குழந்தைகள் மனச்சிதைவும் உலகத் திரைப்படங்களும்

by Rajesh September 27, 2013   Cinema articles

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

முன்குறிப்பு

சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்த ‘வலசை‘ இதழில் நான் எழுதியிருந்த கட்டுரை இது.  குழந்தைகள் மனச்சிதைவு என்பது உலகத் திரைப்படங்களில் எப்படியெல்லாம் கையாளப்பட்டிருக்கிறது என்பதற்காக எழுதப்பட்ட கட்டுரை. இதன் மூல வடிவத்திலிருந்து சற்றே எளிமையாக எடிட் செய்து கொடுத்திருக்கிறேன். படித்துப் பாருங்கள்.

கட்டுரை கொஞ்சம் பெரியது. ஆகவே, பொறுமையாக படித்துப் பாருங்கள்.[divider]

குழந்தைகள் தங்களைச்சுற்றியுள்ள சமுதாயத்தினாலும் அந்தச் சமுதாயத்தின் இன்றியமையாத அங்கமாக விளங்கும் குடும்பம் என்ற அமைப்பினாலும் எப்படியெல்லாம் பாதிப்புகளை அடைகின்றனர் என்ற விஷயம் பலகாலமாகவே திரைப்படங்களில் கையாளப்பட்டே வருகின்றது. இந்த பாதிப்பானது நல்ல முறையிலும் இருக்கலாம் அல்லது அக்குழந்தையின் மனம் நோகும்படியான கொடூரமான பாதிப்பாகவும் அது இருக்கலாம். இதுவரை வெளியான இப்படிப்பட்ட படங்களில் பலவற்றை நாம் பார்க்கும்பொழுது, அப்படங்கள் வெளியான காலகட்டம், மனச்சிதைவைப் பற்றிய கருத்துகளை அப்படம் முன்வைப்பதற்கு ஒரு தவிர்க்கமுடியாத காரணியாக அமைந்துள்ளது என்பது மிக எளிதில் விளங்கும்.

புரியும்படி பார்க்கலாம்.

மௌனப்படங்கள் உலகின் திரையரங்குகளை ஆண்டு வந்த காலம். வருடம் 1921. மௌனப்படங்களில் குறிப்பிடத்தக்க நடிகரான சார்லி சாப்ளின், The Kid என்று ஒரு படத்தை வெளியிட்டார். இதுவே இவரது முதல் முழுநீளத் திரைப்படம். இந்தப் படத்தை திரைப்பட ரசிகர்கள் மறந்திருக்கமுடியாது. இப்படத்தில், தாயினால் புறக்கணிக்கப்பட்ட ஒரு சிறுவன், ஒரு திருடனால் வளர்க்கப்படுவதைப் பற்றிய விவரிப்பு இருக்கும். என்னதான் மௌனப்படமாக, நகைச்சுவைக் காட்சிகள் பல இருந்தாலும், இப்படத்தின் தீவிரமான சில காட்சிகள், பார்ப்பவர்களின் மனதை விட்டு அகன்றிருக்காது. இந்தப் படத்தின் பிரதான கதாபாத்திரம், ஐந்து வயது நிரம்பிய சிறுவன். தன்னை வளர்க்கும் திருடனோடு சேர்ந்து சிறுசிறு திருட்டுகள் புரிவான். அவனது தாயோ ஒரு பணக்கார சீமாட்டியாகிவிடுவாள். குழந்தைகளின் உணர்வுகள் பற்றிய ஒரு ஆரம்பகாலப் படமாக இதனைக் கொள்ளலாம். தன்னை வளர்த்த தந்தையைப் போன்ற ஒருவனிடமிருந்து போலீஸ் அதிகாரிகள் வலுக்கட்டாயமாகத் தன்னைத் தூக்கிச் செல்கையில், இக்குழந்தை (ஜாக்கி கூகன்) வெளிப்படுத்தும் ஏக்கமும் இயலாமையும் அழுகையும், அருமையாகவே காட்டப்பட்டிருக்கும். இக்காலகட்டத்தில், குழந்தைகள் மனச்சிதைவு என்ற ஒரு விஷயமே மருத்துவர்களின் எண்னத்துக்கு அப்பால் இருந்தது. இதனாலும், இப்படம் வெளிவந்த மௌனப்பட காலகட்டத்தினாலும், சாப்ளினின் நகைச்சுவை உணர்வு மேலிட்ட வரிசையான படங்களின் புகழாலும், இந்தப்படம் ஒரு குழந்தையின் மெல்லிய உணர்வுகளை மிக மேலோட்டமாகவே காண்பித்திருப்பது வெளிப்படை. இது மட்டுமல்லாமல், அக்காலகட்டத்தில் வெளிவந்த பல படங்கள், குழந்தைகளைப் பற்றியதாக இல்லாமல், குழந்தைகளுக்கானதாக இருந்தன. உதாரணமாக, Peter Pan, Wizard of Oz, The Adventures of prince Achmed ஆகிய படங்களைச் சொல்லலாம். ஆனால், ஆச்சரியகரமாக, சாப்ளினின் ‘த கிட்’ வெளியான மறுவருடமே, குழந்தைகளைப் பற்றிய குறிப்பிடத்தக்க மற்றொரு படம் வெளியானது. Our Gang என்ற அப்படம் வெளியான ஆண்டு 1922. இந்தப் படத்தின் சிறப்பம்சம் என்னவெனில், குழந்தைகளை அவர்களது இயல்பான குறும்புத்தனத்தோடும் குணாம்சங்களோடுமே படம்பிடித்திருப்பதே. அக்காலத்திய பிற படங்களில் (த கிட் உட்பட), குழந்தைகளை பெரியவர்கள் போல் நடிக்கவைத்துப் படமாக்குவதே வழக்கம். இதற்கு எதிர்வெட்டாக, குழந்தைகளின் இயல்பான செய்கைகளோடு இப்படம் வெளிவந்து, பெரும் பாராட்டைப் பெற்றது. கூடவே, இப்படத்தில் ஆண்கள், பெண்கள், வெள்ளையர்கள், கறுப்பர்கள் ஆகிய அத்தனை வகைக் குழந்தைகளும் ஒரேபோன்ற முக்கியத்துவத்தோடு காட்டப்பட்டதாலும் (அக்காலத்தில் இது நினைத்தே பார்த்திருக்கமுடியாத விஷயம்) இப்படம் இன்றுவரை நினைத்துப்பார்க்கப்படுகிறது.

