லை. அப்படி செய்யவும் மாட்டேன். தினகரன் தொடரிலேயே இதுபற்றிய பெட்டிச்செய்தி ஒவ்வொரு வாரமும் வரும். அதைப் படித்துப் பார்த்திருந்தீர்கள் என்றால் இந்த சந்தேகம் உங்களுக்கு வந்திருக்காது. அதேபோல், நான் இவையெல்லாம் எனது சொந்தக் கருத்துகள் என்று பீலா விட்டுவிட்டு எழுதியிருந்தாலும் அது குற்றம். ஆனால், நான் தெளிவாக இவையெல்லாம் ஸிட் ஃபீல்டின் கருத்துகள் என்று சொல்லி, தமிழில் மொழிபெய்ர்க்கும் வேலையைத்தான் செய்துவருகிறேன். அப்படி திரைப்படங்களிலும் உரிய க்ரெடிட் அளித்து, உரிமை வாங்கி எடுக்கட்டுமே.. ஏன் இந்த காப்பியாளர்கள் தங்களின் சொந்த யோசனையில் உதித்த திரைப்படம் என்று அறிந்தே பொய் சொல்கிறார்கள் என்பதே என் கருத்து.

   நன்றி.

   Reply
 18. G.P.சக்திவேல்

  காப்பிகள் பற்றிய உங்கள் கருத்துக்கு நன்றி…

  இன்ஸ்பையர் ஆகி படம் எடுப்பது மற்றும் அப்பட்ட காப்பி அடிப்பது ஆகிய இரண்டு விஷயங்களுமே ஆதியில் இருந்தே இருக்கின்றன. உண்மைதான். ஆனால், இன்ஸ்பையர் ஆகி எடுக்கும் படைப்பு, சில சமயம் ஒரிஜினல் படைப்பையும் விட சிறந்த கலை அனுபவத்தை அளிக்க வல்லது. அப்படி இருந்தால் அது அந்த ஒரிஜினலுக்குக் கிடைக்கும் மரியாதைதான். அப்படிப்பட்ட படங்களில் காப்பியடித்த மனப்பான்மை வராது. மாறாக, இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து சந்தோஷப்படவே தோன்றும் என்ற உங்கள் கருத்துக்கு நானும் உடன் படுகிறேன்.

  ஏன் காப்பி அடிக்கிறா்கள் என்றால் யாருக்கு தெரிய போகிறது என்ற எண்ணம்தான். அப்படியே தெரிந்தாலும் நூற்றில் ஒருவருக்கே தெரியும். அதனால் என்ன ஆகிட போகிறது என்ற எண்ணம்தான்.

  தினகரனில் நீங்கள் பெட்டி செய்தியாக போட்டுள்ளீா்கள் என்று சொன்னீா்கள் நான் அதை படிக்கவில்லை. நான் உங்கள் வலைதளத்தில் மட்டுமே பார்த்துக் கொண்டு வருகிறேன். ஆகயால் மன்னிக்கவும்.

  சென்ற பதிவில் சிறந்த சினிமாக்கள் பட்டியளில் நம்மூா் படங்கள் இல்லையே என்ற ஆதங்கத்தில் கூறுவதாக சொன்னீா்கள். நிச்சயமாக இனிவரும் காலங்களில் அந்த குறை தீரும் என்றே நினைக்கிறேன். அதே போல் உலக சினிமா இயக்குனா்கள் நம்மை விட இருபது வருடங்கள் முன்னோக்கியே செல்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது. அதற்கு இங்குள்ள அரசியல் சூழ்நிலைகளும் ஒரு காரணம். அவா்கள் வேண்டாம் என்று தூக்கிப் போடும் கேமராக்களைத்தான் நாம் லேட்டஸ்ட் கேமிரா என்று உபயோகபடுத்திக் கொண்டிருக்கிறோம்.

  சென்ற பதிவில் இரண்டு வார்த்தை தவறாக எழுதிவிட்டேன். பத்திரிக்கையாளன், எழுத்தாளன் என்று அதற்கு மன்னிக்கவும்.

  Feedback என்பது மிகவும் நல்ல விஷயம் என்று நினைப்பவன் நான். அது, நம்மை நாமே திருத்திக்கொள்ள உதவும் என்று சொல்லி அடுத்தவா்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்தமைக்கு ஒரு நன்றி…

  நன்றி…

  Reply
 19. naveen

  ungalukku thanks card potta evlo venumnalum sombu adippeengala rajesh sir! mmmmm thodarattum ungal kalaipani!

  Reply
  • Rajesh Da Scorp

   நவீன். உங்க புத்திசாலித்தனமான (புடிங்கித்தனமான அல்லது புளுத்தித்தனமான ன்னு படிச்சிக்கங்க) இந்த கமெண்ட்டை கல்வெட்டுல எழுதி வெச்சி பக்கத்துலயே உக்காந்துக்கங்க.. ஏதாவது நாலணா எட்டணா கிடைக்கும் .. நானே வேணும்னாலும் போடுறேன்.

   Reply
   • DMJ

    விட்டுத்தள்ளுங்க ராஜேஷ். நம்ம ஊர்ல வயித்தெரிச்சல் புடிச்சவனுங்க அதிகம். நீங்க சரியான ரூட்ல தான் போறீங்க. எதுக்கும் லாயக்கில்லாதவங்க என்ன வேணுன்னாலும் பேசுவானுங்க. 🙁

    Reply
    • Rajesh Da Scorp

     Cheers DMJ 🙂

     Reply

Join the conversation