எஸ்.பி. பாலசுப்ரமணியம்: பிறமொழிப் பாடல்கள்

by Karundhel Rajesh May 11, 2021   Cinema articles

சென்ற வருடம் இந்தியா டுடேயின் எஸ்.பி.பி சிறப்பிதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை. எஸ்.பி.பி பாடிய, தமிழைத் தவிர்த்த பிறமொழிப் பாடல்கள் பற்றியது.

எஸ். பி. பாலசுப்ரமணியம் பாடிய முதல் பாடல் தெலுங்கு என்பது அவரது ரசிகர்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதேபோல் அவர் பாடிய இரண்டாம் பாடல், கன்னடம். இதையும் எஸ்.பி. பியின் தீவிர ரசிகர்கள் அறிந்திருக்கலாம். இப்படி 1967ல் தெலுங்கில் அறிமுகமாகி, ஏராளமான பாடல்கள் தெலுங்கில் பாடி, அதன்பின்னரே தமிழில் 1969ல் எஸ்.பி.பி அறிமுகமானார். அதேபோல், எஸ்.பி. பாலசுப்ரமணியம் வாங்கியிருக்கும் தேசிய விருதுகள் ஆறில், ஐந்து விருதுகள் பிற மொழிகளில் பாடியதற்கே அவருக்குக் கிடைத்துள்ளன. தமிழில் ஒரே ஒரு விருதுதான். இப்படி, தமிழில் அறிமுகமானதற்குப் பிறகுமே தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளடங்கிய பிற மொழிகளில் பல பாடல்களை எஸ்.பி.பி பாடியிருக்கிறார் என்பதால், தமிழ் தவிர்த்து, பிற மொழிகளில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் பயணம் பற்றிக் கொஞ்சம் கவனிக்கலாம்.

பல பேட்டிகளில் தனது குருநாதர் என்று எஸ்.பி.பி குறிப்பிடுவது, இசையமைப்பாளர் எஸ்.பி., கோதண்டபாணியையே. காரணம், எஸ்.பி.பியின் முதல் பாடல் இடம்பெற்ற ‘ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மர்யாதா ராமண்ணா’ படத்தின் இசையமைப்பாளர் கோதண்டபாணிதான். ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்து பொறியியல் (AMIE) படித்துக்கொண்டிருந்த மாணவர் எஸ்.பி.பி, கூடூரில் நடந்த ஒரு இசைப்போட்டியில் பாட, அந்தப் போட்டிக்கு நடுவராக வந்திருந்த எஸ். ஜானகி, எஸ்.பி.பியின் குரல் நன்றாக இருப்பதாகவும், சென்னையிலேயே படித்துக்கொண்டிருப்பதால் தமிழில் திரைப்படங்களில் வாய்ப்புகள் தேடும்படியும் பாராட்டுகிறார். (அந்தப் போட்டியில் தொடர்ந்து மூன்றாவது வருடம் முதல் பரிசு).. இதனால் ஊக்கமடையும் மாணவர் எஸ்.பி.பி, சென்னை திரும்பி வந்து இரண்டு மூன்று வருடங்கள் மிகுந்த முயற்சிகள் செய்கிறார். ஆனால் பலனில்லாததால், எல்லா முயற்சிகளையும் கைவிட்டுவிட்டு, பொறியியல் படிப்பில் கவனம் செலுத்துகிறார்.

