Haider (2014) – Review
ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட் நாடகம்தான் ஹைதரின் இன்ஸ்பிரேஷன் என்று இயக்குநர் விஷால் பரத்வாஜ் சொல்லியிருப்பதால் ஹைதரைப் பார்க்கும் முன் முதலில் ஹேம்லெட்டைப் பார்ப்போம். கண்டபடி குழப்பிக்கொள்ளாமல் எளிமையாகக் கவனிப்போம். இது அவசியம் ஹைதரைப் பார்க்கும்போது உதவும். இதில் வரும் பல காட்சிகள் ஹைதரில் உண்டு.
ஹேம்லெட் என்பவன் டென்மார்க் நாட்டின் இளவரசன். அவனது தந்தையின் பெயரும் ஹேம்லெட்தான். அவர் இறக்கிறார். இதனால் மன்னரின் தம்பியான க்ளாடியஸ் அரசனாகப் பதவியேற்கிறான். இறந்த மன்னரின் மனைவியின் பெயர் ஜெர்ட்ரூட். இந்தப் பெண் தான் இளவரசன் ஹேம்லெட்டின் தாய். அவளையும் புதிய மன்னனான க்ளாடியஸ் மணம் புரிந்துகொள்கிறான். இந்தத் திருமணம் இளவரசன் ஹேம்லெட்டுக்குப் பிடிப்பதில்லை. (‘தந்தையை மணம்புரிந்தபோது அவள் அணிந்திருந்த செருப்பு இன்னும் புதியதாகவே இருக்கிறது; அது பழமையடைவதற்குள் தந்தையின் தம்பியை மணம்புரிந்துவிட்டாளே…’). இதனால் இளவரசன் ஹேம்லெட்டின் குணம் மாறுகிறது. மெல்ல மெல்ல கோபக்காரனாகவும் எடுத்தெறிந்து பேசுபவனாகவும் மாறுகிறான். கூடவே, தந்தை இறந்ததை எப்போதும் நினைத்துக்கொண்டு அவருக்காக துக்கமும் அனுஷ்டிக்கிறான். இது மன்னன் க்ளாடியஸுக்குப் பிடிப்பதில்லை.
மன்னன் க்ளாடியஸின் பிரதான ஆலோசகரின் பெயர் பொலோனியஸ். அவருக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவன் லயர்டீஸ் (Laertes). அவன் ஃப்ரான்ஸுக்கு மேற்படிப்பு படிக்கப்போவதாகச் செல்கிறான். இளையவள் ஒஃபீலியா, ஹேம்லெட்டை விரும்புகிறாள். ஆனால் இது அவளது தந்தை போலோனியஸுக்குப் பிடிப்பதில்லை.
இந்த நிலையில் ஒரு நாள் அரண்மனைக்கு வெளியே ஒரு புதிரான உருவம் தென்படுகிறது. இந்த உருவம் யாரென்று பார்த்தால், அதுதான் இறந்த ஹேம்லெட் மன்னனின் பிசாசு என்பது தெரிகிறது. இந்த உருவம் ஹேம்லெட்டைச் சந்தித்து, தன்னைக் கொன்றது தனது தம்பி க்ளாடியஸ்தான் என்று சொல்கிறது. தனது மரணத்துக்குக் காரணமான தனது தம்பியை ஹேம்லெட் பழிவாங்கவேண்டும் என்றும் பேசுகிறது. ஆனால் இளவசரன் ஹேம்லெட்டுக்கு சந்தேகம். இந்த உருவம் உண்மையில் தனது தந்தைதானா? அவர் சொல்வது உண்மையா?
