Fade in முதல் Fade Out வரை – 3

by Rajesh May 8, 2014   Fade in to Fade out

Sharing is caring!

Fade in முதல் Fade Out வரை – 1

Fade in முதல் Fade Out வரை – 2

இந்தத் தொடரின் இரண்டாம் அத்தியாயமான சென்ற கட்டுரையில் தமிழில் திரைக்கதை எழுதுவதன் ஆரம்ப நிலைகளைப் பார்த்தோம். அதை அப்படியே கட் செய்துவிட்டு வேறொரு பக்கம் செல்லலாம். அதன்பின் விட்டதைத் தொடருவோம்.


 

8631_field_syd

Syd Field

ஹாலிவுட்டில் திரைக்கதைப் பிதாமகர்கள் எக்கச்சக்கம். ஒவ்வொருவருமே அவரவர் வழிமுறைகளில் கில்லி. ஹாலிவுட்டின் முதல் திரைக்கதை குரு என்று நமக்கெல்லாம் நன்றாகத் தெரிந்த ஸிட் ஃபீல்டை தாராளமாகச் சொல்லலாம். இவருக்கு அடுத்து ஒரு குறிப்பிடத்தகுந்த நபர் – ராபர்ட் மெக்கீ (Robert Mckee). ஸிட் ஃபீல்டுக்குப் பிறகு திரைக்கதை வகுப்புகள் எடுக்க ஆரம்பித்து (1984ல் துவங்கி) இன்றுவரை உலகின் நம்பர் ஒன் திரைக்கதைப் பயிற்சியாளராக விளங்குகிறார். இவரது மிகப்பிரபலமான திரைக்கதைப் புத்தகம் – ‘Story: Substance, Structure, Style and the Principles of Screenwriting’ உலகெங்கும் பலராலும் பின்பற்றப்படுகிறது. ஸிட் ஃபீல்டின் Screenplay புத்தகமும் ராபர்ட் மெக்கீயின் Story புத்தகமும் ஒன்றாகச் சேர்ந்து உலகெங்கும் உருவாக்கியுள்ள திரைக்கதை எழுத்தாளர்கள் ஏராளம். முறையாகத் திரைக்கதை எழுதுவதைப் பயில நினைக்கும் நபர், இந்த இரண்டு புத்தகங்களை நன்றாகப் படித்தாலே போதுமானது. ஆனால் ஸிட் ஃபீல்டின் புத்தகத்தைப் போல இல்லாமல் ராபர்ட் மெக்கீயின் புத்தகம், புரிந்துகொள்ள சற்றே கடினமானது. ராபர்ட் மெக்கீ தனது திரைக்கதை செமினார்களை எந்த நாட்டில் கொடுத்தாலும் இந்தப் புத்தகத்திலிருந்து இம்மி பிசகாமல் அதே வார்த்தைகள், அதே உதாரணங்கள் என்று ஒரே விஷயத்தைத்தான் 1984லிருந்து சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனாலும் அவரது திரைக்கதை வகுப்புகளுக்கு வரும் கூட்டம் அபரிமிதமானது. ஸிட் ஃபீல்டைப் போலவே ராபர்ட் மெக்கீயும் பல முன்னணி ஸ்டுடியோக்களுக்குத் திரைக்கதை கன்ஸல்ட்டண்ட்டாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.

Robert Mckee

Robert Mckee

இவரது ‘Story: Substance, Structure, Style and the Principles of Screenwriting’ புத்தகத்தை நமது இந்தத் தொடரில் பிரித்து மேயப்போகிறோம். ஸிட் ஃபீல்டை எப்படி விரிவாகக் கவனித்தோமோ அப்படி ராபர்ட் மெக்கீயையும் விரிவாகக் கவனித்தால்தான் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் கவனித்த திருப்தி ஏற்படும். கூடவே, ராபர்ட் மெக்கீ மற்றும் ஸிட் ஃபீல்டைப் படித்தாலே திரைக்கதை எழுதுவதன் சூட்சுமங்கள் அத்தனையும் கைவந்த கலையாகிவிடும் என்பதால், இந்தத் தொடரின் சில அத்தியாயங்களுக்குப் பிறகு ராபர்ட் மெக்கீயின் புத்தகத்தை முதலிலிருந்து கடைசிவரை தமிழுக்கு ஏற்றபடி தமிழ் உதாரணங்களுடன் கவனிக்கப்போகிறோம்.

