Vikram Vedha (2017) – Tamil

by Rajesh July 24, 2017   Tamil cinema

Sharing is caring!

விக்ரம் வேதா, நான் சற்றே எதிர்பார்த்துக்கொண்டிருந்த படம். ஏனெனில், ஓரம்போ எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. ‘வ குவார்ட்டர் கட்டிங்’, திரைப்படமா, ஸ்பூஃப் முயற்சியா என்ற குழப்பத்திலேயே எடுக்கப்பட்டிருந்ததால் அதை விட்டுவிடுவோம். மாதவன், விஜய் சேதுபதி என்ற ஹெவிவெய்ட்கள் இருந்ததால் படத்தை வெள்ளியன்றே பார்த்துவிட்டேன். பார்த்துவிட்டு, ஃபேஸ்புக்கில் இரண்டு ஸ்டேட்டஸ்கள் போட்டிருந்தேன். ஆனால் இவற்றில் கதை பற்றி எதுவும் கூறவில்லை. இந்தக் கட்டுரையில்தான் கதையையும் சேர்த்துக் கவனிக்கப்போகிறோம். Spoiler Alert. 

1. முதல் ஸ்டேட்டஸ்

2. இரண்டாம் ஸ்டேட்டஸ்

இனி, படத்தைப் பற்றி விரிவாகக் கவனிக்கலாம்.

முதலில், படத்தின் நல்ல அம்சங்களைப் பார்க்கலாம்.

1. கதையின் பின்னணி

முதலாவதாக, படத்தின் நல்ல அம்சம், ஒரு பழைய கதையை எடுத்துக்கொண்டு, அதற்கு நவீனகாலப் பூச்சைப் பூசியிருப்பதுதான். விக்கிரமாதித்தன் – வேதாளம் என்பது என் பள்ளிக்காலத்தில் கிட்டத்தட்ட அனைத்துச் சிறுவர் சிறுமியருக்கும் தெரியும். அதற்குக் காரணம் அம்புலிமாமா போன்ற சிறுவர் பத்திரிக்கைகள். கூடவே, விக்கிரமாதித்தன் கதைகள் என்ற பெரிய புத்தகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸால் அருமையான முறையில் அப்போது வெளியிடவும் பட்டிருந்தது. நான் அந்தப் புத்தகத்தைப் பள்ளி நாட்களில் படித்தும் இருக்கிறேன். அதேபோல், அப்போது ராமானந்த் சாகர் வழங்கிய ‘விக்ரம் ஔர் வேதாள்’ என்ற தொலைக்காட்சி சீரியலும் மிகப்பிரபலம். அதில், பின்னாட்களில் ராமனாக நடித்த அருண் கோயல் விக்கிரமாதித்தனாக நடித்தார்.

சில வருடங்களுக்கு முன்னர், ‘கரிகாலன்’ என்ற திரைப்படம் விக்ரமை வைத்து எடுக்கப்பட்டது நினைவிருக்கலாம். இயக்குநர் எல்.ஐ. கண்ணன் இயக்கிக்கொண்டிருந்த படம் இது. கரிகாலனின் கதையை நல்ல சிஜியோடு அளிக்க முயன்ற படம். அதேபோல், ஆங்கிலத்தில் Sherlock என்ற பிபிசி சீரியல், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சாகசங்கள் புரிந்த ஷெர்லக் ஹோம்ஸை, இருபத்தோராம் நூற்றாண்டில் நம்மிடையே உலவவிட்டது. இப்படி, பழைய விக்கிரமாதித்தன் கதையைத் தற்போதைய உலகுக்கு எடுத்துவந்தது உண்மையிலேயே நல்ல முயற்சிதான் (அதே சமயம், இப்படி எடுக்க நினைத்துக் கையைச் சுட்டுக்கொண்ட மணி ரத்னத்தின் ‘ராவணன்’ படமும் நினைவுக்கு வருகிறது.  அவரது ‘தளபதி’, முற்றிலும் வேறுபட்ட அட்டகாசமான முயற்சி).