இக்காலகட்டத்தில் வெளியான பல்வேறு ஃபாண்டஸி திரைப்படங்களுக்கு நடுவே வெளியான இன்னொரு குறிப்பிடத்தகுந்த படம் – Bambi (1942). இது வால்ட் டிஸ்னியின் கார்ட்டூன் திரைப்படம். இப்படம், தனது கண்முன்னே சுடப்பட்டு இறக்கும் தாயைப் பார்க்கும் குட்டிமான் ஒன்றைப் பற்றிய கதை. இப்படத்தில் மனிதன் தான் வில்லன். இந்த மானின் பெயரே பாம்பி. இது வளர்ந்த பின்னர், இதன் ஜோடியான ஃபலீன் என்ற மானையும் வேட்டைநாய்கள் சகிதம் மனிதன் துரத்துகிறான். இறுதியில் ஃபலீன் தப்பிக்க, பாம்பி சுடப்பட்டாலும் ஓடிவிடுகிறது. ஃபலீன் இரண்டு மான் குட்டிகளை ஈன, பாம்பி காவல்புரிவதோடு படம் முடிகிறது. இந்தப் படத்தின் கரு, தாயின் பிரிவால் வருத்தமடையும் குழந்தையைப் பற்றியது. சிறுவயதிலேயே பாம்பி என்ற மான் அடையும் மனவலி. வளர்ந்தபின்னரும் மனைவியின் பிரிவைக் கண்முன்னர் காணுகிறது இம்மான். ஆனால் மனைவியைத் தப்புவிக்கிறது. இறுதியில் மனைவியுடன் சேர்கிறது. தாயின் பிரிவால் ஆரம்பத்தில் வருத்தமடையும் இந்த மான், அந்த நிகழ்வாலேயே மான்களின் இயல்பைவிடவும் கோபமிக்கதாக உருவாவதாகக் காட்டப்பட்டிருக்கும். இந்தக் கோபத்தாலேயே ரோன்னோ என்ற மானை அது சண்டையிட்டு வென்று, ஃபலீனைத் தனது ஜோடியாக வரித்துக்கொள்வதாகவும் இருக்கும். இது உண்மையில் நடக்கக்கூடியதே. இக்கட்டுரையின் துவக்கத்தில் நாம் பார்த்ததுபோல, சிறுவயதில் நிகழும் மரணம் / பிரிவு ஆகியவைகளால் பாதிக்கப்படும் குழந்தைகள், மன அழுத்த மிகுதியால் வன்முறை உணர்வைக் கைக்கொள்வது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், இந்தக் காலகட்டத்தில் மருத்துவத் துறையில் குழந்தைகளின் மனச்சிதைவு பற்றிய மிக ஆரம்பநிலை பரிசோதனைகளே மேற்கொள்ளப்பட்டு வந்தன. எனவே தங்களளவில் அனுபவித்து அறிந்திருக்கக்கூடிய சில அனுபவங்களை வைத்தே இப்படங்கள் எடுக்கப்பட்டன. எந்தவிதமான மருத்துவக்குறிப்புகளோ அல்லது புத்தகங்களோ இப்படங்களில் உபயோகிக்கப்படவில்லை. இந்தப் படங்களே கூட மனச்சிதைவு என்ற குறிப்பிட்ட விஷயத்தை மையமாகக் கொண்டே எடுக்கப்பட்டனவா என்றால் அப்படி இல்லை என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியிருக்கிறது.

இதே காலகட்டத்தில் உலகெங்கும் உள்ள பிற நாடுகளிலும் திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வந்தன. அகிரா குரோஸவா போன்ற திரைப்பட மேதைகள் படங்கள் எடுக்கத்துவங்கியிருந்த காலம். ஃப்ரான்ஸ்வா ட்ரூஃபோ (François Truffaut) என்ற இருபத்தேழு வயது இளைஞன் எடுத்த ‘400 Blows’என்ற ஃப்ரெஞ்ச் திரைப்படம், குழந்தைகள் சிறுவயதில் சந்திக்கக்கூடிய பிரச்னைகளைப் பற்றிய துல்லியமான பதிவாக உலகெங்கும் புகழ்பெற்றது. ஃட்ரூபோ ஒரு விமர்சகராக அவரது திரைவாழ்வைத் துவங்கியவர். ஆண்டோய்ன் டாய்னல் என்ற பனிரண்டு வயது சிறுவனைப் பற்றிய படம் இது. அவனது வளர்ப்புத்தந்தையால் துன்புறுத்தப்பட்டு, பள்ளி ஆசிரியரால் திருட்டுப்பட்டம் கட்டப்பட்டு, சிறுவயதிலேயே மனச்சிதைவு அடையும் சிறுவன் அவன். இதன்பின் தந்தையின் டைப்ரைட்டரைத் திருடி, அதன்மூலம் வரும் பணத்தில் வீட்டை விட்டு ஓடத் திட்டமிடுகிறான் டாய்னல். ஆனால் தந்தையால் பிடிக்கப்பட்டு, போலீஸில் ஒப்புவிக்கப்படுகிறான். இரவில் டாய்னல் விடப்படுவது கொடூரமான வன்கொடுமைகள் புரிந்த கைதிகளுடன். இதன்பின் நீதிபதியின் பரிந்துரைப்படியும், அவனது தாயின் எண்ணப்படியும், நம்மூரின் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியைப் போன்ற ஒரு அமைப்பில் சேர்க்கப்படுகிறான். அங்கே ஒரு மனநோய் மருத்துவரால் டாய்னலின் உள்ளத்தில் இருக்கும் துயரங்கள் மெல்ல மெல்ல வெளிவருகின்றன. மிகச்சிறுவயதிலிருந்தே கடலின்பால் ஈர்க்கப்பட்ட டாய்னல், அந்த விடுதியிலிருந்து தப்பித்து சமுத்திரத்தை அடைந்து, அங்கிருந்து திரும்பி நடப்பதோடு படம் முடிகிறது.

