முதல் மரியாதை (1985) – தமிழ்
தமிழ்ப் படங்களைப் பெரும்பாலும் திட்டிக்கொண்டிருக்கும் (அல்லது திட்டுவதாகப் பலரும் எண்ணிக்கொண்டிருக்கும்) என்னை, இந்தவார நட்சத்திரமாக அறிவித்திருக்கும் தமிழ்மணத்துக்கு, அவர்கள் எடுத்துள்ள இந்த முடிவைக் குறித்து என்னைத் திட்டி எழுதப்படும் பல அனானி மின்னஞ்சல்களை இனி அவர்கள் எதிர்கொள்ளப்போகிறார்கள் என்று ஒரு டிஸ்கியைப் போட்டுவிட்டு, , ஒரு நன்றியைத் தெரிவித்துக்கொண்டு, இன்னொரு விஷயத்தைப் பற்றிப் பார்க்கலாம்.
அந்த இன்னொரு விஷயமானது, சில நாட்களுக்கு முன்னர் எந்திரன் விமரிசனம் எழுதியபோது, சில நண்பர்கள் என்னிடம், எனக்குப் பிடித்த தமிழ்ப் படம் என்று எதாவது இருந்தால், எழுதச் சொல்லிக் கேட்ட ஒரு நிகழ்ச்சியிலிருந்து ஆரம்பிக்கிறது. உண்மை என்னவென்றால், எனக்குத் தமிழ்ப் படங்கள் பிடிக்கும். ஆனால், இத்தனை உலகப் படங்கள் பார்க்கத்துவங்கிய பின்னர்தான், எப்படியெல்லாம் நம் இயக்குநர்களும் நடிகர்களும் காப்பிகளை சற்றுக்கூட சளைக்காமலும் கவலைப்படாமலும் அடித்துத் தள்ளுகிறார்கள் என்ற விஷயமே தெரிந்தது. இதனால், கொஞ்சம் வருத்தமும் ஏற்பட்டது. அந்த வருத்தத்தினாலும், காப்பியடிக்கும் இந்த இயக்குநர்கள் மேல் உள்ள கோபத்தினாலும், சில பதிவுகள் இட்டேன். அது எப்படி ஒரு எண்ணவோட்டத்தை எழுப்பியது என்றால், ’கருந்தேளுக்குத் தமிழ்ப்படமே புடிக்காதுய்யா’ என்று நண்பர்கள் நினைக்கத்துவங்கிவிட்டனர் போல இருக்கிறது. ஆகவே, எனக்குப் பிடிக்காத தமிழ்ப்படங்களைப் பற்றிப் பதிவிடுவதைப் போலவே, இனி அவ்வப்போது எனக்குப் பிடித்த தமிழ்ப்படங்களைப் பற்றியும் பதிவிடுவேன்.
சரி. இப்போது, எனக்குப் பிடித்த தமிழ்ப்படங்களின் வரிசையை, முதல் மரியாதையோடு ஆரம்பிக்கிறேன். பெயரிலும் ஒரு சிலேடை இருக்கிறதல்லவா? அதுகூட ஒரு காரணமாக இருக்கலாம். மட்டுமல்லாமல், தமிழ்மண நட்சத்திர வாரம் இப்போது ஆரம்பித்திருப்பதால், இந்த வாரத்தில் ஒரு தமிழ்ப்படத்தை எழுதுவது சரியாக இருக்கும் என்று பட்டது.
பாரதிராஜாவின் ஆரம்பகாலப் படங்கள் (கேப்டன் மகளுக்கு முன்) எனக்குப் பிடிக்கும். என்னதான் வெள்ளுடை தேவதைகள், முகத்தின் ஒரு பக்கத்தை மறைத்துக்கொள்ளும் கைகள், பட்டாம்பூச்சியையும், இமைக்கும் கண்ணையும் அடிக்கடிக் காண்பிக்கும் கட் ஷாட்டுகள் (இதிலும், சிவாஜி & ராதா வாய்விட்டுச் சிரிக்கும் பல கட் ஷாட்டுகள் உண்டு) போன்ற க்ளிஷேக்கள் அடிக்கடி இருந்தாலும், அவரது படங்களில், பார்க்கும் ரசிகனைத் தனது படத்தோடு ஒன்றவைக்கும் இனிமை இருக்கும். இனிமை என்பது சரியான வார்த்தை அல்ல. சுவாரஸ்யம் என்று படித்துக் கொள்ளலாம். மக்களின் இயல்பான வாழ்க்கையைக் காண்பிக்கும் அதே நேரத்தில், அவர்களுக்குள் மலரும் காதலை, சுவையாகக் காண்பிக்கும் திறமை பெற்றவர் பாரதிராஜா. அந்தக் காதலும் ஒரு ‘cliched’ காதலாகத்தான் இருக்கும் என்றாலும், அது நமக்குப் பிடிக்கவே செய்யும்.
