வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 9

by Rajesh November 24, 2015   Alien series

Sharing is caring!

இதுவரை எழுதப்பட்ட இத்தொடரின் முந்தைய கட்டுரைகளைக் கீழே படிக்கலாம்.

வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும்


சென்ற கட்டுரையில், பிரி ரேய்ஸ் வரைபடங்களைக் குறித்த மர்மங்களைப் பார்த்தோம். இதைப்போன்ற இன்னொரு மர்மத்துடன் இந்தக் கட்டுரையைத் தொடங்குவோம்.

பூமிக்கு வெகு அருகே இருக்கும் சந்திரனில் நீய்ல் ஆம்ஸ்ட்ராங் இறங்கியது ஒரு டுபாக்கூர் நிகழ்வு என்று உலகெங்கும் உள்ள இணைய ஆர்வலர்களிடையே பல்லாண்டுகாலமாக ஒரு விவாதம் ஓடிக்கொண்டிருப்பது நம்மில் பலருக்குத் தெரியும். இதற்குக் காரணமாக அவர்கள் சொல்லும் விஷயங்களைக் கீழ்க்கண்டபடி பிரிக்கலாம்.

1. இதுவரை அமெரிக்கா நிகழ்த்திய ஆறு manned மூன் லாண்டிங் மிஷன்களில் முதலில் நிகழ்த்தப்பட்ட சில மிஷன்கள் போலி. இறுதியாக நிகழ்த்தப்பட்ட சிலவே உண்மை (அப்போலோ வரிசையில் 14 அல்லது 15)

2. ஆறு மூன் லாண்டிங் மிஷன்களுமே போலி

3.அமெரிக்க அஸ்ட்ரோநாட்கள் சந்திரனில் இறங்கியது உண்மை. ஆனால் பிற நாடுகள் இவற்றில் இருந்து கற்றுக்கொண்டு தங்களை முன்னேற்றிக்கொள்வதைத் தடுப்பதற்காக, போலியான புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. இதனால்தான் இன்றும் இப்புகைப்படங்களைப் பார்த்துவிட்டுப் பலரும் இவை போலி என்றும் சந்திரனில் யாருமே இன்னும் கால் வைக்கவில்லை என்றும் சொல்கின்றனர்.

4. சந்திரனில் இறங்கியது உண்மை. ஆனால் அங்கே சந்திரனின் இருண்ட பக்கத்தில் மாபெரும் ஏலியன் காலனிகள் இருக்கின்றன. அவற்றில் இருந்து வெளிவந்த ஏலியன்கள், அமெரிக்க அஸ்ட்ரோநாட்களைக் கடுமையாக மிரட்டி, திரும்பிப்போகச் சொல்லிவிட்டன. இதனால்தான் எழுபதுகளின் துவக்கத்துக்குப் பின்னர் இன்றும் அமெரிக்கா சந்திரனுக்கு எந்த அஸ்ட்ரோநாட்டையும் அனுப்பவில்லை.

ஆனால், இன்றைய தேதியில் இத்தகைய தியரிகள் அத்தனையுமே மறுக்கப்பட்டுவிட்டன. நாஸா, சந்திரனில் இன்றும் இருக்கும் அமெரிக்க ஆதாரங்களைத் துல்லியமான புகைப்படங்களாக எடுத்து வெளியிட்டிருக்கிறது (ஆனால் இவையும் போலி என்று இன்றுமே விவாதங்கள் நடந்தபடியே உள்ளன என்பதுதான் பிரச்னை).

நமது கட்டுரைக்கு, சந்திரனில் ஆஸ்ட்ரொநாட்கள் இறங்கினார்களா இல்லையா என்பது முக்கியமான தகவல் இல்லை. மேலே உள்ள பாயிண்ட்களில், பாயிண்ட் #4 தான் நமக்கு முக்கியம். அதைப்பற்றித்தான் இக்கட்டுரையில் விரிவாகப் பார்க்கப்போகிறோம்.

