Malayalam Films – The New Wave

by Rajesh January 22, 2018   Cinema articles

Sharing is caring!

ஒரு சில மாதங்கள் முன்னர் ‘அயல் சினிமா’ வின் முதல் இதழுக்காக நான் எழுதிய கட்டுரை இது. இரண்டாவது இதழில் இதன் இரண்டாம் பாகம் வெளிவந்தது. அதை ஒரே கட்டுரையாக இங்கே கொடுக்கிறேன்.


சமகாலத் தமிழ், மலையாளம் ஆகிய திரைப்படங்களுக்கு ஒரு சிறிய ஒற்றுமை உண்டு. இந்த இரண்டிலும், New Wave என்று அழைக்கப்படக்கூடிய புதிய அலை, கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில்தான் துவங்கியது. ட்ராஃபிக் திரைப்படம் மலையாளத்தில் வெளியான ஆண்டு 2011 ஜனவரி. தமிழில் ‘அட்டகத்தி வெளியான ஆண்டு 2012 ஆகஸ்ட். தமிழில் வேண்டுமானால் இந்தப் புதிய அலை ஒரு குறிப்பிடத்தகுந்த சொல்லாக இருக்கலாம். ஆனால் மலையாளத்தில், ஏற்கெனவே ஒரு புதிய அலை எப்போதோ வந்திருக்கிறது. கே.ஜி. ஜார்ஜ், அடூர் கோபாலகிருஷ்ணன், பரதன், பத்மராஜன் அரவிந்தன் முதலிய இயக்குநர்கள் உருவான எழுபதுகளைத்தான் சொல்கிறேன். இவர்கள் கையாளாத கருக்களே இல்லை என்னும் அளவு, அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் முற்றிலும் வித்தியாசமான படங்களைக் கொடுத்தவர்கள் இவர்கள். இதுதான் மலையாள சினிமாவின் முதல் புதிய அலை. இதன்பின்னர்தான் தற்போது மற்றொரு புதிய அலை வந்திருக்கிறது எனலாம்.

இப்போதைய புதிய அலையில், ராஜேஷ் பிள்ளை, லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி, வினய் கோவிந்த், ரோஷன் ஆண்ட்ரூஸ், அன்வர் ரஷீத், வினீத் ஸ்ரீனிவாசன், ராஜீவ் ரவி, அல்ஃபோன்ஸ் புத்திரன், ஆஷிக் அபு, சமீர் தாஹிர், அமல் நீரட், அஞ்சலி மேனன், மார்ட்டின் ப்ரக்கட், திலீஷ் போத்தன் முதலியவர்கள் உட்பட்ட ஒரு பெரும் படையே வந்து குதித்திருக்கிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், இந்த இயக்குநர்கள் தவிர, இவர்களது படங்களில் ஒளிப்பதிவாளர்களாகப் பணிபுரியும் ஷைஜு காலித், சுஜித் வாசுதேவ், ஜோமோன்.டி. ஜான், லோகநாதன் ஸ்ரீனிவாசன், ராஜீவ் ரவி, அமல் நீரட், சமீர் தாஹிர் (இவர்கள் இயக்குநர்களும் கூட), ப்ரதீப் நாயர், அபிநந்தன் ராமானுஜம், ப்ரதீஷ்.எம்.வர்மா, கிரீஷ் கங்காதரன், ஆர். திவாகரன், ஆனந்த். சி. சந்திரன் முதலியவர்களும் சரி, இசையமைப்பாளர்களாக இருக்கும் ராஜேஷ் முருகேசன், கோபி சுந்தர், ப்ரஷாந்த் பிள்ளை, ரதீஷ் வேகா, அல்ஃபோன்ஸ் ஜோஸஃப், பிஜிபால், ரெக்ஸ் விஜயன், ராஹுல் ராஜ் முதலியவர்களும், எடிட்டர்களாகப் பணிபுரியும் டான் மேக்ஸ், மகேஷ் நாராயணன், வி.சாஜன், விவேக் ஹர்ஷன், ப்ரவீன் ப்ரபாகர் ஆகியவர்கள் அத்தனை பேரும் இளைஞர்களே. எங்காவது ஓரிரு விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், தொழில்நுட்ப ரீதியாக இவர்கள் அத்தனை பேரும், ஒரே காலகட்டத்தில், ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு வந்து குதித்தது ஆச்சரியகரமான விஷயம். இது மட்டும் இல்லாமல், இப்படங்களில் நடிக்கும் ஃபஹத் ஃபாஸில், துல்கர் சல்மான், நிவின் பாலி, இஷா தல்வார், நஸ்ரியா, பார்வதி, நித்யா மேனன், ரீமா கலிங்கல், ஆஸிஃப் அலி உட்பட்டவர்களும் இதேபோல இளைஞர்கள்.

இப்படி ஒரு பெரும் பட்டாளமாக இவர்கள் வந்து, பலப்பல படங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் தற்போதைய காலகட்டம் போல மலையாளப்படவுலகம் இத்தனை பரந்துவிரிந்து  இருந்ததில்லை என்றுவேண்டுமானால் அவசியம் சொல்லமுடியும்.

இந்த மலையாளப் புது அலையுடன் தமிழில் ஏற்பட்ட புது அலையை ஒப்பிட்டால், இங்கே தமிழில் வெறும் சலனங்களே இதுவரை நிகழ்ந்துள்ளன என்றுதான் சொல்லவேண்டும். அட்டகத்தி என்ற அற்புதமான படத்தில் துவங்கிய இந்தப் புதிய அலை, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜிகர்தண்டா, தெகிடி, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, காதலும் கடந்து போகும், இறைவி, காக்காமுட்டை, குற்றம் கடிதல், விசாரணை, துருவங்கள் பதினாறு, மாநகரம், மரகத நாணயம், அறம், அருவி மற்றும் இவற்றைப் போன்ற பல்வேறு புதிய படங்களை எடுத்துக்கொண்டு ஆராய்ந்தாலும், ஒரு மகேஷிண்டே ப்ரதிகாரம் போலவோ, ஒரு நார்த் 24 காதம் போலவோ, ஒரு கிளி போயி போலவோ, ஒரு அன்னையும் ரசூலும் போலவோ, உஸ்தாத் ஹோட்டல் போலவோ, இன்னும் மும்பை போலீஸ், 1983, தட்டத்தின் மறையத்து, சாப்பா குரிசு (தமிழில் வந்து படுதோல்வி அடைந்தது) போன்ற படங்கள் நமக்கு அளித்த மிக வித்தியாசமான களங்களும் கதாபாத்திரங்களும் போலவோ தமிழில் நமக்கு அவ்வளவாகக் கிடைக்கவில்லை என்றே சொல்லவேண்டும். நான் சொன்ன தமிழ்ப்படங்கள் நல்ல படங்கள்தான். சந்தேகமே இல்லை. ஒவ்வொன்றும் அவை எடுத்துக்கொண்ட genreக்கு தவறாமல் எடுக்கப்பட்ட படங்களே. ஆனால் நான் சொல்ல வருவது – தமிழில் பல restrictions இன்னமும் இருக்கின்றன.

