Tenet (2020) – English – 2

by Karundhel Rajesh May 20, 2021   Cinema articles

TENET படத்தின் முதல் பகுதியை இங்கே படிக்கலாம்.

TENET படத்தின் முக்கியமான அம்சம், இறந்தகாலத்துக்குச் செல்வது. இது எப்படி சாத்தியப்படுகிறது? நாம் சென்ற கட்டுரையில் பார்த்ததுபோல, இந்தப் படத்தில் காலப்பயணம் (Time Travel) வருவதில்லை. மாறாக, காலத்தைத் தலைகீழாக மாற்றுதலே (Time Inversion) வருகிறது. இதனால்தான் எதிர்காலத்துக்கு இந்தப் படத்தில் பயணம் செல்வது இயலாது. எனவே எதிர்காலத்துக்கு நாம் எதாவது சொல்லவேண்டும் என்றாலோ, அல்லது எதிர்காலத்தில் இருந்து ஏதேனும் தகவல்கள் வரவேண்டும் என்றாலோ, பொருட்களைப் புதைத்துவைத்து, அதன்மூலம் இறந்தகாலத்தில் அவை எடுக்கப்பட்டு, அவற்றின் மூலம் தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. இதற்கு உதாரணம், வில்லன் சாடோர், இளம்வயதில் ரஷ்யாவில் கஷ்டப்பட்டு அணுக்கழிவுகளை எடுக்கும் வேலை செய்யும்போது அவனுக்குக் கிடைக்கும் பார்சல். இது எங்கிருந்து வருகிறது? எதிர்காலத்தில் இருந்து சாடோருக்கு அனுப்பப்பட்டு, அதே ஆவணங்கள் மற்றும் தங்கம் எல்லாமே படத்தில் கப்பலில் இருக்கும் சாடோர், தனது இளம்வயது சாடோருக்கு அனுப்புவதற்காக அவைகளைத் தனது அடியாட்களுக்குக் கொடுக்கிறான். இதை நாயகன் பார்த்துவிட்டு, சாடோரின் அடியாட்களிடம் உதை வாங்குகிறான்.

இந்த விதிக்கு ஒரே விதிவிலக்கு, நீல், எதிர்காலத்தில் இருந்தே நிகழ்காலத்துக்கு வருகிறான். நாயகனுக்கு உதவி, இறக்கிறான். அப்போது, இவையெல்லாமே திரும்பத்திரும்ப நடந்துகொண்டே இருக்கும் என்று புரிந்துகொள்கிறோம்.

இதேபோன்று, TENET படத்தில் வரும் இன்னொரு முக்கியமான விஷயம், Turnstile. இது என்ன? படத்தில் ஆங்காங்கே பாதி உருண்டைகளாக இருக்கும் சிறிய கட்டிடங்கள் போன்ற அமைப்பு. இவற்றுக்குள் செல்லும்போதுதான் இறந்தகாலத்துக்குப் பயணிப்பது சாத்தியப்படுகிறது. இந்தக் கருவிதான், அதனுள் எது வைக்கப்பட்டாலும் அதன் Entropyயைத் தலைகீழாக மாற்றுகிறது. இதனாலேயே இறந்தகாலத்துக்குப் பயணிப்பதும் சாத்தியமாகிறது.

TENET சொல்லும் கதை

இந்த Turnstileகளை உருவாக்கியது யார்? படத்தில் வில்லனாக வரும் சாடோர். ஏன் உருவாக்கினான்? இதுதான் டெனெட் படத்தின் ஒன்லைன். அதன் முக்கியமான கதை. வருங்கால உலகம், இப்போதுள்ள தற்கால உலகத்தால் பாதிக்கப்படுகிறது. எப்படி என்றால், தற்கால உலகத்தினர், பொறுப்பே இல்லாமல் இயற்கையை சீரழிக்கின்றனர். இதனால் உலகின் தட்பவெப்பம் மாறுகிறது. தண்ணீர் குறைந்துவிடுகிறது. எரிபொருள் தீருகிறது. காற்று மாசுபடுகிறது. இப்படி நம் கண் முன்னாலேயே பல இயற்கை அழிவுகள் நடக்கின்றன அல்லவா? இதனால் வருங்காலம் பாதிப்படைகிறது. எனவே உலகம் அழியும் தருவாய்க்குச் சென்றுவிடுகிறது. இதனால், வருங்காலத்தினர், தற்கான உலகை அழித்துவிட்டால், வருங்காலத்தில் எல்லாமே சரியாகிவிடும் என்பதைக் கண்டுபிடிக்கின்றனர்.

