சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ் கௌதமன்

by Rajesh January 28, 2014   Book Reviews

Sharing is caring!

‘நீ ரொம்பப் பெரிய புத்திசாலியாயிருக்கலாம். அறிவாளியாக் கூடயிருக்கலாம். நல்லா டிரஸ் பண்ணலாம். சாதுரியமாப் பேசலாம். நாலுபேரப் போல நாகரிகமாக நடக்கலாம். நகைச்சுவையாப் பேசலாம். பாக்குறதுக்குப் பரவாயில்லன்னு சொல்ற மாதிரி இருக்கலாம்…எத்தனயிருந்தாலும் ஓம் பெறப்ப ஒன்னால தாண்டமுடியுமா? ஒன்னச் சாய்க்கிறதுக்கு ஓம் பெறப்பு ஒண்ணே போதுண்டா. ஒன்னால என்ன செஞ்சிறமுடியும்? நீ சபிக்கப்பட்ட சாதியச் சேர்ந்தவன். நீ சாகுறவரை ஓம்பெறப்பு ஒன்ன விடாது. செத்த பெறகும் விடாது. ஓம் முதுகுக்குப் பின்னால ஒன்னப்பத்தி மத்தவங்க உச்சரிக்கத் தயங்குற ஓஞ் சாதிப்பேரு ஒண்ணு ஒட்டிக்கிட்டிருக்கே. அத அழிக்கமுடியுமா?’

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நமது கொழந்த, சென்னை புத்தகக் கண்காட்சியிலிருந்து எனக்கு இரண்டு புத்தகங்கள் வாங்கி அனுப்பினார். அதில் ஒன்றுதான் ராஜ் கௌதமன் எழுதிய ’சிலுவைராஜ் சரித்திரம்’ (இன்னொன்றை ஏற்கெனவே படித்தாகிவிட்டது. அதன் விமர்சனம் விரைவில் வரும்). இரண்டு வருடங்களாகப் படிக்காமலே வைத்திருந்த புத்தகத்தை இரண்டு வாரங்கள் முன்னர் திடீரென்று படிக்க ஆரம்பித்து உடனேயே முடித்துவிட்டேன். அதன் விளைவுதான் இந்தக் கட்டுரை. புத்தகத்தை அனுப்பியதற்காக நன்றி சொன்னால் அன்னாருக்குப் பிடிக்காது என்பதால்….

1950ம் ஆண்டில், ஆகஸ்ட் இருபத்தைந்தாம் நாள் வெள்ளிக்கிழமை இரவில், இராமநாதபுரம் ஜில்லா, திருவில்லிப்புத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு பிற்காவைச் சேர்ந்த புதுப்பட்டியில் ஆர்.சி. தெரு என்றழைக்கப்பட்ட ரோமன் கத்தோலிக்க வடக்குத் தெருவில் சிலுவைராஜ், அவனுடைய ராக்கம்மா பாட்டியின் குடிசையில் பிறக்கிறான். அன்றிலிருந்து நாவல் முடியும் 573ம் பக்கம் வரை அதகளம்தான். படிக்க ஆரம்பித்தால் கீழே வைக்கமுடியாத அவரது நடையில், ஒவ்வொரு பக்கத்திலும் நக்கல் துள்ளும் சம்பவங்கள், படிக்கும்போதே கண்முன்னர் வந்து நிற்கும் மனிதர்கள் மற்றும் மறக்கவே முடியாத சம்பவங்கள் வாயிலாக ராஜ் கௌதமன் விவரிக்கும் சிலுவைராஜின் சரித்திரம் அப்படிப்பட்டது.