தமிழில் வந்த புதிய அலையைச் சேர்ந்த பல திரைப்படங்களும், வணிக வெற்றி என்ற ஒரு விஷயத்தையே கருத்தில் கொண்டு அமைந்தன. இதற்குத் தயாரிப்பாளர்களே பெரும்பாலும் காரணம். நார்ட் 24 காதம் போன்ற ஒரு படத்தைத் தமிழில் எடுப்பதற்கு சாத்தியக்கூறுகள் மிகக்குறைவு, காரணம், எந்தச் செயலுமே செய்யாமல், ஒரு கும்பலின் கூடவே அலைந்துகொண்டிருக்கும் கதாபாத்திரத்தை இங்கே செய்ய நாயகர்களே நம்மிடம் இல்லை. இதுதான் தமிழின் புதிய அலையின் பிரச்னை. அதேபோல், இந்தப் புதிய அலையில் வெளிவந்த இயக்குநர்களான பா. இரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ், நலன் குமரசாமி, பாலாஜி தரணிதரன், தெகிடி ரமேஷ், முண்டாசுப்பட்டி ராம், இன்று நேற்று நாளை ரவிக்குமார், காக்காமுட்டை மணிகண்டன், பிரம்மா, கோபி நயினார் முதலியவர்கள் திறமைசாலிகளே. ஆனால் அவர்களுக்கேற்ற புதிய களங்களை அவர்கள் தேர்வுசெய்துகொண்டு படங்கள் இயக்குவதற்கு, தமிழின் வணிகப்பட ஃபார்முலா குறுக்கே நிற்கிறது. இல்லையென்றால் இவர்களாலும் அழகான, மனதைத்தொடும் படங்களை அளிக்க இயலும் என்பது என் கருத்து.

இந்தப் புதிய அலையில் வெளிவந்த மலையாளப்படங்களை சற்றே உன்னிப்பாகக் கவனித்தால், அவற்றின் கதாபாத்திரங்கள் எப்படியெல்லாம் வித்தியாசப்படுகின்றன என்பதிலும், வணிகப்படங்களே ஆனாலும், அந்தப் படங்களின் கதைகள் எப்படி வித்தியாசப்பட்டிருக்கின்றன என்பதையும் நம்மால் எளிதில் அறிய முடியும். அறுபதுகளில் துவங்கி எண்பதுகளில் முடிந்த ஹிந்தி Off beat படங்களை இங்கே நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். இப்படங்களின் பிதாமகர்கள் ரிஷிகேஷ் முகர்ஜி, பாஸு சட்டர்ஜீ, பாஸு பட்டாச்சார்யா ஆகியோர். இவர்களின் படங்களில் மத்தியதரக் குடும்பங்களே பிரதானமான கதாபாத்திரங்கள். அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள், அவர்களுக்குள் இருக்கும் உறவுமுறைகள், அவர்களின் கனவுகள், இடம்பெயர்ந்து வேறு இடத்துக்குச் செல்லும் அவர்களின் இடர்ப்பாடுகள் ஆகியவையே முக்கியமான அம்சங்களாக இருக்கும். இத்தனைக்கும் இவைகள் கலைப்படங்கள் இல்லவே இல்லை. இவையுமே தரமான வணிகப்படங்களாகவே அமைந்தன. ஆனால் எடுத்துக்கொண்ட கருப்பொருளால் இவை Off beat படங்கள் என்று அழைக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட இப்படிப்பட்டவைதான் இந்தப் புதிய அலையைச் சேர்ந்த மலையாளப்படங்கள்.

இயக்குநர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரியின் சமீபத்திய ‘அங்கமாலி டைரீஸ் படத்தை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். அங்கமாலி என்ற சிற்றூரில் பிறந்து வளர்ந்த சில பொடியர்கள், அந்த ஊரில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ரவுடிகளாக எப்படி மாறுகிறார்கள்; அப்படி ரவுடிகள் ஆனதும் அவர்களுக்குள் என்னென்ன நடக்கிறது என்பதைத் துளிக்கூட சுவாரஸ்யம் குன்றாமல் அவரால் முற்றிலும் புதுமுகங்களைப் போட்டுச் சொல்ல முடிந்திருக்கிறது. படத்தின் மையமான கருப்பொருள் – பன்றி இறைச்சி வணிகம். அந்த ஊரில் இதுதான் பிரதான தொழில். அந்த ஊரில் இருந்து சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த அத்தனை ஊர்களுக்கும் பன்றி இறைச்சி அனுப்பப்படுகிறது என்பதைப் படத்தின் வாயிலாகவே அறியலாம். அங்கமாலி என்ற ஊரைப்பற்றிய மிகச்சிறப்பான அறிமுகமாகவும் இப்படத்தை நாம் கருத முடியும். படத்தில் வரும் கதாபாத்திரங்களான வின்ஸெண்ட் பெபே, 10ML’ தாமஸ், ரவி, U Clamp ராஜன், வர்க்கி, மரம்கொத்தி சிஜோ, கானாகூனா மார்ட்டி, லிச்சி ஆகியோரின் பின்புலத்தைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவர்கள் எப்படியெல்லாம் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்த்தால், இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் தமிழில் வரவே இயலாது என்று புரியும். பன்றி இறைச்சியை மையமாகக் கொண்ட படம் ஒன்றைத் தமிழில் எடுக்க முடியுமா என்றே தெரியவில்லை.

