Soorarai Pottru (2020) – Tamil

by Karundhel Rajesh November 15, 2020   Tamil cinema

ஒரு ஏழை இளைஞன் ஒரு மிகப்பெரிய கனவை சுமந்துகொண்டு, ஒரு பைசா கூட இல்லாத இடத்தில் இருந்து மேலே வந்து அந்தக் கனவை நிறைவேற்றுகிறான். இந்த வகையான inspiring படங்கள் உலகெங்குமே நிறைய வந்திருக்கின்றன. தமிழில் இவை மிகக் குறைவு. ஒரு காலகட்டம் வரை தமிழில் அண்ணாமலை, படையப்பா, சூரியவம்சம் போன்ற படங்களே வந்துகொண்டிருந்தன. அவைகள் முற்றிலுமே மசலாப்படங்கள். ‘கமர்ஷியல்’ என்ற தமிழ் சினிமா ஃபார்முலாவுக்கேற்ற வகையில் எழுதப்பட்டு எடுக்கப்பட்டவை. அவைகளில், ரஜினி போன்ற நடிகர்களின் ரசிகர்களுக்கு ஏற்ற கைதட்டல் காட்சிகள் பல இடம்பெற்றிருக்கும். அவைகள் முற்றிலும் மசாலாக்கள் என்பதால் நம்பமுடியாத காட்சிகள் இருந்தாலும் ரசிகர்கள் அவைகளைக் கண்டுகொள்ளாமல், அப்படங்கள் ஓடின.

அப்படியே கொஞ்சம் தள்ளி வந்தால் குரு என்ற படம் வெளிவருகிறது. இது தமிழுக்கு அவசியம் புதிது. காரணம், மேலே வரும் இளைஞன், முற்றிலும் நல்லவனாக இல்லாமல், அரசு இயந்திரத்தின் நெளிவு சுளிவுகளைப் புரிந்துகொண்டு, லஞ்சம் கொடுத்து, தில்லுமுல்லு செய்தே மேலே வருகிறான் என்பதை முதன்முதலில் வெளிப்படையாகச் சொன்ன படம் அது. இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு சாதாரணமான தொழில் துவங்கினாலே அப்படித்தான் நடக்கும் என்பது சராசரி மக்களாகிய நமக்கு நன்றாகப் புரியும். இதை குரு பேசியது.

அடுத்ததாக, ’லட்சியம்’ என்ற ஒன்றைப் போற்றும் ஒரு படம் எடுத்தால், அதில் சில பிரச்னைகள் வருகின்றன. எவை என்று சொல்கிறேன். அவற்றைப் பேசலாம். முதலாவதாக, அந்த லட்சியம், அடித்தட்டு மக்களுக்கு எப்படிப் பயனாகப்போகிறது? அல்லது, அந்த லட்சியம் வெற்றியடைந்தால் அதனால் பயன்பெறப்போகிறவர்கள் யார்? அதை, ஒரு படத்தில் எப்படி ஜஸ்டிஃபை செய்வது? உதாரணமாக, ஒரு ஹீரோ அல்லது ஹீரோயின் வெற்றி அடைந்தால் அதனால் பல குடும்பங்கள் வென்றன என்று சொல்வது. அண்ணாமலை இப்படிப்பட்ட படம். அண்ணாமலையின் குடும்பம் மட்டும் அல்லாது, அவரது பால் பொருட்கள் பல அடித்தட்டு மக்களையும் போய்ச்சேர்கின்றன. அண்ணாமலை வைத்திருக்கும் நிறுவனத்தின் பல நூறு ஊழியர்கள் வெல்கிறார்கள். குரு படத்திலும் இதேதான். குருபாயின் பல நிறுவனங்களில் பல ஆயிரம் ஊழியர்கள் பயன்பெறுகிறார்கள். கூடவே எல்லாத்தரப்பு மக்களுக்கும் அந்த நிறுவனங்களால் பலன் கிடைக்கின்றன. எனவே லட்சியங்கள் வெல்லும்போதே, மக்களுக்கும் பலன் கிடைத்து, அனைவருக்கும் ஒரு win-win என்ற சிச்சுவேஷன் அமைகிறது.

