திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 12

by Karundhel Rajesh December 20, 2011   series

Chapter 7 – Setting up the Story (contd..)

சென்ற கட்டுரையில், ‘Chinatown‘ திரைப்படத்தின் திரைக்கதையின் முதல் பத்து பக்கங்கள் படித்தோம் அல்லவா? இப்போது, நாம் படித்தவற்றைப் பற்றி அலசிப் பார்க்கலாம். சிட் ஃபீல்ட் எப்படி அலசியிருக்கிறார் என்பதை விரிவாகப் பார்க்கலாம் வாருங்கள்.

முதல் பக்கத்தின் இரண்டாம் பத்தியிலேயே, பிரதான கதாபாத்திரமான Jack Gittes அறிமுகப்படுத்தப்படுகிறது. அப்படியே, அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றிய பல விஷயங்களையும் நாம் அறிந்துகொள்கிறோம்.

எப்படி?

‘வெளியே நிலவும் சூட்டில்கூட, லினன் ஸூட் அணிந்திருக்கும் அந்தப் பாத்திரம், கேஷுவலாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது’. இது முதல் செய்தி. அதேபோல், ‘தனது கைக்குட்டையால், மேஜையில் படிந்திருக்கும் அழுக்கினைத் துடைக்கிறது’. இந்தச் செய்தியானது, அந்தக் கதாபாத்திரம் மிகவும் கூர்த்த கவனிப்பு உடையது என்பதை நமக்குத் தெரியப்படுத்துகிறது. இந்தத் தகவல் முக்கியமான ஒன்று. ஏனெனில், அந்தக் கதாபாத்திரம் செய்யும் தொழிலில் கூர்மையான கவனிப்பு மிக அவசியம்.

சிறிதுநேரம் கழித்து வெளியே செல்லும் அந்தப் பாத்திரம், மிக நேர்த்தியாக உடையணிந்திருக்கிறது. இதுபோன்ற விஷுவல் தகவல்களால், அந்தக் கதாபாத்திரத்தின் குணாதிசயங்களைப் பற்றி நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இதில் எங்குமே அக்கதாபாத்திரம் எப்படி இருக்கிறது என்பது சொல்லப்படவில்லை என்பது சிட் ஃபீல்ட் சொல்லும் இன்னொரு விஷயம். அதாவது, அக்கதாபாத்திரம் உயரமாக இருக்கிறதா, குள்ளமா, குண்டாக உள்ளதா ஆகிய எந்த விஷயங்களும் இல்லை. அதற்குப் பதில், அது எப்படி நடந்துகொள்கிறது என்பதைச் சொல்லியே அக்கதாபாத்திரத்தைப் பற்றிய புரிதலை நமக்குள் கொண்டுவந்துவிடும் வகையில் இந்தத் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது என்கிறார் சிட் ஃபீல்ட். அதேபோல், Jack Gittes பாத்திரம், தன்னைப் பார்க்க வந்திருக்கும் மனிதனுக்கு, தன்னிடம் இருப்பதில் மலிவான விஸ்கி ஒன்றை ஊற்றிக் கொடுக்கிறது. இதனால் நாம் புரிந்துகொள்ளும் செய்தி? என்னதான் சிறிதளவு சூது இருப்பினும், பிறரைக் கவரும் வகையிலும், ஓரளவு பிறர் மேல் அன்புடனும் இருக்கிறது அந்தக் கதாபாத்திரம்.

திரைக்கதையின் நான்காவது பக்கத்தில், Jack Gittes யார் என்ற செய்தி, விஷுவலாகக் காட்டப்படுகிறது – ‘கண்ணாடியின் மேல், J.J. GITTES and Associates—DISCREET INVESTIGATION என்ற வார்த்தை எழுதப்பட்டிருக்கிறது’ – என்ற வாக்கியத்தின் மூலம்.