கூடவே, திருமணம் ஒன்றுக்குச் செல்லும் பெண் ஒருத்தி, அங்கே மது கிடைக்குமா என்று வினவுகிறாள். மது அருந்திவிட்டு, அட்டகாசமான கொண்டாட்டத்துடன் விழுந்து புரண்டு ஆடுகிறாள். ஆசைதீர ஆடிவிட்டு, மெல்லத் தள்ளாடிக்கொண்டே, மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் சாலையில் தள்ளாடிக்கொண்டே நடந்துசெல்கிறாள். லிச்சியின் கதாபாத்திரத்தைப் பற்றிய ஏராளமான தகவல்கள் போகிற போக்கில் இப்படி நம்முன் கொட்டப்படுகின்றன. எதை எடுப்பது, எதை விடுவது என்பதே தெரிவதில்லை. அது மட்டும் அல்ல – அங்கமாலி டயரீஸ் படம் பார்த்தால், நாட்டு வெடிகுண்டு செய்யும்போது மரத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டுதான் தயாரிக்கவேண்டும் என்ற தகவலும் தெரியவருகிறது. கூடவே, பன்றிகளின் முகத்தில் எப்படித் துணியைப் போடுவது, அங்கமாலியில் அதிகம் உண்ணப்படும் உணவுகள் என்னென்ன, அங்கமாலியில் போய் வெஜிடேரியன் உணவை ஆர்டர் செய்தால் எப்படி இருக்கும், அங்கமாலியில் தலையெடுக்கும் மதவாதக் கட்சிகளின் பின்னணி, கடுமையான ரவுடிகளாக இருந்தாலும், பிரச்னை முடிந்துவிட்டது என்றால் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்திக் கொண்டாடும் மனிதர்கள் என்று ஏராளமான தகவல்கள். இவற்றுடன் சேர்ந்து, துளிக்கூட அலுக்காத ஒரு கதையும் சொல்லப்படுகிறது.

லிஜோ ஜோஸ் பெள்ளிசேரியின் ‘ஆமென் படம்தான் எனக்குத் தனிப்பட்ட அளவில் மிகவும் பிடித்தமானது. அந்தப் படத்தின் அளவு அங்கமாலி டயரீஸ் என்னைப் பாதிக்கவில்லைதான். இருந்தாலும், படத்தில் குறை என்று எதுவுமே சொல்ல இயலாது என்பதே படத்தின் வெற்றி.

அங்கமாலி டயரீஸ் ஒரு சிறிய உதாரணம் மட்டுமே. இன்னும் இதுபோன்ற படங்களான கம்மட்டிப்பாடம், இயோபிண்டே புஸ்தகம், ஒழிவு திவசத்தே களி முதலிய படங்களைப் பற்றி ஏராளமாக எழுத இயலும். சுருக்கமாகக் கவனித்தால், கம்மட்டிப்பாடத்தில் ஒரு வரலாறே சொல்லப்பட்டது. எர்ணாகுளத்தின் கம்மட்டிப்பாடம் என்ற குப்பத்தில் வாழ்ந்துவந்த தலித்கள் எப்படி ஏமாற்றப்பட்டு அவர்களின் நிலங்களை சொற்ப விலைக்கு விற்றுவிட்டுச் சென்றார்கள், அவர்களின் வியர்வை சிந்திய இடங்கள் எப்படி மாடமாளிகைகளாக ரியல் எஸ்டேட் கும்பல்களால் மாற்றப்பட்ட்டன என்ற துயரம் நிரம்பிய வரலாறு. ஆனால் அப்படம் துயரமான மெலோடிராமாவாகவா இருந்தது? எத்தனை கொண்டாட்டத்துடன் அப்படம் இருந்தது? அதிலும் எத்தனை விதம்விதமான கதாபாத்திரங்கள்? நண்பனைத் தேடிவரும் ஒரு நபரின் வழியாக, கம்மட்டிப்பாடத்தின் ஒட்டுமொத்தப் பின்னணியும் எப்படி உலகுக்கே சொல்லப்பட்டது? நான்கு முக்கியமான கேரள அரசு விருதுகளை இப்படம் அள்ளியது.

இவைபோன்ற கனமான பின்னணி இல்லாமல், எளிய காதல் கதைகளை எடுத்துக்கொண்டாலும், தட்டத்தின் மறையத்து, உஸ்தாத் ஹோட்டல், சால்ட் அண்ட் பெப்பர், அன்னையும் ரசூலும், என்னு நிண்டே மொய்தீன், பெங்களூர் டேஸ், ப்ரேமம், கிஸ்மத், சார்லீ, ஆமென், நேரம், 100 டேஸ் ஆஃப் லவ், ஓம் சாந்தி ஓசானா, அனார்கலி, நீனா, மகேஷிண்டே ப்ரதிகாரம் (இதை ரொமாண்டிக் படம் என்று குறுக்கிவிட இயலாதுதான். ஆனால் காதல் இதில் அருமையாகக் கையாளப்பட்டிருப்பதால் இங்கே கொடுக்கிறேன்) என்று துவங்கி ஏராளமான படங்களைப் பற்றி எழுதிவிடமுடியும். இவை ஒவ்வொன்றிலும் இடம்பெறும் காதல், தனித்துவமானது. ஒரே போன்ற உணர்வைத் தராமல், இந்த ஒவ்வொரு படமும் மிகவும் வித்தியாசமான உணர்வுகளைத் தரவல்லவை. உதாரணமாக, உஸ்தாத் ஹோட்டலில், கரீம் பாயின் காதல் எத்தனை குறும்பானது? எத்தனை ஆழமானது? சுலைமானி ச்சாய் குடிக்கும்போதெல்லாம் இவரது நினைவுதான் இப்போதெல்லாம் வருகிறது (பெங்களூரில் மூலைக்கு மூலை சுலைமானி கடைகள் உண்டு. அத்தனையும் அருமையான தேநீர் வழங்கவல்லவை). இதைப்போலவே, ஆமென் படத்தில், பாதிரியாரான வின்ஸெண்ட் வட்டோளிக்கும் வெளிநாட்டுப் பெண்ணான மிஷெலுக்கும் இடையே மலரும் அன்பு, சால்ட் அண்ட் பெப்பரில் பரம்பில் காளிதாஸனுக்கும் மாயா க்ருஷ்ணனுக்கும் இடையே துளிர்க்கும் காதல், என்னு நிண்டே மொய்தீனில் மொய்தீனுக்கும் காஞ்சனமாலாவுக்கும் இடையே தோன்றிய பிரேமம்.. இப்படி ஒவ்வொரு படத்தையும் பற்றி எழுதிக்கொண்டே போகலாம்.

