The Bullet Vanishes (2012) – Chinese

by Rajesh May 20, 2013   world cinema

Sharing is caring!

ஷெர்லக் ஹோம்ஸ் பற்றி நமது தளத்தைப் படிக்கும் நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றி எக்கச்சக்க கட்டுரைகள் எழுதியாயிற்று. ஹோம்ஸ், தனது துறையில் ஒரு ஜீனியஸ். அவருக்குத் தெரியாத பல விஷயங்கள் உண்டு (சூரியன்தான் பூமியைச் சுற்றுகிறது என்று எண்ணுபவர் அவர்) என்றாலும், துப்பறிவதில் அவருக்கு நிகர் அவர்தான். பலவிதமான காலடித்தடங்களை ஆராய்ந்து கண்டுபிடிப்பது முதல், எந்தெந்தப் பகுதியில் எப்படிப்பட்ட சேறு இருக்கிறது, நகரின் பலவிதமான சாலைகள், மனித உடலில் நேரும் ஆயுதங்களின் பாதிப்புகள், குற்றம் நடந்த இடத்தில் இருக்கும் சின்னச்சின்ன தடயங்களை வைத்தே குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் திறன், யாரை அல்லது எதைப் பார்த்தாலும், பார்வைக்குக் கிடைக்கும் விஷயங்களை வைத்துக்கொண்டு நிறைய தகவல்களை தெரிந்துகொள்ளுதல் போன்ற பலவிதமான குணாதிசயங்கள் உடைய ஒரு கதாபாத்திரம் அது.

ஷெர்லக் ஹோம்ஸ் சைனாவில் வாழ்ந்தால் எப்படி இருக்கும்?

Cut to

[divider]

தூக்கில் தொங்கும்போது கழுத்தின் சதையில் கயிறு அழுத்துவதால், கழுத்தைச் சுற்றியும் கெட்டியான, சிவப்பான தழும்புகள் உருவாகின்றன. முகம் சற்றே நீலமாக மாறுகிறது. கண்ணினுள் இருக்கும் ரத்த நாளங்கள் வெடிக்கின்றன. கழுத்தின் ஆரம்பத்தில் இருக்கும் Hyoid எலும்பு உடையும் அபாயம் உருவாகிறது. அந்த எலும்பு உடைந்தால் உடனடி மூச்சுத்திணறல் மற்றும் மரணம் ஆகியன சம்பவிக்கும்.

Cut to

[divider]

1930. சைனா. ஸோங் டோங்லூ என்பவர் அங்கிருக்கும் ஒரு குறிப்பிட்ட சிறையின் சூப்ரிண்டெண்டெண்ட். கைதிகளிடம் பேசி, அவர்களின் கதையைத் தெரிந்துகொள்வது இவரது பொழுதுபோக்கு. டோங்லூவின் புலனாய்வுத் திறமை பற்றி அவரது உயரதிகாரிக்குத் தெரிந்ததால், அவருக்கு பிரமோஷன் கொடுக்கப்பட்டு, சைனாவின் டியான்செங் பிராந்தியத்துக்கு மாற்றல் அளிக்கப்படுகிறது. காரணம், அங்கு இருக்கும் காவல்துறையின் ஊழல்களை வேரறுப்பது. டோங்லூ தனது மாற்றலையும் பதவி உயர்வையும் வழக்கப்படி எந்த சந்தோஷமோ துயரமோ இன்றி ஏற்றுக்கொள்கிறார். அவரைப்பொறுத்தவரையில், அவர் கடன் பணி செய்து கிடப்பதே. ஆகவே டியான்செங் பிராந்தியத்துக்குப் பயணிக்கிறார்.