இறந்தகாலம் அழிந்துவிட்டால் வருங்காலமும் சேர்ந்தேதானே அழியும்? இந்த விஷயத்தில் இல்லை. காரணம் அப்படி வருங்காலம் அழியாமல் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்துவிட்டனர். அதுதான் சென்ற கட்டுரையில் நாம் பார்த்த Entrophy – சிதற்றம். என்னவென்றால், ஒரு பொருள், சிறுகச்சிறுக அழியும் தருவாக்குச் செல்வதை மொத்தமாக ரிவர்ஸ் செய்வது. இதனால் என்ன நடக்கும் என்றால், எல்லாமே ரிவர்ஸ் ஆகும். இலை தரையில் இருந்து மேலேறி மரத்தில் ஒட்டிக்கொள்ளும். இறந்தகாலத்தை முற்றிலும் ரிவர்ஸ் செய்து வேறொரு விஷயத்தை உருவாக்கலாம். இந்தப் புதிய விஷயம் எதிர்காலமாக மாறிவிடும். பழைய இறந்தகாலம் அழிந்துவிடும். எனவே, தற்காலத்தில் பூமி அழிந்தபின்னர், எதிர்காலத்தில் இருப்பவர்கள், தங்களுக்குத் தேவையான, எதுவுமே மனிதனால் அழிக்கப்படாத புதிய இறந்தகாலத்தை அவர்களால் உருவாக்கிக்கொள்ள முடியும். உண்மையில் இறந்தகாலத்தில் இருந்தவர்கள்தான் வயதாகி எதிர்காலத்துக்குச் செல்கின்றனர். ஆனால் தங்களது இறந்தகாலத்தில் நடந்த தவறுகள் இனி நடக்கக்கூடாது என்று நினைத்தே, பொருள்களின் சிதற்றத்தை ரிவர்ஸ் செய்யக்கூடிய ஒரு தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்கின்றனர். இதை வைத்துக்கொண்டு, இறந்தகாலத்தில் ஒரு பேரழிவைத் தூண்டிவிட்டு, உலக மக்கள் அனைவரையும் அழித்தாலே, வருங்காலம் இந்த மனிதர்களால் மாசு அடையாமல் நன்றாக இருக்கும் என்று புரிந்துகொண்டு, அதை சாடோரை வைத்துச் செய்ய நினைக்கின்றனர்.

எனவே, தற்காலத்தில் இருக்கும் வில்லன் சாடோருக்கு வருங்காலத்தில் இருந்து செய்திகள் அனுப்பப்படுகின்றன. ‘உன் வேலை உனது உலகை அழிப்பது. அதை செய்’ என்று. இதை சாடோர் செய்யும்போது அதைத் தடுக்க நினைக்கும் ஹீரோ என்ன செய்கிறான் என்பதே டெனெட்டின் கதை.