நான் ஆராய்ந்த அளவில், குழந்தைகள் மனச்சிதைவைப் பற்றிய ஆரம்பகால தத்ரூபமானதொரு படமாக இப்படம் விளங்குகிறது. படத்தில் வரும் சிறுவன் டாய்னல், அவனைச்சுற்றியுள்ள சமுதாயத்தால் தவறாகவே புரிந்துகொள்ளப்படுகிறான். அந்தச் சமுதாயத்தின் தீர்ப்புகள் அவனது மனதை காயப்படுத்துகின்றன. இதுமட்டுமல்லாமல், அவனது தாயின்மீதே அவனுக்குக் கோபம் இருக்கிறது. காரணம், வேறொரு மனிதனை அவள் முத்தமிடுவதை டாய்னல் பார்ப்பதே. அதே சமயத்தில் டாய்னலுக்கும், அவனது தாய், இவனைப்பற்றி நல்லவிதமாகவே தந்தையிடம் சொல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் டாய்னலின் தாயோ, அவளுக்கு இருக்கும் தொடர்பு பற்றி டாய்னல் தந்தையிடம் சொல்லிவிடுவானோ என்ற பயம். இதனாலேயே டாய்னலை அவள் அடக்கிவைக்க நினைக்கிறாள். டாய்னலின் தந்தையோ, நல்லவராகவே காட்டப்படுகிறார். அவரால் டாய்னல் பொய் சொல்லியிருப்பான் என்பதை நம்ப முடிவதில்லை. ஆனாலும் இறுதியில் அவர் டாய்னலை போலீஸில் பிடித்துக்கொடுக்கும் அளவு அவரது மனம் காயப்படுகிறது. இப்படி, ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களுக்கிடையே மற்ற உறுப்பினர்களைப் பற்றிய விமரிசனங்கள் அளவுக்கு மீறி வெளிப்படுவதால், சிறுவனான டாய்னலே அதிகமாக பாதிக்கப்படுகிறான். மனச்சிதைவு அடைகிறான். கூடவே, டாய்னலின் ஆசிரியை. எப்போதுமே கோபத்துடன், தன்னிடம் பயிலும் குழந்தைகளை தண்டிப்பதிலேயே குறியாக இருக்கும் அவரது இயல்பு.

இதேபோல், 1967ல் வெளிவந்த ஃப்ரெஞ்ச் படமான ‘மூஷெட்’ (Mouchette) என்ற படத்தையும் குறிப்பிட முடியும். புகழ்பெற்ற இயக்குநர் ராபர்ட் ப்ரெஸ்ஸன், இப்படத்தில் ஒரு சிறுமியின் மன உளைச்சல்களையும் பிரச்னைகளையும் பற்றி விளக்கியிருந்த விதம், இப்படம் பார்ப்பவர்களின் மனதில் ஆறாத வடுவை உருவாக்கக்கூடியது. மூஷெட்டின் தந்தை, ஒரு குடிகாரர். தாய், நோய்வாய்ப்பட்டிருப்பவள். அவளுக்கு ஒரு குழந்தை சகோதரனும் உண்டு. வீட்டின் அத்தனை வேலைகளையும் மூஷெட்தான் செய்யவேண்டும். அதேசமயம், பள்ளிக்கும் அவள் செல்லவேண்டும். பள்ளியில், இவளது பழைய உடையைப் பார்த்துப் பிற மாணவ மாணவிகள் கிண்டல் செய்கின்றனர். இவள் வகுப்பில் சரியாகப் பாடாததால், இவளைப் பியானோவை நோக்கித் தள்ளும் ஆசிரியை, பியானோவின் கட்டைகளை நோக்கி இவளது தலையை அழுத்தி, சரியான இசையை அதில் வாசிக்கிறார். அதன்பின் மறுபடி பாடத்துவங்கும் மூஷெட்டின் கண்களில் கண்ணீர் தாரைதாரையாக வழிந்தோடுகிறது. முகத்தை மூடிக்கொண்டு அழுகிறாள் மூஷெட். இப்படிப்பட்ட பல துன்பியல் சம்பவங்களால் மூடப்பட்டிருக்கும் மூஷெட்டின் வாழ்வில் அவள் பொருட்காட்சிக்கு செல்லும் ஒருசில நிமிடங்களில் சந்தோஷத்தின் கீற்று எட்டிப்பார்க்கிறது. ஆனால் அங்கும் வந்துவிடும் அவளது தந்தை, அவளை அறைந்துவிடுகிறார். இப்படிச்செல்லும் படத்தில் மூஷெட் ஒரு குடிகாரனால் வன்கலவி செய்யப்படுகிறாள். இறுதியில், அவளது தாயும் இறந்துவிட, தாயின் உடலை மூட உபயோகப்படும் துணியால் தன்னைச்சுற்றிக்கொண்டு, ஒரு ஆற்றில் உருண்டுசென்று மூழ்குவதாக இப்படம் முடிகிறது.

மனச்சிதைவின் வெளிப்பாடுகளை நமது முகத்தில் அறைவது போல சொல்லும் படம் இது. மனச்சிதைவு உருவாகும் விதம், அது எப்படி ஒரு சிறுமியின் மனதில் வளர்கிறது, அவளைச் சுற்றியுள்ள குடும்பமும் சமுதாயமும் அம்மனச்சிதைவை எப்படி வளர்க்கின்றன, மனச்சிதைவிலிருந்து வெளிவர அந்தச் சிறுமிக்குக் கிடைக்கும் வாய்ப்ப்பு (பொருட்காட்சியில் அவள் சந்திக்கும் இளைஞன்), அந்த வாய்ப்பும் அவளது தந்தையால் அவளுக்கு மறுக்கப்படுவது, இதன்பின் இறுதியில் தனது உயிரையே அவள் மாய்த்துக்கொள்வது என்ற வரிசையில் அமைந்திருக்கிறது இந்தப்படம்.

இந்த இரண்டு படங்களிலும் ஒரு ஒற்றுமை என்னவெனில், தமிழில் இதே சமயத்தில் வெளிவந்த சில படங்களைப் போல் (உதாரணம்: துலாபாரம்), அதீதமான துயரங்கள், சமுதாய வன்முறை பிரதான கதாபாத்திரத்தின் மீது திணிக்கப்படுதல், இதன்வாயிலாக அக்கதாபாத்திரம் தண்டனைக்குள்ளாதல் (அல்லது தற்கொலை செய்துகொள்ளல்) என்ற வடிவமே. குழந்தைகள் மனச்சிதைவைப் பற்றிய தெளிவான மருத்துவ ஆராய்ச்சிகள் இன்னமும் வெளிவந்திருக்கவில்லை. ஆகவே, இந்த இயக்குநர்கள் விரும்பியிருந்தாலும் மனச்சிதைவைப் பற்றிய தத்ரூபமான வெளிப்பாடாக இப்படங்கள் அமையாததன் காரணம் அதுவே. ஒப்பிட்டுப் பார்க்க ஒரு விரிவான அறிக்கையோ அல்லது பரிசோதனை முடிவுகளோ அவர்களிடத்தில் இருந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது.

