Piku (2015) – Hindi

by Rajesh May 10, 2015   Hindi Reviews

Sharing is caring!

பாஸ்கோர் பானர்ஜீ என்ற எழுபது வயதுக் கிழவர், எப்போது பார்த்தாலும் தனக்கு எக்கச்சக்கமான வியாதிகள் வந்துவிடுமோ என்று புலம்பிக்கொண்டே இருப்பவர். ஆனால் நிஜத்தில் அவருக்கு எதுவுமே இல்லை. அவரைப் பார்த்துக்கொள்ள ஒரு வேலைக்காரன் உண்டு. பாஸ்கோருக்கு ஒரு மகள். பெயர் Piku. தில்லியில் ஒரு ஆர்க்கிடெக்ட். பாஸ்கோர் ஈகோ பிடித்த கிழவர். கூடவே, தன்னை கவனித்துக்கொள்ள எப்போதும் தன் மகள் தன்னுடனேயே இருக்கவேண்டும் என்று நினைப்பவர். இதையெல்லாம் விட, மலச்சிக்கலால் எப்போதும் அவதிப்படுபவர்.

பிகுவும் அவளது தந்தை பாஸ்கோரும் எப்போது பார்த்தாலும் சண்டை பிடித்துக்கொண்டே இருக்கிறார்கள். வேலையாட்கள் பாஸ்கோரின் வீட்டில் வேலை செய்யவே அஞ்சுகின்றனர். கடந்த ஓரிரண்டு மாதங்களிலேயே ஐந்து வேலையாட்கள் மாறியாயிற்று. பாஸ்கோரின் மனைவி இறந்துபோய்விட்டார். பாஸ்கோரின் மனைவிக்கு ஒரு தங்கை. பெயர் ச்சோபி (Chobi). இத்தகைய ஒரு தந்தையிடம் இருப்பதால் பிகுவும் தனது இயல்பான குணங்களைத் தொலைத்துவிட்டு எப்போதும் கோபத்துடனும் இயலாமையுடனுமே இருக்கிறாள். அவளது அலுவலகம் ஒரு டாக்ஸி நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டிருப்பதால் அதில்தான் தினமும் பிகு செல்ல நேர்கிறது. தந்தை பாஸ்கோருடன் தினமும் சண்டை பிடிப்பதாலும், தினமும் கழிவறையில் அவர் ஒரு மல்யுத்தமே செய்வதாலும் எப்போதுமே தாமதமாகவே அலுவலகம் செல்கிறாள் பிகு. இதனால் ட்ரைவர்களிடம் வேகமாகப் போகச்சொல்ல, கிட்டத்தட்ட தினந்தோறுமே விபத்துகள். இதனால் சிறுகச்சிறுக ஓட்டுநர்கள் பிகுவின் வீடு செல்லவேண்டும் என்றாலேயே பயந்து நடுங்குகின்றனர். இந்த டாக்ஸி நிறுவனத்தின் சொந்தக்காரர் ராணா சௌதரி. பிகு வேலை செய்யும் நிறுவனத்தின் முதலாளி சையத் அஃப்ரோஸின் நண்பர்.

இவர்கள் கொல்காதாவுக்கு ஒரு வேலையாகச் செல்ல நேர்கிறது. விமானமோ ட்ரெய்னோ வேண்டாம் என்று பிடிவாதம் பிடிக்கிறார் பாஸ்கோர். எனவே டாக்ஸி. பிகுவின் வீட்டுக்கு யாருமே வரச் சம்மதிக்காததால் தானே வண்டியை எடுக்கிறார் ராணா. இதுதான் பிகுவின் கதைக்களம். இந்தக் களத்தில் இரண்டு மணி நேரத்தில் உணர்வுகளின் வாயிலாகச் சொல்லப்படும் கதையே பிகு.

