300: Rise of an Empire: 3D (2014) – English

by Karundhel Rajesh March 10, 2014   English films

தெமிஸ்டாக்கிள்ஸ் என்பவன் க்ரேக்கத்தின் புகழ்பெற்ற தளபதிகளில் ஒருவன். இவன் வாழ்ந்த காலம் – கி.மு 524-459. இவனது வாழ்வின் முக்கியமான சாதனையாகக் கருதப்படுவது, கி.மு 480ல் க்ரேக்கத்தின் மீது படையெடுத்த பெர்ஷியர்களை முறியடித்தது. க்ரேக்கத்தில் மிகுந்த செல்வாக்கு பெற்ற தளபதியாக இருந்தாலும், அதன்பின் சில வருடங்களிலேயே க்ரேக்கத்தை விட்டே துரத்தப்பட்ட நபர். இதன்பின் இறக்கும்வரை, தான் முறியடித்த பெர்ஷியர்களுடன் நட்பு வைத்துக்கொண்டு அவர்களது நாட்டிலேயே வாழ்ந்து இறந்த நபர்.

டாரியஸ் (Darius) என்பது பெர்ஷியாவின் புகழ்வாய்ந்த மன்னர்களில் ஒருவர். இவரது மகன் பெயர் ஸெர்ஸஸ் (XerXes). இந்த டாரியஸ் தான் க்ரேக்கத்தின் மீது படையெடுத்த மன்னர்.

ஆசியாவில் இருக்கும் பெர்ஷியா, ஐரோப்பாவில் இருக்கும் க்ரீஸை நோக்கிப் படையெடுத்த காரணம் என்ன?

கிமுக்களில் நடந்த முக்கியமான போர்களில் இந்த பெர்ஷிய-க்ரேக்கப் போரும் ஒன்று. உண்மையில் இவை ‘போர்’ அல்ல. போர்கள். இரண்டுமுறை பெர்ஷியா க்ரேக்கத்தை வெல்ல முயன்றது. ஒருமுறை தந்தையான டாரியஸின் படையுடன். மறுமுறை, மகனான ஸெர்ஸஸின் படையுடன். ஆனால் இருமுறையுமே இறுதி வெற்றி க்ரேக்கத்துக்கே கிடைத்தது.

இந்தப் போர்களுக்குக் காரணம், அப்போதைய ஆசியாவின் பிரம்மாண்டமான சாம்ராஜ்யமாக விளங்கிய பெர்ஷிய சாம்ராஜ்யத்துக்கு உட்பட்ட சில பகுதிகள், பெர்ஷிய சர்வாதிகாரத்துக்கு எதிராகக் குரல் கொடுத்த சம்பவத்தில் துவங்குகிறது. இந்தப் பிராந்தியத்தின் பெயர் அயோனியா (Ionia). க்ரேக்கத்தில் இருந்து குடிபெயர்ந்த மக்களால் உருவான பிராந்தியம் இது. முதலில் சுதந்திரமாகச் செயல்பட்டுவந்த இந்தப் பிராந்தியம், கி.மு 560ல், க்ரோய்ஸஸ் (Croesus) என்ற மன்னரால் வெல்லப்பட்டது. இவரது நாட்டை லிடியா (Lydia) என்று அழைத்தனர். இந்த லிடியா நாட்டையே பின்னர் பெர்ஷிய மன்னரான சைரஸ் (Cyrus) கைப்பற்றிவிட, இதன்பின் பெர்ஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது அயோனியா. பெர்ஷியாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில உள்ளூர் சர்வாதிகாரிகள்தான் அவர்களால் வெல்லப்பட்ட பிராந்தியங்களை ஆள்வது வழக்கம். அப்படி ஒரு சர்வாதிகாரியின் (அரிஸ்டகோராஸ் – Aristagoras) கீழ் ஆளப்பட்டு வந்த அயோனியா, பெர்ஷியாவால் கைப்பற்றப்பட்ட நாற்பதாவது வருடத்தில் கிளர்ச்சியில் இறங்கியது.

