Tenet (2020) – English – 1

by Karundhel Rajesh December 8, 2020   Cinema articles

Time Travel என்ற காலப்பயணத்துக்கான விதிகள் என்னென்ன? ஒவ்வொரு படத்திலும், அல்லது ஒவ்வொரு படைப்பிலும் அதை எழுதுபவர்களே அதற்கான விதிகளையும் உருவாக்குவது வழக்கம். காரணம், இதுவரை காலப்பயணம் நிரூபிக்கப்படவில்லை. எனவே, ஒவ்வொரு திரைப்படத்திலும், கதை சார்ந்து, கதையின் சுவாரஸ்யத்துக்காக ஒவ்வொரு விதி இதற்காக உருவாக்கப்படும். அப்படி க்ரிஸ்டோஃபர் நோலன் பிரத்யேகமாகத் தனக்காகவே உருவாக்கியிருக்கும் விதிகள் அடங்கிய படம்தான் TENET.

சிதற்றம் என்ற Entropy

ஆனால், இது உண்மையில் காலப்பயணத்தை முன்வைக்கும் படம் அல்ல. மாறாக, ஒரு பொருளின் சிதற்றம் என்ற ‘Entropy’யை முன்வைக்கும் படம் இது (Entropyக்குத் தமிழில் என்ன என்று தேடினேன். ஒரே ஒரு வார்த்தைதான் கிடைத்தது). சிதற்றம் என்பது, ஒரு பொருள் அதன் காலகட்டத்தில் ஒழுங்கற்றதாகச் சிதறிப் போவதை விளக்கும் சொல். அதன் குறிப்பிட்ட தன்மையை செய்யாமல் இருக்கும்போது எத்தனை சக்தி செலவாகிறது என்பதே சிதற்றம். ஒரு துப்பாக்கி சுடாமல் இருக்கும்போது எத்தனை சக்தி செலவாகிறது? கால நிலையில் முன்னோக்கி செல்லும்போது (தினசரி வாழ்க்கை), இந்த செலவாகும் சக்தி என்பது அதிகரிக்கிறது; நம் உடலில் இருக்கும் செல்கள் அழிவது, குழந்தை கையில் இருக்கும் கண்ணாடி விழுந்து உடைவது, குளங்களில் செடிகொடிகள் மண்டுவது, ஊரெங்கும் குற்றங்கள் அதிகரிப்பது, எப்போதோ வரப்போகும் அழிவை நோக்கியே நமது அண்டவெளியும் விண்வெளியும் பயணிப்பது – இவைகளெல்லாம் சில உதாரணங்கள். சூடான பிரியாணி, அப்படியே வைக்கப்பட்டால் ஆறிவிடுவது இன்னொரு உதாரணம். அந்த சூடு, அறையின் சூட்டோடு கலந்துவிடுகிறது. எளிமையாக, ஒரு விஷயம் ஒரு வேலையைச் செய்யும்போது, அந்த வேலை செய்யப்படாமல் இருப்பதற்குமே சக்தி செலவாகிறது. ஒரு எஞ்சின் செயல்படும்போது, அதன் இயக்கம் என்ற குறிப்பிட்ட வேலையைச் செய்யும்போதே, ஒரு குறிப்பிட்ட அளவு சக்தி தானாகவே வெளியேறிவிடுகிறது.

நெருப்பில் ஒரு கட்டையைப் போட்டால் அது எரிந்தே தீரும். இப்படி எரிவதே Entropy. எரியும் கட்டை, எரிவதற்கு முன்னால் இருந்த நிலையை அடையவே முடியாது. காரணம், காலம் என்பது முன்னோக்கியே பயணிக்கிறது. கூடவே, Entropy என்பது குறையவே குறையாது. அதிகரித்துக்கொண்டே இருப்பதுதான் அதன் தன்மை. உலகம் என்பது அழிந்தே தீரும். குழந்தையின் கையில் கொடுக்கப்பட்ட கண்ணாடியை அது கீழே போட்டே தீரும். உடலின் செல்கள் சிறுகச்சிறுக அழிவது அதிகரித்தே தீரும்.