உலக சினிமாக்களில், காதல் செய்யும் இரண்டு பேர்களில், வயதில் மிக மூத்த ஒரு ஆண் அல்லது பெண், தன்னை விட வயதில் மிகச்சிறிய மற்றொரு ஆண் அல்லது பெண்ணைக் காதல் புரியும் பெருந்திணைப் படங்கள் நிறைய உண்டு. ஏன்? நிஜவாழ்விலேயே எவ்வளவு பார்க்கிறோம்? ஆனல், சோகம் என்னவெனில், இந்தக் காதல்களில் மிகப்பல காதல்கள், கைக்கிளைக் (’சைக்கிளை’ அல்ல) காதல்களாகவே முடிந்துவிடுவது தான். சமூகத்தின் பார்வையில், இது ஒரு perversion என்ற பட்டத்தைப் பெற்றுவிடுவதே காரணம். சமூகத்தின் கருத்துக்குப் பயப்படாமல் காதல் புரியும் பெருந்திணைக் காதலர்கள் மிக அரிது. தமிழில், விடுகதை என்ற ஒரு படம் வந்தது, நினைவிருக்கலாம். ஆனால், நான் பார்த்த இந்தியப் படங்களில், என்னை மிகவும் கவர்ந்த இந்த ரீதியிலான படங்கள் மூன்றே மூன்று தான் (ராம் கோபால் வர்மாவின் நிஷப்த் படத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்).. ஒன்று முதல் மரியாதை. மற்ற இரண்டும், சீனி கம் மற்றும் த லாஸ்ட் லியர். இரண்டிலுமே அமிதாப் புகுந்து விளையாடியிருப்பார். Especially, The Last Lear. லாஸ்ட் லியருக்கு எனது விமர்சனம், இங்கே காணலாம்.
முதல் மரியாதையில், இதுபோன்ற ஒரு விஷயமே மிகக் கவனத்துடன் கையாளப்பட்டிருக்கிறது.
ஊர்ப் பெரியவர், மலைச்சாமி. அவரது மனைவி பொன்னாத்தாள். எப்பொழுது பார்த்தாலும், வாய் நிறைய வசவுகளுடன், கணவனையும் மற்ற ஊர்க்கார மக்களையும் திட்டிக்கொண்டே இருப்பவள். இவர்களுக்கு ஒரு மகள். மலைச்சாமியின் தங்கைக்கு ஒரு மகன் உண்டு. மலைச்சாமியின் வீட்டிலேயே வளர்ந்து வருபவன்.
வீட்டுக்குள் வாய் திறக்காமல் அமைதி காத்தாலும், வீட்டுக்கு வெளியே, ஊரையே வளைக்கும் வாய்த்துடுக்குடன் வலம் வருபவர் மலைச்சாமி. கேலியும் கிண்டலும் அவரது பேச்சில் தெறித்து விளையாடும். ஊர் மக்களுக்கும் இவரது எள்ளல் பேச்சு பிடிக்கும். இப்படி இருக்கையில், ஒரு நாள், பக்கத்து ஊரில் இருந்து, மலைச்சாமியின் ஊரான பாறைப்பட்டிக்கு, பஞ்சம் பிழைக்க வருகிறது இளம்பெண் குயிலின் குடும்பம். ஊருக்கு வெளியே இருக்கும் ஆற்றில் பரிசல் வலித்துப் பிழைத்துக்கொள்வதாகக் குயிலின் தந்தை ஊர்ப்பெரியவர்களில் ஒருவரான மலைச்சாமியிடம் அனுமதி கேட்டு, மலைச்சாமியின் அனுமதியோடு குடியேறுகிறார். முதல் அறிமுகத்திலேயே மலைச்சாமியின் கிண்டல் பேச்சுக்கு அதே பாணியில் பதில் சொல்லும் குயிலின் மீது மலைச்சாமிக்கு ஒரு ஈர்ப்பு உண்டாகிறது. இதே நேரத்தில், செருப்பு தைக்கும் வெள்ளைச்சாமியின் மகளுடன், மலைச்சாமியின் தங்கை மகனுக்குக் காதல். இவர்களது காதல், ரகசியமாகத் தொடர்கிறது. மலைச்சாமியின் மாப்பிள்ளை, ஒரு வெறும்பயலாக இருப்பதால், அவரது பெண், மலைச்சாமியின் வீட்டிலேயே பல நாட்கள் வாழும் நிலை.
இப்படி இருக்கையில், மலைச்சாமியும் குயிலும் சந்தித்துக்கொள்ளும் பல சூழ்நிலைகள் அமைகின்றன. இருவருக்குமே ஒருவரையொருவர் பிடித்துப்போகிறது.
குயிலு, மலைச்சாமியின் தங்கை மகனின் காதலை உணர்ந்து, மலைச்சாமியிடம் எடுத்துப் பேசி, அவரைச் சம்மதிக்க வைக்கிறாள். அவர்களது திருமணமும் நடக்கிறது. அதன்பின், ஒரு நாள், விளையாட்டாய் ஆற்றங்கரையில் ஓடும்போது, அந்தப் பெண்ணின் நகைக்கு ஆசைப்பட்டு, அவளை ஒருவன் கொலை செய்துவிட, அவனது கால் கட்டை விரலைத் தனது வாயால் கவ்விப் பிடித்துவிடுகிறாள் அப்பெண். அவளது தந்தையான வெள்ளைச்சாமி, அந்த விரலை எடுத்துப் பத்திரப்படுத்தி வைக்கிறார். இதனை, மலைச்சாமியிடமும் சொல்லிவிடுகிறார். அதே நேரத்தில், தனது வீட்டுக்கு வந்திருக்கும் மாப்பிள்ளையின் காலில், கட்டை விரல் இல்லாமல் இருப்பதைப் பார்த்துவிடும் மலைச்சாமி, உண்மையைப் புரிந்துகொண்டு, போலீஸை வரவழைத்துவிட, மாப்பிள்ளையின் கைதால் புலம்பும் பொன்னாத்தாள், மலைச்சாமியைத் திட்டத் துவங்கிவிடுகிறாள்.