பள்ளியில் சேரும் காலத்தில் இருந்தே சிலுவைராஜ் மிகவும் விளையாட்டுத்தனமாக இருந்திருக்கிறான். த்ரிங்கால் பேஸிக் பள்ளியில் சேர்ந்து படிக்கிறான். அவனது தந்தை ராணுவத்தில் இருக்கிறார். ராணுவம் என்றதும் பெரிதாக எண்ணிவிடாதீர்கள். ஆறாம் க்ளாஸ் படித்துவிட்டு, ஊரில் சுற்றிக்கொண்டு இருந்து, அதன்பின்னர் ஊரைவிட்டு ஓடி ராணுவத்தில் நேர்ந்த நபர் அவர். இதைச்சொல்வது சிலுவையேதான். சிலுவைக்கும் அவனது தந்தைக்கும் ஆகாது. காரணம் அவர் தனது பையனை (கொஞ்சம் அதீதமான) டிஸிப்ளினோடு வளர்க்கத் தலைப்பட்டதே. வருடம் ஒருமுறை இரண்டு மாத விடுப்பில் ஊருக்கு வரும் அவரிடம் சிலுவைராஜ் பட்ட பாட்டை ராஜ் கௌதமன் விபரமாக விளக்குகிறார் (இதுதான் அவனது களப்பிறர் காலமாக இருந்ததாம்). ஆனால் டிஸிப்ளின் என்றால் என்ன? அவரது அகராதியில் டிஸிப்ளின் என்றால், இளம்பருவத்தில் தந்தை செய்த அத்தனையையும் சிலுவைராஜ் செய்யாமல் இருக்கவேண்டும் என்பதே. அதாவது, தண்ணிப்பாம்பைப் பிடித்துக் கொல்லாமல் இருப்பது, கிணற்றில் குதித்து நீஞ்சாமல் இருப்பது, கரட்டாண்டியை சுருக்குப் போட்டுப் பிடித்து குறுக்கே அறுத்துக் கொல்லாமல் இருப்பது இன்னபிற. ஆனால் சிலுவைக்கோ இவைதான் வாழ்வின் இன்பத்துக்கே அடிப்படையாக இருந்த சம்பவங்கள். அப்படி இருக்கும்போது இருவருக்கும் எப்படி ஒத்துப்போகும்? அவ்வப்போது இரவில் ரம்மை எடுத்து திண்ணையில் அமர்ந்து அவர் அடிக்க ஆரம்பிக்கையில்தான் தாயார் எப்போதும் சிலுவையைப் பற்றிய பிராதுகளை அடுக்குவதும் ஒரு வழக்கமாகவே ஆகிப்போனது. மிலிட்டிரி ரம்மை அடித்துக்கொண்டே இதையெல்லாம் கேட்டுவிட்டு அவர் எப்படி சிலுவையை அடி வெளுப்பார் என்று நாவலைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

அதே நேரத்தில், நாவலில் சிலுவையின் சரித்திரம் மட்டுமே வரவும் இல்லை. சிலுவையின் பள்ளி மற்றும் கல்லூரிப் பருவங்களில் சுற்றுப்புறத்தில் வாழ்ந்து மறைந்த எக்கச்சக்கமான மனிதர்கள் இந்த நாவலில் வருகிறார்கள். அவர்கள் அனைவரிடமும் இருக்கும் பலவிதமான குணங்களைப் பற்றி விபரமாக எழுதுகிறார் ராஜ் கௌதமன். பல சாதிகள், அவற்றின் இடையே நிலவிய பிரச்னைகள் போன்ற முக்கியமான விஷயங்கள் நாவல் முழுக்கவே வருகின்றன. இது ஒரு அழுவாச்சி கதை அல்ல.  கதை முழுக்கவே சிலுவைராஜ் இந்த சமுதாய ஏற்றத்தாழ்வுகளை எப்படி எதிர்கொள்கிறான் என்பது விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. முந்தைய வாக்கியத்தை ஏன் அடித்தேன் என்றால்,  அவசியம் எல்லாரது வாழ்விலும் சந்தோஷமான தருணங்கள் இருக்கத்தான் செய்யும். அவற்றை ராஜ் கௌதமன் எப்படியெல்லாம் எழுதியிருக்கிறார் என்பதில் அந்த வாக்கியத்தின் அர்த்தம் மாறுபட்டுப் புரிந்துகொள்ளக்கூடும் என்பதால்தான். இங்லீஷில் ’ப்ளாக் காமெடி’ என்ற ஒரு பதம், சரியான அர்த்தத்தைத் தெரிந்துகொள்ளாமல் ப்ளாக் டீ சாப்பிடுவது போல சரமாரியாக அனைவராலும் தற்போது உபயோகப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. உண்மையில் மிகவும் சென்ஸிடிவான, சீரியஸ் பிரச்னை ஒன்றை எடுத்துக்கொண்டு, அதை நினைத்து அதன் தீவிரத்தன்மையை உணர்கையில் அது சிரிப்பை வழவழைத்தால் அதுவே ப்ளாக் காமெடி. அப்படி, சிலுவை சந்திக்கும் பல பிரச்னைகள், படிக்கும்போது எனக்கு சிரிப்பை வழவழைத்தன. ஆனால் சிலுவையுமே அந்தப் பிரச்னைகள் பலவற்றை விளையாட்டுத்தனமாகத்தான் கடந்திருக்கிறான். இருந்தாலும் அவ்வப்போது அவனுக்குள் இருக்கும் மனசாட்சி அவனுக்கு உண்மையைப் புரியவைக்கிறது. அப்படிப்பட்ட ஒரு தருணத்தைத்தான் மேலே மேற்கோள்களில் படித்தோம்.

தனது பாட்டி ராக்கியின் கதைகள் சிலுவைக்கு நன்றாக நினைவிருக்கின்றன. குறிப்பாக, ‘நரி நாட்டாம செய்த கதை’ கிட்டத்தட்ட நான்கு பக்கங்களுக்கு மேல் வருகிறது. ஏற்கெனவே தெரிந்த கதையாக இருந்தாலும், அதை ராக்கம்மா பாட்டி சொல்லும் பாணி மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கிறது. இதுபோல் கதையில் அவ்வப்போது ராக்கம்மா பாட்டி வருவார். சிலுவை மேல் உயிரையே வைத்திருந்த ஒரு ஜீவன் அது.