ஒரு inspiring திரைப்படத்தின் கதையில் இது மிக முக்கியம். படம் பார்க்கும் யாராக இருந்தாலும் தன்னை அந்தப் படத்துடன் பொருத்திப் பார்ப்பது. படத்தின் நாயகன் அல்லது நாயகி வெல்வதற்காக நாம் உணர்ச்சிவசப்பட்டுக் குரல் கொடுப்பது. இது மட்டும் சரியாக நடந்துவிட்டால் படம் அவசியம் நிலைத்து நிற்கும். மணி ரத்னத்தின் நாயகன், தளபதி, ஜெயம் ராஜாவின் தனி ஒருவன் போன்ற சில படங்கள், படத்தின் நாயகனுக்கு என்ன நடந்தாலும், அவன் என்ன செய்தாலும், இறுதியில் அவன் வெல்லவேண்டும் என்று மக்கள் நினைத்த படங்கள். ஏன் என்று யோசித்தால், அந்தக் கதாபாத்திரங்களின் நோக்கம் அப்படிப்பட்டது. அரசை எதிர்த்து, அரசு செய்யாத விஷயங்களைத் தன்னைச் சார்ந்த மக்களுக்காக நிறைவேற்றிக் கொடுத்தவர்கள் வேலுவும் சூர்யாவும். இவர்களைச் சார்ந்த அத்தனை பேருமே சராசரியான அடித்தட்டு மக்களே. அதுவே தனி ஒருவனில் வரும் மித்ரன், நல்லது வெல்லவேண்டும் என்று நினைப்பவன். அதர்மத்தை செய்யும் நிழல் போன்ற ஒருவனைக் கண்டுபிடிக்கவேண்டும் என்று நினைப்பவன். அவனது நோக்கம் நல்லதாக இருந்ததால் ஆடியன்ஸின் ஆதரவு அவனுக்கு இருந்தது.

இந்த அடிப்படையில்தான் சூரரைப் போற்று திரைப்படத்தை நாம் கவனிக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

சூரரைப் போற்று படத்தின் நாயகன் நெடுமாறன் ராஜாங்கம் யார்? அடிப்படை வசதிகளே குறைவாக இருக்கும் ஒரு கிராமத்தில் பிறந்தவன். ஒரு வாத்தியாரின் மகன். ஆரம்பத்தில் இருந்தே துடிப்பானவன். இப்படி ஒரு கதாநாயகனை எடுத்துக்கொண்டு, அவனுக்கு ஒரு லட்சியத்தை அளித்து, அவன் வெல்லவேண்டும் என்று நினைத்தால் அதற்கு என்ன செய்யவேண்டும்? அண்ணாமலை போன்ற அடித்தட்டு மக்களை வாழவைத்து, அவர்களின் தேவைகளை நிறைவேற்றினான் என்ற நிறைவு அவனுக்கு வரவைத்தால், கட்டாயம் ஆடியன்ஸின் ஆதரவு கிடைக்கும். அப்படியானால் அவன் என்ன செய்யவேண்டும்? இது ஒரு புறம்.

மறுபுறம், கேப்டன் கோபிநாத்தின் புத்தகத்தைப் படித்துவிட்டு, இதைப் படமாக எடுக்கவேண்டும் என்ற ஆர்வம் சுதா என்ற இயக்குநருக்கு வருகிறது (அவர் பெயர் சுதா மட்டுமே. கொங்காரா என்ற சாதியை நினைவூட்டும் பெயர் அவர் படித்து வாங்கிய பட்டம் அல்ல என்பதால் அதை விட்டுவிட்டு இனி சுதா என்றே அழைப்போம்). புத்தகத்தால் கவரப்பட்ட சுதா என்ன செய்கிறார்? நெடுமாறன் ராஜாங்கம் என்ற ஒரு ஏழை கதாபாத்திரத்தை உருவாக்குகிறார். அந்தக் கதாபாத்திரத்தை ஒரு அடிப்படை வசதிகள் குறைவான கிராமத்தில் வாழவைக்கிறார். நினைப்பது எதுவுமே நடக்காத ஒரு சூழலை உருவாக்குகிறார். அதன்பின், தந்தை இறந்து, அதற்கு நெடுமாறனால் வரமுடியாமல், எகானமி க்ளாஸ், பிசினஸ் க்ளாஸ் என்ற விமான டிக்கெட் சிக்கலில் மாட்டியதால், அவனுக்குள் ஒரு கோபத்தை உருவாக்கி, சகல மனிதர்களும் விமானத்தில் பறக்கவேண்டும் – ஃப்ளைட் டிக்கெட்டின் விலையைக் குறைத்து, யாராக இருந்தாலும் எளிதில் விமான டிக்கெட் வாங்கிப் பறக்கவேண்டும் என்ற லட்சியத்தை நெடுமாறனுக்குள் உருவாக்குகிறார்.

