Fade In முதல் Fade Out வரை – 22 : Robert Mckee & 'Story' – Introduction

by Rajesh October 30, 2014   Fade in to Fade out

Sharing is caring!

Fade In முதல் Fade Out வரை – புத்தகம் இரண்டு – Robert Mckee

இத்தனை நாட்கள் ஸிட் ஃபீல்டையும் ப்ளேக் ஸ்னைடரையும் பார்த்துவந்தோம். இன்றிலிருந்து ஒரு முற்றிலும் மாறுபட்ட உலகுக்குள் போகப்போகிறோம். இன்றைய தேதிவரை அமெரிக்காவில் மிகப் பிரபலமான திரைக்கதை ஆசான்கள் பலர் இருந்தாலும், அவர்களில் மிகச்சிறந்தவர்கள் என்று பட்டியலிட்டால் அந்தப் பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருப்பவர்கள்: ஸிட் ஃபீல்டும் ராபர்ட் மெக்கீயும்தான். இவர்களில் கடந்த சில வருடங்களாக மெக்கீயே பிரபலம். இருவருமே உலகம் முழுக்கச் சுற்றிப் பல்வேறு திரைக்கதை வகுப்புகளை எடுத்திருந்தாலும், இந்த வருடத்தின் துவக்கத்தில் ஸிட் ஃபீல்ட் இறந்துவிட்டார். கடந்த சில வருடங்களாக ஸிட் ஃபீல்ட் மிகத் தீவிரமான திரைக்கதை வகுப்புகளிலிருந்து விலகிக்கொண்டு, அவ்வப்போது மட்டுமே இதைச் செய்துவந்தார். ஆனால் மெக்கீயோ இன்றுவரை சுற்றிச்சுழன்றுகொண்டு உலகெங்கும் பயணிக்கிறார். பலரையும் தயார்படுத்துகிறார்.

இந்தத் தொடரின் ஆரம்ப அத்தியாயங்களில் நாம் பார்த்ததுபோல், ஸிட் ஃபீல்டுக்கும் ராபர்ட் மெக்கீக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. ஸிட் ஃபீல்ட் மிகவும் மென்மையானவர். திரைக்கதை வகுப்புகளில் அவ்வப்போது கேட்கப்படும் சந்தேகங்களை உடனடியாக நிவர்த்தி செய்பவர். ஆனால் மெக்கீயோ மிகவும் கண்டிப்பானவர் என்று பெயரெடுத்தவர். அவரது வகுப்புகளில் எப்போதுவேண்டுமானாலும் கேள்விகள் கேட்க இயலாது. அவர் சொல்லும் நேரங்களில் மட்டுமே கேட்க இயலும். அதிலும் பெரிய கேள்விகளுக்குப் பதிலளிக்க மாட்டார். பல நேரங்களில் F**K என்ற வார்த்தையை அவர் அதிகம் பயன்படுத்துவதைக் காணமுடியும்.

நாம் ஏற்கெனவே பார்த்திருக்கும் ஒரு சிறிய வீடியோவை இப்போது பார்க்கலாம். Adaptation திரைப்படத்தில் ராபர்ட் மெக்கீயாக நடித்திருக்கும் ப்ரையன் காக்ஸ், மெக்கீயைப் போலவே மிகச்சிறப்பாக நடித்திருப்பார். இதுதான் மெக்கீ.

என்னளவில், திரைக்கதை பற்றிப் படிப்பவர்கள் யாராக இருந்தாலும் ஸிட் ஃபீல்டையும் ராபர்ட் மெக்கீயையும் தலைகீழாகப் படித்திருக்கவேண்டும் என்றே சொல்வேன். இரண்டும் இருவேறான பாதைகள். ஆனால் இரண்டிலுமே சொல்லப்படாத விஷயங்கள் எதுவுமே இல்லை. இந்த இருவரை மட்டும் படித்திருந்தாலே அவசியம் நல்ல திரைக்கதை எழுத முடியும். இந்த இருவரையும் படித்துவிட்டுப் பிறரைப் படித்தால் இன்னும் நல்லது. நான் ஸிட் ஃபீல்டை முடித்ததும் ராபர்ட் மெக்கீயைக் கையில் எடுக்காமல் ப்ளேக் ஸ்னைடரை எடுத்ததன் காரணம் என்னவென்றால், ஸிட் ஃபீல்டுக்கும் ராபர்ட் மெக்கீக்கும் இடையே ஸ்னைடரைப் போன்ற எளிமையான ஒரு திரைக்கதை அமைப்பு இருக்கவேண்டும் என்று நினைத்ததுதான். இது ஏனெனில், ராபர்ட் மெக்கீயின் திரைக்கதை அமைப்பு படிக்கக் கடினமானது. அது புரியவேண்டும் என்றால் ஸிட் ஃபீல்டுக்குப் பின்னர் ஒருவர் எழுதியிருக்கும் அமைப்பை இதற்கு முன்னால் தெரிந்துவைத்திருப்பது நல்லது. அப்படி ஸிட் ஃபீல்ட் & ப்ளேக் ஸ்னைடர் என்று நாம் பார்த்துவிட்டபடியால் இனிமேல் ராபர்ட் மெக்கீயின் பின்னால் செல்வதில் சிரமங்கள் சற்றே குறைவு என்பதால்தான்.

