கருந்தேள் டைம்ஸ் 6 – Rajini, Cannes, Rahman, Poe etc..

by Rajesh April 30, 2015   Book Reviews

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

கடந்த டிஸம்பர் 2014ல் ஒரு பத்திரிக்கைக்காக அனுப்பிய கட்டுரை இது. இப்போது நமது தளத்தில் வெளியிடப்படுகிறது. பல்வேறு விஷயங்களைப் பற்றிய சின்னச்சின்ன டிட்பிட்ஸ் போல எழுதப்பட்ட கட்டுரை இது. ஒரே விஷயத்தை விரித்து எழுதாமல், இப்படி குட்டிக்குட்டியாக எழுதுவது எனக்குப் பிடித்திருந்தது. எனவே இங்கே வெளியிடுகிறேன்.


சமீபத்தில் நடந்து முடிந்த ஏழாவது பெங்களூர் சர்வதேசத் திரைப்பட விழாவில் பல நல்ல படங்கள் திரையிடப்பட்டாலும், சென்ற ஆண்டுடன் ஒப்பிட்டால் இது சற்றே மங்கல்தான். இருப்பினும், வழக்கமான திரைப்பட விழா அளும்புகளான பக்கத்தில் வந்து அமர்ந்துகொண்டு கண்டபடி பேசிக்கொண்டே இருக்கும் ஆர்வக்கோளாறுகள், படுபயங்கர சத்தத்துடன் பீதியைக் கிளப்பும் டெசிபலில் திடீரென குறட்டை விடும் நபர்கள் ஆகிய எல்லாவற்றையும் தாண்டி, Winter’s Sleep, Now or never, Timbuktu, Monument to Michael Jackson, உளிதவரு கண்டந்தே (கன்னடம்), A Street in Palermo, Vandal, Violette போன்ற நல்ல படங்கள் திரையிடப்பட்டன. இன்னும் ஏராளமான படங்கள் உண்டு என்றாலும், இந்த ஆண்டின் பல நல்ல படங்கள் இங்கு வரவில்லை. டிஸம்பர் பனிரண்டில் லிங்கா வெளியீடு இருந்ததால் அதற்கு முந்தைய நாளுடன் திரைப்பட விழா இனிதே முடிந்தது.

2014 கான் பட விழாவில் பாம் டோர் (Palme d’Or) விருது வாங்கியிருப்பது டர்க்கியைச் சேர்ந்த படமான விண்டர்’ஸ் ஸ்லீப். படத்தின் நீளம் 196 நிமிடங்கள். கான் வரலாற்றிலேயே இத்தனை நீளமான திரைப்படம் ஒன்றுக்கு விருது கொடுப்பது இதுதான் முதல்முறை. படத்தின் திரைக்கதையை எழுதியிருப்பது இயக்குநர் நூரி பில்கே ஜெய்லானும் (Nuri Bilge Ceylan என்ற பெயரை இப்படி உச்சரிப்பது சிறந்தது. டர்க்கியில் C என்பது J ஆகிவிடுகிறது) அவரது மனைவி எப்ரு ஜெய்லானும். இவரது சிறப்பம்சம் – இவரது கடைசி ஐந்து படங்களும் கான் படவிழாவில் ஏதேனும் ஒரு விருதைப் பெற்றிருக்கின்றன என்பதே. தனது கதைகளை ஆண்டன் செகாவின் கதைகளினால் கவரப்பட்டே எழுதுவதாகச் சொல்லியிருக்கிறார். டர்க்காவ்ஸ்கி, ஆந்த்தோனியோனி, யஸுஜிரோ ஓஸு போன்ற பிதாமர்களே இவருக்குப் பிடித்தமானவர்கள்.