அதேபோல் இப்படங்களை குழந்தைகள் விரும்பியிருப்பார்களா? இவை குழந்தைகளைப் பற்றிய படங்கள்தானேயன்றி, குழந்தைகளுக்கான படங்கள் அல்ல. ஒரு குழந்தையை ஈர்த்து அதற்குத் தேவையான விஷயங்களை படங்களில் வைத்து, அதன்மூலமாகவே அக்குழந்தையின் பிரச்னைகளைப் பற்றிப் பேசக்கூடிய படங்கள் இக்காலகட்டம் வரை இல்லை.

பைபோலார் டிஸார்டர் என்ற அதீத மனநிலை மாற்றங்களின் வெளிப்பாடு, குழந்தைகளின் மனநிலையை பாதிக்கக்கூடும் என்ற விஷயம் இந்த காலகட்டத்தில்தான் பரவலாகப் பேசப்பட்டது. குழந்தைகளுக்கிடையேகூட இந்த பைபோலார் டிஸார்டர் விரவியிருந்த கேஸ் ஃபைல்கள் இந்த சமயத்தில்தான் மருத்துவ பத்திரிக்கைகளில் வெளிவர ஆரம்பித்திருந்தன. அதேபோல், இந்த அதீத மனநிலை மாற்றங்கள், ஸ்கீட்ஸோஃப்ரினியா – மனநிலை மாற்றங்கள், சீரான எண்ணங்களைப் பாதித்து பித்தநிலையில் விடக்கூடிய நிலையாக – தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட துயரமும் நிகழ்ந்தது.

இந்தக் காலகட்டம் – அறுபதுகள்.

ஆண்டு – 1970. மறுபடியும் ஃப்ரான்ஸ். La Rupture என்ற படம் வெளியாகிறது. க்ளாட் ஷெப்ரோல் என்ற புகழ்வாய்ந்த இயக்குநரின் படம். இது உண்மையில் ஒரு த்ரில்லர். இப்படத்தில், சார்லஸ் என்ற மனநிலை சரியில்லாத தந்தை, தனது மகன் மைக்கேலை காயப்படுத்திவிடுகிறான். மனைவியையும் தாக்குகிறான். மகன் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். அவனது தாய், ஹெலன் விவாகரத்துக்கு அப்பீல் செய்கிறாள். சார்லஸின் பெற்றோர்கள், மைக்கேலின் இந்த நிலைக்கு ஹெலன்தான் காரணம் என்று வாதிட்டு, மைக்கேலை தங்களது வளர்ப்பின்கீழ் எடுத்துக்கொள்ள முயல்கின்றனர். ஆனால் அதை எதிர்க்கிறாள் ஹெலன். இதனால் பால் தாமஸ் என்ற அவர்களது உறவினனை ஹெலனைப் பற்றித் துப்பறிய அமர்த்துகின்றனர். ஹெலனின் பழைய வாழ்க்கையில் ஏதாவது பிரச்னைகள் இருந்திருந்தால் அதனைக் கண்டுபிடிக்கவேண்டியது பாலின் வேலை. அப்போதுதான் மைக்கேலைத் தங்கள்வசம் எடுத்துக்கொள்வது சுமுகமாக முடியும் என்பதால். ஆனால் பாலோ ஹெலனைக் கொல்ல முடிவுசெய்கிறான். ஏனெனில், ஹெலனின் வாழ்வில் அவனால் எந்த கறுப்புப் புள்ளியையும் கண்டுபிடிக்க முடிவதில்லை.

இந்தப் படத்திலும் மேலே நாம் விரிவாகப் பார்த்த தந்தையின் கொடுமை, அதனால் குழந்தை பாதிக்கப்படுதல் ஆகியன பேசப்படுகின்றன. இந்த இடத்தில் ஒரு சந்தேகம் வரலாம். ஆங்கிலப்படங்கள் குழந்தை மனச்சிதைவைப்பற்றிய படங்கள் எடுக்கவே இல்லையா என்று. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் பிறமொழிப்படங்கள் – குறிப்பாக ஃப்ரெஞ்ச் – இப்பிரச்னையைப் பற்றிப் பேசின. ஹாலிவுட், எண்பதுகளிலிருந்துதான் குழந்தைகளின் மனச்சிதைவைக் கவனிக்க ஆரம்பித்தது. ஒருவேளை உலகெங்கும் எண்பதுகளில் வெளியிடப்பட்ட குறிப்பான மருத்துவ அறிக்கைகள் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

எண்பதுகளில், பரவலாக உலகெங்கும் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பல படங்கள் வெளியாயின. அவற்றில் குறிப்பிடத்தக்க படங்கள் – Pixote (1981): ப்ரஸீல், Annie (1982): ஆங்கிலம், Nausicaä of the valley of the wind (1984): ஜப்பான், Wanderers of the Desert (1986): துனீஷியா, Landscape in the Mist (1988): கிரேக்கம், Dead Poets Society (1989): ஆங்கிலம் ஆகியன.

இப்படங்களில், Pixote, மிகத்தீவிரமான இருண்டதொரு வாழ்க்கையைப் பற்றிப் பேசும் படம். ப்ரஸீலின் இயக்குநர் ஹெக்டர் பபென்கோ (இப்படத்துக்குப் பின்னர் அவர் இயக்கிய Carandiru உலகப்புகழ் பெற்ற படம்), ப்ரஸீலியா நகரங்களின் தெருக்களில் வாழும் ஏழைக் குழந்தைகளைப் பற்றிய படம். பிஷ்ஷாதே (Pixote) என்ற சிறுவன், தெருக்களிலிருந்து போலீஸாரால் பிடிக்கப்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்படுகிறான். அங்கே, பல சிறுவர்கள் வன்கலவி செய்யப்படுவதைக் கண்ணுறுகிறான். இவனும். சிறைக்காவலர்கள் மற்றும் வார்டனின் ஆதரவு இவற்றுக்கு உண்டு. சிறையில் இப்படிப்பட்ட வன்கலவிகளால் நிகழும் மரணங்கள், பிற சிறுவர்களின்மேல் சுமத்தப்பட்டு அவர்கள் தண்டிக்கப்படுகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர். இதன்பின் அங்கிருந்து தப்பிக்கும் பிஷ்ஷாதேவும் அவனது சில நண்பர்களும் (இவர்களில் Lilica என்ற பெண்சாயலுடைய சிறுவனும் அடக்கம்) போதைமருந்துக் கடத்தலில் ஈடுபடுகின்றனர். இப்படிச்செல்லும் கதை, பிஷ்ஷாடே இரண்டு கொலைகள் செய்வதில் முடிகிறது.பிஷ்ஷாடேயை வேலைக்கு அமர்த்திய சுயேலி என்ற பெண்ணிடம் பரிவை எதிர்பார்த்து செல்கிறான் அவன். ஆனால் அவளால் மறுதலிக்கப்பட்டு, துப்பாக்கி ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டு நடந்து மறையும் பிஷ்ஷாடேயின் காட்சியோடு 400 Blows படத்தைப்போலவே முடிகிறது இப்படம்.

