Spotlight (2015) – English

by Rajesh March 12, 2016   English films

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

பாஸ்டன் நகரில் பல்லாண்டு காலமாகக் கத்தோலிக்கப் பாதிரியார்கள் சிறுவர்களையும் சிறுமிகளையும் தங்களது பாலியல் வெறிக்கு உட்படுத்தி சின்னாபின்னம் செய்துவந்த ஒரு மிக முக்கியமான சமூகப் பிரச்னையை வெளிப்படையாக உலகுக்கு அறிவித்த சில பத்திரிக்கையாளர்களின் உண்மைக்கதைதான் ஸ்பாட்லைட் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆஸ்கரில் சிறந்த பட விருதும், சிறந்த திரைக்கதைக்கான விருதும் வாங்கிய படம் இது. எனக்கு சமீபகாலங்களில் மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. எந்த சினிமாத்தனமும் இல்லாமல், மிகவும் இயல்பாக சொல்லப்பட்டிருக்கும் கதை.

ஹாலிவுட்டில் எப்போதுமே உண்மைக்கதைகளுக்கு கிராக்கி அதிகம். அவற்றை வைத்து எழுதப்பட்ட புத்தகங்கள், கட்டுரைகள், பேட்டிகள், டாக்குமெண்ட்ரிகள் போன்றவற்றை ஹாலிவுட் ignore செய்ததே இல்லை. ஆரம்ப காலத்தில் இருந்தே இதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. எனக்கு இதுவரை மிகப் பிடித்த ஜர்னலிஸம் சார்ந்த படமாக, All the President’s Men படமே இருந்தது. முதலில் இந்தப் படத்தைப் பற்றிக் கொஞ்சம்.

ஆண்டு – 1972. ஒரு ஜூன் மாத மாலை. தேதி – 17. அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில், வாட்டர்கேட் என்ற ஒரு கட்டிடம். அதில்தான், டெமோக்ராட் கட்சியின் தலைமை அலுவலகம் இருக்கிறது. இந்த வாட்டர்கேட் கட்டிடத்தின் நுழைவாயில் கதவில், டேப்புகள் ஒட்டப்பட்டு, அதன் காரணமாக அதன் கதவு மூடப்படாமல் லேசாகத் திறந்திருப்பதை, செக்யூரிட்டி ஃப்ரான்க் வில்லிஸ் கண்டுபிடிக்கிறார். இதனைப் போலீஸுக்கு அவர் தெரிவிக்க, டெமாக்ராட் கட்சி அலுவலகத்துக்கு உள்ளே பதுங்கியிருந்த ஐந்து பேரைப் போலீஸ் கைது செய்கிறது. இந்த ஐந்து பேரும் யார் என்று பத்திரிகைகள் நோண்ட ஆரம்பிக்க, இந்த ஐந்து பேருமே, ரிபப்ளிக் கட்சியின் ஒரு முக்கிய பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மை கண்டுபிடிக்கப்படுகிறது. அந்த ஆண்டில், நிக்ஸன் மறுபடி ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்ற காரணத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Committee to Re-elect the President’ (இனி, சுருக்கமாக CReeP) என்ற ரிபப்ளிக் கட்சியின் அமைப்பைச் சேர்ந்தவர்களாக இவர்கள் இருப்பதைப் பத்திரிக்கைகள் – குறிப்பாக – The Washington Post’ என்ற பத்திரிகை – தோலுரித்துக் காட்டியது.

இதைப்பற்றி இரண்டு பத்திரிகையாளர்கள் (Bob Woodward & Carl Bernstein) விசாரிக்கத் துவங்குகின்றனர். அந்த விசாரனையின் முடிவில், இந்த CReeP அமைப்பினிடத்தில் இருந்த பல மில்லியன் டாலர்கள் பணத்தை வைத்துக்கொண்டு, ரிபப்ளிக் கட்சியினர், எதிர்க்கட்சியைச் சேர்ந்த டெமாக்ராட்டுகளின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டதாகவும், அவர்களை ரகசியமாக உளவறிந்ததாகவும், அவர்களின் பெயரை வேண்டுமென்றே ரிப்பேர் செய்ததாகவும் தெரியவருகிறது. இறுதியில், இந்த இரு துடிப்பான பத்திரிகையாளர்கள் வெளிக்கொணர்ந்த தகவல்களின் கனம் தாளாது, ஜனாதிபதி நிக்ஸன் ராஜினாமா செய்ய வேண்டி வருகிறது. பதவிக்காலத்திலேயே ராஜிநாமா செய்த அமெரிக்க அரசின் ஒரே கறைபடிந்த ஜனாதிபதி என்ற புகழும் நிக்சனுக்குக் கிடைக்கிறது.

இதுதான் All the President’s Men. இதைப்பற்றிய என் விமர்சனத்தைப் பெயரைக் க்ளிக் செய்து படிக்கலாம். படம் மிகவும் சுவாரஸ்யமானது. திரைப்பட ரசிகர்கள் அவசியம் பார்க்கவேண்டிய படம் இது.

இதைப்போன்ற இன்னும் பல படங்கள் ஹாலிவுட்டில் உண்டு. அவற்றில் முக்கியமானவை: Good Night, and Good Luck, Wag the Dog, Killing Fields, The Insider, Frost/Nixon, Network முதலியவை. Journalism based films என்று போட்டால் இன்னும் எக்கச்சக்கமானவை கிடைக்கும். கூடவே, The Newsroom சீரீஸையும் குறிப்பிடலாம். தற்போது இருக்கும் திரைக்கதை எழுத்தாளர்களில் மிகவும் திறமை வாய்ந்தவரான ஆரோன் சார்கின் (Aaron Sorkin) எழுதிய சீரீஸ் இது.

