தமிழ்த் திரைக்கதைகள் – 1931 முதல் இன்று வரை

by Rajesh October 28, 2014   Cinema articles

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

தமிழ் ஹிந்து – தீபாவளி மலர் 2014ல் வெளிவந்த கட்டுரையின் முழு வடிவம் இங்கே கொடுக்கப்படுகிறது. அதில் வந்தது சுருக்கப்பட்ட வடிவம்.  இடையில் சில புதிய விஷயங்களையும் சேர்த்திருக்கிறேன். இந்தக் கட்டுரை சற்றே பெரியது என்பதால், ஆற அமர, நிதானமாகப் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இடையிடையே சில பாடல்களையும் இங்கே கொடுத்திருக்கிறேன். அந்தந்தக் காலகட்டங்களை அப்பாடல்கள் நினைவுபடுத்தும்.திரைக்கதை என்னும் நதியின் பயணம்

‘திரைக்கதை’ என்பதன் முக்கியத்துவம் உலகெங்குமே உணரப்படும் காலகட்டம் இது. ஹாலிவுட்டில் தோன்றிய பல்வேறு திரைக்கதை அமைப்புகள், அவற்றை உருவாக்கிய திரைக்கதை ஆசிரியர்களின் மூலமாக உலகெங்கும் பரவி, தற்போது அந்த அமைப்புகளில் சொல்லப்படும் விஷயங்கள் தீவிரமாக உலகெங்கும் வணிகத்திரைப்படங்களில் கடைப்பிடிக்கப்படுகின்றன. அதேசமயம், ‘இந்த அமைப்புகளால் எந்தப் பயனும் இல்லை; ’இந்த அமைப்புகளில் ’இத்தனாம் பக்கத்தில் இந்தக் குறிப்பிட்ட விஷயம் இடம்பெறவேண்டும்’ என்றெல்லாம் இருப்பதால் அதனைக் கூர்ந்து கவனித்து அப்படியே செய்வதன்மூலம் இயல்பான கதைசொல்லும் பாணி தடைபடுகிறது’ என்ற குற்றச்சாட்டும் அவ்வப்போது சில இயக்குநர்களால் (உதாரணம்: க்வெண்டின் டாரண்டினோ) எழுப்பப்படுவதும் உண்டு.

உலகின் எந்த மொழியாக இருந்தாலும் சரி – வணிகப்படங்கள் எப்படி எழுதப்படுகின்றன என்பதைக் கவனித்தால், எளிதான ஒரு அமைப்பு கிடைக்கும். ‘கதாபாத்திரங்களை முதலில் அறிமுகப்படுத்துதல்; அதன்பின்னர் அந்தப் பாத்திரங்களுக்கு இடையே சில சிக்கல்களை உருவாக்குதல்; பின்னர் அந்தச் சிக்கல்கள் தீர்ந்து நல்லதொரு முடிவு கிடைத்தல்’ என்பதே அந்த அமைப்பு. இதனை முதன்முதலில் கண்டுபிடித்துச் சொன்னவர் அரிஸ்டாட்டில். க்ரேக்க நாடகங்கள் எப்படி எழுதப்படுகின்றன என்பதை ஆராய்ந்தே இதைச் சொன்னார். அரிஸ்டாட்டிலின் காலகட்டத்திற்கு முன்னரே தொடங்கிய இந்தக் கதைசொல்லல் பாணிதான் இன்றுவரை பெரும்பாலான கதைகள், நாடகங்கள், கவிதைகள், திரைக்கதைகள் போன்றவற்றில் கடைப்பிடிக்கப்படுகிறது என்பதைக் கவனித்தால், மனிதனின் ஆர்வம் ஒரு குறிப்பிட்ட கதையைச் சொல்லமுயற்சிக்கும்போது உலகெங்குமே எப்படி ஒரேபோன்று வெளிப்படுகிறது என்பது புரியும். இந்தியாவின் காவியங்களான மஹாபாரதம், ராமாயணம், சிலப்பதிகாரம் போன்றவையுமே இப்படிப்பட்ட கதைசொல்லும் அமைப்பைக் கொண்டிருப்பவைதான்.

அரிஸ்டாட்டிலின் இந்த அமைப்பை எடுத்துக்கொண்டு ஹாலிவுட் திரைக்கதைகளை ஆராய்ந்து, அவற்றில் இருக்கும் ஒற்றுமையைக் கவனித்து ஒரு புத்தகம் எழுதியவர் ஸிட் ஃபீல்ட் (Syd Field). அந்தப் புத்தகமான ‘Screenplay: The Foundations of Screenwriting’ என்பதுதான் முதன்முதலில் திரைக்கதை என்பதை எப்படி உருவாக்குவது என்பதை மிக விரிவாகவும் எளிமையாகவும் விளக்கிய புத்தகம். இந்தப் புத்தகம் வெளிவந்ததும் இதனைத் தொடர்ந்து பல திரைக்கதைப் பிதாமகர்கள் உருவாயினர். ஸிட் ஃபீல்டிலிருந்து துவங்கி, ராபர்ட் மெக்கீ, வில்லியம் கோல்ட்மேன், க்ரிஸ்டோஃபர் வோக்லர், ஜான் ட்ரூபி, மைக்கேல் ஹாக், ஜோஸஃப் கேம்ப்பெல், ப்ளேக் ஸ்னைடர் போன்ற குறிப்பிடத்தகுந்த திரைக்கதைப் பிதாமகர்களின்மூலம் பல்வேறு திரைக்கதை அமைப்புகள் இப்போது கிடைக்கின்றன. இவையெல்லாம் ஹாலிவுட்டின் திரைக்கதையையே உதாரணமாகக் கொண்டு, அதனை எப்படி செம்மைப்படுத்துவது என்றே விவாதிக்கின்றன.

இருந்தாலும், இவற்றின் பல கூறுகள் தமிழ் வணிகப்படங்களுக்கும் அவசியம் பொருந்தும். எப்படி என்பதுபற்றியும், தமிழின் சில நல்ல திரைக்கதையாசிரியர்களைப் பற்றிக் கவனிப்பதன்மூலம், தமிழின் படைப்பாளிகள் அனைவரையுமே நினைவு கூர்வதே நோக்கம்.