Nausicaä of the valley of the wind என்பது அனிமேஷன் படம். வருங்காலத்தில் உலக அழிவுக்குப்பின் நடப்பது. Nausicaä என்ற இளவரசியின் சாகசங்களை சொல்லும் படம். Wanderers of the Desert என்பதோ, துனீஷியப் பாலைவனம் ஒன்றில் நடக்கும் மாயாஜாலக் கதை. பாலைவனம் ஒன்றில் பாடம் நடத்தச் செல்லும் ஆசிரியர் ஒருவர், அந்தப் பாலைவனத்தில் இருக்கும் மக்கள் அனைவருமே தூக்கத்தில் நடப்பதைப் போன்ற நிலையில் நடப்பதைப் பார்க்கிறார். அது ஒரு சாபம் என்பது அவருக்குத் தெரிகிறது. இப்படிப்பட்ட ஒரு கதையின் வாயிலாக துனீஷியாவின் நம்பிக்கைகள், அவர்களது கலாசாரம், உடையலங்காரம், முற்பிறவிக் கதைகள் ஆகிய பலவற்றின் திரை வடிவம் இது.

எண்பதுகளில்தான் குழந்தைகளுக்கு வரும் மனச்சிதைவு, பெரியவர்களுக்கு வரும் அதே மனச்சிதைவுதான் என்பதில் ஒத்த கருத்து மருத்துவர்களிடையே நிலவத் துவங்கியது. உலக அளவில், திரைப்படங்களில், இந்தக் காலகட்டத்தில்தான் குழந்தைகளைப் பற்றிய படங்களில் இக்குழந்தைகளின் நுண்ணிய செய்கைகள், எண்ணவோட்டங்கள், எதிர்வினைகள் ஆகியவை இக்காலகட்டத்தில், இதுவரை இல்லாத முறையில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டன. ஒரு உதாரணமாக, 1994ல் வெளியான ஃபாரஸ்ட் கம்ப் படத்தை எடுத்துக்கொள்ளலாம். இப்படத்தில், கதாநாயகன் ஃபாரஸ்ட் கம்ப், முழுதாக மனவளர்ச்சி அடையாத, வெகுளித்தனமான நபர். இளம்வயதில் தளைப்பட்டைகளோடு இருந்ததால், சக மாணவர்களின் கேலிக்கு ஆளாகிறான். அதன்பின் மாணவர்கள் இவனைத் துரத்தும்போது இவனுக்குப் பிடித்த தோழியின் உந்துதலின் பேரில் ஓடமுனைந்து, முதலில் முடியாமல், அதன்பின்னர் வெற்றிகரமாக தளைப்பட்டைகளை உடைத்துவீசிவிட்டு ஓடுகிறான். அதன்பின் கம்ப் வளர்ந்து, பல செயல்களைப் புரிகிறான்.  இந்தப் படத்தில் ஆட்டிஸம் சார்ந்த நடிப்பின் வெளிப்பாடுகளை டாம் ஹாங்க்ஸ் மூலமாகக் காணலாம்.  இதேபோல், 1995ல் வெளியான A Little Princess திரைப்படத்தையும் சொல்லமுடியும்.  முதல் உலகப்போரின் பின்னணியில் நடக்கும் கதை இது. ஸாரா என்ற பெண், முதல் உலகப்போரில் பங்குபெறச்சென்ற தந்தை இறந்துவிட்டதாகத் தகவல் வந்ததால், அவளது ந்யூயார்க் பள்ளியிலேயே வேலைக்காரியாக மாற்றப்படுகிறாள். அவளுடன் அதுநாள் வரை பழகிவந்த தோழிகள் அவளை ஒதுக்குகின்றனர். இதன்பின் மெல்லமெல்ல தோழிகளின் நட்பைத் திரும்பப்பெறும் ஸாரா, அவளது கொடூர குணம் படைத்த ஆசிரியையினால் தண்டனைக்குள்ளாகிறாள் (இங்கேயும் அதே கொடுங்கோல் ஆசிரியை). இவர்களது பக்கத்துக் கட்டிடத்தில் ஸாராவின் தந்தை, போரில் கண்களையும் நினைவுசக்தியையும் இழந்து நோயாளியாகத் தங்கவைக்கப்பட்டிருக்கிறார். ஸாரா ஒருநாள் அங்கே செல்ல, தனது தந்தையைக் கண்டு அழுகிறாள். ஆனால் தந்தைக்கோ அவளை அடையாளம் தெரிவதில்லை. இறுதியில் தந்தைக்கு நினைவு திரும்பி, அவரோடு இந்தியா செல்வதுடன் படம் முடிகிறது.

இதே காலகட்டத்தில், இரானியப்படங்கள் உலகின் கவனத்தை ஈர்க்கத்துவங்கின. ஈரானில் குழந்தைகளை வைத்துப் படமெடுப்பதில்தான் பிரச்னைகள் இருக்காது. காரணம், கொமேனி 1979ல் ஆட்சிக்கு வந்தவுடன் கடுமையான தணிக்கை முறையை விதித்ததே. இதன்பின்னர் இக்காலத்திய இரானிய இயக்குநர்கள் மெல்லத் தலையெடுக்கத் துவங்கினர். இந்த இயக்குநர்கள், குழந்தைகளைச் சுற்றியுள்ள பல பிரச்னைகளைப் பற்றிய அற்புதமான திரைப்படங்கள் எடுத்துள்ளனர்.