இங்கேதான் படத்தின் சிக்கல் துவங்குகிறது என்று தோன்றியது. என்ன காரணம் என்றால், நான் ஏற்கெனவே சொன்னபடி, அண்ணாமலை, படையப்பா, குருபாய் எல்லாருமே ஏழைகளுக்கு நேரடியாக வாழ்வளித்தவர்கள். சூரியவம்சமுமே அப்படித்தான். அடித்தட்டு மக்களின் வாழ்வியல் தேவைகளை முதலில் பூர்த்தி செய்தால்தான் அந்தப் படத்துக்கு இயல்பிலேயே அனைவரின் ஆதரவும் கிடைக்கும். ஆனால் சுதாவின் சிக்கல் துவங்கியது, கோபிநாத்தின் விமானக் கனவில். காரணம் விமானம் என்பது என்னதான் விலைகளைக் குறைத்தாலுமே அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையின் தேவை இல்லை. இப்போது, இன்றைய தேதியில் விமான டிக்கெட் விலை மிகமிகக் குறைந்துவிட்டாலுமே, விமானத்தில் பறந்தால் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை மாறிவிடுமா என்று யோசித்தால், உணவு, உடை, இருப்பிடம், சாதி ஏற்றத்தாழ்வுப் பிரச்னைகள், வேலை கிடைப்பது ஆகிய எல்லாவற்றையும் முதலில் கடந்துதான், விமானத்தில் பயணிப்பதற்கு வரவேண்டி இருக்கிறது அல்லவா?

இதனாலேயே, சுதாவுக்கு முன்னால் இருந்த பிரச்னையை இப்படி எளிதில் புரிந்துகொள்ளலாம். நடுத்தர மக்களின் தேவைகளில் ஒன்றான, அவர்களால் பணம் கொடுத்துப் போகமுடியும்படியான விமான சேவையை நாயகன் துவக்குகிறான். கோபிநாத்தே அப்படிச் செய்தவர்தான் (ஒரு ரூபாய்க்கு டிக்கெட் என்பதெல்லாம் அனைவருக்கும் அல்ல. சிலருக்கு மட்டுமே. பாக்கி பிரயாணிகளுக்கெல்லாம் ஆயிரங்களில்தான் டிக்கெட். ஆனால், அந்த விலை, அப்போதைய விமான டிக்கெட்டின் விலையை விடவும் பெருமளவு குறைவு என்பதே சரியானது). ஆனால் நடுத்தர மக்களுக்குமே எப்போதாவது பயன்படும் தேவை இது என்பதைப் படத்தில் காட்டினால் நாயகனுக்கோ அவனது லட்சியத்துக்கோ மக்களின் பெரும் ஆதரவு கிடைக்காது. எனவே, ஒரு அண்ணாமலைக்குக் கிடைத்த ஆதரவு நெடுமாறன் ராஜாங்கத்துக்குக் கிடைக்கவேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்? அண்ணாமலை போலவே நெடுமாறன் ஒரு ஏழை, அவனுடைய விமான லட்சியத்தில் ஏழைகளை உள்ளே கொண்டுவரவேண்டும், படத்தில் ஆங்காங்கே ஏழைகளுக்கான வசனங்கள் வைக்கவேண்டும், விமானம் என்பது ஏழை மக்களுக்கான அத்தியாவசியத் தேவை என்று நிறுவவேண்டும், class – caste போராட்டம் பற்றி அங்கங்கே பேசியாகவேண்டும், இதெல்லாம் நெடுமாறன் செய்யும்போது, அவனை கண்மூடித்தனமாக எதிர்க்க சில டுபாக்கூர் வில்லன்கள் வேண்டும், அவர்களுக்கு எதிரே இவன் தொடைதட்டி சவால் விடவேண்டும், இறுதியில் விமானத்தை நெடுமாறன் இறக்கும்போது, ஏழைகள் எல்லாம் வென்றுவிட்டார்கள் என்ற மாயையை ஆடியன்ஸ் மனதில் ஏற்படுத்த வேண்டும். இதுதான் சுதா செய்திருப்பது.