ஜெய்லானின் விண்டர்’ஸ் ஸ்லீப், பெங்களூர் திரைவிழாவில் திரையிடப்பட்டது. படம் பார்க்கையிலேயே பலரும் எழுந்துபோவதைப் பார்க்கமுடிந்தது. காரணம் நமக்கு ஒரு மூன்றேகால் மணி நேரப் படத்தை இடைவேளை இல்லாமல் பார்க்கப் பொறுமை இல்லை. ஆனால் இந்தப் படத்தில் அருமையான வசனங்கள் மற்றும் நடிப்பின்மூலம் பல்வேறு உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டன. மனித உறவுகளின் சிக்கல் மற்றும் மனித மனத்தின் நிலையில்லாத் தன்மை அகியவற்றை இந்தப் படம் போலத் தெளிவாகக் காட்டும் படங்கள் குறைவுதான். தவிரவும் ஜெய்லான் ஒரு சிறந்த புகைப்பட நிபுணரும் கூட என்பதால் டர்க்கியின் மலைப்பிரதேசம் ஒன்றின் தனிமை இவரது கேமரா வாயிலாகப் படம் பார்ப்பவர்களைத் தாக்குகிறது. தவறவே விடக்கூடாத படங்களில் இது அவசியம் ஒன்று.

பெங்களூர் திரைப்பட விழா முடிந்த அடுத்த நாள் ஃபேம் லிடோ மாலின் எல்லாத் திரையரங்குகளிலும் லிங்காதான். இங்கே மட்டும் இல்லாமல் இந்தமுறை பெங்களூரில் எந்தப் பக்கம் திரும்பினாலும் லிங்காதான். லிங்காவுடன் அதே தேதியில் உலகம் முழுக்க வெளியான ஹாபிட் படத்தின் இறுதி பாகமான ‘Battle of Five Armies‘ படம் தியேட்டர் கிடைக்காமல் முழிபிதுங்கியதைக் காணமுடிந்தது. பீட்டர் ஜாக்ஸன் ஒருவேளை இந்தியாவில் பிறந்திருந்தால் லிங்காவுக்குப் பல வாரங்கள் பின்னால்தான் அவர் படத்தை வெளியிட்டிருப்பாரோ என்று எண்ண வைத்தது. இண்டர்னேஷனல் செலிப்ரிடிகளுக்கும் பீதியைக் கிளப்புவதுதான் ரஜினி ஸ்டைல் போலும்.


ஹாலிவுட்டின் ஏ.பி. நாகராஜனான ரிட்லி ஸ்காட்டின் சமீபத்திய படம் – Exodus: Gods and Kings – சில நாட்கள் முன்னர் வெளிவந்தது. க்ளாடியேட்டர் மூலமாக இவரை இந்தியாவின் பட்டிதொட்டியெங்கும் தெரியும் என்றாலும், ஏலியன் சீரீஸின் முதல் படம் இவரது கைவண்ணமே. அதன்பின் ப்ளேட் ரன்னர், தெல்மா & லூயிஸ், ப்ளாக் ரெய்ன், ஜி.ஐ. ஜேன் போன்ற படங்கள் இயக்கியிருக்கிறார். க்ளாடியேட்டருக்குப் பின்னர் ப்ளாக் ஹாக் டௌன், ராபின்ஹூட், Matchstick Men, A Good Year, ஹான்னிபல், கிங்க்டம் ஆஃப் ஹெவன், பாடி ஆஃப் லைஸ் போன்ற படங்களும் வந்திருக்கின்றன. இத்தனை படங்கள் இயக்கியிருந்தாலும், மார்ட்டின் ஸ்கார்ஸேஸி போலவோ க்வெண்டின் டாரண்டினோ போலவோ இவரது படங்களுக்கு ஒரு தனித்தன்மை இருக்காது (auteur theoryக்குள் எல்லாம் இப்போது போகவேண்டாம்). இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ப்ராமிதியஸ் என்ற படம் இயக்கினார்.