மனம் முழுக்க வருத்தத்துடன் நடமாடும் மலைச்சாமிக்கு , குயிலின் வார்த்தைகளும், அவளது அண்மையும் ஆறுதலாக இருக்கின்றன. குயிலுக்கும் மலைச்சாமியுடன் இருப்பது பிடிக்கிறது. ஆனால், ஊரில் வம்பு பேசித் திரியும் ஒருவனால், குயிலும் மலைச்சாமியும் இணைந்து எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் பரபரப்புக்குள்ளாக்கப்படுகிறது. இதனால் பஞ்சாயத்து கூட, அனைவருக்கும் முன்னால், குயிலைத் தான் தொடுப்பாக வைத்திருப்பது உண்மைதான் என்று கர்ஜிக்கிறார் மலைச்சாமி. இதனால் அவரது குடும்பம் பிரியும் நிலை உருவாகிறது. தன்னைப்பற்றி அவதூறு கூறும் மனைவியை எட்டி உதைத்து, அவள் இருபது வருடங்களுக்கு முன்னால் ஊர்த்திருவிழாவில் எவனோ ஒருவனிடம் படுத்து, வயிற்றில் குழந்தை வாங்கிய அவமானத்தை மறைப்பதற்காக அவளது தந்தையான மலைச்சாமியின் மாமன் கெஞ்சியதால் மட்டுமே அவளது கழுத்தில் தாலி கட்டியதைப் போட்டு உடைக்கும் மலைச்சாமி, இனி இதைப்பற்றிப் பேசினால், அவர் ஒரு மிருகமாக மாறிவிடவேண்டியிருக்கும் என்று சீறுகிறார்.
ஊர்ப் பேச்சை உடைக்க, குயிலுடனே சேர்ந்து வாழ அவளது வீட்டுக்கு வரும் மலைச்சாமிக்கு அதிர்ச்சி. ஒரு பிணத்துடன், போலீஸ் தன்னைக் கைது செய்த நிலையில் குயிலு நிற்கிறாள். அப்பிணத்தைப் பற்றி வாயே திறப்பதில்லை குயிலு. மலைச்சாமியிடம் மட்டும் உண்மையைச் சொல்கிறாள். பொன்னாத்தாளைக் கர்ப்பமாக்கியது, குயிலு கொலை செய்த அந்தக் கயவன் தான். பொன்னாத்தாளைப் பார்த்து, அவளது குழந்தைக்கும் நிலபுலனுக்கும் சொந்தம் கொண்டாட அவன் வருகையில், இந்த உண்மையை அவன் வாயாலேயே கேட்ட குயிலு, மலைச்சாமியின் கௌரவத்தைக் காப்பாற்றச் செய்த கொலையே இது.
ஊர் திரும்பும் மலைச்சாமி, மரணப்படுக்கையில் வீழ்கிறார். இது தெரிந்து, குயிலு, பரோலில் அவரைப் பார்க்க வர, அவளைப் பார்த்துச் சந்தோஷப்படும் மலைச்சாமியின் உயிர், அவள் கையைப் பிடித்த நிலையில், பிரிகிறது. பல வருடங்கள் கழித்து, தண்டனைக்காலம் முடிந்து வரும் குயிலின் உயிரும், ரயிலிலேயே பிரிய, அத்துடன் படமும் முடிகிறது.
இந்தப் படம் எனக்குப் பிடித்த காரணம், வெகு வருடங்களுக்குப் பின், சிவாஜி கணேசனின் நடிப்பை வெளிப்படுத்திய ஒரு படமாக முதல் மரியாதை அமைந்த காரணத்தினால்தான். ஆரம்பம் முதலே, வெகுசில படங்களில் மட்டுமே தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. முக்காலே மூணு வீசம் படங்களில், அழுகையையும், மிகை நடிப்பையும் மட்டுமே வழங்கும்படியான வாய்ப்பையே பல இயக்குநர்கள் அவருக்குக் கொடுத்து வந்தனர். முதல் மரியாதையில் அந்த மிகை நடிப்பும் அழுகையும் இல்லவே இல்லை. தன்னுடைய அற்புதமான நடிப்புத் திறமையை சிவாஜி கணேசனை வழங்க வைக்கப் பாரதிராஜாவால் முடிந்தது.
குறிப்பாக, தனது மகளின் முன்னர், தனது குடும்ப ரகசியத்தைப் போட்டு உடைக்கும் சிவாஜி, உடனேயே மகளிடம் பாசம் பொங்கப் பேசும் காட்சியைச் சொல்லலாம். அதே போல், கடைசியில் மரணப் படுக்கையில் கிடக்கும் சிவாஜி, குயிலு வந்ததும், அவளது முகத்தைப் பார்க்கும் அந்தப் பார்வை, மிக உருக்கமான ஒரு காட்சி. அதில், கச்சிதமாக, இதுவரை அவரது மனதில் இருந்த அன்பையும் காதலையும் குயிலுக்கு உணர்த்தும் ஒரு பார்வையையும், முகபாவத்தையும் வெளிப்படுத்தியிருப்பார் சிவாஜி. அவரது நடிப்புத் திறமைக்கு இது ஒரு சான்று. கேலியும் கிண்டலும் தெறிக்கும் கிராமத்துப் பெருசு மலைச்சாமியையே இப்படத்தில் நான் பார்த்தேன். சிவாஜி கணேசனைப் பார்க்கவில்லை.