வேதாளத்தைக் கைப்பற்ற நினைக்கும் விக்கிரமாதித்தனின் முதுகில் ஏறிக்கொண்டு, வேதாளம் பல கதைகளைச் சொல்கிறது. சரியான விடையளித்தால் அவனை விட்டுவிட்டு மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டுவிடும்.  பின்னர் மறுபடியும் போய் வேதாளத்தைக் கைப்பற்றுவான். பின்னர் மறுபடியும்… இப்படியேயே அவனது வாழ்க்கைக்குத் தேவையான பல தத்துவங்களை வேதாளம் சொல்லிக்கொடுக்கும். விக்கிரமாதித்தன் அந்தத் தத்துவங்களைத் தெரிந்துகொண்டு இன்னும் நல்ல மனிதனாக, நல்லரசனாக வேதாளத்தின் துணையோடு மாறுவான்.

இதே கதையைத்தான் தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்பக் கொடுத்திருக்கிறார்கள் புஷ்கரும் காயத்ரியும். படத்தில் வேதாளம் மூன்று கதைகளைச் சொல்கிறது. அக்கதைகளின் முடிவில் என்ன நடக்கும் என்று விக்ரமைக் கேட்கிறது. அப்போது விக்ரமுக்கு ஏற்படும் புரிதல்கள் மூலமாகக் கதை நகர்கிறது என்பது அவசியம் ஒரு சுவாரஸ்யம் ஊட்டக்கூடிய கட்டமைப்புதான்.

2. விக்ரம்

விக்ரமாக நடித்துள்ள மாதவன் கதாபாத்திரம் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நேர்மையான போலீஸ் அதிகாரி.  சுற்றி நடக்கும் வேறு எந்தப் பிரச்னை பற்றியும் எதுவும் கவனிக்காமல், எடுத்துக்கொண்ட வேலையை மட்டுமே தீவிரமாகக் கவனிக்கும் கதாபாத்திரம்.இறந்துபோன தந்தையைப் போலவே முரட்டுத்தனமான நேர்மையுடைய நபர். மனைவியைக் காதலிக்கும் அதிகாரி. இயல்பாகவே ஒரு நேர்மையாளன், தன்னை இஷ்டத்துக்குப் பணிபுரிய விடாமல் தடுக்கும் மேலதிகாரிகளின் மீதும், இப்படிப்பட்ட சூழலை உருவாக்கிய சமூகத்தின் மீதும் ஓரளவு கோபத்துடனும் அலட்சியத்துடனும்தான் இருப்பான். அந்தக் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார் மாதவன். அந்தக் கதாபாத்திரம் வேலையில் காட்டக்கூடிய புத்திசாலித்தனமும், நிஜவாழ்க்கையில் பிற விஷயங்களில் மெத்தனமாக இருப்பதையும் நன்றாகக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அதேசமயம் இதனாலேயே ஒரு பிரச்னையும் கதையில் துருத்திக்கொண்டு தெரிகிறது. அதை விரிவாகப் பின்னால் கவனிக்கலாம்.

3. கதைக்குள் கதைகள்

விக்கிரமாதித்தன் கதையில், கதைக்குள் கதை என்ற கதைசொல்லல் முறை மிகவும் பிரபலம். படித்தால் உங்களுக்கும் தெரியும். போஜராஜனுக்குக் காட்டில் சிம்மாசனம் ஒன்று கிடைக்க, அது விக்கிரமாதித்தன் உபயோகப்படுத்திய சிம்மாசனம் என்று உணர்கிறான். பெருமையுடன் அதில் அமரப் போகையில், அதன் ஒவ்வொரு படியிலும் இருக்கும் பதுமைகள், பல கதைகளை அவனுக்குச் சொல்கின்றன. அவன் கருத்தையும் கேட்கின்றன. இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படி வீதம் 32 நாட்களில் 32 படிகளை ஏறி அந்தச் சிம்மாசனத்தில் அமர்கிறான் போஜன். அப்படி ஏறுகையில் அதில் ஒரு பதுமை சொல்வதுதான் விக்கிரமாதித்தனின் கதை.

