X Men: Days of Future Past (2014): 3D – English

by Rajesh May 25, 2014   English films

Sharing is caring!

முன்குறிப்பு – இந்தக் கட்டுரையை மெதுவாகப் படிக்கவும். வேகமாகப் படித்தால் கட்டுரை புரியாமல் போகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. Now take a back seat and enjoy.


 

இங்லீஷ் ஆக்‌ஷன் படங்கள் பலவற்றிலும் வரிசையான அடிதடி காட்சிகள்தான் ஏராளமாக இருக்கும். கதையோடு ஒன்றிப்போய் கதாபாத்திரங்களை ரசிக்க அங்கே வாய்ப்புகள் இருக்காது. இப்படிப்பட்ட படங்கள் நன்றாக ஓடினாலும் விரைவில் மறக்கப்பட்டுவிடும். ஆனால் அதே ஹாலிவுட்டில் ஆக்‌ஷன் + செண்ட்டிமெண்ட் என்று பக்காவான கலவையிலும் சில படங்கள் வெளிவருவதுண்டு. இதுபோன்ற படங்கள், ஆடியன்ஸின் மனதில் வெகுகாலம் இருக்கும் தன்மை வாய்ந்தவை. முதல் வகைக்கு உதாரணங்களாக 2012, Transformers series, Godzilla (2014), The Amazing Spiderman 2 (2014) என்று சில உதாரணங்கள் சொல்லலாம். இரண்டாம் வகைக்கு Planet of the Apes, Lord of the Rings series, Star Trek (2009), 300 என்று சில உதாரணங்கள் சொல்லலாம். இந்த வரிசையில், அனைத்து X Men படங்களையும் பார்த்தவன் என்ற முறையில் இதுவரை வெளிவந்த எந்த X Men படத்தையும் விட இந்தப் படம்தான் இந்த ஆக்‌ஷன் + செண்ட்டிமெண்ட் ஃபார்முலாவை மிகச் சரியாக உபயோகிக்கப்பட்டு எடுக்கப்பட்டிருக்கிறது என்பது என் கருத்து.

படத்தைப் பார்ப்பதற்கு முன்னர், இதற்கு முன்பு வந்த மற்ற படங்களில் என்ன நடந்திருக்கிறது என்பது மிகவும் முக்கியம். அப்போதுதான் இந்தப் படத்தை முழுமையாக ரசிக்கமுடியும். காரணம், இதில் பல கதாபாத்திரங்கள்/அவர்களது உறவுமுறைகள் ஆங்காங்கே சொல்லப்படுகின்றன. இவையெல்லாம் தெரியாமல் படம் பார்த்தால்கூடப் படம் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். ஆனால் முழுப் பின்னணியும் தெரிந்துகொண்டு படம் பார்த்தால் நன்றாக ரசிக்கலாம் என்பதால் பழைய கதைகளைப் பற்றிச் சில வார்த்தைகள்.


 X Men (2000)

443313-superheroes-x-men-wallpaper

இதுதான் இந்த சீரீஸின் முதல் படம். இயக்குநர் ப்ரையன் சிங்கரின் படைப்பு. உலகில் ம்யூட்டண்ட்ஸ் என்ற – சராசரி மனித மரபணுவில் இருந்து மாறுபட்டு mutate ஆகி விசேட சக்திகள் வாய்க்கப்பெற்ற இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசால் நிகழும் பிரச்னைகளையும், அவர்களுக்குள்ளேயே இருக்கும் இரண்டு குழுக்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வதையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். ப்ரொஃபஸர் சார்லஸ் ஸேவியர் என்பவரும், இளவயதில் அவருடன் நண்பராக இருந்த எரிக் லென்ஷெர் (Magneto) என்பவரும்தான் இந்த இரண்டு குழுக்களின் தலைவர்கள். சார்லஸ் ஸேவியரால் எந்த மனதையும் ஊடுரூவ முடியும். அவர்களை இவரது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரவும் முடியும். மேக்னீடோவின் சக்தி – இரும்புகளை எளிதில் இவர் நினைத்தபடி கட்டுப்படுத்துதல். தன் மனதை ஸெவியர் படிக்கக்கூடாது என்பதால் தலையைச் சுற்றி எப்போதும் ஒரு இரும்புக் கவசம் அணிவது மேக்னீடோவின் வழக்கம். உலகில் உள்ள ம்யூட்டண்ட்களின் மனதைப் படிக்க சார்லஸ் ஸேவியர் உபயோகிக்கும் இயந்திரத்தின் பெயர் – செரிப்ரோ (Cerebro).

இந்தப் படத்தில் வுல்வரீன் என்ற கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. அவனுடன் சேர்ந்து Rogue என்ற இளம்பெண் அறிமுகப்படுத்தப்பட்டாள். இவளுக்கு எதிராளியின் சக்தியை கிரகிக்கும் ஆற்றல் உண்டு. வுல்வரீனுக்கு அவனது வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் நினைவில் இல்லை. அவனுடைய எலும்பில் இயல்பாகவே இருக்கும் மிகப்பெரிய நகங்கள் அகற்றப்பட்டு, அதற்குப்பதில் Adamantium என்ற உலோகத்தால் ஆன நகங்கள் யாராலோ பதிக்கப்பட்டிருக்கின்றன. அவனது வாழ்க்கையின் இறந்தகாலத்தைத் தேட முயல்கிறான் வுல்வரீன். அவனது இயற்பெயர் ஜேம்ஸ் ஹவ்லெட் James Howlett). ‘லோகன்’ என்ற பெயரால் அழைக்கப்படுபவன். இவனுக்கு இன்னொரு விசேட அம்சமும் உண்டு. அவனுக்கு வயதே ஆகாது என்பதுதான் அது. கூடவே காயங்களை மிக விரைவில் சரிசெய்துகொள்ளும் இயல்பும் உண்டு.

