நாவல்களும் திரைப்படங்களும் – அந்திமழை கட்டுரை

by Rajesh March 1, 2016   Book Reviews

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

2016 ஜனவரி மாதம் அந்திமழையில் வெளியான கட்டுரை இது.


 

உலகம் முழுக்கவே, மக்களின் மனதை எந்த வகையிலாவது உணர்ச்சிபூர்வமாகத் தொட்ட நாவல்களை திரைப்படங்களாக்கும் முயற்சிகள் சினிமா கண்டுபிடிக்கப்பட்ட காலம் முதல் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஏற்கெனவே ஒரு குறிப்பிட்ட தளத்தில் வெற்றியடைந்த படைப்புகளைத் திரைப்படமாக்கினால், அது எப்படியும் வெற்றியடையும் வாய்ப்புகள் அதிகம். கூடவே, சுவாரஸ்யமான, உணர்ச்சிகள் மிக்க கதைகள் இலக்கியங்களாகவும் ஜனரஞ்சகப் படைப்புகளாகவும் வெளிவருவதால், திரைப்படங்களில் இருக்கும் கதைப்பஞ்சம் தீரவும் வாய்ப்புகள் கிடைக்கின்றன.

ஆனால், ஒரு நாவல் தரும் அனுபவம் திரைப்படத்தால் கிடைக்காது. நாவல் என்பதில் நமது சிந்தனை பெரிய இடத்தை வகிக்கிறது. திரைப்படத்தில் அது இல்லாமல், எல்லாமே முழுமையாக உருவாக்கப்பட்டு, ஆடியன்ஸின் மூளையில் முழுமையாகப் பதியவைக்கப்படுவதால் சிந்தனைக்கு அங்கே இடமில்லை. இதனால் பல எதிர்பார்ப்புகள் பூர்த்தியடையாமல், ஒருவகையான ஏமாற்ற உணர்வே மிஞ்சுகிறது. இதைத்தாண்டி ஜெயித்த திரைப்படங்கள் மிகக்குறைவே.

அமெரிக்காவை எடுத்துக்கொண்டால், மிக மிக ஆரம்ப கட்டத்திலேயே ’கான் வித் த விண்ட்’ (Gone with the Wind) நாவல் படமாக்கப்பட்டுவிட்டது. மார்கரெட் மிட்சல் எழுதிய மறக்கமுடியாத நாவல் அது. 1936ல் நாவல் வெளியிடப்பட்டு உலகப்புகழ் அடைந்ததும், திரைப்பட உரிமைகள் வாங்கப்பட்டு 1939ல் வெளியாகி மிகப்பிரம்மாண்ட வெற்றி அடைந்தது. இப்படத்தின் திரைக்கதை எழுதும்போது மார்கரெட் மிட்சலைக் கேட்காமல் ஒரு வார்த்தை கூட எழுதப்படவில்லை என்பது ஒரு புகழ்பெற்ற துணுக்குச் செய்தி. இருப்பினும்கூட, நாவல் கொடுத்த அனுபவத்தைத் திரைப்படம் கொடுக்கவில்லை. அப்படிக் கொடுக்கவும் இயலாது.