இதன்பின் மாணவர் எஸ்.பி.பியின் 17 வயதில் சென்னையில் ஆந்திரா க்ளப்பில் இந்தியா தழுவிய இசைப்போட்டியில் நடுவராக வந்திருந்த எஸ்.பி. கோதண்டபாணிதான் (பிற நடுவர்கள்:  கண்டசாலா, பெண்டியால நாகேஸ்வரராவ்) மாணவர் எஸ்.பி.பியின் குரலால் கவரப்பட்டு, அவரிடம் வந்து பேசுகிறார். ’நல்லா பாடுறேய்யா.. ஒழுங்கா ப்ராக்டீஸ் பண்ணி மட்டும் பாடிட்டேன்னா, இன்னும் நாப்பது வருஷம் பாடுவ. நிறைய அவார்டெல்லாம் வாங்குவேய்யா’ என்று சொல்கிறார். மறுநாள் தயாரிப்பாளரிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். ஆனால் மிக இளம் வயதில் எஸ்.பி.பி இருந்ததால், அவரது குரல் யாருக்கும் பொருந்தாதே என்று தயாரிப்பாளர் சொல்ல, அதன்பின் 2 வருடங்கள் படிப்பை மட்டும் பார்த்துக்கொண்டு, எஸ்.பி. கோதண்டபாணியை சந்திக்காமலே இருந்திருக்கிறார் எஸ்.பி.பி. ஆனால் கோதண்டபாணி சும்மா இருக்கவில்லை. எங்கெங்கோ தேடி, எப்படியோ பலகாலம் கழித்து எஸ்.பி.பியைப் பிடித்துவிட்டார். இது நடந்தது 1963 முதல் 1966 வரையான காலகட்டம்.

அப்போதுதான், கோதண்டபாணியின் விடாப்பிடி முயற்சிகளால் எஸ்.பி.பி 1966ம் வருடம், டிசம்பர் 15ம் தேதி, ‘ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மர்யாதா ராமண்ணா’ தெலுங்குப் படத்தில் முதல் பாடலைப் பதிவு செய்கிறார். அப்போதுகூட, பிந்நாட்களில் இத்தனை பெரிய பாடகராக வரப்போவதைப் பற்றி எதுவுமே தெரியாது என்றே எஸ்.பி.பி சொல்லியிருக்கிறார். முதல் வாய்ப்பைத் தன்னைத் தேடிப்பிடித்துக் கொடுத்ததாலேயே எஸ்.பி. கோதண்டபாணியைத் தனது குருநாதர் என்று எஸ்.பி.பி குறிப்பிடுவது வழக்கம்.

இந்தப் படத்துக்குப் பிறகு தெலுங்கில் பல படங்கள் எஸ்.பி. கோதண்டபாணியின் இசையிலும், கே.வி. மகாதேவன், எம்.எஸ்.வி, ஜி.கே. வெங்கடேஷ், ராஜேஸ்வர ராவ், மாஸ்டர் வேணு போன்ற, தமிழிலும் சிறப்பாக விளங்கிய இசையமைப்பாளர்கள் தெலுங்கில் இசையமைத்த படங்களில் பாடினார் எஸ்.பி.பி. தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் மட்டுமே இயங்கிய சத்யத்தின் இசையிலும் நிறையப் பாடியிருக்கிறார். இப்படிப் பாடவந்த முதல் இரண்டு வருடங்களில் பெரும்பாலும் தெலுங்குப் பாடல்களில் ஆரம்பித்ததுதான் எஸ்.பி.பியின் இசைப்பயணம். கன்னடமும் கூடவே சேர்ந்துகொண்டது. அப்போது, இன்னொரு போட்டியில் மாணவர் எஸ்,பி,பி பாடியதைக் கேட்டு, பிரபல விளம்பர டிசைனர் பரணிகுமார் (அக்காலத்தில் போஸ்டர்கள், விளம்பரங்களில் கொடிகட்டிப் பறந்தவர்), தமிழில் இயக்குநர் ஸ்ரீதரிடம் அறிமுகப்படுத்துகிறார். ’நெஞ்சிருக்கும் வரை’ படத்தின் செட்டுக்குச் சென்று ஸ்ரீதருக்குப் பாடிக் காட்டுகிறார் எஸ்.பி.பி. இதனால் கவரப்பட்ட ஸ்ரீதர், மறுநாள் தனது அலுவரகம் வரும்படியும், அங்கே இருக்கும் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்திதான் இதில் இறுதி முடிவு எடுக்கமுடியும் என்றும் சொல்ல, மறுநாள் அங்கே செல்கிறார் மாணவர் எஸ்.பி.பி.