காதல் படங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தாலும், முற்றிலும் வித்தியாசமான பின்னணி கொண்ட பல படங்கள் மலையாளத்தில் உண்டு. கிளி போயி படம் ஒரு உதாரணம். Stoner படங்கள் என்றே வெளிநாடுகளில் ஒரு வகை உண்டு. கஞ்சா, ஹெராயின் முதலிய லாகிரி வஸ்துக்களால் உண்டாகும் பிரச்னைகள் பற்றிய படங்கள். இவைகளில் இடம்பெறும் பிரதான கதாபாத்திரங்கள், இவைகளை உபயோகித்து, ஒருவித மயக்க நிலையில் செய்யும் காட்சிகள் படங்களில் இடம்பெறும். Fear and Loathing in Las Vegas, The Big Lebowski, Herold & Kumar சீரீஸில் ஒன்றிரண்டு படங்கள், Pinapple Express ஆகியவை ஒருசில உதாரணங்கள். இந்த வகையிலும் மலையாளப் படங்கள், இந்தியாவுக்கே முன்னோடிகளாகத் திகழ்கின்றன. கிளி போயி அப்படிப்பட்ட ஒரு ஸ்டோனர் படம். படத்தில், நாயகனும் அவன் நண்பனும், கோவா சென்று வருகையில் அவர்களிடம் மாட்டிக்கொள்ளும் ஹெராயினும், அதனால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுமே படம். இதில் உபயோகிக்கப்படும் ‘கெட்ட வார்த்தைகள் என்று சொல்லப்படும் cuss wordsகளின் உபயோகம் பிரம்மாதமாக இருக்கும். உண்மையில் இளைய தலைமுறையினர் இப்படித்தான் வாழ்கின்றனர். இதைப்போன்ற வசனங்கள் தமிழில் இடம்பெற்றால் படமே வெளிவர இயலாது. குறிப்பாக, இதில் ஒரு பெண் ஒரு காட்சி முழுக்க fuck fuck fuck fuck என்று சொல்லிக்கொண்டே ஜாலியாக கஞ்சா புகைப்பார். இவற்றையெல்லாம் தமிழில் யோசிக்கவே முடியாது. கிளி போயி போலவே, இடுக்கி கோல்ட் படமும் குறிப்பிடத்தகுந்த படம். இதிலும் இடுக்கியில் விளையக்கூடிய உலகத்தரமான கஞ்ஜா பற்றிச் சொல்லப்படுகிறது. ஆனால் படத்தின் கரு வேறு. தாங்கள் பள்ளியில் படித்த காலத்தை நினைவுகூர்ந்து, அங்கே பயணப்படும் சில நடுத்தர வயது மனிதர்களின் கதை. இதிலும் ஒரு உணர்வுபூர்வமான திருப்பம் உண்டு.

இவை மட்டும் அல்லாமல், heist films என்று உலகப்படங்களில் கையாளப்படும் வகையும் மலையாளத்தில் உண்டு. கொள்ளையடிப்பது. ஏதேனும் பெரிய அளவு பணத்தையோ அது போன்ற விலையுயார்ந்த வஸ்துக்களையோ திட்டமிட்டுக் கொள்ளையடிப்பது. Con என்று அழைக்கப்படும் விதமான படங்கள். உதாரணமாக, சப்தமஸ்ரீ தஸ்கரஹா படத்தைச் சொல்லலாம். இதில் ஏழு திருடர்கள் ஒன்றுசேர்ந்து, அவர்களில் ஒருவரை வஞ்சித்த வில்லனின் பணத்தை ஒட்டுமொத்தமாக எப்படிக் கொள்ளையடிக்கிறார்கள் என்று சிரிக்கச்சிரிக்கச் சொல்லப்பட்டிருக்கும். இதேபோல் கோஹினூர் படமும், எண்பதுகளில் ஒரு நகைக்கடை சில பலே திருடர்களால் எப்படி சாமர்த்தியமாகக் கொள்ளையடிக்கப்பட்டது என்று சொல்லக்கூடிய படம். இந்த இரண்டு படங்களிலும், குறிப்பிடத்தகுந்த திருப்பங்கள் உண்டு.

தமிழில் Feel good என்ற வகையைச் சேர்ந்த படங்களை நான் அதிகமாகக் கண்டதில்லை. மிகவும் அரிது. ஆனால் மலையாளத்தில் இதுவும் சர்வசாதாரணமாகக் கையாளப்படுகிறது. தட்டத்தின் மறையத்து துவங்கி, இன்றைய ப்ரேமம் வரை ஏராளமான படங்கள் உண்டு. அவற்றில் குறிப்பிடத்தகுந்த படம் – சார்லீ. இந்தப் படம் எனக்கு ஏற்படுத்திய மனமாற்றம் பற்றி ஏராளமாக எழுதமுடியும். எத்தகைய துயரமோ சோகமோ இருக்கும் எப்பேற்பட்ட நபரையும், இரண்டே மணி நேரத்தில் மனம் முழுக்க மகிழ்ச்சியை நிரம்பச் செய்துவிடக்கூடிய படம் இது. ஒரு வகையில், Amelie படத்தை ஓரளவு நினைவுபடுத்தக்கூடிய கரு. ஆனால் முற்றிலும் மலையாள மண்ணுக்கேற்ற கதை. நாயகன் சார்லீ ஒரு மர்ம மனிதன். பலரது வாழ்க்கையிலும் சார்லீயின் பாதச்சுவடுகள் இடம்பெற்றிருக்கின்றன. அவர்கள் அனைவராலும் மறக்கவே இயலாத அற்புதமான மனிதனாக சார்லீ இருக்கிறான். டெஸ்ஸா என்ற பெண், இப்படிப்பட்ட நபர் தங்கியிருந்த வீட்டுக்குக் குடிவர, அங்கே அவனே கைப்பட வரைந்திருக்கும் ஒரு காமிக்ஸ் புத்தகத்தைப் படிக்கிறாள். பாதியில் முடிந்துவிட்ட அந்தப் புத்தகத்தால் சார்லீயைச் சந்திக்கவேண்டும் என்ற ஆவல் வர, அக்கதையில் இடம்பெற்றிருக்கும் ஒரு திருடனைப் பிடித்து, அவன் மூலமாக ஒவ்வொருவராகச் சந்தித்து, இறுதியில் சார்லீயைப் பார்க்கிறாளா இல்லையா என்பது கதை. இக்கதை, ஒவ்வொரு நொடியும் அத்தனை மகிழ்ச்சியுடனும் கொண்டாட்டத்துடனும் நெகிழ்வான தருணங்களோடும் சொல்லப்படுகையில், வாழ்க்கையை இப்படியெல்லாம் வாழ்ந்து பார்க்கவேண்டும் என்ற ஆசை எவருக்கும் வராமல் போகாது. பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, நடிப்பு என்று அத்தனை அம்சங்களிலும் அற்புதமான சில மலையாளப் படங்களில் சார்லீயும் ஒன்று.