காரணம், இந்த அரிஸ்டகோராஸ், கிரேக்கத் தீவான நாக்ஸோஸை (Naxos) பெர்ஷியர்களின் சார்பாக வெல்கிறேன் பேர்வழி என்று தானாக முன்வந்து மாமன்னர் டாரியஸுக்குச் சொல்ல, அவரும் 200 கப்பல்களையும், அவற்றில் ஏராளமான போர்வீரர்களையும் அரிஸ்டகோராஸுக்கு வழங்கினார். ஆனால் நாக்ஸோஸின் மேல் படையெடுத்த அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதனால் மாமன்னர் டாரியஸின் கோபத்துக்கு ஆளானார் அரிஸ்டகோராஸ். எனவே அயோனியாவின் சர்வாதிகாரி என்ற பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு தண்டிக்கப்பட இருந்தார். உடனடியாக குள்ளநரித்தனமாக யோசித்த இவர், தனது பிராந்தியத்தின் மக்களைத் தூண்டிவிட்டு, மன்னர் டாரியஸுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபடவைத்தார். இந்தப் பிராந்தியத்தின் பூர்வகுடிகள் க்ரேக்கர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. எனவே, படுபயங்கர புத்திசாலித்தனத்துடன் க்ரேக்க நாடுகளுக்கு தூது அனுப்பினார் அரிஸ்டகோராஸ். ஆனால் இந்த சூழ்ச்சியில் அனைத்து க்ரேக்க நாடுகளும் சிக்கவில்லை. ஏதென்ஸ் மற்றும் எரெத்ரியா (Eretria) ஆகிய இரண்டே நாடுகள்தான் தங்களது படைகளை அனுப்பின. ஆனால் இறுதியில் டாரியஸுக்கே வெற்றி. கிளர்ச்சியை இரும்புக்கரம் கொண்டு நசுக்கினார் டாரியஸ்.

ஆசியாவின் மாபெரும் சாம்ராஜ்யமான தனது சாம்ராஜ்யத்துக்கு வந்த சவாலாக, ஏதென்ஸ் மற்றும் எரெத்ரியா ஆகிய நாடுகள் கிளர்ச்சிக்கு உதவியதை டாரியஸ் எடுத்துக்கொண்டார். இதனால் க்ரேக்கத்தின் மீது படையெடுத்து ஒட்டுமொத்த க்ரேக்கத்தையும் வென்றெடுப்பதாக முடிவுசெய்து, பிரம்மாண்டமான ஒரு படையை உருவாக்கி, தனது தளபதியான மார்டோனியஸைத் (Mardonius) தலைமைதாங்க வைத்தார். இந்தப் படையின் மொத்த எண்ணிக்கை 25,000 என்பது தற்போதைய கணக்கு (க்ரேக்க சரித்திரத்தின் தந்தையான ஹிரோடாடஸ், 600 கப்பல்களில் ஒரு பெரும்படை வந்து இறங்கியதாக சொல்கிறார். கப்பலுக்கு 44 வீரர்கள் என்பதுதான் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கை என்பதால் 25,000).

இந்தப் படை, த்ராஸ் (Thrace) மற்றும் மாஸிடோன் (Macedon – அலெக்ஸாந்தரை நினைவிருக்கிறதா?) ஆகிய நாடுகளை வென்றது. ஆனால் இதன்பின் ஒரு பெரும் புயலில் மாட்டிய இந்தப் படை, அழிந்து சிதறியது. பின்னர் மறுபடியும் டாரியஸ் அனுப்பிய இன்னொரு பெரும்படை, நாம் மேலே பார்த்த எரெத்ரியாவை அழித்து சூறையாடியது. மாரத்தான் (Marathon – ஓட்டப்பந்தயம் ஆரம்பித்த இடம்) என்ற இடத்தில் இந்தப் படை இறங்கியது. அங்கிருந்து ஏதென்ஸுக்குப் படையெடுக்கவேண்டிய நிலையில், ஏதென்ஸின் ஒரு சிறிய படைப்பிரிவுடன் மோதி, அதிர்ச்சிகரமாகத் தோற்றது. தோற்ற படை, பெர்ஷியாவுக்கே திரும்பியது.

இதன்பின்னர் டாரியஸ் முதுமையினால் இறந்தார். அவரது மகனான ஸெர்ஸஸ், பனிரண்டு வருடங்கள் கழித்து கி.மு 480ல் தந்தை அனுப்பிய படையை விடப் பிரம்மாண்டமான ஒரு படையை க்ரேக்கத்துக்குக் கப்பலில் அனுப்ப, இரண்டாம் பெர்ஷிய முற்றுகை தொடங்கியது.