அறுபது எழுபது இசைக்கலைஞர்கள் சூழ, எம்.எஸ்.வி ப்ராக்டீஸ் செய்துகொண்டிருக்கிறார். எஸ்.பி.பியை ஸ்ரீதர் அறிமுகப்படுத்த, பாடச்சொல்கிறார் எம்.எஸ்.வி. ஹிந்திப்பாடல் ஒன்றைப் பாடுகிறார் எஸ்.பி.பி (தோஸ்தி படத்தில் முஹம்மது ரஃபியின் ’ஜானேவாலோ ஸரா முட்கே தேகோ முஜே’). நன்றாக இருப்பதாகச் சொல்லி, தமிழில் பாடச்சொல்கிறார் எம்.எஸ்.வி. ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ பாடலின் பல்லவியை மட்டும் பாடுகிறார். தமிழில் எழுதிக்கொடுக்கிறேன். பாடுகிறாயா என்று எம்.எஸ்.வி கேட்க, தமிழ் எழுதப்படிக்கத் தெரியாது என்கிறார் மாணவர் எஸ்.பி.பி. உடனே எம்.எஸ்வி சொல்லச்சொல்ல, வரிகளைத் தெலுங்கில் எழுதிப்பாடுகிறார். தமிழ் உச்சரிப்பை ஆங்காங்கே திருத்திக்கொள்ளவேண்டும் என்று சொல்லி, எப்போது தமிழை எழுதப்படிக்கத் தெரிகிறதோ அப்போது அவசியம் வாய்ப்புக் கொடுப்பதாக உறுதியளிக்கிறார் எம்.எஸ்வி. உடனடியாக, போஸ்டர்களைப் படித்தும், சில தமிழ் நண்பர்களின் உதவியோடும் தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார் மாணவர் எஸ்.பி.பி. இதற்கிடையில் தெலுங்கில் பல பாடல்கள் பாடி, அங்கேயே நல்ல வருமானத்தால் செட்டில் ஆகிவிடுகிறார்.

பின்னர் இரண்டு வருடங்கள் கழித்து, பரணி ஸ்டுடியோவில் ஒரு திலுங்குப் பாடல் பாடிவிட்டு வெளீயே வரும் எஸ்.பி.பியை எம்.எஸ்வி தாண்டிச்செல்கிறார். உடனடியாகத் திரும்பி வந்து, ‘நீ பாலசுப்ரமணியம் தானே? ஏன் என்னை இத்தனை நாட்களாக வந்து பார்க்கவில்லை?’ என்று கேட்க, தான் தமிழ் கற்றுக்கொண்டதைச் சொல்கிறார் எஸ்.பி.பி. உடனே மறுநாள் அவரை வந்து பார்க்கச்சொல்லி, 1969ல் தமிழில் எம்.எஸ்.வியின் இசையில் ஹோட்டல் ரம்பாவில் அறிமுகப்படுத்திவிடுகிறார் எம்.எஸ்.வி. ‘அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு.. இத்தனை நாளா நித்திரை இல்லை இந்த சுகம் வீணாச்சு’ என்ற பாடல். உடன் பாடியவர் எல்.ஆர். ஈஸ்வரி. ஆனால். அப்படம் வராமல் போக, பின்னர் சாந்தி நிலையத்தில் ‘இயற்கையென்னும் இளைய கன்னி’யில் வாய்ப்புக் கொடுக்கிறார் எம்.எஸ்.வி.