தமிழ் சினிமாவில் திரைக்கதையின் வளர்ச்சியைக் கவனித்தால், ஒவ்வொரு காலகட்டத்திலும் படிப்படியாக எப்படியெல்லாம் திரைக்கதை வளர்ந்திருக்கிறது என்பது புரியும். தமிழில் திரைப்படங்கள் 1916ம் வருடத்திலேயே அறிமுகமாகிவிட்டாலும் (நடராஜ முதலியாரின் ‘கீசக வதம்), 1931 வரை வந்த எல்லாப் படங்களுமே வசனங்கள் இல்லாத படங்கள். தமிழின் முதல் பேசும்படம் ‘காளிதாஸ்’ என்பது அந்த வருடத்தில்தான் வெளிவந்தது.  இதே வருடத்தில்தான் தமிழின் முதல் குறும்படமான ‘குறத்தி நடனமும்’ வெளிவந்தது.  இதுதான் தமிழின் முதல் பேசும் படம் என்ற கருத்தும் நிலவுகிறது.  இவைபோன்ற தமிழின் மிக ஆரம்பகாலப் படங்களைக் கவனித்தால், அவற்றில் ‘திரைக்கதை’ என்ற பதமே இல்லை என்பது தெரியும். ‘வசனம்’ என்பதுதான் எல்லாத் திரைப்படங்களிலும் தவறாமல் இடம்பெற்ற வார்த்தை. இந்த வசனங்களைப் பற்றிய ஒரு குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், பழங்காலத் திரைப்படங்களில் ஏராளமான பாடல்கள் இருந்தன. இந்தப் பாடல்கள் முடிந்து அடுத்த பாடல் துவங்கும் இடைப்பட்ட நேரத்தில்தான் இந்த வசனங்கள் பேசப்பட்டன. அதேபோல் பெரும்பாலான படங்கள் சரித்திர/புராணக்கதைகளிலிருந்து எழுதப்பட்ட நாடகங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டவை (உதாரணம்: காளிதாஸ், ஸ்ரீவள்ளி, ஸ்ரீநிவாஸ கல்யாணம், ப்ரஹலாதா, சீதா கல்யாணம், பாமா பரிணயம், லவகுசா போன்ற படங்கள்). எனவே இவை அந்த நாடகங்களின் நீட்சியாகத்தான் இருந்தன. உதாரணமாக 1934ல் வெளிவந்த எம்.கே. தியாகராஜ பாகவதர் அறிமுகமான ‘பவளக்கொடி’யை எடுத்துக்கொண்டால், அது வெற்றிகரமாக நடந்துகொண்டிருந்த ஒரு நாடகம். மஹாபாரதத்தில் இல்லாத அர்ஜுனன்-பவளக்கொடியின் கதை இது. நாட்டார் கதைகளிலிருந்தே எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் மொத்தம் 55 பாடல்கள் என்று தெரிகிறது. அவற்றில் பெரும்பாலான பாடல்களைத் தியாகராஜ பாகவதரே பாடி நடித்தார். அந்தப் பாடல்கள் படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே பாடப்பட்டன. அப்போது பெரிய ஆர்க் விளக்குகள் இல்லாததால், சூரிய வெளிச்சத்திலேயேதான் எல்லாக் காட்சிகளும் படமாக்கப்பட்டன. சூரியன் எப்போதாவது மேகங்களுக்கு இடையே மறைந்தால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதுபோன்ற சுவாரஸ்யமான விஷயங்கள் இந்தக் கட்டுரைக்குத் தேவையில்லை என்பதால் திரைக்கதையைப் பற்றி மட்டும் இன்னும் கவனிப்போம்.

1936ல் ‘சதி லீலாவதி’ திரைப்படம் வெளியானது. எல்லிஸ் ஆர் டங்கன் இயக்கிய முதல் தமிழ்ப்படம் இது. இந்தப் படத்தை இங்கே குறிப்பிடுவதன் நோக்கம், பல தமிழ்த் திரைக்கதைகளில் இன்றுவரை தொடரும் ஒரு ‘இன்றியமையாத’ அம்சத்தைப் பற்றிப் பேசுவதற்கே. உண்மையில் ‘பதி பக்தி’ என்ற பிரபலமான மேடை நாடகத்தை வைத்தே உருவாக்கப்பட்ட படம் இது. நாடகத்தை எழுதியவர் ஏ. கிருஷ்ணசாமிப் பாவலர்.  நாடகத்தில் கதாநாயகனாக நடித்தவர் கே.பி.கேசவன். ஆனால்  திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர் எம்.கே.ராதா. நாடகத்தின் தயாரிப்பாளர்கள் மூலமாக எம்.கே. ராதா நடிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால் பிரபல நாடக நடிகர் கந்தஸ்வாமி முதலியார் தனியாகப் பிரிந்துவந்து, தனது மகனான எம்.கே.ராதாவைக் கதாநாயகனாக வைத்து ‘சதி லீலாவதி’ என்ற படத்தைத் துவக்கினார். இந்தப் படத்துக்குக் கதை – எஸ்.எஸ். வாசன். அப்போது விகடனில் அவர் எழுதி முடித்திருந்த ஒரு கதையையே இந்தப் படத்துக்கு அடிப்படையாக வைத்துக்கொண்டனர். அதேசமயம் பழைய பதி பக்தியும் நாடகத் தயாரிப்பாளர்களால் படமாக்கப்பட்டது. இதனால் என்ன நடந்தது என்றால், ‘சதி லீலாவதி’ வெளியானதும் பதி பக்தியின் தயாரிப்பாளர்கள், தங்கள் கதை திருடப்பட்டதாக வழக்குத் தொடர்ந்தனர். தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே கதைத்திருட்டுக்காகப் போடப்பட்ட முதல் வழக்கு என்ற ‘பெருமை’ இந்த வழக்குக்கு உண்டு.

