The Wolf of Wall Street (2013) – English – Part 3

by Rajesh January 7, 2014   English films

Sharing is caring!

இதுவரை எழுதப்பட்டுள்ள இரண்டு பாகங்களை இங்கே படித்துக் கொள்ளலாம்.

The Wolf of Wall Street – Part 1

The Wolf of Wall Street – Part 2

[divider]

நடுத்தரக் குடும்பம் ஒன்றில் இருந்து வந்து, தனது பேச்சுத்திறமை ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு மிகப்பெரிய சாம்ராஜ்யம் ஒன்றை தனியொரு ஆளாக உருவாக்கிய நபர்தான் ஜோர்டான் பெல்ஃபோர்ட் (Jordan Belfort). பிறக்கும்போதே வியாபாரியாகப் பிறந்த மனிதர். தனது எட்டாவது வயதிலேயே, செய்தித்தாள்களை வீட்டுக்கு வீடு டெலிவரி செய்வதில் பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார். பனிரண்டு வயதில், வீடுகளின் முன்னர் குவிந்திருக்கும் பனியை அகற்றித் தருவதில் ஒவ்வொரு வீட்டுக்கும் 20 டாலர்கள் என்று வசூலிக்க ஆரம்பித்து, அதில் நிறைய சம்பாதித்தவர்.

இதன்பின்னர் பள்ளியை முடித்துவிட்டு கல்லூரி சேரும் சமயத்தில் அவருக்குத் தோன்றிய ஒரு யோசனைதான் அவரது வியாபார வாழ்க்கையின் மையப்புள்ளியாக அமைந்தது. Long Islandடின் கடற்கரைக்கு அவர் அடிக்கடி செல்வது வழக்கம். அங்கு குழுமியிருந்த கூட்டத்தினர், ஐஸ் க்ரீம் சாப்பிட சற்றுத் தொலைவில் இருந்த கடைகளுக்குச் செல்வதை கவனித்த பெல்ஃபோர்ட், தனது நண்பன் ஒருவனை கூட்டுச்சேர்த்திக் கொண்டு, ஐஸ் க்ரீம் கடையில் ஒரு டீல் போட்டார். ஒரு ஐஸ் க்ரீமின் விலை – 7 சென்ட்கள். அதனை மொத்தமாக வாங்கிவந்து, ஒரு ஐஸ் க்ரீம் ஒரு டாலர் என்று விலை வைத்து விற்க ஆரம்பித்தார். அந்த ஆண்டு அவருக்குக் கிடைத்தது – 20,000 டாலர்கள். இது நடந்தது அவரது பதினாறாவது வயதில். அப்போதுதான் தனது திறமைகளில் முழு நம்பிக்கை வைக்க ஆரம்பித்தார் பெல்ஃபோர்ட். இது நடந்த வருடம் – 1978.

இதன்பின், அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு, தனது தாயின் கனவான பல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார் பெல்ஃபோர்ட். ஆனால், முதல் நாளிலேயே அவருக்கு வகுப்பு எடுத்த ஆசிரியர், இனிமேலெல்லாம் பல் மருத்துவத்தில் அதிகம் சம்பாதிக்க முடியாது என்று ஒரு உண்மையை விளக்க, அந்த முதல் நாளிலேயே கல்லூரிக்கு முழுக்கு போட்டார். காரணம், இதற்குள், தனது வாழ்க்கையின் லட்சியம் என்பதே மிகப்பெரிய பணக்காரனாவதுதான் என்பதில் அவருக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை வந்துவிட்டிருந்தது. அதன்பின், ஒரு கடையில் இருந்து மாமிசத்தை வாங்கி, வீட்டுக்கு வீடு விற்கும் சேல்ஸ்மேன் வேலையை சிறிதுகாலம் செய்தார். அந்த வேலையில் முதல் நாளிலேயே அதுவரை இருந்துவந்த ரெகார்டை உடைத்து, தனது பெயரை நிலைநாட்டினார் பெல்ஃபோர்ட். இதன்பின்னர் அந்த மாதத்திலேயே, அதுவரை இருந்துவந்த மாதாந்திர ரெகார்டும் பெல்ஃபோர்டினால் உடைக்கப்பட்டது.