பிகுவின் மைய இழை, பாஸ்கோருக்கும் பிகுவுக்கும் இருக்கும் உறவு என்பது இதற்குள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அதைவிடவும், மலச்சிக்கல் என்ற அம்சமே படத்தின் ஹைலைட். பாஸ்கோரின் வாழ்க்கையின் நோக்கம் முழுதுமே, என்றாவது ஒரு நாள் காலையிலாவது நிம்மதியாக சரக்கை இறக்கி வைக்கமாட்டோமா என்பதிலேயேதான் உள்ளது. இதனாலேயே அவ்வப்போது அலுவலகத்தில் மீட்டிங்கில் இருக்கும் பிகுவை, காலையில் எப்படியெல்லாம் போனது என்று விலாவாரியாக செய்திகள் அனுப்பி சாவடிக்கிறார் பாஸ்கோர். தினமும் இப்படி அவர் செய்வதால் பிறரின் மீது எரிச்சல் அடைகிறாள் பிகு. வயதும் ஆகிக்கொண்டே போகிறது. தந்தை இவளுக்குப் பையன் பார்ப்பதாகவே தெரிவதில்லை. இவளது கோபமான சுபாவத்தால் பழகுபவர்களும் இவளுடன் மேலோட்டமாகவே பழகுகின்றனர்.

மகளின்மீது பொஸஸிவ்வாக (சுயநலத்தால்) இருக்கும் பாஸ்கோராக அமிதாப். இப்போதெல்லாம் அடிக்கடி வித்தியாசமான கதாபாத்திரங்களில் அவர் நடிப்பதால், இந்தப் பாத்திரத்தை விசேஷமாகப் பாராட்டத் தோன்றவில்லை. அவரது வழக்கமான நல்ல நடிப்பையே இதிலும் நல்கியிருக்கிறார். தினமும் காலையில் கழிவறையில் இருந்து வரும்போதெல்லாம் முகத்தை சுளித்துக்கொண்டே வருவது, பெண்ணுடன் யாரேனும் ஆடவன் பேசினால், ‘இவள் ஒன்றும் விர்ஜின் இல்லை தெரியுமா’ என்றே சொல்லி அவனைத் துரத்துவது, வேலைக்காரர்களை மிரட்டுவது, தனக்கென்று ஒரு பார்வையை வைத்துக்கொண்டு, தன்னுடன் அட்ஜஸ்ட் செய்துகொள்ளாதவர்களை எடுத்தெறிந்து பேசுவது, அவர்கள் பதிலுக்குக் கத்தினால் சைலண்ட்டாக வழிவது என்று இவர்தான் படம் முழுக்கப் பிரமாதமாக நடித்துள்ளார். இவருக்கென்றே படத்தில் ஜாலியான வசனங்களும் உண்டு. இவரது மனைவியின் தங்கையான ச்சோபியிடம் பாஸ்கோர் தனது இறந்துபோன மனைவி பற்றிப் பேசும் வசனங்கள் உதாரணம். எப்போதாவது மதுபானம் அருந்தும் பாஸ்கோர், அப்படி அருந்திவிட்டால் ஆடும் நடனம் அவருக்கே உரிய உடல்மொழியில் வெளிப்படுவது அமிதாப்பின் நடிப்புக்கு இன்னொரு உதாரணம். ‘அமிதாப் பச்சன்’ என்றதுமே நம் மனதில் தோன்றும் கம்பீரமான நடிகர் இப்படத்தில் இல்லவே இல்லை. தளர்ந்துபோனாலும் தனக்கென்று ஒரு பிடிவாதம் உடைய பாஸ்கோர் என்ற கிழவர்தான் நடித்திருக்கிறார். சின்னச்சின்ன விஷயங்களிலெல்லாம் பிரத்யேகமான உடல்மொழியுடன் நடித்திருக்கிறார் அமிதாப். அவசியம் இது அவரது குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்று.