எக்ஸோடஸ் படத்தைப் பொறுத்தவரை, நமக்கெல்லாம் நன்கு தெரிந்த (மொட்டை யூல் ப்ரன்னர் நடித்த) பழைய டென் கமாண்ட்மெண்ட்ஸ் படத்தின் கதைதான் இதிலும். அதே மோஸஸின் கதை. கொஞ்சம் கூட வித்தியாசமில்லை. ஆனால் திரைக்கதையிலும் நடிப்பிலும் அந்தப் படத்துக்கு அருகே கூட வரமுடியாமல் இருக்கும் படம் இது. எனவே உலகம் முழுக்கவும் வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியிலும் கண்டபடி அடி வாங்கிக்கொண்டிருக்கிறது. ‘ரிட்லி ஸ்காட் இனி ரிடையர் ஆகிவிடலாம்’ என்ற பல கட்டுரைகள் உலகமெங்கும் எழுதப்படுகின்றன.

க்வெண்டின் டாரண்டினோ பலமுறை சொல்லும் கருத்தான, ‘வயதான இயக்குனனாக நான் இருக்க விரும்பவில்லை; எந்த இயக்குநருக்கும் அவரது சிருஷ்டித்தன்மை ஒரு கட்டத்தில் வற்றிவிடுகிறது. அதன்பின் இயல்பாக ரிடையர் ஆவதே நல்லது. மாறாக விடாப்பிடியாகப் படம் எடுத்துக்கொண்டிருந்தால் உலகம் உங்களைக் கேவலப்படுத்திவிடும்’ என்ற கருத்து ரிட்லி ஸ்காட்டின் விஷயத்தில் உண்மையாகிவிட்டது.


oldassassins

வீடியோகேம்களின் வரிசையில் தற்போது மிகப்பிரபலமாக விளங்குபவை யூபிஸாஃப்ட் நிறுவனத்தின் அஸாஸின்’ஸ் க்ரீட் கேம்கள். ஏறத்தாழ 2007ல் இருந்து ஒவ்வொரு வருடமும் ஒரு கேம் எப்படியும் வந்துவிடும். முதலில் அல்-தாய்ர் என்ற ஹீரோவில் இருந்து, பின்னர் எஸியோ என்ற ஹீரோவுக்கு வந்து, அதன்பின்னர் கான்னர் என்ற கதாபாத்திரத்துக்குத் தாவி, இப்போது எட்வர்ட் கென்வேயில் நிலைகொண்டு, இந்த மாதம் இரண்டு புது கேம்களை வெளியிட்டிருக்கிறது யூபிஸாஃப்ட். (வேலாயுதம் படத்தில் விஜய் போட்டுக்கொண்டு வருவாரே அந்த காஸ்ட்யூம் இந்த கேமினுடையதே). ஆரம்ப நான்கு பாகங்கள் (அல்-தாய்ர் மற்றும் எஸியோ பங்குபெற்றவை) அட்டகாசமாக இருக்க, அதன்பின் இந்த கேம்களின் சுவாரஸ்யம் மெல்லக் குறைந்துகொண்டு வருகிறது. பெரும்பாலும் ஒரே போன்ற மூவ்மெண்ட்கள்தான் காரணம். இதில், சமீபத்தில் ப்ளேஸ்டேஷன் 4க்காக அஸாஸின்’ஸ் க்ரீட்-யூனிடி என்ற கேமை வெளியிட்டது யூபிஸாஃப்ட். அந்த கேமில் ஆங்காங்கே கேமே நின்றுபோகும் அளவு தீவிரமான பிரச்னைகள் இருந்ததால் கேம் பிரியர்கள் வெறிகொண்டு இணையத்தில் தாக்க, யூபிஸாப்ஃட் படுவேகமாக அவைகளை சரிசெய்துகொண்டிருக்கிறது.