இதைக் கண்டுபிடிக்க ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறான் ஹேம்லெட். அந்த நாடகம் அரசன் க்ளாடியஸ் முன்னிலையில் நடத்தப்படுகிறது. அதில் வரும் மன்னன் ஒருவன், மன்னர் ஹேம்லெட் இறந்ததுபோலவே கொல்லப்பட, அதைப் பார்க்கும் க்ளாடியஸ் அதிர்ச்சி அடைகிறான். இந்த அதிர்ச்சியைக் கவனிக்கும் இளவரசன் ஹேம்லெட்டுக்குத் தனது தந்தையின் ஆவி சொன்னது உண்மைதான் என்று புரிகிறது. இதனால் தந்தையைக் கொன்ற க்ளாடியஸைக் கொன்றே ஆகவேண்டும் என்ற வெறி ஹேம்லெட்டின் மனதில் எழுகிறது. தனது தாயை சந்திக்கச் செல்லும் வழியில் ஒரு இடத்தில் க்ளாடியஸ் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதை ஹேம்லெட் பார்க்கிறான். அவனைக் கொன்றுவிடலாம் என்று பின்னால் சத்தமில்லாமல் நின்றுகொண்டு வாளை ஓங்கும்போதுதான் க்ளாடியஸின் பிரார்த்தனையை ஹேம்லெட் செவிமடுக்க நேர்கிறது. செய்த பாவங்களை எப்படிப் போக்குவது என்று அரற்றிக்கொண்டிருக்கிறான் க்ளாடியஸ். இந்த நிலையில், பாவமன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கும் க்ளாடியஸைக் கொன்றால் அவன் இறந்தபின் நல்ல நிலைக்குச் சென்றுவிடுவான்; தனது தந்தை நரகத்தில் வாட நேரிடும் என்பதால் அவனைக் கொல்லாமல் தாயைச் சந்திக்கச் செல்கிறான் ஹேம்லெட்.
அங்கே தாயிடம் பேசிக்கொண்டிருக்கும்போது திரைச்சீலை மறைவில் ஏதோ சத்தம் கேட்கிறது. க்ளாடியஸ்தான் ஒளிந்திருக்கிறான் என்று நம்பி உணர்ச்சி வேகத்தில் அந்த உருவத்தைக் கொல்கிறான் ஹேம்லெட். ஆனால் அது அரசன் க்ளாடியஸின் ஆலோசகரான பொலோனியஸ் – ஹேம்லெட்டின் காதலி ஒஃபீலியாவின் தந்தை. இதன்பின் ஹேம்லெட்டின் உற்ற நண்பர்கள் இருவரைக் க்ளாடியஸ் ஹேம்லெட்டைக் கொல்ல அனுப்புகிறான். இங்லாண்ட் செல்லும் வழியில் அவர்கள் இருவரும் இங்க்லாண்டில் இறந்துவிட, கடல் கொள்ளையர்களால் பிடிக்கப்படும் ஹேம்லெட் பத்திரமாக டென்மார்க் அனுப்பப்படுகிறான் (இங்க்லாண்ட் மன்னருக்குப் போலிப்பெயரில் அவர்களைக் கொல்லும்படி ஹேம்லெட்தான் கடிதம் எழுதியிருப்பான்).
தனது தந்தை பொலோனியஸ் ஹேம்லெட்டால் கொல்லப்பட்டதை அறிந்த லயர்டீஸ் ஃப்ரான்ஸில் இருந்து பதறிக்கொண்டு வருகிறான். அப்போது தந்தை இறந்த வருத்தத்தில் ஆற்றில் விழுந்து ஒஃபீலியாவும் சாகிறாள். இந்த நேரத்தில் லயர்டீஸை சந்திக்கும் மன்னன் க்ளாடியஸ், பொலோனியஸைக் கொன்ற ஹேம்லெட் மீது லயர்டீஸ் வஞ்சம் தீர்த்துக்கொள்ள ஒரு திட்டத்தைச் சொல்கிறான். ஒரு வாட்சண்டையில் இருவரும் மோதவேண்டியது; அந்த சண்டையில் லயர்டீஸிடம் இருக்கும் வாளில் விஷம் தடவப்பட்டிருக்கும் என்பதால் ஹேம்லெட் இறப்பது உறுதி. மீறி ஹேம்லெட் வென்றால், அவனுக்குக் கொடுக்கப்படும் ஒயினில் விஷத்தைக் கலந்துவிடவேண்டியது.