இன்னொரு முக்கியமான அம்சம், இசை. கிராமத்து மண்ணின் வாசனை பொங்கி வழியும் பாடல்கள். அந்தப் பாடல்களையே, எளிய கிராம இசைக்கருவிகள் மூலம் மாற்றி வழங்கியிருக்கும் ஒரு பின்னணி இசை. பின்னணி இசையில் இளையராஜாவின் வீச்சு என்னவென்று நம்மெல்லோருக்கும் தெரியும். அதற்கு ஒரு அட்டகாசமான உதாரணம்: ஆற்றில் மிதக்கும் தனது மனைவியின் பிணத்தைப் பார்த்தவுடன், புல்லாங்குழலைத் தூக்கி எறியும் அந்தக் காட்சி. புல்லாங்குழலின் மெல்லிய வாசிப்பிலேயே, அந்தக் காட்சிக்குரிய முக்கியத்துவத்தை அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார் இளையராஜா. அந்த இசையை மட்டும் கேட்டாலே போதும்; அந்தக் காட்சியில் நிலவும் பரபரப்பை நம்மால் எளிதில் உணர முடியும். அதேபோல, பாடல்கள். ‘ராசாவே ஒன்ன நம்பி’, ‘பூங்காத்து திரும்புமா’, ‘’வெட்டிவேரு வாசம்’, ’அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்’ ஆகிய பாடல்களின் இனிமை, ‘ஏறாத மலமேல’, ‘ஏ குருவி’, ‘ஏ கிளியிருக்கு’ ஆகிய குறும்பாடல்கள் தரும் குறும்பு ஆகிய உணர்வுகளை மறக்கவியலாது.
கிராமத்துக் காமத்தை நமக்குக் காட்டும் காட்சிகளும் படத்தில் உண்டு. அதேபோல், மலைச்சாமி – குயிலு இருவரின் காதலை நமக்குப் பல விதங்களிலும் காண்பிக்கும் காட்சிகள், அழகாக எடுக்கப்பட்டிருக்கின்றன.
இப்படத்தின் குறைகள் என்று பார்த்தால், வெகு காலமாகத் தமிழ்ப்படங்களில் நிலவும் க்ளிஷே – கதாநாயகன் அப்பழுக்கற்றவன் என்று நிரூபிப்பதற்காக, அவன் எந்தப் பெண்ணையும் புணர்ந்ததே இல்லை என்று நிரூபிக்கும் விதமாகக் காட்சிகளை அமைத்திருப்பது, கதாநாயகன் ஒரு உத்தமன் என்று சொல்லும் காட்சிகள் போன்ற வெகு சில விஷயங்களேயாகும். ஆனால், இவையும், படத்தின் கதைக்கு அந்நியமாகத் தெரியாததால், பெரிய குறைகளாகத் தோன்றுவதில்லை. இப்படத்தின் இன்னோரு ப்ளஸ் பாயிண்ட் – படத்தில் தனியாகக் காமெடி ட்ராக் அமைத்து, கதைக்குச் சம்மந்தமில்லாத காமெடியை வைக்காததே.
இப்படத்தில் இன்னொரு நல்ல விஷயத்தைக் கண்டேன். இறுதியில், சத்யராஜைப் பரிசலில் வலிக்கும் ராதா, சத்யராஜ் யார் என்று அவரது வாயிலிருந்தே தெரிந்துகொண்டபின், அவரது மனதில் ஓடும் எண்ணங்களின் தொடர்ச்சியாகவே, கடைசி வார்த்தையான ‘நினைச்சிக்கிட்டிருக்கேன்’ என்பதை மட்டும் ராதா வாய் உச்சரிக்க, இதற்கு முந்தைய வசனமெல்லாம் அவரது மனதிற்குள்ளேயே ஒலிக்குமாறு அமைக்கப்பட்ட காட்சி. இது ஒரு நல்ல திரைக்கதை உத்தி. 1985ல் தமிழுக்குப் புதிது.
இப்படத்தில் இருக்கும் அத்தனை கதாபாத்திரங்களுமே நடிப்பில் பின்னியிருப்பது, இன்னொரு நல்ல விஷயம். ராதா, வடிவுக்கரசி, ஜனகராஜ் ஆகியவர்களின் நல்ல நடிப்பு, படத்தைத் தாங்குகிறது.
தமிழில் ஒரு வித்தியாசமான படமான முதல் மரியாதையை எடுத்ததனால், பாரதிராஜா எனக்குப் பிடித்த ஒரு இயக்குநராக மாறிப்போனார். அவரது மற்ற – எனக்குப் பிடித்த- படங்களை, அவ்வப்போது எழுதுவேன்.
முதல் மரியாதையின் டிரெய்லர் காண, இங்கே க்ளிக்கவும்
மீ த ஃபர்ஸ்டு…
ஹை இதான் அந்த தமிழ்படமா!! ரொம்ப நல்ல படத்தை தான் எழுதி உள்ளீர்கள்! சிவாஜி அந்த கல்லை தூக்கும் காட்சி இசையுடன் எனக்கு ரொம்ப பிடிக்கும்!
