இந்த சீரீஸ் எனக்கு மிகவும் பிடித்ததுபற்றி எழுதுவதாக இரண்டு வாரங்கள் முன்னால் ஃபேஸ்புக்கில் சொன்னேன். ஆனால் உடனேயே இடைவிடாத சில பயணங்கள் அமைந்ததால் எதுவுமே எழுத முடியவில்லை. இப்போதுதான் நேரம் கிடைத்தது.
இந்த சீரீஸ் வெளியானதும் ஏராளமான நெகட்டிவ் விமர்சனங்களைப் பார்த்தேன். ஆனாலும் சீரீசை எப்படியாவது பார்க்கவேண்டும் என்று நினைத்தேன். காரணம் அதன் இயக்குநர் காக்காமுட்டை மணிகண்டன். அவரது கடைசி விவசாயி எனக்கு மிகப்பிடித்த தமிழ்ப்படங்களில் ஒன்று. இதுவரை மணிகண்டன் என்னை ஏமாற்றியதில்லை.
சீரீசைப் பார்த்ததும்தான் எனது எண்ணம் சரி என்று புரிந்துகொண்டேன். ஏன் என்று விரிவாகச் சொல்கிறேன்.
கடந்த பல ஆண்டுகளாக, Slow doesn’t mean uninteresting என்பதைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். ஒரு திரைப்படமோ சீரீசோ மெதுவாக நகர்ந்தாலேயே அது மோசம் என்று ஆகிவிடாது. வீடு, கடைசி விவசாயி, கூழாங்கல் ஆகியவை தமிழில் ஒரு சில உதாரணங்கள். ஆனால் வேகமான படங்கள், சீரீஸ்கள் பார்த்தே பழகிய நமக்கு மெதுவாக ஒரு narrative சென்றால் உடனே அது மொக்கை என்று தோன்றிவிடுகிறது. எல்லாமே வேகமாகவே இருக்கவேண்டும் என்றே எதிர்பார்க்கத் துவங்கிவிட்டோம். இந்தியாவையும் (அதன் அண்டை நாடுகளையும்) அமெரிக்காவையும் தவிர உலகின் பிற நாடுகளில் இந்த மெதுவாக நகரும் படங்களையுமே அவர்கள் பார்த்து ரசிக்கவே செய்கிறார்கள். குறிப்பாக ஐரோப்பா முழுதுமே அவர்களின் மிகச்சிறந்த திரைப்படம்/ சீரீஸ் என்று எடுத்துக்கொண்டால் அவை மெதுவாகவேதான் நகரும்.
எனவே கமர்ஷியல் என்ற வகையின்கீழ், வேகமாகவும் மெதுவாகவும் நகரும் படைப்புகள் ஏராளமாக உள்ளன என்று நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். இது புரியவில்லை என்றால் சற்றே மெதுவாக நகரும் எந்தப் படைப்பு வந்தாலும் அதை நக்கலடித்துக்கொண்டே, அதேசமயம் ரசனையில் கொஞ்சம் கூட வளராமல் குண்டுசட்டிக்குள்ளேயே அமர்ந்து வேகமாக செல்லும் ரீல்கள் பார்த்துக்கொண்டே குதிரை ஓட்டிக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.
நீங்கள் வேண்டுமானால் இதைப் பரிசோதித்துப் பார்க்கலாம். சிறந்த ஐரோப்பியப் படங்கள், சீரீஸ்கள் என்று தேடிப் பாருங்கள். இந்திய அளவில் உலகவிருது பெற்ற பல திரைப்படங்கள் மெதுவாகவே நகரும். காரணம் அவற்றில் ஒரு வாழ்வியல் சொல்லப்படும். ரஷோமான் மெதுவான படமே. சத்யஜித் ரேயின் திரைப்படங்கள், ரித்விக் கடக் படங்கள், ஷ்யாம் பெனகல் படங்கள், பாலு மகேந்திரா படங்கள் என்று எதனை எடுத்துக்கொண்டாலும் இப்படியே.