இதனால் இந்தப் படத்தை நான் கண்மூடித்தனமாகத் தாக்குகிறேன் என்று நினைக்கவேண்டாம். சூரரைப் போற்று, அண்ணாமலை போன்ற ஒரு பக்கா மசாலாப் படம். ஆனால் அண்ணாமலை போல இல்லாமல், நாயகனின் கனவு ஒரு எலைட் கனவு. இருந்தாலும் படத்தை எலைட்டாக எடுக்க முடியாது. எடுத்தால் அனைத்துத் தரப்பின் ஆதரவும் கிடைக்காது. எனவே ஏழை பணக்காரன் ஃபார்முலாவை வைத்து, அங்கங்கே செண்ட்டிமெண்ட் தூவி, மக்களை அழவைத்து, அந்த எமோஷனில் நெடுமாறன் என்பவனின் எலைட் மிடில் கிளாஸ் கனவை ஏழைகளுக்கான கனவாக மாற்றி எடுத்திருக்கும் படம் இது என்பதுதான் என் கருத்து. இதனாலேயே இது ஆங்காங்கே சில காட்சிகளில் வேண்டுமென்றே நம்மை ஏமாற்ற முயல்கிறது என்று தோன்றுகிறது.

யோசித்துப் பாருங்கள். சாதி பற்றிய வசனங்கள் எதற்காக? விமானத்தில் பறப்பதற்கும் சாதிக்கும் சம்மந்தம் இருக்கிறதா? ஆண்டான் அடிமை, ஏழை பணக்காரன் என்ற மிகப்பழைய மேட்டரையே லேசாக முலாம் பூசிக் கொடுத்தால் போதுமா? இப்படி ஒரு பக்கம் ஏழை, இன்னொரு பக்கம் அகம்பாவம் உடைய பணக்காரன், ஏழை பணக்காரனிடம் சவால் விடுவது, வெல்வது என்பதை மட்டுமே எடுத்துக்கொண்டால் அண்ணாமலை, சூரரைப் போற்று படத்தை விடவும் சிறந்த படமே. அதில் எனக்கு சந்தேகம் இல்லை. அண்ணாமலையில் ரஜினி கதாபாத்திரத்தின் லட்சியம் இன்னும் எளிமையானது. என்னால் புரிந்துகொள்ளமுடிந்தது. சூரரைப் போற்று போல, கதாபாத்திரத்துக்குப் பொருந்தாத லட்சியத்தைக் கஷ்டப்பட்டு இழுத்துக்கொண்டுவந்து என்னை அது ஏமாற்றவில்லை.

படத்தில் எனக்குப் பிடித்தவை, நெடுமாறன் மற்றும் சுந்தரிக்கு இடையே வரும் காட்சிகள். அவைதான் முதலில். டிபிகலான தமிழ் சினிமா ஹீரோயினாக இல்லாமல், நெடுமாறனுக்கு இருக்கும் லட்சியம் போலவே தனக்கும் ஒன்று இருக்கிறது என்று அதேபோன்ற கர்வத்துடன் வரும் பெண். இருவரின் லட்சியங்களும் ஒன்றுதான் என்று பேசும் பெண். கணவன் தன்னிடம் பணம் கேட்கத் தயங்கும்போது, ‘மனைவியிடம் பணம் கேட்க என்னடா உனக்கு ஈகோ?’ என்று முகத்துக்கு நேராகக் கேட்கும் பெண். உண்மையில் நெடுமாறனை விடவும் சுந்தரியை ஓரளவு அதிகமாகவே பிடித்தது. இப்படி ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கியதற்காக சுதாவுக்குப் பாராட்டுகள். குருவில் வரும் சுஜாதா கூட, கணவனை முழுமையாக ஆதரிப்பாளே தவிர, இப்படி தனக்கும் ஒரு லட்சியம் உண்டு என்று சொல்லமாட்டாள். எனவே அவசியம் சுந்தரியின் கதாபாத்திரம் முக்கியமானது.

