இயக்குநர் மகேந்திரன் – தமிழ்த் திரைப்படங்களின் அதிசயம்

by Karundhel Rajesh June 13, 2020   Cinema articles

சென்ற ஆண்டு, இயக்குநர் மகேந்திரன் மறைவுக்குப் பிறகு மின்னம்பலம் இணைய இதழில் எழுதப்பட்ட கட்டுரை இது. நம் தளம் பிரச்னைக்குள்ளாகி, அதன்பின் மீண்டதால் முதல் கட்டுரையாக இது இருந்தால் மகிழ்ச்சி என்பதால் இங்கே கொடுக்கிறேன்.
*********************
தங்கப்பதக்கம் திரைப்படத்துக்குக் கதை வசனம் எழுதுகிறார் இயக்குநர் மகேந்திரன். படம் பிரம்மாண்ட வெற்றி அடைகிறது. ஆனால் அதன்பின் ஒரு வருடத்துக்குத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் யாருமே அவரைத் தேடி வரவில்லை. காரணம், தங்கப்பதக்கம் வெற்றி அடைந்தது, சிவாஜி கணேசனின் நடிப்பால்தான் என்று பலரும் எண்ணி, கதை வசனம் எழுதியவரைப் பற்றி முற்றிலும் மறந்துபோனதே. இருப்பினும், தானாகச் சென்று வாய்ப்புக் கேட்க அவரது தன்மானம் அனுமதிக்காததால், தங்கப்பதக்கம் படத்தின் வெற்றிவிழாக் கேடயம், விழாவில் சிவாஜி அணிவித்த தங்கப்பதக்கம் ஆகியவற்றில் இருந்த வெள்ளியை விற்றே குடும்பம் நடத்துகிறார்.

அந்த ஒரு வருட முடிவில் அவரது வீட்டுக்கு எஸ்.எஸ். கருப்பசாமி என்று ஒருவர் வருகிறார்.  ஒரு திரைப்படம் தயாரிப்பதாகவும், அப்படத்தைப் பழம்பெரும் இயக்குநர்கள் கிருஷ்ணன் – பஞ்சு ஆகியவர்கள் இயக்கப்போவதாகவும், அதற்கு மகேந்திரன் தான் கதை வசனம் எழுதவேண்டும் என்றும் கேட்கிறார். மகேந்திரன் மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டு எழுதிய அந்தப் படம்  ‘வாழ்ந்து காட்டுகிறேன்’. படம் நன்றாக ஓடுகிறது. அதன்பின்னர் கிட்டத்தட்ட 25 படங்கள் கதை, வசனம், திரைக்கதை என்று எழுதிக் குவித்ததாகவே சொல்கிறார் மகேந்திரன்.

அந்தச் சம்பவம் பற்றி எழுதும்போது, ஒரு வருடம் எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்தாலும், எஸ்.எஸ். கருப்பசாமி வந்து கதவைத் தட்டியபோது சும்மா தூங்கிக் கொண்டிருக்காமல், அப்போதும் தயார் நிலையில் இருந்ததால்தான் அந்தப் பட வாய்ப்பு கிடைத்தது என்று சொல்லி, வாய்ப்பு என்பது எப்போது வந்தாலும், தயார் நிலையில் இருந்தே ஆகவேண்டியது நமது கடமை என்று தனது ‘சினிமாவும் நானும்’ புத்தகத்தில் குறிப்பிடுகிறார் மிஸ்டர் மகேந்திரன் (அவர் எல்லாரையும் அப்படியே அழைப்பது வழக்கம்). 