மிகமிகமிகமிக எளிமையாக, Entropy is the degree of disorder. இதை நாம் கட்டுப்படுத்தாவிட்டால் இந்த ஒழுங்கின்மை என்பது அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும். குளங்களில் இருக்கும் செடிகொடிகளை அகற்றாவிட்டால் குளத்தையே அவை மூடிவிடுவதைப்போல்.

இந்த Entropyயை ஸ்டீஃபன் ஹாக்கிங், காலத்தோடு தொடர்புபடுத்திப் பேசியுள்ளார். ஆனால் அது வேறு ஒரு பொருளில்.

Entropy என்பதை முற்றிலும், நேர் எதிராக மாற்றிவிட்டால் என்ன ஆகும்? காலத்தில் முன்னோக்கிச் செல்லும்போது (இயல்பு வாழ்க்கை. தினமும் நமக்கு வயதாவது) Entropy என்பது அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும் என்று கவனித்தோம். நாம் பார்த்த விறகுக்கட்டை உதாரணம் போல. எப்போதும் அதிகரித்துக்கொண்டே இருக்கும் Entropy என்பதை எதையோ ஒன்றைச் செய்து குறைத்துவிட்டால்? (அதாவது, அதன் சிதற்றத்தைத் தலைகீழாக மாற்றிவிட்டால்?) அப்படிக் குறையும்போது, எல்லாமே தலைகீழாவதால் அந்தப் பொருளின் காலம் பின்னோக்கிச் செல்லக்கூடும் என்பதே TENET படத்தில் நோலன் சொல்வது. அந்தப் பொருளின் காலம் தலைகீழாக மாறுகிறது. எரிந்துமுடிந்த விறகு, மீண்டும் எரியாத விறகாக மாறுகிறது. இப்படி Entropy என்ற சிதற்றத்தை முற்றிலும் மாற்றுவதைத் திரைப்படத்தில் Inversion என்று சொல்வதால், இனிமேல் அதே வார்த்தையையே, காலம் மாற்றப்பட்டதற்கு நாமும் உபயோகிக்கலாம். ஒரு நபரின் காலம் இப்படி மாற்றப்பட்டால், அதற்கு இன்வெர்ஷன் என்று படத்தில் சொல்கிறார்கள்.

Time Inversion

இதனால் என்னென்ன நடக்கும்? ஒரு செயலைச் செய்யும் முன்னரே அதன் பலன் தெரிந்துவிடும். எரிந்த நெருப்பு மெல்ல ரிவர்சில் சென்று, எரியாத கட்டைகள் கிடைக்கும். சுடாமலேயே சுவற்றில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த ஓட்டைகள் இருக்கும். இதனால் துப்பாக்கியை நீட்டியதுமே, குண்டு திரும்பிவந்து துப்பாக்கிக்குள் புகுந்துவிடும். கையில் ஒரு காயம் தானாகவே இருக்கும். ஒரு ஆள் சண்டையிடும்போது அவன் கையில் இருக்கும் கத்தி காயத்தில் பட்டதும், ரீவைண்ட் செய்யப்பட்டதுபோல காயம் மறைந்துவிடும். கப்பல்கள் ரிவர்ஸில் செல்லும். பறவைகள் ரிவர்ஸில் பறக்கும். உடைந்துபோன கார்க்கண்ணாடி, இன்னொரு கார் மோதியதும் நேர் ஆகிவிடும். எல்லாமே நேர் எதிராக நடக்கும். அனைவரும் பின்னோக்கி நடப்பதுபோல இருக்கும்.

ஆனால் இதில் ஒரு கண்டிஷன் என்னவென்றால், அப்படி ஒரு நபரை இன்வெர்ட் செய்து, அவரது காலத்தை ரிவர்ஸ் ஆக்கிவிட்டால், அவர் பார்வைக்கு மட்டுமே இப்படி அவரைத்தவிர எல்லாமே ரிவர்சில் இருப்பதுபோலத் தோன்றும். காரணம் அவருக்கு மட்டுமே காலம் ரிவர்ஸ் ஆக்கப்பட்டிருக்கிறது. அதுவே, நார்மலான ஒரு ஆசாமிக்கு முன்னால் இப்படி இன்வர்ட் செய்யப்பட்ட ஆசாமி வந்தால், அந்த நார்மலான ஆசாமிக்கு, அந்த இன்வெர்ட் செய்யப்பட்ட ஆசாமி ரிவர்சில் நடப்பதுபோல் தோன்றும். ஏனெனில் நார்மல் நபரின் காலம் மாற்றப்படவில்லை. அவருக்குக் காலம் முன்னோக்கி மட்டுமே செல்கிறது. இன்வர்ட் செய்யப்பட்ட ஆசாமியின் காலம் மட்டுமே பின்னோக்கிச் செல்கிறது. இதுதான் இந்தத் திரைப்படத்தில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரே அம்சம். இதனோடு சம்மந்தப்பட்டுதான் படத்தில் எல்லாமே நடக்கிறது.