இப்படிப்பட்ட வுல்வரீனும் Rogueம் சார்லஸ் ஸேவியரிடம் வந்து சேர்கின்றனர். அவர் நடத்திவரும் ம்யூட்டண்ட்களுக்கான பள்ளியை வுல்வரீன் பார்க்கிறான். அந்தப் பள்ளியில் ஸேவியரோடு சேர்ந்து ஜீன் க்ரே என்ற பெண் விஞ்ஞானி, ஸ்டார்ம் என்ற பெண், சைக்ளோப்ஸ் என்ற நபர் ஆகியவர்களும் இருக்கிறார்கள். இவர்களின் வேலை – உலகில் அமைதியைப் பரப்புதல். ஜீன் க்ரேயை விரும்ப ஆரம்பிக்கிறான் வுல்வரீன். ஆனால் சைக்ளோப்ஸுக்கு இது பிடிப்பதில்லை. காரணம் அவனும் ஜீன் க்ரேயை விரும்புகிறான். இதனால் வுல்வரீனும் சைக்ளோப்ஸும் ஒருவரையொருவர் பிடிக்காமலேயே சார்லஸ் ஸேவியருடன் இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் மேக்னீடோ என்ற வில்லன் இவர்களைத் தாக்குகிறான். அவனது நோக்கம், Rogueஐக் கவர்வது. காரணம் அவளிடம் உள்ள சக்தி. அதைவைத்து அவனிடம் உள்ள ஒரு இயந்திரத்தை இயக்குவது. அந்த இயந்திரத்தால் யாரை வேண்டுமானாலும் ம்யூட்டண்ட்டாக மாற்ற முடியும். அந்த இயந்திரத்தை வைத்துக்கொண்டு ஒரு உலக நாடுகள் சந்திப்பில் கூடும் தலைவர்களை ம்யூட்டண்ட்களாக மாற்ற நினைக்கிறார் மேக்னீடோ. அதை சார்லஸ் ஸேவியரின் படை தடுப்பதுதான் படம். இந்தப் படத்தின் இறுதியில் மேக்னீடோ சிறைப்படுத்தப்படுகிறார்.


 X2 (2003)

xmen2

வில்லியம் ஸ்ட்ரைக்கர் (இந்தப் பெயரை நன்றாக நினைவு வைத்துக்கொள்ளுங்கள்) என்பவன் அமெரிக்க அரசின் ரகசிய மிஷன் ஒன்றின் தலைவன். இவனது வேலை – சார்லஸ் ஸேவியரின் செரிப்ரோ இயந்திரத்தைப் போலவே இன்னொரு இயந்திரத்தை உருவாக்கி அதன்மூலம் ம்யூட்டண்ட்களைக் கண்டுபிடித்து எல்லாரையும் கொல்வது. இவனைத் தடுப்பதற்காக எதிரிகள் சார்லஸ் ஸேவியரும் மேக்னீடோவும் ஒன்றுசேர்கிறார்கள். இந்த வில்லியம் ஸ்ட்ரைக்கர்தான் வுல்வெரீனை ஆரம்பத்தில் சிறைப்படுத்தி அவனது உடலில் பரிசோதனைகள் செய்தவன். இவனால்தான் வுல்வரீனின் பிரம்மாண்ட நகங்கள் உலோகமாக மாற்றப்பட்டிருக்கின்றன.

பல சாகஸங்களுக்குப் பின் இந்த வில்லியம் ஸ்ட்ரைக்கர் வெல்லப்பட்டு அவனது இயந்திரம் அழிக்கப்படுவதுதான் இந்தப் படத்தின் கதை. இந்தப் படத்தில் வுல்வரீனுக்குப் பிடித்தமான விஞ்ஞானி ஜீன் க்ரே தன் உயிரைத் தியாகம் செய்கிறாள்.


 X Men: The Last Stand (2006)

x3_1387792960

ம்யூட்டண்ட்களின் உடலில் செலுத்தப்படும் ஒரு மருந்து ஒரு நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த மருந்தால் ம்யூட்டண்ட்களின் ஜீன்கள் கட்டுப்படுத்தப்பட்டு அவர்கள் சராசரி மனிதர்களாக மாறிவிடுவார்கள். இந்த மருந்தை மேக்னீடோ வெறுக்கிறார். தங்களது இனத்துக்கே ஆபத்து வந்துவிடும் என்று எண்ணி அந்த நிறுவனத்தை அழிக்க முயற்சி செய்கிறார். அதே நேரத்தில், சென்ற படத்தில் இறந்துபோன விஞ்ஞானி ஜீன் க்ரே, இறக்கும் தறுவாயில் அவளது alter egoவான ஃபீனிக்ஸ் என்ற அவதாரம் எடுத்து மறுபடியும் வருகிறாள். இந்த ஃபீனிக்ஸ் என்ற கதாபாத்திரம் ஜீன் க்ரேயைப் போல் நல்ல நபர் அல்ல. மாறாக, யாரை வேண்டுமானாலும் நொடியில் காற்றில் கரையவைக்கும் சக்தி படைத்தது. இந்தப் படத்தின் துவக்கத்தில் சிறுவயது ஜீன் க்ரேயை நண்பர்களாக இருக்கும் சார்லஸ் ஸேவியரும் மேக்னீடோவும் சந்தித்துப் பேசுகிறார்கள். அப்படிப் பேசும்போது அவளது ஆல்டர் ஈகோவான ஃபீனிக்ஸை உணரும் ஸேவியர், அதனை அவளது மனதுக்குள்ளேயே மூடி மறைத்து வைக்கிறார். அந்த சக்திதான் அவளது இறப்பில் வெடித்துக் கிளம்பியிருக்கிறது. இதனை மேக்னீடோவும் அறிவதால், ஃபீனிக்ஸைத் தன்னுடன் சேரும்படி அழைக்கிறார்.அப்போது நிகழும் சண்டையில் சார்லஸ் ஸேவியரைத் தாக்கும் ஃபினிக்ஸ், அவரைக் காற்றில் கரைத்துவிடுகிறாள்.

மேக்னீடோ அந்த விஞ்ஞான நிறுவனத்தைத் தாக்கும்போது அங்கு வரும் X men படை அவரைத் தடுக்கிறது. அப்போது Beast என்னும் ம்யூட்டண்ட் மேக்னீடோவின் உடலில் அந்த மருந்தைப் பாய்ச்சிவிட, தனது அத்தனை சக்திகளையும் இழக்கிறார் மேக்னீடோ. அதேசமயம் அங்கே ராணுவம் ஜீன் க்ரேயைத் தாக்குவதால் அவளுக்குள்ளிருக்கும் ஃபீனிக்ஸ் உயிர்பெற, அதன் சக்தியைத் தாங்கும் ஒரே நபராக வுல்வரீன் மட்டுமே இருக்கிறான். காரணம் அவனது விரைவில் குணம்பெறும் இயல்பு. இதனால் ஜீன் க்ரேயை நெருங்குகிறான் வுல்வரீன். ஒரே ஒரு கணம் சுயநினைவு பெறும் ஜீன் க்ரே, ஃபீனிக்ஸிடம் இருந்து தன்னைக் காப்பாற்றச்சொல்லி வுல்வரீனிடம் இறைஞ்சுகிறாள். அடுத்த கணமே தனது நகங்களை அவளது உடலில் பாய்ச்சி அவளைக் கொன்றுவிடுகிறான் வுல்வரீன்.

