Fade In முதல் Fade Out வரை – 21 | Syd Field Vs Blake Snyder – 2

by Rajesh October 9, 2014   Fade in to Fade out

ப்ளேக் ஸ்னைடரையும் ஸிட் ஃபீல்டையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மேலும் தொடருவோம்.

Act 2 = Fun & Games+B Story+ Midpoint+ Bad Guys close in

ஸிட் பீல்டின் Act 2 என்பதில் உட்பிரிவுகள் எதுவுமே அவர் கொடுக்கவில்லை. இந்த இரண்டாவது பகுதி என்பதில் தோராயமாக அறுபது பக்கங்கள் இருக்கும்; அவற்றை முப்பது முப்பது பக்கங்களாகப் பிரித்துக்கொண்டால் இடையில் இருப்பதே இண்டர்வெல் ப்ளாக் அல்லது மிட்பாயிண்ட் என்பதுதான் ஸிட் ஃபீல்டின் கருத்து. இந்த இரண்டாம் பகுதியில், தனது லட்சியத்தை நோக்கிச் செல்லும் பிரதான கதாபாத்திரத்துக்குப் பல சிக்கல்கள் வரும். அவற்றையெல்லாம் எப்படி அந்தக் கதாபாத்திரம் எதிர்கொள்கிறது என்பதுதான் முழுதாக விவரிக்கப்படும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் இவற்றை எப்படி எழுதவேண்டும் என்பதையெல்லாம் அவர் விளக்கவில்லை. அவற்றைப் படிக்கும் வாசகர்களுக்கே விட்டுவிட்டார். இருந்தாலும், இரண்டுக்கும் நடுவேயுள்ள இண்டர்வெல் ப்ளாக்கை மனதில் வைத்துக்கொண்டு இந்தப் பகுதியை எழுதவேண்டும் (முதல் முப்பது பக்கங்கள் இந்த இண்டர்வெல் ப்ளாக்கை நோக்கிச் செல்லவேண்டும்; அதன்பின் வரும் அடுத்த முப்பது பக்கங்கள் அதிலிருந்து ஆரம்பித்து இரண்டாம் ப்ளாட் பாயிண்டை நோக்கிச் செல்லவேண்டும்) என்று சொல்லியிருக்கிறார். மேலும், இரண்டு ப்லாட் பாயிண்ட்களைப் போலவே, இந்த இரண்டாம் பகுதியின் முதல் பதினைந்து பக்கங்கள் கழிந்தபின் pinch 1 என்று ஒரு முக்கிய சம்பவம் வரும்; அங்கிருந்து மிட் பாயிண்ட்டுக்கு மேலும் பதினைந்து பக்கங்கள்; இதன்பின் மிட் பாயிண்ட் முடிந்த அடுத்த பதினைந்து பக்கங்களில் pinch 2 என்று ஒரு முக்கியச் சம்பவம் வரும்; அது முடிந்தபின் அடுத்த பதினைந்து பக்கங்களில் இரண்டாம் ப்லாட் பாயிண்ட் என்றும் சொல்லியிருக்கிறார்.

இப்போது ப்ளேக் ஸ்னைடருக்கு வந்தால், இந்த இரண்டாம் பகுதி என்பதை மேலும் பல உட்பிரிவுகளாக அவர் பிரித்துக்கொண்டிருக்கிறார். அதில்தான் Fun & Games, B Story, Midpoint, Bad Guys close in போன்றவையெல்லாம் வருகின்றன. அவற்றுக்குத் தெளிவான பக்க எண்களும் உண்டு.