உடனே காட்டான் சீரீசை உலக சீரீஸ் என்று நான் சொல்கிறேன் என்று வரக்கூடாது. காட்டான் ஒரு நல்ல கமர்ஷியல் சீரீஸ். மணிகண்டனின் பாணியில் வெளிவந்திருக்கும் சீரீஸ். அதில் சில குறைகள் அவசியம் உண்டு. ஆனால் அது அறவே ஒதுக்கவேண்டிய சீரீஸ் இல்லை. மணிகண்டன், உலக அளவில் வெளியாகியிருக்கும் பல படைப்புகளை ஆழமாகப் பார்த்து வந்திருக்கிறார். அவரது திரைப்படங்கள் பாணியில் ஒரு கதையை சொல்லியிருக்கிறார். அதுதான் முத்து என்கிற காட்டான்.
இந்த சீரீசின் கதை, நான் லீனியராக, முன்னும் பின்னும் சொல்லப்படுகிறது. சீரீசின் துவக்கத்தில் ஒரு தலை ஒரு கிராமத்தில் கண்டெடுக்கப்படுகிறது. அந்தக் கிராமத்தின் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த மூன்று ஆண்டுகளாக எந்தக் கேசும் வராமல், அந்த ஸ்டேஷனையே கலைக்கும் நிலை ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தத் தலை கண்டெடுக்கப்பட்டதால் அதைப் பற்றிய விசாரணை துவங்குகிறது. விசாரணையில் அந்தத் தலை முத்து என்ற நபரின் தலை என்பது சிறுகச்சிறுகப் புரிகிறது. சிடிசன் கேன், ரஷோமான், Woman in Question (அந்தநாள்) போன்ற திரைப்படங்கள் எப்படி நான் லீனியராக ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் பல்வேறு குணாதிசயங்களைச் சொல்லிக்கொண்டு வந்தனவோ அந்தப் பாணியில் முத்து என்கிற காட்டானில் முத்து என்கிற கதாபாத்திரத்தின் பல்வேறு அம்சங்கள் சொல்லப்படுகின்றன.
இந்த சீரீசின் ப்ளஸ் பாயிண்ட் இப்படிச் சொல்லப்படும் கிராமம் சார்ந்த பின்னணியில் இடம்பெறும் கதையும் கதாபாத்திரங்களும்தான். இது ஒரு மர்டர் மிஸ்டரி இல்லவே இல்லை. ஒரு நீண்ட பயணத்தில் இடம்பெறும் பல்வேறு கதாபாத்திரங்கள் மூலமாகக் கோர்க்கப்படும் கதை என்ற பாணியில்தான் இந்த சீரீஸ் எடுக்கப்பட்டிருக்கிறது. கடைசி விவசாயி போல இதிலும் மிகவும் சுவையான கிராமத்துக் கதாபாத்திரங்கள், நகரத்து மாந்தர்கள் ஆகியோர் வருகிறார்கள். ஒரு நாவலில் இடம்பெறும் பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை எப்படிச் சொல்லப்படுகிறதோ அதுதான் முத்து என்கிற காட்டானிலும் சொல்லப்பட்டிருக்கிறது.
லோக்கல் போலீஸ் காளைப்பாண்டியன் ஒரு நல்ல உதாரணம். போலீஸ் கான்ஸ்டபிளாக மட்டும் இல்லாமல், அந்த கிராமத்தில் அவருக்கு என்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கை உண்டு. ஏராளமான ஆடுகளை வைத்துக்கொண்டு அவற்றின் மூலமாக வரும் வருமானத்தையும் வைத்து, அந்த கிராமத்திலேயே வாழ்ந்துவிடவேண்டும் என்ற ஆசை உடையவர். அவருக்கு மனைவி மூலமாக ஒரு குடும்பப் பிரச்னை வருகிறது. முத்து யார் என்று தேடும் பயணத்தில் இந்தப் பிரச்னையையும் அவர் சேர்த்தே சமாளிக்கிறார். வடிவேல் முருகன் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது மனைவியாக வரும் விஜே பாருவும் நல்ல நடிப்பையே கொடுத்திருக்கிறார்.