தமிழ் சினிமாவில் மகேந்திரனின் பங்கு பற்றி இந்தச் சில நாட்களில் (2019ல் அவரது மறைவின்போது எழுதியது) பல கட்டுரைகள் எழுதப்பட்டாயிற்று. அவரது முக்கியத்துவம், அவரது கதை சொல்லும் விதம், அவர் எடுத்த படங்களின் தாக்கம் என்று எத்தனை எழுதினாலும் போதாது. காரணம், அவரே சொல்லியபடி, எப்போதும் தயார் நிலையிலேயே இருந்திருக்கிறார் மகேந்திரன். அவரை சில மாதங்கள் அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்கு சென்னையில் பாஃப்டா திரைப்படக் கல்லூரியில் கிடைத்தது.  டைரக்‌ஷன் துறைக்கு அவர் HOD. நான் திரைக்கதைத் துறையில் டைரக்டராகச் சேர்ந்திருந்தேன். என் துறைக்குத் தலைவர், திரு. பாக்யராஜ் அவர்கள். மாணவர்களுக்கு அற்புதமாக வகுப்புகள் எடுப்பார் மகேந்திரன். கூடவே, நூலகத்தில், தன்னைச் சுற்றிலும் மாணவர்களை வைத்துக்கொண்டு, புத்தகங்களின் அருமை பற்றிப் பலசமயங்கள் பேசியிருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் அவரை அங்கே அணுகிப் பேச முடியும். சிரித்த முகத்தோடு பொறுமையாகவும், இனிமையாகவும் அவருக்கே உரிய வேகமான உடல்மொழியோடு பேசி, நமது சந்தேகங்களைத் தெளிவு செய்வது அவரது வழக்கம். எப்போது பேசினாலும், ஏதேனும் ஒரு புதிய படமோ புத்தகமோ பற்றிச் சொல்லி, நம்மையும் பார்க்கும்படி தூண்டுவார்.  சிறுகதைகள், நாவல்கள், உலகப் படங்கள் என்று பல புதிய விஷயங்களைச் சொல்லுவார். பாஃப்டாவின் நூலகத்தில் அவரது பரிந்துரையின் கீழ் பல புத்தகங்களும் படங்களும் வாங்கி வைக்கப்பட்டன. அவருடன் பேசும்போதெல்லாம், இத்தனை எளிமையாக நம்மிடம் பேசும் இவரா உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், நெஞ்சத்தைக் கிள்ளாதே, ஜானி, மெட்டி, நண்டு, பூட்டாத பூட்டுக்கள் போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய பிரம்மாண்ட இயக்குநர் மகேந்திரன்? என்ற சந்தேகம் வராமல் இருக்காது. அவரது நெருக்கம் அப்படிப்பட்டது.

மகேந்திரன், அடிப்படையில் ஒரு விமர்சகராகவே தனது வாழ்க்கையைத் துவங்கியவர். நாடோடி மன்னன் வெற்றிவிழாவில் கலந்துகொள்ள 1958ல் மதுரை வந்த எம்.ஜி.ஆர், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் ஃபைன் ஆர்ட்ஸ் அசோசியேஷனின் திறப்பு விழாவுக்காக வருகைதரச் சம்மதிக்கிறார். அந்த விழாவில், தமிழ் சினிமா பற்றி மூன்றே நிமிடங்கள் பேசும் வாய்ப்பு மாணவராக இருந்த மகேந்திரனுக்குத் தரப்பட, தனது பேச்சுத்திறமையால் மொத்தம் 45 நிமிடங்கள் பேசி, கரகோஷம் வாங்கி, எம்.ஜி.ஆரிடம் பாராட்டுப் பெறுகிறார். அதன்பின் கல்லூரி முடித்து, சென்னையில் சட்டக் கல்லூரியில் சேர்கிறார். அவருக்குப் பணம் அனுப்பிப் படிக்கவைத்த அத்தை திடீரென ஏழே மாதங்களில், பணம் இல்லை என்று சொல்லிவிட, வேறு வழியில்லாமல் ஊருக்கே கிளம்பத் தயாராகிறார் மகேந்திரன். சட்டக் கல்லூரியை விட்டு வெளியே வருகையில், காரைக்குடியைச் சேர்ந்த கண்ணப்ப வள்ளியப்பன் என்பவர் எதிரே வந்து, மகேந்திரனிடம் பேசுகிறார். இருவருக்கும் முன்கூட்டிய பழக்கம் உண்டு. மகேந்திரன் அன்று ஊருக்குத் திரும்ப முடிவு செய்திருப்பதை அறிந்து, ‘இன முழக்கம்’ என்ற பெயரில் தான் ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்கப்போவதாகவும், எம்.ஜி.ஆர் முன்னாலேயே கல்லூரியில் மிகச்சிறப்பாகப் பேசியதால், பத்திரிக்கையில் சினிமா விமர்சனம் எழுதச்சொல்லி, உதவி ஆசிரியர் வேலையையும் கொடுக்கிறார். மகேந்திரன், மகிழ்ச்சியுடன் சம்மதிக்கிறார். 