சிலுவைக்கு பள்ளி படிக்கும்போது டூரிங் டாக்கீஸில் படம் பார்ப்பது பிடிக்கிறது. திகம்பர சாமியாரில் ஆரம்பித்து, கற்பகம், பாசமலர் பார்க்கையில், சிவாஜி ‘கைவீசம்மா கைவீசு’ என்ற ரெண்டாங்கிளாஸ் பாட்டை அழுதுகொண்டே பாடியபோது தியேட்டரே சத்தம்போட்டு அழுகிறது. அந்தக் கணத்தில், பேசாமல் சிவாஜி ரசிகராகிவிடவேண்டியதுதான் என்ற எண்ணம் சிலுவையின் அடிமனதில் தோன்றுகிறது. நல்லவேளையாக எம்.ஜி.ஆர் ரசிகர்கள், ‘இப்புடியெல்லாம் எந்த ஆம்பளையாச்சும் அழுவானா? பயந்து குசுவுகிறவந்தாம் அழுவான். எம்.ஜி. ஆர் ஒரு வீரர் என்பதால் வில்லனை ஒத்தை அடியில் சாய்த்துவிடுவார். இப்பிடி சிவாஜி கெணக்கா பொம்பளை மாதிரி அழுதுகொண்டிருக்கமாட்டார்’ என்றெல்லாம் சொல்லி அவன் மனதை மாற்றி அவனை எம்.ஜி.ஆர் ரசிகன் ஆக்கிவிடுகிறார்கள். சிவாஜி ரசிகர்களுக்கும் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கும் அடிக்கடி சண்டைகள் நடக்கின்றன. மாற்றி மாற்றிப் போஸ்டர்களில் சாணி அடித்துக்கொள்கிறார்கள்.

சிலுவைக்கு சின்ன வயசுல மாட்டுக்கறி கிடைக்கிம். ஒரு மரக்கா கறி அஞ்சு ரூவா. ராக்கம்மா பாட்டிதான் கறி வாங்குவா. காஞ்சகறிக்குழம்புதான் சிலுவைக்கு ரொம்பப் புடிக்கும். குழம்பு கூட வைக்கவேண்டாம். அடுப்புக் கங்கில் புரட்டிச் சுட்டுத் தின்றாலே ரொம்ப ருசிதான். விளையாடப்போகும்போது கறியை டவுசர் சேப்பில் போட்டுக்கொண்டு போவான். திரும்பி வரும்போது சேப்பு காலியாகிவிடும்.

சவரிநாயகம் தாத்தாவின் மூத்த மகன் மொந்தன் மாமா, பலே திருடர். அவரது தந்தை சவரிநாயகம் தாத்தா, படுபயங்கர எம்.ஜி.ஆர் ரசிகர். ’சரோசாதேவி, சிவாஜியோடு நடிக்கையில் நெருங்கி நடிக்கமாட்டா. கொஞ்சம் தள்ளியே நடிப்பா. ஆனா எம்.சி.ஆரோடு நடிக்கையில் அவரைக் கட்டிப்புடிச்சிக்கிருவா. ஏன்னா எம்.சி.ஆருண்ணா அவளுக்கு ரொம்ப இஷ்டம்’ என்பது சவரிநாயகம் தாத்தாவின் கண்டுபிடிப்பு. இவரைப் போல் பலப்பல கதாபாத்திரங்கள் கதையெங்கும் ஆங்காங்கே வருகின்றன. எவரையும் மறக்க முடியாது.

சிலுவையின் தெருவில் நாய்களும் உண்டு. அதில் ஒரு நாய், மல்லாந்து கால விரிச்சிப் படுத்துக்கிடந்த மாலாண்டி பேத்தியை என்ன பண்ணியது என்பது மேலே சொன்ன ப்ளாக் காமெடிக்கு உதாரணம். சீக்கிரம் ஒலகம் அழியப்போவுதுடான்னு கிழடுகள் வேறு எச்சரித்தார்கள்.

சிலுவைக்குப் பூச்சிகள், சிறு பிராணிகள் மீது அளவுகடந்த பிரியம். எறும்புகளில் ஆரம்பித்து, பல்லிகள், தவக்களை, கரட்டாண்டி, பாம்பு, மீனு போன்றவைகளுக்கெல்லாம்  , உலக வாழ்க்கையின் துயரத்திலிருந்து அடிக்கடி விடைகொடுப்பான். நூதனமாக அவற்றைக் கொல்வது அவனுக்குப் பிடித்த பொழுதுபோக்கு. ஒருநாள் ஒரு பூனையை வேறு வளர்த்திருக்கிறான். பூனையுடன் சிலுவை செலவுசெய்த நாட்களைப் பற்றி வரும் பகுதி அட்டகாசம்.