சில்ட்ரன் ஆஃப் ஹெவன் (1997) படத்தை எவரும் மறந்திருக்க முடியாது. மஜித் மஜிதியின் படம். பல விருதுகள் குவித்த இரானிய மொழிப்படம். அலி மற்றும் அவனது சகோதரி ஸஹ்ராவின் கதையை மென்சோகமும் நகைச்சுவையும் கலந்ததொரு திரைமொழியில் உலகுக்குச் சொல்லிய படம். இந்தப் படத்தில் இந்த இரண்டு குழந்தைகளின் பெற்றோரும் மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்கின்றனர். குடும்பத் தேவைகளைச் சந்திக்கத் தேவையான பணம் என்பது அறவே இல்லாத சூழல். ஐந்துமாத வாடகை பாக்கி. குழந்தைகளின் தாயுமே உடல்நிலை சரியில்லாத பெண். இத்தனைக்கும் மேலே ஸஹ்ராவின் ஷூக்கள் காணாமல் போகின்றன. இந்த சம்பவங்கள் அத்தனையுமே இக்குழந்தைகளின் மனதில் பதிந்தே இருக்கின்றன. புதுக்காலணிகள் வாங்குவதை நினைத்தே பார்க்க முடியாது. இந்த சூழலை எப்படி அக்குழந்தைகள் எதிர்கொள்கின்றனர்?

மனதை நெகிழச்செய்யும் பல தருணங்கள் இப்படத்தில் உண்டு. இந்தப் படத்தின் தொனியே, மகிழ்ச்சி, இனிய தருணங்கள் ஆகியவற்றைப் படம் பார்க்கும் நேயர்களுக்கு அளிப்பதே. என்னதான் ஸஹ்ராவின் குடும்பத்தின் ஏழ்மையை நாம் பார்க்க நேர்ந்தாலும், என்னதான் அந்தத் தருணங்கள் நமது மனதில் தைத்தாலும், இந்தக் குழந்தைகளின் செயல்களில் வெளிப்படும் சந்தோஷமும் நேரடியாக நமது மனங்களில் சென்று பதிகிறது என்பதையும் மறுக்கமுடியாது. இந்த வகையில் இப்படமும் சரி, இன்னும் பல இரானியப்படங்களும் சரி, நாம் ஏற்கெனவே பார்த்த சோகமே உருவான ஃப்ரெஞ்ச் படங்களிலிருந்து   மாறுபடுகின்றன.

குழந்தைகளின் மனச்சிதைவு என்பது அவர்களை தீய செயல்களை நோக்கியோ அல்லது மன அழுத்தத்தை நோக்கியோ தள்ளாத ஒரு சூழலை இப்படம் முன்வைக்கிறது எனலாம். இக்குழந்தைகள் என்னதான் ஏழ்மையில் வாடினாலும் தங்களது வாழ்வை மகிழ்ச்சியுடனே கழிப்பதை இப்படத்தில் காணலாம்.

இதே மஜீத் மஜிதி 1999 ல் எடுத்த படமான ‘Color of Paradise’, இதே விதமான கருத்தையே முன்வைக்கிறது. அதாவது, அப்படத்தில் கண்களற்ற குழந்தையே பிரதான கதாபாத்திரம். முஹம்மத் என்ற சிறுவன். அவனது பள்ளியில் இருந்து கோடை விடுமுறையில் அவனது தந்தையின் பொறுப்பில் விடப்படுகிறான். ஆனால் தந்தைக்கோ பார்வையற்ற மகனை தன்னுடன் வைத்துக்கொள்வதில் அவமானம். கூடவே, அவர் திருமணம் வேறு செய்துகொள்ளப்போகிறார். எங்கே பெண்ணின் குடும்பத்தினர் முஹம்மதைப் பார்த்ததும் அது ஒரு கெட்ட சகுனம் என்று திருமணத்தை நிறுத்திவிடப்போகிறார்களே என்ற பயத்தில், பார்வையில்லாத ஒரு தச்சரிடம் முகம்மதை விட்டுவிடுகிறார். அந்தத் தச்சரோ தன்னுடைய குறைபாட்டினால் கூனிக் குறுகி வாழ்பவர். அவரிடம் முஹம்மத், கடவுள் கருணையுள்ளவராக இருப்பதால், பார்வையற்ற மனிதர்களை மேலும் அதிகமாக விரும்புவார் என்று பேசுவதைக் கேட்டு நாணமுற்று வெளியே செல்கிறார் அவர். இப்படிச் செல்லும் கதை, இறுதியில் முஹம்மதின் பாட்டி முஹம்மதைப் பிரிந்த கவலையில் இறப்பதால் முஹம்மதின் தந்தையின் திருமணம் நிற்பதில், வேறுவழியில்லாமல் முகம்மதை தச்சரிடமிருந்து கூட்டிச்செல்ல வரும் தந்தை, ஆற்றில் பாலம் உடைந்ததால் மூழ்கும் முகம்மதைக் காப்பாற்றலாமா வேண்டாமா என்று யோசித்து, பின்னர் முகம்மதைக் காப்பதில் முடிகிறது. இறுதியில் மயக்கமடைந்திருந்த முஹம்மதின் விரல்கள் அசைகின்றன.

இப்படத்திலும் கிட்டத்தட்ட மனச்சிதைவு உறும் சூழலிலும் (பார்வையில்லை; தந்தையின் வெறுப்பு; சமுதாய பச்சாத்தாபம்), முஹம்மது என்ற அந்தச் சிறுவன் மகிழ்ச்சியாகவே வாழ்கிறான். தனது சகோதரிகளுடன் சென்று அவனது கிராமத்தின் மலைகளில் விளையாடுகிறான். தன்னைச்சுற்றி எழும் சத்தங்களைக் கேட்டு, அவற்றை அப்படியே எழுப்புகிறான். இந்தக் கதையில் யார் மனச்சிதைவின் காரணிகளுடன் நடமாடுகிறார்கள் என்றால், முகம்மதைச் சுற்றியுள்ள பெரியவர்களே. முகம்மதியன் தந்தை, அவனை ஒரு சுமையாகவே நினைக்கிறார். முஹம்மதைப் பார்த்துக்கொள்ளும் தச்சரோ, வாழ்வின் மீது நம்பிக்கையே இல்லாமல் இருக்கிறார். படத்தில் மனச்சிதைவு அடைய யாருக்கு அதிகக் காரணங்கள் இருக்கின்றனவோ, அந்த முஹம்மதைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கிறான்.

குழந்தைகள் மனச்சிதைவைப் பற்றிய சோகமான படங்களில், இப்படங்கள் ஒரு எதிர்வேட்டாக இருக்கின்றன என்று சொல்லலாம்.