எந்தப் பிரபலமான நாவலாசிரியரை எடுத்துக்கொண்டாலும் அவரது கதை அங்கே படமாக்கப்பட்டுவிடும். அவ்வகையில் மிகப் பிரபலமான நபர்களாகிய சோமர்செட் மாம் (Encore), ராபர்ட் பென் வாரன் (All the King’s men), ஜேம்ஸ் ஜோன்ஸ் (From here to Eternity), எர்னஸ்ட் ஹெமிங்வே (The Oldman and the sea), ரே ப்ராட்பரி (Fahrenheit 451), வ்ளாடிமிர் நபகோவ் (Lolita), அய்ன் ராண்ட் (Atlas Shrugged), ட்ரூமேன் கபோடே (Breakfast at Tiffany’s), ரிச்சர்ட் காண்டன் (The Manchurian Candidate), ஹார்ப்பர் லீ (To Kill a Mocking Bird), ஜோஸஃப் ஹெல்லர் (Catch 22), கென் கெஸி (One flew over the cuckoo’s nest), ஃப்ராங்க் ஹெர்பர்ட் (The Dune), இரா லெவின் (Rosemary’s Baby), சார்லஸ் போர்டிஸ் (True Grit), மைக்கேல் க்ரைட்டன் (The Andromeda Strain), கர்ட் வனேகட் (Slaughterhouse – Five), எரிக் சீகல் (Love Story), வில்லியம் பீட்டர் ப்லாட்டி (The Exorcist), பீட்டர் பெஞ்ச்லி (Jaws), நார்மன் மெக்லீன் (A River Runs through it), ஆன்னீ ரைஸ் (Interview with the Vampire), ராபின் குக் (Coma), ஹ்யூபர்ட் செல்பி ஜூனியர் (Requiem for a Dream), வில்லியம் ஸ்டைரான் (Sophie’s Choice), ராபர்ட் லுட்லும் (The Bourne Identity), தாம்ஸ் ஹாரிஸ் (The Red Dragon), அலீஸ் வாக்கர் (The Color Purple), டாம் க்ளான்ஸி (The Hunt for Red October), கார்ல் சாகன் (Contact), டாம் வுல்ஃப் (Bonfire of the Vanities), ஜான் க்ரிஷம் (A Time to Kill), ஜேம்ஸ் எல்ராய் (LA Confidential), ப்ரெட் ஈஸ்டன் எல்லிஸ் (American Psycho), ராபர்ட் ஜேம்ஸ் வாலர் (Bridges of Madison County), சக் பாலனிக் (Fight Club), மைக்கேல் கன்னிங்கம் (The Hours), டெனிஸ் லெஹானே (Mystic River), காலித் ஹொஸைனி (The Kite Runner), ரெக்ஸ் பிக்கெட் (Sideways), ஜே.ஆர்.ஆர். டோல்கீன் (Lord of the Rings), ஜே.கே ரௌலிங் (Harry Potter), கார்மேக் மெக்கார்த்தி (No Country for Old Men), மாத்யூ க்விக் (The Silver Linings Playbook), காதரீன் ஸ்டாக்கெட் (The Help), ஜான் க்ரீன் (The Fault in our Stars), ஜிலியன் ஃப்ளின் (Gone Girl) என்று இன்றுவரை மிகச்சிறந்த நாவல்கள் அமெரிக்காவில் திரைப்படமாக்கப்பட்டிருக்கின்றன. இவையெல்லாமே விமர்சக ரீதியில் பரவலாகப் பாராட்டப்பட்டவை. இங்கே கொடுத்திருக்கும் நாவல்கள் உதாரணத்துக்கு மட்டுமே. இவை தவிர இந்த ஆசிரியர்கள் இன்னும் பலப்பல நாவல்கள் எழுதி, அவைகளில் பலவும் படமாக்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக ஸ்டீஃபன் கிங், மைக்கேல் க்ரைட்டன், ஜான் க்ரிஷம், நிகலஸ் ஸ்பார்க்ஸ், இயன் ஃப்ளெமிங், பிலிப் கே டிக், ராபர்ட் லூயி ஸ்டீவன்ஸன்,  ஆர்தர் கானன் டாயல், எட்கார் வாலஸ், ஓ ஹென்றி, அகதா க்ரிஸ்டி, ஹெச்.பி. லவ்க்ராஃப்ட், ஹான்ஸ் க்ரிஸ்டியன் ஆண்டர்ஸன், எல்மர் லியனார்ட் போன்ற எழுத்தாளர்களின் பல நாவல்கள் ஹாலிவுட்ட்டிலும் பிற நாடுகளிலும் படமாக்கப்பட்டிருக்கின்றன. உலகளாவிய அளவில், ஒரு படைப்பைத் திரைப்படமாக ஆக்கவேண்டும் என்றால் ஒரு மிகப்பெரும் யுத்தமே நிகழும். அந்தப் படைப்பில் விருப்பம் உள்ள நடிகர்களோ தயாரிப்பு நிறுவனங்களோ இயக்குநர்களோ பெரும்பணம் கொடுத்து அந்தப் புத்தகத்தின் உரிமையை வாங்கப் போட்டிபோடும். இதனால் பயனடையும் நபராக அந்த ஆசிரியர் இருப்பார். கோடிக்கணக்கில் அவருக்குப் பணம் கொடுக்கப்படும். இறுதியில் அதனை வாங்கும் நிறுவனமோ நபரோ அதைப் படமாக எடுப்பார்.