இதுபோன்ற எண்ணற்ற சாகசங்களைச் செய்துகொண்டே, படிப்பிலும் நன்றாக விளங்கினான் சிலுவை. பள்ளியிலும் எக்கச்சக்க கேரக்டர்கள் உண்டு. நாடோடி என்ற இன்னாசி அப்படிப்பட்டவன். அவனும் செவத்தியான் என்ற நண்பனும் சேர்ந்து திருடப்போகும்போது சிலுவையையும் கூட்டு சேர்த்துக்கொள்கிறார்கள். பயங்கர சுவாரஸ்யமான சம்பவங்களுக்குப் பெறவு சிலுவை இனிமே களவாங்கக்கூடாது என்று முடிவு செய்கிறான்.

நடுநடுவே அவன் சார்ந்திருந்த கிறிஸ்துவ மதத்தைப் பற்றியும் சிலுவையின் கிண்டல்கள் ஓய்வதில்லை. எதைப்பார்த்தாலுமே அவனுக்கு நக்கல்தான். சிலுவ செஞ்ச பாவங்களுக்கு அவன் எப்பியோ செத்திருக்கணும் – கிறிஸ்தவ மத முறையின் படி. நல்லவேள. பாவ சங்கீர்த்தனம்னு ஒண்ணு இருந்திச்சு. அதனால ஒவ்வொரு வாரமும் தட்டிக்கு மறைவா கழுத்துல ஒரு பட்டைய போட்டுக்கிட்டு சேர்ல ஒக்காந்திருக்கும் குருவானவரிடம் மண்டியிட்டு ஏற்கெனவே மனப்பாடம் பண்ணி வெச்சிருக்கும் பாவப்பட்டியல சிலுவ மெதுவா ஒப்பிப்பான். இதோ இப்புடி:

‘பிதா சுதன் இஸ்பிரித்து சாந்துவின் பேராலே ஆமென். சாமி, நாங் கெட்ட வார்த்த சொன்னேன். அம்மாவத் திட்டுனேன். பெரியவர்களை எதிர்த்துப் பேசினேன். கீழ்ப்படியவில்லை. பூசை நேரத்துல பக்கத்துல இருந்தவங்ககிட்டப் பேசுனேன். பொய் சொன்னேன். சண்ட போட்டேன். களவாண்டேன்…’. உடனேயே குருவானவர், ‘என்ன களவாண்டே?’ என்று கேட்பார். முந்தைய வாரம் ‘அழி ரப்பர் சாமி’ன்னு சொல்லியிருந்ததால் அது வாயில் வந்து விடுகிறது. ஆனால் இந்த வாரம் அவன் களவாடவேயில்ல. எனவே அதுவே ஒரு பொய். அடுத்தவாட்டி களவாண்டேன்னு சொல்லகூடாதுனு அவன் எப்பிடி முடிவு பண்ணி வெச்சிருந்தாலும் தானா அது வாயில வந்திருது. இதனால பாவசங்கீர்த்தனத்துலயே பொய்யச் சொன்ன பாவத்தைப் பண்ணியவனாகிவிடுகிறான் சிலுவை. பாவசங்கீர்த்தனம் பண்ணினாலும் பாவம், பண்ணாட்டியும் பாவமா? சே! இப்பிடி எதுக்கெடுத்தாலும் பாவமா?

சிலுவையைப் பற்றிய ஒவ்வொரு விவரிப்பிலும் ராஜ் கௌதமன் நம்மைச் சிரிக்க வைக்கிறார். அவன் எட்டாம்பு முடித்தபின் மதுரை சென்மேரீஸில் இடம் கிடைக்கிறது. அது போர்டிங் ஸ்கூல். அந்தப் பள்ளியில் சிலுவையின் சாகஸங்கள் அடுத்து விரிகின்றன. பாதிரியார்கள் எதையெல்லாம் பாவம் என்று சொல்கிறார்கள் என்று ஒரு பகுதி வருகிறது. சுய இன்பத்தைப் பற்றியும் கல்யாணத்துக்கு முந்தைய உறவு, பிந்தைய உறவைப் பற்றியும் அவர்கள் சொல்கையில் சிலுவையின் மனது யோசிப்பது பிரமாதம். இதைப்போல் இனிமேல் ஆங்காங்கே சிலுவை யோசிப்பான். இதுவரை விளையாட்டுத்தனமான பகுதி. இனிமேல் வளர வளர தன்னைச் சுற்றியுள்ள சமுதாயம் தன்னை எப்படியெல்லாம் நடத்துகிறது என்பதை சிலுவை புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறான். தனது ஊரில் நடக்கும் சாதிச்சண்டைகள், கல்லூரியில் தனது பிரின்சிபால் தனக்கு வேலை கொடுத்ததும், ‘ஒரு ஹரிஜனுக்கு வேலை கொடுத்திருக்கிறேனாக்கும்’ என்று சிலுவையின் முன்னரே அனைவரிடமும் பீற்றிக்கொண்டது போன்ற பல சம்பவங்கள் நடக்கின்றன. ஒவ்வொரு சம்பவம் நடக்கையிலும் சிலுவை நினைப்பது, படித்துப் பெரிய ஆளாகி அவர்கள் முன்னர் நின்று வாழ்ந்து காட்டவேண்டும் என்பதையே.