தமிழ் மண நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்!
தமிழ்மண நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துகள்!
ஆஹா, நட்சத்திரப் பதிவர்க்கு வாழ்த்துக்கள் (ஆனா இது ரொம்ப லேட்டு இல்ல?)
அய்யய்யோ என்னப்பா இது கைக்கிளை, பெருந்திணைன்னு எல்லாம்? படிச்சா சாருவோட நண்பர் மாதிரித் தெரியலையே…
சிவாஜியைப் பற்றிய உங்கள் கருத்துக்களுக்கு முமையாக உடன்படுகிறேன்.
//வெகு காலமாகத் தமிழ்ப்படங்களில் நிலவும் க்ளிஷே….//
இது தமிழ் சினிமாவின் சாபம். ஆனால் அப்படி இந்தப் படத்தில் சித்தரித்திருப்பதால்தான், மலைச்சாமியின் காதல் முக்கியத்துவம் பெறுகிறது என்பது என் கருத்து. அவர் எல்லோராலும் மதிக்கப்படுவதற்கும் அதுதான் முக்கியக் காரணம். இல்லாவிட்டால் குயிலின்மீதான அவர் காதல் அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தி இருக்காது.
இந்தப் பதிவை மிகவும் ரசித்தேன், நன்றி….
//அய்யய்யோ என்னப்பா இது கைக்கிளை, பெருந்திணைன்னு எல்லாம்? படிச்சா சாருவோட நண்பர் மாதிரித் தெரியலையே…//
அதே அதே… படிச்சா வைரமுத்துவோட ஃப்ரண்டு மாதிரில்லா தெரியுது….
ஹாய் தேளு நட்சத்திர வாழ்த்துக்கள்.
முதல் பதிவு அட்டகாசம். கண்டிப்பாக இதில் ஒரு வித்தியாசமான சிவாஜீயை பார்க்க முடியும்.
பாவம் அவரும் என்ன பண்ணுவாரு சாரு சொன்னாமாதிரி சிவாஜீக்கு கிடைச்சுது அதிகம் ஏ.நடராஜ் மாதிரியான இருக்குனர்கள்தான்.
படத்துல ஒரு முக்கியமான விஷயத்தை மிஸ் பண்ணிட்டீங்க..
சமீபத்தில் மறைந்த நடிகர் வீரசாமியின் வசனம் ஷாமி ஒரு உண்மை எனக்கு தெரிஞ்சாகனும் ஷாமி… :)))))
நட்சத்திர வாழ்த்துக்கள் தேள்….
வாழ்த்துக்கள் பாஸ்
வணக்கம் உறவே
உங்கள் பதிவினை எமது மீனகம் topsites லும் பதியவும்..
http://meenakam.com/topsites
இந்த படம் வெளியான போது தியேட்டரில் மூன்று தடவை பார்த்தேன்.மிக அருமையான சிவாஜி,இசை,ராதா…
நட்சத்திரப்பதிவராகியிருப்பதற்கு வாழ்த்துக்கள். நடிகர் திலகம் பற்றிய கருத்துக்கள் ஓரளவு சரியானவைதாம். ஏதோ அவர் இரண்டொரு படங்களில் மட்டுமே நன்றாக நடித்திருப்பதாகவும் மற்ற படங்களில் எல்லாம் அழுது அல்லது மிகை நடிப்புடன் தம்மை முடித்துக்கொண்டது போலும் அதற்கு அவருக்கு சரியான இயக்குநர்கள் கிடைக்கவில்லை என்பது போலவும் விமர்சனம் வைத்திருப்பது எழுபத்தைந்துகளுக்குப்பிறகு பண்ணப்படும் அறிவுஜீவித்தனமான பம்மாத்துதான். நூற்றுக்கணக்கான படங்கள் அந்த மகாகலைஞனைப் பற்றிப்பேசக் கிடைக்கின்றன. இதற்கு ஒப்புவமைக்கு ஆங்கிலப்படங்களிடமோ உலகப்படங்களிடமோ போகவேண்டிய அவசியமில்லை. இருபது முப்பது ஆண்டுகளுக்குப் பார்த்த மக்களை உணர்வு ரீதியாகப் பாதித்த நடிப்பு ஒன்றும் சாதாரணமானதல்ல. பீம்சிங்கும், ஏ.பி.நாகராஜனும், கிருஷ்ணன் பஞ்சுவும்,ஸ்ரீதரும் குறைவாக மதிப்பிடப்படவேண்டிய இயக்குநர்களும் அல்ல. சிவாஜி பற்றி நிறைய எழுதவிருப்பதால் இங்கே விரிவாப்பேச விரும்பவில்லை.
மற்றபடி உங்களின் உலகப்பட கட்டுரைகளை நிறைய வாசித்திருக்கிறேன்.
பெங்களூரில்தானே இருக்கிறீர்கள், சந்தர்ப்பம் கிடைத்தால் சந்திப்போம் .
உண்மையில் சிவாஜி ஒரு அற்புத கலைஞர், அவர் நடிப்பிற்கேற்ற கதாபாத்திரங்கள் மிக குறைவு,நாம் இயக்குனர்களும் அவரை சரியாக use பண்ண வில்லை , நீங்கள் கூறியமாதிரி “அழுகையையும், மிகை நடிப்பையும் மட்டுமே வழங்கும்படியான வாய்ப்பையே இயக்குநர்கள் அவருக்குக் கொடுத்து வந்தனர்”
சிவாஜி ஒரு நடிப்பு சிங்கம்,பல இயக்குநர்களால் சிங்கத்திற்க்கு தயிர் சாதம் மட்டுமே கொடுக்க முடிந்தது.