இப்போது நாம் பார்க்கப்போகும் தகவல்கள் அனைத்துமே கான்ஸ்பிரஸி தியரிகளாக (உறுதிப்படுத்தப்படாத ஹேஷ்யங்கள் – சுஜாதா பாஷையில்) மட்டுமே உலா வருகின்றன. இதுவரை எந்த அரசாங்கமும் இதை உறுதிப்படுத்தவில்லை (Obviously).

மில்டன் வில்லியம் கூப்பர் (Milton William Cooper) என்று ஒரு கான்ஸ்பிரஸி தியரிஸ்ட் இருந்தார்.  அமெரிக்கக் கப்பல் படையில் பணிபுரிந்தவர். இரண்டு மெடல்களும் வாங்கியுள்ளார். அவரது பிரபலமான புத்தகம் –  Behold a Pale Horse. இந்தப் புத்தகத்தில், பல கான்ஸ்பிரஸி தியரிகளை அவர் எழுதியிருக்கிறார். அவற்றில் முக்கியமானவை:

1. இல்யூமினாட்டி அமைப்பினர் அமெரிக்கா மீது தொடுக்கும் யுத்தம் – இந்த விபரமான அத்தியாயத்தில், எப்படியெல்லாம் அமெரிக்கா மீது இல்யூமினாட்டி அமைப்பினர் ஆதிக்கம் செலுத்தத் திட்டம் வகுத்துள்ளனர் என்பது இருக்கிறது (இல்யூமினாட்டி அமைப்பையும், ஃப்ரீமேஸன்ஸ், scientology பற்றியும் விபரமாக விரைவில் இதே தொடரில் பார்க்கலாம்).

2. ஏலியன்கள் – ஜனவரி 1947ல் இருந்து டிசம்பர் 1952 வரை, 16 ஏலியன் விமானங்கள் உலகெங்கும் விழுந்து நொறுங்கியுள்ளன. 65 ஏலியன் உடல்களும், ஒரு உயிருள்ள ஏலியனும் கண்டுபிடிக்கப்பட்டனர்.  இதனை ஆராய ஒரு ரகசிய அரசாங்கமே அமெரிக்காவினால் உருவாக்கப்பட்டது. இவர்கள் பின்னர் பல பரிந்துரைகளைச் செய்தனர். அவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

3. Area 51 என்று அழைக்கப்ப்டும் இடத்தின் புகைப்படங்கள் – இவற்றில் ஏலியன்களின் விமானங்கள்/தளங்கள் கூப்பரால் சுட்டிக்காட்டப்படுகின்றன.

4. எய்ட்ஸ் என்னது செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு நோய். கறுப்பின மக்கள், ஸ்பானிஷ் மக்கள் மற்றும் Homosexuals ஆகியவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க உருவாக்கப்பட்ட ஒரு நோய் இது.

5. கென்னடியின் கொலை – கென்னடியின் ட்ரைவராக இருந்த வில்லியம் க்ரீர் (William Greer) தான் கென்னடியை சுட்டுக்கொன்றவர். கூப்பருக்குக் கிடைத்த ஒரு வீடியோவின்படி, க்ரீர் இருமுறை கென்னடியை திரும்பிப் பார்க்கிறார். முதல்முறை கென்னடியின் நிலையை அறியவும், இரண்டாம் முறை கென்னடியை சுடவும்தான் அவர் திரும்பிப் பார்த்தார் என்பது கூப்பரின் தியரி. கூப்பர் கென்னடியைச் சுட உபயோகப்படுத்தியது, ஏலியன்களால் உருவாக்கப்பட்ட ஒரு விசேடமான துப்பாக்கி போன்ற சாதனம். கென்னடி ஏன் சுடப்பட்டார்? ஏலியன்களுக்கும் அமெரிக்க அரசாங்கத்துக்கும் இருந்த உறவைப்பற்றிப் பகிரங்கப்படுத்த கென்னடி முடிவுசெய்ததே காரணம் என்பது கூப்பரின் முடிவு.