பொதுவாக ஒரு திரைக்கதையின் ஆரம்பப் பகுதியில் சுவாரஸ்யமாகக் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தியபின்னர் அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதில்தான் ஆடியன்ஸின் கவனம் இருக்கும். இப்படிப்பட்ட நேரங்களில் பல படங்களில் இவர்கள் ஏதேனும் விளையாட்டாகச் செய்வது, ஒருவருக்கொருவர் ஜாலியாக ஒரு உறவை உருவாக்குவது என்றெல்லாம்தான் எழுதப்பட்டிருக்கும். செய்யப்போகும் லட்சியத்தை இப்படியாக விளையாட்டாகத் துவக்குவதுதான் இது. இவை விறுவிறுப்பாகவும் இருக்கலாம் அல்லது நகைச்சுவையாகவும் இருக்கலாம். சில சமயங்களில் உணர்ச்சிபூர்வமாகவும் இவை இருக்கக்கூடும். சூது கவ்வும் – கடத்தல் மாண்டேஜ், டெர்மினேட்டர் 2: ஜட்ஜ்மெண்ட் டே – ரோபோவும் சிறுவனும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுதல் , சதுரங்க வேட்டை – காந்திபாபு போலீஸால் டார்ச்சர் செய்யப்படுவது – அப்போது நீதிமன்றத்தில் பலரும் அவனுக்கு எதிராகச் சாட்சி சொல்லும்போது வரும் வேடிக்கையான ஃப்ளாஷ்பேக் காட்சிகள், அரிமா நம்பி – கதாநாயகியின் தந்தையின் வீட்டுக்குள் சென்று உண்மையைத் தெரிந்துகொள்ளும் நாயகன், மெட்ராஸ் படத்தில் எதிராளியைக் காளி அறைந்ததற்குப் பின்னர் மெதுவாக வேகத்தை ஏற்றும் காட்சிகள் போன்றவையெல்லாம் உதாரணங்கள்.

இதன்பின் தான் இண்டர்வெல் ப்ளாக் வருகிறது. திரைக்கதையை சரிபாதியாகப் பிரிக்கும் இடம். இதுவும் ஒருவகையில் ப்லாட் பாயிண்ட் போன்றதுதான். ஏதேனும் சுவாரஸ்யமான காட்சியின் மூலம் ஆடியன்ஸின் மனதில் பதைபதைப்பு உருவாக்கி, வெளியே சென்றவர்களை மீண்டும் இரண்டாம் பாதியைப் பார்க்க உள்ளே வரவைக்கும் உத்தி. இதற்கு உதாரணமே தேவையில்லை. உங்களுக்குப் பிடித்த இண்டர்வெல் ப்ளாக் காட்சிகளை யோசித்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த மிட்பாயிண்ட் என்ற இண்டர்வெல் ப்ளாக் பற்றி இன்னொரு விஷயம் என்னவென்றால், இந்த இடத்திலிருந்துஇனிமேல் வரப்போகும் க்ளைமேக்ஸ் வரை கதையின் வேகம் அதிகரித்துக்கொண்டுதான் போகவேண்டுமே தவிர, கதை தொய்ந்துவிடக்கூடாது. உதாரணமாக, மெட்ராஸ் படத்தை எடுத்துக்கொண்டால், இந்த இண்டர்வெல் ப்ளாக் எத்தனை வேகமாக இருந்தது? அன்பையும் காளியையும் துரத்தும் கண்ணனின் ஆட்கள் – அவர்கள் பதுங்குவது – எதிர்பாராத தருணம் ஒன்றில் காளி, கண்ணனின் மகனை வெட்டிவிடுவது என்று மிகவும் வேகமாகத்தானே இருந்தது? ஆனால் அதுவே இடைவேளைக்குப் பிறகு காளிக்கும் கலையரசிக்கும் வரும் காதல் காட்சிகள் அதன்பின்னர் ஒரு இருபது நிமிடங்களுக்கு மிக மெதுவாகச் சென்றதையும் மறக்கமுடியாது. அவை அவசியம் படத்தின் வேகத்தைப் பின்னால் பிடித்தே இழுத்தன. அப்படி இல்லாமல், இடைவேளையில் இருந்து நமது கதை படிப்படியாக வேகமெடுத்துச் செல்லவேண்டும். எங்குமே தொய்வு இருக்கக்கூடாது.

