இதற்கு முந்தைய இரண்டு அத்தியாயங்களை இங்கே படிக்கலாம்.
Prashanth Neelலின் திரைக்கதைகள் – An Analysis – Part 1
Prashanth Neelலின் திரைக்கதைகள் – An Analysis – Part 2
உக்ரம் முடித்ததுமே ப்ரஷாந்த் நீல் துவக்கிய படம்தான் KGF என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அந்தப் படத்தை எப்படித் தேர்வு செய்தார் நீல்? அந்தக் கதை எப்படி அவரது மனதில் உருவானது?
உக்ரம் படம் வெளியான சில காலம் கழித்து ப்ரஷாந்த் நீலின் அடுத்த பட அறிவிப்பு வெளியானது. வெறும் மூன்றே படங்கள் அதுவரை எடுத்திருந்த ஹொம்பாளே ஃபிலிம்ஸ் (ஹொம்பாளே என்றால் தென்னம்பாளை என்று கன்னடத்தில் அர்த்தம். மங்கல நிகழ்வுகள் நடக்கும்போது தென்னம்பாளையைக் கட்டுவார்கள் அல்லவா? அதுதான் ஹொம்பாளே) என்ற கன்னடத் தயாரிப்பு நிறுவனம், ப்ரஷாந்த் நீலின் அடுத்த படத்தைத் தயாரிப்பதாகவும், அது ஒரு பெரிய பட்ஜெட் படம் என்பதாகவும் அறிவித்தது.
இந்த நிறுவனத்தின் முதல் படமான ‘நின்னிண்டலே’, புனீத் ராஜ்குமார் நடித்திருந்தும் ஓடவில்லை. தயாரிப்பாளர் விஜய் கிரகண்டூருக்கு நஷ்டத்தையே கொடுத்திருந்தது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட விஜய் கிரகண்டூர், இரண்டாவது படத்தில் யஷ்ஷை நடிக்கவைக்க அணுகி, யஷ் தேர்வு செய்த திரைக்கதையான ‘மாஸ்டர்பீஸ்’ என்ற கதையை யஷ்ஷை வைத்து எடுக்க, அது நன்றாக ஓடியது. அவரது மூன்றாவது படம், மறுபடி புனீத் ராஜ்குமார் நடிக்க ‘ராஜகுமாரா’ என்ற பெயரில் வெளியாகி, அதுவரை கன்னடத் திரைப்பட சரித்திரத்திலேயே அதிகமாக வசூல் செய்த படமாக (75 கோடி) மாறியது. இத்தனைக்கும் புனீத் ராஜ்குமாரின் முந்தைய மூன்று படங்களான ரணவிக்ரமா, சக்ரவ்யூஹா, தொட்டமனே ஹுடுகா ஆகியவை எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. எனவே புனீத் ராஜ்குமாருக்குமே ப்ரஷர்தான். ஆனால் தெளிவாக இருந்த விஜய் கிரகண்டூர் தனது முதல் படத்தின் தோல்விக்குப் பிறகு விழித்துக்கொண்டதே அடுத்த இரண்டு படங்கள் வெற்றியடைந்ததற்குக் காரணம்.
இந்தப் பின்னணியில்தான், திரைக்கதையும் மேக்கிங்கும் நன்றாக இருந்த உக்ரம் படத்தின் இயக்குநர் ப்ரஷாந்த் நீல் தன்னை ஒரு வித்தியாசமான கதையுடன் அணுகியபோது, அதன் பட்ஜெட் மிகப்பெரிதாக இருந்தபோதும் ஓகே சொன்னதாக விஜய் கிரகண்டூர் சொல்லியிருக்கிறார். முதலில் ப்ரஷாந்த் நீல் KGF திரைக்கதையை விரிவாகச் சொன்னபோது அதில் வரும் காட்சிகள் எதையுமே என்னால் விஷுவலைஸ் செய்து பார்க்கவே முடியவில்லை. ஏனெனில் இதுவரை கன்னடத்தில் யாருமே இப்படிப்பட்ட காட்சிகளை எடுத்திருக்கவில்லை என்று விஜய் கிரகண்டூர் சொல்லியிருக்கிறார்.
இப்படித்தான் KGF முதல் பாகம் உருவாகத் துவங்கியது. அதன் Pre Production மட்டுமே ஒன்றரை வருடங்கள் நடந்தது. திரைக்கதையில் வரும் ஒவ்வொரு காட்சியில் இடம்பெறும் பின்னணிப் பொருட்கள், உடைகள், கார்கள், தெருக்கள் ஆகிய எல்லாமே அந்தக் கதை நடந்த காலகட்டத்தைச் சேர்ந்ததாகவே தோன்றவேண்டும் என்பதில் எங்களுக்கு இருந்த கடின உழைப்பே அதற்குக் காரணம் என்று ப்ரஷாந்த் நீல் சொல்லியிருக்கிறார்.