வழக்கு எப்படித் தீர்க்கப்பட்டது? எஸ்.எஸ் வாசன், இரண்டு கதைகளுமே ஆங்கிலத்தில் வெளியான ‘Danesbury House’ என்ற புத்தகத்தில் இருந்தே எடுக்கப்பட்டன என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இரண்டு கதைகளுக்குமே மூலம் அந்த ஆங்கிலக் கதைதான் என்பது இதனால் தெளிவாக நிரூபிக்கப்பட்டது. வழக்கும் கைவிடப்பட்டது!

இதே 1936ல், ‘சினிமா ராணி’ என்றே பட்டம் சூட்டப்பட்டுத் தமிழ்த் திரையுலகின் முடிசூடா ராணியாகத் திகழ்ந்த தமிழின் முதல் கதாநாயகியான டி.பி.ராஜலக்‌ஷ்மி எழுதி, இயக்கித் தயாரித்து நடித்த ‘மிஸ்.கமலா’ என்ற திரைப்படம் வெளியானது. சமூகப்படமான இந்தப் படத்தின் திரைக்கதை டி.பி.ராஜலக்‌ஷ்மியாலேயே எழுதப்பட்டது. கிட்டத்தட்ட இந்தக் காலகட்டத்தில் இருந்துதான் ‘திரைக்கதை’ என்ற அம்சம் வழக்குக்கு வந்திருக்கிறது என்பது அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த தமிழ்ப் படங்களைப் பற்றி ஆராய்கையில் தெரிகிறது. குறிப்பாக எல்லிஸ்.ஆர். டங்கனின் படங்களில் திரைக்கதைக்கான டைட்டில்கள் இருக்கின்றன. அவரது ‘இரு சகோதரர்கள்’ (1936) படத்தில் திரைக்கதை எழுதியவராக எஸ்.டி.எஸ். யோகியின் பெயர் இருக்கிறது. இதன்பிறகு வெளிவந்த ‘அம்பிகாபதி’ (1937) படத்தில் திரைக்கதை – டி.ஆர்.எஸ். மணி என்றும், வசனங்கள் – இளங்கோவன் என்றும் இருக்கின்றன. அம்பிகாபதியில் பல காட்சிகள் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட்டிலிருந்தே எடுக்கப்பட்டிருக்கும். எல்லிஸ்.ஆர்.டங்கன் பல ஆங்கில வசனங்களை அடிக்கோடு இட்டுத்தர, அவற்றை இளங்கோவன் தமிழ்ப்படுத்தியிருப்பார்.

இதன்பிறகு தமிழ்த் திரைக்கதை அமைப்பு சரமாரியான வளர்ச்சியடைந்தது. 1939ல் ‘தியாகபூமி’ திரைப்படம் படமாக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போதே அதன் வசனங்களையும் புகைப்படங்களையும் ஆனந்த விகடனில் எஸ்.எஸ். வாசன் வெளியிட்டார். அதற்கு முன்னர் அப்படிப்பட்ட முயற்சி உலகில் எங்குமே செய்யப்படவில்லை என்றே திரைப்பட ஆய்வுப் புத்தகங்கள் தெரிவிக்கின்றன.

கிட்டத்தட்ட இந்தக் காலகட்டத்திற்குச் சற்றுமுன்னர்தான் நகைச்சுவைப் பகுதிகளும் தமிழ்த் திரைக்கதைகளில் தனியாகவே எழுதிச் சேர்க்கப்பட்டன. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மற்றும் டி.ஏ.மதுரம் ஜோடிதான் பெரும்பாலான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தனர்.

ஆங்கிலத்தில் ஸாமுவேல் லவரால் உருவாக்கப்பட்ட Handy Andy என்ற கதாபாத்திரத்தைத் தழுவிப் பம்மல் சம்மந்த முதலியாரால் உருவாக்கப்பட்ட ஒரு வேலைக்காரக் கதாபாத்திரம்தான் சபாபதி. இந்தக் கதாபாத்திரத்தை வைத்துக்கொண்டு நகைச்சுவை நாடகங்களை எழுதினார். அந்த நாடகங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ‘சபாபதி’ (1941) திரைப்படம்தான் தமிழின் முதல் முழுநீள நகைச்சுவைப் படம். சம்மந்தம் முதலியாரே திரைக்கதை எழுதினார்.

1943ல் தமிழின் முதல் டப்பிங் படம் வெளியானது. கன்னடத்தில் வெளியாகியிருந்த ஏவிஎம்மின் ‘ஹரிஷ்சந்திரா’ படம்தான் ஏ.வி மெய்யப்ப செட்டியாரால் தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டது. அந்த வகையில் தமிழின் முதல் டப்பிங் திரைக்கதையாக இந்தப் படம் விளங்குகிறது.

1945ல் இந்திய அரசியல் ரீதியில் சில விஷயங்கள் நடந்தன. இரண்டாம் உலகப் போரில் ப்ரிட்டிஷ் படைகள் ஜப்பானியப் படைகளுக்கு எதிராக மோதின. அடிமைப்பட்டிருந்த இந்தியாவின் படையினரும் அப்போது ப்ரிட்டனுக்கு ஆதரவாகப் போரிட்டனர். ஜப்பானியப் படைகளுக்கு சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவம் உதவியது. இருந்தாலும் ப்ரிட்டிஷ் படைகளுடன் பொருத இயலாமல் இறுதியில் இந்திய தேசிய ராணுவம் பர்மியப் போரில் சரணடைந்தது. பர்மாவை ப்ரிட்டன் கைப்பற்றியது. இந்தப் போரின் பாதிப்பில் ‘பர்மா ராணி’ போன்ற யுத்தப் படங்களும் தமிழில் முதன்முறையாக எழுதப்பட்டு வெளிவந்திருக்கின்றன.

இதன்பிறகு 1949ல் அண்ணாதுரை திரைக்கதை வசனம் எழுதிய முதல் படமான ‘நல்லதம்பி’ வெளியிடப்பட்டது. என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ. மதுரம், பானுமதி ஆகியோர் நடித்திருந்தனர். இது, ஆங்கிலப்படமான Mr. Deeds goes to town படத்தின் தழுவல் என்றாலும் அண்ணாதுரை எழுதிய திரைக்கதை என்.எஸ்.கேவால் வெகுவாக மாற்றியமைக்கப்பட்டது. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தரும் பல அம்சங்கள் அவரால் சேர்க்கப்பட்டன. அந்த வருடத்திலேயே அண்ணதுரை எழுதிய ‘வேலைக்காரி’ படமும் வெளியானது. வசனங்களில் அடுக்குமொழி, அவற்றின்மூலம் மூட நம்பிக்கைகளைச் சாடுதல், வசனங்களைக் கட்சியை வளர்க்கும்விதமாகப் பிரச்சாரப்படுத்துதல் ஆகியவை இப்படங்களின் மூலமாகத்தான் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டன.