இப்போது ஹீரோவுக்கு வருவோம். அவனுக்குப் படத்தில் பெயர் இல்லை. திரைப்படத்தின் ஆரம்பத்தில் ஒரு ஆப்ரா ஹவுஸில் ஒரு ரெய்ட் நடக்கிறது. இங்கே என்ன நடக்கிறது என்றால், தீவிரவாதிகள் அங்கே குண்டு வைத்து அனைவரையும் கொல்ல நினைக்கின்றனர். ஆனால் உண்மையில், அங்கே இருக்கும் ஒரு ரகசிய ஆசாமியைக் கொல்வதையே அவர்கள் நிஜமாக செய்ய நினைப்பது. இதை ஹீரோவும் அவனுடன் உள்ளே செல்லும் படையினரும் தடுக்கின்றனர். அப்போதுதான் முதல்முறையாக இந்த டைம் இன்வெர்ஷன் நமக்குக் காட்டப்படுகிறது. முகமூடி அணிந்த ஒரு மனிதன், துப்பாக்கிக் குண்டை ரிவர்சில் செலுத்தி, ஹீரோவைச் சுட நினைக்கும் ஆசாமியிடம் இருந்து ஹீரோவைக் காக்கிறான் (இது யார் என்று படத்தின் இறுதியில் தெரியும். நீல். ஹீரோவின் நண்பன்), அங்கே உள்ளே இருக்கும் ரகசிய மனிதனையும் அவனிடம் இருக்கும் கருவியையும் காப்பாற்றுவதே ஹீரோவின் ஒரிஜினல் வேலை. அதை ஹீரோ செய்கிறான். அங்கே இருக்கும் அத்தனை குண்டுகளையும் செயலிழக்கவும் வைக்கிறான். அப்போதுதான் சில குண்டர்களால் கைப்பற்றப்படுகிறான். அங்கே ஹீரோவைச் சித்ரவதை செய்கிறார்கள். அப்போது தனது நண்பனின் கையில் இருக்கும் ஒரு சயனைடு மாத்திரையை ஹீரோ விழுங்கி, மயங்கி விழுகிறான்.

கண்விழிக்கும்போதுதான், இது எல்லாமே செட்டப் – தனது திறமையைப் பரிசோதிக்கும் முயற்சி என்று ஹீரோவுக்குத் தெரிகிறது. இங்கேதான் ஹீரோவின் நிஜமான நோக்கம் அவனுக்கு சொல்லப்படுகிறது. டெனெட் என்று ஒரு நிறுவனத்தில் அவன் இனி பணிபுரியவேண்டும் என்று. ஹீரோ சம்மதிக்கிறான். (இந்த டெனெட் நிறுவனத்தை எதிர்காலத்தில் உருவாக்கியது ஹீரோவேதான். அவன் தான், இறந்தகாலத்தில், இதெல்லாம் தெரியாமல் இருக்கும் தன்னை இந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்துக்கொண்டால்தான் இறந்தகாலத்தில் சாடோர் பூமியை அழிக்க நினைப்பதைத் தடுக்க முடியும் என்பதால் இப்படிச் செய்கிறான் என்று பின்னால் சொல்லப்படும்).

இதுதான் டெனெட்டின் ஆரம்பம்.

இனி, டெனெட்டின் முக்கியமான அம்சங்கள் ஒவ்வொன்றாக ஆராயலாம்.

TENET படத்தின் திரைக்கதை

1. ஆரம்பக் காட்சி முடிந்து, டெனெட் என்ற டீமில் சேர்ந்தபின்னர், ஹீரோ செய்யும் முதல் வேலை, ஒரு பெண் விஞ்ஞானியை சந்திப்பது. இங்கேதான், பொருட்களின் சிதற்றத்தை ரிவர்ஸ் செய்யும் கண்டுபிடிப்பு ஒன்று வருங்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்பது ஹீரோவுக்குச் சொல்லப்படுகிறது. அந்த விஞ்ஞானி, ஹீரோவுக்கு ஒரு சுவற்றின் பகுதியைக் காட்டுகிறாள். சில உபகரணங்களைக் காட்டுகிறாள். சில துப்பாக்கிக் குண்டுகளையும் காட்டுகிறாள். இந்த உபகரணங்கள் எல்லாமே, அந்தந்தப் பொருட்களின் இயல்பையே ரிவர்ஸ் செய்துகொண்டிருக்கின்றன என்று சொல்கிறாள். அதாவது, குண்டு, துப்பாக்கியில் இருந்து செல்லாமல், சுவற்றில் இருந்து துப்பாக்கிக்குள் வருவது. இதுதான் அந்த ரிவர்ஸ் செய்யப்பட்ட குண்டின் இயல்பு. இதனால், எப்படி சுவற்றில் பாய்ந்ததும் குண்டின் வேலை முடிந்து அது அழிந்துவிடுகிறதோ, அப்படி சுவற்றில் இருந்து துப்பாக்கிக்குள் பாய்ந்ததும் அது அழிந்துவிடுகிறது. இதுதான் சிதற்றத்தின் ரிவர்ஸ். Reversing Entropy. இவையெல்லாமே, இந்தியாவில் சஞ்சய் சிங் என்ற ஆயுத வியாபாரியிடம் இருந்தே கிடைத்தன என்றும் அந்த விஞ்ஞானி சொல்கிறாள். இதனால் ஹீரோ இப்போது சஞ்சய் சிங்கை விசாரிக்கவேண்டி வருகிறது.