அதேபோல், லிஜோ ஜோஸ் பெள்ளிசேரியின் ஆமென் படத்தையும் இங்கே மறுபடி சொல்லியே ஆகவேண்டும். குமரங்காரி என்ற கிராமத்தில், மின்னிய பழம்பெருமையின் மிஞ்சிய வெறும் நினைவாகத் தங்கிவிட்ட பேண்டு வாத்தியக் குழு. ஒரு காலத்தில் சிங்கம் போல இயங்கிய எஸ்தப்பன் ஆசானின் மகன் சாலமன். எஸ்தப்பன் இறந்தபின்னர், அவரது நண்பரான லூயிஸ் பாப்பனின் ஆதரவில் பேண்டுக் குழு இயங்கி வருகிறது. எல்லாப் போட்டிகளிலும் தோற்கிறது. சாலமனுக்கு அந்தக் குழுவில் இணைந்து க்ளாரிநெட் வாசிக்கவேண்டும் என்று ஆசை. ஆனால் அவனது தாழ்வு மனப்பான்மை, அதனைத் தடுக்கிறது. அப்போது அந்தக் கிராமத்துக்கு வருகிறார் பாதிரியார் வின்ஸெண்ட் வட்டோளி. கிராமத்து மாந்தர்களை மெல்ல மாற்றி, ஒவ்வொருவரும் தங்களைப் புரிந்துகொள்ளவைக்கிறார். சாலமனின் பிரம்மாதமான வாசிப்பு வெளிப்பட, பேண்டுக்குழு ஜெயிக்கிறது. சாலமனின் காதலும் கூடவே சேர்ந்து வெல்கிறது. இத்தனை வேலைகளைச் செய்த வட்டோளி யார்? அதுதான் ஆமென். இந்தக் கதையை ஒவ்வொரு ஃப்ரேமிலும் மகிழ்ச்சியும் துடிப்பும் உணர்ச்சிகளும் பீறிட ஒரு படத்தில் அடக்க முடியுமா? அதுதான் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரியின் மாயாஜாலம். இப்படத்தில் அச்சு அசலான கதை மாந்தர்கள் உண்டு. நகைச்சுவை உண்டு. ஆடல் உண்டு. பாடல் உண்டு. மனதைத்தொடும் உணர்வுகள் உண்டு. அங்கமாலி டைரீஸை விடவும் ஆமென் தான் லிஜோ ஜோஸின் மிகச்சிறந்த படைப்பு என்பது என் கருத்து.

இவைதவிர, போலீஸ் படங்கள், சஸ்பென்ஸ் படங்கள், குடும்பச் சித்திரங்கள், பெண்ணியக் கருவை மையமாகக் கொண்ட படங்கள், வழக்கமான வணிக ஹீரோயிஸப் படங்கள், கலைப்படங்கள், பரீட்சார்த்தமான படங்கள் என்று ஒரு மிகப்பெரிய உலகமே மலையாளத்தில் தீவிரமாக இயங்கி வருகிறது. மும்பை போலீஸ் படம் எப்படிப்பட்ட கருவைக் கையாண்டது? படம் பார்க்காதவர்களுக்காக, அதன் கருவைச் சொல்லாமல் தவிர்க்கிறேன். மெமரீஸ் படத்தின் கதையை யோசித்துப் பாருங்கள். தவறு செய்த ஒருவன், அந்தத் தவறு நினைவில் இருந்து முற்றிலும் அழிந்துபோனபின்னரும், அதே தடயங்களை வைத்து, அந்தத் தவறைச் செய்தவன் அவன்தான் என்று புரிந்துகொள்ளும் வகையில் பிரம்மாதமாக எழுதப்பட்ட திரைக்கதை அது. அதேபோல், ஒரே ஒரு துளிக் கதையுடன், சம்பவங்களின் நகர்வையே மையமாக வைத்து எழுதப்பட்ட ஆக்‌ஷன் ஹீரோ பிஜு படமும் குறிப்பிடத்தகுந்த போலீஸ் படமே. ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையில் அவர் சந்திக்கும் சம்பவங்கள், அந்தச் சம்பவங்களுக்கான எதிர்வினைகள் என்றே படம் முழுதும் நகரும்.

இவைதவிர, வெளிப்படையாக அரசியல்வாதிகளின் நிஜப்பெயர்களை வசனங்களில் கொண்டுவந்து நக்கல் அடிப்பது, மதங்களையும் அரசியல் கட்சிகளையும் விமர்சிப்பது (கம்யூனிஸ்ட்களை விமர்சித்த படமான ‘தட்டத்தின் மறையத்து ஒரு உதாரணம். இதிலேயே முஸ்லிம்களின் மேலும் விமர்சனம் வைக்கப்பட்டது. அதேபோல் அங்கமாலி டைரீஸ் படத்தில் பி.ஜே.பி கட்சியின் மீது அப்பட்டமான ரவுடிகள் அடங்கிய கட்சி என்ற விமர்சனம் வைக்கப்பட்டது) போன்ற அம்சங்களை மலையாளப் படங்களில் மட்டுமே காணமுடியும். தமிழில் ஒரு படத்தில் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பி.ஜே.பி ஆகிய கட்சிகளை அவர்களின் கொடிகளைப் போட்டு விமர்சித்துவிட முடியுமா? கேரளத்தில் விமர்சனங்களுக்கு எப்போதும் தடையில்லை என்பதே மனதுக்கு மகிழ்வூட்டக்கூடிய விஷயமாக இருக்கிறது.

ஏராளமான உணர்ச்சிகள் சார்ந்த கதைக்களங்கள், அவை நடக்கும் மண்ணின் இயல்பான கதாபாத்திரங்கள், அவர்களைச் சுற்றி அமைக்கப்பட்ட தெளிவான, பார்ப்பவர்களின் மனதில் தங்கிவிடக்கூடிய கதை என்பவைதான் மலையாளப்படங்களின் பலம்.