பி.எஸ்.ஸி சுவாலஜி சேர்ந்து படிக்கிறான் சிலுவை. அங்கு படிக்கையில் அவனது பல்வேறு ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகள். இதன்பின்னர் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்க ஆரம்பிக்கையில், சிலுவை ஒன்றைப் புரிந்துகொள்கிறான். தமிழ் இலக்கியம் என்றாலே சாதியும் மதமும் சேர்ந்ததுதான் என்பதே அது. ஒவ்வொரு புலவரைப் பற்றிச் சொல்லும்போதும் இவர் பௌத்தர், சைவர், வைணவர், வீர சைவர், அந்தணர், வேளாளர், அரசர், வணிகர் என்றுதான் சொல்லிக் கொடுத்தார்கள். அந்த நேரத்தில்தான் அண்ணாதுரை முதல்வராகிறார்.

அரசியல்வாதிகளும் சிலுவையின் கிண்டல்களில் இருந்து தப்புவதில்லை. அண்ணா என்றால் மூக்குப்பொடி போட்டு மூக்கு அடைச்சமாதிரி மேடையில் பேசிவருபவர். எம்.ஜி.ஆரை ஐந்தடி தொலைவில் ஒருமுறை சிலுவை நேரில் பார்த்த சம்பவத்தையும் ராஜ் கௌதமன் விளக்குகிறார். அண்ணாவின் பேச்சுகளை இருமுறை சிலுவை கேட்டிருக்கிறான். ஒன்று – பிரச்சாரத்தின்போது. மற்றொன்று – இவனது கல்லூரிக்கு அவர் வருகை தந்தபோது. இரண்டு முறைகளிலும் அண்ணாவின் பேச்சு முற்றிலும் வேறு மாதிரி இருந்ததைக் கண்டு சிலுவைக்கு ஒரே ஆச்சரியம். பிரச்சாரத்தில் அரசியல் மட்டுமே. கல்லூரியிலோ, அரசியல் முற்றிலும் இல்லாது, ஷெல்லி, கீட்ஸ், திருக்குறள், இலக்கியம் என்று மேற்கோள் மழை பொழிகிறார் அண்ணா. இவர் அவசியம் ஒரு புத்திஜீவி என்ற முடிவுக்கு வருகிறான் சிலுவை.

நடுநடுவே அங்கிருந்த பாதிரியார்களைப் பற்றிய ரசமான குறிப்புகளும் வருகின்றன. பின்னர் பொன்னியின் செல்வனை இரண்டு மணி நேர நாடகமாக சிலுவை எழுதி, தனது புதுப்பட்டியில் அரங்கேற்ற நினைத்த நகைச்சுவையான பகுதிகள் (இங்கே பொன்னியின் செல்வனில் நாகநந்தி வருவதாக ராஜ் கௌதமன் எழுதியிருக்கிறார். அது ஒன்றுதான் இந்த நாவலின் ஒரே தடுக்கல்).

பின்னர் சிலுவை கண்ட காதல் கதைகள். அவனது மட்டுமல்லாமல், அவனது பகுதியிலும் கல்லூரியிலும் அவன் பார்த்த விதவிதமான காதல்கள் மிகவும் விபரமாக வருகின்றன.

பின்னர் சிலுவை சேவியர்ஸ் காலேஜில் தமிழ்த்தலைவர் ராஜாமணி தயவில் தமிழ் ட்யூட்டராகிறான். இரண்டு வருடம் அந்த வேலையைச் செய்து, அந்தப் பணத்தில் தமிழில் முதுகலைப்பட்டமும் பெறுகிறான். இந்தக் காலத்திலும் எக்கச்சக்கமான ரசமான சம்பவங்கள். பலவிதமான சமகால இலக்கியங்களைப் படிக்கிறான். தான் படித்த நூலாசிரியர்களைப் பட்டியல் இட்டு (புதுமைப்பித்தன், லா.ச.ராமாமிருதம், கு.ப.ராஜகோபாலன், ஆர்.ஷன்முகசுந்தரம், சிதம்பர சுப்பிரமணியம், க.நா.சுப்பிரமணியம், ஹெப்ஸிபா ஜேசுதாஸன், தி.ஜா, சி.சு.செல்லப்பா, வ.வே.சு.ஐயர், தொ.மு.சி.ரகுநாதன், இலங்கை செ. கணேசலிங்கம், டி.செல்வராஜ், க.கைலாசபதி, சுந்தர ராமசாமி) அவர்களிடம் என்ன விசேடங்கள் என்று சொல்கிறான். போலவே தொடக்ககால தமிழ் நாவல்களும் அவனுக்குப் பிடித்திருக்கின்றன (பி.ஆர்.ராஜமையர், அ.மாதவையா, நடேச சாஸ்திரி, குருஸ்வாமி சர்மா போன்றவர்கள்). இந்தக் காலகட்டத்தில் கல்லூரியில் இருந்துவந்த கிறிஸ்தவ ஃபாதர்களின் சாதி வாரியான அரசியல் பற்றியும் சிலுவை அவதானிக்கிறான்.