மேலே உள்ள பட்டியல் தவிர, ஷேக்ஸ்பியரை எடுத்துக்கொண்டால், அவரது நாடகங்கள் படமாக்கப்படாத உலக மொழிகளே இல்லை. இதன்பின் ஆண்டன் செகாவ், சார்லஸ் டிக்கன்ஸ், அலெக்ஸாண்டர் டூமா, எட்கர் ஆலன் போ, ஆர்தர் கானன் டாயல், ஆஸ்கர் வில்ட், தாஸ்தாயவ்ஸ்கி, டால்ஸ்டாய், விக்டர் ஹ்யூகோ, ஜூல்ஸ் வெர்ன், மார்க் ட்வெய்ன், சி.எஸ்.லூயிஸ் போன்றவர்கள் உலகளாவிய அளவில் மிகப் பிரபலமானவர்கள். நாடகங்கள், தொலைக்காட்சி சீரீஸ்கள், திரைப்படங்கள், குறும்படங்கள், டெலிஃபிலிம்கள் போன்ற அத்தனை வடிவங்களிலும் இவர்களது படைப்புகள் படமாக்கப்பட்டிருக்கின்றன.

சமீபகாலத்தில் ஹாலிவுட்டில் ஒரு புதிய அம்சம் பரவலாகிக்கொண்டிருக்கிறது. அது – இளைஞர்களுக்காக எழுதப்படும் நாவல்கள். இதற்கு உதாரணமாக Harry Potter நாவல்களைச் சொல்லலாம். வித்தியாசமான, ஃபாண்டஸி நிறைந்த ஒரு உலகத்தில் ஹாக்வார்ட்ஸ் என்ற பள்ளியில் நடக்கும் இந்தக் கதைகள் உலகம் முழுக்கப் பரவின. இந்தியாவில்கூட பலப்பல இளைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வெறித்தனமாக ஹாரி பாட்டரைப் படித்தனர். இதேபோல் ட்வைலைட் ஸாகா என்று சொல்லக்கூடிய நான்கு நாவல்களை ஸ்டெஃபனீ மேயர் எழுத, அவைகள் உடனடியாகப் படமாக்கப்பட்டன (ஆனால் இப்படங்கள் விமர்சகர்களால் கிழிக்கப்பட்டன என்பதும் முக்கியம். முற்றிலும் வெறுமையான, தட்டையான படங்கள் இவை). அடுத்ததாக, இப்படிப்பட்ட இளைய சமுதாய நாவல்களை எழுதியவர்களில் சூஸானே காலின்ஸ் (The Hunger Games Series), ரிக் ரியோர்டான் (Percy Jackson series), ஜேம்ஸ் டாஷ்னர் (The maze runner series) ஆகியவர்கள் முக்கியமானவர்கள். இந்தப் படங்கள் எல்லாமே உலகின் பல நாடுகளிலும் வெளியிடப்படுகின்றன. இதன்மூலம் எழுதியவர்களுக்கும் அவற்றைப் படமாக்கும் ஸ்டுடியோக்களுக்கும் எக்கச்சக்க லாபம்.

தற்போது இப்படிப்பட்ட சீரீஸ்களை இளைஞர்களுக்காக எழுதுபவர்களுக்கே கிராக்கி. இலக்கியத்தைவிடவும், ஜனரஞ்சக நாவல்களே வசூல் ரீதியிலும் புகழிலும் மிக அதிகமாக இருக்கின்றன. மேலே உள்ள பட்டியலில் இலக்கிய நூல்கள் சொற்பமே என்பது எளிதில் புரிந்துவிடும். காரணம், உலகம் முழுக்கவே, ஸ்டுடியோ ஒன்றால் எடுக்கப்படும் திரைப்படம் என்பது லாபத்தை மட்டுமே முதல் பிரதான காரணமாக வைத்திருக்கிறது. இலக்கியம், வாழ்க்கையின் அனுபவங்கள் போன்றவையெல்லாம் அங்கே இரண்டாம் பட்சம்தான்.