இந்த கிராமத்து போலீஸ் டீமில் நடித்திருக்கும் அனைவருமே இயல்பாகப் பொருந்தியிருக்கிறார்கள். தங்கமுடியாக வந்திருக்கும் சிங்கம்புலி பற்றிச் சொல்லவே வேண்டாம் – இன்ஸ்பெக்டராக வரும் வேட்டை முத்துக்குமாருடன் சேர்ந்து கேரளா முழுக்கச் சுற்றும் sidekick கதாபாத்திரம் இவருக்கு. இன்ஸ்பெக்டரை நன்றாகப் புரிந்துகொண்ட கதாபாத்திரம். இவருக்கு எப்படியாவது அந்தக் கிராமத்தில் இருந்து வெளியேறி நகரத்துக்குச் சென்றுவிடவேண்டும் என்ற ஆசை. இவர்களது கேரளா பயணத்தில் இன்ஸ்பெக்டரைப் புரிந்துகொண்டு அவருக்காகக் கூடவே இருந்து பார்த்துக்கொள்ளும் வேலை. கூடவே இந்தக் கேஸ் பற்றி அவ்வப்போது முக்கியமான தகவல்களை நினைவுபடுத்தும் வேலை.
எப்போது பார்த்தாலும் ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டு, கெத்தாகவே திரியும் இன்ஸ்பெக்டராக வேட்டை முத்துக்குமார். பயங்கரமான நடிப்பு. மிக வித்தியாசமான கதாபாத்திரம். அவருக்கு ஜாலியாக சரக்கடிக்கவும் பிடிக்கும் – அதேசமயம் கேஸ் என்று வந்துவிட்டால் அடியாழம் வரை சென்று துழாவி உண்மைகளைக் கண்டுபிடிக்கவும் முடியும். இன்ஸ்பெக்டருக்கே உரிய ஒரு உடல்மொழி, திமிர், தைரியம் ஆகியவற்றை அருமையாகக் கையாண்டிருக்கிறார். யோவ் கோல்டன் ஹேர் என்று தங்கமுடியை மப்பில் அழைப்பதில் இருந்து, விசாரிக்கும் ஒவ்வொரு நபருடன் பழகும் விதமான உடல்மொழியுடன் பிரமாதப்படுத்திவிட்டார் இவர்.
இந்தப் போலீஸ் அணியைப் பார்த்தால் பஞ்சாயத் சீரீசில் வரும் கதாபாத்திரங்களைப் பார்க்கையில் ஒரு ஃபீல் குட் உணர்வு வருமே? அப்படி இருக்கிறது.
தமிழ்நாடு, கேரளா என்று தொடர் பயணத்தைப் போலீஸ்காரர்கள் செய்கையில் காட்சிகள் இடம்பெறும் பின்னணி, அதில் வரும் கதாபாத்திரங்கள் ஆகியவை வித்தியாசமாகவே இருந்தன. இவற்றிலும் ஃபீல் குட் உணர்வு நன்றாகவே சொல்லப்பட்டிருந்தது.
இதேபோல் அந்த நடனக்குழுவில் வரும் அனைவருமே சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் மேல் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம். சார்லி திரைப்படத்தின் துல்கர் சல்மான் போல unpredictableஆன ஒரு கதாபாத்திரமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. எந்தக் காரணமும் இல்லாமல் மனம் போன போக்கில் கடைசி விவசாயியில் வரும் ராமையா கதாபாத்திரம் போல ஊர் ஊராக அலைகிறது. அதாவது, அப்படித்தான் அதைக் கொண்டுசெல்கிறார்கள். போகப்போக, சிறுகச்சிறுக முத்து பற்றி நாம் தெரிந்துகொள்ளும் ஒவ்வொரு தகவலும் பின்னால் அந்தக் கதாபாத்திரம் ஏன் அப்படி அலைந்து திரிந்தது என்று நமக்குப் பல கதைகளைச் சொல்கின்றன.
இப்போது கதையின் ஒருசில நெகட்டிவ் பாயிண்ட்களுக்கு வருவோம்.