2.ஹீரோ இந்தியா வருகிறான். ஆனால் சஞ்சய் சிங் தங்கியிருக்கும் மாளிகைக்குள் செல்ல அவனுக்கு உதவி தேவைப்படுகிறது. இதனால் அவனுக்கு நீல் என்ற ஆசாமி உதவ வருகிறான். ஆனால் நீலுக்கு ஹீரோ வேலையில் இருக்கும்போது குடிக்க மாட்டான் என்பது வரை தெரிந்திருக்கிறது. எப்படி? இப்போது ஹீரோவும் நீலும் சஞ்சய் சிங்கை சந்தித்தால், அவனுக்கு ப்ரியா என்ற மனைவி இருப்பது தெரிகிறது. உண்மையில் இந்த மனைவிதான் ஆயுத வியாபாரத்தை சஞ்சய் சிங்கின் பெயரை வைத்து நடத்தி வருகிறாள் (டிம்பிள் கபாடியா). அவள் மூலமாக ஹீரோவுக்கு சில விஷயங்கள் தெரிய வருகின்றன. என்னவென்றால், ரஷ்யாவைச் சேர்ந்த சாடோர் என்பவன் தான் இந்த ஆயுதங்களை ப்ரியாவிடம் இருந்து வாங்கியவன். அவன் ஒரு ப்ளூட்டோனிய வியாபாரி. அவனுக்கு ப்ரியா விற்ற ஆயுதங்கள் மிக நார்மலானவை. ஆனால் அவனிடம் இருந்து இதே ஆயுதங்கள் ரிவர்ஸ் செய்யப்பட்டுவிட்டன. எப்படி என்று தெரியாது. அவன் ஏதோ ஒரு வகையில் எதிர்காலத்தோடு பேசுகிறான். எப்படி என்று கண்டுபிடிக்கவேண்டும். இந்த வேலையை ப்ரியா ஹீரோவுக்கு அளிக்கிறாள்.