பிகுவாக நடித்திருக்கும் தீபிகா படுகோனேவும் அப்படியே. எனக்கு தீபிகாவைக் கண்டாலே அலர்ஜி. காரணம் இதுவரையில் மிகக்குறைவான நல்ல படங்களில்தான் நடித்திருக்கிறார். முதன்முறையாக தீபிகாவைப் பிடித்தது இந்தப் படத்தில்தான். எப்போதுமே கடுகடுவென்று உலவும் கதாபாத்திரம். தந்தையுடன் ஆயிரம் சிக்கல்கள் இருந்தாலும், அவர் தனியே சைக்கிளை எடுத்துக்கொண்டு சுற்றும்போது பதைபதைப்புடன் உறவினர்களிடம் அவரைத் திட்டும்போதே தனக்காகவும் கழிவிரக்கம் கொள்ளும் பெண். பாஸ்கோர் போல ஒரு தொல்லையை வைத்துக்கொண்டு வாழ்க்கையை சந்திக்கும் பெண். இவளது வாழ்க்கையில் செக்ஸ் என்பது just ஒரு need மட்டுமே. அதை ஒரு காட்சியில் மிகவும் இயல்பாக சொல்லிச்செல்கிறாள் பிகு. பாஸ்கோர் அவளைத் திருமணம் செய்ய விடமாட்டார். ஆகையால்தான் செக்ஸ் ஒரு needஆக மாறுகிறது.

இர்ஃபான் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது? இந்தியாவின் நல்ல நடிகர்களில் ஒருவர். பாஸ்கோரின் குணத்தைப் பற்றி அறிந்ததும், அவரை திடீரென அதட்டுவது, பின்னர் இயல்பாகக் கழிவறைக்குச் செல்வதைப் பற்றிய பாடம் எடுப்பது (படம் வரைந்து பாகம் குறிப்பது), மிக மெதுவாக பிகுவின்மேல் ஈர்க்கப்படுவது, அவளிடம் பேச விரும்புவது, அவளுடன் இருக்கும் தருணங்களில் மெலிதாகப் புன்னகைத்து, அந்தத் தருணங்களை விரும்புவது என்று இர்ஃபானுக்கும் ஸ்கோர் செய்யப் பல காட்சிகள் உள்ளன. கிட்டத்தட்டப் படம் முடிவதற்குச் சற்று முன்னால் தனது தந்தை இறந்ததைப் பற்றி பாஸ்கோரிடம் இவர் சொல்வதையும், அதற்கு பாஸ்கோரின் கோபமான பதிலையும் பார்த்தாலேயே இவர் அமிதாப்புடன் போட்டி போட்டு நடித்திருப்பதை உணரலாம்.

முப்பது வருடங்களுக்கு முன்னர் அமிதாப்புடன் ஹீரோயினாக நடித்த மௌஸுமி சாட்டர்ஜி இப்படத்தில் அவருடைய மனைவியின் தங்கை. ஜாலியாக வோட்கா அருந்திக்கொண்டே பாஸ்கோரிடம் ‘நீங்கள் மெனோபாஸை அடைந்துவிட்டீர்கள்.. உங்கள் குணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்’ என்று கிண்டல் செய்கிறார். பிகுவுக்குத் தேவையான அன்பு, இவர்மூலம் அவ்வப்போது அவளுக்குக் கிடைக்கிறது.

பிகு, ஒரு சராசரி ஹிந்திப் படம் அல்ல. ஆனால் அதே சமயம், போஸ்டர்கள், ட்ரெய்லர்களில் சொல்லப்படுவதுபோல ஒரு feel good படமும் அல்ல. இது சற்றே மெதுவாக நகரும் ஒரு நல்ல படம். இயல்பாக நம் வாழ்க்கையில் நடப்பதுபோலவே காட்சிகள் உள்ள படம். ‘மலச்சிக்கல்’ என்பதையே மையமாக வைத்து, ஒவ்வொரு காட்சியிலும் அதை அடிக்கடி உச்சரித்து, படம் முழுக்கவே மலச்சிக்கல்தான் ஹீரோவோ என்று நம்மை யோசிக்க வைக்கும்படிப் படம் எடுத்திருந்தாலும், அதில் எங்குமே அருவறுக்கத்தக்க விவரிப்புகள் இல்லை. மாறாக, நம்மைச் சிரிக்க வைக்கும் பல வசனங்கள் மூலம் வித்தியாசமான அனுபவத்தை ஷுஜித் சர்க்கார் அளிக்கிறார். விக்கி டோனரில் Sperm. இதில் மலச்சிக்கல்.