ஒஃபீலியாவின் கல்லறையில் இரண்டு வெட்டியான்கள் அவளது மரணத்தைப் பற்றிப் பேசும்போது அங்கே ஹேம்லெட் வருகிறான். அப்போது ஹேம்லெட்டின் சிறுவயதுத் தோழனான யோரிக் என்பவனின் மண்டையோடு கிடைக்கிறது. அந்த இடத்தில்தான் மரணம் பற்றி ஹேம்லெட் பேசும் உலகப்புகழ் பெற்ற Soliloquy ஒன்று வருகிறது. மண்டையோட்டைக் கையில் வைத்துக்கொண்டு லாரன்ஸ் ஒலிவியே நடித்த ஹேம்லெட் படத்தில் ஒரு புகைப்படத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்தப் போஸ் மிகவும் புகழ்பெற்றது.
இதன்பின்னர்தான் சண்டை துவங்குகிறது. ஹேம்லெட்டை விஷம் தோய்ந்த கத்தியால் குத்துகிறான் லயர்டீஸ். அதே கத்தியைப் பிடுங்கி லயர்டீஸையும் ஹேம்லெட் குத்திவிடுகிறான். அந்தச் சமயத்தில் விஷம் கலந்த ஒயினை ஜெர்ட்ரூட் தெரியாமல் குடித்துவிடுகிறாள். தாயின் மரணத்தைக் கண்ணுறும் ஹேம்லெட் கோபத்தின் உச்சத்தில் மன்னன் க்ளாடியஸை அதே கத்தியால் குத்திவிட்டு இறக்கிறான். மன்னனும் இறக்கிறான். அரச குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அங்கேயே உயிர் விடுகின்றனர். அப்போது அந்த நாட்டின் மீது படையெடுத்து வரும் நார்வேயைச் சேர்ந்த இளவரசன் ஃபோர்ட்டின்ப்ராஸ் அங்கு வந்து இந்த இறப்புகளைக் கண்டு, பின்னர் மன்னனாகப் பட்டம் சூட்டிக்கொள்வதோடு ஹேம்லெட் முடிகிறது.
இப்போது விஷால் பரத்வாஜின் ஹைதருக்கு வந்தால், படம் பார்த்தவர்களுக்கு இந்தக் கதையை அந்தப் படத்தில் பார்ப்பதில் சிரமமே இருக்காது. இதே கதை அப்படியே எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், படம் விஷால் பரத்வாஜின் முந்தைய படங்களைப் போல் சுவாரஸ்யமாக இல்லை. மிக மெதுவாக நகர்ந்து, பார்ப்பவர்களின் பொறுமையைச் சோதிக்கும்விதமாகவே எடுக்கப்பட்டிருக்கிறது ஹைதர். இது ஏன் என்று பார்க்கலாம்.
முதல் காரணமாக, ஹேம்லெட்டினால் கவரப்பட்ட விஷால் பரத்வாஜ் அதைப் படமாக எடுப்பதாக முடிவு செய்கிறார். இதற்கு முன்னரும் மக்பூல் (மேக்பெத்), ஓம்காரா (ஓதெல்லோ) ஆகிய ஷேக்ஸ்பியர் கதைகளைப் படமாக, அட்டகாசமாக எடுத்திருப்பவர்தான் பரத்வாஜ் என்பதால் இந்தப் படமும் அவசியம் நன்றாக வந்திருக்கவேண்டியதுதான். ஆனால் மக்பூலும் ஓம்காராவும் கதைக்கேற்ற களன்களைக் கொண்டிருந்தன. அந்தப் படங்களைப் பார்த்தவர்களுக்கு இது தெரியும். மிகப் பிரம்மாண்டமான, கதைக்குத் தேவையில்லாத களன்கள் அவற்றில் இல்லை. மாறாக ஹைதரில் துளிக்கூட தேவையே இல்லாத காஷ்மீர் வருகிறது. காஷ்மீர் போன்ற ஒரு பின்னணி ஹேம்லெட் போன்ற ஒரு நாடகத்துக்கு எதற்கு? இதைப்பற்றி விஷால் என்ன சொல்லியிருக்கிறார் என்று கவனித்தால், அவருக்கு இந்தக் கதையைக் காஷ்மீரில் எடுக்கவேண்டும் என்று இருந்ததால் எடுத்திருக்கிறார் என்பது