அறிமுகமான 1967ல் எஸ்.பி.பிக்குத் தெரிந்த மொழிகள் – தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் கொஞ்சம் இந்தி. தமிழ் சுத்தமாகவே வராது. எஸ்.பி.பி பாடிய முதல் படமான ‘ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மர்யாதா ராமண்ணா’வில் வீணை வாசிக்க வந்த கலைஞர் வீணை ரங்காராவ், உடனடியாக எஸ்.பி.பிக்கு இரண்டாவது படமான ’நக்கரே அதே ஸ்வர்கா’ (1967) கன்னடப் படத்தில் தனது இசையில் வாய்ப்புத் தருகிறார். அப்போது எஸ்.பி.பிக்குக் கன்னடம் தெரியாது. ஆனால் பத்தே நாட்களில் கற்றுக்கொள்ளலாம் வா என்று நம்பிக்கை தருகிறார் வீணை ரங்காராவ். இதில்தான் எஸ்.பி.பி பாடிய இரண்டாவது பாடல் இடம்பெற்றிருக்கிறது. ’கனசிதோ மனசிதோ’ என்ற அந்தப் பாடலை எஸ்.பி.பியுடன் பாடியவர் பி.சுசீலா. இவர்தான் எஸ்.பி.பியின் முதல் தமிழ்ப் பாடலிலும் அவருடன் பாடியிருக்கிறார்.  

இப்படி ஆரம்பித்த பாலசுப்ரமணியத்தின் தெலுங்கு மற்றும் கன்னடப் பயணங்களோடு, தமிழில் அறிமுகமான அதே 1969ல், இசையமைப்பாளர் தேவராஜன் மூலமாக, மலையாளத்திலும் ’கடல்பாலம்’ அறிமுகமாக அமைகிறது. படத்தின் இயக்குநர், கே.எஸ். சேதுமாதவன். தேவராஜனிடம் எஸ்.பி.பியை அறிமுகம் செய்தவர், ஆர்.கே. சேகர் (ஏ.ஆர் ரஹ்மானின் தந்தை). அக்காலகட்டத்தில் அடிக்கடி ஆர். கே. சேகரின் சென்னை வீட்டுக்குப் பாடல் ரிகர்சல்களுக்காக எஸ்.பி.பி செல்வது வழக்கம். இது, ஆர்.கே. சேகர், மலையாளத்தில் பழசிராஜாவுக்கு (1964) இசையமைத்துவிட்டு, அதன்பின் தேவராஜன் முதலிய இசையமைப்பாளர்களிடம் இசையை கண்டக்ட் செய்பவராகப் பணிபுரிந்துகொண்டிருந்த காலம். இச்சமயத்தில், தனது வீட்டுக்கு ரிகர்சல்களுக்காக வந்துகொண்டிருந்த எஸ்.பி.பியை தேவராஜனிடம் அறிமுகப்படுத்துகிறார் ஆர்.கே. சேகர். அதுதான் கடல்பாலத்தின் ’ஈ கடலும்.. மறுகடலும்’ என்ற பாடல். மலையாளத்தில் அதற்கு அடுத்த பாடல், அதே ஆர்.கே. சேகரின் இசையில் 1971ல் ’யோகமுள்ளவள்’ படத்தில் பாடுகிறார்.

ஆனால் மலையாளத்தில் தனது மறைவு வரையிலுமே, கிட்டத்தட்ட நூற்று சொச்சம் பாடல்கள்தான் பாடியிருக்கிறார் எஸ்.பி.பி. தெலுங்கிலும் கன்னடத்திலும் மிக ஏராளமான பாடல்கள் பாடியிருக்கிறார். மலையாளத்தில் பல பாடல்களை அவர் பாடாமல் இருந்ததற்குக் காரணம் அங்கே ஏற்கெனவே ஏசுதாஸ் ஏராளமான பாடல்களைப் பாடிக்கொண்டிருந்ததால் இருக்கலாம். கூடவே, மலையாள மொழியின் உச்சரிப்பில் இருக்கும் சிக்கல்களாகவும் இருக்கலாம். எது எப்படி இருந்தாலும், மலையாளத்திலும் அர்ஜுனன், ஷ்யாம், எம்.பி. ஸ்ரீனிவாசன், ரவீந்திரன், ஔசெப்பச்சன், எஸ்.பி. வெங்கடேஷ் (தமிழில் சங்கீதராஜன் என்று அறியப்பட்டவர்), ரவீந்த்ர ஜெயின் (ஆம். இந்தி இசையின் பார்வையற்ற ஞானிதான். ஒரே ஒரு மலையாளப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். சுகம் சுககரம். அதில் எஸ்பி.பிக்கு ஒரு பாடல் உண்டு. படத்தில் இந்தப் பாடலுக்கு நடித்தவர் ஷம்மி கபூர்) போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்கள் பாடியிருக்கிறார்.

