13 Assassins (2010)–Japanese

by Karundhel Rajesh October 5, 2011   world cinema

பத்தொன்பதாம் நூற்றாண்டு ஜப்பானில், நாரிட்ஸுகு என்ற ஒரு கொடுங்கோல் பிரபு வாழ்ந்துவந்தான். அக்காலத்திய ஜப்பானில், ‘ஷோகனேட்’ (Shogunate) என்ற பெயரில் ஆட்சி புரிந்துவந்த ராணுவ தளபதிகள் இருந்தனர். மன்னராலேயே நியமிக்கப்படும் அதிகாரம் உடைய இவர்கள், ஸாமுராய் மரபினர். தங்களது தளபதிகளை ‘ஷோகன்’ என்ற பெயரில் அழைத்து, அவர்களிடம் ஆட்சியின் பெரும்பான்மையான அதிகாரங்களை மன்னர்கள் வழங்கத்துவங்கிய இந்த விஷயம், எட்டாம் நூற்றாண்டில் ஆரம்பித்தது. ’எமிஷி’ என்ற பெயரில் மன்னராட்சியை எதிர்த்துப் புரட்சி செய்த மக்களை அடக்கவே இந்த அதிகார முறை ஏற்பட்டதாக இணையம் சொல்கிறது. எட்டாம் நூற்றாண்டில் தொடங்கி, பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இந்த ‘ஷோகன்கள்’ அதிகாரம் செலுத்திவந்திருக்கின்றனர். இப்படிப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தளபதியின் மகனே, இந்த நாரிட்ஸுகு. கதை நடக்கும் காலத்தில் தந்தையான ஷோகன் இறந்துவிட, இவனது அண்ணன் புதிய ஷோகன் ஆகிவிடுகிறான். னையோரைப்போல் வாழ்ந்தோம் மறைந்தோம் என்று இல்லாமல், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, மிக இளைய வயதிலேயே குரூரமான பல செயல்களைப் புரிந்தவன் இந்த நாரிட்ஸுகு என்று தெரிகிறது.

அரசாங்கத்தின் சக்திவாய்ந்த மனிதரான ‘தாய் தோஷிட்ஸுரா’ என்ற மனிதரால், நாரிட்ஸுகு செய்யும் அக்கிரமங்களைத் தாங்க முடிவதில்லை. ‘ஷோகன்’ என்ற தலைமைத்தளபதிக்கு அடுத்தபடியான முக்கியத்துவம் வாய்ந்த இந்த தோஷிட்ஸுரா, இக்கொடுமைகளைக் கண்டு வருந்துகிறார். ’தன்னுடைய நண்பரான ‘மாமியா’ என்ற மனிதர், நாரிட்ஸுகுவின் கொடுமைகளால் பாதிக்கப்பட்டுத் தற்கொலை செய்துகொள்ள, இனிமேலும் பேசாமல் இருந்தால் நாரிட்ஸுகுவை அடக்க முடியாது என்பதை உணரும் தோஷிட்ஸுரா, தனது ஊழியரான ‘ஷின்ஸேமோன்’ என்பவரை அழைத்து, நாரிட்ஸுகுவைக் கொல்லும் பொறுப்பை ஒப்படைக்கிறார். ஆனால் இந்த வேலை படுரகசியமாக இருக்கவேண்டும் என்பதையும் உணர்த்துகிறார். ஏனெனில், ஷோகனுக்கு அடுத்த நிலையில் இருக்கும் அவரே அந்த ஷோகனின் தம்பியைக் கொல்லச் சதி செய்வது ராஜதுரோகமாகிவிடும்.

ஷின்ஸேமோன், தனக்கு மிக நம்பகமாக விளங்கும் சிலரைப் பயன்படுத்தி, மெல்ல மெல்ல ஒரு சிறு படையை உருவாக்குகிறார். அப்படையில் மொத்தம் பனிரண்டு சாமுராய்கள். இவர்களது ஒரே பணி: நாரிட்ஸுகுவைக் கொல்லுதல். இதற்காக அனைவரும் சிறுகச்சிறுகத் தயாராகின்றனர். ’எடோ’ (டோக்யோவின் பழங்காலப்பெயர்) நகரத்தில் இருந்து தனது நகரத்துக்குப் பெரும்பயணம் மேற்கொள்ளவிருக்கும் நாரிட்ஸுகுவை எந்த இடத்தில் எதிர்கொண்டு தாக்கிக் கொல்லுவது என்பதைக்குறித்து ஒரு பெரும் ஆலோசனை நடக்கிறது. அதே சமயம், நாரிட்ஸுகுவின் ஆட்களும் சளைத்தவர்கள் அல்ல. நாரிட்ஸுகுவின் வலதுகையாக விளங்கும் ’ஹான்பேய்’ என்பவர், ஷின்ஸேமோனுடன் பள்ளியில் படித்தவர். இருவருக்குமே மற்றவரின் பலமும் பலவீனங்களும் நன்கு தெரியும். அரசு அதிகாரியான தோஷிட்ஸுராவை ரகசியமாக உளவறியும் ஹான்பேய், அவர் ஷின்ஸேமோனைச் சந்தித்ததாக அறிகிறார். உடனேயே அவருக்கு ஷின்ஸேமோனின் திட்டம் விளங்கிவிடுகிறது.