ஸ்பாட்லைட் திரைப்படத்துக்கு மூலகாரணம், மைக்கேல் ரெஸெண்டஸ் (Michael Rezendez), மாட் கரோல் (Matt Carroll), சாஷா ஃபெய்ஃபர் (Sacha Pfeiffer) மற்றும் எடிட்டர் வால்டர் ராபின்ஸன் (Walter V. Robinson) ஆகியோர் தயாரித்து, மார்க் ரெஸண்டஸ் எழுதிய கட்டுரைதான். பாஸ்டன் க்ளோப் நாளிதழில் எழுதப்பட்ட அந்தக் கட்டுரையை விரிவாக இங்கே படித்துப் பார்க்கலாம். இந்தக் கட்டுரை வெளியானதும், ஆயிரக்கணக்கான மக்கள் பாஸ்டன் க்ளோப்பைத் தொடர்பு கொண்டனர். அமெரிக்காவின் பல மாகாணங்களில் இப்படிப்பட்ட கத்தோலிக்கப் பாதிரியார்களால் பாதிக்கப்பட்ட பலரும் அவர்கள் கதையை நிருபர்களிடம் வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து உலகம் முழுவதும் இப்படி நிகழ்ந்த பல சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. வாடிகன் நகரம் கடுமையான நெருக்கடியில் மூழ்கியது. பாஸ்டனில் ஐந்து பாதிரியார்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்தக் கட்டுரைகளுக்கு 2003ஆம் ஆண்டின் புலிட்ஸர் விருதும் கிடைத்தது (Pulitzer Prize for meritorious public service).

Spotlight-pulitzer-winning-team

 


 

ஸ்பாட்லைட் படத்தின் சிறப்புகள் என்ன? ஏன் (ஓவராகக் கூவப்பட்ட) ரெவனண்ட் படத்தையும் மீறி இதற்கு சிறந்த பட விருது ஆஸ்கர்களில் கிடைத்தது என்று யோசித்தால், ரெவனண்ட் படத்தை விடவும் ஸ்பாட்லைட்டே நமது இதயத்துக்கு அருகே இருக்கும் படமாக விளங்குவதைக் கவனிக்கலாம். உலகெங்கும் பிரச்னைகளைக் கிளப்பிய ஒரு மிகத் தீவிரமான விஷயத்தை அதன் முக்கியத்துவம் கெடாமல், நிஜத்தில் நிகழ்ந்ததைப்போலவே படமாக்கியிருப்பதுதான் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. தனிப்பட்ட முறையில், எனக்கு ஹேட்ஃபுல் எய்ட் படத்தை விடவும் ஸ்பாட்லைட் தான் பிடித்தது. காரணம் ஒரே ஒரு நிமிடம் கூட நம்மை அங்குமிங்கும் அலைபாயவைக்காத இதன் திரைக்கதை. அதனாலேயேதான் இதன் திரைக்கதைக்கும் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் கிடைத்தது. இதுவரை இப்படத்தை நீங்கள் பார்த்திருக்கவில்லை என்றால், இந்த விஷயங்களை கவனித்துப் பாருங்கள்.

ரெவனண்ட் படத்துக்குத்தான் சிறந்த திரைப்பட விருது கிடைத்திருக்கவேண்டும் என்று பல திரை அனுதாபிகள் சொல்லிவருகின்றனர். ஆனால் இந்த இரண்டு படங்களையும் பார்த்திருந்தால், ஸ்பாட்லைட்டுக்கு விருது கிடைத்ததில் தப்பே இல்லை என்பதை எந்த நடுநிலையான ரசிகனும் சொல்லிவிடுவான். ரெவனண்ட் படத்தைப்போல் இதில் போலியான காட்சிகள் இல்லை. போலி என்றால், ஆடியன்ஸை, இப்படம் பிரம்மாண்டமானது என்பதை நம்பவைக்க அமைக்கப்பட்ட செயற்கையான ஷாட்களையே சொல்கிறேன். ரெவனண்ட் படத்தைப்பற்றி ஒரு விரிவான கட்டுரை அவசியம் எழுதுவேன். அதில் விபரமாக இதை விளக்குவேன்.

இந்த ஸ்பாட்லைட் பத்திரிக்கைக் குழுவினரைப் பற்றிய இந்த வீடியோவைத் தவறாமல் பாருங்கள். இதில் தங்களது அனுபவங்களை அவர்கள் பகிர்வதைக் கவனிக்கலாம். பல தகவல்கள் கிடைக்கும்.

Facebook Comments

Sharing is caring!

Related Posts

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

3 Comments

 1. Karthikeyan L

  Rajesh Ji, Uncharted 4 vara poguthu…. Uncharted Series pathi oru article podungalen…..

  Reply
 2. KO

  Spotlight is truly an example of “SIMPLICITY AT ITS BEST” in all cinematic aspects. Great movie.

  Reply
 3. Anbarasan

  Rajesh Anna,Spotlight is way better than the revenant. I would like see movie like in Tamil cinema. Your thoughts….

  Reply

Join the conversation