ஆனாலும், அந்தப் படம் உருவாகும்போது தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாளேவை யாருக்குமே தெரியாது. யஷ் வளர்ந்து வரும் ஒரு ரொமாண்டிக் நடிகர் மட்டுமே. ப்ரஷாந்த் நீல் சுத்தம். ஹொம்பாளேவைத் தெரிந்த அளவு கூட ப்ரஷாந்த் நீலை ஒருவருக்கும் தெரியாது. எனவே அமைதியாக அந்தப் படத்தின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுத் திரைக்குத் தயாரானது KGF .
ஆனால் எல்லாவற்றுக்கும் முன்னதாக, KGF திரைப்படத்தின் திரைக்கதையை ப்ரஷாந்த் நீல் எப்படி உருவாக்கினார்?
மறுபடியும் நாம் முதல் இரண்டு அத்தியாயங்களில் பார்த்த அதே சலீம் ஜாவேத் இணைதான் ப்ரஷாந்த் நீலுக்கு உதவியது. தனக்குப் பிடித்த, இந்த இருவர் எழுதிய இந்திப் படங்களை மீண்டும் பார்த்தார் ப்ரஷாந்த் நீல். அதில் வரும் மிகப் பிரம்மாண்டமான ஹீரோ என்ற இமேஜ் ப்ரஷாந்த் நீலுக்கு எப்போதும் பிடிக்கும். எனவே, ஒரு பிரம்மாண்டமான ஹீரோ உருவானால், அவனுக்கு எதிரான, அவனைவிடவும் பிரம்மாண்டமான வில்லன்கள் அவசியம் தேவை என்பதும் ப்ரஷாந்த் நீலுக்குத் தெரியும். அப்படி ஒரு மிகப்பெரிய ஹீரோவும் அவனைவிடப் பெரிய வில்லன்களும் இருந்தால்மட்டுமே போதாது; அவர்கள் இருவரும் மோதிக்கொள்ளும் அளவு மிகப்பெரிய கதைக்களமும் வேண்டும். குணச்சித்திரக் கதாபாத்திரங்கள் தேவை. இதற்கெல்லாம் பின்னணியாக ஒரு அழுத்தமான அம்சம் தேவை.
இத்தனை விஷயங்களையும் நன்றாக யோசித்து, அமிதாப் பச்சன் திரைப்படங்களுக்கு சலீம் ஜாவேத் இணை எழுதிய திரைக்கதைகளையெல்லாம் நன்றாக அலசிப் பார்த்து சிறுகச்சிறுக ப்ரஷாந்த் நீல் எழுதிய திரைக்கதைதான் KGF முதல் பாகம். The Good Bad and the Ugly, For a Few Dollars More ஆகிய செர்ஜியோ லியோனி இயக்கியிருந்த வெஸ்டர்ன் படங்களும் ப்ரஷாந்த் நீலுக்குப் பிடித்தவை. இவற்றையெல்லாம் யோசித்துப் பார்த்து, அவற்றின் இன்ஸ்பிரேஷனில் திரைக்கதை எழுதி முடித்ததும் தயாரிப்பாளர் விஜய் கிரகண்டூரிடம் சென்றிருக்கிறார். அவரிடம் முதலில் ப்ரஷாந்த் நீல் சொன்னது ஒரு குடும்பக் கதையே. ஆனால் அதில் திருப்தி இல்லாமல் ஏதாவது வித்தியாசமான கதை இருக்கிறதா என்று விஜய் கிரகண்டூர் கேட்க, சமீபத்தில் எழுதி முடித்திருந்த KGF கதையை விஜய் கிரகண்டூரிடம் சொல்கிறார் ப்ரஷாந்த் நீல். அதன் கதை புரியாவிட்டாலும், அதில் எதுவோ இருக்கிறது என்பது விஜய் கிரகண்டூருக்குப் புரிந்துவிட்டது. இதில் யார் நடித்தால் சரியாக இருக்கும் என்று அவர் கேட்க, உக்ரம் படத்தின் திரையிடலுக்கு வந்து, படத்தைப் பார்த்துப் பாராட்டிவிட்டுச் சென்ற யஷ்ஷின் நினைவு ப்ரஷாந்த் நீலுக்கு வருகிறது. யஷ் தான் இதில் பொருத்தமாக இருப்பார் என்று தயாரிப்பாளர் விஜய் கிரகண்டூரிடம் சொல்கிறார் ப்ரஷாந்த் நீல்.