அந்த மாத முடிவில், தனது வழக்கப்படி அந்த வேலையை ஏன் இன்னொருவருக்குக் கீழே செய்யவேண்டும் என்று யோசித்த பெல்ஃபோர்ட், உடனடியாக அந்த வேலையை விட்டுவிட்டு, சொந்தமாகவே மாமிசம் விற்கும் வேலையை ஆரம்பித்துவிட்டார். அது அவரது 22ம் வயது. அந்த வருடத்திலேயே அந்த வேலை சக்கைப்போடு போட்டது. ஒரே வருடத்துக்குள் 26 லாரிகளை வாங்கி, இந்த வேலையை விரிவுபடுத்தினார் பெல்ஃபோர்ட். ஆனால், தனது முதல் பிரம்மாண்ட வியாபாரமாகிய அதில் அவர் செய்த சில தவறுகளின் காரணமாக, அத்தனையையும் அவரை விட்டு அகன்றது. வியாபாரம் மூடப்பட்டது. 23ம் வயதில், பத்தாயிரம் டாலர்கள் கடனாளியாக நடுத்தெருவில் நின்றார்.

இதன்பின்னர், சிறிதுகாலம் வேலை செய்து கடனை அடைக்கலாம் என்று முடிவுசெய்த பெல்ஃபோர்ட், உடனடியாக அதிகப்பணம் சம்பாதிக்க ஏதுவான வேலை எது என்று ஒரு சிறிய ரிஸர்ச் செய்து, Stock Marketடை தேர்வு செய்தார். ஆறு மாதங்கள் கடுமையான பயிற்சியை மேற்கொண்டு, ஸ்டாக் மார்க்கெட்டில் எல்லா விஷயங்களையும் அத்துபடியாகக் கற்றுக்கொண்டார்.

இதன்பின்னர் கம்பீரமாகச் சென்று அவர் வேலைக்குச் சேர்ந்த முதல் நிறுவனம் – L.F. Rothschild. அமெரிக்காவின் பிரபல நிறுவனங்களில் ஒன்று. ஆர்வமாக தனது முதல் நாளில் வேலை செய்ய ஆரம்பித்த பெல்ஃபோர்டுக்கு நேர்ந்த மிகப்பெரிய அதிர்ச்சி – அவரது முதல் நாளில் அமேரிக்கா சந்தித்த மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி – Black Monday.

அந்தத் தேதி – அக்டோபர் 19 – 1987. உலகளாவிய அளவில் பல நாடுகளில் ஸ்டாக் மார்க்கெட் படுபயங்கர வீழ்ச்சியை சந்தித்தது. அதன் விளைவாக அமெரிக்காவில் பல ஸ்டாக் ப்ரோக்கர்கள் வேலையை இழந்தனர். அதில் ஒருவர் – வேலையின் முதல் நாளில் சந்தோஷமாக பல கனவுகளைக் கண்டுகொண்டிருந்த பெல்ஃபோர்ட். அன்றே வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

இதன்பின்னர் துவங்கியதுதான் ஜோர்டான் பெல்ஃபோர்ட்டின் சாம்ராஜ்யம். இந்த நிகழ்ச்சிதான் The Wolf of Wall Streetடின் ஆரம்பம்.

விதியாலோ அல்லது கெட்ட நேரத்தாலோ செருப்பால் அடிக்கப்பட்ட பெல்ஃபோர்ட், சும்மா இருக்கவில்லை. இதன்பின் ஒரு மிகச்சிறிய பங்குமார்க்கெட் நிறுவனத்தில் மறுபடி வேலைக்கு சேர்ந்தார். அந்த நிறுவனத்தில் அதுவரை இருந்துவந்த ரெகார்டை அவரது வழக்கப்படி முதல் நாளிலேயே உடைத்தார் பெல்ஃபோர்ட். அதன்பின்னர் அந்த நிறுவனத்தின் சூப்பர்ஸ்டாராக விரைவிலேயே உயர்ந்தார்.