1950ல் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதிய ‘மந்திரிகுமாரி’ வெளியானது. இதுதான் தமிழில் எல்லிஸ்.ஆர்.டங்கனின் கடைசிப் படம். 1952ல் கருணாநிதியின் அடுக்குமொழி வசனங்கள் ‘பராசக்தி’ மூலம் பிரபலம் அடைந்தன.

இதே காலகட்டத்தில் தமிழுக்கு வெளியே உலக அளவில் நடந்த திரைக்கதைப் பரிசோதனைகளை எடுத்துக்கொண்டால், அகிரா குரஸவாவின் ரஷோமான் 1950ல் வெளிவந்தது. புத்திசாலித்தனமான திரைக்கதையில் வரிசையாக ஆரம்பம் முதல் இறுதிவரை நடக்கும் கதையைச் சொல்லாமல், துண்டுதுண்டாக முன்னும் பின்னும் பயணிக்கக்கூடிய நான் லீனியர் திரைக்கதை வடிவம் உலகம் முழுக்கப் புகழ்பெறக் காரணமாக இருந்த படம் இது. இந்தப் படத்தின் வெற்றியைத் தமிழ்த் திரையுலகம் உடனடியாகக் கண்டுகொண்டது. வீணை பாலசந்தரின் ‘அந்த நாள்’ படம் இதேபோன்ற நான் லீனியர் திரைக்கதையைக் கொண்டு வெளிவந்தது. 1954ல் ஒரு தமிழ்ப் படத்தில் பாடல்களோ சண்டைக் காட்சிகளோ நடனங்களோ இடம்பெறாதது அவசியம் ஒரு குறிப்பிடத்தகுந்த முயற்சிதான் என்பதில் சந்தேகமில்லை. கதைசொல்லும் பாணியில் ரஷோமானால் பாதிக்கப்பட்டிருந்தாலும், ஒரு கொலை – கொலையுண்ட நபரைப் பற்றிய பலரின் கருத்துகள் – அந்தக் கருத்துகளின் வாயிலாக ப்ளாஷ்பேக்கில் கதை சொல்லப்படுதல் என்பது 1950ல் வெளிவந்த ப்ரிட்டிஷ் படமான The Woman in Question என்ற படத்திலிருந்தே எடுக்கப்பட்டதாகும். ஆங்கிலத்தில் 1941ல் ஏற்கெனவே Citizen Kane வெளிவந்து புகழடைந்திருந்தாலும், தமிழில் அந்த நாள்தான் இப்படிப்பட்ட பாணியில் எடுக்கப்பட்டிருந்த முதல் படம்.

ஐம்பதுகளின் நடுப்பகுதி, எம்.ஜி.ராமச்சந்திரனும் சிவாஜி கணேசனும் பிரபலம் அடைய ஆரம்பித்திருந்த காலகட்டம். இருவருமே action ஹீரோக்களாகத்தான் இருந்தனர். எம்.ஜி.ஆருக்கு குலேபகாவலி, மலைக்கள்ளன், ஜெனோவா, அலிபாபாவும் நாற்பது திருடர்களும், மதுரை வீரன் போன்ற படங்களும், சிவாஜி கணேசனுக்கு மனோகரா, கள்வனின் காதலி, உத்தமபுத்திரன், புதையல், வணங்காமுடி போன்ற படங்களும் அமைந்தன. இந்தப் படங்களின் திரைக்கதைகள் இன்றுமே துவக்கத்தில் இருந்து இறுதிவரை அலுக்காமல் வேகமாகச் செல்லும் இயல்புடையன. இவர்களில் எம்.ஜி.ஆரை விட சிவாஜிதான் பல்வேறு வகையான படங்களில் இந்தக் காலகட்டத்தில் நடித்தார். நகைச்சுவை (கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, தெனாலிராமன்), வில்லன் (அந்த நாள், திரும்பிப்பார், கூண்டுக்கிளி), குணச்சித்திரம் (எதிர்பாராதது, தூக்கு தூக்கி, மங்கையர் திலகம்) என்று பல்வேறுபட்ட கதாபாத்திரங்களில் சிவாஜி மிக அதிகமாக நடித்த காலகட்டம் இது.

சிவாஜியின் ‘எதிர்பாராதது’ படத்தால் தமிழ்த் திரையுலகுக்கு ஒரு நன்மை நடந்தது. அதன்பின் பல வருடங்கள் திரைக்கதையில் புதுமையான கதைகளைச் சொல்லித் தமிழின் பிரதான இயக்குநராக விளங்கிய ஸ்ரீதர் அந்தப் படத்தின் மூலம்தான் பிரபலம் அடைந்தார். ஏற்கெனவே ‘ரத்தபாசம்’ திரைப்படம் மூலம் ஒரு திரைக்கதையாசிரியராகத் தனது வாழ்க்கையைத் துவங்கியிருந்தாலும், ‘எதிர்பாராதது’ தான் ஸ்ரீதருக்கு எதிர்பார்த்த புகழை வழங்கியது. இதன்பிறகு முற்றிலும் வேறுபட்ட பல திரைக்கதைகளை ஸ்ரீதர் எழுதினார். ‘அமரதீபம்’, ‘உத்தமபுத்திரன்’ ஆகியவை அவற்றில் பிரபலமானவை. மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்துகொண்டு ‘மகேசுவரி’ திரைப்படத்தை ஸ்ரீதர் எழுதியபோது, டி.ஆர். சுந்தரம் உருவாக்கிவைத்திருந்த பிரம்மாண்ட நூலகத்தில் ஏராளமான திரைப்படம் சம்மந்தப்பட்ட புத்தகங்களைப் படித்துப் பயனடைந்ததாக ஸ்ரீதர் தனது ‘திரும்பிப்பார்க்கிறேன்’ சுயசரிதையில் சொல்லியிருக்கிறார்.