தெரிகிறது. ஒரு கதையை எந்த லொகேஷனிலும் எடுக்கலாம்தான். அதில் தவறில்லை என்றாலும், காஷ்மீர் போன்ற ஒரு இடத்தில் ஹேம்லெட்டை எடுப்பதால் என்ன பிரச்னை வருகிறது என்றால், காஷ்மீரின் பின்னணியை அவசியம் தெரிவிக்கவேண்டும் என்ற விஷயம் ஹேம்லெட்டின் கதையோடு மோதுகிறது. இதனால் (காஷ்மீரின் துயரமான பின்னணியை இந்தக் கதையோடு இணைப்பதால்) ஹேம்லெட்டின் கதையில் இயல்பாகவே இருக்கக்கூடிய உணர்ச்சிகள் குறைகின்றன. எனவே பல காட்சிகள் அந்நியமாகவே ஆவதைத் தவிர்க்கமுடிவதில்லை. இதுதான் இந்தப் படத்தின் முதல் பிரதான பிரச்னை. காஷ்மீர் ஒரு ஹெவி வெயிட் சப்ஜக்ட். அதேபோல் ஹேம்லெட்டும் ஒரு ஹெவிவெய்ட் சப்ஜக்ட்தான். இரண்டு ஹெவிவெயிட்கள் சேர்ந்தால் வழக்கமாக இரண்டுக்குமே முக்கியத்துவம் இன்றி அரைவேக்காடான பொருளே கிடைப்பதுபோல்தான் இந்தப் படம் இரண்டையுமே சரியாகக் காட்டாமல் அசுவாரஸ்யமான, ஆமை வேகத்தில் நகரும் படமாக ஆகிறது.
இரண்டாவதாக, விஷால் பரத்வாஜின் அனைத்துப் படங்களும் கமர்ஷியல்கள்தான். அதை அவரே ஒப்புக்கொள்ளத்தான் செய்வார். பாடல்கள், action காட்சிகள், நகைச்சுவை ஆகிய எல்லாமே அவரது படங்களில் இருக்கும். ஆனால், ஹைதரில் இவையெல்லாமே சரியாகக் கையாளப்படாமல் கதையோடு ஒன்ற மறுக்கின்றன. குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் ‘பிஸ்மில்’ பாடல் – இதுதான் ஹேம்லெட் அவனது தந்தையைக் கொன்றது மன்னன் க்ளாடியஸா இல்லையா என்பதை அறிய நடத்தும் நாடகம். மிக மிக நாடகபாணியில் அந்த இடத்தில் துளிக்கூட ஒன்ற முடியாமல் வரும் மிக நீளமான பாடல் இது. இந்தப் பாடல் கொடுக்கும் அயற்சியை உணர விரும்புபவர்கள், ‘அந்த ஒரு நிமிடம்’ படத்தில் வரும் ‘பச்சோந்தியே கேளடா’ பாடலைப் பார்க்கலாம். இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இதுவும் நாம் ஏற்கெனவே பார்த்த அதே காரணத்தால்தான். காஷ்மீர். ஒருவேளை இதை ஒரு ஆர்ட் ஹௌஸ் படமாக எடுக்க விஷால் நினைத்தாரா? அந்தக் கோணத்திலும் படம் தேறவில்லை என்பதுதான் சோகம். ஆர்ட் ஹௌஸ் படத்தில் ‘பிஸ்மில்’ போன்ற பாடலுக்கு இடமே இல்லை. அதேபோல் இஷ்டத்துக்குக் குணங்களை மாற்றிக்கொள்ளும் பாத்திரங்களும் படம் பார்க்கையில் தூக்கத்தை வரவழைக்கின்றன. ஹேம்லெட்டில் நாயகன் தனது தந்தை சாவதாலேயே இயல்பான குணத்தை மாற்றிக்கொண்டு, பிறரிடம் எரிந்துவிழுவான். இதில் தந்தை கொல்லப்பட்டார் என்ற செய்தி கிடைத்ததும் ஹைதர் அப்படி ஆகிவிடுகிறான். ஆனால் ஹேம்லெட்டில் சொல்லப்படுவதுபோன்ற வலுவான காரணம் எதுவுமே இதில் இல்லை. திடீரென மாறுகிறான். மொட்டை அடித்துக்கொள்கிறான். பைத்தியம் போல ஆகிறான். சம்மந்தமே இல்லாத இதுபோன்ற காட்சிகளை விஷால் பரத்வாஜின் படங்களில் நான் எதிர்பார்க்கவில்லை.