அந்தப் படத்தின் முடிவில், ஒரு பூங்காவில் அமர்ந்திருக்கும் வயதான நபர் ஒருவர் தன் முன் இருக்கும் செஸ் போர்டில் உள்ள ஒரு ராணியை நகர்த்தத் தனது கையைக் கொண்டு செல்கிறார். அப்போது அவரது கையசைவினாலேயே அந்த ராணி அதிர்கிறது. அவர்தான் மேக்னீடோ. அவரது சக்தி அவருக்குத் திரும்புவதை உணர்த்தும் அந்த ஷாட்டோடு இந்தப் படம் முடிகிறது. படத்தில் ஒரு போஸ்ட் க்ரெடிட் ஸீனும் உண்டு. ஒரு மருத்துவக் கூடத்தில் கோபாவில் படுத்திருக்கும் ஒரு நோயாளி, தன்னைக் கவனிக்க வரும் மருத்துவரிடம் சார்லஸ் ஸேவியரின் குரலில் பேசுவதே அந்தக் காட்சி. இதனால் இறுதியில் மேக்னீடோவுக்கும் திரும்ப சக்தி வந்துவிடுகிறது; அதேசமயம் சார்லஸ் ஸேவியரும் திரும்பி வந்துவிடுகிறார்.


இத்துடன் X Men படங்களின் ட்ரையாலஜி முடிந்தது. இது – 2006ல். முதல் இரண்டு படங்களை இயக்கிய ப்ரையன் ஸிங்கர் Superman Returns படத்தை இயக்கச் சென்றுவிட்டதால் இந்தப் படத்தை மட்டும் ப்ரெட் ராட்னர் இயக்கினார்.

இந்த ஸீரீஸின் மூன்று படங்களில் முதலிரண்டு படங்கள் அட்டகாசமான வரவேற்பைப் பெற்றன. காரணம் – அவற்றை இயக்கிய ப்ரையன் ஸிங்கர். இவர்தான் cult படமான The Usual Suspects படத்தின் இயக்குநர். இவரது நிறுவனமான Bad Hat Harryயின் லோகோ, யூஷ்வல் சஸ்பெக்ட்ஸின் பிரபலமான கும்பல் mugshotதான். கூடவே டாம் க்ரூஸ் நடித்த Valkyrie படத்தையும் இவர்தான் இயக்கினார். மூன்றாவது பாகம் அந்த அளவு பேசப்படவில்லை.

இந்த மூன்று படங்களோடு X Men ஸீரீஸ் முடிந்துவிடவில்லை. இவை முடிந்ததும் வுல்வரீனின் பின்னணியை விளக்கும் படமாக ‘X Men Origins: Wolverine’ படம் 2009ல் வெளியிடப்பட்டது. படம் வருவதற்கு முன்னரே இண்டர்நெட்டில் இதன் ஸிஜி செய்யப்படாத வடிவம் லீக் செய்யப்பட்டது. படமும் நன்றாக இல்லாததால் பெரும்பாலான ரசிகர்களின் நெகட்டிவ் கருத்தையே பெற்றது.

இந்தப் படம் வந்ததும், 2011ல் இன்னொரு X Men படம் வெளியிடப்பட்டது. உலகெங்கும் பிரமாதமான வரவேற்பைப் பெற்ற அந்தப் படம்தான் X Men: First Class.


x-men-first-class10

 

 

மேக்னீடோவுக்கும் சார்லஸ் ஸேவியருக்கும் இடையே உருவான விரோதம் எப்படி ஆரம்பித்தது? எப்போதுபார்த்தாலும் கிழவர்களாகவே நமக்கு அறிமுகமான இந்த இருவரின் வாலிபம் எப்படிப்பட்டது? இந்தக் கேள்விகளுக்கு விடையாக உருவான படம்தான் இது. இந்த ஸீரீஸின் வரிசையில் முதல் கதை.

நாட்ஸி ஜெர்மனியில் இருக்கும் சிறுவன் ஒருவன், இரும்பை எண்ணங்களாலேயே வளைக்கும் திறன் பெற்றிருப்பதை விஞ்ஞானி க்ளாஸ் ஷிமிட் கவனிக்கிறார். அவனிடம் ஒரு நாணயத்தை இதுபோலவே நகர்த்தச் சொல்ல, அந்தச் சிறுவனால் அது முடிவதில்லை. இதனால் கோபமடையும் க்ளாஸ், சிறுவனின் தாயைச் சுட்டுக் கொல்கிறார். இதனால் மிகுந்த கோபத்துக்குள்ளாகும் அந்தச் சிறுவன், தனது இரும்பை நகர்த்தும் சக்தியால் அந்த அறையையே நாசப்படுத்துகிறான். அவன் தான் மேக்னீடோ என்று பின்னால் அழைக்கப்படப்போகும் எரிக் லென்ஷெர். அதேசமயம் அமெரிக்காவில் இன்னொரு சிறுவன், தனது வீட்டுக்குள் வந்திருக்கும் ஒரு சிறுமியின் உண்மை வடிவத்தைக் கண்டுகொள்கிறான். உடலெங்கும் செதில்கள் நிரம்பிய அந்தச் சிறுமிதான் Raven/Mystique. அவளைத் தன்னுடனேயே தங்கச்சொல்லும் அந்தச் சிறுவன் – சார்லஸ் ஸேவியர்.