இந்தியை எடுத்துக்கொண்டாலோ, எஸ்.பி.பி பாடிய முதல் இந்திப் பாடலுக்கே சிறந்த பாடகருக்கான தேசிய விருது கிடைத்தது. 1981ல் லக்‌ஷ்மிகாந்த் பியாரிலாலின் இசையில், கமல்ஹாசன் நடித்து, பாலசந்தர் இயக்கிய ‘எக் தூஜே கே லியே’ படத்தில் ‘தேரே மேரே பீச் மே’ பாடலின் சோக வடிவம் அது. அதில் இருந்து ஏராளமான இந்திப்பாடல்கள் பாடிவிட்டார் எஸ்.பி.பி. ஒரு காலகட்டத்தில் சல்மான் கான் நடித்த பல பாடல்களைப் பாடியவர் எஸ்.பி.பியே. தொண்ணூறுகளில் இந்திப் பாடல்கள் கேட்டவர்கள் இதைக் கவனித்திருக்கலாம். இந்தியில் லக்‌ஷ்மிகாந்த் ப்யாரிலால், ராம் லக்‌ஷ்மன் (பெரும்பாலான ராஜ்ஸ்ரீ நிறுவனத்தாரின் சல்மான் கான் படங்களின் இசையமைப்பாளர்), ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரின் இசையில் பல பாடல்கள் பாடியிருக்கிறார்.

தெலுங்கிலும் தமிழிலும் கன்னடத்திலும் தொடர்ந்து மிகவும் பிஸியாகப் பாடிக்கொண்டிருந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம், கே.விஸ்வநாத் இயக்கிய ‘சங்கராபரணம்’ படத்தின் மூலமாகத் தனது முதல் தேசிய விருதைப் பெற்றார். இந்தப் படத்துக்காக கே.விஸ்வநாத், எஸ்.பி.பியின் தந்தையைத்தான் முதலில் அணுகியிருக்கிறார். என்னவெனில், ’தினந்தோறும் பல பாடல்கள் ரெகார்டிங் செய்துகொண்டிருக்கிறார் உங்கள் மகன்; ஆனால் எனக்கு அவரது குரல், மிகவும் புதியதாகத் தேவைப்படுகிறது. எனவே, அவர் எந்தத் தினமானாலும் பாடக்கூடிய முதல் பாடலாக என் பாடல்கள் இருக்கவேண்டும். அவர் எப்போது கால்ஷீட் கொடுத்தாலும் சரி’ என்று சொல்லியிருக்கிறார்.  அதற்கு எஸ்.பி.பியின் தந்தை (சாம்பமூர்த்தி – ஹரிகதை காலட்சேபங்கள் செய்துகொண்டிருந்தவர்), அவனுக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு வந்திருக்கிறது; இதை அவன் கேட்காமலா போய்விடுவான்? கேட்காவிட்டால் அவன் செவிட்டில் இரண்டு அறைகள் அறைந்து வழிக்குக் கொண்டுவாருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.