இந்தியாவில் இப்படிப்பட்ட வீடியோகேம்களுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உண்டு. பெங்களூரில் ஆண்டுதோறும் வீடியோகேம் போட்டிகள் நடத்தப்பட்டுப் பரிசு வழங்கப்படும். இந்தியாவில் ஏராளமாக ஆன்லைனில் வாங்கப்படுபவைகளில் இவையும் உண்டு. கேமில் உட்கார்ந்துவிட்டால் முற்றிலும் வேறு உலகத்துக்குள் நம்மைக் கொண்டு சென்று மெய்மறக்க வைப்பவை இவை. துல்லியமான க்ராஃபிக்ஸ், விறுவிறுப்பான கதை, அடிதடி ஆக்‌ஷன் ஆகியவை இவைகளின் சிறப்பம்சம். எனக்குப் பிடித்த சில கேம்கள் – God of War, Prince of Persia, Batman: Arkham series, Max Payne, Uncharted Series, Tomb Raider series ஆகியவை. நம்ம ஊர் A.R ரஹ்மானே அவ்வப்போது இப்படிப்பட்ட கேம்களை விளையாடுவது உண்டு என்ற செய்தி பல வருடங்களாக ஊடகங்களில் அவ்வப்போது கசிவதுண்டு. விரைவில் அவரை சந்திக்கும்போது அவருக்குப் பிடித்த கேம்களைப் பற்றிக் கேட்கவேண்டும். இசையைப் பற்றியே எப்போதும் பேசுவதை விட, இப்படிப்பட்ட விஷயங்களை ஆர்வத்துடன் பேசுவார் என்று நினைக்கிறேன்.


எட்கர் அலன் போ பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். 1809ல் பிறந்து, நாற்பதே வருடங்கள் வாழ்ந்து மறைந்த மனிதர். சிறுகதை எழுத்தாளர். கவிஞர். வறுமையில் வாடியவர். உலகின் துப்பறியும் கதைகளுக்கு இவரே பிதாமகர். பல்வேறு விதமான கதைகள் எழுதியிருந்தாலும் இவர் எழுதிய இருள்மை சூழ்ந்த சில கதைகள் பிரபலம். குறிப்பாக The Pit and the Pendulum, Murders in Rue Morgue, The Tell – Tale Heart போன்றவை. பல வருடங்கள் முன்னர் பள்ளியில் படித்தவர்களுக்கு இவரது ஒருசில கதைகள் நினைவிருக்கலாம். ஆங்கில துணைப்பாடங்களில் வந்திருக்கும்.

ஒரு அறையில் இவரது காதல் மனைவி விர்ஜீனியா கொடும் நோயில் படுத்திருக்க, பக்கத்து அறையில் அமர்ந்துகொண்டு மரணத்தையும் மரண பயத்தையும் அவைகளைப் பற்றிய எண்ணங்களையும் எண்ணிக்கொண்டு, ஒருவித மனப்பிறழ்வு நிலையில் அமர்ந்திருக்கும் எட்கர் எழுதிக்கொண்டிருப்பார். இவைதான் அவரது படைப்பாற்றலில் அவர் உச்சம் தொட்ட நாட்கள். அப்போது எழுதிய (ஜனவரி 1845) The Raven என்ற கவிதை இன்றும் உலகம் முழுக்கப் பிரபலம். இந்தச் சம்பவத்தைப் பற்றி யோசிக்கையில் மருத்துவமனையில் இருந்து அப்போதுதான் வீடு வந்திருந்த சுஜாதா, தன்னை மறந்த நிலையில் எழுதிய யவனிகா தொடரின் மூன்று அத்தியாயங்களைப் பற்றி, அவைதான் அந்தத் தொடரின் சிறந்த அத்தியாயங்கள் என்று சொன்னது நினைவு வரும். இது விகடனில் வெளிவந்தது. எழுத்தாளனின் ‘நான்’ என்ற எண்ணமே முற்றிலும் மறைந்த நிலையில், ஒருவிதப் பிறழ்வு நிலையில் எழுதப்பட்ட அந்த அத்தியாயங்களை மறுநாள் படித்தபோது, தனது இருப்பு பற்றியும், தன்னை அறியாமலேயே அந்த அத்தியாயங்களை எழுதிச்சென்றது யார் என்பது பற்றியும் கேள்விகள் எழுந்ததாக அவர் சொல்லியிருக்கிறார்.

தமிழில் மர்மக் கதைகளை எழுத விரும்புபவர்கள் எட்கர் அலன் போ விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தாலே போதுமானது. எனக்கு மிகப்பிடித்த எழுத்தாளர்களில் இவருக்கு ஒரு இடம் உண்டு.


எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றவர்கள் தொடர்ந்து எழுதிய காலகட்டம்தான் தமிழ் பல்ப் ஃபிக்‌ஷனின் பொற்காலம் என்பது என் அபிப்பிராயம். இப்போது ஒரு இலக்கிய நூலைப் படிக்கவேண்டும் என்றால் ஐம்பதுக்கும் அதிகமான நூல்கள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. தமிழில் இலக்கியத்துக்குக் குறைவே இல்லை. ஆனால் பல்ப் பிக்‌ஷன் படிக்கவேண்டும் என்றால் இப்போது எத்தனை தேடியும் சமகாலத்தியப் புத்தகங்கள் கிடைப்பது அரிதாகவே இருக்கிறது. எனவே இயல்பாகவே ஆங்கிலத்தின் பக்கம் தாவவேண்டி இருக்கிறது. இந்தியாவில் தற்போது சேதன் பகத், அமிஷ் த்ரிபாதி போன்றவர்களின் புத்தகங்களே அதிகம் விற்கின்றன. அல்லது வெளிநாட்டு எழுத்தாளர்களின் கதைகள். தமிழில் விரைவில் முந்தைய காலம் போல் பல்ப் ஃபிக்‌ஷன் அதிகம் எழுதப்படவேண்டும் என்பது என் ஆசை. அல்லது சுபா, பி.கே.பி போன்றோரின் க்ளாஸிக் நாவல்கள் அத்தனையும் மறுபடியும் பரவலாக மறுபதிப்பு செய்யப்படவேண்டும். அவர்களும் இப்போது திரைப்படங்களுக்குத் திரைக்கதையும் வசனமும் எழுதுவதால் அவர்களாலும் முன்புபோல் தீவிரமாக செயபல்பட முடிவதில்லை என்று தோன்றுகிறது.


அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தொலைக்காட்சி சீரீஸ்கள் மிகவும் பிரபலம். அங்கே தொலைக்காட்சி நாடகங்கள் இரண்டு வகைப்படுகின்றன. தினமும் ஒளிபரப்பப்படும் ஸோப்கள் (போல்ட் அண்ட் த ப்யூட்டிஃபுல் நினைவிருக்கிறதா?) மற்றும் வாரம் ஒரு எபிஸோட் ஒளிபரப்பப்படும் சீரீஸ்கள். இவற்றில் எக்கச்சக்கமான அட்டகாசமான தொடர்கள் உண்டு. இந்த வருடம் வந்த ட்ரூ டிடெக்டிவ், கடந்த சில வருடங்களாக வந்துகொண்டிருந்த டெக்ஸ்டர், பிபிஸியின் சூப்பர்ஸ்டார் தொடரான ஷெர்லக், அருமையான ஃபாண்டஸி தொடரான கேம் ஆஃப் த்ரோன்ஸ், ஃபார்கோ போன்றவை ஒரு சில நல்ல தொடர்கள். இவற்றில் கடந்த இரண்டு வருடங்களாக வெளிவந்துகொண்டிருக்கும் ஹானிபல் என்ற தொடர் குறிப்பிடத்தக்கது.

மனித மாமிசம் சாப்பிடும் டாக்டர் ஹானிபல் லெக்டரைப் பற்றி அனைவருக்கும் தெரியும். Silence of the Lambs படத்தில் ஆண்ட்டனி ஹாப்கின்ஸ் நடித்த மறக்கமுடியாத கதாபாத்திரம் அது. அந்தப் பாத்திரத்தை இப்போது இந்தத் தொடரின் மூலம் தொலைக்காட்சிக்குக் கொண்டுவந்துள்ளனர். ஹானிபலாக நடித்திருப்பவர் உலகின் சிறந்த நடிகர்களில் ஒருவரான மேட்ஸ் மிக்கெல்ஸன். டென்மார்க் நடிகர். பல விருதுகளை வாங்கியிருப்பவர். ஜேம்ஸ்பாண்ட் படமான காஸினோ ரொயால் படத்தின் வில்லன் என்றால் அனைவருக்கும் தெரியும். இந்தத் தொடரின் சிறப்பம்சம் இதன் ஆக்‌ஷன் அல்ல. மாறாக, கதாபாத்திரங்களுக்குள் நிலவும் வேறுபாடுகள், ஒருவர் இன்னொருவரை முந்தத் துடிப்பது போன்ற உளவியல் பிரச்னைகள்தான். படு விறுவிறுப்பாகச் சென்ற இந்தத் தொடரின் இரண்டாம் சீஸன் இந்த ஆண்டு முடிந்து, வரும் ஆண்டு மூன்றாம் சீஸனை அனைவரும் எதிர்நோக்கியுள்ளனர்.