அதேபோல், இப்படி ஒரு ஆசாமி இன்வர்ட் செய்யப்பட்டால் அவரது உடலில் என்ன மாற்றங்கள் நடக்கும்? அவரது உடலின் இயக்கமே மாறிவிடுவதால் அவரது நுரையீரல்களால் வழக்கமாக நடப்பதுபோலக் காற்றை சுவாசிக்க முடியாது. எனவே ஒரு ஆக்சிஜன் மாஸ்க்கை மாட்டிக்கொண்டு, அதன் இயக்கத்தையும் தலைகீழாக மாற்றினால் மட்டுமே அவரால் சுவாசிக்க முடியும். எனவே, திரைப்படத்தில் ஆக்சிஜன் மாஸ்க் மாட்டிக்கொண்டு வரும் அத்தனை கதாபாத்திரங்களுமே இப்படி இன்வர்ட் செய்யப்பட்டவர்கள். அதாவது, கடந்த காலத்தில் பயணிப்பவர்கள். இதுதான் படத்தில் சொல்லப்படும் காலப்பயணம். அவர் தன்னுடன் எடுத்துச்செல்லும் எல்லாமுமே இப்படி நேர் எதிராக, ரிவர்சில் மாறிவிடும்.

Time Travel Rules

சரி. பின்னோக்கிப் பயணிக்கமுடியும் என்பதைப் பார்த்துவிட்டோம். பிற படங்களில் வருவதுபோல, பின்னோக்கி எந்தக் காலத்துக்கு வேண்டுமானாலும் போய்விடலாமா? இதில்தான் TENET வேறுபடுகிறது. இந்தப் படத்தைப் பொறுத்தவரை, காலப் பயணம் (Time Travel) என்பதை, காலத்தைத் தலைகீழாகத் திருப்புவது (Time Inversion) என்றே சொல்லியிருப்பதால், இந்தப் படத்தைப் பொறுத்தவரையிலும், பின்னோக்கிப் பயணிக்கும்போதும் ஒரு ஆசாமியின் வயது அதிகரிக்கவே செய்யும். அதாவது, ஒரு வருடம் முன்னால் நடந்த சம்பவத்தைப் பார்க்க ஒரு நபர் இப்படிக் காலத்தில் பின்னோக்கிச் சென்றால், அவரது வயது ஒரு வருடம் ஏறும். பத்து வருடம் பின்னால் சென்றால், பத்து வயது அதிகரிக்கும். 100 வருடங்கள் பின்னோக்கிச் செல்லவேண்டும் என்றால் அந்த மனிதர் இறந்தேபோய்விடலாம். அதேபோல், இந்தப் படத்தில், வருங்காலத்துக்குப் பயணிக்கவே முடியாது. இறந்த காலம் மட்டும்தான். இதனால்தான் இந்தப் படத்தில், சில நாட்கள் முன்னர் நடந்த நிகழ்வுகளுக்கே கதாபாத்திரங்கள் திரும்பவும் பயணிப்பார்கள்.