இந்தச் சமயத்தில்தான் மேலே முதலில் பார்த்த மேற்கோள் வருகிறது. இந்த சாதி சமுதாயத்துல அவனுக்கு என்று ஒதுக்கப்பட்ட பாத்திரத்தின் வரம்பை மீறி அவனால் ஒண்ணுஞ் செய்ய முடியாது என்பதைச் சிலுவை சரியாகத் தெரிந்துகொள்கிறான். அந்த நேரத்தில்தான் மாணவர் யூனியன் போராட்டம் சேவியர்ஸ் கல்லூரியில் வெடிக்கிறது. இதனால் பெரும் பிரச்னை ஆகி, சிலுவையின் இறுதியாண்டு முதுகலையில் பெரும்பாலான கட்டுப்பாடு மிகுந்த பாதிரிகள் அங்கிருந்து சென்றுவிட, மிகுந்த சுதந்திரத்தோடு படிக்கிறான் சிலுவை. சுதந்திரமான சூழலில்தான் மனிதனின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும் என்பதை அப்போதுதான் உணர்கிறான்.

இதன்பின்னர் வேலையில்லாப் பட்டதாரியாக மாறி, புதுப்பட்டியிலேயே முடங்குகிறான் சிலுவை. அவனது வாழ்க்கையின் மிகச் சோதனையான கட்டம் துவங்குகிறது. இந்தக் காலகட்டத்தில் கம்யூனிஸ்ட்களோடு பழக்கம். பின்னர் நக்ஸலைட்களுடன் பழக ஆரம்பிக்கிறான். போலீஸ் விசாரிக்கிறது. தந்தை அவமானப்படுத்துகிறார். அங்குமிங்கும் ஓடுகிறான். பெங்களூர் செல்கிறான். அங்கு நண்பனுடன் தங்குகையில் இருவருக்கும் இடையே பிரச்னை. தூக்க மாத்திரை தேடி அலைகிறான். ஓ வென்று ஒருநாள் ஒரு ஜனசந்தடி மிகுந்த பெங்களூரின் தெருவில் சத்தம்போட்டுக் கதறுகிறான். நண்பர் அவனை சமாதானப்படுத்துகிறார். மார்க்ஸியத்தைப் பற்றிய சந்தேகம் அவனுக்குள் எழுகிறது. மனிதர்கள் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகள், உறவுகள், உணர்ச்சிகள், விவகாரங்கள் போன்றவை பற்றி இந்த இருவராலும் ஒரு நிலைக்கு வர முடிவதில்லை என்பதை உணர்கிறார்கள். பின்னர் சிலுவை தனது ஊரான புதுப்பட்டிக்கே திரும்பிவந்து வீட்டுக்குள் ஒடுங்கிவிடுகிறான். அப்போதெல்லாம் அவனுக்கு எந்த அலுவலும் இல்லை. இரவெல்லாம் நெடுந்தூரம் தனியாக நடப்பது, நினைத்தபோது குளிப்பது, வத்ராப் லைப்ரரியில் பல புத்தகங்களைப் படிப்பது, நண்பரான குருசாமி டெய்லருடன் (இவர் பனிரண்டு வயதிலேயே சி.பி.ஐ மேடையேறிப் பேசியவர். சி.பி.ஐ கட்சிக்காரர்களிடம் நன்மதிப்புப் பெற்றவர்) இரவு முழுக்கப் பேசுவது என்று இலக்கில்லாத வாழ்க்கை. இது பல நாட்கள் தொடர்கிறது. இடையில், தற்கொலை செய்யப்போவதாக அவனது ராக்கம்மா பாட்டியையும் அவனது தாயையும் குறும்பாக பயமுறுத்தியும் இருக்கிறான் சிலுவை.

தங்கையின் திருமணம் வருகிறது. தந்தை ராணுவத்தில் இருந்து வருகிறார். சிலுவையை திருமணத்தில் கண்டபடி அசிங்கப்படுத்துகிறார். எமர்ஜென்ஸி வருகிறது. இதில் கூட சிலுவையின் நக்கலைப் பாருங்கள் – ‘இந்த எமர்ஜென்ஸி காலத்துல நாட்டுக்காக உழைக்கும்படி அன்னை இந்திரா அறிக்கை விட்டுக்கிட்டே இருந்தார். ஒழைக்கத் தயார்தான். வேல கொடுங்க’.