இதன்பின் என்ன நடந்திருக்கும் என்று யூகிக்கமுடிகிறதல்லவா? அவரது வழக்கப்படி அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறிய பெல்ஃபோர்ட், சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் துவங்க முடிவெடுத்தார். அடுத்த சில வருடங்களில் அமெரிக்காவின் பங்கு மார்க்கெட் சரித்திரத்தையே ஆட்டிப்படைக்கப்போகும் முடிவு அது. பெல்ஃபோர்ட் துவங்கிய நிறுவனத்தின் பெயர்- Stratton Oakmont.

பெல்ஃபோர்ட்டை இப்படி ஒரு முடிவு எடுக்க வைத்தது எது? இதோ – பெல்ஃபோர்ட் பேசுகிறார்.

‘என் வாழ்க்கையின் இந்தத் தருணத்தில் நான் உணர்ந்தது எது தெரியுமா? இனம், மொழி, மதம், ஜாதி ஆகிய எந்த வேறுபாட்டையும் கடந்து, இந்த உலகில் மனிதனாகப் பிறந்துள்ள எந்த ஒரு ஜீவனையும் என்னால் கன்வின்ஸ் செய்து, நான் விற்க விரும்பும் ஒரு பொருளை அவரை வாங்க வைக்கும் முறை எனக்கு அத்துபடி. இந்தத் திறமையின் மேல் முழு நம்பிக்கை வைத்துதான எனது சொந்த நிறுவனத்தை ஆரம்பித்தேன். என்னிடம் வேலைக்கு சேர்ந்தவர்களில் பலர், கல்லூரியையே முடிக்காதவர்கள். ஆனால் , ஒரே வருடத்தில் அவர்கள் அனைவரையுமே என்னைப்போல் நான் மாற்றினேன். எனது இந்தத் திறமையினால் எக்கச்சக்கமான பணத்தை நான் சம்பாதிக்கப்போகிறேன் என்பது எனக்கு நன்றாகவே தெரிந்திருந்தது’.

அமெரிக்கப் பங்குமார்க்கெட்டின் மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்தார் பெல்ஃபோர்ட்.  சேர ஆரம்பித்திருந்த செல்வத்தை தாராளமாக செலவு செய்தார். தனக்கென்று சொந்தமாக சிறிய கப்பல் (Yacht) வாங்கினார். ஹெலிகாப்டர், மிகப்பெரிய வீடு, மாடல் மனைவி , இரவுமுழுக்க போதை என்று ஒரு அரசனைப் போல் வாழ்ந்தார்.

அவரது நிறுவனத்தில் இருந்த அத்தனை பேருக்கும் இடைய தினமும் இரண்டு முறைகள் பேசுவார் பெல்ஃபோர்ட். தனது பேச்சால் அனைவரையும் வசியம் செய்யும் திறமை அவருக்கு இருந்தது. அவரது inspiring பேச்சால் கவரப்பட்ட அனைவரும் வெறிபிடித்தவர்கள் போல் உழைக்க ஆரம்பித்தனர்.

