கோமல் கந்தார் (1961) – வங்காளம்

by Karundhel Rajesh November 19, 2010   world cinema

இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர் யார்? இந்தக் கேள்விக்கு, நம்மில் பல பேர், மணிரத்னம் என்று சொல்லக்கூடும். இன்னும் சில பேர், ஷங்கர் என்று கூடக் கூறலாம் (அடப்பாவிகளா). சில பேர் சத்யஜித் ரே என்று சொல்லலாம். இன்னமும், கேத்தன் மேத்தா, நிமாய் கோஷ், அபர்ணா சென், ரிதுபர்ணோ கோஷ், சுதீர் மிஷ்ரா, ஷ்யாம் பெனகல், கிரீஷ் காசரவள்ளி, தீபா மேத்தா, மீரா நாயர், ஜான் ஆப்ரஹாம் ஆகிய பல பெயர்கள் நமக்கு நினைவு வரலாம். ஆனால், இந்தியாவின் திரைப்பட வரலாற்றில் முதன்முதலாக, உலகம் திரும்பிப்பார்க்கும் வகையில், தரமான பேரலல் சினிமா எனப்படும் மாற்று சினிமாவை எடுத்த ஒரு நபரை, இந்தியா ஒட்டுமொத்தமாக மறந்தே விட்டது. சத்யஜித் ரேயின் முதல் படமான பதேர் பாஞ்சாலிக்கும் மூன்று வருடங்கள் முன்னதாகவே இவரது முதல் படமான ‘நாகரிக்’ எடுக்கப்பட்டுவிட்டது. ஆண்டு – 1952. ஆனால், படம் வெளியான ஆண்டு – 1977. அதுவும், இந்த இயக்குநர் இறந்த பின்.

விதி, இவரைத் துரத்தித்துரத்தி அடித்தது எனலாம். இவரது முதல் படமான ‘நாகரிக்’ தான், பெங்காலி வரலாற்றில் முதல் பேரலல் சினிமா. ஆனால், அத்தனை புகழையும், மூன்று ஆண்டுகள் கழித்து வெளிவந்த ‘பதேர் பாஞ்சாலி’ அள்ளிக்கொண்டது. அதேபோல், 1958ல் வெளியான இவரது படமான ‘Bari Theke Paliye’ , ஒரு குறும்புக்காரச் சிறுவன், தனது கிராமத்திலிருந்து ஓடிப்போய், கல்கத்தாவுக்குச் சென்று அங்கே அடையும் அனுபவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. ஆனால், ஒரு வருடம் கழித்து, 1959ல் வெளியான, இதே கதையமைப்பு கொண்ட ‘400 Blows’ படம், உலகப்புகழ் அடைந்தது. தனது படங்கள், தொடர்ந்து தோல்வியடைந்த காரணத்தால், புனே திரைப்படக் கல்லூரியில் பாடம் எடுக்கச் சென்றுவிட்டார் இவர். அதன்பின், ஏழு வருடங்கள் கழித்துதான் மறுபடி படமெடுக்க வந்தார். வந்த இரண்டாவது வருடம், இறந்தே போனார். இறந்ததற்குக் காரணம், அளவுகடந்த குடி மற்றும் சில நோய்கள்.

இருக்கும்போது எந்த வகையிலும் புகழடையாமல், இறந்தபின் உலகப்புகழ் அடைந்த ஒரு இயக்குநர் இவர். இவரது சிஷ்யர்களில் சில பேர்: ஜான் ஆப்ரஹாம், அடூர் கோபாலகிருஷ்ணன், குமார் ஷஹானி ஆகிய, இவரிடம் திரைப்படக் கல்லூரியில் பாடம் படித்த மாணவர்கள் ஆவார்கள். இவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியால் மட்டுமே, இவரது பெயர் உலகளவில் பரவத் துவங்கியது எனலாம்.

வாழ்நாள் முழுவதும் எந்தவித காம்ப்ரமைஸ்களும் செய்யாத ஒரு பிடிவாதக்கார ஆசாமியாகவே ஐம்பது வருடங்கள் வாழ்ந்து மறைந்த அந்த இயக்குநர் தான், ‘ரித்விக் கட்டக்’.