அதேபோல், படத்திலும், கதைக்குள் கதையாக மூன்று கதைகள் வருகின்றன. ஒவ்வொரு கதையையும் வேதா என்ற கேங்ஸ்டர், போலீஸ் அதிகாரி விக்ரமுக்குச் சொல்கிறான். அதில் அவனது கருத்தையும் கேட்கிறான். இது இயல்பாகவே நான்-லீனியர் வடிவம். அதனை எடுத்துக்கொண்டு, கதையையும் நான் – லீனியராக வடிவமைத்திருப்பது நன்றாக இருந்தது. அதாவது, அந்தத் திரைக்கதைக் கட்டமைப்பு. இயல்பாகவே க்வெண்டின் டாரண்டினோ ஸ்டைலில் கதைக்குள் மூன்று அத்தியாயங்களை இப்படித் திரைக்கதையில் அமைக்க, புஷ்கர் காயத்ரியால் முடிந்திருக்கிறது. அதை நான் வரவேற்கிறேன்.

4. இசை

படத்தின் இசை, எனக்குப் பிடித்திருந்தது. ‘ஆடு பாம்பே’ மெட்டில் அமைக்கப்பட்ட ‘கறுப்பு வெள்ளை’ பாடல் படம் முழுதும் வருகிறது. அதேபோல், அதன் மாறுபட்ட வடிவமான ‘ஒரு கதை சொல்லட்டா’, ‘டசக்கு டசக்கு’ ஆகிய பாடல்களும் நன்றாக இருந்தன. திடீரென்று இடம்பெறும் மெக்ஸிகன் கிடார், அவ்வப்போது இடம்பெறும் இசைத்துணுக்குகள் என்று இசையில் எந்தப் பிரச்னையும் இல்லை. படம் முழுதும் அதன் இசையை ரசித்தேன். இசையமைத்திருக்கும் ஸாம் சி.எஸ் நன்றாக அவரது வேலையைச் செய்திருக்கிறார்.

5. வசனங்கள்

படத்தில் கூடுதல் வசனங்களை மணிகண்டன் எழுதியிருக்கிறார். படத்தில் சந்தானம் என்ற போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருக்கிறார். இவரது வசனங்களைப் படத்தில் இனம்காண முடிந்தது. படத்தில் எங்கெல்லாம் இயல்பான வசனங்கள் வருகின்றனவோ, அதெல்லாம் மணிகண்டனின் வேலை என்பது, அவரை அறிந்தவர்களுக்குத் தெரியும். மணிகண்டனுக்குப் பாராட்டுகள்.

படத்தின் ப்ளஸ் பாயிண்ட்கள் இவை. சரி. படத்தின் மைனஸ் பாயிண்ட்கள்?