அப்போதுதான் ஒரு முக்கியமான முடிவை சிலுவை எடுக்கிறான். அவனுக்கு அது விளையாட்டுத்தனம்தான் என்றாலும், வேலை வேண்டும் என்பதற்காக அந்த முடிவு. கிறிஸ்துவத்திலிருந்து இந்துவாக மதம் மாறுவது. கிறிஸ்தவத்தில் சாதியிலும் சமயத்திலும் முன்னேறியவனாக இருக்கும் ஒருவன், ஹிந்துவாக மதம் மாறினால்மட்டும் அவன் பின் தங்கியவன் – தாழ்த்தப்பட்டவன் என்று சட்டம் சொல்லியது. அப்படியென்றால் இட ஒதுக்கீட்டின்படி வேலை. இதை எள்ளி நகையாடுகிறான் சிலுவை. சட்டம் போட்டு ஏமாத்துற பெயகள அதே சட்டத்த வெச்சித் தாக்கவேண்டியதுதான் என்று முடிவெடுத்து (அவனுக்குத் தான் கடவுள் நம்பிக்கையே இல்லையே?) எனவே உடனடியாக மதுரை ஆதீனத்துக்குச் செல்கிறான். அங்கு நடப்பவைகளையும் மிகவும் நகைச்சுவையாகத்தான் பார்க்கிறான் சிலுவை. ஆதீனகர்த்தரிடம் போய், கணாத தத்துவத்தை உருவாக்கியவரின் பெயரைத்தான் தனக்கு வைக்கவேண்டும் என்று கேட்கிறான். பயல் படித்தது தமிழ் முதுகலையாயிற்றே? இவனது அறிவை மெச்சி, அதே பெயரை இடுகிறார் மதுரை ஆதீனம்.

பின்னர் மதம்மாறிய சர்ட்டிஃபிகேட்டை எல்லாப்பக்கமும் அனுப்பி முறைப்படி கெஜட்டில் விளம்பரம் செய்கிறான்.

எத்தனையோ வருசமாக அரும்பாடுபட்டுப் படித்து வாங்கிய பட்டங்களைவிட, தாசில்தார் கொடுத்த அந்த எஸ்.ஸி சான்றிதழும் அந்த கெஜட் காப்பியுந்தான் அவனை எங்கெங்கோ கொண்டுபோயின என்று சொல்லி நாவலை முடிக்கிறார் ராஜ் கௌதமன்.

இதன் தொடர்ச்சியாக, ’காலச்சுமை’ மற்றும் ‘லண்டனில் சிலுவைராஜ்’ என்ற மேலும் இரண்டு நாவல்களை ராஜ் கௌதமன் எழுதியிருக்கிறார். அவற்றை நான் இன்னும் படிக்கவில்லை. அவசியம் படிப்பேன்.

Raj Gowthaman

‘சிலுவைராஜ் சரித்திரம்’ என்ற நாவலின் சிறப்பு, அதன் சுவாரஸ்யம் மட்டும்தானா? இல்லவே இல்லை. மேலே ஆங்காங்கே சொல்லியிருப்பதைப் போல, ஒரு தலித்தின் பிரச்னைகள் நாவல் முழுக்கவே பேசப்பட்டிருக்கிறது. தனது சுற்றுப்புறத்தில் பலமுறை அவமானப்பட்டிருக்கிறான் சிலுவை. வேலையில்லாமல் இருந்து வந்த காலத்தில், செக்கடி பஜாரில் வைத்து சீனி நாயக்கர் என்பவரின் மூத்த மகன், ஒரு நாள் சிலுவையைப் பார்த்து ’இம்புட்டுத்தூரம் பேசுறியே ஒன்னால ஒரு சல்லிக்காசு சம்பாதிக்க முடியுமா’ என்று சவால் விடுகிறான். அவசியம் இனிமேல் அது முடியும் என்கிறான் சிலுவை. ஆனால் அவன் விடாமல் இப்போ முடியுமா முடியாதா என்கிறான். படித்த படிப்புக்கு அவசியம் சம்பாதிக்கப்போவதாக சிலுவை சொல்ல, ‘ஆமா பொல்லாப் படிப்பு படிச்சிட்ட. ஒனக்கெல்லாம் எதுக்குப் படிப்பு? ஒந் தெருக்காரங்களப் போல மம்பிட்டியத் தூக்கிட்டுக் கூலிவேலைக்கிப் போக வேண்டியதுதான’ என்று கேட்கிறான். அதை எதிர்க்கும் சிலுவையை, அவரவர் பிறந்த ஜாதிக்குத் தகுந்தபடிதான் பிழைக்கவேண்டும் என்று சொல்லிவிட்டுச் செல்கிறான். உடனேயே காரல் மார்க்ஸைப் பற்றி சிந்திக்கிறான் சிலுவை. அவர் வர்க்க பேதத்தை எழுதியதுபோல் சாதி பேதத்தைப் பற்றி எழுதவில்லை. காரணம் அவர் ஐரோப்பியர். அங்கு வர்க்க பேதம் மட்டும்தான் இருந்தது. எனவே அதை ஒழிக்கவேண்டும் என்றார். சாதிகள் இருந்திருந்தால் அவற்றையும் ஒழியவேண்டும் என்றுதான் சொல்லியிருப்பார் என்று யோசிக்கிறான். உடனேயே அவனது சிந்தனை உள்ளூர் சி.பி.எம் கட்சிக்காரர்களை நோக்கித் திரும்புகிறது. சரி – அவர்கள் ஏன் சாதிகளைப் பற்றி ஊமையாக இருக்கிறார்கள்?அவர்களும் சாதிக்காரர்களாக இருந்ததால்தான் அதைப் பேசத் தயங்கினார்கள் என்கிறான். இந்த நாட்டில் சாதியை எவனும் விடப்போவதில்லை. சாதியை விட்டுவிட்டு ஒருவனால் இங்கு சிந்திக்கவே முடியாது என்று சொல்கிறான். இதைப்போன்ற பல பிரச்னைகளை சிலுவை சந்திக்கிறான்.