தன் தாயைக் கொன்ற ஜெர்மானிய ஜெனரல் தற்சமயம் செபாஸ்டியன் ஷா என்ற பெயரில் இருப்பதை அறியும் எரிக், அவனைக் கொல்லும் முயற்சியில் கடலில் மூழ்கும்போது ஸேவியரால் காக்கப்படுகிறான். இருவரும் ஒன்றிணைந்து நண்பர்கள் ஆகின்றனர். இருவரும் சேர்ந்து ஷாவுக்கு எதிராக தங்களைப் போலவே இருக்கும் ம்யூட்டண்ட்களை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

இறுதியில் ஷாவைக் கொல்லும் எரிக், அப்போது ஏற்படும் ஒரு சண்டையில் தவறுதலாக ஒரு தோட்டாவைத் தடுக்கும்போது அது நண்பன் ஸேவியரின் முதுகில் பாய்ந்து, அவனை நிறந்தரமாக இடுப்புக்குக்கீழ் செயலிழக்கவைத்துவிடுகிறது. அதுவரை ஸேவியருடனேயே வளர்ந்த ரேவனை அழைத்துக்கொண்டு அழிவின் பாதையில் முதல் பயணத்தை ‘மேக்னீடோ’ என்ற பெயரால் துவங்குகிறான் எரிக்.

நாம் மேலே பார்த்த ‘X Men: The last Stand (2006) படத்துக்கும், X Men: First Class (2011) படத்துக்கும் ஒருங்கே அமைந்த அடுத்த பகுதிதான் X Men: Days of Future Past.


2023. ‘செண்டினல்’ என்று அழைக்கப்படும் ரோபோக்கள், ம்யூட்டண்ட்களையும் அவர்களுக்கு உதவும் மனிதர்களையும் அழிக்கும் பணியில் ஈடுபடுகின்றன. இந்தத் தாக்குதலில் பல ம்யூட்டண்ட்கள் இறந்துவிடுகின்றனர். இதனால் பொதுவான எதிரியை அழிக்க சார்லஸ் ஸேவியரும் மேக்னீடோவும் ஒன்றுசேர்கின்றனர். தங்களுடன் இறுதிவரை இருக்கும் ஒருசில ம்யூட்டண்ட்களை அழைத்துக்கொண்டு சைனாவுக்குச் செல்கின்றனர். அங்கே இருக்கும் ஒரு ரகசிய இடத்தில் ஒன்றுகூடுகின்றனர். இந்த செண்டினல்களின் தாக்குதலை அழிக்க ஒரே வழிதான் இருக்கிறது என்று ஸேவியர் சொல்கிறார். யாரையாவது இறந்தகாலத்துக்கு அனுப்பி, 1973ல் இந்த செண்டினல்கள் உருவாவதற்குக் காரணமாக இருந்த விஞ்ஞானி ட்ராஸ்க் என்பவரின் கொலையைத் தடுத்து நிறுத்தினால், இதனால் அதன்பின் நடக்கும் சம்பவங்கள் மாற்றப்பட்டு தற்காலத்தில் செண்டினல்களே உருவாகாமல் இந்தத் தாக்குதலே நடக்காது என்பது அவரது திட்டம். 1973ல் விஞ்ஞானி ட்ராஸ்க்கைக் கொலைசெய்தது ரேவன்/மிஸ்டீக். அந்தச் சமயத்தில் பிடிபட்டதால் மிஸ்டீக்கின் DNAவை எடுத்துத்தான் இந்த செண்டினல் ரோபோக்களைப் படிப்படியாக உருவாக்கியிருக்கின்றனர்.

ஆனால் அப்படி இறந்தகாலத்துக்குச் செல்லவேண்டும் என்றால், ஒரு நிபந்தனை உள்ளது. ஒரு நபரின் ஞாபக உணர்வை மட்டும்தான் அப்படி அனுப்ப முடியும். அதைச் செய்வது கிட்டி ப்ரைட் என்ற ம்யூட்டண்ட் (இவள் X Men: The Last Stand படத்தில் முக்கியமான பாத்திரத்தில் வருவாள்). பொதுவாக அவள் சில நாட்கள், வாரங்கள் அல்லது மேக்ஸிமம் ஒரு மாதம் மட்டுமே இறந்தகாலத்துக்கு இப்படிப்பட்ட நினைவுகளை அனுப்புபவள். பல வருடங்கள் முன்னால் 1973க்கு யாரையாவது அனுப்பவேண்டும் என்றால் அவரது தற்போதைய உடல் பாதிப்புக்கு உள்ளாகும். இதனால், ஸேவியரால் செல்லமுடியாத சூழல். காயங்களை சுலபமாகத் தன்னிச்சையாக சரிசெய்துகொள்ளும் திறன்படைத்த வுல்வரீன் தேர்வுசெய்யப்படுகிறான். செண்டினல்கள் இவர்களைத் தீவிரமாகத் தேடிவரும் நிலையில் 1973க்கு அனுப்பப்படுகிறான் வுல்வரீன். விஞ்ஞானி ட்ராஸ்க்கை மிஸ்டீக் கொலைசெய்யும் சம்பவத்தைத் தடுக்கவேண்டும் என்ற லட்சியத்தோடு.

1973ல் (X Men: First Class படத்தில் நாம் பார்த்த) இளைய வயது ஸேவியரை சந்தித்து அவரிடம் இந்தத் திட்டத்தைச் சொல்கிறான். முதலில் நம்ப மறுக்கும் ஸேவியர், அவரைப் பற்றிய அத்தனை தகவல்களையும் வில்வரீன் சொல்வதைக் கேட்டு மனம் மாறுகிறார். அவரது பள்ளியில் படித்த ம்யூட்டண்ட்கள் பலரும் இறந்துவிட, அந்தச் சோகத்தில் குடித்தே காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார் ஸேவியர். First Class படத்தின் இறுதியில் குண்டு பட்டு ஊனமடையும் ஸேவியர், ஒரு விசேட மருந்தால் தனது சக்தியான பிறரின் மனதைக் கட்டுப்படுத்துவதை நிறுத்தி, அதன்மூலம் நடக்கிறார். அவர் நடக்கவேண்டும் என்றால் தனது சக்தியைத் தியாகம் செய்யவேண்டும்; சக்தியை உபயோகிக்கவேண்டும் என்றால் நடப்பதைத் தியாகம் செய்யவேண்டும் என்ற நிலை. ஸேவியருடன் Beast எனப்படும் ம்யூட்டண்ட்டும் இருக்கிறான். இவர்கள் கூட்டாகச் சேர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடியைக் கொன்ற குற்றத்துக்காக ஜெயிலில் இருக்கும் எரிக் லென்ஷரை (மேக்னீடோ) விடுதலை செய்கின்றனர். இதன்பின் விஞ்ஞானி ட்ராஸ்கை மிஸ்டீக் கொலைசெய்வதைத் தடுக்க இந்தக் குழு ஃப்ரான்ஸ் செல்கிறது.