ரித்விக் கட்டக்கின் ‘மேக தாக்க தாரா’ படத்தைப் பற்றி நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இங்கே க்ளிக்கவும். சுருக்கமாக – இந்தப் படம் தான் தமிழில் அவள் ஒரு தொடர்கதையாக எடுக்கப்பட்டது.

அதனையடுத்து ரித்விக் கட்டக் எடுத்த படமே, இந்த கோமல் கந்தார். இப்படத்தைத் தான் இன்று பார்க்கப்போகிறோம்.

கல்கத்தா. அறுபதுகள். IPTA என்ற Indian Peoples Theatre Association மிகப் பிரபலமாக இருந்த காலகட்டம். இந்த ஐபிடிஏ என்பது, கம்யூனிஸ்ட் கட்சியின் கலைக்குழு என்று சொல்லலாம். இடதுசாரி நாடகாசிரியர்களாலும் நடிகர்களாலும் நடத்தப்பட்டு வந்த ஒரு அமைப்பு அது. படத்தில் இரண்டு நாடகக் குழுக்களைப் பார்க்கிறோம். இருவருமே, ஒன்றுக்கொன்று எலியும் பூனையுமாக இருக்கும் குழுக்கள். ஒரு குழுவில் முக்கிய நடிகையாக அனுசுயா இருக்கிறாள். இன்னொரு குழுவில், ப்ரிகு.

அனுசுயா, இந்த இரண்டு குழுக்களும் சேர்ந்து ஒரு நாடகம் நடத்தினால் என்ன என்று ஒரு யோசனை தெரிவிக்க, ப்ரிகுவின் குழு, பலத்த யோசனைக்குப் பிறகு இதனை ஏற்றுக்கொள்கிறது. இரண்டு குழுக்களும் இணைகின்றன. அப்பொழுதுதான் ப்ரிகு, அனுசுயாவை அருகில் இருந்து கவனிக்கும் சந்தர்ப்பம் வாய்க்கிறது. அவளது அமைதியும், அறிவும் இவனது மனதைக் கவர்கின்றன. அவனையறியாமலேயே அனுசுயாவின் மேல் காதல்வயப்படுகிறான் ப்ரிகு.

ஆனால், அனுசுயாவிடம் ஒரு மர்மம் இருப்பதாக அந்தக் குழுவில் பலர் கிசுகிசுக்கின்றனர். அவளுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டதாகவும், கணவன் அயல்நாட்டில் இருப்பதாகவும், அடிக்கடி அவனிடம் இருந்து கடிதங்கள் இவளுக்கு வருவதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. இது, ப்ரிகுவின் மனதில் குழப்பத்தை உருவாக்குகிறது.

அனுசுயாவும் ப்ரிகுவிடத்தில் நெருங்கிப் பழகுகிறாள். அவளது மனதில் இருக்கும் எண்ணங்கள் யாவும் இவனிடம் கொட்டுகிறாள். அவளது பெற்றோர்கள், பங்களாதேஷில் பிறந்தவர்கள். அங்கே நடந்த கலவரத்தின் காரணமாக, எல்லைதாண்டிக் கல்கத்தாவுக்குள் அடியெடுத்து வைத்த அகதிகள். இதனாலேயே, நாடகங்களில் தாய்மண்ணைப் பற்றியோ அல்லது வங்காளத்தைப் பற்றியோ வரும் வரிகள், அனுசுயாவின் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றன. சொந்த நாட்டுக்குச் செல்ல முடியாமல் வேறொரு நாட்டில் இருக்கும் அவலம் அவளது மனதைப் பிசைகிறது.