அந்த வகையில் ஸிட் ஃபீல்ட் திரைக்கதைப் பயிற்சிகளில் சிவாஜி என்றால், ராபர்ட் எம்.ஜி.ஆர் போல. ஆனால், எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி அறுபதுகளில் தமிழ்த் திரையுலகின் ஜித்தர்களாக இருந்தபோது இன்னொருவரும் இவர்களுக்கு இணையாகப் பிரபலமாக இருந்தார். அவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருந்தனர். எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி படங்கள் பட்டிதொட்டியெல்லாம் ஓடியபோது இவரது படங்களுமே அவர்களுக்கு இணையாக ஓடின. எம்.ஜி.ஆர் & சிவாஜி போல இல்லாமல் தனக்கென்றே ஒரு ஜாலியான இமேஜை வளர்த்துக்கொண்டு இன்றுவரை பலராலும் நினைவுகூரப்படும் அவர்தான் – ஜெமினி கணேசன்.

Robert Mckee's book - 'Story'

Robert Mckee’s book – ‘Story’

இதை அப்படியே ஹாலிவுட்டுக்குக் கொண்டுசென்றால், ஸிட் ஃபீல்ட் தனது மென்மையான, நட்பான அணுகுமுறையால் (யாருடனும் எப்போதுவேண்டுமானாலும் பேசுவார்; இனிமையான நபர்; செமினார் முடிந்தபிறகும் பொறுமையாக எல்லாருடைய கேள்விகளுக்கும் பதில் சொல்வார்) உலகெங்கும் உள்ள திரைக்கதை எழுதுபவர்களின் மனதில் நம்பிக்கையை விதைத்துக்கொண்டே இருக்கையில் தனது தடாலடி அணுகுமுறையால் (செமினார்களில் கேள்விகள் கேட்கப்படக்கூடாது; புதிதாக எதையும் சொல்லப்படமாட்டாது; அதே ஒரே புத்தகம்தான் இன்றுவரை; F**k என்ற வார்த்தையை அளவுக்கு அதிகமாக உபயோகிக்கும் நபர்) உலகம் முழுதும் உள்ள திரைக்கதை எழுத்தாளர்களை இன்ஸ்பையர் செய்கிறார் ராபர்ட் மெக்கீ. ஆள் ஒரு மாதிரி பேசினாலும், திரைக்கதை முறைகளில் எக்கச்சக்கமான அறிவு உள்ளவர். ராபர்ட் மெக்கீயின் திரைக்கதை வகுப்புகள் எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணமாக இதோ இந்த ஒரு நிமிட வீடியோவைப் பார்க்கலாம்.


 

இதில் ராபர்ட் மெக்கீயாக நடித்திருப்பவர் ப்ரையன் காக்ஸ் (Brian Cox). இந்தக் காட்சி இடம்பெற்ற படம் – Adaptation (2002). இதில் நிகலஸ் கேஜ், மிகவும் நெகட்டிவ் மனநிலையில் உள்ள திரைக்கதை ஆசிரியர். கதைப்படி ராபர்ட் மெக்கீயின் செமினாருக்குச் செல்கிறார். அங்கே அரிதாகவே வழங்கப்படும் கேள்வி நேரத்தில் ஒரு கேள்வியைக் கேட்கிறார்.’எனது கதையில் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. யாரும் மாறுவது இல்லை. பொதுவாக உலகில் நடப்பதுபோலவே இப்படி இருந்தால் என்ன பிரச்னை?’. இதற்கு ராபர்ட் மெக்கீயின் பதிலைக் கவனியுங்கள். அதுதான் திரைக்கதை எழுதுவதன் அடிப்படை. Conflict. முரண்பாடுகள் இருந்தால்தான் அது ஒரு முழுமையான திரைக்கதை. இதைப்பற்றி ஸிட் ஃபீல்ட் எக்கச்சக்கமாகச் சொல்லி இங்கே கருந்தேளிலும், தினகரன் வெள்ளிமலரில் ‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ தொடரிலும் விபரமாக எழுதியிருக்கிறேன். ராபர்ட் மெக்கீயின் கருத்துமே அதுதான். இதைப்பற்றி இன்னும் விரிவாக ராபர்ட் மெக்கீயின் புத்தகத்தைப் பார்க்கையில் கவனிப்போம். இப்போது வீடியோ.