இந்த இரண்டாம் பெர்ஷிய முற்றுகைதான் 300: Rise of an Empire படத்தின் கதை.

[divider]

படத்தைப் பற்றிச் சொல்லாமல் க்ரேக்க வரலாற்றுப் பாடம் எடுப்பதன் நோக்கம், இந்தப் படத்தின் சம்பவங்களின் பின்னணி புரியவேண்டும் என்பதே. இந்தப் படம், எதுவும் தெரியாமல் பார்த்தாலே புரியும் என்பது வேறு விஷயம். இருந்தாலும் பின்னணி தெரிந்தால் இன்னும் சுவாரஸ்யமாகப் படத்தைக் கவனிக்கலாம்.

முன்னதாக முதல் பாகமாக வெளிவந்த ‘300′ படத்தில், இந்த ஸெர்ஸஸின் பிரம்மாண்டமான படையைத் தேக்கி நிறுத்தி முறியடிக்க முந்நூறு வீரர்கள் அடங்கிய ஸ்பார்ட்டா என்ற க்ரேக்க நாட்டின் படை கிளம்பி, அனைவரும் இறந்ததைக் கண்டோம். இது நிஜமாகவே நடந்த சரித்திர நிகழ்வுதான் (ஆனால் கற்பனையான சம்பவங்களுடன்). க்ரேக்கம் என்பது பல நாடுகள் அடங்கிய பகுதி. ஏதென்ஸ், ஸ்பார்ட்டா, எரெத்ரியா, த்ராஸ் (Thrace), மாஸிடோன் போன்ற பல சிறிய நாடுகள். இவற்றில் சில நாடுகள் ஸெர்ஸஸின் தூதுக்கு அடிபணிந்துவிட்டன. ஏதென்ஸ் மற்றும் ஸ்பார்ட்டா ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே ஸெர்ஸெஸுக்கு எதிராக இந்தப் பெரும் போரில் பங்கேற்றன. அதுதான் இந்தப் படம்.

தரைவழியாக வந்த பெர்ஷியன் படையை லியோனிடாஸ் (ஜெரார்ட் பட்லர்) என்ற ஸ்பார்ட்டாவின் மன்னனும் அவனது சிறிய படையும் ஏழு நாட்களுக்குத் தேக்கி நிறுத்தி வைத்தனர். காரணம் அந்தப் பகுதியில் இருந்த ஒரே ஒரு மலைப்பாதைதான். ஆனால், ஸ்பார்ட்டன்களின் படையைச் சேர்ந்த ஒரு துரோகி, பெர்ஷியன் படைகளுக்கு அந்தப் பக்கம் இருந்த இன்னொரு பாதையைக் காட்டிக்கொடுக்க, முன்னேறி வந்த படைகள், லியோனிடாஸைக் கொன்றன. ஸ்பார்ட்டன் படை நிர்மூலமாக்கப்பட்டது. (300 படத்தின் கதை).

300-Rise-of-an-Empire-Spartan-Die

அதே நேரத்தில் கடல்வழியாக வந்த பெர்ஷியர்களின் படையை, இரண்டு நாட்களுக்கு க்ரேக்கக் கப்பல்கள் தேக்கி நிறுத்தின. ஆனால் லியோனிடாஸ் இறந்த செய்தி வந்ததும், அந்தப் படைகள் சலாமிஸ் (salamis) என்ற இடத்துக்குப் பின்வாங்கின. இந்த சலாமிஸ் என்ற இடம், பெரும்பாலும் மலைகளால் ஆனது. அந்த இடத்துக்குள், அந்தப் பகுதியை நன்றாகத் தெரிந்த க்ரேக்கக் கப்பல்படை, பெர்ஷியன் படையை தந்திரமாக அழைத்துக்கொண்டுவந்துவிட (ஓடுவது போல பின்வாங்கிய க்ரேக்கர்களைப் பெர்ஷியர்கள் துரத்தினர்), அந்தக் குறுகலான இடத்தில் கப்பல்கள் ஒன்றின்மீது ஒன்று மோதியும், மலைகளில் இடித்தும் குழம்ப, அவைகளை எளிதாக க்ரேக்கப் படைகள் முறியடித்தன.