1. வேதா

படத்தில் வேதாவாக நடித்திருக்கும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்பதே குழப்பமாக இருந்தது. படத்தின் துவக்கத்தில் கெத்தாக வந்து சரணடையும் கதாபாத்திரம், வெளியில் வந்ததுமே சூது கவ்வும் தாஸாக மாறிவிடுகிறது. பின்னர் ஒரு சில காட்சிகளில் காதலும் கடந்து போகும் கதிரவனாக மாறிவிடுகிறது. அதன்பின்னர் மறுபடியும் வேதாவாக மாறுகிறது. இந்தக் கதாபாத்திரம் வில்லனா அல்லது ஆண்ட்டி ஹீரோவா என்பதில் புஷ்கர் காயத்ரிக்குமே குழப்பம் இருந்திருக்கிறது என்று கணிக்கிறேன். ஜிகர்தண்டாவில் அசால்ட் சேது இரண்டாம் பாதியில் எப்படி மாறினார்? அப்படி, இதில் ஆங்காங்கே கேரக்டர் ஜம்ப் அடிக்கிறது (அதிலாவது அதற்கு நல்ல justification இருந்தது). விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை நல்லவன் என்று காட்டுவதற்காக இப்படி எழுதியிருக்கிறார்கள் என்பதும் நன்றாகப் புரிகிறது. இந்த ஜம்ப்தான் எனக்கு நெருடிக்கொண்டே இருந்தது. மாதவனின் கதாபாத்திரத்தில் பெரும்பாலும் எந்தப் பிரச்னையும் இல்லை (ஒரு பிரச்னை. அதைப் பின்னால் கவனிப்போம்). ஆனால் விஜய் சேதுபதி, கெத்தான வில்லனா, இல்லை காமெடிக் கதாபாத்திரமா, இல்லை மொக்கை ரவுடியா, இல்லை குணச்சித்திர வேடமா? ஆரம்பத்தில் இருந்து இப்படி மாறி மாறி, அந்தக் கதாபாத்திரத்தில் சுவாரஸ்யமே போய்விடும்படி எழுதப்பட்டிருக்கிறது. துவக்கத்தில் வந்த அளவு பலமான கதாபாத்திரமாகவே படம் முழுக்க இருந்திருக்கவேண்டும். அப்படி இருந்திருந்தால் (ஒரு கனமான வில்லனாக), இந்தப் படம் இன்னொரு தளத்துக்குச் சென்றிருக்கும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. என்னால் வேதாவோடு ஒன்றவே முடியவில்லை.

அடுத்து, இந்தக் கதாபாத்திரம் பலரையும் கொன்றிருக்கிறது. அப்படியென்றால் அது வில்லன் தானே? இதே பிரச்னைதான் கபாலியில் ரஜினிகாந்த்தின் கதாபாத்திரத்துக்கும் இருந்தது. கபாலி ஒரு கடத்தல்காரன். ஆனால் அவனை காந்தியாக சித்தரிக்க முயன்றதால், அந்தக் கதாபாத்திரம் பல இடங்களில் ஜம்ப் அடித்தது. அதேதான் இங்கும்.

2. விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி, ஒரு மாஸ் ஹீரோவாக உருமாறிவிட்டார். ஆனால், அவரது இந்தக் கதாபாத்திரத்தை மட்டும் எடுத்து ஆராய்ந்து பாருங்கள். வேதா என்ற வடசென்னை ரவுடியாக அவரால் நன்றாக நடிக்க முடிந்திருக்கிறதா? (வடசென்னை ரவுடி என்பதே ஒரு கொடூரமான க்ளிஷே. சென்னையைப் பற்றியே அறியாமல் இருந்தால்தான் வடசென்னை ரவுடி என்ற, அடித்துத் துவைக்கப்பட்ட அரதப் பழைய க்ளிஷேவை உபயோகப்படுத்தமுடியும். அதை விட்டுவிடுவோம்).

சூது கவ்வுமில் விஜய் சேதுபதி நடித்தபோது, தாஸ் கதாபாத்திரத்துக்கு அப்படியே பொருந்தினார். அதேபோல், காதலும் கடந்து போகும் படத்திலும் கதிரவனாக அப்படியே இருந்தார். காரணம், விஜய் சேதுபதியை நன்றாக அறிந்த நலனால் அந்த இரண்டு கதாபாத்திரங்களும் எழுதப்பட்டிருந்தன. அதுவே, இப்போது ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘தர்மதுரை’, ‘இறைவி’, ’கவண்’, ‘றெக்க’, ‘ஆண்டவன் கட்டளை’, ’சேதுபதி’, ’நானும் ரவுடிதான்’ ஆகிய படங்களில் எப்படி நடித்திருந்தார்? நடிப்பதற்கென்று எந்தவிதமான முயற்சியும் செய்யாமல், ஜஸ்ட் லைக் தட் வசனங்களைப் பேசிவிட்டுச் செல்பவராகவே இருந்தார். ஆரம்பகால ‘பீட்ஸா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படங்களில் இந்தப் பிரச்னை இல்லை. அதாவது, அதிலெல்லாம் உடலையும் கொஞ்சம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஓரளவு நடிக்கவும் செய்தார். ஆனால் அவற்றுக்குப் பிறகு, கதாபாத்திரமாக மாறி நடிக்கும் தன்மை அவரிடம் குறைந்துகொண்டே வருகிறது. உடலும் அவரது கட்டுப்பாட்டில் இல்லை. எல்லாப் படங்களிலும் ஒரேபோன்று நடித்தால் எப்படி? இந்தப் படத்தில், தாராளமாக சூது கவ்வுமில் இருந்தே நான்கைந்து சீன்களை வெட்டி வைத்திருந்தாலும் தெரிந்திருக்காது. அப்படி இருக்கிறது அவரது நடிப்பு (எனது பீட்ஸா விமர்சனத்தில், 2012ல், விஜய் சேதுபதி பற்றி நான் என்ன எழுதியிருக்கிறேன் தெரியுமா? இதோ – //விஜய் சேதுபதி, இன்னும் கடினமாக உழைக்கவேண்டும். ஜாலியாக நடிப்பதுபோன்ற மாயை – சசிகுமார் பாணி expressionless நடமாட்டம் உதவாது// – இந்த வரிகள்தான்).