இந்தப் படம் வருவதற்குச் சில நாட்கள் முன்னர் தொலைக்காட்சிப் பேட்டிகளிலும் பத்திரிக்கைகளிலும் இது ஒரு ஹ்ருஷிகேஷ் முகர்ஜி ஃபீல் கொடுக்கக்கூடியது என்று சொல்லிவந்தனர். அது தவறு என்பதைப் படம் பார்த்துத் தெரிந்துகொண்டேன். ஹ்ருஷிகேஷ் முகர்ஜி எனக்கு ஹிந்தியில் மிகமிகப் பிடித்தமான இயக்குநர். பவர்ச்சி (தமிழில் மு.க முத்து நடித்து சமையல்காரன் என்ற பெயரில் வந்தது), கட்டா மீட்டா, அபிமான், கோல்மால் (தமிழில் தில்லுமுல்லு), ஆனந்த், Guddi, சுப்கே சுப்கே (இதுதான் அமிதாப் நடித்த மிகச்சிறந்த நகைச்சுவைப் படம் என்பது என் கருத்து), அனாடி (ராஜ் கபூர் ஹீரோ) என்று ஏராளமான ஹிட்கள் கொடுத்திருக்கிறார்.1957 முதல் 1998 வரை படங்கள் இயக்கியவர். அவரது படங்களில் நகைச்சுவை ஒரு மெல்லிய இழையாகப் படம் முழுதும் வியாபித்திருக்கும். மிகச்சிறந்த feel good படங்கள் பலவற்றை எடுத்தவர். அவருக்கும் இந்தப் படத்துக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை. பிகு சற்றே மெதுவான, இயல்பான ஒரு படம்தான்.

‘நல்ல படம் பார்க்கவேண்டும்; அது எப்படி இருந்தாலும் எனக்கு ஓகே’ என்பவர்கள் தவறாமல் பார்க்கவேண்டிய படம் இது. சப்டைட்டில்கள் போடும் திரையரங்குகளில் பாருங்கள். இப்படம் அவசியம் உங்களைத் திருப்திப்படுத்தும்.

பி.கு – இதில் அமிதாப் நடித்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. படம் முழுக்க ‘எனக்கு டாய்லெட்டே வரவில்லை’ என்று எப்போதும் முக்கி முனகிக்கொண்டு, தொப்பையைத் தள்ளிக்கொண்டிருக்கும் ஒரு பாத்திரத்தில் தமிழில் யாராவது நடிப்பார்களா? அப்படி நடிக்க முன்வந்தால் அவசியம் தமிழ் சினிமா இன்னும் ஒரு பெரிய பாய்ச்சல் எடுக்கும். ஹிந்திக்கும் தமிழுக்கும் இத்தனை பெரிய வித்தியாசம் இருக்கிறது.

Facebook Comments

Sharing is caring!

fb Comments

comments

  Comments

3 Comments

 1. siva

  May be kamal or vikram may remake it.

  Reply
 2. Maybe Naasser can do this role! He is a very good actor. I loved the movie. As you say, this is a slow but good movie. I could get the tickets for a noon show on Thursday and I had to book for it on the previous Saturday. Repeat crowd at Sathyam.

  Deepika is slowly improving, I thought earlier but this is a big leap for her. No make up for Deepika, Irfan or Amitabh. Still, their acting has obscured their ‘actor’ label. Beautiful movie.

  I always give importance to your review. I am reading this after seeing the movie. Just read a couple of lines in the beginning and went to the movie. Thank you.

  Reply
 3. இனிய தோழருக்கு,

  இந்திரா பார்த்தசாரதியின் ‘மழை’ நாடகம் வாசித்திருக்கிறீர்களா..? வாசியுங்களேன்.. இந்தப் படத்திற்கும் அந்த நாடகத்திற்கும் தொடர்பு இருக்கு..

  தமிழ் சினிமாக்காரர்களுக்கு வாசிப்பு பழக்கம் இல்லை என்பது வெளிப்பட்டுப் போகும்.

  Reply

Join the conversation