 

எப்படி? இந்த வீடியோ, முற்றிலும் ராபர்ட் மெக்கீயை ஸ்டடி செய்து எடுக்கப்பட்டதுதான். அவரது திரைக்கதை வகுப்புகள் இப்படித்தான் இருக்கும். மிகவும் கண்டிப்பான ஒரு நபராகவே தன்னைக் கட்டமைத்துக்கொண்டவர் ராபர்ட் மெக்கீ.

இப்படியாக, ஹாலிவுட்டின் திரைக்கதை சரித்திரத்தில் ஸிட் ஃபீல்ட் சிவாஜியாகவும், ராபர்ட் மெக்கீ எம்.ஜி.ஆரைப் போலவும் செயல்பட்டுக்கொண்டிருந்த காலத்தில், தடாலடியாக ஜெமினி கெணேசன் போல துள்ளிக்கொண்டே உள்ளே நுழைந்தவர்தான் ப்ளேக் ஸ்னைடர் (Blake Snyder).


 

ப்ளேக் ஸ்னைடர் யார்? அவருக்கும் திரைக்கதை எழுத்துக்கும் என்ன சம்மந்தம்? ஆனானப்பட்ட ஸிட் ஃபீல்டையும் ராபர்ட் மெக்கீயையும் விட இவர் என்ன பெரிய அப்பாடக்கரா?

Blake Snyder

Blake Snyder

திரைக்கதை எழுதச் சொல்லிக்கொடுப்பவர்களுக்கும், உண்மையில் சினிமாவில் நுழைந்து கஷ்டப்பட்டுத் திரைக்கதை எழுதக் கற்றுக்கொண்டு அதன்பின் சிறந்து விளங்குபவர்களுக்கும் உள்ள வித்தியாசம் எளிதாகப் புரிகிறதுதானே? அதே வித்தியாசம்தான் ஸிட் ஃபீல்ட், ராபர்ட் மெக்கீ & குழுவினருக்கும் ப்ளேக் ஸ்னைடருக்கும் பொருந்தும். ஸிட் ஃபீல்டும் ராபர்ட் மெக்கீயும் ஆரம்பகாலங்களில் திரைக்கதைகள் எழுதியிருந்தாலும், பிரபலமான திரைக்கதைப் பயிற்சியாளர்களாக ஆனபின்னர் திரைக்கதைகள் எழுதியதில்லை (அல்லது எழுதிய திரைக்கதைகள் சரியாக வந்ததில்லை). ஆனால் ப்ளேக் ஸ்னைடர் ஹாலிவுட்டின் வெற்றிகரமான திரைக்கதை எழுத்தாளர்களில் ஒருவர். Spec Script என்னும் வகையில் கில்லாடி. அதாவது, திரைக்கதை எழுதும் நபர் ஒருவர் தானாகவே ஒரு கருவை யோசித்து, எந்த ஸ்டூடியோவும் தன்னை அணுகாதபோதே முழுத் திரைக்கதையையும் முடித்துவிட்டு, அதன்பின்னர் அதனை ஸ்டூடியோக்களுக்கு விற்க முயல்வதுதான் Spec Scripts. ஹாலிவுட்டின் பிரபலமான வார்த்தைகளில் ஒன்று. எண்பதுகளில் மிகப் பிரபலமாக விளங்கிய ஒரு வார்த்தையும்கூட. Thelma & Louise (Callie Khouri), Good Will Hunting (Ben Affleck & Matt Damon), American Beauty (Alan Ball), The Boondock Saints (Troy Duffy), Lethal Weapon (Shane Black), The Matrix (The Wachowski Brothers) போன்றவை இப்படி எழுதப்பட்டவைதான். இந்தத் திரைக்கதைகள் எழுதப்பட்ட காலங்களில் இவற்றின் திரைக்கதை எழுத்தாளர்களை யாருக்குமே தெரியாது. ஆனால் இந்தத் திரைக்கதைகள் ஒவ்வொன்றும் ஆறு இலக்க எண்களில் ஸ்டுடியோக்களுக்கு விற்கப்பட்டதன்பின்னர் இந்தப் படங்களும் அவற்றை எழுதியவர்களும் மிகப்பிரபலம் அடைந்தனர். தமிழ் சினிமாவில் இன்றுவரை வெகு சாதாரணமாக நடக்கும் இந்த வேலை, ஹாலிவுட்டில் தற்போது கொஞ்சம் அரிது.