அந்தப் பத்திரிக்கையில்தான் விமர்சனங்கள் எழுதுகிறார் மகேந்திரன். இன முழக்கம் என்பது தி.மு.கவைச் சேர்ந்த பத்திரிக்கை. தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் வேலை செய்த படங்களையும் கூட விட்டுவைக்காமல் மிகக்கடுமையாகவும் கறாராகவும் அவரது விமர்சனங்கள் இருந்ததால் ஆசிரியர் சி.பி. சிற்றரசுக்கு நெருக்கடி வரும் அளவு எழுதினார் மகேந்திரன். அப்போது ஒரு முறை எம்.ஜி.ஆர் பத்திரிக்கையாளர்களை சந்திக்க விரும்ப, இன முழக்கத்தின் சார்பாக எம்.ஜி.ஆரின் வீட்டுக்குச் சென்று ஒரு ஓரமாக நிற்கும் மகேந்திரனை சில வருடங்கள் கழித்துக் கச்சிதமாக அடையாளம் கண்டுபிடிக்கிறார் எம்.ஜி.ஆர். கல்லூரியில் தன்முன் அவர் பேசியதை நினைவுகூர்ந்து, மறுநாள் லாயிட்ஸ் ரோடு வீட்டுக்கு வரச்சொல்லி, ஒரு நல்ல வேலை கொடுக்கப்போவதாகச் சொல்கிறார். உதவி ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு, மறுநாள் காலை எம்.ஜி.ஆரின் வீட்டுக்குச் செல்கிறார் மகேந்திரன். அங்கே, முதல் மாடியில் ஒரு அறையைக் கொடுத்து, பொன்னியின் செல்வன் புத்தகத்தின் ஐந்து பாகங்களையும் கொண்டுவந்து கொடுத்து, அந்த நாவலுக்குத் திரைக்கதை எழுதச் சொல்கிறார் எம்.ஜி.ஆர். திரைக்கதை என்றால் என்ன என்றே தெரியாத மகேந்திரன், எழுதும் வேலையை ஆரம்பிக்கிறார்.

மூன்று மாதங்களில் திரைக்கதையை முடிக்கிறார். எம்.ஜி.ஆரை ‘திருடாதே’ படத்தின் படப்பிடிப்பில் சந்தித்து, திரைக்கதையைக் கொடுக்கிறார். அப்போதுதான், வீட்டில் இருந்து மகேந்திரனுக்கு எந்தப் பணமும் வரவில்லை; மூன்று மாதங்களாக, தினமும் ஒரு வேளை உணவு மட்டுமே சாப்பிட்டு, ஒரு நண்பனின் உதவியால் சமாளித்து மகேந்திரன் வாழ்ந்ததை எம்.ஜி.ஆர் அறிகிறார். உடனடியாகக் கண் கலங்கி, தன்னைத்தானே திட்டிக்கொண்டு, மறுநாள் ஆயிரம் ரூபாயை அளிக்கிறார். 