ஆனால், அவரே சொல்வதுபோல், அவரது வியாபாரத்தில் 95% உண்மையும், 5% சதவிகிதம் ஃபோர்ஜரியும் இருந்தது. இதனை FBI விசாரிக்க ஆரம்பித்தது. அவரது நிறுவனத்தில் பணிபுரிந்த ஒவ்வொரு இளைஞனும் வருடத்துக்கு ஒரு மில்லியன் டாலர்கள் சம்பாதித்துக்கொண்டிருந்தான். அவனது கல்வித்தகுதி – பள்ளி ஃபெயில். இதனால் போதை மருந்துகள் எல்லாரிடமும் பரவ ஆரம்பித்தன. அதற்கு முன்னுதாரணமாக, ஒவ்வொரு இரவிலும் கடுமையான போதை மருந்துகளை உட்கொண்டுவந்த பெல்ஃபோர்டே விளங்கினார். 1300 பேர், ஒரு மிகப்பெரிய இடத்தில் இப்படி தினமும் போதை மருந்துகளை உட்கொண்டவாறே பைத்தியம் பிடித்தவர்களைப் போல வேலை செய்துகொண்டிருந்தால் என்ன ஆவது? கூடவே, Caligula படத்திலும் Eyes Wide Shut படத்திலும் வருவதுபோன்ற mass orgy காட்சிகள் வேறு அங்கே அரங்கேறிக்கொண்டிருந்தன.

இறுதியாக, ஒரு மிகப்பெரிய நட்சத்திரம், அழுத்தம் தாளாமல் வெடித்துச் சிதறுவதுபோல (Supernova), பெல்ஃபோர்டின் பல லட்சம் டாலர்கள் மதிப்புள்ள நிறுவனம் சுக்குநூறாக சிதறியது. பெல்ஃபோர்ட் கைது செய்யப்பட்டார். பிற ஸ்டாக் மார்க்கெட் நிறுவனங்கள் செய்வதைத்தான் பெல்ஃபோர்டும் செய்துவந்தார் என்றாலும், இங்கு பெல்ஃபோர்டின் அசைக்க முடியாத ஆளுமைத்திறன் காரணமாக எல்லாமே மிக வேகமாக அரங்கேறின. அதனாலேயே இந்த அழிவு நிகழ்ந்தது.

பெல்ஃபோர்டுக்குக் கிடைத்தது 22 மாதங்கள் சிறை. அவரது பணம் அவரைவிட்டு உடனடியாக அகன்றது. சிறையில், போதை மருந்து உட்கொண்டு கைது செய்யப்பட்டிருந்த நடிகர் டாம்மி சோங்கின் அறையை பெல்ஃபோர்ட் பகிர்ந்துகொண்டார். டாம்மி, பெல்ஃபோர்டிடம், அவரது அனுபவங்களை புத்தகமாக எழுதச்சொல்ல, அப்படியே செய்தார் பெல்ஃபோர்ட். அமெரிக்காவின் மிகப்பெரிய புத்தக நிறுவனங்களில் ஒன்றான Random House, பெல்ஃபோர்டின் புத்தகத்தை வாங்கியது. புத்தகம் உடனடி ஹிட். காரணம் அதில் பெல்ஃபோர்ட் விவரித்திருந்த அவரது வாழ்க்கை. யாராலும் நம்பமுடியாத சம்பவங்களைக் கொண்ட புத்தகமாக அது இருந்தது. பின்னாட்களில், பெல்ஃபோர்டை கிட்டத்தட்ட பத்து வருடங்கள் நிழலைப் போல கண்காணித்திருந்த போலிஸ் அதிகாரி, புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் நிஜம் என்று உறுதியளித்தார்.

jordan_belfort

புத்தகம் ஹிட்டானவுடன், ப்ராட் பிட்டுக்கும் லியனார்டோ டிகேப்ரியோவுக்கும் இடையே மிகப்பெரிய உரிமைப்போர் தொடங்கியது. ஒவ்வொருவரும், மற்றொருவர் கொடுப்பதைவிட 10% அதிகமாகத் தருகிறேன் என்று பெல்ஃபோர்டுக்கு உறுதியளித்தனர். படிப்படியாக விலை ஏறிக்கொண்டே சென்றது. ஆனால், அப்போது லியனார்டோ செய்த ஒரு காரியத்தின் விளைவாக, முழுமனதுடன் புத்தக உரிமையை அவருக்கே அளித்தார் பெல்ஃபோர்ட்.