வீனஸ் பிக்சர்ஸில் பங்குதாரராக இருந்த ஸ்ரீதர் உருவாக்கிய கதைதான் ‘கல்யாணப்பரிசு’. 1959ல் வெளியாகி வெள்ளிவிழாக் கண்ட படம். பரவலாக அனைத்துத் தரப்பினரிடமும் பாராட்டுப்பெற்று, ஹிந்தியில் அப்போதைய பிரதான ஹீரோ ராஜ்கபூராலேயே விரும்பப்பட்டு ஹிந்தியில் எடுக்கப்பட்ட படம். தெலுங்கிலும் நாகேஸ்வரராவை வைத்து எடுக்கப்பட்டது. அக்காலத்தில் தமிழில் முக்கோணக் காதல் பிரபலமானதும் இந்தப் படத்தால்தான். ஒரு வெற்றிகரமான வணிகத் திரைக்கதைக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் இதில் ஸ்ரீதரால் எழுதப்பட்டிருக்கும் (இயல்பான வசனங்கள், ஆங்காங்கே நகைச்சுவை, காதல், சோகம் போன்ற பகுதிகள்). தங்கவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் பலருக்கும் நினைவிருக்கும் படம் இது. போலவே ஏ.எம். ராஜாவின் இனிமையான பாடல்களும் அப்படியே. இந்தப் படத்தில் வசனங்களும் வடமொழி கலந்து மணிப்பிரவாளமாக இல்லாமல் மிக இயல்பாகவும் இருந்தன.  அதேபோல் பாடல்களும். ‘வாடிக்கை மறந்ததும் ஏனோ’ பாடலில் ஜெமினி கணேசனும் சரோஜாதேவியும் மிதிவண்டியில் இயல்பாகப் பயணித்தபடி பாடும் காட்சிகளை மறக்க முடியுமா? இதுபோன்ற இயல்பான காதல் காட்சிகளுக்கு ஸ்ரீதர் வித்திட்டார்.

 

இந்தப் படத்துக்குப் பிறகு ‘சித்ராலயா’ என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கிய ஸ்ரீதர், முற்றிலும் வேறுபட்ட பல திரைக்கதைகளை சரமாரியாக எழுதினார். முழுக்க முழுக்க வெளிப்புறப் படப்பிலேயே எடுக்கப்பட்ட படம் (தேநிலவு), முழுக்க முழுக்க உட்புறப் படப்பிடிப்பிலேயே – ஒரே ஒரு செட்டில் – எடுக்கப்பட்ட படம் (நெஞ்சில் ஓர் ஆலயம்),  தமிழில் வண்ணத்தில் வெளியான முதல் முழு நீள நகைச்சுவை சமூகப்படம் (காதலிக்க நேரமில்லை), தமிழில் ஒரு இசைக்கலைஞனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் (கலைக்கோவில்), தமிழின் முதல் மறுபிறவி சாகஸம் (நெஞ்சம் மறப்பதில்லை), மேக்கப்பே இல்லாமல் கதாபாத்திரங்கள் நடித்த படம் (நெஞ்சிருக்கும் வரை), தமிழில் முதன்முறையாக வெளிநாடுகளில் படப்பிடிப்பு நிகழ்த்தப்பட்ட படம் (சிவந்த மண்) என்றெல்லாம் முற்றிலும் வித்தியாசமான களன்களில் ஸ்ரீதர் திரைக்கதை எழுதிய படங்கள் தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு மறந்திருக்காது. இவைகளில் சில படங்கள் ஹிந்தியிலும் வெற்றிகரமாக ஓடின. அவற்றை ஸ்ரீதரே இயக்கினார். தமிழில் வித்தியாசமாக – அதே சமயம் ஜனரஞ்சகமாகவும் வெற்றிபெற்ற திரைக்கதைகள் எழுதிய ஸ்ரீதர், இந்தவகையில் தமிழின் திரைக்கதை முன்னோடிகளில் ஒருவர். இயல்பான களனில் சுவாரஸ்யமாக ஒரு படத்தை எப்படி எழுதுவது என்று ஸ்ரீதரின் படங்களில் இருந்து கற்றுக்கொள்ளலாம்.

ஸ்ரீதர் வெற்றிகரமாகத் தமிழ்த் திரையுலகைக் கலக்கிக்கொண்டிருந்த சூழலில் ஹாலிவுட் படங்களைக் கவனித்தால் அப்போது ‘ம்யூஸிகல்கள்’ என்று அழைக்கப்பட்ட – திரைப்படங்களின் இடையில் பாடல்களைக் கொண்டிருந்த – படங்கள் பிரபலம். வால்ட் டிஸ்னி நிறுவனம்தான் இப்படிப்பட்ட பல படங்களைத் தயாரித்துக்கொண்டிருந்தது. அதே சமயம் அங்கே ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரமும் உலகப்புகழ் பெற்றுக்கொண்டிருந்த காலகட்டம் அது. தமிழில் எல்லாப் படங்களுமே ம்யூஸிகல்கள்தான் என்றபோதிலும் ஹாலிவுட்டில் வெற்றிபெற்ற ம்யூஸிகல் படங்களான Sound of Music, Parent Trap ஆகியவை சற்றே தமிழில் மாற்றி எழுதப்பட்டு ‘சாந்தி நிலையம்’, ‘குழந்தையும் தெய்வமும்’ என்று வெளியாகின. அதேபோல் ஜேம்ஸ்பாண்ட் படங்களால் கவரப்பட்ட டி.ஆர். சுந்தரத்தின் மகன் ராம சுந்தரம் (ஆர். சுந்தரம்), தனது மாடர்ன் தியேட்டர்ஸ் மூலமாக ஜெய்சங்கரைக் கதாநாயகனாக வைத்து இப்படிச் சில விறுவிறுப்பான படங்களை இயக்கினார் (‘இரு வல்லவர்கள்’, ‘வல்லவன் ஒருவன்’, ‘சி.ஐ.டி. சங்கர்’, ‘காதலித்தால் போதுமா’, ‘நான்கு கில்லாடிகள்’, ‘கருந்தேள் கண்ணாயிரம்’, ‘துணிவே துணை’ ஆகியவை). இவைகளின் திரைக்கதைகள் தத்ரூபமாக ஒரு ஹாலிவுட் படத்தைப் பார்த்ததுபோலவே இருக்கும்.