கதை அருமையான ஒரு பயணமாகச் சென்றுகொண்டிருந்தபோது, முத்து கதாபாத்திரத்தின் பின்னணி நமக்குத் தெரியவரும் காட்சிகள் – மிலிந்த் சோமன் இடம்பெறும் காட்சிகள் – சுவாரஸ்யமாக இல்லை. அந்த இடம் வரும்வரை ஒரு நல்ல பயணமாகச் சென்றுகொண்டிருந்த கதை, இந்த இடத்தில் இருந்து ஒரு திட்டமிடப்பட்ட பயணமாக மாறுகிறது. அந்த இடத்தில் ஒரு கமர்ஷியல் கதையாக மாறும்போது, அந்தக் கமர்ஷியல் கதையை நிலைநிறுத்தத் தேவைப்படும் அழுத்தம் கொஞ்சம் குறைகிறது. அதனாலேயே கடைசி மூன்று எபிசோடுகள் – முதல் ஐந்து எபிசோடுகளில் சொல்லப்படாத பின்னணி வருகையில் – லேசாகத் தடுமாறுகின்றன. அதனால் ஒரு அருமையான ஃபீல் குட் சீரீஸ் பார்க்கும் தன்மை கொஞ்சம் குறைகிறது.
இந்த இடத்தில் இன்னும் அழுத்தமான கதையைச் சொல்வதன்மூலம் இதைச் சரிசெய்திருக்கலாம். ஆனால் ஒருவேளை இதுவே கட்டாயம் போதும் என்று திரைக்கதை எழுதிய மணிகண்டன், அஜித்குமார் & ராஜ்குமார் ஆகியோர் நினைத்திருக்கலாம். இருந்தாலும் முதல் ஐந்து போல இறுதி மூன்று இல்லை. அதாவது, எப்போது ஃபீல் குட் உணர்வு முடிந்து கமர்ஷியல் கதைக்கான அம்சங்கள் இடம்பெற்றனவோ அப்போதில் இருந்து அந்தக் கமர்ஷியல் கதைக்கான அடித்தளம் அழுத்தமாகப் போடப்படவில்லை. இதுதான் இந்த சீரீசின் முக்கியமான பிரச்னை. அது வேகமாகச் செல்கிறதா அல்லது மெதுவாகச் செல்கிறதா என்பது இல்லை. ஆனால் மெதுவாகப் போகிறது மெதுவாகப் போகிறது என்ற புலம்பலையே நான் அதிகம் படிக்க நேர்ந்தது. இது அவசியம் கடும் கமர்ஷியல்களையும் ரீல்களையுமே பார்த்துப் பழகிய மனநிலைதான். அப்படிப்பட்ட மேலோட்டமான கருத்துகளைக் கட்டாயம் நாம் ஒதுக்கவே வேண்டும்.
சில கேள்விகளுக்குப் பதில் இந்த சீரீசின் முதல் சீசனில் இல்லை. அவை அவசியம் இரண்டாம் சீசனில் வெளியாகும் என்றே தெரிகிறது. ஒருசில விஷயங்களை ஆடியன்ஸ் புரிந்துகொள்வார்கள் என்று அசால்ட்டாகத் தாண்டிச் சென்றிருக்கிறார்கள். விஜய் சேதிபதி கதாபாத்திரத்துக்கு வண்டிக்குள் பணம் இருப்பது எப்படித் தெரியும் என்ற கேள்வி அதில் ஒன்று. இப்போதைய காலகட்டத்தில் இதையெல்லாம் விளக்கி நான்கு சீன்கள் எழுதவே தேவையில்லை. அப்படி எழுதினால் அதெல்லாம் பழைய சீன்களாக மாறிவிடும். எனவே சரியாகவே இதெல்லாம் சொல்லாமல் கொண்டுசென்றிருக்கின்றனர்.
இரண்டாவது சீசனுக்காகக் காத்திருக்கிறேன். மணிகண்டன், விஜய் சேதுபதி டீமுக்கு ஒரு நல்ல சீரீஸ் தந்ததற்காக வாழ்த்துக்கள்.