ஷின்ஸேமோனைச் சந்திக்கும் ஹான்பேய், இந்தக் கொலை முயற்சியை விட்டுவிடுமாறு சொல்கிறார். தன்னால் அதனை மிக எளிதாக உடைத்துவிடமுடியும் என்று சொல்லும் ஹான்பேய், தன்னுடன் வந்துவிட்டால் ஷின்ஸேமோன் உயிர்பிழைக்கமுடியும் என்றும், இல்லையேல், பள்ளி நாட்களைப்போல் இருவருக்கும் இடையே நிகழவிருக்கும் இப்போட்டியில், தனது அணியே வெல்லும் என்றும் சூளுரைத்துவிட்டு அங்கிருந்து செல்கிறார்.

பல நாட்கள் பலத்த யோசனைக்குப்பிறகு, நாரிட்ஸுகுவின் படையை எந்த இடத்தில் எதிர்கொள்வது என்று ஷின்ஸேமோனுக்குப் புலப்படுகிறது. நாரிட்ஸுகுவை அங்கே வரவைக்க ஒரு திட்டம் தீட்டுகிறார். நாரிட்ஸுகு செல்லும் பிராந்தியம், அவனால் குரூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட மகனை உடைய ஒரு பெரியவரின் பிராந்தியம். எனவே, அவரைவைத்து நாரிட்ஸுகுவை அந்தப் பக்கம் நுழையவிடாமல் தடுத்து, வேறு பக்கம் அனுப்பி, அங்கேயிருக்கும் கிராமம் ஒன்றில் வைத்துக் கொல்லவேண்டும் என்பது திட்டம். தனது பனிரண்டு கொலையாளிகளை அழைக்கும் அவர், அந்தக் கிராம மக்கள் அத்தனை பேரையும் விலைக்கு வாங்கி, அனைவரையும் அங்கேயிருந்து அகற்றச்சொல்லித் தனது ஆட்களுக்கு உத்தரவிடுகிறார். அங்கே செல்லும் கொலையாளிகளும் ஷின்ஸேமோனும், நாரிட்ஸுகுவைக் கொல்லவேண்டும். பனிரண்டு ஸாமுராய்களும் ஷின்ஸேமோனும் கிளம்புகின்றனர்.

கிளம்பும் வழியில், எதிர்பாராதவிதமாக, இவர்களின் திட்டத்தைக் கணித்திருக்கும் ஹான்பேய், சில ஆட்களை விட்டுச்செல்ல, அவர்களுடனான மோதலின்மூலம், ஷின்ஸேமோனின் ஆட்கள் எங்கிருக்கிறார்கள் என்பது ஹான்பேய்க்குத் தெரிந்துவிடுகிறது. இதனால் தனது பாதுகாப்பை மேலும் அவர் அதிகரித்துக்கொள்கிறார். எனவே மேற்கொண்டு எங்கும் பயணிக்காமல், இருக்கும் இடத்திலேயே தங்கிவிடுகிறது ஹான்பேய் மற்றும் நாரிட்ஸுகுவின் படை.

இதை அறியும் ஷின்ஸேமோன், தானும் காட்டுக்குள் தலைமறைவாகிறார். அங்கே இவர் சந்திக்கும் வேடன் ஒருவன், இவர்களுடன் சேர்ந்து பதிமூன்றாவது கொலையாளியாகிறான். இந்த வேடனைச் சுற்றி ஒரு மர்மம் இருக்கிறது. மனித மாமிசம் – அதுவும் தனது குழந்தையின் மாமிசம் – உண்ணும் பெண் ஒருத்தியை இவன் காதலிக்கிறான். எப்போதும் மர்மமாகவே இருக்கும் அவன் யார்?