இதன்பின் விஜய் கிரகண்டூர் ஏற்பாடு செய்த ஒரு சந்திப்பில் யஷ்ஷை சென்று சந்திக்கிறார்.
உக்ரம் படத்தின் இயக்குநர் என்னை சந்திக்கிறார் என்று கேள்விப்பட்டேன். அந்தப் படம் கர்நாடகத்தில் மிகவும் நன்றாகப் பேசப்பட்டது என்பதால் அவரை சந்திக்க ஒத்துக்கொண்டேன். அவரும் வந்தார். எனக்கு ஒரு கதை சொல்லப்போவதாகச் சொல்லிவிட்டு, திக்கித் தடுமாறி, பலவிதமாக உளறி, ஒரு கதை சொன்னார். அவருக்குக் கொஞ்சம் கூட கதை சொல்லவே வரவில்லை. அவர் சொல்லிய அந்தக் கதையும், அவர் கண்டபடி உளறியதால் எனக்குப் பிடிக்கவும் இல்லை. ஆனால் உக்ரம் என்ற திரைப்படத்தைத் தயாரித்து இயக்கியவர் என்ற ஒரே காரணத்தால்தான் அவர் தட்டுத்தடுமாறி முழுக்கதையும் சொல்லிமுடிக்கும்வரை அங்கே அமர்ந்திருந்தேன். இல்லாவிட்டால் பாதியிலேயே அவரை வெளியே செல்லும்படி சொல்லியிருப்பேன் என்று யஷ் சொல்லியிருக்கிறார்.
ஆனாலும், யஷ் இப்படியெல்லாம் நினைக்கிறார் என்பது ப்ரஷாந்த் நீலுக்குப் புரிந்துவிட்டது. உடனே, ‘யஷ். என்னை நம்புங்கள். இந்தப் படத்தில் இதுவரை உங்களைக் காட்டாத அளவு மிகவும் அட்டகாசமாகக் காட்டப்போகிறேன்’ என்று அழுத்தம் திருத்தமாக யஷ்ஷிடம் ப்ரஷாந்த் நீல் அடித்துச் சொல்லியிருக்கிறார். அந்தத் துணிவு யஷ்ஷுக்குப் பிடித்தது. அதனால் மட்டுமே அந்தப் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டிருக்கிறார்.
உடனேயே திரைப்படத்தின் பிற கதாபாத்திரங்கள் முடிவு செய்யப்படுகின்றன. எல்லா முக்கியமான கதாபாத்திரங்களுமே பெரும்பாலும் புதுமுகங்களாக இருக்கவேண்டும் என்பது ப்ரஷாந்த் நீலின் எண்ணம். இதனால் தேர்வு செய்யப்பட்ட நடிகர்களுக்குப் பனிரண்டில் இருந்து பதினைந்து மாதங்கள் நடிப்புப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது.
உக்ரம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கழித்து, மார்ச் 2016இல் கோலாரில் ஒரு மிகப்பெரிய செட் போடப்பட்டு, கேஜிஎஃப் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது.
அந்தக் காட்சிகளில் எல்லாம் ஏராளமான துணைநடிகர்கள் தேவை. ஆனால் நடிக்க வந்த துணை நடிகர்கள், ஓரிரண்டு நாட்களிலேயே வெய்யில், புழுதி ஆகியவைகளைப் பார்த்துப் பயந்து படப்பிடிப்பில் இருந்தே யாருக்கும் சொல்லாமல் ஓடிவிட்டனர். இதனால் யாருமே இனிமேல் ஓடாமல் இருக்க ஏராளமான பவுன்சர்களை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்புத் தளத்தில் இறக்கிவிட்டிருக்கின்றனர் தயாரிப்புத் தரப்பினர். அதேபோல் கோலாரில் எடுக்கப்பட்ட சுரங்கம் சார்ந்த இந்தப் பெரும்பாலான காட்சிகள், சுமார் 40 கிலோ எடையுள்ள கேமராவைத் தோளிலேயே வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் நகர்ந்துகொண்டே எடுக்கப்பட்ட காட்சிகள்தான். இவைபோன்ற காட்சிகள்தான் படத்தின் நம்பகத் தன்மையை அதிகரித்தன என்று ஒளிப்பதிவாளர் புவன் கவுடா சொல்லியிருக்கிறார்.
இத்தனை பிரச்னைகளுக்கு மத்தியில்தான் கேஜிஎஃப் படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது.
கேஜிஎஃப் படத்தின் திரைக்கதையின் விரிவான அலசல், படப்பிடிப்பு சார்ந்த இன்னும் பல தகவல்கள் ஆகியவைகளை அடுத்தடுத்த பாகங்களில் பார்க்கலாம்.
தொடரும்..