Cut To

காலடித்தடத்தை வைத்து ஒரு நபரைக் கண்டுபிடிப்பது சுலபம். உதாரணத்துக்கு, ஒரு கட்டிடத்தின் மாடியில் இருந்து அவன் தரையில் குதிக்கிறான் என்றால், குதித்தபின் மண்தரையில் ஏற்படும் காலடித்தடத்தின் அழுத்தத்தை வைத்து அவனது எடையை உடனடியாக கணிக்கமுடியும். கூடவே, அங்கிருந்து அவன் ஒடிய தடங்களை வைத்து – அவனது வலது மற்றும் இடது காலடித்தடங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை கணக்கிட்டு – அவனது உயரத்தையும் கண்டுபிடிக்க இயலும். அந்த தடங்கள் ஒரே பாணியில் இல்லாமல் ஒழுங்கற்று இருந்தால், குதிக்கும்போது அவன் கால்களை காயப்படுத்திக்கொண்டான் என்று பொருள். கூடவே, அவனது காலடித்தடங்களின் அழுத்தத்தை வைத்து, எந்தக் காலை அவன் முதலில் உபயோகிக்கிறான் என்று புரிந்துகொள்ளலாம். அப்படி புரிந்துகொண்டால், அவனது வயது, எடை, உயரம், அவனது கைப்பழக்கம் (விபரீத அர்த்தம் எதையும் புரிந்துகொள்ளவேண்டாம். இடதா அல்லது வலதுகையாளனா என்பது – ஷிட். இங்கேயும் விபரீத அர்த்தம் வருகிறதே) முதலியன புரிந்துவிடும். அதன்பின் அவன் எந்தக் கும்பலினுள் இருந்தாலும் அவனை பிடிப்பது எளிது.

Cut to

[divider]

டியான்செங் பிராந்தியம். அங்கே காவல்துறையின் சூப்பர்ஸ்டாராக விளங்குபவன், க்வோ ஸுயி. அவனைப் போல் குறிபார்த்து சுடுபவர்கள் அந்தப் பிராந்தியத்திலேயே இல்லை. மின்னல் வேகத்தில் துப்பாக்கியை எடுத்து, இலக்கை தவறாமல் சுட்டு வீழ்த்துபவன் அவன். க்வோ ஸுயிக்கு அநியாயத்தைக் கண்டாலே அலர்ஜி. நேர்மையே வெல்லவேண்டும் என்பதில் எந்த எல்லைக்கும் செல்பவன் அவன். இளைஞன்.

Cut to

[divider]

டிங் (Ding) என்பவன் டியான்செங் பிராந்தியத்தில் ஒரு துப்பாக்கி குண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்திருக்கும் நபர். அரசியல் தொடர்புகள் உள்ளவன். அவனது தொழிற்சாலையில் இருக்கும் ஒரு ஏழைப் பெண்ணை russsian roulette என்ற விளையாட்டின் மூலம் கொன்றவன். ரஷ்யன் ரூலெட் என்ன என்று கேட்கும் நபர்களுக்கு: ரிவால்வரில் உள்ள ஆறு ஓட்டைகளில் ஒரே குண்டை மட்டும் போட்டுவிட்டு, மற்ற ஐந்து ஓட்டைகள் உள்ள ஸிலிண்டரை சுற்றிவிட்டுவிட்டு, துப்பாக்கியை தன் தலையை நோக்கியோ அல்லது பிறரின் தலையை நோக்கியோ வைத்துக்கொண்டு அமுக்குவது. அதிர்ஷ்டம் அவனது பக்கம் இருந்தால் தலை சிதறாமல் இருக்கும். இல்லாவிடில் தலையின் குறுக்கே ஓட்டை விழும். இப்படிப்பட்ட ஒரு விளையாட்டின் மூலம் ஒரு பெண்ணைக் கொன்ற டிங், பெரும் பிரச்னைக்கு ஆளாகிறான். அந்தப் பெண்ணின் ஆவியின் மூலம், அந்தத் தொழிற்சாலையெங்கும் சுவர்களில் அந்தப் பெண்ணின் மர்ம வாசகங்கள் தென்படுகின்றன. மட்டுமல்லாமல் ஒவ்வொரு நபராக அந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் டிங்கின் ஆட்கள் இறக்கின்றனர். மிகவும் மர்மமான முறையில்.

Cut to
[divider]

டியான்செங் பிராந்தியத்துக்கு ஸோங் டோங்லூ வருகிறார். அவரை சந்திக்கிறான் க்வோ ஸுயி. அந்தப் பிராந்தியத்தின் இணையற்ற இரண்டு போலீஸ்காரர்கள் ஒன்றுசேர்கிறார்கள். இருவரும் டிங்கின் துப்பாக்கி தொழிற்சாலைக்கு வருகின்றனர். இதன்பின் என்ன நடக்கிறது?

இதுதான் The Bullet vanishes படத்தின் ஓப்பனிங்.

படத்தின் முதல் பாதி மின்னல்வேகத்தில் ஓடுகிறது. ஒவ்வொரு நொடியும் சஸ்பென்ஸ். அதன்பின் முடிச்சுகள் மெள்ள அவிழும்போது என்ன ஆகிறது என்பதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

ஷெர்லக் ஹோம்ஸின் கதைகளால் இன்ஸ்பையர் ஆன படம் இது என்பது படம் பார்க்கும்போதே தெரிகிறது. அவரது கதைகளில் வரும் சில சம்பவங்கள் இந்தப் படத்தில் இருக்கின்றன.