robert-mckee-story-seminar_medium

ராபர்ட் மெக்கீ என்ன சொல்கிறார்? அவரது புத்தகத்தின் முக்கியமான கோட்பாடுகளை இப்போது பார்க்கலாம். புத்தகத்தைப் பற்றிய தெளிவான புரிதலுக்கு இது உதவும்.

முதலில், ஸிட் ஃபீல்டைப் போலவே மெக்கீயும் ஆடியன்ஸின் பார்வையில்தான் இந்த முழுப்புத்தகத்தையும் எழுதியிருக்கிறார். இதனால் அவரது கோட்பாடுகளைப் புரிந்துகொள்வது எளிது. ஆனால் அப்படிப் புரிவதற்கு, அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று தெரியவேண்டும். அது கொஞ்சம் கடினம். காரணம் அவரது புத்தகத்தின் மொழி மற்றும் அதன் உள்ளடக்கம். அதைத்தான் என்னால் முடிந்த அளவு எளிமையாகக் கொடுக்கப்போகிறேன்.

அடுத்ததாக, மெக்கீ, ஸிட் ஃபீல்டைப் போல் ஒரு திரைக்கதை வடிவத்தைக் கொடுக்கவில்லை (Setup, Confrontation & Resolution). மாறாக, மெக்கீயின் முழுப் புத்தகமும், திரைக்கதையில் பிரதான பாத்திரத்தின் பயணத்தையும் (The Quest), திரைக்கதையின் மையக் கதை என்ன என்பதையுமே கவனிக்கிறது. இந்த இரண்டையும் முதலிலிருந்து இறுதிவரை எப்படி சுவாரஸ்யமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் தெளிவாகவும் விளக்கலாம் என்பதே மெக்கீயின் புத்தகம். அதன்மூலமாக ஒரு திரைக்கதைக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் மெக்கீ விளக்குகிறார்.

இதில், திரைக்கதையின் நோக்கம் என்பது அவன்/அவள் விரும்பும் விஷயத்தை அடைய மேற்கொள்ளும் பயணம். இதை ஸிட் ஃபீல்டும் சொல்லியிருக்கிறார். ஆனாலும் மெக்கீயின் மொழியில், இந்தப் பயணம் என்பது அந்தப் பாத்திரத்தின் மனதில் இருக்கும் வெளிப்படையான ஆசையை/விருப்பத்தை/லட்சியத்தை நோக்கிய பயணமாக இருந்தாலும், அந்தப் பாத்திரத்தின் உள்மனம் என்ன நினைக்கிறது என்பதையும் நாம் கவனிக்கவேண்டும் என்பது மெக்கீயின் கொள்கை. இதைத்தான் ‘பிரதான பாத்திரத்தின் கதை’ என்று சொல்கிறார். அதாவது, திரைக்கதையின் நோக்கம் என்பது ஒரு வெளிப்படையான விஷயத்தை நோக்கிக் கதாபாத்திரம் செல்வது; அதேசமயம் அதன் உள்மனதில் இருக்கும் விஷயங்களும் மிகவும் முக்கியம். அப்போதுதான் அந்தப் பாத்திரத்தை நன்கு விளக்கமுடியும் என்பது மெக்கீயின் கட்சி (ஸிட் ஃபீல்ட் சொல்லும் நான்கு விஷயங்கள்: Goal, Point of View, Attitude and Transformation நினைவு வருகிறதா?).

ஒரு கதாபாத்திரத்தை, Character Arc என்ற பதத்தின் மூலம் மெக்கீ விளக்குகிறார். ஒரு கதாபாத்திரத்தை நன்றாக விளக்கிக்கொள்வதன் மூலம், அதன் உள்மனதில் உள்ள விஷயங்கள், அதன் குணம், கதையில் மெல்ல அது மாறுகிறதா இல்லையா, பாத்திரத்தின் உண்மையான நோக்கம் என்ன – போன்றவையெல்லாம் விளக்கப்பட்டுவிடுகின்றன என்பது அவரது கருத்து. ஸிட் ஃபீல்டை விடவும் மெக்கீயின் இந்த விவரங்கள் இன்னும் ஆழமாக இருக்கின்றன என்பது என் அனுபவம்.