நடிப்பு என்று வந்துவிட்டால், தமிழில் இல்லாத நடிகர்களே கிடையாது. ஒரு காலத்தில் எம்.ஆர்.ராதா, சிவாஜி கணேசன் என்று துவங்கி, இன்றைய குரு சோமசுந்தரம் வரை தமிழில் ஏகப்பட்ட நடிகர்கள் உண்டு. ஆனால் இந்த நடிகர்களின் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வகையான படங்கள் தமிழில் உள்ளனவா? சிவாஜியையே எடுத்துக்கொண்டாலும், முன்னூறுக்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்திருக்கிறார். ஆனால் அவர் தன்னை ஒப்புக்கொடுத்த இயக்குநர்கள் யார் எவர் என்று கவனித்தால், மிகமிகப் பெரும்பாலும் முற்றிலுமான வணிகப்படங்கள் இயக்கிய இயக்குநர்களையே அவர் பெரிதும் நம்பியிருந்தார் என்று விளங்கும். வணிகப் படம் என்றால், தேவர் மகனும் ஒரு வணிகப்படம்தான். பட்டாக்கத்தி பைரவனும் ஒரு வணிகப்படம்தான். முதல் மரியாதையும் முற்றிலுமே ஒரு வணிகப்படமே. சிவாஜியின் நடிப்பு வாழ்க்கையின் துவக்கத்தில் அவர் செய்த பல கதாபாத்திரங்கள் வித்தியாசமானவை. நகைச்சுவை (கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, தெனாலிராமன்), வில்லன் (அந்த நாள், திரும்பிப்பார், கூண்டுக்கிளி), குணச்சித்திரம் (எதிர்பாராதது, தூக்கு தூக்கி, மங்கையர் திலகம்) என்று பல்வேறுபட்ட கதாபாத்திரங்களில் சிவாஜி மிக அதிகமாக நடித்த காலகட்டம் இது. வீரபண்டிய கட்ட பொம்மன் படத்துக்குப் பின் இத்தகைய பரிசோதனைகளை அவர் பெரும்பாலும் மேற்கொள்ளாமல், ஒரு வசதியான வட்டத்தைத் தன்னைச்சுற்றி உருவாக்கிக்கொண்டு, அந்த வட்டத்துக்குள்ளேயே தனது நடிப்பை வெளிப்படுத்தியதோடு திருப்தி அடைந்துவிட்டார் என்றே சொல்வேன்.

இதுவேதான் சிவாஜிக்குப் பின்னர் மிகப்பெரிய நடிகர் என்று பெயரெடுத்த கமல்ஹாஸனுக்கும் நடந்தது. கமல்ஹாஸனுக்குப் பின்னர் வந்தவர்களில் விக்ரம் ஒரு நல்ல நடிகர் என்றே பலரும் சொல்கின்றனர். அவருக்கும் இதுதானே நடந்தது? இவர்கள் எல்லாருமே, அற்புதமான இயக்குநர்களைத் தேடிச் செல்லாமல், தனக்கு என்று ஒரு வட்டத்தை உருவாக்கிக்கொண்டு, அதிலேயே வணிகவெற்றி அடையக்கூடிய படங்களில் நடித்து வருகின்றனர் (கமலே தேடிச்சென்ற இயக்குநர்களில் முதன்மையானவர் என்று பரதனைச் சொல்லமுடியும். ஒரே ஒரு படம்தான் பரதனுடன் வேலை செய்தார்). அப்படியென்றால், இவர்களை நல்ல நடிகர்கள் என்று மனமார எப்படிச் சொல்லமுடியும்? பல்வேறு பரிசோதனைகளை வெற்றிகரமாகச் செய்பவன் தானே நல்ல நடிகன்? தனது வட்டத்தை விட்டு வெளியேறி, பல புதிய களங்களைத் தேடுபவன் தானே நல்ல நடிகன்? கமல்ஹாஸன், பல படங்களில் தனது நடிப்பை நிரூபித்திருக்கிறார்தான். ஆனால் அது எப்படிப் போதும்?

இதை அப்படியே மலையாளப் புதிய அலைக்குப் பொருத்திப் பார்க்கலாம். இந்தப் புதிய அலையின் தலைசிறந்த நடிகர் என்று யாரைத் திரைரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்? துல்கர் சல்மான்? நிவின் பாலி? ஆஸிஃப் அலி? ஜெயசூர்யா? பிருத்விராஜ்? இந்த்ரஜித்? ரீமா கலிங்கல்? ரெம்யா நம்பீசன்?பார்வதி? இவர்கள் எல்லாருமே நல்ல நடிகர்களே. ஆனால் இவர்களையும் தூக்கிச் சாப்பிடும் திறன் படைத்த ஒரு மகாநடிகன் தான் ஃபஹத் ஃபாஸில். இதை யாராலும் மறுக்கமுடியாது. ஃபஹத் ஃபாஸிலை மையமாக வைத்து, நடிப்பு என்ற அம்சத்தை இந்த மலையாளப் புதிய அலையில் சற்று அலசிப்பார்க்கலாம்.

ஃபஹத் ஃபாஸில் என்று ஒரு நடிகர் இருக்கிறார் என்று மக்களுக்குத் தெரியவந்த படம் என்ன? கேரளா கஃபே, காக்டெய்ல், டோர்னமெண்ட் முதலிய படங்களில் அவர் நடித்திருந்தாலும், சாப்பா குரிசு என்ற படம்தான் ஃபஹத்தை அனைத்து ரசிகர்களுக்கும் அறிமுகப்படுத்தியது. அப்படத்தின் கரு என்ன? தன்னிடம் வேலை செய்யும் பெண்ணோடு தொடர்பு வைத்திருக்கும் ஒரு பணக்காரன், தனது செல்ஃபோனைத் தொலைத்துவிட, அது இன்னொருவன் கைக்குக் கிடைக்கிறது. இந்த இருவருக்கும் நிகழும் போராட்டமே படம். இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கும் கதாபாத்திரத்தில் தமிழில் எந்த ஹீரோ நடிக்கக்கூடும் என்பதை எண்ணிப் பாருங்கள். அப்போதுதான் ஃபஹத் ஃபாஸிலின் குணம் புரியும். கதாநாயகனாகவே நடிக்கவேண்டும் என்று இல்லாமல், கதாபாத்திரத்துக்கு நன்மை செய்யவேண்டும் என்பதுதான் அவரது குணம். இதை அவரது எல்லாப் படங்களிலும் பார்க்கலாம். அதேசமயம், ஃபஹத்தும் ஆக்‌ஷன் படங்களில் நடித்திருக்கிறார். இயோபிண்டே புஸ்தகம் ஒரு உதாரணம். ஆனால் அதிலும் கதையை ஒட்டியே அவரது நடிப்பு வெளிப்பட்டிருக்கும்.