இப்படி இருக்கையில், புதிய நாடகம் போடுவதற்காக, கல்கத்தாவின் எல்லையோரக் கிராமம் ஒன்றுக்கு இந்தக் குழு வருகிறது. அங்கே, ஒரு நதி ஓடுகிறது. நதிக்கு இப்புறம் கல்கத்தா. அந்தக் கரையில் பங்களாதேஷ். அதாவது, இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையே ஓடும் நதி அது. அந்த நதிக்கரைக்கு வந்தவுடன், நாடகக்குழுவில் பலருக்கும் சந்தோஷம் கிளம்ப, ஆடிப்பாடுகிறார்கள். ஆனால், ப்ரிகுவும் அனுசுயாவும் மட்டுமே சந்தோஷம் இல்லாமல் ஒதுங்கி, கரையோரமாக நடக்கின்றனர். அங்கேதான் அனுசுயா, எவ்வாறு தாய்நாட்டில் இருந்து விரட்டப்பட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தோம் என்று சொல்கிறாள். அந்தக் கரையில் நின்றுகொண்டே, மறுபுறம் இருக்கும் தனது வீடு இருக்கும் தெருவைக்கூட அவளால் பார்க்க முடிகிறது. அதே நேரத்தில், ப்ரிகுவும், தொலைதூரத்தில் தெரியும் கூரைகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். அது அவனது வீடு. இவனுமே ஒரு அகதிதான்.

இதற்கிடையில், மெல்ல மெல்ல நாடகம் உருப்பெறுகிறது. நடிக்கும் வேளையும் வருகிறது. ஆனால், நாடகத்தில் சில சொதப்பல்கள் நடக்கின்றன. இதனால் அனைவருக்கும் மனஸ்தாபம் ஏற்படுகிறது. அதற்கு முக்கியக் காரணம், கணவன் இருந்தும் அனுசுயா ப்ரிகுவைக் காதலிப்பதே என்று நாடகக்குழுவின் கூட்டத்தில் ஒருவன் போட்டு உடைக்கிறான். அடுத்தநாள், அனுசுயா ப்ரிகுவைப் பார்க்க வருகிறாள். இவனிடம் எல்லாவற்றையும் சொல்லவே வந்திருப்பதாகச் சொல்லி, எல்லை கடந்து இந்தியா வந்தபோது உடன்வந்து இவளைப் பார்த்துக்கொண்ட ஒரு நபரின் மீது காதலில் விழுந்ததாகவும், ஆனால அவன், மேல்படிப்புக்கு ஃப்ரான்ஸ் சென்றுவிட்டதால், அவன் எழுதும் கடிதங்களுக்குப் பதில் எழுதியே காலத்தை ஓட்டிக்கொண்டிருப்பதாகவும் சொல்கிறாள். ஆனால், அந்த வாரத்தில் தான், மேலும் ஐந்து வருடங்கள் அவன் ஃப்ரான்ஸில் இருக்கப்போவதாக ஒரு கடிதம் வந்திருக்கிறது என்றும் சொல்கிறாள். ப்ரிகுவை இது கோபத்திலும் வருத்தத்திலும் ஆழ்த்துகிறது.

அனுசுயா ஃப்ரான்ஸ் வருவதற்காகப் பணம் அனுப்புவதாகவும், இன்னமும் மூன்று நாட்களுக்குள் இவள் பதிலெழுத வேண்டும் என்றும் அந்த நபர் கடிதத்தில் சொல்லியிருக்கிறான். ஆனால், அனுசுயா, குழப்பத்தில் இருப்பதால், பதில் எழுதாமல் போகிறாள். சில நாட்களில், ஃப்ரான்ஸிலிருந்து அவனே வந்துவிடுகிறான். இந்தச் சமயத்தில்தான், அனுசுயாவுக்கும் ப்ரிகுவின் மேல் இருக்கும் காதல் வெளியாகிறது.

இதன்பின் நடந்தது என்ன? படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டியதுதான்.

இப்படம், ஒரு சராசரிக் காதல் கதையே அல்ல. அங்கேதான் ரித்விக் கட்டக்கின் மேதமை பளிச்சிடுகிறது. படம் நெடுகிலும், நாடகங்கள் மூலமும், அதில் பாடப்பெறும் பாடல்கள் மூலமும், பங்களாதேஷிலிருந்து இந்தியா வந்த அகதிகளின் பரிதாப நிலை, நமக்குச் சொல்லப்படுகிறது. படத்தில் வரும் கதாபாத்திரங்களும், இதனையே வலியுறுத்துகின்றன. அதேபோல், பங்களாதேஷின் மலைப்பிரதேசங்களும், கட்டக்கினால் அற்புதமாகப் பதிவு செய்யப்பட்டு, கறுப்பு வெள்ளையில் நமக்கு இப்படத்தில் கிடைக்கப்பெறுகின்றன.