இந்தப் புத்தகத்தில் இன்னும் பல ’ஆவணங்கள்’ கூப்பரால் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைப் படித்தால் கட்டாயம் உங்களின் தலையும் சுற்றும்.  புத்தகத்தை இணையத்தில் டௌன்லோட் செய்துகொள்ளலாம். நீங்களும் படியுங்கள்.

இந்தப் புத்தகத்தில் இருக்கும் இன்னொரு தகவல், சந்திரனின் பார்க்கப்படாத இருண்ட பக்கத்தில் ஏலியன்களுக்கு ஒரு தளம் இருக்கிறது என்றும் சொல்கிறது. We Discovered Alien Bases என்ற புத்தகத்தையும் கூப்பர் ரெஃபர் செய்கிறார். Someone else is on the Moon என்று இன்னொரு புத்தகமும் இதில் குறிப்பிடப்படுகிறது. குறைந்தபட்சம் 600 ஏலியன்கள் எந்த ஒரு காலத்திலும் இந்த ஏலியன் தளத்தில் இருந்துகொண்டே இருப்பதாகக் கூப்பர் சொல்கிறார். இவர்களுடன் மிகக்குறைந்த நபர்களே தொடர்பில் இருந்திருக்கின்றனர் என்பது கூப்பரின் தியரி. பூமிக்கு ஏதேனும் பிரச்னை வரும் பட்சத்தில், அமெரிக்காவின் முக்கியமான நபர்கள் தங்குவதற்காக ரகசியத் தளங்கள் ஏற்கெனவே உருவாக்கப்பட்டுவிட்டன என்றும், இவை பூமிக்கு அடியே நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்றும் (pages 205, 206, 220, 221, 222) கூப்பர் சொல்கிறார்.  நீங்களும் படித்துப் பார்க்கலாம். அமெரிக்கா முழுதும் 75 இடங்களில் இப்படிப்பட்ட பாதாள அறைகள் உண்டு என்பது கூப்பரின் முடிவு. அவரிடம் ஆதாரங்களும் உண்டு என்றே சொல்கிறார். ஒருசில ஆதாரங்களைப் பற்றி அவர் குறிப்பிடவும் செய்கிறார்.

அதேபோல், பூமியில் இருந்து கிளம்பி வேறு கிரகங்களில் காலனிகள் உருவாக்குவதைப் பற்றி அமெரிக்க அரசாங்கத்தின் செயல்பாடுகள் பற்றியும் கூப்பரின் புத்தகத்தில் இருக்கிறது. ஒவ்வொரு அப்போலோ மிஷனும், ஏலியன்களின் அனுமதியோடும், அவர்களின் விண்கலம் இந்த ராக்கெட்களுடன் பயணித்துப் பாதுகாப்பு கொடுக்கும்படியும்தான் நடந்திருக்கிறது என்று சொல்கிறார். ஆதாரமாக, 1990ல் லாஸ் ஏஞ்சலீஸ் டிவி சேனல் 2வில், அட்லாண்டிஸ் என்ற விண்கலம் பறக்கையில் அதனுடனேயே சிவப்பான, உருண்டையான, ஒளிரும் விண்கலம் ஒன்று பயணப்பட்டதாக வந்த செய்தியைக் குறிப்பிடுகிறார். அந்த சிவப்பு விண்கலம் இன்றுவரை அமெரிக்க அரசாங்கத்தாலோ அட்லாண்டிஸ் குழுவாலோ விளக்கப்படவில்லை என்பது கூப்பரின் கருத்து.