அடுத்துப் பிடித்த விஷயம், என்னதான் நான் சொன்னபடி, அடித்தட்டு மக்களுக்கு சம்மந்தமே இல்லாத ஒரு லட்சியத்தை இழுத்துப் பிடித்து பல டெம்ப்ளேட் விஷயங்களை வைத்து சரிப்படுத்த முயன்றாலும், ஆங்காங்கே துணுக்குகளாக வெளிப்படும் சூர்யாவின் நடிப்பு. ஒரு ஏர்போர்ட்டில் அனைவரிடமும் கெஞ்சிக் கூத்தாடிக் கடன் கேட்பது (இதுவுமே மிகமிக எலைட்டான ஒரு பிரச்னையே. இதையும் கஷ்டப்பட்டு இறக்கி, ஆடியன்ஸுக்குக் கண்ணீர் வரவைக்க முயன்றிருக்கிறார்கள்), வில்லனிடம் சவால் விடுவது, அரசு அலுவலகத்தில் வாய்ப்பு தர மறுக்கும் அதிகாரியின் பி.ஏவிடம் குமுறுவது என்று ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை நடிப்புக்கு வஞ்சமே வைக்காமல் நடித்துத் தள்ளியிருக்கும் சூர்யா. அவசியம் அவருக்கு இது குறிப்பிடத்தக்க படம். சந்தேகமே இல்லை.

ஒரு inspiring படத்துக்கு என்ன தேவை? பொறி கிளம்பும் வசனங்கள். படம் முழுக்க வசனங்களால், ’இது எலைட் கனவு இல்லை; இது அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை முன்னேற்றும் லட்சியம்தான்’ என்று நம்மை நிஜமாகவே ஆங்காங்கே நம்பவைத்துவிடுகிறார் விஜயகுமார். அவசியம் இந்தப் படம் வெற்றி அடைந்தால் அதில் குறிப்பிடத்தக்க பங்கு விஜயகுமாருக்கே. நவீன லியாகத் அலிகான் என்றே அவரைச் சொல்லிவிடலாம். அப்படி எழுதியிருக்கிறார்.

சூரரைப் போற்று படத்தின் மிகப்பெரிய பிரச்னையை மிக எளிமையாகச் சொல்லவேண்டும் என்றால், அன்றாட வாழ்க்கைப் பிரச்னையாக இல்லாத ஒரு விஷயத்தை, நடுத்தர மக்களேகூட அன்றாடம் பயன்படுத்தாமல், ஒரு வருடத்தில் மிகச்சிலமுறைகளே பயன்படுத்தும் விஷயத்தை (விமானப்பயணம்), ‘இது அவசியம் ஏழைகளுக்கு வாழ்வளிக்கும்; பாருங்கள் இறுதிக் காட்சிகளில் ஏழைத் தாய்மார்கள் விமானத்தில் வந்து இறங்குகிறார்கள்’ என்றெல்லாம் நம்மை நம்பவைக்கத் தலைகீழாக நிற்க முயன்றிருப்பதே. இது என்னைப்பொறுத்தவரையில் வேலை செய்யவில்லை. படத்தில் சூர்யாவின் நல்ல நடிப்பை, இந்த லட்சியத்துடன் குழப்பிக்கொண்டு பொருத்திப் பார்க்க என்னால் முடியவில்லை. மாறாக, நடிப்பை மட்டும் துண்டாக ரசிக்க முடிந்தது. அதேபோல் சூர்யாவுக்கும் அபர்ணாவுக்குமான காட்சிகளைத் துண்டாக ரசிக்க முடிந்தது. இதேதான் ஊர்வசி, கிராமத்து மக்கள் சார்ந்த சில காட்சிகளுமே. முழுப்படத்தையும் எல்லாக் காட்சிகளுடனும் பொருத்திப் பார்த்து ரசிக்க முடியவில்லை. காரணம், இவர்களாக அடித்தட்டு மக்கள், சாதி இதையெல்லாம் வலிந்து இழுத்துக்கொண்டு உள்ளே திணித்து, எமோஷனைப் பிழிந்து நம்மை உணர்ச்சிவசப்பட வைத்தே ஆகவேண்டும் என்று முயன்றது. அது கொஞ்சம் கூடப் பொருந்தவில்லை என்றே தோன்றுகிறது.