2000ல் க்யுஸெப்பே தோர்னதோரே ( Giuseppe Tornatore) என்ற இத்தாலியன் இயக்குநரின் (சினிமா பேரடிஸோ) படமாக Malèna வெளிவந்தது. இந்தப் படத்தில், பனிரண்டு வயது சிறுவன் ரெனாடோ, அந்த ஊரின் மிக அழகான பெண்ணான மலேனாவின் மீது மையல் கொள்கிறான். அந்த ஊரில் எல்லோருக்குமே அந்தப் பெண்ணின் மீது ஒரு கண். அந்தப்பெண் செய்யும் சாதாரண செயல்கள் கூட, அவள் ஒரு விலைமகள் என்ற எண்ணத்தை அனைவரிடமும் தோற்றுவிக்கிறது. ஆனால் அவளோ, அவளது கணவன் இரண்டாம் உலகப்போரில் பங்குபெறச் சென்று, அங்கே இறந்துவிட்டதாக நம்பி, வருத்தத்தில் இருக்கிறாள். ஊரில் இருக்கும் பல் மருத்துவரின் மனைவி, தன கணவன் அவளிடம் செல்வதாக நினைத்து அவளை நீதிமன்றத்துக்கு இழுக்கிறாள். வக்கீல் ஃபீஸ் கொடுக்க மலேனாவிடம் பணம் இல்லாததால், வக்கீல் அவளோடு உறவு கொள்கிறார். அதன்பின் அவள் ஒரு விலைமகளாக மெல்ல மாறிவிடுகிறாள். இதன்பின் மலேனாவின் கணவன் திரும்பிவருகிறான். அவனிடம், சிறுவன் ரெனாடோ எழுதிய பெயரில்லாக் கடிதம் சேர்கிறது. அதில் இதுவரை நடந்த உண்மைகள் விளக்கப்பட்டிருக்கின்றன. இறுதியில், ‘குட்லக் மலேனா’ என்று அவளிடம் முதன்முறையாக ரெனாடோ பேசும் காட்சியோடு படம் முடிகிறது.

ஒரு சிறுவனின் பாலினக் கவர்ச்சி, அதன் வெளிப்பாடு (படத்தின் ஒரு காட்சியில், ஒரு விளைமகளோடு உறவு கொள்கிறான் ரெனாடோ. ஆனால் அந்த நேரத்தில் அவன் நினைப்பதோ, மலேனாவையே) ஆகியவை இப்படத்தில் வெளிப்படுகின்றன. படம் முழுதுமே மலேனாவின் பின்னாலேயே சுற்றுகிறான் ரெனாடோ. அவனது மனம் முழுதும் மலேனாவே நிறைந்திருக்கிறாள். அவளது வீட்டிளுள்ளும் அவ்வப்போது எட்டிப்பார்க்கிறான் அவன். ரெனாடோ என்ற பனிரண்டு வயது சிறுவனின் மனக்கிளர்ச்சி இப்படியாக இப்படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

தொண்ணூறுகளிலும் 2000த்திலும் குழந்தைகள் மனச்சிதைவில் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு உறுதியாகவே அதன் வெவ்வேறு கூறுகள் தரம்பிரிக்கப்பட்டுவிட்டன. ஆகவே, இந்தக் காலகட்டத்தில் வெளிவந்த படங்களிலும் இவற்றின் பாதிப்புகள் கொஞ்சமாவது இருப்பதைப் பார்க்கமுடியும். 2006ல் வெளிவந்த ‘Little Miss Sunshine’ திரைப்படத்தில், ஒரு குழந்தையின் மனதை உடைக்கக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக, 800 மைல்கல் தள்ளி நடக்கும் ஒரு அழகிப்போட்டியில் அக்குழந்தையை பங்கேற்கவைப்பதற்காக ஒரு குடும்பமே அவர்களது வேனில் சென்று, அக்குழந்தையின் மனம் நோகாமல், அந்தப் போட்டியில் அவள் தோற்ற பின்னரும் நடந்தது எதுவும் அவளைப் பாதிக்காமல் அவளை சந்தோஷமாகவே திரும்பக் கூட்டிவருவதைப் பார்க்கமுடியும்.

2002ல் வெளிவந்த ‘Le Papillon’ ஃப்ரெஞ்ச் திரைப்படத்திலோ, சிறுவயது மகனைப் பறிகொடுத்த துக்கத்தில், அவனது ஆசையான ஒரு அரிய பட்டாம்பூச்சியைப் பிடிக்கக் கிளம்பும் மனிதர் ஒருவர், அவருடன் அவருக்குத் தெரியாமல் அவரது காரில் ஒளிந்துகொண்டு பயணிக்கும் குட்டிப்பெண் ஒருத்தி, இந்த இருவருமே ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுதல், இதன்வாயிலாக நடக்கும் நிகழ்ச்சிகள் என்று கதை செல்கின்றது. இப்படத்தில், மனம் பாதிக்கப்பட்டிருப்பது அந்த ஜூலியன் என்ற நபரே. குட்டிப்பெண் எல்ஸாவின் அருகாமை அவரை சந்தோஷத்துக்குள்ளாக்குகிறது.

அதேசமயம், இந்தியாவில் 2007ல் வெளியான ‘தாரே ஸமீன் பர்’ என்ற படம், டிஸ்லெக்ஸியா என்ற, எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொள்வதில் குழந்தைகளுக்கு ஏற்படும் சிரமம் பற்றிய பிரச்னையைப் பேசுகிறது. படத்தில் வரும் சிறுவனான இஷாந்த், இந்த டிஸ்லெக்ஸியாவினால் பாதிக்கப்பட்டிருப்பவன். ஆனால் அவனது பெற்றோர்களுக்கு அது தெரிவதில்லை. அவனது பள்ளியின் ஆசிரியரான நிகும்ப் என்பவர்தான் அதனைக் கண்டுபிடிக்கிறார். அதன்பின் அந்தச் சிறுவனுக்கு உறுதுணையாக அவர் எப்படியெல்லாம் செயல்படுகிறார் என்பதே இந்தப் படம். இப்படத்தில், குறிப்பாகவே டிஸ்லெக்ஸியா சொல்லப்படுவதையும், அதனைச் சரிசெய்யும் வழிமுறைகளும் சொல்லப்படுவதைக் கவனியுங்கள். சிறுவனுக்கு எழுதவும் படிக்கவும் சிரமங்கள் இருந்தாலும், அவன் ஒரு அற்புதமான ஓவியனாக இருக்கிறான்.