இதன்பின் எம்.ஜி.ஆருக்கு அனாதைகள் என்று ஒரு நாடகம் எழுதித் தருகிறார் மகேந்திரன். அதைப் படமாக எடுக்க விரும்பி, மூன்று நாள் படப்பிடிப்பும் நடக்கிறது. ஆனால் ஃபைனான்ஸியர் இறந்ததால் நின்றுவிடுகிறது (அப்படம் வாழ்வே வா – இயக்குநர் : டி. யோகானந்த்).

இதன்பின்னர் காஞ்சித் தலைவன் (சிவகாமியின் சபதத்தைத் தழுவிய படம்) படத்தில் உதவி இயக்குநராக மகேந்திரனை சேர்த்துவிடுகிறார் எம்.ஜி.ஆர். அப்படம் முடிந்ததும், எம்.ஜி.ஆருடனேயே மகேந்திரன் இருந்ததால் அறிமுகமான கே. பாலன், மகேந்திரனிடம் கதை கேட்க, அவர் சொல்லிய கதை பிடித்துப்போய் நாம் மூவர் என்று படம் ஒன்று தயாரிக்கிறார். ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், நாகேஷ் ஆகியவர்கள் நடிக்க, அப்படம் வெற்றிபெறுகிறது. இதுதான் மகேந்திரனின் முதல் படம். கதையாசிரியராக.  இதற்குப் பின்னர் வரிசையாகக் கதைகளும், திரைக்கதைகளும், வசனங்களும் எழுதுகிறார். ஆனால் அவருக்கு அப்போது இருந்த ஒரே ஆதங்கம் – எதைப் பிடிக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுதினாரோ, அதேபோன்ற படங்களையே எழுத வேண்டியிருக்கிறதே என்பதுதான். அந்த ஆதங்கம் சிறுகச்சிறுக வளர்ந்து, ஒரு தருணத்தில் துக்ளக் பத்திரிக்கையில் சோவிடம் வேலை செய்வதில் நிற்கிறது. அதன்பின்னர் வேணு செட்டியார் தேடி வந்து, ஒரு படம் இயக்கக் கேட்டுக்கொள்ள, நாவல்களில் இருந்துதான் படம் எடுப்பேன் என்று ஒற்றைக்காலில் நின்று மகேந்திரன் எடுத்த படம்தான் முள்ளும் மலரும். 

மகேந்திரனின் வாழ்க்கையே முற்றிலும் தற்செயல்களால் ஆனது. சினிமாவுக்கு வரவேண்டும் என்று நினைத்துக் கூடப் பார்க்காத நபராகவே கல்லூரியில் இருந்தவர், பின் சென்னையில் சட்டம் படிக்க வந்தது, அது பாதியில் நின்று, ஊருக்குக் கிளம்பும் நேரத்தில் இன முழக்கத்தில் விமர்சனங்கள் எழுதும் வேலை கிடைத்தது, பின் எம்.ஜி.ஆர் இவரைத் தற்செயலாகப் பார்க்க, பொன்னியின் செல்வன் எழுதியது, அதன்பின் அதன்மூலமே சினிமாவில் கதை எழுதும் வேலை, பின்னர் துக்ளக்கில் வேலை, அதன்பின்னர் அந்த அலுவலகத்தில் பார்த்த ஒரு ஜான் வேய்னின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு தங்கப்பதக்கம் உருவானது, அதன்பின் ஒருவருடம் யாருமே அழைக்காமல், பின்னர் ஒரு படம் கிடைத்தது, அதன்பின்னர் பல படங்கள் கதை வசனம் திரைக்கதை எழுதியது, பின்னர் முள்ளும் மலரும் இயக்கியது என்று பல தற்செயல்கள். இறுதிவரை ஒரு திட்டம் போட்டு ப்ளான் செய்யாமல், வாழ்க்கையின் தற்செயல்களையே எதிர்கொண்டவர் மகேந்திரன். இதனை அவரது புத்தகத்தில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். அப்படியே, ‘என்னைப்போல் இருக்கவேண்டாம். வாழ்க்கையை ஒழுங்காகத் திட்டமிட்டு வாழுங்கள்’ என்றும் நமக்குச் சொல்லியும் இருக்கிறார்.