இண்டர்வெல் முடிந்ததும் என்ன ஆகவேண்டும்? கதையில் இருக்கும் வில்லன்கள்/கெட்ட நபர்கள்/மோசமான சூழல்கள்/துரதிருஷ்டம் ஆகியவை பிரதான பாத்திரத்தைத் துரத்தவேண்டும் என்பது ப்ளேக் ஸ்னைடரின் கருத்து. மறுபடியும் சூது கவ்வும் படத்துக்கு வந்தால், இதுதான் பிரம்மா தாஸையும் அவனுடன் இருப்பவர்களையும் இரக்கம் இல்லாமல் துரத்தும் கட்டம். அரிமா நம்பியை எடுத்துக்கொண்டால், இதுதான் அமைச்சரின் ஆட்கள் கதாநாயகனைத் துரத்தும் கட்டம். இவை action படங்கள். பிற வகையான படங்களை எடுத்துக்கொண்டால், ஜிகர்தண்டாவில் இங்குதான் சேது சினிமாவில் நடிக்க ஆரம்பிக்கிறான். அவனுக்கு எக்கச்சக்கப் பிரச்னைகள் வருகின்றன. அவன் கார்த்திக்கால் ஏமாற்றப்படுகிறான் (அல்லது சேதுவின் பிடியில் மாட்டிக்கொள்ளும் கார்த்திக் எப்படிக் குயுக்தியாக யோசித்து அவனை வெல்லத் திட்டமிடுகிறான் என்றும் வைத்துக்கொள்ளலாம்). சதுரங்க வேட்டையில் இங்குதான் வில்லன் வளவன் காந்திபாபுவின் அமைதியான வாழ்க்கையைக் கெடுத்து, இறுதியாக ஒரு பெரிய ஏமாற்றுவேலையை செய்ய வைக்கிறான். காந்திபாபுவுக்கு வளவனால் பிரச்னைகள் அதிகரிக்கின்றன. மைக்கேல் மதன காம ராஜனில் இங்குதான் வில்லன்கள் மதனாக நடிக்கும் ராஜுவைத் துரத்துகின்றனர்.

இப்படி எந்தப் படமாக இருந்தாலும், எடுத்துக்கொண்ட லட்சியத்துக்கு எதிராக வில்லன்களோ கெட்ட நேரமோ அல்லது அப்படிப்பட்ட எதுவோ ஒன்று பிரதான பாத்திரத்தைக் கண்டபடி துரத்தும் கட்டம் இது. ஒரு நிலையில் தீய சக்திகள் வென்றுவிடுமோ என்று கூட ஆடியன்ஸ் நினைக்கலாம். அப்படிப்பட்ட சோதனைகள் தலைவிரிகோலமாக ஆடும் காலகட்டம் இது.

Plot Point 2 = Dark Night of the Soul+ All is Lost+ Break in to Three

இந்த இடத்தில் வருவதுதான் ஸிட் ஃபீல்டின் இரண்டாம் ப்லாட் பாயிண்ட். கதையைக் க்ளைமேக்ஸூக்குத் திருப்பிவிடும் காட்சி. இந்த இடத்தில் பிரதான பாத்திரம் தோற்றே விட்டது என்பதற்கான முகாந்திரங்கள்தான் அதிகமாக இருக்கும். வில்லன்கள் கொக்கரிப்பார்கள். வெற்றி தீய சக்திகளுக்குக் கிடைத்துவிட்டது என்றே தோன்றும். சதுரங்க வேட்டையில் காந்திபாபு வளவனுக்கு எதிராக ரகசியமாகப் போடும் திட்டங்களை வளவன் யூகித்து அவற்றை மடக்குகிறான் இல்லையா? அப்படிப்பட்ட கட்டங்கள். டார்க் நைட் ரைஸஸ் படத்தில் சுரங்கச் சிறையில் மாட்டிக்கொண்டுவிட்ட ப்ரூஸ் வேய்ன் வெளியேற முடியாமல் தவிக்கும் காட்சிகள் இதைத்தான் சொல்கின்றன. முதல்வன் படத்தில் நாடெங்கும் நடக்கும் கலவரங்கள் பிரதான பாத்திரம் தோற்றுக்கொண்டிருக்கிறது என்பதைத்தான் சொல்கின்றன.

இத்தகைய இடத்தில்தான் பிரதான பாத்திரம் அதுவரை வைத்திருந்த நம்பிக்கையை இழக்கிறது. தோல்வியை ஒப்புக்கொள்ளும் நிலைக்குச் சென்றுவிடுகிறது. தனது மனதில் இருந்த லட்சியத்தை முற்றிலுமாக மறக்க நினைத்து, தீய சக்திகளுக்கு அடிபணிய முடிவுசெய்துவிடுகிறது. திரும்பத்திரும்ப முயன்றாலும் ப்ரூஸ் வேய்னால் வெளியேற முடிவதில்லை. கோதமில் பேனின் அட்டகாசம் உச்சத்தை எட்டுகிறது.