மூன்றாவதாக, விஷாலின் பாடல்கள் எப்போதுமே எனக்குப் பிடிக்கும். முதலில் அவர் இசையமைப்பாளர். பின்னர்தான் இயக்குநர். ஆனால் இதில் இசையமைப்பாளர் விஷால் பரத்வாஜ் மிக மிகச் சாதாரணமான இசையையே வழங்கியிருக்கிறார். அந்த இசையால் முதன்முறையாகத் தனது படத்துக்கு எந்தப் பயனும் இல்லாதவாறு அமைந்திருக்கிறது இசை.
படத்தின் பாஸிடிவ் விஷயம், சந்தேகமில்லாமல் வசனங்கள் மற்றும் நடிப்பு. ஹைதராக நடித்திருக்கும் ஷாஹித் கபூர் பற்றிச் சொல்ல எதுவும் இல்லை. படத்தில் மிகவும் மோசமாக நடித்திருப்பவர் அவர்தான். ஆனால் மன்னன் க்ளாடியஸின் பாத்திரத்தில் வரும் கேகே மேனன் மிகவும் அட்டகாசமான அவரது நடிப்பை மறுபடி வழங்கியிருக்கிறார். ஹஸாரோன் க்வாயிஷேன் ஐஸி படத்தில் இருந்து அவரைக் கவனித்துக்கொண்டிருக்கிறேன். அதன்பின் எந்தப் படத்திலும் அவர் சோடை போனதில்லை. இதிலும் படத்தின் முக்கியமான பாத்திரத்தில் நடித்து, படத்தைக் காப்பாற்ற முயன்றிருக்கிறார். அதேபோல்தான் ஹைதரின் தாயாக வரும் தபு. ஹேம்லெட்டுக்கும் அவனது தாய்க்கும் ஒருவிதக் கவர்ச்சி இருப்பதை நாடகத்தில் பார்க்கலாம். இதை உணர்த்தும் காட்சிகள் படத்தில் உண்டு. அவை விஷால் பரத்வாஜால் நன்றாக எடுக்கப்பட்டிருக்கின்றன. கதாநாயகி ஒஃபீலியவாக ஷ்ரத்தா கபூர். மறுபடியும் மிகவும் சாதாரணமான நடிப்பு.
வசனங்கள் – படத்தின் துவக்கத்தில் இருந்து இறுதிவரை உணர்ச்சி பூர்வமாகவும் ஒருவிதக் கிண்டலோடுமே எழுதப்பட்டிருக்கின்றன. காஷ்மீரைப் பற்றியும் அதில் அராஜகம் செய்யும் ராணுவத்தினரைப் பற்றியும் கிண்டலான வசனங்கள் உண்டு (ஒரு மனிதன் அசையாமல் வீட்டுமுன்னர் நின்றிருப்பான். உள்ளே செல்லாமல் அங்கேயே நீண்ட நேரம் நிற்கும் அவனுக்கு என்ன ஆனதோ தெரியவில்லையே என்று அவன் மனைவி கவலைப்படுவார். அப்போது அங்கே வரும் ஒரு கதாபாத்திரம் (இர்ஃபான் கான்), அவன் முன்னர் நின்றுகொண்டு, ‘யார் நீ? இங்கென்ன செய்கிறாய்? இங்கெல்லாம் வரக்கூடாது என்று தெரியும்தானே? ஐடி எங்கே?’ என்றெல்லாம் ராணுவத்தினரைப் போல் உரத்த குரலில் கேள்விகள் கேட்பார். அமைதியாக அந்தப் பாத்திரமும் ஐடியை எடுத்துக்கொடுக்கும். உடனே ‘உள்ளே போ!!’ என்று பலத்த சத்தத்துடன் இர்ஃபான் சொல்ல, அந்தப் பாத்திரம் அமைதியாக உள்ளே சென்றுவிடும். காஷ்மீரில் ராணுவத்தினரின் அராஜகத்தை இதற்கு மேல் நக்கலடிக்க முடியாது).
