Crimson Peak (2015) – English

by Rajesh October 20, 2015   English films

Sharing is caring!

ஹாரர் படங்களில் Gothic Horror என்ற வகை உண்டு. பழங்கால ஹாரர் நாவல்களை அடியொற்றிய வகையே இது. இதன்படி, பயமூட்டும் சங்கதிகள், காதல் என்ற அம்சத்தோடு கலந்து இருக்கும். உதாரணமாக, ட்ராகுலா கதையின் ஒரிஜினல் வடிவத்தை நீங்கள் படித்திருந்தால், அது காதிக் ஹாரர். அதேபோல, ஃப்ராங்கென்ஸ்டைன் கதையை நீங்கள் படித்திருந்தால் அது காதிக் ஹாரர். இது ஐரோப்பிய, அமெரிக்கக் கதைகளில்தான் மிக அதிகமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. பிரபல இயக்குநர் வெர்னர் ஹெர்ஸாக் இயக்கிய ‘ நாஸ்ஃபெராட்டூ த வாம்பையர்’ (Nosferatu the Vampyre) என்ற படம் இந்த வகையைச் சேர்ந்தது. இது ட்ராகுலா கதையை ஒட்டி எடுக்கப்பட்ட படம்.

எனவே, கியர்மோ டெல் டோரோ இயக்கியுள்ள க்ரிம்ஸன் பீக், அந்த வகையைச் சேர்ந்த படமே. இதில் சந்தேகமே வேண்டாம். பிற ஹாரர் படங்களுக்கும் இந்த காதிக் ஹாரர் படங்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவெனில், காதிக் ஹாரரில் ஆடியன்ஸை திடுக்கென்று பயப்பட வைக்கும் அம்சங்கள் இருக்காது. மெல்ல மெல்ல, கதையில் உள்ள திகிலூட்டும் அம்சங்களை ஆடியன்ஸின் முன் விரித்து வைத்து, ஒவ்வொரு காட்சியாக அவர்களுக்குக் கதையை விளக்கிச் சொல்லும் படங்களே காதிக் ஹாரர் படங்கள்.

ஆனால் இவற்றில் உள்ள பெரிய பிரச்னை என்னவென்றால், இவை பண்டைய காலத்துப் படங்கள். தற்காலத்திய படங்கள் அல்ல. ஏனெனில், காதிக் ஹாரர் genreல் அப்படிப்பட்ட கதைகளே இதுவரை எழுதப்பட்டுள்ளன. The Shining, The Ring, Insidious போன்ற படங்கள் வெளிவரும் இக்காலகட்டத்தில் இந்த காதிக் ஹாரர் படங்கள் துளிக்கூட எடுபடாது. ஏனெனில் அவற்றில் இப்படங்கள் போல ஆடியன்ஸை பயமுறுத்தும் அம்சங்கள் இருக்காது. கதையை நம்பியே எடுக்கப்படும் படங்களாகவே காதிக் ஹாரர் படங்கள் உள்ளன.

கியர்மோ டெல் டோரோவின் க்ரிம்ஸன் பீக் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தபோது, இப்படத்தில் புதிதாக ஏதேனும் அம்சங்கள் இடம்பெற்றிருக்குமோ என்ற ஆர்வம் இருந்தது. காரணம், அப்படிப்பட்ட அம்சங்கள் இருந்தால் மட்டுமே ஒரு காதிக் ஹாரர் படம் தற்போது படம் பார்க்கும் ஆடியன்ஸைக் கவரும். ஆனால், அப்படிப்பட்ட புதிதாந அம்சங்கள் எதுவுமே இல்லாமல், படம் பார்க்கும் ஆடியன்ஸைக் கதற அடித்து, அலுப்பின் உச்சத்தில் கொண்டுபோய் சாகடிக்கும் படம்தான் க்ரிம்ஸன் பீக்.