நட்சத்திர எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்………………..
நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துகள்!
நண்பா
இதுதானா அந்த தமிழ்படம்
அட்டகாசமான படம்,அட்டகாசமான பார்வையும் சிறப்பான எழுத்தும்.
குறிப்பா அந்த ராதா உச்சரித்த வசனம் அதை நானும் நோட் செஞ்சேன்.
சிவாஜியின் நடிப்புக்கு தீனி போட்ட படம் .,சிவாஜி நடித்த பல மொக்கை ஓவர் ஆக்டிங் படங்களையே பகல் நேர ஒளிபரப்பில் எப்போதும் போடுவார்கள்,அதில் எப்போதாவது போடப்படும் ஒரு மாற்று குறையாத தங்கம் இது,இசைஞானியின் இசையில் தொனிக்கும் ராமிய மணம் வேறெங்கும் கிடைக்காது,மீண்டும் இசைஞானி பாரதிராஜா,வைரமுத்து இணையவேண்டும்.
நட்சத்திரத்திற்கு நட்சத்திர வாழ்த்துக்கள் தம்பி..!
நட்சத்திர வாழ்த்துகள்!
நண்பரே,
மனமார்ந்த வாழ்த்துக்கள். முதல் மரியாதையை முன்பு ரசித்ததுபோல் இப்போது ரசிக்க முடியவில்லை எனினும் அது வெளியான காலத்தில் அது ஒரு வித்தியாசமான படைப்பாகவே தோன்றியது.
நட்சத்திர வாழ்த்துகள் 🙂
Subtle actingற்கு இந்தப்படத்தை எடுத்துகாடாகக் கூறலாம்.பெரும்பாலும்
சிவாஜி என்றாலே அவரது கர்ஜனை (அது சோக சீனாக இருந்தாலும் கூட உ-ம் திரிசூலத்தில் கே.ஆர். விஜயாவுடன் தொலைபேசியில் பேசும் சீன்.)
நினைவுக்கு வரும் இது ஒரு வித்தியாசமான் சிவாஜி திரைப்பட்ம். குற்றங்கள், குறைகள் இ்ருந்தாலும் மன்னிப்போம் ஏற்றுக்கொள்வோம்
“எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்”- சமீபத்தில் மறைந்த நடிகர் வீராச்சாமி வந்ததும் இந்தப் படம் தானே?
சகாதேவன்
தமிழ்மணம் நட்சத்திரம் — எதுக்குனு கூட தெரியாது. இருந்தாலும் இத்தனை பேர் சொல்லுறாங்கன்னா–அதுல ஏதோ இருக்குன்னு தெரியுது.
அன்னாரை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.
இந்தப்படம் வந்தப்ப உங்களுக்கு ஒரு 15-17 வயசு இருக்கும் போலிருக்கே!!! அபார ஞாபக சக்தி.
சிவாஜி நடிப்பில எனக்கு பிடிச்ச சில படங்கள் –
. உயர்ந்த மனிதன், குறிப்பா அந்த நாள் ஞாபகம் பாட்டு
. கௌரவம், கொஞ்சம் ஓவர் ஆக்டிங் இருந்தாலும்
. பெரும்பாலான பா வரிசை படங்கள்.
சிவாஜி (தாதா சாகேப் பால்கே தவிர)நாகேஷ் இருவருக்கும் எந்தவொரு தேசிய விருதுகளும் தரப்படாதது பெரிய துரோகமா எனக்குப்படுது.
வாழ்த்துக்கள் தல.இந்த மாதிரி அப்பப்ப நல்ல,பழைய தமிழ் படங்கள் பற்றி எழுதுங்க. 🙂
சிவாஜி பற்றிய எனது கருத்து கிட்டத்தட்ட உங்களது கருத்தோடு ஒற்றிப் போகும்.மிகை நடிப்பு இல்லாத படங்கள் அவருக்கு பின்னரே கிடைத்தன.இதிலும்,குறிப்பாக தேவர் மகனிலும் அவரது பண்பட்ட நடிப்பை கண்டு வியந்து இருக்கிறேன்.இந்த படத்தின் முக்கிய தூண்,நடிப்பு தான்.
மிக அருமையான படம் தேள்…. தமிழ் மன நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்…
நல்ல பதிவு கருந்தேள்! நட்சத்திர வாழ்த்துக்கள்…
முதல் மரியாதை
– ஒரு கார் கால குளிரிரவில், இப்படத்தை முதல் முறையாக பார்த்ததாய் நினைவு.கணிக்க முடியாத கதையோட்டம்,அந்தி வானத்தை பற்றிய ரஞ்சனியின் அளவளாவல், ஆயிரம் மின்மினிகள் படபடக்கும் குயிலின் பார்வை, மயில்சாமிஆகவே வாழ்ந்த சிவாஜி, கவிதைத்தனமான கதை நடை என ஆயிரம் நட்சத்திரங்களை கண்ணுக்குள் மின்ன செய்த படம் இது.