ராபர்ட் மெக்கீ ஸிட் ஃபீல்டைப் போல ஒரு திரைக்கதை அமைப்பை வைத்துக்கொள்ளவில்லை என்று கவனித்தோம். ஆனால், மேலே நாம் பார்த்த இரண்டு அம்சங்களான பிரதான பாத்திரத்தின் பயணம் & திரைக்கதையின் மையக் கதை ஆகியவைகளுக்கு அவரும் ஒரு வரைபடம் வைத்திருக்கிறார். அவைகளை விபரமாகப் பார்க்கத்தான் போகிறோம் என்றாலும், சுருக்கமாக அவை இங்கே:

பிரதான பாத்திரத்தின் பயணம்: Inciting Incident, Progressive Complications, Crisis & Resolution.

திரைக்கதையின் மையக்கதை: Inciting Incident–> the spine of the story (Conscious desire & Unconscious desire) with positives and negatives.

இவை என்னென்ன என்பது இவற்றின் பெயரைப் பார்த்தாலே தெரிந்துவிடும் (தெரியாவிட்டாலும் பரவாயில்லை. விரிவாகப் பின்னர் கவனிப்போம்). இந்த இரண்டு அம்சங்களின் கலவையே ஆடியன்ஸின் மனதைக் கவரும் திரைக்கதை என்பது மெக்கீயின் முடிவு.

இவையெல்லாவற்றையும் தாண்டி, திரைக்கதை என்பது வெற்றிகரமான ஒரு கதை என்பதில் ராபர்ட் மெக்கீக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. பழங்காலத்தில் இருந்த உணர்வுபூர்வமான கதைசொல்லல் இப்போது தொலைந்துவிட்டது என்றும், அதனை மீட்டு ஆடியன்ஸை ஒரு கதைசொல்லியின்பால் திருப்பி, அந்தக் கதையை மனமார அனுபவித்து உணர்வுபூர்வமாக ஏற்றுக்கொள்ளுதலே ஒரு திரைக்கதையின் வெற்றி என்றும் அவரது புத்தகத்தில் அடிக்கடி குறிப்பிடுகிறார் மெக்கீ. அதைநோக்கித்தான் அவரது முழுப் புத்தகமும் அமைந்திருக்கிறது.

இப்போது நிஜமாகவே மெக்கீ பேசும் ஒரு க்ளிப். இப்படித்தான் அவரது செமினார்கள் அமைந்திருக்கும். மெக்கீயின் வீடியோக்கள் யூட்யூப் முழுக்கவே எக்கச்சக்கமாக உள்ளன.

 

ஓகே. மெக்கீயைப் பற்றிய ஒரு புரிதல் இதைப் படிப்பவர்களுக்கு இப்போது (கொஞ்சமாவது) ஏற்பட்டிருக்கலாம்.  வரும் வாரத்தில் இருந்து அவரது புத்தகத்தைப் பிரித்து மேயலாம்.


Fade In முதல் Fade Out வரை – முதல் புத்தகம் – Blake Snyder

சரி. இப்போது இன்னொரு முக்கியமான விஷயம். இதுவரை நாம் இந்தத் தொடரில் கவனித்து வந்த ப்ளேக் ஸ்னைடரின் புத்தகம் முடிந்துவிட்டது.  இதுவரை எழுதியதைச் சரிபார்த்து இன்னும் விபரமாக ஆங்காங்கே புதிய விஷயங்களைச் சேர்த்து எழுதிக்கொண்டிருக்கிறேன். ப்ளேக் ஸ்னைடர் தொடரில் விட்டதையெல்லாம் எழுதிமுடித்துவிடவேண்டும் என்பதுதான் நோக்கம்.