மகேந்திரனின் படங்களில் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி ஆகிய படங்களைப் பற்றிப் பலரும் விரிவாகவே எழுதியாயிற்று. எனவே, அவரது பிற படங்கள் பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம். அவரது பூட்டாத பூட்டுக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, நண்டு, மெட்டி போன்ற, தற்காலத்தில் பெரிதே மறக்கப்பட்டுவிட்ட படங்கள் பற்றிக் கவனிக்கலாம்.

உதிரிப்பூக்கள் பெருவெற்றி அடைந்து, விருதுகளைக் குவித்தபின்னர், 1980ல் மகேந்திரன் இயக்கிய படம் ‘பூட்டாத பூட்டுக்கள்’. எழுத்தாளர் பொன்னீலனின் ‘உறவுகள்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் (முள்ளும் மலரும் – உமா சந்திரன், உதிரிப்பூக்கள் – புதுமைப்பித்தனின் சிற்றன்னை ஆகியவற்றைத் தொடர்ந்து, அவரது மூன்றாவது படமும் இப்படியே). பூட்டாத பூட்டுக்கள், முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் ஆகிய படங்களை விடவும் சற்றே தீவிரமான படம். இப்போது art house என்று சொல்லப்படும் படங்களின் தன்மையைக் கொண்டது. குழந்தை இல்லாத கணவன் மனைவி, மனைவி இன்னொருவரிடம் உறவு கொண்டு குழந்தை பெற்றுக்கொள்வது, மனைவியை ஊரே வெறுப்பது போன்றவற்றைக் கையாண்ட படம். நாயகி, தனக்குப் பிடித்த நபருடன் இருக்க விரும்பி ஊரை விட்டே ஓடி அவனிடம் செல்ல, அவன் இவளை அவமானப்படுத்திவிட, திரும்பி வரும் மனைவியைக் கணவன் புரிந்துகொள்வான். இறுதியில் அந்த ஊரை விட்டே அவர்கள் சென்றுவிடுவார்கள்.  ஆனால், படம் இத்தனை எளிமையானது அல்ல. இதே படத்தில், இன்னொரு பெண், என்ன நடந்தாலும் பார்வையில்லாத தன் கணவனை விட்டுக்கொடுக்காமல் இருப்பாள். அவள் கதைக்கும் நாயகியின் கதைக்கும் இருக்கும் மாறுபாடுகளை அருமையாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் மகேந்திரன் காட்டி இருப்பார். குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால், பக்கம்பக்கமாக வசனங்கள் இப்படத்தில் இருக்கவே இருக்காது. ஓரிரு வரிகள் மூலமாகவே கதையின் முக்கியமான சம்பவங்கள் நகரும். படத்தில் நடித்தது மலையாள நடிகர் ஜெயன், மற்றும் சாருலதா. இப்படத்தைத் தற்போது நீங்கள் பார்க்க நேர்ந்தால், முக்கியமான காட்சிகளில் இசை, மௌனம், மிகக்குறைவான வசனங்கள் எப்படிக் கையாளப்பட்டிருக்கின்றன என்பதைக் கவனியுங்கள். அவசியம் பூட்டாத பூட்டுக்கள் ஒரு மிகச்சிறந்த படமே. ஆனால் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் போல, அக்காலகட்டத்துக்குப் பாதுகாப்பான கரு இல்லாமல், இப்போதுமே சற்றே பிரச்னைக்குள்ளாகும் கரு ஒன்றை எடுத்துப் படமாக்கியதால், ஆடியன்ஸின் ஒவ்வாமை காரணமாகப் படம் பெரிதும் பேசப்படவில்லை. 