திரைக்கதையின் முக்கியமான சம்பவம், பக்கம் ஐந்தில் சொல்லப்படுகிறது. அங்கேதான் மிஸஸ் மல்ரே என்ற பெண்மணி, ஜாக்கிடம் வந்து, தனது கணவருக்கு ஒரு கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்படுவதாகவும், அதனை ஜாக் துப்பறியவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறாள். அதிலிருந்துதான் கதை ஆரம்பிக்கிறது. அந்த நிகழ்ச்சியால்தான் திரைக்கதையின் முதல் plot point நிகழ்கிறது (திரைக்கதையின் முப்பது நிமிடங்களில் நிகழும் இந்த முதலாவது ப்ளாட் பாயின்ட் என்னவெனில், நிஜமான மிஸஸ் மல்ரேவை ஜாக் சந்திப்பதே. அப்போதுதான், ஒரு மிகப்பெரிய சதிச்சுழலில் சிக்கிக்கொண்டிருப்பதை ஜாக் உணர்கிறான். அதிலிருந்து மீள்வதற்காக ஜாக் செய்யும் விஷயங்களே மீதிக்கதை).

“என் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்படுகிறேன்” என்ற வார்த்தைகளே சைனாடௌன் திரைக்கதை செல்லும் போக்கினைத் தீர்மானிக்கின்றன. அதனால்தான் அப்பெண்ணின் கணவரை ஜாக் பின்தொடர்கிறான். அப்படித் தொடர்வதால்தான் அந்த நகரில் நடைபெறும் மாபெரும் தண்ணீர் சம்மந்தப்பட்ட ஊழலைக் கண்டுபிடிக்கிறான். அதனால்தான் அப்பெண்ணின் கணவர் கொலை செய்யப்படுவதையும் கண்டுபிடிக்கிறான். இத்தனைக்குப் பிறகு, நிஜமான பெண்மணியை ஜாக் சந்திக்க நேர்கிறது. அப்போது, தன் கணவரைத் தொடர்ந்த குற்றத்துக்காக ஜாக்கின்மேல் போலீஸில் புகார் கொடுக்கப்போவதாகக் கூற, சிக்கலில் மாட்டிக்கொண்ட ஜாக், யாரோ ஒரு பெண்ணினால் அவன் ஏமாற்றப்பட்டதைப் புரிந்துகொள்கிறான். இயல்பிலேயே கர்வியான அவனால் அதனைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அதனால்தான் உண்மையைக் கண்டுபிடிப்பதில் மிகத் தீவிரமாக இறங்குகிறான்.

இப்படி ஒரு சரடில் கோர்க்கப்பட்ட சம்பவங்களாக இவை ஒன்றின் பின் ஒன்றாகத் தொடர்வதும், ஒவ்வொரு சம்பவத்துக்குமே முன்னர் நடந்த இன்னொரு சம்பவத்துடன் தொடர்பு இருப்பதுமே இத்திரைக்கதையை மிகச் சுவாரஸ்யமுடையதாகக் காட்டுகின்றன என்கிறார் சிட் ஃபீல்ட்.

இந்தத் திரைப்படத்தின் மைய இழையாக வரும் ஊழல், உண்மையில் 1900ல் லாஸ் ஏஞ்சலீஸில் நடந்த உண்மைச் சம்பவம். அந்தச் சம்பவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, 1937ல் கலிஃபோர்னியாவில் நிகழ்வதாக எழுதப்பட்டிருக்கிறது இத்திரைக்கதை.

ஆக, இந்தத் திரைக்கதையின் முதல் பத்து பக்கங்களுக்குள்ளேயே பிரதான கதாபாத்திர அறிமுகம், திரைக்கதை செல்லப்போகும் பாதை, திரைக்கதையின் கரு ஆகிய அத்தனையுமே தெளிவாக எழுதப்பட்டிருப்பதைப்போல்தான் நாமும் நமது திரைக்கதைகளை எழுத முயல வேண்டும் என்று சொல்கிறார் சிட் ஃபீல்ட்.

இத்துடன் சிட் ஃபீல்டின் புத்தகத்தின் ஏழாவது அத்தியாயமான ‘Setting up the story’ முடிவடைகிறது.

அடுத்த அத்தியாயத்தில், திரைக்கதைக்கு அவசியமான இரண்டு சம்பவங்களைப் பற்றிப் பார்க்கப்போகிறோம். அவை…..?

தொடரும் . . .