லியனார்டோ செய்த காரியம் என்ன? நேராக மார்ட்டின் ஸ்கார்ஸேஸியை அந்தத் திரைப்படத்தை இயக்க அழைத்துக்கொண்டுவந்ததுதான்.

இதன்பின் பல வருடங்கள் கழிந்து இதோ இப்போது திரைப்படம் ஒருவழியாக வெளியாகிவிட்டது.

இப்போது பெல்ஃபோர்ட் என்ன செய்துகொண்டிருக்கிறார்?

தனது வாழ்க்கையை ஒரு தன்னம்பிக்கைப் பேச்சாளராக (Motivational Speaker) கழித்துக்கொண்டிருக்கிறார். இதிலும் அவருக்கு வழக்கப்படி வெற்றிதான். பல்வேறு இடங்களுக்குப் பயணித்தபடியே தனது பிஸியான வாழ்க்கையை பிறருக்கு நம்பிக்கையூட்டும் பேச்சுகளின் மூலம் வாழ்ந்துகொண்டிருக்கிறார் ஜோர்டான் பெல்ஃபோர்ட்.[divider]

பெல்ஃபோர்டின் பேச்சு எத்தகையது?

இதோ இந்த வீடியோவைப் பார்த்து நீங்களே அதைத் தெரிந்துகொள்ளலாம். திரைப்படத்தின் இறுதியில் லியனார்டோவை வரவழைத்து தொலைக்காட்சியில் பேட்டி எடுக்கும் நபரை நினைவிருக்கிறதா? அவர்தான் நிஜமான ஜோர்டான் பெல்ஃபோர்ட்.

[divider]

நான் பெல்ஃபோர்டின் புத்தகத்தைப் படித்ததில்லை. ஆனால், மார்ட்டின் ஸ்கார்ஸேஸியின் மீது நம்பிக்கை வைத்துதான் இந்தத் திரைப்படத்தைப் பார்க்கச்சென்றேன். அதேபோல் ஒரு அட்டகாசமான அனுபவமாக அமைந்தது இத்திரைப்படம். எழுபத்தோரு வயதில் எந்த இயக்குநராவது இப்படி ஒரு படத்தை இயக்கமுடியுமா என்ற கேள்வியை நம்முன் வைத்துவிட்டு அசால்ட்டாக அகன்றிருக்கிறார் ஸ்கார்ஸேஸி. ஒவ்வொரு காட்சியும் அற்புதம்.

திரைப்படத்தில் பெல்ஃபோர்டின் அசாத்தியமான பேச்சுத்திறமை அழகாக வெளிப்பட்டிருக்கிறது. குறிப்பாக, முதல் நாளே வேலையில் இருந்து நீக்கப்பட்டபின் சிறிய நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேரும் பெல்ஃபோர்ட், முதல் நாளே அங்கு ஒரு மிகப்பெரிய வியாபாரத்தை படு சுலபமாக முடிக்கும் காட்சி. அந்த ஒரே காட்சியில் அவரின் திறமை நமக்குப் புரியவைக்கப்பட்டுவிடுகிறது. எனவே பின்னர் பெல்ஃபோர்ட் செய்யும் அசாத்தியமான காரியங்கள் நமக்கு அதிர்ச்சி அளிப்பதில்லை.

மார்ட்டின் ஸ்கார்ஸேஸியின் Goodfellas, Casino போன்ற படங்களைப் போலவே இந்தத் திரைப்படமும் வாய்ஸ் ஓவர் உத்தியைப் பயன்படுத்தியே ஆரம்பிக்கிறது. நகைச்சுவையான அறிமுகத்தின் மூலம் திரையில் வரும் பெல்ஃபோர்ட், தனது சக்கரவர்த்தியைப் போன்ற வாழ்க்கையை நமக்குக் காண்பிக்கிறார். அதன்பின் அவரது கதை துவங்குகிறது. இடையிடையே நேரடியாகவே திரையை நோக்கி நம்மிடம் பேசும் பெல்ஃபோர்ட், ஆங்காங்கே கதையை நிறுத்தி, அந்தந்தக் காட்சியின் காரணங்களை விளக்குகிறார்.