இதற்குப் பிறகு ஜானி, அதன்பின் அதே 1980ல் நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தை இயக்கினார் மகேந்திரன். மணி ரத்னத்தின் மௌன ராகத்துக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக அமைந்தது இந்தப் படம்தான். 28வது தேசிய விருது விழாவில் மூன்று விருதுகளை வாங்கிய படம் இது (சிறந்த தமிழ்ப்படம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலிப்பதிவு). இந்தப் படமும் உறவுச் சிக்கல்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் என்றாலும், இளைய தலைமுறையின் உறவுப் பிரச்னைகளை வைத்து எடுக்கப்பட்டு, ஒரு கல்ட் க்ளாஸிக் என்றே பேசப்பட்ட படமாக ஆனது. இதன் பாடல்கள் இன்றும் கேட்கப்படுகின்றன (இளையராஜா). ஒளிப்பதிவில் இந்தப் படம் அடைந்த உயரங்கள் அற்புதமானவை (அசோக் குமார்). சுஹாஸினி நடித்த முதல் படம். இந்தப் படத்தையும் மௌன ராகத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஒரு இன்ஸ்பிரேஷனில் இருந்து முற்றிலும் ஒரிஜினலாக ஒரு படம் எப்படி எடுப்பது என்பதற்கு இது ஒரு நல்ல பயிற்சியாக அமையும். 

இதன்பின் 1981ல் மகேந்திரன் இயக்கிய படம் ‘நண்டு’. இது எழுத்தாளர் சிவசங்கரியின் புத்தகம். இப்படத்தில், அலஹாபாத்தில் பெரிய பணக்கார வம்சத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், தந்தை திருமணம் செய்துகொள்ளச்சொல்லி வற்புறுத்தும் பெண்ணைப் பிடிக்காமல், தந்தை வீட்டை விட்டுப் போகச் சொல்வதால் சென்னை வருகிறான். அவனுக்குத் துவக்கத்தில் இருந்தே ஆஸ்த்மா இருக்கிறது. சென்னையில் ஒரு பெண்ணை சந்திக்கிறான். பின்னர் வீடு தேடும்போது, அதே பெண் குடியிருக்கும் இடத்துக்கே தற்செயலாக வந்து தங்குகிறான். இந்தப் பெண்ணுக்கு ஒரு குடும்பம். அவள் குடும்பத்தில் நிகழும் பிரச்னைகள், நாயகனைக் காதலிக்கும் வீட்டு ஓனரின் பெண், நாயகன் ராம்குமாருக்கு ஆஸ்த்மா என்று தெரிந்து அவனுக்கு உதவும் நாயகி, வீடு தேடி அலைவதில் இருக்கும் பிரச்னைகள், குடித்தனக்காரர்கள், அவர்களுக்குள் ஏற்படும் பிரச்னைகள், வாடகை வீட்டில் போடப்படும் நிபந்தனைகள் என்று கதை நகருகிறது. பின்னர் ராம்குமார், அவனுக்குப் பிடித்த பெண்ணான நாயகி சீதாவையே திருமணம் செய்துகொள்கிறான். அவன் திருமணத்தை அவனது அலஹாபாத் தந்தை எதிர்க்கிறார். குழந்தை பிறக்கிறது. மனைவியோடு குழந்தையைப் பெற்றோருக்குக் காட்டச்செல்லும் நாயகன் மறுபடி அவமானப்படுகிறான். இதன்பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் படம்.  இப்படத்திலும் இசை, பாடல்கள், மௌனம் ஆகியவை முக்கியமாகக் காட்டப்பட்டிருக்கும். ‘அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா’ பாடல் நினைவிருக்கிறதா? தனது ஊரான அலஹாபாத்தை தனது மனைவிக்கும் மகனுக்கும் நாயகன் காட்டும் பாடல் இது. கூடவே, கஸல் பாடகர் புபீந்தர் சிங் ஹிந்தியில் பாடும் ‘கைஸே கஹூ(ன்) குச் கெஹ்னா சக்ஹூ(ன்) பாடலும் கவனிக்கத்தக்கது. அவசியம் நண்டு படமும் முக்கியமானதொரு பிரச்னையைப் பேசும் மகேந்திரன் படமே. ஒளிப்பதிவு செய்தவர் அசோக் குமார். 