இப்படத்தின் சிம்பாலிஸம் என்னவெனில், வங்காளம் இரண்டாகத் துண்டாடப்பட்டதைக் குறிக்கும் வகையில், படத்தின் எல்லா முக்கிய விஷயங்களுமே இரண்டாகப் பிரிந்து காணப்படுகின்றன. நாடகக் குழுக்கள் இரண்டு; அனுசுயாவின் வாழ்வில் வரும் ஆடவர்கள் இரண்டு – இப்படி. வங்காளத்தின் துயர நிலையை இவ்வாறாக கட்டக் நமது மனத்தில் ஆழப்பதித்துவிடுகிறார்.

அதேபோல், அறுபதுகளில் இந்திய சினிமாவின் இன்றியமையாத நடனக் காட்சிகளும் டூயட்களும் அறவே இவரது படங்களில் இருக்காது. இப்படத்திலும் அவை இல்லை. ஆனால், பல பாடல்கள் இருக்கின்றன. இப்பாடல்கள், நாடக நடிகர்களால் ஆசுகவியாகவோ அல்லது எழுதப்பட்டுப் பாடப்பெறும் பாடல்களாகவோ இருக்கின்றன. இப்பாடல்களும், பிரிவினையைப் பற்றிய விமர்சனங்களாகவே தான் இருக்கின்றனவேயன்றி, மசாலா விஷயங்களாக இல்லவே இல்லை.

ஒரு சராசரிப் படத்துக்குரிய எந்த மசாலாவும் இல்லாமல் அறுபதுகளில் ஒரு ஆள் படமெடுத்தால், அது ஓடுமா? சத்யஜித் ரேக்குக் கிடைத்த அதிருஷ்டம், கட்டக்குக்குக் கிடைக்காததால், இவரது படமான இந்த கோமல் கந்தார், படு தோல்வியடைந்தது. ஆனால், இப்போது, உலக சினிமாவின் ஒரு முக்கியப் படமாகக் கருதப்படுகிறது.

படம் ஓடுகையில் எனக்கு ஒரு எண்ணம் எழுந்தது. ஒருக்கால் ரித்விக் கட்டக் அறுபதுகளில் தமிழகத்தில் பிறந்திருந்தாரேயானால், இலங்கையைப் பற்றியோ அல்லது அங்கிருந்து துரத்தப்பட்ட சகோதரர்களைப் பற்றியோ நமக்கெல்லாம் உறைக்கும் அளவு இப்போது படங்கள் எடுத்திருப்பார் என்ற எண்ணமேயாகும் அது. வங்காளத்தை இலங்கையாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள் இப்படத்தில். அவ்வளவே. அப்படியே இரண்டு தேசங்களும் ஒரே போல் தான் இருக்கின்றன.

நண்பர்கள் இப்படத்தைப் பார்க்குமுன், ஒரு டிஸ்கி என்னவெனில், படம் மெதுவாகத்தான் போகிறது. எனவே, சுவாரஸ்யம் சற்றுக் குறைவு. இருந்தாலும், நல்ல படத்தைப் பார்ப்பேன் என்ற எண்ணம் உடையவர்கள் இப்படத்தைப் பார்க்கலாம். இது, கட்டக்கின் ட்ரையாலஜியில் இரண்டாவது படம்.

Komal Gandhar படத்தின் ட்ரெய்லர் காண, இங்கே..

பி.கு – ரித்விக் கட்டக்கைப் பற்றி, தனது ‘சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல்’ புத்தகத்தில் விரிவாக எழுதியிருக்கும் சாருவுக்கு நன்றி. எனக்குத் தெரிந்து, தமிழில் கட்டக்கை அறிமுகப்படுத்தியவர் அவராகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

  Comments

18 Comments

  1. An array of desserts this week….

    started with meen kozhambhu from tamizh,

    moved to korean manchow soup,

    then to spanish tortilla de patata

    hmmm to Bengali Malpua

    yummy, what next , is it Iranian Hummus ? Italian Pasta? japanese Okashi?

    letz see

    Reply
  2. என்னப்பா, டீ வந்திருச்சா?