இதன்பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.


இதுவரை வெளியாகியிருக்கும் அத்தனை எக்ஸ் மென் படங்களிலும் இதுதான் மிகவும் விறுவிறுப்பாகச் செல்லும் படம். படத்தின் ஆரம்பத்தில் தொற்றிக்கொள்ளும் சுவாரஸ்யம், படத்தின் இறுதியில் கடைசியாக வரும் Post Credit காட்சி ஒன்றைப் பார்த்தபின்னர்தான் நம்மை விட்டு அகல்கிறது. அந்த அளவு, ஆடியன்ஸை எளிதாக இந்தப் படம் உள்ளே இழுத்துவிடுகிறது. கூடவே, இத்தனை படங்களிலும் ஆங்காங்கே வரும் சில கதாபாத்திரங்கள் இதில் அவ்வப்போது வந்து செல்வதால் அதுவுமே சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. (உதாரணம்: 2003ல் வெளிவந்த X2 படத்தின் வில்லன் வில்லியம் ஸ்ட்ரைக்கர், இதில் மிகவும் இளவயதில் விஞ்ஞானி ட்ராஸ்க்குடனேயே வருபவனாக இருக்கிறான். அவனது கதாபாத்திரம் வருங்காலத்தில் வுல்வரீனைப் பிடித்து சித்ரவதை செய்து அவனது உடலில் பல பரிசோதனைகளைச் செய்யப்போகிறது. இந்தக் கதை X2 படத்தில் விரிவாக வரும்).

டைம் ட்ராவல் படங்களில் பல க்ளிஷே காட்சிகள் எப்போதும் இருக்கும். இதிலும் உண்டு என்றாலும், அந்தக் காட்சிகளை மிகுந்த சுவாரஸ்யத்துடன் அளித்திருப்பதே இதன் ப்ளஸ் பாயிண்ட். குறிப்பாக எல்லாக் காட்சிகளும் அழகாக இண்டர்கட் ஆகின்றன. மேக்னீடோவுக்கும் சார்லஸ் ஸேவியருக்கும் நடக்கும் உரையாடல்கள் அடுத்த சுவாரஸ்யம்.

படத்தின் இன்னொரு சிறப்பம்சம் – ஜான் எஃப் கென்னடியின் மரணம். இளவயது சார்லஸ் ஸேவியரும் வுல்வரீனும் மேக்னீடோவைத் தேடும்போது, ஜான் எஃப் கென்னடியைக் கொலைசெய்த குற்றத்துக்காக பெண்டகனின் அடியாழத்தில் ஒரு ரகசிய சிறையில் இருக்கிறார் மேக்னீடோ. லீ ஹார்வி ஆஸ்வால்ட் சுட்ட குண்டு அதன் பாதையை மாற்றிக்கொண்டு கென்னடியைத் தாக்கியிருக்கிறது. உலகிலேயே ஒரு குண்டின் பாதையை மாற்றக்கூடியவர் மேக்னீடோ மட்டுமே என்பதால் அவரைக் கைது செய்திருக்கிறார்கள். ஆனால் மேக்னீடோவோ, கென்னடியைக் காப்பாற்றவே அங்கு சென்றதாக ஸேவியரிடம் பின்னால் கூறுகிறார். கென்னடியைக் காப்பாற்றக் காரணம்? ‘கென்னடி நம்மில் ஒருவர்’ என்று பதில் கிடைக்கிறது.

இதனைப் பற்றிய சுவாரஸ்யமான ஒரு மினி டாக்குமெண்ட்ரி சென்ற வருடம் இணையத்தில் அப்லோட் செய்யப்பட்டது. அதனை இங்கே காணலாம்.

 

படத்தில் மிஸ்டீக்காக நடித்திருப்பது ஜெனிஃபர் லாரன்ஸ். The Hunger Games படங்களின் கதாநாயகி. அமெரிக்கன் ஹஸில் படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருக்கும் பெண். தற்காலத்திய ஹாலிவுட் ஹீரோயின்களில் எனக்கு மிகவும் பிடித்த நடிகை. அனாயாசமாக சிறப்பாக நடிப்பது இவரது ப்ளஸ் பாயிண்ட். ஏற்கெனவே மூன்றுமுறை ஆஸ்கருக்குப் பரிந்துரை செய்யப்பட்டு அதில் ஒருமுறை சிறந்த நடிகை விருதை வாங்கியவர் (Silver Linings Playbook). இத்தனைக்கும் அவருக்கு வயது 23 மட்டுமே. இதற்கு முந்தைய படங்களில் மிஸ்டீக்காக நடித்தது ரெபக்கா ரொமெய்ன் ஸ்டெமோஸ் (Rebecca Romijn Stamos). அவர் ஒரு பிரபல மாடல். ஆனால் தற்போது அட்டகாசமாக நடித்து இந்தப் படத்தில் எல்லாரையும் பின்னுக்குத் தள்ளியிருப்பதுதான் ஜெனிஃபர் லாரன்ஸின் சிறப்பு. முந்தைய படங்களைப் பார்த்தவர்கள் இந்த இரண்டு மிஸ்டீக்களின் கதாபாத்திரங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

மேக்னீடோவாக ‘காண்டால்ஃப்’ ஸர் இயன் மெக்கெல்லன். பிரமாதமான வில்லன். இளவயது மேக்னீடோவாக மைக்கேல் ஃபாஸ்பெண்டர். இந்த இருவரின் Screen Presenஸும் பிரம்மாண்டமானது. முந்தைய படங்களில் மேக்னீடோவாக பின்னியெடுத்திருப்பார் காண்டால்ஃப்..ஸாரி .. இயன் மெக்கெல்லன். ஆனால் கடைசி இரண்டு படங்களில் அவரைப் பின்னுக்குத் தள்ளி சிறப்பாக நடித்திருப்பது மைக்கேல் ஃபாஸ்பெண்டரின் திறமை.

சார்லஸ் ஸேவியராக நாம் ஏற்கெனவே பார்த்திருக்கும் Filth பட நாயகன் ஜேம்ஸ் மெக்கவாய் மற்றும் பேட்ரிக் ஸ்டீவர்ட். வுல்வரீனாக எல்லாருக்கும் தெரிந்த ஹ்யூ ஜாக்மென்.