அவசியம் விஜய் சேதுபதி தன்னை ஒருமுறை கவனிக்கவேண்டும். இனியாவது படத்துக்குப் படம் கொஞ்சமாவது மாறுபட்டு நடிக்கவேண்டும். ஒரேபோன்ற நடிப்பு இனி உதவாது. அவரது டயலாக் மாடுலேஷன், உடல்மொழி, நடனம் எல்லாமே கடந்த நான்கைந்து வருடங்களில் துளிக்கூட மாறவில்லை. கொஞ்சம் வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைப்பதால் தப்பித்து வருகிறார் (இனியும் அது நடக்காது. ஒரே போன்ற கதாபாத்திரத்தையே சூது கவ்வும், காதலும் கடந்துபோகும், விக்ரம் வேதா என்று நடித்துக்கொண்டே இருக்கிறார்).

3. திரைக்கதை

படத்தின் மிகப்பெரிய பிரச்னை, இதன் திரைக்கதை. ஏன் என்று சொல்கிறேன். நான் ஏற்கெனவே சொன்னபடி, இதன் கட்டமைப்பு பலமானது. விக்கிரமாதித்தன் கதை – அதில் வேதாளம் கூறும் கதைகள் – அதில் விக்கிரமாதித்தன் முடிவைச் சொல்வது – அதன்மூலம் தன் வாழ்க்கையைப் பற்றியே அறிவது என்பது உண்மையில் அட்டகாசமான கட்டமைப்பு. ஆனால் அதில் வருவது என்ன என்று பார்த்தால், மூன்றுமே ஃப்ளாஷ்பேக் கதைகள். ஃப்ளாஷ்பேக்கில் ஒன்றும் தவறில்லைதான். ஆனால் அதில் இறுதியில் வேதா கேட்கும் கேள்விகளுக்கான விடைகளை, பள்ளியில் படிக்கும் மாணவன் கூடச் சொல்லிவிடுவானே? அத்தனை சுலபமான கேள்விகள் அவை. கூடவே, முதல் கதையைத் தவிர, பாக்கி வரும் இரண்டு கதைகளுமே மிகவும் மெதுவானவை. தொய்வு நிறைந்தவை.