இதன்பின்னும் எஸ்.பி.பி அந்த வாய்ப்பை ஒப்புக்கொள்ளவில்லை. காரணம், ’அந்தப் படத்தில் வரும் சங்கர சாஸ்திரி, மிகமிகத் தூய்மையானவர்; கர்நாடக இசையில் கரைகண்டவர். எனக்கோ கர்நாடக இசையே தெரியாது. இதை நான் பாடி, ஒருவேளை இந்தப் படத்தில் சரியாக வராத ஒரே விஷயம் எஸ்.பி.பியின் குரல்தான் என்று அனைவரும் சொன்னால், பாண்டிபஜாரில் பொதுவில் நின்று தூக்கில் தான் தொங்கவேண்டும்’ என்றே சொல்லியிருக்கிறார், ஆனாலும் அவரை வற்புறுத்தி ஒப்புக்கொள்ளவைத்துவிட்டார் கே. விஸ்வநாத். இதனால் ஒவ்வொரு பாடலாக, கே.வி. மகாதேவனின் புகழ்பெற்ற அசோசியேட் புகழேந்தியால் டிராக் பாடப்பட்டு, அந்தப் பாடல்களை டேப்பில் ரெகார்ட் செய்து, செல்லும் இடங்கள் எல்லாம் காரில் கேட்டுக்கொண்டே மனனம் செய்து, அதன்பின்னும் பயத்துடனேயே பாடியிருக்கிறார் எஸ்.பி.பி. அவரது வார்த்தைகளிலேயே சொல்லவேண்டும் என்றால், ’ஹாய் பாலு என்று என்னை அழைத்துக்கொண்டிருந்த அனைவரும், நமஸ்காரம் பாலு அவர்களே என்று சொல்ல ஆரம்பித்தது சங்கராபரணத்தால்தான்’.

அந்த உழைப்பு வீண்போகவில்லை. அறிமுகமான பதிமூன்றாம் ஆண்டு, 1980க்கான சிறந்த பாடகருக்கான தேசிய விருது, சங்கராபரணத்துக்காக எஸ்.பி.பிக்குக் கிடைக்கிறது. அவருக்கு மட்டுமல்லாமல், அற்புதமாக இசையமைத்த கே.வி. மகாதேவன், உடன் பாடிய வாணி ஜெயராம் ஆகியோருக்கும் தேசிய விருது கிடைக்கிறது.

உண்மையில் இன்றுமே சங்கராபரணம் பாடல்களை ரசிக்க முடியும். வழக்கமான பாணியில் இல்லாமல், கொஞ்சம் கனமான குரலாகத் தன் குரலை மாற்றிக்கொண்டு, சங்கர சாஸ்திரியாக நடித்த சோமையாஜுலுவின் மத்திம வயதுக்காக அட்ஜஸ்ட் செய்துகொண்டே எல்லாப் பாடல்களையும் பாடியிருப்பார். சங்கராபரணம் சென்னை, கோவை ஆகிய ஊர்களிலும் பல நாட்கள் ஓடியது.

இதற்கு முன்னுமே எஸ்.பி.பி தெலுங்கில் பிரபலமான, பிஸியான பாடகர்தான். இதன்பின்னும் அப்படியே தொடர்ந்தார். தமிழைவிடவும் அதிகமான பாடல்களைத் தெலுங்கில்தான் பாடியிருக்கிறார். எத்தனையோ கதாநாயகர்களை ரசிகர்கள் மனதில் வாழவைத்தார்.

இதன்பின் அடுத்த தேசிய விருது, இம்முறை இந்தியில் கிடைக்கிறது. பாலசந்தர், தனது மரோசரித்ராவை 1981ல் இந்தியில் அதே கமல்ஹாஸனை வைத்து எக் தூஜே கே லியே என்று ரீமேக் செய்கிறார். அந்தப் படத்தில் கதாநாயகன் தமிழ் மட்டுமே தெரிந்த இளைஞன். கோவாவில் வசிப்பவன். அவனுக்குப் பின்னணிப் பாடலை எஸ்.பி.பிதான் பாடவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார் பாலசந்தர். இதற்காக இசையமைப்பாளர்கள் லக்‌ஷ்மிகாந்த் பியாரிலாலிடம் சண்டையே போட்டிருக்கிறார். இறுதியில் அவர்கள் சம்மதிக்க, தனது இரண்டாம் இந்திப்பாடலை அந்தப் படத்துக்காக எஸ்.பி.பி பாடுகிறார். ’தேரே மேரே பீச் மே’ என்ற பாடலின் சோக வெர்ஷன். அற்புதமான பாடல். எக் தூஜே கே லியே பட்டிதொட்டியெங்கும் பிய்த்துக்கொண்டு ஓட, அந்தப் பாடலுக்காக சிறந்த பாடகருக்கான தேசிய விருது இரண்டாம் முறையாக எஸ்.பி.பிக்குக் கிடைக்கிறது. (எஸ்.பி.பி பாடிய முதல் இந்திப்பாடலும் பாலசந்தர் படமே. 1977ல் வெளீயான ‘மீட்டி மீட்டி பாதே(ய்)ன்’ படம். அதில் ‘தில் தீவானா படா மஸ்தானா’ என்பதே இந்தியில் டெக்னிகலாக அவரது முதல் பாடல். ஆனால் இது மன்மதலீலையின் டப்பிங் என்பதால் பொதுவாக எக் தூஜே கே லியேதான் எஸ்.பி.பியின் நேரடி இந்திப் படமாகக் கருதப்படுகிறது).