இந்தப் படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம், இதுவரை வந்திருக்கும் X Men படங்களில் யாரெல்லாம் இறந்தார்களோ (ஜீன் க்ரே, ஸைக்ளோப்ஸ் etc..) அவர்கள் அனைவரையும் க்ளைமேக்ஸில் மறுபடி உயிரோடு கொண்டுவந்திருப்பதே. காலப்பயணம் இதில் இருக்கிறது என்பதால், இறந்தகாலம் மாற்றப்பட்டு இதுவரை நடந்த அத்தனை சம்பவங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. இதனால் இந்த X Men ஸீரீஸுக்கு இருக்கும் அட்வாண்டேஜ் – இனிமேல் கதையை எப்படி வேண்டுமானாலும் கொண்டுசெல்லலாம் என்பதே.

படத்தின் இன்னொரு பலம் – பின்னணி இசை. படத்தின் டைட்டில்கள் துவங்கும் நேரத்தில் இருந்தே X Men தீம் இசை நம்மை இந்த உலகுக்குள் சுலபமாகக் கொண்டுசென்றுவிடுகிறது. படம் முழுக்க இசை மிகவும் சுறுசுறுப்பாக (அதே சமயம் 70களைக் காட்டும்போது Roberta Flackகின் பாடல் – The First time ever I saw your face போன்ற பல நாஸ்டால்ஜியாக்களைக் கிளறுகிறது) இருக்கிறது. இசையமைத்திருக்கும் ஜான் ஆட்மென் John Ottman) பாராட்டுதலுக்குரியவர்.

படத்தில் சில லாஜிக் ஓட்டைகள் இல்லாமல் இல்லை. மேக்னீடோவை விடுதலை செய்யாமலேயே ட்ராஸ்க்கின் கொலையை வுல்வரீனும் சார்லஸ் சேவியரும் தடுத்திருக்க முடியும். அப்படிச் செய்திருந்தால் படம் இடைவேளையிலேயே முடிந்திருக்கும். போலவே, மிஸ்டீக்குக்கு ட்ராஸ்க்கின் மீது கொலைசெய்யும் அளவு கோபம் வரும் காரணம் படத்தில் சரியாக எஸ்டாப்ளிஷ் செய்யப்படவில்லை. எனவே க்ளைமேக்ஸில் லேசான உறுத்தல் இருந்தது.

இருந்தாலும் இவை மிகவும் சிறிய காரணங்களே. சமீபகாலத்தில் எந்தப் படத்தின் Sequeலையும் இந்த அளவு நான் ரசித்துப் பார்த்ததில்லை. அதுவும் இது ஏழாவது படம். அப்படியும் பரபரப்பையும் சுவாரஸ்யத்தையும் கச்சிதமாக அளித்ததன்மூலம் இந்த ஸீரீஸுக்குத் தனது மூன்றாவது வருகையை அட்டகாசமாக வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ப்ரையன் ஸிங்கர்.

படத்தில் கட்டக்கடைசியாக ஒரு Post Credit ஸீலும் உண்டு. அதில் பழங்கால எகிப்து காட்டப்படுகிறது. அங்கே ஆயிரக்கணக்கான மக்கள் விழுந்து கும்பிட்டுக்கொண்டிருக்க, ஒரு உருவம் தனது சக்திகளால் பிரம்மாண்டமான பிரமிட் ஒன்றைக் கட்டிக்கொண்டிருக்கிறது. அதன் பின்னணியில் நான்கு குதிரைவீரர்கள் நின்றுகொண்டிருப்பதைக் காணலாம்.

இதன் முக்கியத்துவம்?

இந்த X Men ஸீரீஸின் அடுத்த பாகத்தின் பெயர் – X Men: Apocalypse. 2016ல் வருகிறது. போஸ்ட் க்ரெடிட் ஸீனில் நாம் பார்த்த பண்டைய கால நபர்தான் Apocalypse. உலகின் முதல் ம்யூட்டண்ட். ஐந்தாயிரம் வயது உடையவன். இந்த அபோகலிப்ஸ், எக்ஸ் மென் காமிக்ஸ்களில் மிகவும் பிரபலம். இவன் தான் அடுத்த பாகத்தின் வில்லன். பண்டைய காலத்திலிருந்து இப்போது வரை சாகாமல் எங்கோ மறைந்திருப்பவன். இதுவரை மிகப் பலமான + பயங்கரமான வில்லனாக இருந்துவந்த மேக்னீடோவைவிடப் பாயங்கர சக்திவாய்ந்தவன். இவனை எப்படி X Men எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதே 2016ல் நாம் காணப்போகும் கதை.

பொறுத்துப் பார்ப்போம். படம் 2016ல் வந்தவுடன் இங்கே விமர்சனம் நிச்சயம் :-).

பி.கு

1. எழுபதுகளின் விஞ்ஞானியாக பீட்டர் டிங்க்லாஜ். Game of Thronesல் டிரியன் லான்னிஸ்டராக நடித்துக் கொண்டிருப்பவர்.

2. இதோ இந்த லிங்க்கைக் க்ளிக் செய்து இந்தப் படத்தில் வந்த கேமியோக்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

Facebook Comments

Sharing is caring!

fb Comments

comments

  Comments

38 Comments

 1. மிகவும் ரசித்து பார்த்த திரைப்படம். அடுத்து, dawn of the planet of the apes எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

  Reply
 2. Sivaprakash

  I have been reading your blog for sometime now, its excellent.
  As a fan of X-men franchise I feared they would go on making films on origins of different x-men..thankfully they found a new track..2016 is a long wait..

  Reply
  • Rajesh Da Scorp

   Thank you Siva. Cheers for the comment 🙂

   Reply
 3. Spoiler//மிஸ்டீக்குக்கு ட்ராஸ்க்கின் மீது கொலைசெய்யும் அளவு கோபம் வரும் காரணம் படத்தில் சரியாக எஸ்டாப்ளிஷ் செய்யப்படவில்லை.// I believe its there when Mystique goes to Trask office and see the research files and conversation between Magneto and Mystique in middle. On a whole Best movie in the X-Men Series. Fantastic Work by Bryan Singer and Simon Kinberg (Screen Play)..! There is no single scene boring or not required to simply move the story in this movie..! Amazing way to reset the series and start afresh..! Hope you can write a post on this in Screenplay series..! 🙂
  Gr8 Work Rajesh..! Keep it up..!

  Reply
  • Rajesh Da Scorp

   Yes. But it’s exactly those scenes I meant when I said the reason is not properly justified. Somehow I couldn’t accept them, and felt it’s still light. Anyway, opinion differs, isn’t it? 🙂 .. Thanks for the comment Jai. Cheers.