மேக மேலாடை இறுக போர்த்திய இந்த நட்சத்திரம், மேகத்திலிருந்து தேகத்தை விலக்கியமைக்கு வாழ்த்துக்கள். மிக்க மகிழ்ச்சி.
@ சு. மோகன் – நன்றி.. இந்தக் கைக்கிளை பெருந்திணையெல்லாம் நானு இஸ்கூல்ல படிச்சது.., அப்பப்ப வெளில எடுத்து உட்டாத்தானே நாமளும் பிர்ர்ர்ர்ரப பதிவர்ர்ர்ர் ஆக முடியுன்னேன் 🙂 ஹீ ஹீ
@ எஸ். கே – 🙂 அந்தக் கல்லு காட்சி, எனக்கும் ரொம்பப் புடிக்கும்.. 🙂 ஜாலியான சீனு அது .. அதுல சிவாஜியின் நகைச்சுவை பிரமாதமா வெளிப்பட்ருக்கும்ல ..:-)
@ Mohan – மிக்க நன்றி..
@ நாஞ்சில் பிரதாப் – நன்றி தல.. வீராச்சாமியின் வசனத்தை மறக்க முடியுமா 🙂 ஆனா , மேட்டர் என்னன்னா, நேத்து எழுதும்போது ரொம்ப நேரம் ஆனதுனால, தூக்க மப்புல எழுதுனேன்.. அதான் விட்டுப்போயிருச்சி .. நினைவு
படுத்தினதுக்கு நன்றி 🙂
@ ஜாக்கி – நன்றி 🙂
@ மணிஜீ – தாங்கீஸ் பாஸ் 🙂
@ ஊடகன் – அட அதுக்கென்ன போட்டுட்டா போச்சு உறவே 🙂 நாளை போட்டுடுறேன்.. ரைட்டா
@ அமுதா கிருஷ்ணா – மூணு தடவ பார்த்த உங்கள் ரசனைக்கு ஒரு ஓ போட்டுரலாம் 🙂 .. உங்களுக்குப் படம் பிடிக்கும்னு தெரிஞ்சதுல மகிழ்ச்சி..
@ Amudhavan – அது வேற ஒண்ணுமில்ல .. சிவாஜியின் முக்கால்வாசிப் படங்கள் பார்த்திருக்கிறேன்.. எனக்கென்னமோ அப்படித் தோன்றியது.. நான் பார்த்த படங்களில், சிவாஜியின் நடிப்பு பிடித்த படங்களாவன: பலே பாண்டியா,
ராஜபார்ட் ரங்கதுரையின் சில காட்சிகள், மேலே கொழந்த சொன்ன உயர்ந்த மனிதன், சிவந்த மண், தூக்கு தூக்கியின் சில காட்சிகள், உத்தமபுத்திரன், ஊட்டி வரை உறவு, ஸ்ரீதரைப் பற்றி எனக்கு உயர்ந்த அபிப்பிராயம் உண்டு. அவரது
அத்தனை படங்களும் பார்த்திருக்கிறேன்.. குறிப்பாக, தேனிலவு பிடிக்கும் :-).. மேலே சொன்ன வரிசையிலேயே, ஊட்டி வரை உறவு & சிவந்த மண், ஸ்ரீதரின் படங்களாயிற்றே.. அதோடு கூட, ஸ்ரீதர் சிவாஜி காம்பினேஷன் சோடையே
போனதில்லை.. ஹீரோ 72 என்று ஒரு படம் வந்ததே உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஸ்ரீதர், ஆக்ஷன் படம் எடுத்தார்.. சிவாஜியை வைத்து.. இதையே ஹிந்தியிலும் எடுத்தார்.. ஜிதேந்திரா என்று நினைக்கிறேன்.. அது ஃப்ளாப்
ஆகிவிட்டது.. தமிழில், பரவாயில்லாமல் ஓடியது..
எனவே, நான் பம்மாத்து எதுவும் பண்ணவில்லை. எனது கருத்தையே கூறினேன்.. 🙂 உங்கள் விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி.. பெங்களூர் தானே.. சந்தித்து விடுவோம்..
@ மொக்கராசா – சிவாஜி, நடிப்புச் சிங்கமே தான்.. உங்கள் கருத்துக்கு நன்றி.. தயிர்சாத உதாரனம் சூப்பர் 🙂
@ denim – நன்றி நண்பா..
@ பாஸ்கர் – தயாரா இருங்க.. டிசம்பர் 13 நெருங்கிக்கினே கீது.. 🙂
@ கீதப்ரியன் – நண்பா..ஓ நீங்களும் நோட் பண்ணீங்களா.. வெரிகுட்.. இந்தப் படத்தோட இசை, ரொம்பப் புடிச்சது. ராஜாவை இதுலயெல்லாம் அடிச்சிக்க ஆளே இல்லையாச்சே 🙂 நன்றி நண்பா
@ உண்மைத்தமிழன் – வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@ மோகன் குமார் – நன்றி தல
@ காதலரே – 🙂 உண்மையைக் கூறியிருக்கிறீர்கள் 🙂 .. இருப்பினும், நேற்று மறுபடிப் பார்த்தபோது, எனக்குப் பிடித்தது.. அனாலும், வெளியான காலத்தில் அது மிக வித்தியாசமான படைப்பாகத் தோன்றியது உண்மைதான்..