படத்தின் ஒவ்வொரு வசனமும் நகைச்சுவையில் பிய்த்துக்கொண்டு போகிறது. பெல்ஃபோர்டும் அவரது நண்பர் டோன்னி அஸாஃப்பும் (Jonah Hill) போதை மாத்திரையை உட்கொண்டுவிட்டு செய்யும் குழப்படிகள் குறிப்பாக அட்டகாசமாக எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் காட்சி, படத்தின் இடண்டாம் பாதியில் வருகிறது. இதுபோல பல காட்சிகள் இருக்கின்றன.

இடையிடையே, ஸ்கார்ஸேஸியின் Gangster Crime திரைப்படங்களின் இன்னொரு முக்கியமான அம்சமாகிய குடும்பம் என்ற அமைப்பும் திறமையாகவே காண்பிக்கப்பட்டிருக்கிறது  . பெல்ஃபோர்ட் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்வது, அதற்குக் காரணமான மாடல் நவோமியை மணப்பது, அதன்பின்னும் பல பெண்களோடு உறவு கொள்வது, இதன்விளைவாக இருவருக்கும் அடிக்கடி பிரச்னைகள் நேர்வது, நவோமிக்கு திருமணப் பரிசாக ஒரு படகையே அளிப்பது போன்ற காட்சிகள் மிகவும் சுவாரஸ்யமாக செல்கின்றன.

பின்னர் பெல்ஃபோர்டின் சாம்ராஜ்யம் சரியத் துவங்குகிறது. போலிஸ் விசாரணை, அதைத் தொடர்ந்து ஸ்விஸ் வங்கியில் தங்களது பணத்தை எல்லோரும் பதுக்குவது, அதற்கு பினாமியாக பெல்ஃபோர்ட் நியமித்த பெண் இறப்பது, பின்னர் பெல்ஃபோர்டின் கைது போன்ற காட்சிகள்.

இறுதியில், பெல்ஃபோர்ட் பேச்சாளராக மாறும் தருணம் வரையிலான அவரது வாழ்க்கை, அருமையான படைப்பாக ஸ்கார்ஸேஸியின் கைவண்ணத்தில் மிளிர்கிறது. படத்தின் நீளம் – 175 நிமிடங்கள் (உண்மையில் 179 நிமிடங்கள். ஆனால், இந்தியாவில், நான்கு நிமிடங்கள் வரை nude காட்சிகள் வெட்டப்பட்டுவிட்டன). ஸ்கார்ஸேஸி இறுதியாக எடுத்துமுடித்த படம் மொத்தம் நான்கு மணிநேரத்துக்கும் மேல். ஆனால் எடிட்டிங் மேஜையில் அமர்ந்து, திரைப்படத்தை 179 நிமிடங்களாக வெட்டினார் ஸ்கார்ஸேஸி. இந்த 175 நிமிடங்களில், ஒரே ஒரு நிமிடம் கூட அலுக்காமல், தனது வழக்கமான முத்திரைகளுடன் வெளியிட்டிருக்கும் ஸ்கார்ஸேஸி, இன்னும் முழு ஃபார்மில் இருப்பதை இந்தப் படம் உறுதிசெய்கிறது (ஸ்கார்ஸேஸியின் ‘முத்திரை’களில் ஒன்று – படத்தில் F**K என்ற வார்த்தை மொத்தம் 506 தடவைகள் வருகிறது. இது, திரைப்படங்களில் ஒரு உலகசாதனை. ஆனானப்பட்ட க்வெண்டின் படங்களில் கூட இத்தனை முறை அந்த வார்த்தை இடம்பெறவில்லை. இந்த லிஸ்ட்டில் ஸ்கார்ஸேஸியின் எல்லா கேங்ஸ்டர் படங்களும் உள்ளன என்பது இன்னொரு சுவாரஸ்யம்).