இப்படிப்பட்ட Spec Script உலகில் புயல் போல நுழைந்து கலக்கியவர்தான் ப்ளேக் ஸ்னைடர். 1989ல் ஸில்வெஸ்டர் ஸ்டாலோன் நடித்த ‘Stop! Or My Mom will Shoot’ படம் வெளியானபோது ஹாலிவுட்டில் இவர் புகழ் பரவியது. அந்தப் படம் பாக்ஸ் ஆஃபீஸில் சரியாகச் செல்லாதபோதும், தனக்கே உரிய ஒரு மார்க்கெட்டை ப்ளேக் ஸ்னைடர் எளிதாக அடையாளம் கண்டுகொண்டார். அதுதான் குடும்பத்தோடு ரசிகர்கள் சென்று சிரித்து மகிழும் படங்கள். இந்த ஜானரில் மொத்தம் பன்னிரண்டு Spec Scriptகளை ப்ளேக் ஸ்னைடர் எழுத, அவை அத்தனையும் மில்லியன்களில் விலைபோயின. தனது புகழின் உச்சத்தில் ஸ்பீல்பெர்க்குக்கே ஒரு திரைக்கதையை விற்றார் ப்ளேக் ஸ்னைடர் (Nuclear Family). அது திரைப்படமாக எடுக்கப்படவில்லை என்றாலுமே, ஸ்னைடர் அதில் எக்கச்சக்கமாக சம்பாதித்தார். அவர் விற்ற பன்னிரண்டு திரைக்கதைகளில் மொத்தம் இரண்டே இரண்டுதான் திரைப்படமாக எடுக்கப்பட்டன (Stop! or My Mom Will Shoot ஒன்று. பின்னர் Blank Check இன்னொன்று. சமீபத்தில் வெளியாகியிருக்கும் Ride Along, தொண்ணூறுகளில் ஸ்னைடர் எழுதிய (அல்லது விவாதித்த) கதைதான்.

தனது புகழின் உச்சத்தில் இருந்தபோது ப்ளேக் ஸ்னைடர் எழுதிய புத்தகம், இன்றுவரையில் திரைக்கதை ஆர்வலர்களுக்கிடையே மிகவும் பிரபலம். திரைக்கதைத் துறையில் இருந்ததால் அவரது புத்தகம் மிக எளிதாகவும் உண்மையாகவும் திரைக்கதை எழுதும் கலையை போதித்தது. ஹாலிவுட்டில் இப்படித் தான் கற்றுக்கொண்ட கலையைப் பற்றிப் புத்தகம் எழுதிய திரைக்கதையாளர்கள் மிகவும் கம்மி என்பதாலும், ப்ளேக் ஸ்னைடரின் புத்தகம் எக்கச்சக்கப் புகழ் அடைந்தது. அந்தப் புத்தகத்தின் பெயர் – Save the Cat! The Last Book on Screenwriting You’ll Ever Need’. இந்தப் புத்தகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இன்னும் இரண்டு புத்தகங்கள் இதே Save the Cat சீரீஸீல் எழுதினார் ப்ளேக் ஸ்னைடர். திரைக்கதை வகுப்புகளும் எடுக்க ஆரம்பித்தார். அதிலும் அதிரடி வெற்றியை ஈட்டினார். ஆனால் – மிகவும் வெற்றிகரமான திரைக்கதை எழுத்தாளர் + ஆசிரியராக சரசரவென்று புகழேணியில் ஏறிக்கொண்டிருந்த வேளையில் தனது 52வது வயதில் ஆகஸ்ட் 2009ல் நுரையீரல் அடைப்பால் (Pulmonary Embolism) திடீரென்று இறந்துவிட்டார் ப்ளேக் ஸ்னைடர்.