அந்த வகையில் இந்தியாவை லேசாகக் கவனித்தால், இங்கே ஜனரஞ்சகக் கதைகளுக்கு ஒரு மாபெரும் தேவை இருப்பதை உணரலாம். இப்போதுதான் அமிஷ் த்ரிபாதி, ஷிவா ட்ரையாலஜி என்ற மூன்று நூல்களை இவ்வகையில் எழுதியுள்ளார் (அவையும் மிகச்சுமாரானவையே). இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் ஏராளமான இலக்கியவாதிகள் உள்ளனர். இலக்கியம் என்பதை எடுத்துக்கொண்டால் அருமையான பல படைப்புகள் உள்ளன. அவர்களின் படைப்புகளே இன்னும் பல வருடங்களுக்குத் தரமான படங்கள் எடுக்கப் போதுமானது. அதேசமயம் ஜனரஞ்சகப் படைப்புகள்தான் இங்கே வரண்டுபோய்க் காணப்படுகின்றன. ஒரு ஜே.கே. ரௌலிங் போலவோ, டால்கீன் போலவோ, சூஸானே காலின்ஸ் போலவோ எழுதுபவர்கள் மிகமிகக் குறைவு.

அடுத்ததாக, திரைப்படங்களாக எடுக்கப்படும் நாவல்களைப் போலவே தொலைக்காட்சி சீரீஸ்களாக எடுக்கப்படும் புத்தகங்களும் மிகப் பிரபலம். உதாரணமாக, ‘Game of Thrones’ என்ற தொலைக்காட்சித் தொடர் இப்போது உலகம் முழுவதும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. தற்போது ஐந்து சீரீஸ்கள் முடிந்துள்ள நிலையில், ஆறாவது சீரீஸின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உலக இளைஞர்கள் அனைவருமே இத்தொடருக்கு அடிமைகள். இந்த சீரீஸ், ஜார்ஜ் மார்ட்டின் எழுதிக்கொண்டிருக்கும் A song of Ice and Fire என்ற புத்தக சீரீஸிலிருந்து எடுக்கப்பட்டது. இதுவரை அவர் எழுதிய ஐந்து புத்தகங்களிலிருந்தே இந்த ஆறு சீரீஸ்களும் எடுக்கப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு புத்தகங்கள் வரவேண்டியிருக்கும் நிலையில், படுவேகமாக எழுதிக்குவித்துக்கொண்டிருக்கிறார் ஜார்ஜ் மார்ட்டின்.

உலகம் முழுக்க இப்படிப் பிரபலமாக விளங்கும் புத்தகங்களைப்போல் இந்தியாவிலிருந்தும், குறிப்பாகத் தமிழகத்தில் இருந்து எழுதப்படும் புத்தகங்கள் பிரபலமடைந்து, உலகின் பல்வேறு நாடுகளின் மக்களால் விரும்பிப் படிக்கப்படவேண்டும்/திரைப்படங்களாக எடுக்கப்படவேண்டும் என்பது என் ஆசை. அப்படிப்பட்ட புத்தகங்கள் விரைவில் வெளிவரும் அத்தனை சாத்தியக்கூறுகளும் இங்கே உள்ளன. பரவலாக எல்லோராலும் உணர்ந்துபார்க்கக்கூடிய பிரச்னைகள், அவற்றினூடே பயணிக்கும் உணர்வுகள் போன்றவற்றைத்தான் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் புத்தகங்களும் கொண்டுள்ளன. அப்படிப்பட்ட கரு ஒன்றை எடுத்து, சுவாரஸ்யமாக ஒரு கதையை எழுதி வெளியிட இங்குள்ள திறமைசாலிகளால் அவசியம் முடியும். அப்படி நடந்துவிட்டால் இந்தியாவிலும் தமிழகத்திலும் வாசிப்பு என்பது பரவலாக மாறி, அவற்றின்மூலம் மெல்ல மெல்ல மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படலாம்.

அந்த நாளுக்காகக் காத்திருக்கிறேன்.

தொடர்புடைய இன்னொரு கட்டுரை – தமிழில் சைன்ஸ் ஃபிக்‌ஷன் எழுத்து – The Unconquered territory

Cover pic taken from – http://www.telegraph.co.uk/content/dam/film/TheLongestRide/sparkscomp-xlarge.jpg

 

Facebook Comments

Sharing is caring!

Related Posts

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

1 Comment;

  1. Manoj Kumar

    நான் நிச்சயமாக ஜனரஞ்சக நாவல்களை எழுத முயற்சி செயவேன்.இவைகளை நீங்கள் புத்தகமாக தரவேண்டும்.

    Reply

Join the conversation