சந்திரனுக்குச் சென்ற அப்போலோ குழுவினர், அங்கே இருந்த ஏலியன் தளத்தைப் புகைப்படம் எடுத்தனர் என்றும், அந்தப் புகைப்படங்கள் நாஸாவுக்கு அனுப்பப்பட்டன என்றும், அவைகளைப் பற்றி அவர்களில் ஒரு ஆஸ்ட்ரநாட் தொலைக்காட்சியில் பேசினார் என்றும் கூப்பர் சொல்கிறார். Alternative 003 என்ற டாக்குமெண்ட்ரியில் இத்தகவல் உள்ளது என்கிறார் கூப்பர்.

ஏலியன்களுக்கும், உலகில் உள்ள முக்கியமான அமைப்புகளில் சிலவற்றுக்கும் உள்ள தொடர்புகள், பல்லாண்டு காலமாக எப்படி இத்தகைய அமைப்பினர் மூலமாக ஏலியன்கள் தங்களது ஆதிக்கத்தை பூமியில் உள்ள மக்களின்மீது செலுத்திவருகின்றனர், ஏலியன்களைப் பற்றி அமெரிக்க அரசாங்கத்தின் நிஜக் கருத்துகள், ஏலியன்களைப் பற்றி எல்லா விபரமும் தெரிந்த ஒருசில அமெரிக்க ஜனாதிபதிகள் (ஐஸன்ஹோவர்தான் கடைசி.  அவருக்குப் பின்னர் வந்த எல்லா ஜனாதிபதிகளுக்கும் அமெரிக்க அரசு போலியான தகவல்களையே அளித்து வந்துள்ளது என்றும், இதைக் கண்டுபிடித்ததால்தான் கென்னடி கொல்லப்பட்டார் என்றும் குறிப்பிடுகிறார் கூப்பர்).

கூப்பர் இப்புத்தகத்தில் அளித்துள்ள அத்தனை தகவல்களும் பொய் என்றும் பலர் கட்டுரைகள் எழுதியாயிற்று. இருந்தாலும், கான்ஸ்பிரஸி தியரிகள் எப்போதும் விற்கும் என்பதன்படி இப்புத்தகம் இன்றூவரை மிகப்பிரபலம். இதில் உள்ளவை உண்மையா பொய்யா என்பது ’ஏலியன்களுக்கு’ மட்டுமே தெரிந்த ரகசியம்.

கூப்பரின் இறப்பு அவசியம் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. 1998ல் அமெரிக்க அரசால், வரி ஏய்ப்புக் குற்றம் சாட்டப்பட்டுத் தலைமறைவாகிறார் கூப்பர். அரசு அவசியம் தன்னைக் கொல்லப்பார்க்கிறது என்று பலரிடமும் சொல்லியிருக்கிறார்.  2000த்தில், அமெரிக்க அரசால் முக்கியமான தலைமறைவுக் குற்றவாளியாகப் பிரகடனம் செய்யப்பட்டார். மூன்று வருடங்கள் கழித்து, 2001ல் அரிஸோனா ஷெரீஃப்ஃபின் உதவியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டார். அப்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில், கூப்பர் கணித்தபடியே அரசால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.கூப்பரின் நண்பர்களும் அவரது நலம்விரும்பிகளும், இது அமெரிக்க அரசாங்கத்தால் கூப்பரின் வாயை அடைக்க செய்யப்பட்ட சதி என்றே சொல்லியும் வருகிறார்கள்.

இன்னொரு சுவாரஸ்யமான விஷயத்தோடு அடுத்த கட்டுரையில் சந்திப்போம்.

தொடரும் . . .

 

Facebook Comments

Sharing is caring!

fb Comments

comments

  Comments

2 Comments

  1. நரேந்திரன்

    வேற்றுகிரக வாசி ரொம்ப நாள் Vacation-க்கு ஊருக்கு போயிருந்தது போல…

    Reply
  2. wajith

    sir adutha episode eppa sir ezhuthuvinga

    Reply

Join the conversation