மிகமிகத் தட்டையான கதை. கொஞ்சம் கூட சுவாரஸ்யம் அளிக்காத கதாபாத்திரங்கள். ஒரு நிமிடம் கூட நம்மைக் கவராத திரைக்கதை. புதிதாக எந்த அம்சமும் இல்லாமல், தேமே என்று வரும் பேய்கள் என்று, ட்ராகுலா படத்தையே லேசாகப் பட்டி தட்டி எடுத்திருக்கிறார் கியர்மோ. இதனால் படத்தின் ஒரு காட்சியைக் கூட நம்மால் பார்த்து ரசிக்க முடிவதில்லை. படம் எப்போது முடியும் என்ற எண்ணத்திலேயே ஒண்ணரை மணி நேரமும் அமர்ந்திருந்தால் எப்படி இருக்கும்? அதுதான் இந்தப் படம் நமக்கு அளிக்கும் அனுபவம்.

அறுபதுகளிலும் ஐம்பதுகளிலும் மட்டுமே எடுபடும் கதை இது. அக்காலகட்டத்தில்தான் காதிக் ஹாரர் படங்கள் எடுக்கப்பட்டிருக்கவேண்டும். திரைக்கதைகளில் பல்வேறு பரிசோதனைகள் நடைபெறும் நம் காலத்தில், ஒரு துளிக்கூடப் புதுமை இல்லாமல் பண்டைய காலத்தில் எடுக்கப்படவேண்டிய படம் ஒன்றை எடுத்து ஆடியன்ஸின் கழுத்தை அறுக்கும் வேலையை கியர்மோ கச்சிதமாக இப்படத்தின் மூலம் செய்திருக்கிறார்.

உதாரணமாக, நான் பெங்களூரில் படம் பார்த்த திரையரங்கில் வெறும் ஐந்தே பேர். அந்த ஐவரில் நால்வர் இடைவேளை முடிந்த சில கணங்களில் காலி. இறுதிவரை அமர்ந்து படம் பார்த்தது நான் மட்டுமே.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை விமர்சனம் எழுதி என் நேரத்தை வீணடிக்க நான் தயாரில்லை. இந்தப் படத்தை இதை மீறி நீங்கள் பார்த்தால் அது உங்கள் விதி. கியர்மோ எடுத்த படங்களிலேயே அரத, காட்டுமொக்கை இதுதான் என்பது என் கருத்து.

Sharing is caring!

Related Posts

fb Comments

comments

  Comments

6 Comments

 1. Aksayan

  டெரோவின் முதல் மொக்கை
  Bridge of spies விமர்சனம் எப்போது?

  Reply
 2. நல்லது இனிமே கோதிக் ஹாரர்ன்னாலே எஸ்கேப் ஆய்டுறேன் .. எனக்கு திகில் கத்தி ரத்தம் (படம்) பார்க்காமல் தூக்கம் வராது. ரெட் ரைடிங் ஹூட் அப்படின்னு ஒரு படம் பார்த்தென் .. அதுவும் எனக்கு மொக்கையாக தான் தெரிந்தது.. தொன்னூறுகளில் வந்த ஸ்லீபி ஹாலோ எவ்வளவோ தேவலாம் போல

  Reply
 3. அதாவது, நீங்க எழுதினா அந்த படம் ஒரு நல்ல படம்-ன்ற மன நிலைல நான் இருக்கேன்.
  இந்த மாதிரியான படங்கள பார்த்தா, மூஞ்சிபுத்தகத்துல காறித் துப்பிட்டுங்க… அதுவே போதும். 🙂

  Reply
 4. RAJKUMAR

  what reason of you not review the walk 3D movie

  Reply
 5. Kesavan Ela

  என்னாது?
  கியர்மோ ஏமாத்திட்டாரா ??
  மறுபடியும் Pan’s Labyrinth மாதிரி வர்றதுக்கு அறிகுறி ஏதாவது இருக்கா தல???
  இல்ல, மொத்தமா கடைய மூடற நிலைமையா????

  Reply
 6. D.Karthikeyan

  வர வர உங்கள் விமர்சனங்கள் எந்த ரசனை இன்றி தட்டையாகிட்டே போகுது, கவனம் சார், உங்கள் ரசனையான எழுத்துக்களே உங்களை தொடர செய்தது. மனதை கவராததை எழுதி ஏன் உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்கிரீர்கள். நீங்கள் எங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டிய அற்புதங்களுக்காக காத்திருக்கிறோம்

  Reply

Join the conversation