இந்தப் போருக்கு க்ரேக்கத்தின் சர்பில் தலைமைதாங்கிய தளபதிதான் நாம் முதல் பேராவில் படித்த தெமிஸ்டாக்கிள்ஸ்.

தரைவழியே வந்த பெரும்படை என்னாயிற்று? அதனை இந்த வரிசையின் மூன்றாவது பாகத்தில்தான் பார்க்கமுடியும்.[divider]

இப்படியாக, ஏற்கெனவே நடந்த சரித்திரத்தை மனதில் வைத்து, ஒரு சில கற்பனைக் கதாபாத்திரங்களையும் சம்பவங்களையும் வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் பெரும்பகுதியைத் தனது மெல்லிய தோள்களில் ஏற்றிக்கொண்டு பிரமாதப்படுத்தியிருக்கும் நடிகை – ஈவா க்ரீன். ஆர்ட்டமீஸியா (Artemisia) என்ற பாத்திரம். இந்த ஆர்ட்டமீஸீயா, நிஜமாகவே இந்தக் கடல் போரில் பங்கேற்றவள். ஸெர்ஸஸின் ஒரே பெண் தளபதி. நாம் மேலே பார்த்த சலாமிஸ் போரில் இறந்துபோய் கடலில் மிதந்துகொண்டிருந்த ஸெர்ஸஸின் சகோதரனின் உடலை அடையாளம் கண்டு, ஸெர்ஸஸிடம் கொண்டுவந்து சமர்ப்பித்த பெண். ஸெர்ஸஸின் ராஜதந்திரியாக வாழந்தவள். ஸெர்ஸஸ் இவளது யோசனைகளை ஏற்றுக்கொண்டதாகவே சரித்திரம் தெரிவிக்கிறது.

Eva green 300

ஈவா க்ரீனின் இந்தக் கதாபாத்திரத்துக்குத் துவக்கத்தில் நேரும் சில கற்பனைச் சம்பவங்களின் மூலம் ஆடியன்ஸின் கவனத்தை இந்தக் கதாபாத்திரம் ஈர்க்கிறது. மட்டுமல்லாமல் படத்தில் ஹீரோவாக வரும் தெமிஸ்டாக்கிள்ஸுக்கு ஏற்ற ஒரு எதிரி இவள்.
[divider]
இப்படியாக, மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் சம்பவங்கள் எப்படி எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதைப் படத்தில் பார்த்துக்கொள்ளுங்கள். எனக்கு இந்தப் படம் பிடித்தது. 300 அளவு இல்லாவிடிலும் (300ல் உறுத்தாத செண்ட்டிமெண்ட் இருந்தது. படத்தின் ஸிஜியை விடவும் அந்த உணர்வுகள்தான் படத்தை ஓடவைத்தன என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை). ஆனால் இந்தப் படத்தில் செண்ட்டிமெண்ட் இல்லை. மாறாக படம் முழுக்கவுமே ஆக்‌ஷன் காட்சிகள்தான். ஆனால் அவை அலுக்கவில்லை. காரணம் புத்திசாலித்தனமாக எழுதப்பட்டுள்ள திரைக்கதை.

ஜாலியாக, ரத்தம் தெறிக்கும் ஒரு ஆக்‌ஷன் படத்தைப் பார்க்க விரும்புபவர்கள் இதைப் பார்க்கலாம்.

பி.கு 1: படத்தின் இறுதியில் மூன்றாவது பாகத்துக்கான விதை தூவப்படுகிறது. அவசியம் அது வரும்.

பி.கு 2 : ஈவா க்ரீனைப் பார்த்தால், zombie நடிகை க்ரிஸ்டென் ஸ்டீவர்ட் (Kristen Stewart) போலவே இருக்கிறது. இருவரும் அவசியம் சகோதரிகளாகவோ அம்மா பெண்ணாகவோ நடிக்கலாம். வித்தியாசமே இருக்காது.

பி.கு 3: க்ரேக்க சரித்திரம் என்று நான் நினைத்தவுடன் என் மனதில் இந்தக் கதையெல்லாம் பொங்கிப் பிரவகிக்கும் நிலையை நான் இன்னும் அடையாததால், இணையத்தில் இருந்தே பெர்ஷிய-க்ரேக்கப் போர்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன்.