3.ஹீரோ, மைக்கேல் க்ராஸ்பி என்பவரை (மைக்கேக் கெய்ன்) சந்திக்கிறான். இவர் ஒரு ப்ரிட்டிஷ் உளவுத்துறை ஆசாமி. வில்லன் சாடோரை ஹீரோ எப்படி அணுகவேண்டும் என்று இவர் சொல்கிறார். அப்போதுதான் சாடோரின் பின்னணி பற்றியும் விளக்குகிறார். என்னவென்றால், படத்தின் ஓப்பனிங் ரெய்ட் நடந்த அதே நாளில், சைபீரியா அருகே ஒரு ரகசிய இடத்தில் ஒரு குண்டுவெடிப்பு நடந்திருக்கிறது. அந்த இடத்தில்தான் சாடோர் சிறுவயதில் இருந்தே வளர்ந்திருக்கிறான். இப்போது பெரிய வியாபாரி ஆகியிருக்கிறான். அவனுக்கு ஒரு மனைவி. காதரீன் பார்ட்டன். இவள் மூலம் அவனுக்கு ப்ரிட்டிஷ் தொடர்புகள் கிடைத்திருக்கின்றன. அவள் ஒரு பெரிய நிறுவனத்தில் பணி புரிவதாகவும், அவளது வேலை, ஓவியங்கள் ஒரிஜினலா போலியா என்று கண்டுபிடிக்கும் வேலை என்றும், ஒரு நாள் அவளது காதலன் டமாஸ் அரெபோ என்ற ஸ்பானிஷ்காரனால் துல்லியமாக உருவாக்கப்பட்ட கோயாவின் ஓவியத்தின் போலியை அது தெரியாமல் சாடோரிடம் அவள் விற்றதாகவும், அதைக் கண்டுபிடித்துவிட்ட சாடோர் அரேபோவைக் கொன்றுவிட்டதாகவும், ஆனால் இந்த ஓவியத்தை வைத்து, காதரீனை வெளியே மாட்டிவிடுவதாக ப்ளாக்மயில் செய்துவருவதாகவும், அதனால் வேறு வழியே இல்லாமல் அவனுடன் அவள் இருப்பதாகவும் சொல்கிறார். கோயாவின் ஓவியத்தை ஃபோர்ஜரி செய்தால் உலகம் முழுதுமே அவளது பெயர் நாறும். நீண்ட வருடங்கள் சிறையும் கிடைக்கும். அவள்தான் ஹீரோவுக்கு சாடோடை நெருங்க உதவுவாள் என்று மைக்கேல் க்ராஸ்பி சொல்கிறார்.

4.ஹீரோ இதன்பின் காதரீனை சந்திக்கிறான். முதல் சந்திப்பிலேயே, மனைவியை எப்போதும் சந்தேகப்படும் சாடோர், தனது ஆட்களை வைத்து ஹீரோவை அடிக்க, ஹீரோ அவர்களை அடித்து வீழ்த்திவிடுவதை காதரீன் கவனிக்கிறாள். அப்போது ஹீரோ, அவளது கணவனிடம் இருக்கும் ஃபோர்ஜரி ஓவியத்தைத் திருடி, ஹீரோயினை சாடோரின் பிடியில் இருந்து விடுவிப்பதாகச் சொல்கிறான். அப்போதுதான் ஹீரோயின், சாடோருடன் அவனது படகில் அவள் வியட்நாமில் கழித்த ஒரு விடுமுறை பற்றிச் சொல்கிறாள். அன்று நிஜமாகவே அவன் மனதில் அன்பு இருந்ததாக அவள் நினைத்து, அவனது பிடியில் இருக்கும் தனது மகனைத் தன்னிடம் கொடுத்துவிடுவான் என்று நினைத்ததாகவும், அது நடக்காமல் போய்விட்டது என்றும் அவள் சொல்கிறாள். (இந்த வியட்நாம் படகு சந்திப்பு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது). சாடோரை விட்டு காதரீன் போகலாம்; ஆனால் அவர்களின் மகனை அவள் மறுபடி பார்க்க முடியாது என்று அன்று அவன் சொன்னதால், வேறு வழியே இல்லாமல் அவனுடனேயே இருப்பதாக அவள் சொல்கிறாள்.