When languages die

உலகின் மிக அரிய பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் அட்டகாசமான ம்யூஸியம் ஒன்றின்மேல் அணுகுண்டு போடப்பட்டால் எப்படி இருக்கும்? உலகின் அரிய மொழிகள் சிறுகச்சிறுக அழிவதைப்பற்றிய ஒரு கருத்து இது.

மொழி என்பது மனிதர்கள் தொடர்பு கொள்ள உதவும் இன்றியமையாத சாதனம். ‘மொழிகளைப் பற்றித் தெரிந்துகொள்வதால் அம்மொழிகளைப் பேசும் மனிதர்களின் குணங்களையும் தெரிந்துகொண்டுவிடமுடியும்’ என்பது நோம் சாம்ஸ்கியின் கூற்று. எக்கச்சக்கமான மொழிகள் உலகெங்கும் தினமும் அருகி வருகின்றன. ஒவ்வொரு பதினான்கு நாட்களுக்கும் உலகில் ஒரு மொழி அழிகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் மனிதர்கள், தங்களது அன்றாட அலுவல்களைப் பிறரிடம் விளக்கும் வேலையில்தான் மொழி துவங்குகிறது. உதாரணமாக, ரஷ்யாவின் துவா பிராந்தியத்தில் பேசப்படும் துவன் மொழியில் இயற்கையான பல சத்தங்கள் உண்டு. காரணம் அவர்களின் பிரதான வாழ்க்கை வேட்டையாடுவதிலேயே கழிகிறது. மாடு அசைபோடுவதைத் தமிழில் ‘அசை’ என்ற சத்தம் விளக்குகிறது. ஆங்கிலத்தில் ‘மஞ்ச்சிங்’ என்று சொல்வார்கள். ஆனால் அது சாப்பிடும்போது மஞ்ச்சிங் என்ற சத்தமா கேட்கிறது? துவன் மொழியில் இப்படிப்பட்ட அசலான சத்தங்கள் உண்டு. பொழியும் தண்ணீர், அசையும் இலைகள் போன்றவையெல்லாம் அந்த சத்தங்களாலேயே விளக்கப்படுகின்றன.

இதுபோல் உலகின் பல அருகிவரும் முக்கியமான மொழிகளைப் பற்றிய புத்தகமே When Languages Die. எழுதியவர் டேவிட் ஹாரிஸன். மேலே இருக்கும் பத்தி அதிலிருந்துதான் எடுக்கப்பட்டது. மொழியைப் பற்றிய கற்பிதங்களை எளிதில் இது உடைக்கிறது. நாடு, இனப்பற்று போன்ற எல்லாவற்றையும் தாண்டி, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பலவிதமான வாழ்க்கைமுறைகளையும் விளக்குவதுதான் மொழியின் பிரதான வேலை என்பதைப் பல எடுத்துக்காட்டுகளோடு விளக்கியிருக்கிறார் ஹாரிஸன். அவர்கள் உபயோகிக்கும் வார்த்தைகள், பிராணிகளுக்கும் செடி கொடிகளுக்கும் அவர்கள் வைக்கும் பெயர்கள், பருவகாலங்களைப் பற்றிய அவர்களின் அறிவு, அவர்களின் விஞ்ஞான வளர்ச்சி போன்றவைகளை வெளியுலகுக்குக்குச் சொல்லக்கூடிய முக்கியமான விஷயமாக அவர்களின் மொழியே இருக்கிறது. தனது வாழ்க்கையில் பனிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலக நாடுகளில் அலைந்து திரிந்து அழியும் மொழிகளையும் அவற்றை உபயோகப்படுத்துபவர்களையும் ஆவணப்படுத்தியிருக்கிறார் ஹாரிஸன்.