பி.கு 4: அனைவருக்கும் தெரிந்த செய்திதான். ஃப்ராங்க் மில்லரின் க்ராஃபிக் நாவலான ‘XerXes’ என்பதுதான் இந்தப் படத்துக்குக் காரணம். அப்படியே, இதுவரை ‘300’ க்ராஃபிக் நாவலைப் படிக்காதவர்கள், ஒருமுறையாவது அதைப் படித்தால், கொஞ்ச காலத்துக்கு க்ரேக்கக் கதைகளின் மீது பித்துப் பிடித்து அலையலாம்.

  Comments

13 Comments

  1. I’ve been reading your reviews for long time, strangely this is the first time I’m commenting. Expected a much better review, but it still looks ‘Okay’ with your ‘usual’ intro to a Movie’s background.

    Watched the movie just today and the experience is mutual.

    A Nice Entertaining action Flick worth watchable in 3D.

    Positives: Eva Green, Nice 3D effects, Better CGI(Naval fights),

    Negatives: Missing strong casts(Compare: Gerard Butler, Fassbender), May be more fast-paced(which is always good but feels like Movie is kinda short).

    Reply
  2. Thank you for the feel to comment here Kishore. I actually wanted to write more, but when I thought about the film, it was full of action scenes which cannot be written, but seen. Hence I decided to write about the background. As you said, the big names are missing. But all of them are dead, and I guess including some more big names would have cost them a lot. This is a slick 100 million movie. I think that’s why they decided to go with an unknown cast.

    Reply
  3. sajud

    எதிர்பார்த்த ரிவியூ வாசித்ததில் மிக்க சந்தோசம். நன்றி அண்ணா

    Reply
    • Rajesh Da Scorp

      Cheers Sajud 🙂

      Reply
  4. anbu

    Please make some article about ‘True detective’

    Reply
    • Rajesh Da Scorp

      It’s the next article Anbu :-).. in 2 days

      Reply
  5. நன்றி கருந்தேள்! இதுக்குத்தான் காத்துக் கொண்டிருந்தேன். இங்கு அமீரகத்தில் போன வாரமே வெளிவந்துவிட்டது. பார்க்க போவ்வொம் என நண்பன் ஒரே நச்சரிப்பு. , ஆனாலும் விமர்சனங்களை பார்த்துவிட்டு செல்வோம் என தாமதித்தேன். அதிலும் உங்கள் விமர்சனம் வருமா என எதிர்பார்த்திருந்தேன். நன்றி.
    கதையின் பின்னணி தெரியாவிட்டால், நிச்சயம் அது ஒரு நிறைவை தராது. நிறைய கேள்விகள் வரும். இப்போது உங்கள் தயவால் கொஞ்சம் விளங்கிவிட்டது. வெள்ளி இரவு சென்றுவிடலாம்.
    மீண்டும் ஒரு முறை நன்றி

    Reply
    • Rajesh Da Scorp

      Cheers Sarhoon. அவசியம் இந்தப் படத்தை நம்பி செல்லலாம். போர் அடிக்காதுன்றது என் கணிப்பு. பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லுங்க

      Reply
  6. Dany

    உங்க விமர்சனம் படித்தவுடன் படம் பார்க்கலாம்ட்டு இருந்தேன்…நன்றி

    Reply
    • Rajesh Da Scorp

      ரைட் பாஸ்

      Reply
  7. உங்கள் விமர்சனம் எப்போதும் சோடை போனதில்லை கருந்தேள் ஜி விமர்சனம் அருமை .உங்கள் மூலம் தான் கிம் கி டுக் என்ற மிகபெரிய ஆளுமையை அறிந்த கொள்ள முடிந்தது . pieta and moebius விமர்சனம் எப்போது எதிர்பாக்கலாம் என்ன கருந்தேள் கிம் ய் மறந்து விட்டிர்களா

    Reply
  8. இன்று தான் இதன் புளுறேய் கிடைத்தது ஆகவே படித்தபின்னர் பார்க்க ஆரம்பிக்கிறேன் நன்றி அண்ணே

    Reply
  9. Hi Vix-OH MY GOSH!!! Lee Bender for £1, what a stunning find, but to be honest all of the other pieces are just wonderful vintage pieces and you certainly struck gold on your shopping trip-I would have been as excited as you to get all these fabulous things, well done! xxx

    Reply

Join the conversation