5.இந்த ஓவியம் இருக்கும் இடம், ஆஸ்லோவின் விமான நிலையம். அங்கே ஹீரோவும் நீலும் செல்கின்றனர். அந்த விமான நிலையத்தின் ஒரு ரகசிய அறையில் பல ஓவியங்கள் இருக்கின்றன. பணக்காரர்கள் தங்களின் விலைமதிப்பில்லாத பொருட்களை ஒளித்து வைக்கும் இடம் அது. அதற்குள் இருவரும் வியாபாரிகள் போல வேடமணிந்து சென்று, அந்த இடத்தின் மொத்த செக்யூரிட்டி அம்சங்களையும் தெரிந்துகொள்கின்றனர். அந்த இடத்தை அழிக்க ஒரே ஒரு வழிதான் உண்டு. ஒரு விமானத்தை அந்த இடத்தின் மீது மோதுவது. அப்படி ஒரு விமானத்தை மோதி, அந்த இடமே லாக்டவுன் ஆகும்போது உள்ளே செல்கின்றனர் ஹீரோவும் நீலும். அப்போதுதான் அங்கே ஒரு அறைக்குள் ஒரு பெரிய Turnstile கருவி இருப்பதை முதன்முதலில் ஹீரோ பார்க்கிறான். அவனுக்கு அது என்ன என்று தெரிவதில்லை. அந்தக் கருவியின் இரண்டு வாயிகளில் ஹீரோ ஒரு வாயிலிலும் நீல் இன்னொரு வாயிலிலும் நுழைகின்றனர். இருவருக்கும் இடையே ஒரு பெரிய கண்ணாடி இருக்கிறது. அங்கே தரையில் துப்பாக்கிகள் சிதறிக் கிடக்கின்றன. ஒரு சண்டை நடந்த அறிகுறி தெரிகிறது. கண்ணாடியில் குண்டுகள் துளையிட்டிருக்கின்றன. அந்தத் துளைகளைத் தொடவேண்டாம் என்று ஹீரோ நீலிடம் சொல்கிறான். அப்போது அந்தக் கருவி சுழன்று, இரண்டு வாசல்களில் இருந்தும் இருவர் முகமூடி உடையணிந்து வெளியே வருகின்றனர். இருவரும் ஹீரோவிடமும் நீலிடமும் சண்டையிடுகின்றனர். இதில் நீல் இருக்கும் பக்கம் வந்தவன், நார்மலாக ஓடுகிறான். ஆனால் ஹீரோ இருக்கும் பக்கம் வந்தவன், ரிவர்சில் செயல்படுகிறான். (இருவரும் ஒரே ஆள்தான். அது ஹீரோ. ஏன் என்று அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்). அவனுடன் ஹீரோ நடத்தும் சண்டையே ரிவர்சில் இருக்கிறது. இடையில் நீல், அந்தப்பக்கம் வந்தவனைத் துரத்திக்கொண்டு ஓடி அவனது முகமூடியை அகற்றிவிடுகிறான். உடனேயே திரும்ப ஹீரோவிடம் ஓடிவருகிறான். அப்போது வெளியே விமானம் வெடிக்க, ஷட்டரில் ஏற்படும் ஓட்டை வழியாக அந்த ஹீரோவிடம் சண்டையிட்ட ஆள் வெளியே தப்பிவிடுகிறான்.

இதுதான் படத்தில் முதன்முறையாக, காலம் என்பதை ரிவர்ஸ் செய்வது வருகிறது. படத்தின் இரண்டாம் பாதியில்தான், இந்தச் சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்து, அங்கே இருந்து ஹீரோவும் நீலும் இறந்த காலம் செல்ல முடிவுசெய்து, இதே ஆஸ்லோ விமான நிலையத்தில் விமானம் இடித்த நிகழ்வுக்குத் திரும்பி வருவார்கள். எனவே, அப்போதுதான் இந்த சண்டை நிகழ்ந்தது என்பது இரண்டாம் பாதி பார்க்கையில் புரியும். இது ஏன் நடந்தது என்று அந்த இடத்தில் விரிவாகக் கவனிக்கலாம்.

இதுவரை படத்தில் என்ன காட்டப்பட்டதோ, அதுதான் நமக்குமே புரிந்திருக்கிறது. இனிமேல்தான் இந்த ரிவர்சிங் எல்லாம் நன்றாகவே கவனிக்கப்போகிறோம். அப்படித்தான் படத்தில் காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

இதையெல்லாம் படித்து வையுங்கள். நாளை தொடரலாம்.

  Comments

4 Comments

  1. Anonymous

    Super and also post once upon a time in Hollywood

    Reply
  2. Vijay kannan

    Sir amoroes perros படம் பற்றி ஒரு write-up எழுதுங்கள்.

    Reply
  3. Rajeshkannan

    Excellent Explanation about Entropy and Inversion. I watched this movie 4 times but after I read this article it’s more clear.

    Reply

Join the conversation