    நான் ஏதோ ஆபிஸ் வேலையா ரொம்ப பிஸியா இருக்கீங்கன்னு நினைச்சேன். இதுதானா அது?

    ரித்விக் கடக் படம் எதுவும் இன்னும் பார்க்கலை. பார்த்துவிட்டு வருகிறேன்…

    Anyway நபநரா…

    Reply
  3. நீ என்ன ஆட்டம் போட்டாலும் மலாவி ஆனந்த் அண்ணாமலை நிலைமைதான் உனக்கும்…

    Reply
  4. நல்ல அறிமுகம். நன்றி! பார்க்கிறேன்!

    Reply
  5. @ karuna – உங்க குஸீன் உதாரணம் ரொம்ப ரசிச்சேன் 🙂 .. அதைப் படிக்கப்படிக்கவே நாக்குல தண்ணி ஊற ஆரம்பிச்சிருச்சி :-).. Slurppp ! 🙂

    @ இராமசாமி கண்ணன் – மிக்க நன்றி.. இன்னும் ரெண்டு போஸ்ட் இருக்கு.. அதோட நட்சத்திர வாரம் முடிவுக்கு வருது.. அதுவரை தொடரும் 🙂

    @ சு.மோகன் – டீ வந்துருச்சு.. 🙂 ஹாஹ்ஹா 🙂 .. ஆபீஸ்ல பிஸிதான்.. ஆனா இங்கயும் போஸ்ட் போடணுமுல்ல.. அதேன் ..

    @ எஸ்.கே – கண்டிப்பா பாருங்க.. நன்றி

    Reply
  6. @ சாரு புழிஞ்சதா – என்ன ஒரு பொச்சரிப்பு இருந்தா இப்புடி ஒரு கமெண்ட்டு போடுவ 🙂 .. இவ்வளவு வயித்தெரிச்சல் இருந்தா ஒடம்புக்கு ஆவாது தம்பி.. பீபீ எகிறிடும் 🙂

    Reply
  7. அது பொச்சரிப்போ இல்ல உன் நச்சரிப்போ….உன்னோட குண்டி கிழியபோறது உறுதி…

    Reply
  8. நண்பரே,

    உங்கள் மனதை தொடும் எழுத்து நடை பதிவில் சிறப்பாக வெளிவந்திருக்கிறது. ஒரு கரையில் நின்று கொண்டு மறுகரையில் நாட்டையும், வீட்டையும் பார்ப்பதாக நீங்கள் விவரித்து இருக்கும் தருணத்தில் படிப்பதை நிறுத்தி விட்டு அந்தப் பெண்ணின் உணர்வுகளை தேடத்தூண்டியது உங்கள் வரிகள். மீண்டும் நல்லதொரு அறிமுகம்.

    Reply
  9. தமிழு, கொரியா, ஸ்பானிஷ், வங்காளம்…..! மாப்பு,நீ பொங்கலுக்கே வெடி வெடிப்பே, இப்போ உனக்கு தீபாவளி, கலக்கு கலக்கு…..!

    Reply
  10. நண்பா
    அட்டகாசமான அறிமுகம்
    எந்தரோ மகானுபாவலு அந்தரிகி வந்தனமுலு ரிட்விக் கட்டக்கிற்கு மிகப்பொருந்தும்.தன்னலமில்லாத படைப்பாளி
    அலைந்து திரிபவனின் அழகியல் புத்தகம் படிக்க ஆவல் எழுகிறது.
    மேக்தாக்தாரா பார்த்துவிட்டேன்,இது விரைவில் பார்க்கிறேன்.

    இதுபோல அரிய படங்களை அறியச்செய்வதற்கு மிக்க நன்றி.

    Reply
  11. இது மாதிரி நீங்க எழுதுவதை படிக்கிறப்போ ரொம்பவே சந்தோசமாயிருக்கு.