   Reply
 4. Abarajithan

  பாஸ், நான் 200, United, Last Stand மூணும்தான் பார்த்திருக்கேன். எனக்கு கொஞ்சமும் பிடிக்கல. (நான் காமிக்ஸ் படிப்பதில்லை) Biological Mutation மூலமா இப்படி சக்தி வருமா-ங்கறதை தாண்டி பல விஷயங்கள்.

  முதலாவது Magneto vs Xavier என்னை பெருசா ஈர்க்கல. ஏதோ ரெண்டு பண்ணையாருங்க அடிப்பொடிகளை வைச்சு சண்டை போட்டுக்கற மாதிரி இருந்துச்சு.. அடுத்தது ஏதோ இஷ்டத்துக்கு கதையை வளைச்சு வளைச்சு போங்காட்டம் ஆடுறாங்க-ங்கற மாதிரி ஒரு பீல் படம் முழுக்க இருந்திச்சு. அதாவது ஒரு Fantasy படமா, படத்தோட ரூல்-களை சரியா அறிமுகம் செய்யல. கதை நடுவுல புதுசா ரூல்களை கொண்டுவர்றாங்க. (Adamantium, Magneto சக்தி கிடைக்கறது, Xavior உயிர்க்கறது.. அடப் போங்கப்பா…) அடுத்தது, அந்த ‘ஜீன் க்ரே’ கதாபாத்திரமும் அதைச் சுற்றிய க்ளிஷேக்களும், க்ளைமேக்ஸ் அபத்தங்களும் எனக்கு பிடிக்கல… Transformers சீரிஸின் தரத்திலேயே இந்த சீரிசையும் மனசுல வச்சிருக்கேன்.

  இந்த படம் எப்படியோ தெரியல… பார்க்கலாம்…

  Reply
  • Rajesh Da Scorp

   அபராஜிதன்.. மெய்ன் மேட்டர் காமிக்ஸ் இல்ல. சொல்லப்படும் விஷயங்களை நம்மால நம்ப முடியுதா இல்லையா என்பதுதான். அந்த வகையில் யாருக்குமே எதிர்கருத்துகள் அவசியம் இருக்கலாம் 🙂 .. உங்க பாயிண்ட்ஸ் புரியுது. ஆனா Transformers கூட இதை கம்பேர் பண்ணதுதான் லேசா வலிக்குது -)..அது ஒரு சூர மொக்க சீரீஸ். X Men First Class மட்டும் ஒரு வாட்டி பார்க்க முயற்சி பண்ணுங்க. அதுக்கப்புறம் இதைப் பாருங்க (முடிஞ்சா). ஒருவேளை உங்க கருத்து மாறலாம்.

   Reply
   • சினிமா பார்க்கிற நாம் மனிதர்கள். சினிமாவில் நம் எதிர்பார்ப்பும் மனித “உணர்வுகளாகவே” இருக்கும் (பெரும்பாலும்). அது இல்லாத பொழுது, அந்த படம் தோல்வி அடைகிறது. உதாரணதிற்கு “Soldier” படம். 76 வார்த்தைகள் மட்டும்தான் அந்த பட நாயகன் பேசுகிறார், Transformers படம் “Machines” சை சுற்றி எடுக்கப்படுகிறது. மனித முகத்தில் வரும் அத்தனை உணர்ச்சிகளையும் ஒரு மெஷினின் முகத்தில் காண்பிப்பது என்பது சற்று கடினமான காரியம். அதனால், அந்தப் படம் என் மனதுடன் ஒட்டவில்லை. Terminator, Pacific Rim போன்ற படங்கள் உணர்வுகளை அதிகமாக பேசியதால், அவை எனக்கு பிடித்திருந்தது.

    Reply
 5. Krishna

  Awesome movie..I thoroughly enjoyed it after avengers movie…nice review.

  Reply
  • Rajesh Da Scorp

   Cheers Krishna 🙂

   Reply
 6. வணக்கம் கருந்தேள்,

  உங்களை போலவே இந்த X-Men Series-ல் மிகவும் பிடித்தபடம் இதுவே.
  உங்கள் விமர்சனங்களின் மூலம்தான் எனது ஹாலிவுட் படங்களின் ரசிக்கும் முறையே மாற்றமடைந்தது.

  இந்த X-Men: Days of Future Past படத்தில் நான் மிகவும் ரசித்த காட்சி Peter Maximoff-வின் உதவியுடன் Magneto-வை அவர்கள் தப்புவிக்கும் காட்சி. இந்த காட்சியின் போது திரையரங்கில் உள்ள அனைவரும் சுமார் 5-6 நிமிடம் சிலையாகிவிட்டனர். மிக அற்புதமான காட்சி இது. இதில் Peter Maximoff (Quicksilver)-ன் சேட்டைகளை நினைத்து நினைத்து சிரித்தேன்.

  போஸ்ட் கிரெடிட் சீனை நான்பார்க்கவில்லை. உங்கள் மூலம் அடுத்த X-Men Series-யை பற்றி தெரிந்து கொண்டேன். இனி எப்போதும் போஸ்ட் கிரெடிட் சீனை தவறவிட மாட்டேன்.

  அடுத்த படமான X-Men: Apocalypse (2016)-காக காத்துகொண்டிருப்பேன்.

  -ச. இரா.சி

  Reply
  • Rajesh Da Scorp

   வணக்கம் பாஸ். விரிவான கமெண்ட்டுக்கு நன்றி. Quicksilver பற்றி உங்கள் கருத்துகள்தான் என் கருத்தும். எனக்கும் படத்திலேயே மிகவும் பிடித்த காட்சி அதுதான். Cheers 🙂

   Reply
 7. To me – This movie is Good but not Great. The amazing aspect of this movie is the revival of characters(& Franchise itself) making a kind of reboot but with same popular characters enabling series of amazing upcoming sequles. X Men – First Class still is my Favorite yet.

  Reply
  • Rajesh Da Scorp

   //he amazing aspect of this movie is the revival of characters(& Franchise itself) making a kind of reboot but with same popular characters enabling series of amazing upcoming sequles// – couldn’t agree more. But personally I think they have crossed miles in this film, than they did in the First class. Linking two timelines is not a very easy factor. Also the way they have written the emotional conflicts between the characters surpasses first class in my opinion. Cheers.