உலகின் ஒவ்வொரு குடிமகனும் படிக்கவேண்டிய புத்தகங்களில் இது மிகவும் முக்கியமானது என்றே சொல்வேன். அப்போதுதான் மொழியைப் பற்றிய பல உணர்ச்சிவசப்பட்ட கருத்துகள் உடைந்து, மொழிகளை ஏன் நாம் பாதுகாக்க வேண்டும் என்ற உண்மையான கருத்து வெளிவரும்.


திரைக்கதை எழுதுவது என்பது ஹாலிவுட்டிலும் பிற நாடுகளிலும் நன்கு பரிசோதிக்கப்பட்ட ஒரு கலை. அதைப்பற்றிய பல பிதாமகர்களின் புத்தகங்கள் உண்டு. ஸிட் ஃபீல்ட், ராபர்ட் மெக்கீ, க்ரிஸ்டோஃபர் வாக்லர், லிண்டா ஸெகர், Blake Snyder, ஜான் ட்ரூபி என்று ஆரம்பித்து நம்ம லிங்கா படத்தில் ராஜா லிங்கேஷ்வரன் ரயிலில் படித்துக் கொண்டிருப்பாரே ஜோஸஃப் கேம்ப்பெல் எழுதிய The Hero with a Thousand Faces என்று இதற்கு ஏராளமான புத்தகங்கள் உண்டு. இவைகளைப் படித்தால் ஒரு நல்ல திரைக்கதையின் கூறுகள் எவை என்று அறிந்துகொள்ளலாம். எந்த விஷயத்தையும் முதலில் நன்றாகப் புரிந்துகொண்டுவிட்டால் அதன்பின் அதில் நன்கு ஈடுபடலாம் தானே? அப்படித்தான் திரைக்கதையும்.

ஸிட் ஃபீல்டின் புத்தகத்தை வைத்துக்கொண்டு அவரது அனுமதியுடன் தமிழின் திரைக்கதைகளைப் பற்றி விரிவாக ஆராய்ந்து ‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ என்ற பெயரில் நானும் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். தொடர்ந்து இந்தத் திரைக்கதைப் பிதாமகர்களின் புத்தகங்களைத் தமிழில் என் வலைத்தளத்தில் எழுதி வருகிறேன். இதுபோன்ற புத்தகங்கள் மூலம் திரைத்துறையினர் மட்டும்தான் திரைக்கதை எழுத வேண்டும் என்ற நிலை மாறி, யார் வேண்டுமானாலும் நல்ல திரைக்கதை ஒன்றை எழுதிவிடமுடியும் என்ற நிலை வரவேண்டும் என்பதே என் ஆவல்.

தமிழில் திரைக்கதை பற்றிய விழிப்புணர்வு இப்போது குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களில் அவசியம் இருக்கிறது என்று சொல்லமுடியும். இது அப்படியே பெரிய பட்ஜெட் படங்களுக்கும் வந்தால், அவசியம் தமிழில் சுவாரஸ்யமான படங்கள் இன்னும் ஏராளமாக வர வாய்ப்புகள் அதிகம். பெரிய பட்ஜெட் படங்களில் நடிகர்கள், அவர்களுக்கான வசனங்கள், பஞ்ச்கள், காட்சிகள் என்பது மாறி, நடிகர்களுக்காகத் திரைக்கதை இல்லை – திரைக்கதைக்காகத்தான் நடிகர்கள் என்ற நிலை விரைவில் வரும் என்பது என் எதிர்பார்ப்பு.