    பல வங்காள மொழிப் படங்கள் பார்க்கணும் நினச்சு வெச்சிருக்கேன். கட்டக் குறித்து நான் முதலில் பரவலாக அறிந்து கொண்டது – அம்ஷன் குமார் எழுதிய பேசும் பொற்சித்திரம் வாயிலாக……

    Reply
  12. //உங்க குஸீன் உதாரணம் ரொம்ப ரசிச்சேன் 🙂 .. அதைப் படிக்கப்படிக்கவே நாக்குல தண்ணி ஊற ஆரம்பிச்சிருச்சி :-).. Slurppp ! :-)//

    நாக்குல தண்ணியோட நிப்பாட்டியிருந்தா ஓகே…சப்பு கொட்டி ஒரு ஃபினிஷிங் கொடுத்திருக்கீங்க பாருங்க..இங்க உள்ள சாப்பாட்டுக்கே வழியக் காணோம்னு கடுப்புல இருக்கேள இது வேறயா…..வாழ்க..வளர்க…

    Reply
  13. ரித்விக் கட்டக்க்கின் நான்கு திரைப்படங்களுடன் ஒரு நீண்ட கலந்துரையாடைலுடன், இன்னும் ஒரு குறிப்புகளுடன் சென்னை பிலிம் சொஸைட்டி ஒரு விழாவையே 1994 வருடம் சென்னை பிலிம் சேம்பரில் நடத்தியது.. அப்பொழுது அல்லது சற்று முன்பாகவோ..சென்னைபுக் ஹவுஸ் எனும் நிறுவனம் ரித்திவிக் பற்றிய புத்தகத்தையும் வெளியிட்டதாக ஞபாகம்.
    தமிழில் நிறைய எழுத்தாளர்கள் கட்டக் பற்றி எழுதியிருக்கிறார்கள். சுபமங்களாவில் வந்ததாக ஞபாகம்.. சாருநிவேதிதா.. சென்னைபிலம் சொஸைட்டியில் உறுப்பினராக வருவார்.

    Reply
  14. its great, keep rocking !!!

    Reply
  15. அலைந்து திரிபவனின் அழகியல் நூலில் ரித்விக் கட்டக் பற்றி சாரு எழுதியிருந்ததைப் படித்திருக்கிறேன். உங்களின் இந்த கோமல் கந்தார் விமர்சனம் நட்சத்திர வாரத்திற்கே அழகு சேர்ப்பதாக உள்ளது. உண்மையில் ரே வுக்குக் கிடைத்த பெயரும் புகழும் கட்டக்கிற்குக் கிடைக்காதது துரதிர்ஷ்டமே. பாரதியிலிருந்து ரித்விக் கட்டக் வரை அற்புதமான மனிதர்களை இறப்பிற்குப் பின்னர் தான் அடையாளம் காண முடிகிறது என்பது எவ்வளவு துரதிர்ஷ்டமான ஒன்று.

    வங்காள தேசத்தையும் இலங்கையையும் ஒப்பிட்டு எழுதியிருந்த இறுதிப் பத்தி மிக அருமை. இலங்கையையும் அங்குள்ள நம் மக்களையும் அப்படியே அசலாகப் பதிவு செய்த படைப்பு என்று சொல்லிக்கொள்ள நம்மிடையே எதுவும் இல்லை தான். ரித்விக் கட்டக் போன்ற படைப்பாளிகள் தமிழில் இருந்திருந்தால் அது சாத்தியமாகியிருக்கலாம் என்ற உங்கள் கருத்து உண்மையே.

    நதிக்கரையின் அந்தப் பக்கத்தை நாயகனும் நாயகியும் ஏக்கமாகப் பார்க்கும் காட்சியின் வர்ணனையும் மிக அழகு.

    நல்லதொரு அறிமுகத்திற்கு நன்றி ராஜேஷ்.

    Reply
  16. தேள்,உனக்கு இந்த இயக்குனரை பிடித்திறிந்தால் அவரை பற்றி நன்றாக எழுதுவது சால சிறந்தது … தேவை இல்லாமல் தனி மனித காழ்புணர்ச்சி காரணமாக மற்ற இயக்குனர்களை ஓர வஞ்சனை படுத்துவது கீழ்த்தரமான செயல் ….இவ்வுலகில் இந்த தேள் மட்டுமே அறிவாளி என்ற மிதப்பு ஏன் ???

    Reply

Join the conversation