அடுத்ததாக, படத்தில் முன்வைக்கப்படும் கதை என்ன? வேதாவின் கேங்ஸ்டர் கும்பல், அதன் நடுவே ஒரு துரோகி, அவனால் போலீஸ் அதிகாரி விக்ரமுக்கு நேரும் இழப்பு என்பதுதானே? இதுதானே ரிசர்வாயர் டாக்ஸ் காலகட்டத்தில் இருந்தே நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்? இந்தக் கதை வலுவான கதை இல்லையே? இதில் என்ன புதுமை இருக்கிறது? தன்னைச்சுற்றி இருக்கும் சதிவலையை விக்ரம் உணர்கிறான் என்ற கருத்து நல்ல கருத்துதான். ஆனால் எப்படி என்று கவனித்தால், வேதாவுடன் இருக்கும் ஒரு நபர், தான் தான் கேங்ஸ்டராக ஆகியிருக்கவேண்டும் என்ற கோபத்தால் போலீசுக்குப் பணம் கொடுத்து, வேதாவின் கும்பலில் ஒவ்வொருவராகத் தீர்த்துக்கட்டுகிறான் என்பதில் சுவாரஸ்யமான விஷயமே இல்லையே? மிக எளிதில் யூகிக்கக்கூடிய விஷயமாக அல்லவா அது இருக்கிறது?

இதை, ட்விஸ்ட் என்ற பெயரில் இறுதியில் கொண்டுவதுதான் இந்தப் படத்தின் மிகப்பெரிய பிரச்னை. உண்மையில் இன்னும் கொஞ்சம் உழைத்திருந்தால், தமிழில் வந்திருக்கக்கூடிய சிறந்த க்ரைம் த்ரில்லர்களில் ஒன்றாக இந்தப் படம் மாறியிருக்கும். ஏனென்றால், விக்ரம் திறமையான போலீஸ்காரன். ஆனால் துவக்கத்தில் இருந்து, தன்னைச்சுற்றி இருக்கும் போலீஸ்காரர்கள் பணத்தில் திளைப்பதைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறான் என்பது நம்பவே முடியவில்லை. ஒரு மொக்கை போலீஸ் என்றால் நம்பலாம்.  விக்ரமோ, ராகவன் போலத் தனது இன்ஸ்டிங்க்ட்டை உபயோகப்படுத்தும் அளவு திறமைசாலி. ஆனால் அவனுக்கு யாரைப்பற்றியும் தெரியவில்லை என்பது துளிக்கூடப் பொருந்தாமல் இடிக்கிறது. துவக்கத்தில் இருந்தே மெல்ல மெல்ல அவன் ஒவ்வொரு விஷயமாக வேதாவின் மூலமாகப் புரிந்துகொண்டு, இவர்களைப் பற்றி மெல்ல மெல்ல அறிந்து, இரு குறிப்பிட்ட இடத்தில் எல்லாமே அவனுக்குப் புரிந்தால் நன்றாக இருந்திருக்கும். மாறாக, அத்தனை உண்மைகளும் ஒரே இடத்தில் பளிச் என்று புரிவதுதான் திரைக்கதையின் பலவீனம். அதுவும் எப்படி? ஆரம்பத்தில் வந்த டயலாக்- மகனைப் பள்ளியில் எக்கச்சக்க ஃபீஸ் கட்டிச் சேர்ப்பது, தங்கைக்கு எஞ்சினியரிங் மாப்பிள்ளை – எல்லாமே ஒரே காட்சியில் வந்துவிடுகிறது. இவைகளே இயல்பில் மிகவும் வீக்கான சம்பவங்கள். அவற்றின் மூலம்தான் ஹீரோவுக்கு எல்லா உண்மைகளும் புரிகிறது என்பதை எப்படி நம்பமுடியும்?