இதேபோல் இதற்கு அடுத்து மகேந்திரன் இயக்கிய ஒரு மென்சோகம் நிரம்பிய படமே ‘மெட்டி’. ராதிகா, வடிவுக்கரசி, சரத்பாபு, ராஜேஷ் ஆகியவர்கள் நடித்த படம். ஒரு குடும்பம், அந்தக் குடும்பத்துக்கு வரும் மகன் (தாயை விட்டு ஓடிப்போன கணவனின் மகன்), அவனுக்கும் அவனது அம்மாவுக்கும், இரண்டு சகோதரிகளுக்கும் நடக்கும் உணர்வுபூர்வமான காட்சிகள், அதன்பின் இரண்டு மகள்களும் திருமணம் பற்றி முடிவெடுப்பது, அதில் நிகழும் பிரச்னைகள், பின்னர் இவையெல்லாம் இறுதியில் எப்படி முடிக்கப்படுகின்றன என்று காட்டியிருப்பார் மகேந்திரன். ‘மெட்டி’ என்பது இப்படத்தின் முக்கியமான பங்கும் வகிக்கிறது. படத்தின் க்ளைமாக்ஸே ஒரு மெட்டியை வைத்தே எடுக்கப்பட்டிருக்கும். இளையராஜாவின் இசையில், ‘மெட்டி ஒலி காற்றோடு’ பாடல் இன்றும் மறக்கமுடியாததாக இருக்கிறதுதானே?  இப்படத்துக்கும் அசோக் குமாரே ஒளிப்பதிவு. எடிட்டிங், லெனின் செய்தார். 

இதன்பின் மகேந்திரன் இயக்கிய கை கொடுக்கும் கையில் ரஜினிகாந்த் மறுபடி நடித்தார். கன்னட இயக்குநர் புட்டண்ணா கனகல் கன்னடத்தில் இயக்கிய கதா சங்கமா என்ற படம், இப்போதைய குறும்படங்கள் anthologyக்களாக வருவதற்கு முன்னோடி. அதில் வரும் ஒரு அரை மணி நேரப் படமான முனித்தாயி என்ற கதையே, ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, முழுநீளப் படமாக மகேந்திரனால் எழுதி இயக்கப்பட்டது. ஆனால் இக்காலகட்டத்தில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக மாறியிருந்ததால், மகேந்திரன் கதையில் இரண்டு மாற்றங்களைச் செய்கிறார். ஆனால் பின்னால் அந்த மாற்றங்கள் வேண்டாம்; உள்ளது உள்ளபடியே எடுக்கப்படவேண்டும் என்ற பிரச்னை வர, ‘படம் உறுதியாகவே தோல்வி அடையும்’ என்று சொல்லிவிட்டே இயக்குகிறார். படமும் தோல்வி அடைகிறது. 

இதன்பின்னர் கண்னுக்கு மை எழுது என்ற படத்தை இயக்குகையில், சில தனிப்பட்ட நிகழ்வுகளால் முற்றிலும் மன உளைச்சலில் இருந்ததாகவும், அந்த மன உளைச்சலாலேயே படத்தில் கவனம் செலுத்த முடியாமல், படம் தோல்வி அடைந்ததாகவும் மகேந்திரனே அவரது புத்தகத்தில் சொல்லியிருக்கிறார். இதன்பின் சாசனம் படத்தை எடுத்தபின் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டுப் பின்னர் வெளியே கொண்டுவந்தார். அந்தப் படம் சில மாதங்கள் முன்னர் வரை எங்கிருக்கிறது என்பதே தெரியாமல், இப்போது கட்டணம் வாங்கிக்கொண்டு படங்களை ஆன்லைனில் பார்க்கும் ஒரு தளத்தில் ஏற்றப்பட்டிருக்கிறது. 