காட்டுக்குள் தலைமறைவாகப் பயணித்து, அக்கிராமத்தை அடையும் ஷின்ஸேமோன் குழுவினர், கிராமத்தை பலப்படுத்துகின்றனர். அங்கேயே பல பொறிகளையும் அரண்களையும் அமைக்கின்றனர். அப்போதுதான் அந்த அதிர்ச்சியான தகவல் அவர்களை எட்டுகிறது. முற்றிலும் நிலைகுலைந்து போகிறார் ஷின்ஸேமோன்.

அது எந்தத் தகவல்? இவர்களால் நாரிட்ஸுகுவைக் கொல்ல முடிந்ததா? வேடனைச் சுற்றியுள்ள மர்மம் அகன்றதா?

டிவிடியில் காணுங்கள்.

இப்படத்தின் ஆரம்பத்திலிருந்து, எனக்கு ஒரு குரஸவா படம் பார்க்கிறோமோ (குறிப்பாக செவன் சாமுராய்) என்ற பிரமை ஏற்பட்டது. அந்த அளவு, குரஸவாத்தனமான காட்சியமைப்புகள். ஆனால், படம் செல்லச்செல்ல, அந்தப் பாணி விலகுகிறது. இப்படத்தின் இயக்குநர், நமக்கெல்லாம் நன்கு தெரிந்த ‘தகாஷி மீகே’ (Takashi miike). கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் முன்னர் இங்கே நாம் பார்த்த ‘Audition’ படத்தை நினைவிருக்கிறதா? அப்படத்தின் இயக்குநர். ‘Ichi the killer’ படத்தை எடுத்தவர். மனிதர் ஒரு ’இயக்க’ இயந்திரம். ஒரே வருடத்தில் ஆறு அல்லது ஏழு படங்கள் இயக்கி வெளியிடுவதெல்லாம் இவருக்கு அல்வா சாப்பிடுவது போல. இம்மாதிரி இதுவரை பல வருடங்கள் செய்திருக்கிறார். இருபதே வருடங்களில், ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியிட்டிருக்கிறார்.

இப்படம், 1963l இதே பெயரில் வெளிவந்த ஜப்பானியப்படம் ஒன்றின் ரீமேக். தகாஷி மீகேவைப் பொறுத்தவரையில், சில ரீமேக்குகளை இதுபோன்று வெளியிட்டிருக்கிறார்.

இப்படத்தின் இறுதி அரைமணி நேரம், விறுவிறுப்பான ஆக்‌ஷன். எனக்குப் பிடித்திருந்தது. நாம் சிறுவயதில் பார்த்த ஷாவோலின் படங்களைப் போல இல்லாமல், டெக்னிகலாக மிகச்சிறந்தமுறையில் எடுக்கப்பட்டிருக்கிறது இப்படம்.

13 Assassins படத்தின் ட்ரெய்லர் இங்கே.

பி.கு – இப்படத்தில் நான் தெரிந்துகொண்ட வார்த்தை – Hara kiri. பொருள் – ஸாமுராய் தனது உயிரை மாய்த்துக்கொள்வது.

  Comments

9 Comments

  1. SIRANTHA VIMARSANAM PADAM PAAARGANUM POLA IRUKKU SAGO

    Reply
  2. பெயர்சொற்களை ஆங்கிலத்தலயே எழுதலாம்… தமிழ்ல படிக்கசொல்லோ தலைசுத்துதடாசாமி…

    Excuse me… கடைசி 40mts மட்டும் கிடைக்குமா? 🙂

    (படத்த download பண்ணி delete paNNum போது மனசு வலிக்குதுபா)

    Reply
  3. பெயர்ச்சொற்களைத் தமிழில் எழுதி அனைவரின் பல்லை உடைக்கவேண்டும் என்பதே லட்சியம் :-)…

    கடேசி 40 மினிட்ஸ்? டவுட்டுதான் :-).

    Reply
  4. ஹாஹா.. என்னே லட்சியம்… வாழ்க பல்லாண்டு 🙂

    (40 mts + அது தமாஷா கேட்டது செந்தேள்) 🙂

    Reply
  5. 🙂 அது தெரிஞ்சுது :-). அது என்ன செந்தேள்? எனக்குப் போட்டியா யாராவது கிளம்பிருக்காங்களா? சொல்லுங்க அவங்க மேல கேஸ் போட்ரலாம் 🙂

    Reply
  6. @ D.R.Ashok

    செந்தேள் – இந்த பெயர் கொண்ட ஒருவரால் என் ப்ளாக்ல பெரிய ரகளையே நடந்தது……………உங்களுக்கு அவர தெரியுமா ?

    Reply
  7. கருந்தேள் – நா கமென்ட் போட்டு கேக்கலாம்ன்னு இருந்தேன்..அதுக்கு முன்ன……..நீங்க கமென்ட் போடுட்டீங்க

    Reply

Join the conversation