ஒரு நல்ல கதைதான் நல்ல திரைக்கதையாக மாறும். ஒரு சராசரிக் கதை, நல்ல திரைக்கதையாக மாறும் வாய்ப்புகள் குறைவே. அந்தப் பிரச்னைதான் இது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஆடியன்ஸுக்கு எதெல்லாம் பிடித்திருக்கிறது என்பது அவர்களின் responseஇலேயே தெரிகிறது. விஜய் சேதுபதியின் எண்ட்ரி, அவர் மாதவனை அடித்துவிட்டுத் தப்பிப்பது, க்ளைமாக்ஸ் ட்விஸ்டை மாதவன் புரிந்துகொள்ளும் இடம், க்ளைமாக்ஸ் சண்டை, மற்றும் படம் முடியும் நேரத்தில் வரும் standoff. இவைகள் ஓரளவு எனக்குமே பிடித்திருந்தன. தனிப்பட்ட காட்சிகளாகப் பார்க்கும்போது. ஆனால் ஒட்டுமொத்தப் படத்தில் இருக்கும் அத்தனை பிரச்னைகளையும் இந்தக் கைதட்டல் காட்சிகளால்  மறந்துவிடவேண்டும் – படத்தைக் கட்டாயம் பாராட்டியே ஆகவேண்டும் என்றால் அது என்னால் இயலாது. உண்மையில் அட்டகாசமாக வந்திருக்கவேண்டிய கதையில், பல இடங்களைக் கோட்டை விட்டுவிட்டனர் என்றே சொல்ல நினைக்கிறேன். அதுதான் விக்ரம் வேதாவைப் பற்றிய எனது விமர்சனம்.

ஸ்லோ மோஷன் காட்சிகளும், அதற்கேற்ற நல்ல பின்னணி இசையும், பில்டப் காட்சிகளும் எப்போதும் படத்தைக் காப்பாற்றிக்கொண்டே இருக்கமுடியாது. திரைக்கதையில் அதனைச் சாதிக்கவேண்டும். திரைக்கதை வலுவாக இல்லாவிட்டால், இந்தப் பிற விஷயங்கள் படத்தைக் காப்பாற்றுவது இயலாது. ஆனால், ஒரு விஷயம் – தமிழ்நாட்டில் கட்டாயம் ‘தலைவா’ என்று அலறவைக்கும் பில்டப் காட்சிகள், ஸ்லோ மோ, பின்னணி இசை, ஸ்டார்களின் கால்ஷீட் ஆகியவையே, மெதுவான காட்சிகளை மறக்கடித்துவிட்டு ஒரு படத்தைக் காப்பாற்றப் போதுமானவைதான். இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் விக்ரம் வேதா. ஆரண்ய காண்டம், சூது கவ்வும், தனி ஒருவன் போன்ற படங்களின் வரிசையில் வந்திருக்கவேண்டிய படம் – அப்படித் திரைக்கதையில் கவனம் செலுத்தாததால், ஒரு வெற்றிப் படமாக மட்டுமே இருந்துவிட்டுப் போய்விடப்போகிறது. சில வாரங்களில் இப்படம் மறக்கப்பட்டுவிடக்கூடிய சாத்தியக்கூறுகளே அதிகம். அதில் எனக்கு வருத்தமே.

Facebook Comments

Sharing is caring!

fb Comments

comments

  Comments

8 Comments

 1. Nila

  Thala, I am waiting for Ur Dunkirk review. Seekram post panunga thala.

  Reply
  • Vasanthakumar

   Yes boss I am also waiting. Last month ur posted only one?

   Reply
  • Shan

   me too…

   Reply
 2. Rajveer

  15July அன்று Netflix ல் போர் பற்றிய படங்களை தேடிகொண்டிருக்கயில் கண்ணில் பட்டது welcome to the punch படம்பார்த்தேன், நான் தேடியது கிடைக்கவில்லை. நேற்று விக்ரம் வேதா படம் பார்த்தேன்.ஏனோ இரு படத்தின் கதையும் ஒருபோலவே தோன்றியது..

  Reply
 3. Vasanthakumar

  Super reivew boss you are the one giving such a detailed review
  Pls share Thani oruvan film review. I Could’nt find ur review any ware

  Reply
 4. கௌ

  //படத்தைக் கட்டாயம் பாராட்டியே ஆகவேண்டும் என்றால் அது என்னால் இயலாது//
  ஞாயம்தான். உங்க ‘ஐ’ பட விமர்சனம் ஞாபகம் வர்றத தவிர்க்கமுடியல. RP ராஜநாயஹம் சொல்றமாதிரி ‘விளக்கெண்ணைய எடுத்து குண்டி கழுவுன கதையா இருக்கும் ‘ஐ’யா வோட விமர்சனம் 🙂

  Reply

Join the conversation