இதில் உள்ள ஒரு சிறிய உட்பிரிவு என்னவென்றால், கடந்த காலத்துக்குச் செல்லும் நபர் எப்போதுவேண்டுமானாலும் தன்னைத்தானே மறுபடியும் Non-invert செய்துகொள்ளலாம். அதாவது, 2019 டிசம்பர் 8க்கு ஒரு நபர் 2020 டிசம்பர் 8ல் இருந்து பயணிக்கிறார். இது இன்வெர்ஷன். அதாவது பின்னால் பயணிப்பது. அப்போது அவருக்கு எப்படி இருக்கும்? அவர் பார்வையில் ஒட்டுமொத்த 2019 டிசம்பர் 8 மக்களும், கார்களும், எல்லாமும் ரிவர்சில் பயணித்துக்கொண்டு இருக்கும். அவருக்கு ஒரு வயது ஏறி இருக்கும். அக்காலத்தில் இருக்கும் மக்கள் இவரைப் பார்த்தால், இவர் என்ன செய்தாலும் ரிவர்சில் செய்வதுபோலவே இருக்கும். அப்போது, 2019 டிசம்பர் 8ல் ஏற்கெனவே வாழ்ந்துகொண்டிருக்கும் அதே நபரும் இருப்பார். அவருக்கு ஒரு வயது குறைவு. எனவே ஒரே தேதியில், இறந்தகால நபர் என்றும் வருங்காலத்தில் இருந்து அங்கே சென்ற நபர் என்றும் இருவரும் இருப்பார்கள்.

இதுவரை அனைவருக்கும் புரியலாம். இனி சொல்லப்போவது, கொஞ்சம் குழப்பும். என்னவென்றால், இப்படி 2020ல் இருந்து 2019க்குச் சென்ற நபர், தன்னைத்தானே இன்வெர்ட் செய்துகொண்டதால் மட்டுமே அப்படிப் பயணிக்க முடிந்தது. ஆனால் 2019 டிசம்பர் 8ல் வேலை முடிந்ததும், அவர் திரும்ப உடனடியாகத் தற்போதைய 2020 டிசம்பர் 8க்கு வராமல், 2019 டிசம்பர் 8டிலேயே, தன்னை இப்படி இன்வெர்ட் செய்துகொண்டதை சரி செய்துகொண்டு, Non invert செய்துவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்படியென்றால், அவர், 2020 டிசம்பர் 8க்கு வருவதற்காக, ஒரு வருடங்கள் வாழ்ந்தே ஆகவேண்டும். இவருக்கு ஆக்சிஜன் மாஸ்க் தேவையில்லை. தன்னைத்தானே இப்படி non invert செய்துகொண்டதுமே அவருக்கு, அவரைச்சுற்றியுள்ள உலகம் நேராகிவிடும். அப்போது, மொத்தம் எத்தனை ஆசாமிகள் இருப்பார்கள்? உண்மையிலேயே இறந்த காலத்தில் வாழும் நபர், வருங்காலத்தில் இருந்து இறந்தகாலம் சென்றவர் என்ற இருவரோடு சேர்த்து, இப்படி இறந்தகாலம் சென்று, தன்னைத்தானே மாற்றிக்கொண்ட ஆசாமியும் இருப்பார். எனவே மூவர். (இது எப்படி என்று அடுத்த கட்டுரையில் திரைப்படத்தை வைத்து விளக்க முயற்சிக்கிறேன். படத்தில் வரும் பெரிய சுழலும் மெஷின், அதன் சிவப்பு மற்றும் நீலப் பாதைகள் என்பது இதுதான்).