திரைக்கதையை எப்படி எழுத வேண்டும் என்பதற்கு இந்தப் படத்தின் முதல் பாதி ஒரு உதாரணம். படத்தில் பல காட்சிகள் ஒன்றுக்கொன்று கோர்க்கப்பட்டிருக்கின்றன. அப்படி இருந்தால்தான் இந்த வகையைச் சேர்ந்த படங்கள் சுவாரஸ்யமாக இருக்கும். படத்தின் முடிச்சுகள் அவிழ்வதை கூர்ந்து கவனியுங்கள். ஒவ்வொரு முடிச்சும் புத்திசாலித்தனமாக எழுதப்பட்டிருப்பது புரியும். குறிப்பாக, முதல் பாதி & இரண்டாம் பாதியில் இருக்கும் காட்சிகளின் தொடர்பை கவனித்தால், ஒரு சஸ்பென்ஸ் படத்தின் திரைக்கதை எப்படி இருக்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம்.

1930களில் சைனாவின் ஃபாரன்ஸிக் தொழில்நுட்பம் பற்றிய பல தகவல்கள் இந்தப் படத்தில் கிடைக்கும். இரவு நேரத்தில் பார்க்கவேண்டிய த்ரில்லர் இது.

பி.கு – கருந்தேளில் இதுவரை வந்திருக்கும் ஷெர்லக் ஹோம்ஸைப் பற்றிய கட்டுரைகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்க.

Facebook Comments

Sharing is caring!

fb Comments

comments

  Comments

11 Comments

 1. Liked d trailer and the review… and…got the good site to watch this movie…(movies2k)

  Reply
  • Rajesh Da Scorp

   Cheers boss

   Reply
 2. naren

  இப்ப தான் படம் பார்த்தேன், சூப்பர். Chinese movie’ல இப்படி ஒரு படம் பாக்கறது இது தான் first time. thanks.. next movie – Thieves… hope the same thrill in it.

  Reply
  • Rajesh Da Scorp

   உங்களுக்குப் பிடித்தது குறித்து சந்தோஷம் நரேன். தீவ்ஸ் நல்லா இருந்திச்சா?

   Reply
 3. எல்லா படங்களையும் தரவிறக்கம் செய்திருக்கிறேன்.ஆனால் எந்த படத்தினை பார்ப்பது என்பது பெருங்குலப்பமாக இருந்துக்கொண்டிருநதது.இந்த குழப்பத்தை பொறுத்தவரையில் காமதேனு வரம் போல் உங்கள் விமர்சனப்பதிவுகள். உங்கள் விமர்சனம் படித்துவிட்டு பார்ப்பது மிகவும் ஜாலி யான அனுபவம், இந்த விமர்சனங்கள் ஒரு எழுத்து வகையறா ட்ரைலர் போல் தான் எனக்கு,அதனால் என் சிஸ்டத்தில் உள்ள தரவிரக்கின படங்கள் ஈசியாக உங்கள் விமர்சனப்பதிவுகளால் ஷாட்லிஸ்ட் செய்யப்பட்டு விடுகின்றன. தேங்க்ஸ் பார் தி கிரேட் ஹெல்ப் பாஸ், மேலும் நான் பார்க்கும் அதே சினிமா தான் அந்த அந்த காலகட்டங்களில் நீங்களும் பார்க்கிறீர்கள் என்பது எனக்கு இன்னும் ‘தற்செயலா’? என்பது போல் தான் உள்ளது. இது ஹாலிவுட், தமிழ் சினிமாவை பொறுத்த வரை ஆச்சர்ய படுவதற்கில்லை ஆனால் ஆசிய ஐரோப்பிய சினிமாக்களும் நாம் ஒரே காலக்கட்டத்தில் பார்ப்பது உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை எனக்கு இது ட்ரீட் தான், ஏனென்றால் நீங்கள் விமர்சனமும் எழுதுகிறீர்கள். அதான் ட்ரீட். அப்பறம் பாஸ் இன்னும் ‘the last tycoon’, ‘perfect number’, ‘lust caution’, ‘traffickers’ போன்ற படங்கள் ஆசிய சினிமா வகையறாவில் தரவிறக்கி உள்ளேன் இந்த படங்களின் விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறேன். முடிந்தால் பார்த்து ரசித்து விட்டு எழுதுங்கள். சினிமா ரசிகன் நல்லா ரசித்து எழுதும் சினிமா விமர்சனமாக உங்கள் விமர்சனங்கள் உள்ளதால் என்னை போன்ற படிக்க மட்டும் திறமையுள்ள சினிமா ரசிகனால் உங்கள் விமர்சனத்தை ரசித்து படித்து விட்டு பகிர முடிகிறது. உங்களுக்கு நன்றிகள் பல. சினிமாவை பொறுத்த வரை இதுவும் பொது சேவையே!