இதன்பின்னர் எப்படிக் கமல்ஹாஸன் தடதடவென்று ஹிந்தியில் புக்காக ஆரம்பித்தாரோ அப்படி, கமல்ஹாஸன் நடிக்கும் படங்களில் ஆங்காங்கே எஸ்.பி.பியும் பாட ஆரம்பித்தார். பாலசந்தரும் டி. ராமாராவும் எடுத்த இந்திப் படங்களிலும் எஸ்.பி.பிக்கு வாய்ப்புக் கிடைத்தது இந்தப் படங்களுக்கெல்லாம் லக்‌ஷ்மிகாந்த் பியாரிலாலே பெரும்பாலும் இசையமைத்தனர். (கமல்ஹாஸனுக்கும் எஸ்.பி.பிக்குமான தொடர்பு இறுதி வரை இருந்தது. கமல்ஹாஸனின் அத்தனை டப்பிங் செய்யப்பட்ட படங்களுக்கும் அவருக்குப் பின்னணிக் குரல் எஸ்.பி.பியே கொடுத்தார் என்பது தெரிந்திருக்கும்). ரீமேக்குகள் இல்லாமல் இந்தியில் எஸ்.பி.பி பாடிய படங்களில் சாகர் குறிப்பிடத்தக்கது. ஆர்.டி. பர்மனின் இசை. மிகவும் நன்றாக ஓடிய படம். அதில் கமல்ஹாஸனுக்காகப் பாடியிருப்பார்.

ஆனால் எப்படி எஸ்.பி.பிக்கு எக் தூஜே கே லியே இந்தியா முழுக்கப் பெரும் புகழைக் கொடுத்ததோ, அப்படி அவரை மறுபடியும் இந்தியா முழுக்கப் பரப்பியது ‘மைனே ப்யார் கியா’ படம். கதாநாயகனாக சல்மான் கானின் முதல் படம். இசையமைத்தவர் ராம் லக்‌ஷ்மண். சூரஜ் பர்ஜாத்யாவின் படம். இந்தப் படத்தின் பதினோரு பாடல்களில் பத்துப் பாடல்களை எஸ்.பி.பியே பாடினார். அப்படத்தின் ஆடியோ காஸெட், விற்பனையில் சாதனை படைத்து சூப்பர்ஹிட் இசையாக மாறியது. இந்தப் படத்துக்குப் பின்னர், சில வருடங்கள், பாலிவுட்டில் சல்மான் கானின் குரலாகவே மாறினார் எஸ்.பி.பி. குறிப்பாக ஹம் ஆப்கே ஹெய்ன் கோன் படம். இது மைனே ப்யார் கியா போலத் தமிழிலும் அட்டகாசமாக ஓடியது. இந்தப் படத்துக்கும் அதே சூரஜ் பர்ஜாத்யாதான் இயக்கம். அதே ராம் லக்‌ஷ்மண் தான் இசை. இதிலும் மொத்தம் பதினான்கு பாடல்கள். அவற்றில் ஒன்பது பாடல்களை எஸ்.பி.பி தனியாகவும், லதா மங்கேஷ்கருடனும் பாடினார். அத்தனையும் சூப்பர்ஹிட்கள். இசை ரசிகர்கள் இந்த இரண்டு ஆல்பங்களையும் மறந்திருக்கவே முடியாது. சல்மான் கானின் ஓடாத படமான ‘லவ்’ படத்திலும் சித்ராவோடு இணைந்து பாடியிருக்கிறார். ’சாஜன்’ படத்தில் நதீம் ஷ்ரவணின் இசையில் எஸ்.பி.பி பாடிய ‘பஹத் ப்யார் கர்த்தே ஹைன் தும் கோ சனம்’ பாடல் இன்றுமே மறக்கவே முடியாத இந்திப் பாடல்களில் ஒன்று. ஆனால் போகப்போக இந்தியிலிருந்து எஸ்.பி.பி விலகி, தமிழ் & தெலுங்கிலேயே பெரும்பாலும் பாட ஆரம்பித்தார்.