இதில் இப்படி Non invert செய்துகொண்டவரிடம் ஒரு பெரிய மேட்டர் இருக்கும். என்னவெனில், கடந்தகாலத்துக்குச் சென்று, அந்தத் தேதியில் (2019 டிசம்பர் 8) இருந்து எப்போது அவர் வருங்காலத்தில் (2020 டிசம்பர் 8ல்) இறந்தகாலத்துக்குச் செல்ல முடிவு செய்தாரோ அந்தத் தேதிவரை நடந்திருக்கும் அத்தனையுமே தினமும் வாழ்ந்து இவர் தெரிந்துகொள்ளமுடியும். இது மட்டுமல்லாமல், எப்போது இறந்தகால நபர், வருங்காலத்தில் காலப்பயணம் செல்லும் தேதிக்குத் தனது இயல்பான வாழ்நாள் மூலமாக வாழ்ந்து வந்து சேருகிறாரோ, அப்போது மறுபடியும் அவர் இறந்தகாலம் செல்வார். அப்போது மொத்தம் நான்கு நபர்கள் இருப்பார்கள் (மூவரோடு மேலும் ஒருவர்). இவர்களில் ஒரே ஒருவர் மட்டுமே, காலப்பயணம் சென்ற தேதியைத் தாண்டியும் வாழுவார். அவர்தான், கடந்தகாலம் சென்று தன்னைத்தானே non invert செய்துகொண்டு மாற்றிக்கொண்ட நபர். இது புரிகிறதா? பாக்கி இருக்கும் அனைவரும், மீண்டும் மீண்டும் காலப்பயணம் செய்த தேதி வந்ததுமே மறுபடியும் இறந்தகாலம் பயணித்துக்கொண்டே இருப்பார்கள். இவர் மட்டும், எல்லாக் கதையும் தெரிந்ததால், இறந்தகாலம் செல்லாமல், அந்தத் தேதியையும் தாண்டி வருங்காலம் நோக்கி வாழ்ந்துகொண்டே இருப்பார். இது படத்தில் ஒரு முக்கியமான இடத்தில் வருகிறது. எனவே, நடந்ததை மாற்ற முடியாது என்பது படத்தில் சொல்லப்படுகிறது.

அதேபோல், அப்படிப் பின்னால் பயணிக்கும்போது, அங்கே இருக்கும் அதே நபரை இங்கே இருந்து பயணிக்கும் நபர் பார்த்து, நெருங்கிவிட்டால், இருவரின் உடலில் இருக்கும் அணுக்களும் வெடித்துச் சிதறிவிடும் என்றும் படத்தில் சொல்லப்படுகிறது (’பேரழிவு – Annihilation’). காரணம், இதில் பின்னோக்கிப் பயணிப்பவரின் உடலில் இருக்கும் எல்லாமே நேர் எதிர். எனவே அப்படிப் பயணிப்பவர், ஒரு கவச உடையை அணிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் இருவரின் அணுக்களும் வெடித்து அழிவு நேராமல் இருக்கும். இரண்டு நபர்களுக்கே இப்படி நடந்தால், உலகம் முழுவதுமே இப்படி இன்வெர்ஷன் செய்துவிட்டால் என்ன ஆகும்? வருங்காலத்தில் இருக்கும் எல்லாமே, இறந்தகாலத்தில் இருக்கும் அதே பொருட்கள், நபர்களுடன் மோதி, வெடித்து சிதறி, உலகமே அழிந்துவிடும்.

இந்த அழிவைத் தடுப்பதுதான் படத்தின் நோக்கம். அப்படி ஒட்டுமொத்த உலகையும் இன்வெர்ட் செய்து அழிக்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டு, அதைத் தகர்ப்பதே TENET படத்தின் ஹீரோவின் நோக்கம்.

இவைதான் TENET படத்தில் வரும் இன்வெர்ஷன் என்ற மறைமுகமான காலப்பயணத்தின் விதிகள்.

இவற்றையெல்லாம் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நாளை அடுத்த பாகம் வரும்.

  Comments

9 Comments

  1. Senthilvelsubramanian

    அறிவியல் மிகு புனைவில் குற்றம் படம் – திரைக்கதை குறித்த பகுதிக்கு காத்திருக்கிறேன்

    Reply
    • Anonymous

      Superb explanation. Was waiting 5 months to get cleared the basic doubts. Thank you

      Reply
  2. Dwaraganath

    Superb explanation. Was waiting 5 months to get cleared the basic doubts. Thank you

    Reply
  3. சுந்தரராஜன்

    ரொம்ப வித்தியாசமான ஆனால் குழப்பும் கதை. உங்கள் விமர்சனம் படித்த பின்னர் மீண்டும் இந்த படம் பார்த்தால் புரியுமோ என்னவோ?

    Reply
  4. திரைக்கதையை குறித்து எழுதவும்…

    Reply
  5. very intreasting
    thanks for your article

    Reply
  6. Nandhakumar GR

    Part 2???

    Reply
  7. Anand

    Naalai adutha baagam – Innum kaathirukkiren.
    Please post the next part of the article!
    Best regards
    Anand

    Reply
  8. Sarath R A

    Arumai. Irandaam Baagam Invert Seiya Padavillaiyae? Waiting !

    Reply

Join the conversation