L.I.E (Long Island Expressway) என்ற ஆங்கிலப்படம், ஹோவீ என்ற பதினைந்து வயது சிறுவனுக்கும், பிக் ஜான் என்ற பீடஃபைலுக்கும் இடையே இருக்கும் உறவைப் பற்றிய படம். இதிலும் ஹோவீ யின் தாய் விபத்தில் இறந்துவிடுவதாகவும், அவனது தந்தை அவனுடன் இல்லாததாகவும் அவனது பின்னணி சொல்லப்படுகிறது. ஆகவே, இயல்பிலேயே அவன் யாரிடமும் பேசாதவனாகவே சித்தரிக்கப்படுகிறான். இவனது நண்பர்களுடன் சுற்றும் நிமிடங்களே இவனது வாழ்வின் சந்தோஷத் தருணங்கள். இப்படி ஒரு நாள் இரவில் பிக் ஜான் என்ற மனிதனின் வீட்டுக்குள் நுழைகையில் பிக் ஜான் இவர்களைப் பார்த்துவிடுவதால், மறுநாள் ஹோவீஇடம் வந்து பேசும் பிக் ஜான், ஹோவீயின் நண்பன் ஆகிவிடுகிறான். அனால் அவன் குழந்தைகளுடன் உறவு கொள்பவன் என்பது இதன்பின்னர் தெரியவருகிறது. ஹோவீயுடன் பிக் ஜான் உறவு கொள்வதில்லை. ஆனால் அவர்களது பேச்சு கலவியைக் குறித்தே இருக்கிறது. இதன்பின்னர் ஹோவீயின் தந்தை சிறையில் இருப்பது ஜானின் மூலமாகத் தெரியவருகிறது. ஜானின் வீட்டிலேயே தங்குகிறான் ஹோவீ. ஜான் ஹோவீயை நன்றாகப் பார்த்துக்கொள்கிறான். வெட்டில் இருக்கும் ஸ்காட் என்ற ஜானின் காதலனை வெளியேற்றிவிடுகிறான் ஜான். இதனால் படத்தின் இறுதியில் ஸ்காட் ஜானைக் கொன்றுவிடுகிறான். மறுபடியும் தனித்து விடப்படுகிறான் ஹோவீ.

இந்தப் படத்தில் குழந்தைகளுடன் உறவு கொள்பவனான ஜான், ஹோவீயுடன் உறவுகொள்ளாமல் அவனைத் தந்தையைப் போல் பார்த்துக்கொள்வதன்மூலம் ஹோவீயின் தனிமை அவனை விட்டு அகல்கிறது. ஹோவீயின் குழப்பமான மனநிலையை நாமும் புரிந்துகொள்கிறோம். தந்தை தாய் ஆகியவர்கள் எவரும் அவனுடன் இல்லை. படத்தின் இறுதியில், பட ஆரம்பத்தில் அவன் எப்படி இருந்தானோ அதே சூழ்நிலைக்குத் திரும்புகிறான் ஹோவீ.

இதைப்போலவே The song of sparrows (2008), stanley ka dabba (2011), Twelve and Holding (2005), nobody knows (2004) போன்ற சில படங்களைச் சொல்லலாம். இந்த ஒவ்வொரு படமுமே குழந்தைகளின் தனிமை, அதனால் அவர்களின் மனதில் ஏற்படும் வெறுமை, மனச்சிதைவு ஆகியவற்றின் வெவ்வேறு கூறுகளை விவாதிக்கின்றன.

குழந்தைகளின் மனச்சிதைவு சம்மந்தப்பட்ட ஆராய்ச்சிகள் தற்போது மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளன. எந்த வகையான மனச்சிதைவின் கூறு தென்பட்டாலும், அவைகளை முற்றிலும் குணமாக்கும் வாய்ப்புகள் பிரகாசமாகவே இருக்கின்றன. நம்மளவில், நமது குடும்பத்திலும், நமக்குத் தெரிந்த வட்டங்களிலும் இருக்கும் குழந்தைகளின் மனதில் உள்ள பிரச்னைகளைப் புரிந்துகொள்ள நாம் முயன்றாலே போதுமானது. அதேபோல், நம்மாலியன்ற அளவு அவர்களின் பிஞ்சு மனதை குத்திக் காயப்படுத்தாமல், அவர்களின் உலகத்தில் நாம் புகுந்துகொண்டால், நமது வாழ்க்கையையே நாம் மாற்றியமைத்துக்கொள்ளக்கூடிய நன்மையையும் நம்மை வந்தடையும்.

குழந்தைகள் மனச்சிதைவைப் பற்றி விவாதிக்கும் படங்கள் எண்ணிறந்தவை. அவற்றில் ஒரு சில படங்களை மட்டும் எடுத்துக்கொண்டு அப்படங்களின் வாயிலாக இந்தப் பிரச்னை எப்படியெல்லாம் கையாளப்படுகிறது என்பதை நோக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். இக்கட்டுரை வாயிலாக இந்த நோக்கம் நிறைவேறியதா இல்லையா என்பதை இக்கட்டுரையைப் படிக்கும் நண்பர்கள்தான் சொல்லவேண்டும்.

இக்கட்டுரைக்குப் பெரிதும் உதவிய ஆராய்ச்சிக்குறிப்புகள்:

Depression: A Brief Overview of the Disorder in Childhood – James H. Johnson, Ph.D., ABPP University of Florida

2. PSYCHOSIS IN CHILDHOOD AND ITS MANAGEMENT – PARAMJIT T. JOSHI & KENNETH E. TOWBIN

பி.கு – இதில், நான் ஏற்கெனவே எழுதியிருக்கும் ஒரு முக்கியமான படம் விடுபட்டுவிட்டது. அது இதுதான் – Turtles Can Fly. க்ளிக் செய்து அதன் விமர்சனத்தையும் படித்துக்கொள்ளலாம்.

Facebook Comments

Sharing is caring!

Related Posts

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

3 Comments

 1. Prasanna Kannan

  A big WOWWW..

  Hats Off Rajesh.. Nice article this is..

  Really much impressed.. I’m wondering how on earth, you are picking up such titles 😉

  I assume you don’t mind me adding up few of my favorites movies in this genre.
  ‘Jibeuro’ (2002); a city kid’s days with her grandma in a remote village.
  ‘To kill a mocking bird’ (1962); Entire movie travels in Children’s view
  ‘Mud’ (2013); Bondage between 2 kids & a criminal
  ‘Stand by me’ (1986); Story of an adventure attempt made by 4 kids.

  Reply
  • Rajesh Da Scorp

   Thank you Prasanna. I inface missed a lot of other movies. But the intent was to write about a few movies, citing examples for this genre. Hence, I will take the movies you have mentioned here as considerations in case if I write in the furute a second part or something 🙂

   Reply
 2. Hi rajesh, really nice article. I think you missed “Tin Drum” in the list

  Reply

Join the conversation