  பெர்சனலாக ஒரு கேள்வி – உங்கள் எழுத்து நடையை கண்டு சில சமயம் வியந்திருக்கிறேன். உங்களுக்கு திரைக்கதை எழுத நன்றாகவே வரும் என்பது இது போன்ற பதிவுகள் சான்று, நல்ல திறமைகள் வெளியே வர வேண்டும் அல்லது கொண்டு வர வேண்டும் என்பது என் எண்ணம்,கருது,கொள்கை, ஆசை,கனவு எதுவேண்டுமானாலும் வைத்துகொள்ளலாம். அதனால் விரைவில் நீங்கள் ஒரு நல்ல திரைக்கதை எழுத வேண்டும் (முக்கியமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்காக). எழுதுவீர்களா?

  Reply
  • Rajesh Da Scorp

   உங்கள் படங்களை நோட் செய்துவிட்டேன். நன்றி :).. ஒரே சமயத்தில் படம் பார்க்கும் விஷயம் எனக்கும் நடந்திருக்கிறது. எனது ப்லாக் ஆரம்பித்த புதிதில் ஹாலிவுட் பாலாவும் நானும் அப்படி ஒரே சமயத்தில் படம் பார்த்திருக்கிறோம் :-)..

   அப்புறம் திரைக்கதை எழுதுவது பற்றி – இப்போதுதானே உள்ளே லேசாக அடி எடுத்து வைத்திருக்கிறோம்? அடி பிரிக்கலாம். மெதுவாக… அவசியம் 🙂

   Reply
   • ஜமாய்க்கலாம் நண்பா

    Reply
 4. இப்போது தான் படத்தை பார்த்து முடித்தேன். மின்னல் வேகத்தில் படத்தின் திரைக்கதை இருக்கிறது என்றீர்கள் ஆனால் எனக்கென்னவோ மிகவும் மெதுவாக திரைக்கதை நகர்வது போன்ற உணர்வு, இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கலாமோ என்றே நினைக்கிறது மனம். இன்னும் கொஞ்சம் முழுமையான விமர்சனமும் நீங்கள் தரலாம் உங்களால் முடியும். மேலும் ‘cold war’ என்றொரு படம் போன வருடம் ஆசிய திரைப்பட விழாக்களில் அணைத்து விருதுகளையும் அள்ளிய படம். அதையும் நீங்கள் பார்க்குமாறு பரிந்துரைக்கிறேன். நன்றி

  Reply
  • Rajesh Da Scorp

   க்ரிஷ்ணா… இதைவிட விபரமாக எழுதினால், படத்தின் சஸ்பென்ஸ் போய்விடும் என்று நினைக்கிறேன். மட்டுமல்லாமல், இது போன்ற படங்கள், வேறு மொழிகளில் வரும் ஆக்‌ஷன் த்ரில்லர்கள் மட்டுமே.. நிஜமான ‘உலகப்படங்கள்’ இல்லை. அதனால்தான் விபரமாக எழுதுவதில்லை….

   எனக்கு இந்தப் படம் முதல் பாதி மிகவும் பிடித்தது. ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை இருக்கும்தானே? ஸோ ஃப்ரீயாக விடுங்கள் 🙂

   Reply
   • // இது போன்ற படங்கள், வேறு மொழிகளில் வரும் ஆக்‌ஷன் த்ரில்லர்கள் மட்டுமே.. நிஜமான ‘உலகப்படங்கள்’ இல்லை.// இது தான் என்னோட பார்வையும், same thinking

    Reply
 5. கொஞ்ச நாளா இந்த மாதிரி ஆக்‌ஷன் த்ரில்லர் மசாலா படங்கள் பற்றியும் நீங்க (பழையபடி) எழுத ஆரம்பிச்சதுல ரொம்ப சந்தோஷம்,,! 🙂 🙂 Will surely watch this and ‘Raid Redemption’ பாத்துட்டீங்களா ?? இந்தோனேசிய படம்னு நெனக்குறேன். செம்ம fast paced action movie… 🙂

  Reply

Join the conversation