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே
@ இராமசாமி கண்ணன் – நன்றி தலைவா… 🙂
@ ramsay – திரிசூலம் தொலைபேசிக் காட்சி.. நன்றாக நினைவிருக்கிறது.. பேச்சின் இடையே, எக்ஸ்டென்ஷன் ப்ளீஸ் என்று சிவாஜி உறுமுவார்.. அது ஸ்பாண்டேனியஸ் என்று படித்திருக்கிறேன்.. டிரங்க்கால் போடும்போது,
நீண்டநேரம் பேசுகையில், ஆப்பரேட்டர் குறுக்கிட்டு, எக்ஸ்டெண்ட் செய்ய வேண்டுமா என்று கேட்பார்களாம் அக்காலத்தில்.. அதனை, சிவாஜி கரெக்டாக்ப் பிடித்திருப்பார்.. உங்கள் கருத்துக்கு நன்றி
@ சகாதேவன் – ஆமாம் ந்ண்பா.. வீராசாமி வந்தது இதே படம் தான் 🙂
@ கொழந்த – வாழ்த்துக்கு நன்றி 🙂 .. இதைப்பத்தி அப்புறமா பேசலாம் 🙂 இந்தப் படம் வந்தப்ப எ
நட்சத்திர வாழ்த்துக்கள்.
கேபிள் சங்கர்
The only thing is, this is how the Pc version of Minecraft started, Watch the Mojang documentary and he mentions that he releases this ALPHA stage to allow gamers to play the game while he is still making it.
நன்றி கேபிள் 🙂
அண்ணன் விடிவெள்ளி வருங்கால அமெரிக்க சனாதிபதி சரத்து குமார் குறித்து இந்த இணைப்பில் உள்ள பின்னூட்டங்களை படிக்கவும்.வயிறு வலித்தால் நான் பொறுப்பல்ல!
http://thatstamil.oneindia.in/movies/shooting-spot/2010/03/23-sarath-kumar-injure-sarathi-shooting.html
http://thatstamil.oneindia.in/movies/heroes/2010/03/13-sarath-says-nadigar-sangam-not.html
http://thatstamil.oneindia.in/movies/heroes/2010/03/13-oscar-why-not-me-sarathkumar.html
மிக்க நன்றி . முதல் மரியாதை … தமிழின் ஆக சிறந்த படம் … காட்சிப்படுத்துதலில் மிக நேர்த்தி இருக்கும் …காதலில் பொருந்தா காதல் .. பொருந்தும் காதல் என்றெல்லாம் இருப்பதாக தெரியவில்லை … உங்கள் விமர்சனம் அருமை ..
குறிப்பு : பழைய திரைப்படங்கள் என்பதால் கதை விரிவாக்கம் அதிகம்
செய்வதற்கு பதிலாக சிறப்பு இயல்புகளை எடுத்து விளக்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்
@ nara – அந்தத் தளத்தின் பல கமெண்டுகள் நிறையவே அசிங்கமா இருக்கும்… இந்த லின்க் பரவாயில்லை 🙂 ஜாலியா இருந்தது 🙂
@ தெறிக்கும் கதிர் – நண்பரே.. உங்கள் யோசனை, கண்டிப்பாக எனக்கு ஒரு நல்ல கருத்தாக இருந்தது.. இனி இதை கட்டாயம் செயல்படுத்துவேன்.. மிக்க நன்றி
சிவாஜி மீன் சாப்பிடறதை விட்டுடீங்களே
படத்தில் ராதாவுக்கு dubbing தந்த ராதிகாவும் பாராட்டுக்குரியவர் ..NAlla ninaivu kooral!
நட்சத்திர வாழ்த்துக்கள்.
மிக அருமையான படம்.
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி என்னும் டயலாக் அந்த நாட்களில் மிகவும் பிரபலமாக இருந்தது என்று ஞாபகமிருக்கிறது.
நட்புடன்
சஞ்சயன்.
வாழ்த்துக்கள் பாஸ்1
@ Karthik – ஆஹா ! சிவாஜி மீன் சாப்புடுறது மறக்க முடியுமா? 🙂 தூக்கக் கலக்கத்துல எழுதாம உட்டுட்டேன் பாஸ் 😉 நினைவுபடுத்தியமைக்கு நன்றி
@ கிருஷ்குமார் – கரெக்ட் ! ராதிகாவின் வாய்ஸ், இதுல ராதாக்கு கரெக்டா பொருந்தியிருக்கு ! அருமையா ஸிங்காச்சு…
@ விசரன் – மிக்க நன்றி.. அந்த டயலாக்க எண்ணிக்குமே மறக்க முடியாது
இல்லையா? 🙂 நினைவுபடுத்தியமைக்கு நன்றிகள்
@ பன்னிக்குட்டி ராம்சாமி – ணா.. உங்களுக்குப் போட்டியா நம்ம போன பதிவுல இப்போ ராம்சாமின்னு ஒருத்தர் வந்திருக்காரு.. என்னான்னு போயி பாருங்க.. 🙂 நன்றி
Mudhal Mariyadhai is once of my favourite movies. Please write about Kadolara Kavithaigal!
எத்தனயோ முறை தொலைகாட்சியில் போற்றுந்தாலும் இதுவரை நான் முழுசா பாக்காத படங்களுள் ஒன்று
bandham is also my favourite movie
படத்தின் சாதியப் பார்வையையும் சாடி இருக்கலாம்.