அதேபோல் பாலசந்தரும் தமிழ் சினிமாவின் அறுபதுகளில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய திரைக்கதையாசிரியாகவே இருந்தார். கிருஷ்ணன் – பஞ்சு இயக்கிய ‘சர்வர் சுந்தரம்’ பாலசந்தரின் திரைக்கதைதான். ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘நீர்க்குமிழி’, ‘பூவா தலையா’, ‘இரு கோடுகள்’, எதிர் நீச்சல்’, ‘பாமா விஜயம்’ போன்ற வெற்றிகரமான திரைக்கதைகள் பாலசந்தருடையவையே. இவற்றை அவரே இயக்கவும் செய்தார். மனித உறவுகளுக்கு இடையே இருக்கும் முரண்பாடுகளை வைத்து பாலசந்தர் பின்னாட்களில் எழுதி-இயக்கிய பல படங்களுக்கு இவை ஒரு துவக்கமாக இருந்திருக்கக்கூடும். எழுபதுகளிலும் பாலசந்தரின் வித்தியாசமான திரைக்கதைகள் தமிழில் தொடர்ந்து வெளிவந்தன. ‘அரங்கேற்றம்’ படத்தில் துவங்கி, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘மன்மதலீலை’, ‘மூன்று முடிச்சு’, ‘அவர்கள்’, ‘நிழல் நிஜமாகிறது’, ‘தப்புத்தாளங்கள்’, ‘நூல்வேலி’ என்று கிட்டத்தட்ட ஏழெட்டு ஆண்டுகள், பாலசந்தரின் பெரும்பாலான படங்களின் திரைக்கதைகள் ‘பாலசந்தர் ஸ்கூல் ஆஃப் தாட்’ என்றே அவரது சிஷ்யர் பிரகாஷ்ராஜ் தயாரித்த ‘அழகிய தீயே’ படத்தில் நகைச்சுவையாக சொல்லப்படும் அளவு திருமணத்தை மீறிய உறவுகள், அவற்றின் விளைவுகள், மனித மனதின் உளவியல் போன்ற விஷயங்களையே பல வித்தியாசமான களன்களில் கொண்டிருந்தன. அவை பேசப்படவும் செய்தன. பல விருதுகளையும் வென்றன. பின்னரும் எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் சில படங்களில் இதே களன்களை பாலசந்தர் வைத்திருந்தார் (‘சிந்து பைரவி’, ‘கல்கி’, ‘புதுப்புது அர்த்தங்கள்’, ‘ஒரு வீடு இரு வாசல்’ முதலியன).

பிரபல நட்சத்திரங்களான எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருக்கும், அவர்களுக்கேற்ற வகையில் திரைக்கதை எழுதக்கூடிய வசனகர்த்தாக்களும் இயக்குநர்களும் தமிழில் பலர் இருந்தனர். எம்.ஜி.ஆர் படங்கள் என்றால் அவை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கெல்லாம் தெளிவான வரையறைகள் இருந்தன. ஏழைப்பங்காளனாக, அநியாயங்களை எதிர்ப்பவனாக, இரக்கம் உடையவனாக, மது, சிகரெட் ஆகிய பழக்கங்கள் இல்லாதவனாக, குழந்தைகளின் விருப்பத்திற்குரியவனாக – மொத்தத்தில் அனைவருக்கும் பிடிக்கக்கூடிய கதாபாத்திரங்களிலேயே எம்.ஜி.ஆர் நடித்தார். பெரும்பாலும் அவரது படங்களில் ஆக்ஷன் அதிகமாக இருக்கும். கதாநாயகனுடனேயே வரும் நகைச்சுவை நடிகன், கதாநாயகனை எண்ணி ஏங்கும் கதாநாயகி, முரட்டு வில்லன். அவனுக்குச் சில அடியாட்கள் ஆகியவையெல்லாம் எம்.ஜி.ஆர் படங்களின் திரைக்கதையில் தொடர்ந்த அம்சங்கள். இடையிடையே கண்ணன் என் காதலன் போன்ற அமைதியான படங்களும் அவ்வப்போது வரும். எழுபதுகளின் துவக்கத்தில் ஹிந்தியில் ராஜேஷ் கன்னா நடித்து வெற்றிபெற்ற படங்களில் தமிழில் எம்.ஜி.ஆர் நடித்தார். ஸ்ரீதரின் உரிமைக்குரல், எம்.ஜி.ஆர் எழுதி இயக்கிய உலகம் சுற்றும் வாலிபன் போன்றவை குறிப்பிடத்தக்க முயற்சிகள். சிவாஜிக்கும் இதைப்போலவே அவரது நடிப்பாற்றலை வெளிப்படுத்தக்கூடிய திரைக்கதைகள் அமைந்தன. சோகம் தூக்கலாக அமைந்த படங்களுக்கு இடையே ஸ்ரீதர் சிவாஜியை வைத்து எழுதி இயக்கிப படங்கள் சுவாரஸ்யமாகவும் சுவையாகவும் இருந்தன. ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், முத்துராமன் போன்றோருக்கும் அவர்களின் இயல்பை வெளிக்காட்டி நடிக்கும் வகையில் திரைக்கதைகள் அமைந்தன.