சரி. அடுத்து ஃபஹத் பிரபலமான படம் என்ன? 22 ஃபீமேல் கோட்டயம். அதில் அவரது கதாபாத்திரம் என்ன? தமிழில் ‘மாமா’ என்று மரியாதையாகச் சொல்லப்படும் பிம்ப்தான் அவரது கதாபாத்திரம். படம் பார்த்தவர்களுக்கு இது புரியும். இந்த பிம்ப் பாத்திரத்தில் தமிழில் யார் நடிப்பார்கள்? என்னதான் படத்தின் இறுதியில் ஃபஹத்தின் கதாபாத்திரம் மேல் நாம் கொண்ட எண்ணம் மாறினாலும், கிட்டத்தட்டப் படம் முழுக்கவே அவர் பிம்ப்தானே? இதற்கு அடுத்து அவர் நடித்த அன்னையும் ரஸூலும், ஆமென், 5 சுந்தரிகள், நார்த் 24 காதம், பெங்களூர் டேஸ், இயோபிண்டே புஸ்தகம், மஹேஷிண்டே பிரதிகாரம், டேக் ஆஃப், தொண்டிமுதலும் திருக்சாட்சியும் ஆகிய அத்தனை முக்கியமான படங்களிலும் ஃபஹத் ஃபாஸிலின் கதாபாத்திரங்கள் வித்தியாசமானவையே. இதுமட்டும் இல்லாமல், அந்தந்தப் படங்களில் அவரது நடிப்பைக் கவனித்துப் பாருங்கள். அப்போதுதான், தமிழின் சிறந்த நடிகர்கள் என்று கொண்டாடப் படுபவர்களுக்கும், ஃபஹத் ஃபாஸிலுக்குமான வித்தியாசம் புரியும். ஃபஹத் எப்போதும் தன்னை ஒரு ஸ்டாராக முன்னிலைப்படுத்திக்கொள்ளவே இல்லை. தனக்கென்று ஒரு வட்டமும் வைத்துக்கொள்ளவில்லை. எப்போதுமே, நடிப்புக்குச் சவாலாக விளங்கக்கூடிய கதாபாத்திரங்களையே அவர் தேர்வு செய்கிறார். இதனால்தான் அவரது படங்கள் அவ்வளவு அற்புதமாக விளங்குகின்றன. ஃபஹத்தின் படங்களையே உதாரணமாக வைத்து யோசித்துப் பாருங்கள். அந்தக் கதாபாத்திரங்களைத் தமிழில் செய்யக்கூடிய அளவு நடிகர்கள் இங்கே யார்? ‘இமேஜ்’ என்ற சிறையில் மாட்டிக்கொண்டிருப்பவர்களாக அல்லவா இங்கே நம் நடிகர்கள் உள்ளார்கள்?

இதுதான் தமிழுக்கும் மலையாளத்துக்குமான மிகப்பெரிய வித்தியாசம் என்று எண்ணுகிறேன். என்னவெனில், மலையாளத்திலுமே ஃபஹத் நடிக்கும் படங்கள், முற்றிலும் கலைப்படங்கள் அல்லவே அல்ல. அவைகளுமே வணிகப் படங்களே. ஆனால் வணிகப் படங்கள் என்று நாம் தமிழில் நினைக்கும் மாற்றவே முடியாத சட்டகம் அங்கே இல்லை. கதையைப் பொறுத்து அங்கே வணிகப்படங்களுக்குப் புதிய புதிய சட்டகங்கள் மாட்டப்படுகின்றன. எனவே அவைகளில் ஃபஹத் போன்ற நல்ல நடிகர்கள் நடித்துத் தங்களை நிரூபிக்க முடிகிறது. தமிழிலுமே அட்டக்கத்தி, குற்றம் கடிதல், விசாரணை, காக்காமுட்டை, ஆரண்யகாண்டம் என்று எப்போதாவது இப்படிப்பட்ட படங்கள் வரத்தான் செய்கின்றன. ஆனால் தமிழில் முதன்மையான நடிகர்கள் என்று கருதப்படும் யாராவது இப்படிப்பட்ட படங்களில் நடித்துள்ளார்களா? ஏன் இல்லை என்று யோசித்துப் பாருங்கள். மலையாளத்தில், சூப்பர்ஸ்டார்களாகக் கருதப்படும் மம்மூட்டியும் மோகன்லாலுமே அற்புதமான பல படங்களில் நடித்துள்ளவர்கள்தான். ஆனால் தமிழில் ‘மாஸ்’ என்ற ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு பல படங்களின் ஜீவனையும் குலைத்து, நல்ல படங்களை விரும்புபவர்களைத் திரையரங்கத்தின் பக்கமே வரவிடாமல் துரத்தித் துரத்தி அடிக்கின்றனர்.

அடுத்ததாக, மலையாளப் படங்களைப் பற்றி நான் சொல்ல நினைப்பது, அவற்றின் கதையம்சம். சற்றே யோசித்துப் பார்க்கலாம். ஒரு காலத்தில், கல்யாணப்பரிசு, நெஞ்சிருக்கும் வரை, அபூர்வ ராகங்கள், பதினாறு வயதினிலே, தண்ணீர் தண்ணீர், புன்னகை மன்னன், கிழக்குச் சீமையிலே, சேது, பிதாமகன், அன்பே சிவம், மகாநதி என்றெல்லாம் நல்ல கதையம்சம் இருக்கும் படங்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருந்தன. ஆனால் இப்போது தமிழில் வரும் படங்களையெல்லாம் ஒப்பிட்டுப் பாருங்கள். காட்சிகளாலேயே ஓடக்கூடிய படங்களாகவே அவை இருக்கின்றன. கடைசியாகக் கதையம்சத்தால் ஓடிய தமிழ்ப்படம் எது என்று உங்களால் சொல்லமுடியுமா? எப்போதாவது பருத்தி வீரன், சுப்ரமண்யபுரம் என்று ஏதாவது ஒரு படம் வரும். ஆனால், நான் சொல்ல வருவது, நாம் கதைகளை விட்டுவிட்டு, திரைக்கதைகளைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதையே. திரைக்கதை விறுவிறுப்பாக இருந்தால் ஒரு படம் ஓடக்கூடும்தான். ஆனால் அந்த விறுவிறுப்பான திரைக்கதைக்காக இவர்கள் வைக்கும் காட்சிகள் எல்லாமே ஒரேபோன்றவையாக அல்லவா இருக்கின்றன? எந்த உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாமல், கட்டமைப்பை மட்டும் நன்றாக முன்னிறுத்தினால் போதுமா?

இதிலும் மலையாளப் படங்கள் முன்னோடிகளாகவே விளங்குகின்றன. நான் மேலே பட்டியல் போட்டுள்ள படங்கள் மட்டும் அல்லாமல், இன்னும் பல மலையாளப் படங்களையும் பாருங்கள். தற்காலத்தில் வெளியாகிப் புகழடைந்துள்ள படங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றில் கதை என்பது ஒரு இன்றியமையாத அம்சம் என்பது புரியும். அவர்கள் கதையைத்தான் முதலில் எடுத்துக்கொள்கிறார்கள். அந்தக் கதையை, மக்களின் மனதில் புகுத்தும் வண்ணம் படம் எடுக்கிறார்கள். அங்கும் விறுவிறுப்பான படங்கள் வரத்தான் செய்கின்றன. ஆனால் அவற்றுக்குள்ளும் மனதைத் தொடும் கதையை அவர்கள் எப்படியாவது வைத்துவிடுகிறார்கள். சப்தமஸ்ரீ தஸ்கரஹா, செகண்ட்ஸ், மும்பை போலீஸ், முன்னறியிப்பு, திருஷ்யம், மெமரீஸ், 7த் டே, ஒப்பம் முதலிய படங்களில் இல்லாத கதையா? மலையாளத்தில் முதலில் கதை. பின்னர்தான் திரைக்கதை. தமிழில், முதலில் வாவ் சீன்ஸ் வேண்டும் என்றேதான் அனைவரும் கேட்கின்றனர். அவற்றை வைத்துத் திரைக்கதையை உருவக்கி வெளியிட்டும் விடுகின்றனர். இதனால்தான் தமிழில் வெளியாகும் பல படங்கள் நம் நினைவை விட்டே சென்றுவிடுகின்றன என்று கருதுகிறேன்.