அது முடிந்ததும், Fade In முதல் Fade Out வரை தொடரின் முதல் புத்தகமாக ப்ளேக் ஸ்னைடரைப் பற்றிய புத்தகம் வெளியாகும். அது புத்தக வடிவில் இருக்கவேண்டுமா அல்லது PDFஆக இருந்தால் நல்லதா என்று ஃபேஸ்புக்கில் கேட்டிருந்தேன். இப்போது இங்கும் கேட்கப்போகிறேன். இந்த அத்தியாயத்தைப் படிப்பவர்கள் அனைவரும் கீழே உள்ள Pollல் உங்களுக்கு எது வசதியோ அதற்கு ஓட்டுப்போட்டால், பின்னால் எப்படி இந்தப் புத்தகத்தைக் கொண்டுவருவது என்பதில் தெளிவு கிடைக்கும். சிலருக்குப் புத்தகமே வசதி. சிலருக்கு PDF வசதி. நன்றாக யோசித்து ஓட்டுப்போடுமாறு கேட்டுக்கொள்கிறேன். PDFஐ முற்றிலும் இலவசமாக வழங்கலாமா அல்லது அதற்கு ஒரு விலை வைக்கலாமா என்று இன்னும் முடிவு செய்யவில்லை. PDF என்பது முடிவாகிவிட்டால், War of the Ring மின்புத்தகம் போல இலவசமாக வந்தாலும் வரும். அல்லது ஏதேனும் nominal விலையிலும் வரக்கூடும். அதனை இன்னும் சில வாரங்களில் சொல்வேன். எதுவாக இருந்தாலும், நண்பர்கள் உங்கள் வசதிக்கு ஏற்ப நன்றாக யோசித்து ஓட்டுப்போடுங்கள்.

இப்போதுதான் ‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ புத்தகம் வெளிவந்திருக்கும் நிலையில் இது உடனடியாக வராது. சில மாதங்கள் கழித்துதான் வரும். இருந்தாலும், அதை எப்படிக் கொண்டுவருவது என்பதற்கு இந்த ஓட்டுக்கள் உபயோகம் ஆகும். நன்றி.


இனி, ஓட்டுப்போடும் நேரம்.

[poll id=”2″]

 

தொடரலாம்…

Facebook Comments

Sharing is caring!

fb Comments

comments

  Comments

10 Comments

 1. Sakthivel

  PDFஆக இருந்தால் விஷயங்களை மேலும் தெளிவாக விளக்க யூடியூப் மற்றும் பல லிங்குகளை PDFஇலேயே கொடுக்க முடியும்.

  Reply
  • Krishna Prasath

   இந்த கருத்துக்கு நான் உடன்படுகிறேன். ராஜேஷ் நீங்கள் POLL ரிசல்ட் மட்டும் பார்க்காம இதையும் இதுபோன்ற கருத்துக்களும் மனதில் வைத்து கொண்டே இறுதி முடிவு எடுக்க வேண்டும்.

   Reply
   • Rajesh Da Scorp

    Sure Sakthivel and Krishna. Point taken. I will let you know

    Reply
    • In printed book, you can add QR codes to open a video. But Better to release in both ways, like in amazon stores, people may buy books or eBook version, Its much appreciated. Good luck

     Reply
 2. PDF கணினி அல்லது அலைபேசி மூலம் மட்டும் படிக்க முடியும் . எனவே PDF ஆக இல்லாமல் புத்தகமாகவும் இருந்தால் நன்றாக இருக்கும். புத்தகம் படிக்கும் போது கிடைக்கும் சுவாரஸ்யம் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். எனவே இரண்டு முறைகளிலும் இருந்தால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

  Reply
  • prabu

   Karunthelin pena eppozhuthu Hitchcock aiyum,Ingrid Bergman ,Federico felini,Francis ford coppolla Patti ezhuthumo ….?

   Reply
   • prabu

    Makalai moodar akiya moodar koodam(Copy of Korean film Attack the gas station) ungaluku minnajal seithirukiren neram iruntha kavanikavum…
    Fade in mudhal fade out varai kandipaga irandumaga vara vendum adhuve nallathu..

    Reply
 3. Puduvai Kamalraj

  Book is best. Whether it is PDF or Book don’t give it for free. We need to honour your hardwork not only by comments but also by the way of buying your PDF or Book. For pricing of your works book is the best form to sell.

  Reply
 4. Elavarasan

  நண்பரே தங்கள் கடின உழைப்புக்கு மரியாதையான வணக்கங்கள். ‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ புத்தகத்திற்கு முன்பே தங்கள் ப்ளாக்கில் தாங்கள் எழுதிய ‘திரைக்கதை எழுதுவது இப்படி’ தொடரால் பயனுற்ற உதவி இயக்குனர்களில் ஒருவன் நான். தாங்கள் ‘த்ரில்லர் மன்னன்’ ஆல்ப்ரெட் ஹிட்ச்காக்கின் திரைக்கதை அமைப்பினைப் பற்றிய தொடரை அவரது ஒவ்வொரு படங்களையும் அலசி ஆராய்ந்து எழுதினால் என்னைப் போன்ற (த்ரில்லர் விரும்பி) உதவி இயக்குனர்களுக்கும், மற்ற துறைகளைச் சார்ந்த திரைக்கதை ஆர்வலர்களுக்கும் பெரிதும் பயனாக இருக்கும். நன்றி.

  Reply
 5. Navin

  Send me திரைக்கதை எழுதுவது எப்படி ebook pls..

  Reply

Join the conversation