ப்ளேக் ஸ்னைடர் தனது புத்தகத்தை எழுதிய 2005ல் ராபர்ட் மெக்கீ தனது 64வது வயதில் நுழைந்திருந்தார். ஸிட் ஃபீல்ட் இன்னும் மோசம். அவருக்கு வயது எழுபது. இப்படி இரண்டு பழைய தலைமுறை ஆட்களிடம் திரைக்கதை வகுப்பு படித்துக்கொண்டிருந்தவர்களுக்கு, 48 வயது ப்ளேக் ஸ்னைடர் ஜெமினி கணேசன் போலத்தான் தெரிந்தார். மிகவும் கேஷுவலான ‘ஹாய் மேன்’ அப்ரோச், ஆசிரியராகத் தன்னைக் காட்டிக்கொள்ளாமல் ஒரு நண்பன் போலத் திரைக்கதை சொல்லிக்கொடுக்கும் விதம் என்று சக இளைஞனாக இருக்கும் ஒரு நபரிடம் நாமுமே எளிதாகப் பழகிவிடுவோம்தானே?

Blake Snyder's book - 'Save the Cat'

Blake Snyder’s book – ‘Save the Cat’

இதே காரணத்தால், ப்ளேக் ஸ்னைடரின் ‘Save the Cat!The Last Book on Screenwriting You’ll Ever Need’ புத்தகமும் படிக்க மிகவும் எளிமையானதாக இருக்கும். வந்த புதிதில் அபரிமிதமாக விற்றுத் தீர்ந்த புத்தகமாகவும் அது இருந்தது. யார் வேண்டுமானாலும் ஸிட் ஃபீல்டையோ அல்லது ராபர்ட் மெக்கீயையோ படித்துவிடமுடியாது. ஸிட் ஃபீல்டாவது பரவாயில்லை. ஆனால் ராபர்ட் மெக்கீயை கேஷுவலாகப் படிக்க முயற்சித்தால் பேதி அவசியம். காரணம் அதில் உள்ள விஷயங்களைத் தெரிந்துகொள்ள, திரைக்கதையைப் பற்றி நன்றாக முதலில் தெரிந்திருக்கவேண்டும். ஆனால் ப்ளேக் ஸ்னைடரை உலகில் உள்ள எவரும் படிக்கலாம் என்பது அவரது ப்ளஸ் பாயிண்ட்.

அப்படிப்பட்ட புத்தகத்தில் ப்ளேக் ஸ்னைடர் சொல்லியிருப்பதையும் முழுதாகவே, மிகவும் எளிமையாகப் பார்க்கப்போகிறோம். இதுதவிர இன்னும் சில திரைக்கதை ஜித்தர்களின் (Paddy Chayefsky, Michael Hauge, Joseph CVampbell, Linda Seger போன்றவர்கள் சில உதாரணங்கள்) புத்தகங்களையும் இந்தத் தொடரில் நாம் கவனிக்கப்போகிறோம் என்பதால்தான் இந்தத் தொடர் எப்போது முடியும் என்பதே தெரியாது என்று சொன்னேன்.


 

ஓகே. இப்போது, சென்ற அத்தியாயத்தில் விட்ட இடத்தில் இருந்து தொடருவோம்.

நமது திரைப்படம் என்ன ஜானர் என்று நமக்குத் தெரிந்துவிட்டது. குட்டியூண்டாக நமது மனதில் இருக்கும் கருவும் வெளிவரத் துடித்துக்கொண்டிருக்கிறது. இனி நாம் செய்யவேண்டியது என்ன? தடதடவென்று எங்காவது அமர்ந்து திரைக்கதையை (அது என்னவென்று தெரியாமலேயே) எழுதிவிடவேண்டுமா?

‘அதெல்லாம் வாணாம் மச்சி’ என்பது ப்ளேக் ஸ்னைடரின் கருத்து. மனதில் இருக்கும் கதையின் கரு தெரிந்தவுடன், அந்தக் கருவை முடிந்தவரை வளர்த்து, அழகான + சுவாரஸ்யமான ஒன்லைன் ஆக்கவேண்டும் என்பதே ப்ளேக் ஸ்னைடர் சொல்லும் முதல் பாடம். இந்த ஒன்லைன் வேலைதான் ஹாலிவுட்டில் LogLine என்று அழைக்கப்படுகிறது. தமிழில் கோடம்பாக்கத்தில் இது ஒன்லைன் எனவும் சப்ஜெக்ட் எனவும் கூறப்படும்.