தமிழுக்கு எப்படி ஶ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா ஆகியோர் தங்கள் பாணியில் வித்தியாசமான படங்களைக் கொடுத்தார்களோ, அப்படி மகேந்திரன், தனக்கே உரிய பாணியில், offbeat படங்களையே தொடர்ந்து கொடுத்தார். பாசு பட்டாச்சார்யா, பாசு சாட்டர்ஜி, ரிஷிகேஷ் முகர்ஜீ ஆகியோர்களின் கதை சொல்லும் பாணி அது. சத்யஜித் ரேவின் ரசிகராக விளங்கிய மகேந்திரன், தான் இயக்கிய படங்களை அப்படிக் கொண்டுவந்ததில் ஆச்சரியம் இல்லைதானே? மகேந்திரனின் இன்னொரு சிறப்பம்சம், தன் படங்களை விழாக்களுக்கு அனுப்ப அவர் ஆர்வமே காட்டியதில்லை என்பது. இதனாலேயே ஒளிப்பதிவாளர் அசோக் குமாருக்குக் கிடைக்கவிருந்த இன்னும் பல விருதுகள் கிடைக்காமல் போயிருக்கலாம் என்று மகேந்திரன் வருத்தப்பட்டிருக்கிறார். இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என்பவை ஒரு படத்தை எப்படியெல்லாம் பல படிகள் மேலேற்றுகின்றன என்பதற்கு மகேந்திரனின் படங்கள் எடுத்துக்காட்டுகள். கூடவே, இலக்கிய வாசிப்பிலும் அவர் சிறந்தவர். புத்தகங்களை மையமாக வைத்தே படம் இயக்கவேண்டும் என்று உறுதியான கொள்கை கொண்டிருந்தவர். இவையெல்லாவற்றுக்கும் மேலாக, மிகச்சிறந்த, அன்பான, மென்மையான மனிதர். அவருடன் பழகிய யாருக்குமே அவருடன் மீண்டும் மீண்டும் பேசவேண்டும் என்ற எண்ணமே தோன்றும். 

தமிழ் சினிமாவின் முன்னோடிகள் என்ற இடத்தில் மகேந்திரனுக்கு ஒரு அழகான இடம் உண்டு. இனிமையான இசை, அன்பான, மென்மையான உறவுகள் சூழ்ந்த இடம் அது. அவரால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள் உலவும் அந்த அற்புதமான வெளியில் தற்போது மகேந்திரனும் கலந்துவிட்டார். இனி தமிழில் மட்டுமல்லாமல், படங்கள் உருவாக்கும் ஒவ்வொருவரும் மகேந்திரன் சொன்னவற்றையும் செய்துகாட்டியதையும் பின்பற்றினாலே தமிழ்ப் படங்கள் கட்டாயம் வேறொரு தளத்துக்குச் செல்லும் என்று உறுதியாக நம்புகிறேன்.  அவரது இடம் யாராலும் நிரப்ப முடியாமல் அப்படியே இருக்கிறது. இன்னும் இருக்கும்.

  Comments

4 Comments

  1. Rajesh

    அருமையான பதிவு தல..

    Reply
  2. Pradeep pep

    Bliss’ Thanks dear bro

    Reply
  3. George David

    பூட்டாத பூட்டுகள் படம் full enga kidikuam…. YouTubela climax illa

    Reply
  4. George David

    பூட்டாத பூட்டுகள் படம் full enga kidikr|uam…. YouTubela climax illa

    Reply

Join the conversation