காஷ்மீரின் பின்னணியில் நடக்கும் ஒரு கதையில் ஹேம்லெட்டின் முக்கியமான காட்சிகள் அனைத்தும் வந்துவிடவேண்டும் என்று நினைத்து விஷால் பரத்வாஜ் அக்காட்சிகளை வைத்திருக்கிறார் என்பது நன்றாகத் தெரிகிறது. இக்காட்சிகள் செயற்கையாக, துருத்திக்கொண்டு தெரிகின்றன. (உதாரணங்கள்: ஹேம்லெட்டின் கையில் மண்டையோடு கிடைக்கும் soliloquy, அதன்பின்னர் நடக்கும் சண்டைகள், ஹேம்லெட் தனது தாயை சந்திக்கச் செல்லும்போது போலோனியஸைக் கொல்வது, ஹேம்லெட்டின் குணம் மாறும் காட்சிகள், ஹேம்லெட் நடத்தும் நாடகம் ஆகியவை). இந்தக் காட்சிகளுக்கிடையே ஒன்றையொன்று இணைக்கும் உணர்ச்சிகள் மிகக்குறைவு. எல்லாமே தனிப்பட்ட காட்சிகளாகவே உள்ளன. அந்த வகையில் விஷால் பரத்வாஜின் touch இப்படத்தில் இல்லை. ‘காஷ்மீரின் பிரம்மாண்டமான பின்னணியில் எடுக்கப்பட்ட ஒரு மேடை நாடகம்’ என்ற உணர்வையே இந்தப் படம் அளித்துக்கொண்டிருந்தது.
நடிப்பும் வசனமும் எப்போதும்போல் பிற விஷால் பரத்வாஜ் படங்களுடன் ஒப்பிடுகையில் அதே தரத்தை இதிலும் வழங்குகின்றன (except the lead pair). இருந்தாலும், கதைக்கு சம்மந்தமே இல்லாத காஷ்மீர் பின்னணியை எடுத்துக்கொண்டதாலும், அப்படி சம்மந்தமில்லாத களத்தை ஹேம்லெட்டுடன் இணைக்க முயன்று மிக நீண்ட அயற்சியான படமாக அது வந்திருப்பதாலும் ஹைதர் அலுப்பூட்டும் முயற்சியாக மாறுகிறது. இதுவரை விஷாலின் படங்களில் இல்லாத இந்த அலுப்பு இதில் படம் முழுதும் பரவி இருப்பதால், விஷாலின் வெறியர்களுக்கு மட்டுமே இந்தப் படம் திருப்தியை வழங்கலாம் (படத்தில் எக்கச்சக்கப் பிரச்னைகள் இருந்தாலும், கண்மூடித்தனமாக அதனை ஆதரிக்கும் வெறியர்களையே சொல்கிறேன்). மற்றபடி, விஷால் பரத்வாஜ் படம் வந்திருக்கிறது என்ற எதிர்பார்ப்புடன் இந்தப் படத்துக்குச் செல்பவர்கள் ஏமாற்றம் அடைவதுதான் நடக்கும் என்பது என் கருத்து.
விஷாலின் ஷேக்ஸ்பியர் trilogyயில் அவசியம் சிறந்தது மக்பூல். அதன்பின்னர் ஓம்காரா. ஹைதரே கடைசி. அவரது படங்களிலேயே இதுதான் தரத்தில் குறைந்த படமாகவும் இருக்கலாம் என்று தோன்றுகிறது.
பி.கு
‘ஹேம்லெட்’ நாடகத்தைத் திரைப்படமாகப் பார்க்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட படங்களைப் பார்க்கலாம்.
1. Hamlet (1948) – Directed by Laurence Olivier
2. Hamlet (1990) – Directed by Franco Zeffirelli – இதில் மெல் கிப்ஸன் தான் ஹேம்லெட். Icon Productionஸில் அவரது முதல் தயாரிப்பு. Action படம் போலவே வேகமாகச் செல்லக்கூடியது.
3. Hamlet (1996) – Directed by Kenneth Branagh (Thor படத்தின் இயக்குநர். இந்தப் படம் மொத்தம் நான்கு மணி நேரம். ஷேக்ஸ்பியரின் 99% வசனங்கள் இதில் உண்டு).
Rajesh !
once again a superb review, good introduction to Hamlet for lot of people like me who knows only OMLET