   Reply
 8. Noushadh

  I hope you have missed a film in this series Wolverine 2.

  Reply
  • Rajesh Da Scorp

   Hi Noushad,

   Yes. I missed it. I was infact planning to write a small paragraph about it after X men first class, but somehow I totally missed it 🙂

   Reply
   • Noushadh

    You can write the small paragraph now also. We are all eagerly waiting for that.

    And you must continue the article ‘வேற்றுகிரகவாசிகளும் பூமியும்’ as it was taken so much gap.

    Reply
    • Rajesh Da Scorp

     Point taken Nousahdh.. Will try to continue the alien series soon. Let me find some time for it 🙂

     Reply
 9. Accust Here

  எனக்கும் ரொம்ப புடிச்சு இருந்தது படம். ஒரு சந்தேகம், Captain America பதிவுல Magnetoவோட பையன்தான் Quick Silverன்னு சொன்னிங்க இதுல அதபத்தி ஒன்னும் சொல்லல, ரெண்டு பேரும் சேர்ந்து போகும்போதும் அப்பா புள்ள மாதிரி காட்டிகல. ஏன்னு தெரியுமா பாஸ்

  Reply
  • Rajesh Da Scorp

   Yes boss. Quicksilver is Magneto’s son according to the marvel universe. But I think they will let the audience know this factor in the gorthcoming films. May be this can be hinted in Avengers 2: Age of Ultron.

   Reply
   • Accust Here

    ரெண்டாவது தடவ பார்க்கும் பொது புரிஞ்சிது Quick Silver, Magnetoவ காப்பாத்தி liftகுள்ள வந்த பிறகு “They said you can control metal, My mom knew someone like that” அப்படின்னு சொல்லுவான் அநேகமா அடுத்த பார்ட்ல அதபத்தி வரலாம். அடுத்த பார்ட்ல இளவயது Cyclops, Jean, Storm எல்லாம் வர்றாங்களாம். Lets wait and see.

    Reply
    • Rajesh Da Scorp

     Yes Boss. U have explained it correctly. Let’s wait and see about the other part

     Reply
 10. Saravanan

  As usual , your writeup is more interesting than the Movies itself. was out of station , will try to see it this weekend and will share my thoughts too
  great Job SCORPIO ….ithu kooda etho oru mutant per mathiri irukku( oru velai intha mutant oda power interestinga ezhthuvathu thaano )

  Reply
 11. Accust Here

  இந்த Apocalypseக்கு இருக்கும் விசேச சக்தி என்ன பாஸ்

  Reply
 12. Karthi

  I am still thinking the first class is the best movie. The doesnt explains many things. eg: How wolverine is coming back to the future without that girl and climax action scene is not as expected.

  Reply
  • Rajesh Da Scorp

   I think those are covered in the film. In the ‘Wolverine’ film, in the climax he will return to U.S without that girl. And there, in the post credits scene, Magneto and Xavier meet him and they brief him about Trask industries.

   Reply
 13. Super Review ……..unka Vimarsanatha pakurathoda sari Replay panurathu ila. ithu than my 1st replay . waitting for ur next review

  Reply
  • Rajesh Da Scorp

   Thanks for the first ever comment in my blog boss 🙂

   Reply
 14. I think magneto can control any metal thing,not only the iron.even he can control the adamentium also,see x men last stand

  Reply
 15. ‘எக்ஸ்மேன்’ சீரிஸை நான் மேலோட்டமாகவே பார்த்திருக்கிறேன். X-Men Origins: Wolverine (2009), The Wolverine (2013), X-Men: Days of Future Past (2014) இவை மட்டும்தான் நான் முழுமையாக பார்த்தவை. அதுவும் கூட ஹேண்ட்ஸம் ஹீரோ
  ‘ஹ்யூ ஜாக்மென்’- க்காக….!

  உங்கள் இந்தப் பதிவை வாசித்த பிறகு எக்ஸ் மேன் சீரிஸின் மற்ற படங்களையும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்திருக்கிறது. கூடிய விரைவில் டவுன்லோட் செய்து பார்த்து விடுகிறேன். நீங்கள் சொன்னது போலவே இந்தப் படம் ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பாக இருந்தது.

  நான் பார்த்த தியேட்டரில் Peter Maximoff சேட்டைகளுக்குதான் அப்ளாஸ் அள்ளியது. சிச்சுவேஷன் ஸ்லோமோஷனுக்கு மாறிய பிறகு ஓடிப்போய் குண்டுகளின் திசையை மாற்றுவது, தெறிக்கும் சாம்பாரை தொட்டு நக்குவது, குல்லாவை தட்டி விடுவது, போலிஸ்காரனின் கையை மாற்றி அவன் கையாலே குத்திக் கொள்ள வைப்பது…மேலும் Magnetoவின் தலையைப் பிடித்துக்கொண்டு “போகிற வேகத்தில் கழண்டு விழுந்திடக் கூடாதுல்ல?” என்று குறும்பு வசனம் பேசுவது…..அட்டகாசம் !

  Reply
 16. watched in gopalan mall bannargutta road…nice movie and review….continue the same best in future too……congrads

  Reply
  • Rajesh Da Scorp

   Thank you Gopu :-). Cheers.

   Reply
 17. Sureshkumar

  Excellent review and very nice movie…

  Reply
  • Rajesh Da Scorp

   சியர்ஸ் பாஸ் 🙂

   Reply
 18. pratt

  Watched this movie yesterday.I have some doubts.

  1)If mystique is so close to professor why their bond was not explained in X men(2000) ,X2 and last stand.

  2)X(fut+pas) climax concludes that time line is changed and Logan meets jean, scott and other characters whom all were dead in last stand.But in X (fut+pas) Logan goes to past to avoid the creation of sentinel. If the purpose was to change the time line to prevent sentinel creation then the phoenix and all other things which comes in X men series should have happened. I don’t understand the why this changes everything that happened in X series.

  Reply
 19. Dany

  “X men apocalypse விமர்சனம் ”
  Just ஞாபகப்படுத்துறேன்….
  எனக்கு ஒரு நீண்ட விடுமுறை.. அதனால் எதாவது ஒரு சீரியல் படம் பார்க்க நினைத்து x men படம் என்று முடிவானவுடன் உங்கள் இந்த review வை படித்து படம் எல்லாவற்றையும் பார்த்தாயிற்று… நன்றி…

  Reply

Join the conversation