ஒட்டுமொத்தமாக கவனித்தால், ஜோர்டான் பெல்ஃபோர்ட் ஒரு ஜீனியஸ் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பிறவியிலேயே பிறரைக் கன்வின்ஸ் செய்யும் திறமை அவருக்கு இருந்தது. அதுதன அவரது சாம்ராஜ்யத்துக்கே காரணமாகவும் இருந்தது. ஆனால், தனக்குக் கிடைத்த திறமையை அளவுக்கு மீறி உபயோகித்ததால் அதலபாதாலத்துக்குக் சென்று வீழ்ந்த பெல்ஃபோர்டின் கதையில் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்களும் நிறைய இருக்கின்றன.

அவசியம் இந்தப்படம் தவறவே விடக்கூடாத படம். ஒருமுறையாவது திரையில் சென்று பார்த்துவிடுங்கள்.

இந்தப் படத்தை முடித்த கையோடு, கிட்டத்தட்ட 15 வருடங்களாக அவரது மனதில் இருந்த ஒரு கதையை அடுத்துப் படமாக்கும் வேலையில் இறங்கிவிட்டார் ஸ்கார்ஸேஸி. படத்தின் பெயர் – Silence. படத்தின் கதை, வழக்கப்படி பிரச்னைக்குரியதுதான். பதினேழாம் நூற்றாண்டில் நடக்கும் கதையான இதில், இரண்டு போர்த்துக்கீசிய பாதிரியார்கள், ஜப்பானில் கிறிஸ்துவத்தைப் பரப்ப மேற்கொள்ளும் பயணம் விபரமாக வருகிறது. அடுத்ததாக, ஃப்ராங்க் சினாட்ராவின் வாழ்க்கையை படமாக எடுக்கப்போகிறார். கூடவே, இன்னொரு பக்கத்தில், ‘The Irishman’ என்ற திரைக்கதையும் தயாராகிக்கொண்டிருக்கிறது. இதில் நடிப்பவர்கள்: ராபர்ட் டி நீரோ, அல் பசீனோ மற்றும் ஜோ பெஸ்சி.

எனவே, மறுபடியும் கலந்துகட்டி அடிக்க ஸ்கார்ஸேஸி தயார். இன்னும் குறைந்தபட்சம் பத்து வருடங்களுக்காவது அட்டகாசமான படங்களை எடுக்கும் திறன் அவரிடம் இருக்கிறது. எனவே, ஸ்கார்ஸேஸிக்கு ஒரு சல்யூட் வைத்துவிட்டு, The Wolf of Wall Street பற்றிய இந்தக் கட்டுரைகளை முடிப்போம். இந்தப் படத்துக்காக அவசியம் லியனார்டோ டி கேப்ரியோவின் பெயர், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் மற்றும் இன்னபிற விழாக்களில் பரிந்துரை செய்யப்படும் என்பதில் சந்தேகமில்லை. போலவே சிறந்த இயக்குநராக ஸ்கார்ஸேஸியின் பெயரும், சிறந்த துணை நடிகருக்கான பரிந்துரை ஜோனா ஹில்லுக்கும், சிறந்த எடிட்டிங் பரிந்துரை, ஸ்கார்ஸேஸியோடு 40 வருடங்களாக எல்லாப் படங்களிலும் பணிபுரிந்துகொண்டிருக்கும் தெல்மா ஷூன்மேக்கருக்கும் (Thelma SChoonmaker), சிறந்த படத்துக்கான பரிந்துரை இந்தப் படத்துக்கும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவற்றைத் தவிர, இன்னும் சில விருதுகள் உறுதி.

Here is a peppy song from the film

Facebook Comments

Sharing is caring!

fb Comments

comments

  Comments

8 Comments

 1. இது இன்னொரு Catch Me If You Can?