இன்னும் பல பக்கங்கள் மலையாளப் புது அலையைப் பற்றி எழுதமுடியும். ஆனால் இந்தக் கட்டுரையில் சுருக்கமாக எழுதிய விஷயங்கள்தான் முதன்மையாக நான் சொல்ல நினைத்தவை. தமிழ்த் திரைப்படங்களில் வேலை செயும் ஒரு திரைக்கதை கன்சல்டண்ட்டாக, ஒரு திரைக்கதை எழுத்தாளனாக என் மனதில் தோன்றிய ஆற்றாமையையே இங்கே பதிவு செய்திருக்கிறேன். தமிழில் நல்ல கதைகள் உருவாகவேண்டும்; அவற்றின் மூலம் நல்ல நடிகர்கள் அடையாளம் காணப்படவேண்டும் என்பதே என் மிகப்பெரிய ஆசை. அதனை நோக்கிய பயணத்தில்தான் இருந்துகொண்டிருக்கிறேன். இக்கட்டுரையைப் படிக்கும் நண்பர்கள், தயவுசெய்து இதில் இருக்கும் விஷயங்களை எண்ணிப் பார்த்தால், அதுவேகூடத் தமிழில் அட்டகாசமான பல படங்கள் வருவதற்கு ஒரு ஆரம்ப விதையாக இருக்கலாம்.

Facebook Comments

Sharing is caring!

fb Comments

comments

  Comments

13 Comments

 1. Fayez

  Simply loved this article bro..Thanks for the wonderful effort in portraying Malayalam cinema in a simplest way..
  Is it accidental that you left Shaan Rahman( Music Composer) in your list?

  Fayez

  Reply
  • Tvs

   Excellent article Rajesh. I thought the new wave should also be credited to directors like blessy (thanmatra, pranayam), shyamaprasad (arike, artist), Arun Kumar aravind (left right left, ee adutha kalathu) too. However, I used to think even though the no of good malayalam films is certainly higher than Tamil in a given period, they dont give the complete satisfaction as a great movie like an aaranya kandam or a kuruthi punal since they lack that complete cinematic experience that we got even in movies like ajigardhanda or madras. In most of the movies we can feel the elements of a well made short film but not a feature film. Or in other words, what do you think the short comings of these new wave Malayalam films?

   Reply
   • That’s a very good observation. I have observed the same in many recent tamil films too. In Malayalam, this shortcoming is well balanced by the depth in the story, whereas in tamil, this is blatantly visible. I totally agree with the comment about the filmmakers too.

    Reply
 2. Arun

  Very good analysis, when hearing Maheshinde Prathikaram is getting remaked in Tamil, I wonder who will do the main hero character like Fahath did 🙁

  Reply
 3. Karthikeyan

  நீங்க இங்க குறிப்பிட்டிருக்கிற படத்தையெல்லாம் பாத்திருக்கேன் (ஆமென் தவிர). நானும் தமிழன் தான், ஆனா நம்ம ஆளுங்க ஏன் இப்படியெல்லாம் எடுக்காம,வெறுமே குண்டு சட்டியில குதிரை ஓட்டிக்கிட்டுருக்காங்கன்னு யோசிச்சிருக்கேன். குறிப்பா தொண்டிமுதலும் திருகசாக்க்ஷி யும் பாத்துட்டு இப்படியெல்லாம் மனுஷன் நடிச்சுயிருக்கானேன்னு திகைச்சி போயிருக்கேன்.நீங்க இன்னும் கொஞ்ச படத்தையெல்லாம் பத்தியும் சொல்லியிருக்கலாம். உதாரணத்துக்கு டேக் ஆப், பேரறியாதவர், சு சு சுதி வாத்மீகம், லுக்காச்சுப்பி அப்படின்னு.நம்ம ஆளுங்ககிட்டேயும் விஷயம் இருக்கு, என்ன commercial வட்டத்துக்குள்ளே இருந்துகிட்டே குதிரை ஓட்டுறாங்க. கஷ்டம்.

  Reply
 4. தங்களது படத் தேடலுக்கு கிடைத்த ஒரு பெரிய வரிப் பொக்கிசம் இது… மிக ஆழமான கட்டுரை நன்றி அண்ணே

  Reply
  • உபயோகமாக இருந்தது குறித்து மகிழ்ச்சி மதிசுதா

   Reply
 5. SJ Abbas

  நடிகர்கள் ஒப்பீட்டில் பகத் ஃபாசில்ட்ட இருந்து சிவாஜி கமல் விக்ரமுக்கு போயிட்டீங்க. ரொம்ப நாசூக்க விஜய் சேதுபதிய தவிர்திருக்கீங்க. அவர் மேல எதுனா கோவமா தல

  Reply
  • அப்படி எல்லாம் இல்லையே? அவரைப் பத்தி தனியா ஒரு போஸ்ட் போடுறேன். விக்ரம் வேதாலயே விஜய் சேதுபதி கிட்ட இருக்கும் பிரச்னையைப் பத்தி சொல்லிருக்கேனே?

   Reply
 6. Madhan

  By mistake, u mentioned story of mumbaI police as memories.p.raj lost his memories in Mumbai police movie.i love the article.thanks

  Reply
  • Gangadharan

   Fahadh fasil is a best Indian actor after mohanlal. Your article 100% true!

   Reply
  • Yes. Will correct it . Thank you

   Reply
 7. தனராஜ்

  Excellent write up

  என் மனதில்.மட்டுமல்ல சினிமா ஆர்வலர் பலர் மனதில் உள்ளவற்றை அப்படியே எழுதியுள்ளீர். மக்கள் இதைத்தான் விரும்புகிறார் என ஒதுக்கிவிட்டு பழைய மாவை அரைக்கும்இயக்குனரே இங்கு நிறைய. அட்டகத்தி.ரஞ்சித் மெட்றாஸ்க்கு பிறகு தடம் புரண்டதும் அதனாலே

  Reply

Join the conversation