படம் பிடித்திருப்பவர்களை நான் குறையே சொல்லவில்லை. இது என் கருத்து மட்டுமே. என்னளவில், இன்னும் இதை இயல்பாக மாற்ற வேலை செய்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் மறக்க முடியாத படமாக மாறி இருக்கும். அல்லது வெளிப்படையாக கோபிநாத்தின் உண்மையான journeyயை எடுத்திருக்கலாம். அப்படி எடுத்திருந்தால் கூட ஒரு நேர்மையான படைப்பாக இருந்திருக்கலாம். மாறாக, எங்கோ இருக்கும் ஒரு லட்சியத்தை, நேர் எதிரான பின்னணி, வசனங்கள் என்றெல்லாம் முயன்றிருப்பதுதான் படத்தின் பெரிய issue என்று கருதுகிறேன்.

  Comments

13 Comments

  1. Anonymous

    They could have taken Gopi’s original story as it is

    Reply
    • Sathishkumar

      Wow எனக்கு மட்டும் அல்ல நிறைய நபர்களுக்கு இப்படி தோன்றியது என்பது உங்கள் விமர்சனம் மூலம் ஆறுதல் அடைகிறேன். அதனைத் பாந்தமாக எழுதிய உங்களுக்கு என் நன்றிகள் மற்றும் பாராட்டுகள். எதிர் மறை விமானம் வைப்பது என்பது உண்மையாக சினிமாவை நேசிப்பவர்களுக்கு உள்ளக் குமுறல் தானே தவிர வேறொன்றும் இல்லை. நேர்மையான தகப்பன் தன் பிள்ளையின் குறைகளை எடுத்து சொன்னதற்கு சமம்.

      Reply
    • Anonymous

      நான் உங்கள் கருத்துக்களை பிரதிபலிக்கின்றேன்.படம் இயல்பாக நகரவில்லை… உண்மைதான்.

      ஆனாலும் சட்டைகள் கனவுடூயட் இல்லாமல் ஒரு ஆன்டர்பிரனரின் பயோனிக் எடுக்க நினைத்து அதை துணிந்து முயன்றதை வரவேற்கிறேன்.

      Reply
  2. Anonymous

    I agree with your review

    Reply
    • Anonymous

      After a couple of weeks, a statement will be spread with authentic data(?!) to prove that this movie is enlisted into a(n) ‘OTT sentiment’ with Ponmagal Vanthaal and Penguin.Let’s wait for the reality.

      Reply
      • Anonymous

        If u say this movie has no connectivity in many places of the screenplay, the so called pro SP will ditch u without accepting the reality.

        Reply
  3. Kasi

    தல இதுல ஜாதி எங்க இருக்குனு கேக்குறிங்க. நார்த் இண்டியால எல்லா தொழிலலையும் கைல வச்சிருக்கிறது உயர் ஜாதிக்கள் தானே .சுதந்திரத்திற்கு முன் எல்லா தொழிலும் பிராமின்ஸ் கையில இருந்ததே. இங்கே தொழில்களுக்கும் ஜாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு .
    சூர்யா ஒரு பைலட் கிராமத்துல ட்ரெயின் நிக்கிறதுக்காக போரடுறார் .அதோட நீட்சியா இந்த கனவ பாக்க முடியாதா? ஏழைகளுக்கு அத்தியாவசிய தேவையே இல்லாத போதும் அவசரத்தேவையா பாக்கலாம் .சைக்கிள் பைக் காரோட பரிணாம வளர்ச்சியாத்தான் இத பாக்குறன்.

    Reply
  4. Mani

    Really – wow -I thought Kongara is her last name – as I am a Sri Lankan living in Canada not really familiar with the Indian cast system – good to know.

    Reply
  5. Anonymous

    I agree

    Reply
  6. The anatomy of story book ல சொல்லியிருக்கு
    ற Screenplay பற்றி ஒரு தொடர் எழுதுங்க

    Reply
  7. Varatharaj

    Gongrna is a caste name. I agree GHANDI, NEHRU, PATEL ALL ARE WHAT. WHY PEOPLE STILL USING CASTE NAME TO THESE PEOPLE

    Reply
  8. LMGR

    every industry have some template , sudha madam school is Tamil film template. first you need to change your way of watching Tamil films or any Indian films . I know your involved few films in screenplay y that movies not successful. here success is most need to every film maker.Thrittupalye-2 i hope your accepted that’s one of best screenplay but y not big success has TP-1.Kindly dont look all films your point of view. First come to Indian audience then review lets see then your point of view.

    Reply

Join the conversation