  Comments

8 Comments

  1. நீண்ட நாட்களாக தங்களது பதிவுகளை ஓய்வு நேரங்களில் தொடர்ந்து படித்து வருகிறேன்.பல விமர்சனங்களை PDF பைல்களாக சேமித்தும் வைத்திருக்கிறேன்.அந்தளவுக்கு தங்கள் எழுத்துக்கள் ஒரு இன்ஸ்பிரஷன் எனலாம்.
    தங்களது எல்லா பதிவுகளை போலவும் இதுவும் அருமை.நன்றிகள் பல.

    Reply
  2. என்ன பாஸ்! exile விழா முடிஞ்சதுக்கு அப்புறம் எழுதுற முதல் கட்டுரை. இன்னும் நிறைய எழுதி இருக்கலாம். ஓகே. வேற வலி? அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.

    Reply
  3. பாஸ்… நான் உங்க blog பாத்து தான் நான் உலக சினிமாவே பாக்க ஆரம்பிச்சேன்.. இன்னுமே இந்த இடத்துல பின்னூட்டம் போட தகுதி இல்ல னு நெனைக்க்றேன்.. நண்பர்களிடம் பேசும்பொது உங்க கருத்துக்கள சொல்லும்போது வாய பொளந்து பாக்குராங்க.. அவங்க எல்லருக்கும் இந்த blog பத்தி சொல்லிட்ருக்கேன்…. உங்களால் ஒரு 32 படங்கள் download செய்து பார்த்திருக்கிறேன்… இத்தனை விஷயங்களுக்கும் உங்களுக்கு நன்றி பாஸ்…! இந்த பதிவு கூட முதல்ல இருந்து படிச்சுட்டு வர்றேன்… இப்ப தான் பின்னூட்டம் போட தகுதி வந்துருக்கு னு கொஞ்சம் நம்பிக்கை…! அதன் விளைவு தான் இந்த பின்னூட்டம்… ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா…! சொல்ல வந்தத சொல்லிட்டேன்……..!!

    Reply
  4. @ குமரன் – உங்கள் கருத்துகளிற்கு மிக்க நன்றி

    @ Ganesan – இதோ அடுத்த கட்டுரைல நிறைய வருது 🙂 . . போட்டுத் தாக்கிரலாம் உடுங்க

    @ லோகு – உங்கள் கமெண்ட்ல இருக்குற பல வரிகள், என்னை கலாய்க்குற முயற்சி மாதிரி தெரியுதே 🙂 . . நான் ஒரு மொக்கை பீஸு பாஸு . . பாவமான ஆளு. . என்னிய இப்புடிலாம் சொன்னீங்கன்னா அப்புறம் அழுதுடுவேன் :-). . மிக்க நன்றி

    @ லக்கி – LOTR வந்துக்கினே இருக்கு 🙂

    Reply
  5. இந்த அத்தியாயத்த ஸ்கிப் செஞ்சிட்டுகூட போயிருக்கலாமோ ??

    ஒருவேள characterizationஇன் முக்கியத்துவம் கருதி வெச்சதா ?

    எனிவே………..பின்னுட்டங்கள் எல்லாம் பாக்கும் போது நீங்க ஒரு பிரமுகர் என்பது மறுபடியும் ஊர்ஜிதம் ஆகுது……..

    வாழ்த்துக்கள்………..

    Reply
  6. boss Hobbits trailer released ஆயிடுச்சு .sherlock holmes 2 release ஆயிடுச்சு pls அது பத்தி எழுதுங்க eagerly waiting for the next post…..

    Reply
  7. @ கொழந்த – இந்த அத்தியாத்தை ஸ்கிப் செய்யமுடியாது. காரணம், சைனாடவுன்ல என்ன சொல்லிருக்காங்கன்னு கொஞ்சம் எழுதலாம்னு நினைச்சேன். அதான். அப்புறம், என்னாது பிரமுகரா? அட கடவுளே… இதெல்லாம் நண்பர்கள் என்னைக் கலாய்க்க செய்யும் முயற்சிகள். அம்பூட்டுதான்

    @ சுந்தர் – ஷெர்லாக் ஹோம்ஸ் ௨ கட்டாயம் இன்னும் ஓரிரு நாட்களில். ஹாபிட்ஸ் பத்தி LOTR சீரீஸ்லயே வரும். கொஞ்ச நாள்ல 🙂

    Reply

Join the conversation