அப்போது நடக்கும் காட்சிதான் இரண்டாம் ப்லாட் பாயிண்ட். அந்தக் காட்சி, பிரதான பாத்திரத்துக்கு இழந்த நம்பிக்கையை மீண்டும் அளிக்கிறது. இறுதி முறையாக ப்ரூஸ் வேய்ன் முயன்று, வெளியே வந்துவிடுகிறார். கோர்ட்டில் தாஸும் அவரது சகாக்களும் சரணடைய முடிவுசெய்து பிரம்மாவின் முகத்தில் கரியைப் பூசுகின்றனர். முதல்வர் புகழேந்தியின் வீட்டில் குண்டு வெடித்து, அவரது பெற்றோர்கள் இறக்கின்றனர். முன்னாள் முதல்வரிடம் தோற்றுக்கொண்டிருந்தாலும், குழப்பத்தில் இருக்கும் புகழேந்தி, இந்தச் சம்பவத்தால்தான் அவரைக் கொல்ல முடிவு செய்கிறார். அவருக்குத் தெளிவு பிறக்கிறது.

இங்கேதான் க்ளைமேக்ஸ் காட்சிகள் துவங்குகின்றன. க்ளைமேக்ஸில் என்ன நடக்கிறது என்பது திரைக்கதையில் விபரமாக எழுதப்படுகிறது.

இப்படியாக, ஸிட் ஃபீல்டும் ப்ளேக் ஸ்னைடரும் ஒரே விஷயத்தைத்தான் சொல்கிறார்கள். ஆனால் ஸிட் ஃபீல்ட் உருவாக்கிய திரைக்கதை முறையை எடுத்துக்கொண்டு அதனை இன்னும் பல உட்பிரிவுகளோடு விளக்கி எழுதி அதனைக் கொஞ்சம் எளிமைப்படுத்தியிருக்கிறார் ஸ்னைடர் என்றே சொல்லவேண்டும். இருந்தாலும், சென்ற கட்டுரையில் பார்த்ததுபோல், இத்தனை விபரமான உட்பிரிவுகள் இருந்தால் திரைக்கதை எழுதுவது என்பது அந்த உட்பிரிவுகளைச் சார்ந்து ஒருவித இயந்திரத்தனமாக மாறும் ஆபத்தும் ஸ்னைடரிடம் உள்ளது. ஸிட் ஃபீல்டில் அந்தப் பிரச்னை இல்லை. ஒருவித சுதந்திரம் கிடைக்கிறது.

இதுவரை நாம் ஸிட் ஃபீல்டையும் ப்ளேக் ஸ்னைடரையும் பற்றி விரிவாகப் பார்த்துவிட்டதால், இந்த இருவரின் திரைக்கதை முறைமைகளைப் படித்திருக்கும் நண்பர்களுக்கு, ஒட்டுமொத்தத் திரைக்கதை அமைப்பையும் பற்றிய புரிதல் இன்னும் விரிவடைந்திருக்கும். அது, நல்ல திரைக்கதை ஒன்றை எழுதும் பயணத்தில் ஓரிரண்டு படிகள் அவர்களை இலக்கை நோக்கி நகர்த்திச் சென்றிருக்கும் என்பதுதான் முக்கியம்.

இத்துடன் ப்ளேக் ஸ்னைடரைப் பற்றிய கட்டுரைகள் நமது தொடரில் முடிகின்றன. இனிமேல் வேறு ஒரு திரைக்கதை எழுத்தாளரை எடுத்துக்கொண்டு அவரது முறைகளை விபரமாகப் பார்க்கலாம்.

ப்ளேக் ஸ்னைடரைப் பற்றி இதுவரை வந்த கட்டுரைகளைப் படிக்க – Fade In முதல் Fade Out வரை 

தொடர்வோம்…

fb Comments

comments

  Comments

1 Comment;

  1. ironman

    when will this come as a book?

    Reply

Join the conversation