கூடவே, திராவிட அரசியலின் வளர்ச்சி, எமர்ஜன்ஸியின் நிலை போன்ற அரசியல் விஷயங்களும் சிலுவை வளர்வதனூடாகவே பின்னாலேயே வளர்ந்து வருகின்றன. சமகால இலக்கியத்தைப் பற்றியும் மேலேயே கண்டோம். ஆங்கில இலக்கியத்தையும் பற்றி சிலுவை அவதானிக்கிறான். இடையிடையே ஏசு, அப்போஸ்தலர்கள் ஆகியவர்களின் கதைகளையும் சொல்கிறான். இப்படிப் பல விஷயங்களைப் பற்றிய ஒரு பதிவாக ராஜ் கௌதமனின் இந்த நாவல் விளங்குகிறது.

இதற்கெல்லாம் மேலாக, ஒருமுறை எடுத்துப் படிக்க ஆரம்பித்துவிட்டால், மொத்தம் இருக்கும் 573 பக்கங்களையும் படிக்காமல் கீழேயே வைக்க முடியாது என்பதுதான் சிலுவைராஜ் சரித்திரத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்.

நான் படித்தது, தமிழினி வெளியீடு. 2002 ஆம் ஆண்டில் வந்த முதல் பதிப்பு.

நாவலை வாங்க விரும்பும் நண்பர்களுக்காக இந்த இணைப்பு. வேறு எந்தத் தளத்திலும் இது இல்லை. குறிப்பாக டிஸ்கவரி புக் பேலஸ்,  nhm.in போன்றவற்றில் இல்லை.  கீழுள்ள இணைப்பிலும் இது out of stock தான். ஆனால் அவர்களிடம் தொலைபேசியில் கேட்கலாம். எண் அதிலேயே உள்ளது.

உடுமலை டாட்.காம் – சிலுவைராஜ் சரித்திரம்

ராஜ் கௌதமனைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு, சிலுவைராஜ் என்பது அவர்தான் என்பது தெரியும்.  சரி. சிலுவைராஜ் தன் சரித்திரத்தைத் தனது குரலிலேயே சுருக்கமாகச் சொல்வதைக் கேட்க ஆசைப்படுகிறீர்களா? நக்கலும் நையாண்டியும் தெறிக்க ராஜ் கௌதமன் கேணி கூட்டத்தில் 2012ல் பேசியதன் தொகுப்புகள் கீழே. அவசியம் இவற்றைக் கேளுங்கள். இந்தக் கட்டுரையையே படிக்காவிட்டாலும் பரவாயில்லை.

ராஜ் கௌதமனின் ‘கேணி’ உரை

உரைக்குப் பின் ’கேணியில்’  ராஜ் கௌதமனுடன் கேள்வி பதில்

ராஜ் கௌதமனைப் பற்றி இங்கே படிக்கலாம்.

பி.கு – இன்றைய கட்டுரையை சிலுவைராஜ் வந்து ஆக்கிரமித்துக் கொண்டதால், மணி ரத்னமும் பரத்வாஜ் ரங்கனும் அடுத்த கட்டுரையில் வருவார்கள்.

Sharing is caring!

Related Posts

fb Comments

comments

  Comments

4 Comments

 1. RAJ

  “மணி ரத்னமும் பரத்வாஜ் ரங்கனும் அடுத்த கட்டுரையில் வருவார்கள்.”

  அடுத்த கட்டுரைக்கு 2 நாள் மட்டும் தான் எடுத்து கொள்ளலாம் .

  Reply
 2. பர பரன்னு ஒரு trailer பாத்தாப்ல இருந்துச்சு. ராஜ் கௌதமன் நடை பத்தி எனக்கு தெரியாது… ஆனா அதைபத்தி சொன்ன உங்க நடை சூப்பர்… கண்டிப்பா வாங்கி படிப்பேன்…

  Reply
  • Rajesh Da Scorp

   இப்போ புக் ப்ரிண்ட்டிங்லயே இல்லையாம் விஜய் :-(. ஒரு நண்பர் விசாரிச்சிட்டு சொன்னாரு

   Reply
 3. Ganesan

  இந்த புத்தகத்தை நீண்ட நாட்கள் எங்கும் தேடி கிடைக்கவில்லை. சமீபத்தில் தொண்டாமுத்தூர் நூலகத்தில் கிடைத்தது.

  Reply

Join the conversation