எஸ்.பி.பியின் மூன்றாம் தேசிய விருதும் தெலுங்குதான். 1983ல் கே. விஸ்வநாத் இயக்கிய ‘சாகர சங்கமம்’ (சலங்கை ஒலி) படத்துக்காக. அதில் ‘வேதம் அணுவிலும் ஒரு நாதம்’ பாடலின் தெலுங்கு வடிவத்துக்காகக் கிடைத்தது. இதன்பின் நான்காவது தேசிய விருது, அதே தெலுங்கில் பாலசந்தர் எடுத்த ‘ருத்ரவீணா’ படத்துக்காகக் கிடைத்தது. இதைத்தான் அடுத்து ‘உன்னால் முடியும் தம்பி’ என்று பாலசந்தர் தமிழில் எடுத்தார். ருத்ரவீணாவில் சிரஞ்சீவியும் ஜெமினியும் நடித்திருந்தனர். இதன்பின் ஐந்தாவது விருது கன்னடத்தில். ‘சங்கீத சாகர கானயோகி பஞ்சாக்‌ஷர கவாயி’ படத்துக்காக. இதில் அட்டகாசமான ஒரு இந்துஸ்தானி பாடல் பாடியிருப்பார் (உமண்டு குமண்டு கன கர்ஜே பத்ரா). இதற்கு இசை, கன்னடத்தில் இளையராஜாவுக்கு சமமான ஹம்சலேகா. இப்படத்துக்காக ஹம்சலேகாவுக்கும் தேசிய விருது கிடைத்தது. இவற்றுக்கெல்லாம் பின்னர்தான் தமிழில் எஸ்.பி,பிக்கு அவரது இறுதியான தேசிய விருது, ‘மின்சாரக் கனவு’ படத்தின் ’தங்கத்தாமரை மகளே’ படத்துக்குக் கிடைத்தது.

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி தவிரவும் இந்தியாவின் பிற 12 மொழிகளில் எஸ்.பி.பி பாடியிருக்கிறார். அவற்றையெல்லாம் எழுதப் புகுந்தால் புத்தகம்தான் எழுதவேண்டி இருக்கும். திரையிசைப் பாடல்களைத் தவிர, பக்திப் பாடல்களுமே ஏராளம் பாடியிருக்கிறார். எப்படித் தமிழகத்தில் எஸ்.பி.பி ஒரு மறக்க முடியாத பாடகரோ, அப்படியேதான் தெலுங்கு மற்றும் கன்னடத்திலும். தமிழில் இருந்த அதே புகழ், அவருக்குத் தென்னிந்தியா முழுக்கவே இருந்தது. எத்தனையோ கதாநாயகர்களைத் தனது பாடல்களின் மூலமாக எப்போதும் மக்கள் மனதில் வாழவைத்துக்கொண்டிருப்பவர் அவர். இப்படிப் பல மொழிகளிலும் சூப்பர்ஸ்டாராக விளங்கிய பாடகர் இதற்கு முன்னரும், இனிமேலுமே அரிதுதான் என்பதே ஸ்ரீபதி பண்டிதாராத்யுல பாலசுப்ரமணியம் என்ற எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறக்கமுடியாத வெற்றி.

  Comments

Join the conversation