எழுபதுகளின் மத்தியில் இருந்து எண்பதுகளின் முடிவு வரை தமிழின் பல திரைக்கதைகள் நேரடியாக ஹிந்தியில் இருந்தே எடுக்கப்பட்டன. குறிப்பாக ரஜினி நடித்த பல வெற்றிப்படங்கள். கூடவே கமல்ஹாஸனின் ஒரு சில படங்கள், விஜயகாந்த்தின் கூலிக்காரன் போன்றவை. இதற்குக் காரணம் அமிதாப் பச்சனின் அசுர வளர்ச்சி, மற்றும் சலீம்-ஜாவேத் இரட்டையர்களின் திரைக்கதைகள் பெற்ற புகழ் ஆகியன. சலீம்-ஜாவேத் இரட்டையர்கள் ஹிந்தியில் எழுதிய இருபதுக்கும் மேலான ஹிந்திப் படங்களில் கிட்டத்தட்ட அனைத்துமே மிகவும் பிரபலமாக ஓடின. அவற்றில் பெரும்பாலும் அமிதாப் பச்சன், ராஜேஷ் கன்னா ஆகியோர் நடித்தனர். இவற்றில் பல, தமிழில் ரஜினியை வைத்து வெளியாகின. எனவே தமிழ்நாட்டின் எண்பதுகளின் திரைக்கதை வளர்ச்சிக்கு சலீம்-ஜாவேத்தும் ஒரு காரணம் என்றால் தவறில்லை. அதேசமயம் பாரதிராஜாவின் வருகை தமிழின் திரைக்கதைகளுக்குப் புதுரத்தம் பாய்ச்சியது எனலாம். காரணம் அவருடன் வந்த பாக்யராஜ். பாக்யராஜின் திரைக்கதைகளைப் பற்றி இப்போதும் இரண்டுவிதமான கருத்துகள் நிலவுகின்றன. தமிழில் மட்டுமன்றி இந்தியாவிலும் சலீம்-ஜாவேத் போல பாக்யராஜும் ஒரு திரைக்கதை ஜாம்பவான் என்பது ஒன்று; அவரது திரைக்கதைகள் மூலம் ரசனை உணர்வில் எந்த மாற்றத்தையும் அவர் அளிக்கவில்லை; மசாலாப் படங்களையே தொடர்ந்து கொடுத்தார் என்பது இன்னொன்று. எது எப்படி இருந்தாலும் இந்தக் காலகட்டத்தில் (2014) வெளிவரும் பல படங்களின் திரைக்கதை வடிவைக் கவனித்தால், அவைகளுக்கெல்லாம் மூலமாக இருப்பது பாக்யராஜின் பாணிதான் என்று தெரிகிறது. வித்தியாசமான கதாபாத்திர அறிமுகம், கதை உடனேயே ஆரம்பித்துவிடுதல், பலப்பல விதமான சிக்கல்கள், இவையெல்லாம் புத்திசாலித்தனமாகத் தீருதல் என்பதுதான் அவரது திரைக்கதை பாணி. அதுவேதான் இப்போது பெருமளவில் பின்பற்றப்படுகிறது. நாம் முதலில் பார்த்த ஸிட் ஃபீல்டில் இருந்து பல திரைக்கதை ஆசான்களும் இதே வடிவைத்தான் வலியுறுத்துகிறார்கள் என்பதை சந்தேகமில்லாமல் சொல்லலாம். அந்த வகையில் பாக்யராஜின் திரைக்கதைப் பாணி தமிழில் மிக முக்கியமானது.

போலவே மணி ரத்னத்தின் திரைக்கதைகளும் தமிழில் மிகவும் முக்கியமானவை. ஹாலிவுட்டின் ஆக்ஷன் படங்களின் திரைக்கதைப் பாணியை அப்படியே தமிழுக்குக் கொண்டுவந்தவர் மணி ரத்னம். நாம் ஆரம்பத்தில் பார்த்த பல திரைக்கதை ஆசான்களும் சொல்லியிருக்கும் பாணியைக் கச்சிதமாகத் தமிழில் அறிமுகப்படுத்தினார். பாக்யராஜின் பாணி சற்றே தமிழுக்கு ஏற்றபடி புத்திசாலித்தனமாக வளைக்கப்பட்டிருக்கும். மணி ரத்னத்தின் பாணி, ஹாலிவுட்டில் பின்பற்றப்படும் 3 Act Structure என்ற வடிவைத் தமிழில் துல்லியமாகக் கொடுத்தது. அவரது ‘மௌன ராகம்’, ‘நாயகன்’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘அஞ்சலி’, ‘தளபதி’, ‘ரோஜா’, ‘பம்பாய்’, ‘தில்ஸே’, ‘அலைபாயுதே’, ’கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘குரு’ போன்ற படங்களிலெல்லாம் தெளிவான அறிமுகம், அதன் வாயிலாகவே கதை சொல்லப்பட்டுவிடுதல், கதாபாத்திரங்களுக்கு ஏற்படும் தலையாய பிரச்னை, அவை எப்படித் தீர்க்கப்படுகின்றன என்பதெல்லாம் மிகத்தெளிவாக எழுதப்பட்டிருக்கும் தன்மை உடையன. மணி ரத்னத்தின் இந்தத் திரைக்கதைகள் பதிப்பிக்கப்பட்டால் திரை ஆர்வலர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

மணி ரத்னத்தின் இந்தத் திரைக்கதைப் பாணி, பலரையும் பாதித்தது. இதன்விளைவாக கௌதம் வாசுதேவ் மேனன், ஜீவா, கே.வி. ஆனந்த், வெற்றிமாறன் போன்ற இளம் இயக்குநர்கள் சுவாரஸ்யமான, வேகமான திரைக்கதைகளை எழுதினார்கள். உலகப்படங்கள் இணையத்தின் வாயிலாக அனைவருக்கும் சென்று சேர்வதால், அவைகளைப் பார்த்தும் அவைகளின் திரைக்கதை வடிவங்களை வைத்தும் பல படங்கள் எழுதப்படுகின்றன.

எண்பதுகளில் எஸ்.பி.முத்துராமன், ராஜசேகர், மணிவண்ணன் போன்ற இயக்குநர்களையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். மிகவேகமான, சுவாரஸ்யமான படங்களைத் தொடர்ந்து கொடுத்தவர்கள் இவர்கள். குறிப்பாக மணிவண்ணன் பல்வேறு களன்களில் அமைந்த வித்தியாசமான படங்களை இயக்கினார். சத்யா மூவீஸ் கதை இலாகா என்றே ஒரு குழு அமர்ந்து, படங்களின் திரைக்கதையை முடிவு செய்த காலகட்டம் இது. இதுவும் எண்பதுகளின் படங்களின் வேகத்துக்கு ஒரு காரணம் (அதற்காக எண்பதுகளின் எல்லாப் படங்களுமே விறுவிறுப்பானவை என்று எண்ணிவிடவேண்டாம். அவைகளில் அரத மொக்கைகளும் உண்டு. ஆனாலும் பொதுவாக ஒப்பிடும்போது இதுதான் தமிழ் மசாலாக்களின் பொற்காலம்).