அது ஏன் இந்த ஒன்லைனை நன்றாக ஆக்கவேண்டும்?

நாம் சொந்தத் தொழில் செய்யப்போகிறோம். உலகையே பிடறி முடியைப் பிடித்து உலுக்கி நம் பக்கம் திரும்பவைக்கக்கூடிய ஒரு அட்டகாசமான வியாபார உத்தி நம்மிடம் இருக்கிறது. அதெல்லாம் வேறு யாருக்குமே தோன்றவும் தோன்றாது. உண்மையாக உழைத்தால் கோடிகளில் நாம் புரண்டு விளையாடுவது உறுதி என்று வைத்துக்கொள்வோம். முதல் படியாக, பேங்க் லோன் கேட்டு உள்ளே செல்கிறோம். அந்தப் பணம் சாங்ஷன் ஆனால் கோடிகள் உறுதி. அதில் சந்தேகமில்லை. மேனேஜர் அமைதியாக தனது கேபினில் அமர்ந்திருக்கிறார். கையில் உள்ள ஃபைல்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். உள்ளே நுழைகிறோம்.

“சார்….”

மேனேஜர் முகத்தை நிமிர்த்துகிறார். முகத்தில் கேள்விக்குறி. “பேசுய்யா’ என்று அர்த்தம்.

“சார்.. வந்து.. என்கிட்ட ஒரு ப்ளான் இருக்கு. அந்தப் ப்ளான் சக்சஸ் ஆச்சின்னா ஜாக்பாட்தான் சார்.. ரொம்ப நாள் யோசிச்ச ப்ளான் சார்.. ஊர்லகூட எல்லாரும் பாராட்டினாங்க.. இந்தப் ப்ளான் அவசியம் ஃபெய்லியர் ஆகாது சார்.. என்னால அடிச்சி சொல்லமுடியும் சார்..”

மேனேஜர் யோசிக்கிறார். ‘பயபுள்ள ப்ளான் ப்ளான்னு சொல்றான்.. ஆனா என்னன்னு சொல்லமாட்றானே’..

“தம்பி.. விபரமா சொல்லுப்பா”

“சார்.. இந்த கூழாங்கல்லு இருக்குல்ல சார்..அதுல இருந்து கரண்ட் தயாரிக்கலாம் தெரியுமா உங்களுக்கு?”
(நன்றி – பட்டுக்கோட்டை பிரபாகர். ‘பிருந்தாவனமும் நொந்த குமாரனும்’ – உங்கள் ஜூனியர் வெளியீடு).

அடுத்த நொடியே மேனேஜர் கத்தும் கத்தலில் செக்யூரிடி நம்மைப் பிடித்து ரோட்டில் வீசிவிடுகிறார்.

மனம் முழுக்க அட்டகாசமான ப்ளான் இருந்தாலும், அதை சுருக்கமாக உரிய இடத்தில் சொல்லத் தவறியதால் வந்த நிலை இது.

அதுவே, நாம் பலமுறை ரோட்டில் பார்த்த சில மனிதர்களைக் கவனியுங்கள். “சார்.. நாலு நாளா பட்டினி சார். பர்ஸை தொலைச்சிட்டேன்” என்று மிகவும் பரிதாபகரமாக ஒரு குடும்பத்தை வைத்துக்கொண்டு நடிப்பவர்கள், ரயிலில் பிஸ்கெட் கொடுப்பவர்கள், ஒரு ஊரில் இருக்கும் பலரையும் ஏமாற்றிவிட்டுப் பக்கத்து ஊரில் கடை போட்டு அதையே செய்பவர்கள் என்று ஒரு பெரிய கும்பல் இருக்கிறது. அவர்களின் நோக்கம் மோசடி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் யாரென்றே தெரியாத நபரிடம் தங்களின் மனதில் இருக்கும் ஃப்ராடு நோக்கத்தை வெளிப்படுத்தாமல் முழுதும் நல்லவர்களாக நடித்து எப்படி முதல் தடவையே நம்பவைக்க முடிகிறது? இவர்கள் தினந்தோறும் சந்திக்கும் மனிதர்களிடம் அந்த சூழ்நிலைக்கேற்றவாறு ஸ்பாண்டேனியஸாகப் பேசுவது ஒரு ஆச்சரியம்.