வரும் ஆண்டு ஹாலிவுட்டில் வழக்கப்படி ஏராளமான மெகா பட்ஜெட் படங்கள் வர இருக்கின்றன. குறிப்பாக Avengers படத்தின் இரண்டாம் பாகம், அமேஸிங் ஸ்பைடர்மேனின் மூன்றாம் பாகம், க்வெண்டின் டாரண்டினோ இயக்கும் The Hateful Eight படம் ஆகியவை பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றன. ஹேட்ஃபுல் எய்ட்டின் திரைக்கதை சில மாதங்கள் முன்னர் இணையத்தில் கசியவிடப்பட்டதால் க்வெண்டின் எக்கச்சக்கக் கடுப்பில் இருந்தார். அந்தப் படத்தையே இயக்கமாட்டேன் என்றும் அறிவித்திருந்தார். ரசிகர்கள் இதைத் தாங்கமுடியாமல் நிர்ப்பந்திக்க, இப்போது படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கப்போகிறது.

இந்தத் திரைக்கதையின் விசேட அம்சம் என்ன தெரியுமா? மொத்தமே இரண்டே லொகேஷன்கள்தான் இதில் வருகின்றன. ஒரு பெரிய கோச்சு வண்டி மற்றும் ஒரு பழைய உணவு விடுதி ஆகியவையே அவை. கதையில் மொத்தம் எட்டு பாத்திரங்கள். ‘பௌண்ட்டி ஹண்டர்ஸ்’ என்று அழைக்கப்பட்ட குற்றவாளிகளை வேட்டையாடும் ஒரு நபர் ஒரு பெண் குற்றவாளியை ஒரு கோச்சு வண்டியில் பிடித்துக்கொண்டு வர, ஒவ்வொருவராக அதன்பின் அவன் சந்திக்கும் மனிதர்கள், அவர்களுக்குள்ளான பிரச்னைகள் என்று ஒரு நிமிடம் கூட அலுக்காத திரைக்கதை அது. இதன் க்ளைமேக்ஸை மட்டும் மாற்றியிருப்பதாக டாரண்டினோ இப்போது சொல்லியிருக்கிறார். இந்தப் படம்தான் வரும் ஆண்டில் நான் பெரிதும் எதிர்பார்க்கும் ஹாலிவுட் படம்.


 

Facebook Comments

Sharing is caring!

Related Posts

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

4 Comments

 1. Karthikeyan L

  Sir, Please review Uncharted Series….

  I’m Waiting…

  Reply
 2. venkat

  Hi Rajesh. I am a regular follower of your blog since last 2 years. i feel you are great fan of Marvel comics. You often say you review movies objectively not without any bias. Based on my interpretation of your various reviews, you seem to biased to certain directors like Quentin,Martin Scorcesse etc or Marvel series. Because i feel avengers part 1 is far better than age of ultron(not to mention that Captain America:Winter solider is the best marvel film post Avenger) bcoz it seemed age of ultron rushed without any strong character development or emotinal connect. I can’t remeber any memorable scenes except hulkbuster scene. But you have rated this movie higher than avenger part 1. I have seen your reviews for Interstellar(agreed it is not a great movie) where you have dissected each and every scene of the movie and tried to find plot holes,seeking explanation etc. Not to mention Man of Steel where you have completely rubbished the movie where atleast the first half is good. I am fan of your page ever since i came to know about your blog but this inconsistency bugs me. Can you please state your view on this

  Reply
  • மனிதன்

   ஏம்பா மேல கமன்ட் பண்ணியிருக்கிறவரே ராஜேஷ் தமிழில் எழுதுன பதிவுக்கு ஆங்கிலத்தில் கமன்ட் பண்றீங்க,.சரி இப்ப யாராவது உங்களிடம் ஆங்கிலத்தில் பேசினால் நீங்கள் தமிழில் பதிலளிப்பீர்களோ?தமிழில் எழுத எவ்வளவோ வசதிகள் வந்துள்ளன.இன்னும் நொண்டி சாக்கு சொல்லிகிட்டிருக்காம எழுத கத்துக்க.

   Reply
 3. மனிதன்

  ரஹ்மான் பல்பு வாங்குன கூவிய தலைவன் ,மலிங்கா,கை,ஒக்காமக்கா கண்மணி உள்ளிட்ட டப்பா இசை பற்றி எழுதுங்க அய்யா

  Reply

Join the conversation