  Reply
 2. Rafeek

  செம பக்குவமான.. நேர்மையான விமர்சனம் ராஜேஷ்!!

  Reply
 3. Kamal Hassan

  podra podra … thakkita thakkita podra

  Reply
 4. Mani

  இந்த திரைப்படம் அளவுக்கு அதிகமாக பணம் சம்பாதிக்க முயலும் பேராசைக் குணத்தையும்,அதன் போதைத் தன்மையையும் மேலாக அக்குணத்தின் கீழ்மையையும், போதும் என்ற மனம் – Contentment பற்றியும் திரை மொழிக்குரிய அழகியலுடன் கூறுகிறது. என்னை பொறுத்த வரை Scorsese, Belfortன் பேச்சு மற்றும் விற்கும் திறமை கண்டு வியந்து இருந்தாலும் அடிப்படையில் பேராசை குணத்தின் கீழ்மையை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.Belfort (அ) Wallstreet mentalityயை வெறுக்கிறார். என் கருத்தில் திரைப்படத்தின் அழகியல் கொண்டு belfort மற்றும் அவர் போன்ற நபர்களை செருப்பால் அடித்திருக்கிறார். படத்தின் அடிப்படை கருத்தாக இதையே நான் கருதுகிறேன்.படத்தின் துவக்கம் முதலிருந்து பல காட்சிகள் இதற்கு சான்று. படத்தின் இறுதியில் புலம் பெயர்ந்த இருவர், FBI அதிகாரி, belfortன் முன்னாள் மனைவி அனைவரும் metro ரயிலில் பயணம் செய்வது போன்று ஒரு காட்சி வரும். பிறகு original belfortவரும் Sales workshop காட்சி விரியும்.
  பார்வையாளன் தனது எண்ணங்களை தனக்கு தானே பரிசீலனை செய்ய வேண்டிய தருணம் அது.

  Reply
 5. Arul sakkaravarthi

  waiting for review sherlock series 2014…(i been seen already).. its wonderful.. but like to hear from your words.. from arul

  Reply
 6. subbhuraman

  hello rajesh , iam subbhu. dont u think the set up was too long in wolf of wall street?

  Reply
 7. reader

  //இறுதியில், பெல்ஃபோர்ட் பேச்சாளராக மாறும் தருணம் வரையிலான அவரது வாழ்க்கை, அருமையான படைப்பாக ஸ்கார்ஸேஸியின் கைவண்ணத்தில் மிளிர்கிறது. //

  கடேசிக் காட்சியில் லியனாரைடோவை மேடையில் ஒருவர் அறிமுகப்படுத்துவாரே?
  அவர் யாரென்று தெரிகிறதா? அவருடைய சுயசரிதைதான் படமாக்கப்பட்டது.

  Reply
 8. Vivek

  நோவாம உக்காந்து வெறும் வாய வச்சு ஏமாத்தி பொலைக்கறது எப்படி-ன்னு ஒரு படம்.

  பொதுவா, என்னோட பார்வைல, இந்த ஷேர் மார்கெட், மியுச்சுவல் பண்டு… இன்னும் இதர பிற வித்தியாசமான பெயர்களில் வெளிவரும் எம் எல் எம் மேலும் சதுரங்க வேட்டை ல சொல்லப் பட்டு இருக்கிற வினோதமான தொழில்கள் எதுவுமே எனக்கு பிடிக்காது.

  எனக்கு நிறைய அழைப்புகள் வரும், ஆம்வே, அந்த வே இந்த வே, உங்களுக்கு கீழ 300 பேர் வேல செய்வாங்க, உங்களுக்கு கமிசன் வரும்-ன்னு ஊருபட்ட பேரு ஆசை காட்டுவானுங்க…

  நான் தெரியாம தான் கேக்குறேன், இதெல்லாம் ஒரு பொழப்பா ?

  ஒரு நிமிடம் யோசிப்பீர்.

  Reply

Join the conversation