ஆக, நோக்கம் நல்லதாக இருந்தால் போதாது – அதனை மற்றவர்களின் கவனத்தை ஒரே முறையில் கவருவதுபோல வெளிப்படுத்துவதே முக்கியம் என்பது புரிகிறது அல்லவா?

அதுதான் ஒன்லைனைப் பாலிஷ் செய்வதன் நோக்கம். படத்தின் கதை நன்றாக வரும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கலாம். ஆனால் அதனை ஓரிரு வரிகளில், கேட்பவர்களின் கவனத்தை டக்கென்று கவரும் வகையில் சொல்லத் தெரிந்தால்தான் அந்தத் திரைக்கதை வெற்றியடையும். அப்படி நாம் சொல்வதைக் கேட்கும் நபர் ஒரு மிகப்பெரிய தயாரிப்பாளராக இருக்கலாம். அதுதான் அவருடனான முதலும் கடைசியுமான சந்திப்பா இல்லையா என்பதை முடிவுசெய்யும் பிரம்மாஸ்திரம் இந்த ஒன்லைன்தான். நாம் சொல்லும் ஒன்லைனைக் கேட்பவர் யாராக இருந்தாலும் சரி – அந்த ஒன்லைன் அவரது மனதில் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். அதன்மூலம் அவர் கவரப்பட்டு அவரது தொடர்புகள் மூலம் நமக்கு உதவி செய்யவும் எக்கச்சக்க வாய்ப்புகள் உள்ளன. மொத்தத்தில் ஒன்லைன் என்பது நம்மிடம் இருக்கும் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம். அதைக் கச்சிதமாகப் பயன்படுத்தினால், வெற்றி உறுதி.

ப்ளேக் ஸ்னைடர் இதையெல்லாம் சொல்லவில்லை. இது என் சொந்தக் கருத்துதான். இனிமேல்தான் ஒன்லைன்களை எப்படி வெற்றிகரமாக வடிவமைப்பது என்ற ப்ளேக் ஸ்னைடரின் கூற்றைப் பார்க்க இருக்கிறோம்.

வரும் வியாழன் தொடருவோம்…

Facebook Comments

Sharing is caring!

fb Comments

comments

  Comments

7 Comments

 1. arun

  Onnukku muuunu peraaa….. pinreeenga scorp…. Oru full meals saptta thrupti…. 🙂

  Reply
 2. There are many more to come up boss. Biriyani, chinese, continental.. Be ready 🙂

  Reply
 3. obili venkat

  ஆர்வமா இருக்கு படிக்க… நன்றி

  Reply
 4. Thank you boss. I will make it sure it remains interesting throughout 🙂

  Reply
 5. Sakthigs

  கதை எழுதறது எல்லாம் சாதரணம்னு நெனச்சுட்டு இருந்தேன். but எவ்ளோ கஷ்டபடறாங்க….!!! இந்த one line விசயம் தான் நம்மள அதிகம் யோசிக்க வைக்குது. வியாழக்கிழமை வரை wait பண்ணனுமேன்னு நெனச்சா தான் உங்க மேல கோபமா வருது boss. 😉 I’m waiting

  Reply
 6. லோகநாதன்

  மிக்க நன்றி ராஜேஷ் !!!ராபர்ட் ம்க்கீ பற்றி நான் கேள்விப்பட்டவுடன் உங்களிடம் அந்த புத்தகம் பற்றி கேட்டேன் . அதை தாங்கள் எல்லோருக்கும் நன்றாக புரியும்படி எழுத ஆரம்பிகிறீர்கள் என்றவுடன் இரட்டிப்பு மகிழ்ச்சி தல …cheers

  Reply
 7. Jothi Murugan

  ஹையா… ப.கோ.பா வோட பிருந்தாவனமும் நொந்த குமாரனும்… மறக்க முடியாத நாவல். பல முறை படித்து வயிறு குலுங்க சிரித்திருக்கிறேன். ஆனா, அது எ நாவல் டைம் ல வந்ததா ஞாபகம். அப்பிடியா ராஜேஷ்!

  Reply

Join the conversation