அதேபோல் எண்பதுகளில் திரைப்படக் கல்லூரியிலிருந்து ஆபாவாணனின் அணியினர் வெளிவந்தனர். தமிழில் பலரையும் திரும்பிப்பார்க்கவைத்த ‘ஊமை விழிகள்’ படம் அக்காலத்தில் ஒரு நல்ல முயற்சி. தமிழ்ப்படங்களில் இருந்து ஒதுங்கியிருந்த ரவிச்சந்திரன் வில்லனாக நடித்த படம். விஜயகாந்த்தின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

ஊமை விழிகளுக்குப் பிறகு ‘செந்தூரப்பூவே’, ‘இணைந்த கைகள்’, ‘கறுப்பு ரோஜா’ என்று ஆபாவாணன் படங்களை எடுத்தார். இவை அனைத்துமே ஆங்கிலப்படங்களுக்கு நிகரான உருவாக்கத்தைப் பெற்றிருந்தன.

தற்போதைய காலகட்டத்தை எடுத்துக்கொண்டால், குறும்படங்களின் பாதிப்பு பரவலாக இருக்கிறது. இவைகளின் வாயிலாகத் திரைப்படங்களுக்குள் வரும் இயக்குநர்களுக்கு உலக சினிமாவில் பரந்துபட்ட ரசனை இருக்கிறது. அதேபோல் க்வெண்டின் டாரண்டினோ, கை ரிட்சி, கெவின் ஸ்மித், மார்ட்டின் ஸ்கார்ஸேஸி போன்ற ஹாலிவுட் இயக்குநர்களின் பாதிப்பும் நிறைய இருக்கிறது. ஆரண்யகாண்டத்தை இயக்கிய குமாரராஜா, க்வெண்டின் டாரண்டினோவைப் போலவே இசையையும் காட்சிகளையும் கச்சிதமாகக் கலந்து எடுத்திருந்தது ஒரு உதாரணம். ஜிகர்தண்டாவையும் சொல்லலாம்.

எழுபதுகளிலும் எண்பதுகளிலும் திரைக்கதை வடிவம் என்பது சிலருக்கு மட்டுமே அனுபவபூர்வமாகத் தெரிந்திருந்தது. ஆனால் தற்போது இணையத்தின் அசுர வளர்ச்சியால் கிட்டத்தட்ட எல்லா ஹாலிவுட் படங்களின் திரைக்கதைகளுமே இணையத்தில் கிடைக்கின்றன. மட்டுமல்லாமல் ஹாலிவுட்டின் திரைக்கதை ஆசான்கள் எழுதிய திரைக்கதைப் புத்தகங்களும் தமிழில் தற்போது வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. ஸிட் ஃபீல்டின் புத்தகத்தை மையமாக வைத்துக்கொண்டு நான் தமிழில் ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறேன். இவற்றையெல்லாம் கவனிக்கையில், திரைக்கதைகள் பற்றிய விழிப்புணர்ச்சி அவசியம் தமிழில் தற்போது நன்றாகவே இருக்கிறது என்று சொல்லமுடியும். அது அவசியம் நல்லதுதான். அரையிருட்டில் திரையரங்கில் சென்று அமரும் திரைப்பட ரசிகன் ஒருவனுக்குத் தேவையானது என்ன? இரண்டரை மணிநேரம் அலுப்பில்லாமல் அந்தப் படம் அவனை மகிழ்விக்க வேண்டும். இவ்வளவு எளிமையான ஒரு அனுபவத்தைத் தரத்தான் இவையெல்லாம் உபயோகப்படுகின்றன. இத்தகைய திரைக்கதை விழிப்புணர்ச்சியின்மூலம் தரமான, வேகமான, சுவாரஸ்யமான வணிகப்படங்கள் வெளியாவது தமிழ்த்திரையுலகுக்கு நல்லது. தற்போது வெளியாகும் சில படங்களைக் கவனித்தால் (அட்டகத்தி, பீட்ஸா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், சூது கவ்வும், தெகிடி முதலிய குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் சுவாரஸ்யமான படங்கள்) அந்த நம்பிக்கை வலுப்படுகிறது. திரைக்கதையால்தான் ஒரு படத்தை மக்களின் மனதில் தங்கவைக்க முடியும். அந்தப் பாதையை நோக்கித் தமிழ்த் திரைப்படங்கள் ஆரோக்கியமாக நடைபோடத் துவங்கியிருப்பது நம்பிக்கையூட்டுகிறது.


பி.கு – இதில் பல விஷயங்கள் எனக்கே மனப்பாடமாகத் தெரியும். இன்னும் சில விஷயங்களைப் பற்றிய நினைவுகளைக் கூர்தீட்டிக்கொள்ளப் பெரிதும் உதவியவை – ராண்டார்கை ஹிந்துவில் எழுதிய கட்டுரைகள் மற்றும் ஃபில்ம் ந்யூஸ் ஆனந்தன் எழுதியிருக்கும் குறிப்புகள்.

Facebook Comments

Sharing is caring!

Related Posts

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

4 Comments

 1. Raghu P

  Good One. But expected to see some info about 90’s too. But its still good. Thanks!!

  Reply
 2. துணிவே துணை சின்ன வயசில் பார்த்தது இப்பவும் அந்த பய பாதிப்பு மனசில் மறையாமல் இருக்கிறது..

  Reply
 3. vinusuthan

  top notch! little disappointed not to have Chris Nolan in non – linear formulation!!!

  Reply
 4. Anbu

  சிறப்பான கட்டுரை
  ஆனால் இரண்டு மகேந்திரன்களை விட்டுவிட்டிர்களே ?

  Reply

Join the conversation