மொத்தக் கதைகள் 36 – 1

by Karundhel Rajesh April 10, 2013   Cinema articles

முன்குறிப்பு – Georges Polti 1895ல் எழுதிய Thirty-six dramatic situations என்ற புத்தகத்தை இங்கே க்ளிக் செய்து தரவிறக்கிக்கொள்ளலாம். முடிந்தால் இப்புத்தகத்தை ஒருமுறை புரட்டிப்பாருங்கள். இங்க்லீஷ் மூலத்திலேயே புத்தகம் படிக்கவிரும்பும் நண்பர்களுக்கு இது உதவலாம்.

[divider]

இந்தக் கட்டுரையிலிருந்து போல்டி (Georges Polti) அவரது புத்தகத்தில் விளக்கியிருக்கும் 36 சிச்சுவேஷன்களைப் பார்க்கப் போகிறோம். சென்ற கட்டுரையைப் படிக்காமல் இந்தக் கட்டுரையைப் புதிதாகப் படிப்பவர்களுக்காக ஒரு சிறிய அறிமுகம் என்னவென்றால், உலகின் அத்தனை நாவல்கள் மற்றும் நாடகங்கள் ஆகியவை, மொத்தம் முப்பத்தாறே சிச்சுவேஷன்களில் அடங்கிவிடக்கூடியவை என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஃப்ரான்ஸில் பிறந்த எழுத்தாளரான போல்டியின் கணிப்பு. அவரது இந்தக் கணிப்பின்படியே ஒரு புத்தகத்தையும் எழுதினார் போல்டி. அந்தப் புத்தகம் 1895ல் பதிப்பிக்கப்பட்டது. ஆனாலும், தற்போதைய திரைப்படங்கள் மற்றும் நாவல்கள் ஆகியவை மிகப்பெரும்பாலும் போல்டியின் முப்பத்தாறு சிச்சுவேஷன்களில் அடங்கிவிடுகின்றன என்பது ஆச்சரியம். மேலும் விபரங்களுக்கு இந்த முதல் கட்டுரையை க்ளிக் செய்து படிக்கலாம்.

இனி, போல்டியின் 36 சிச்சுவேஷன்கள்.

Situation 1: Supplication – குறையிரத்தல் (அல்லது) உதவி கேட்டு இறைஞ்சுவது

இந்த சிச்சுவேஷனின்படி, நமது கதைக்குத் தேவையான கதாபாத்திரங்களின் எண்ணிக்கை மூன்று. அவையாவன:

கதாபாத்திரம் 1: வில்லன்.
கதாபாத்திரம் 2: உதவி கேட்பவர்
கதாபாத்திரம் 3: உதவலாமா அல்லது வேண்டாமா என்ற முடிவு எடுப்பவர்.

இந்த மூன்று கதாபாத்திரங்களைப் பார்த்தாலே, இந்த சிச்சுவேஷன் என்னவென்று புரிகிறதல்லவா? அதாவது, கொடியவன் அல்லது கொடியவர்களால் துன்புறுத்தப்படும் கதாபாத்திரம் அல்லது கதாபாத்திரங்கள், உதவி கோருவது.  இந்த சிச்சுவேஷன் மொத்தம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.

A. உதவத் தகுதி படைத்த நபர், தனது குடும்பத்தையோ அல்லது தனது விருப்பத்துக்கு உரியவர்களையோ எண்ணி, அவர்களுக்கு வில்லனால் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்று அஞ்சி, வில்லனுக்கு பணிந்துவிடுவது அல்லது பாதிக்கப்பட்ட நபரை எண்ணி கருணை கொண்டு அவர்களுக்கு உதவுவது.

உதாரணம்: ’செந்தூரப்பூவே’ படத்தில் ’தியாகி’ சந்திரசேகர் ராம்கி & நிரோஷாவுக்கு உதவுவது. இது, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவுவதன் உதாரணம். அதேபோல் ‘வைதேகி காத்திருந்தாள்’ விஜயகாந்த். இந்த வேலையை ஒரு காலத்தில் குத்தகைக்கே எடுத்திருந்தார் விஜயகாந்த். அதேசமயம், ‘குருதிப்புனல்’ படத்தில் கமலின் கதாபாத்திரம், வில்லனால் தனது குடும்பத்துக்கு பிரச்னை நேர்ந்துவிடுமோ என்று அஞ்சி, வில்லனுக்குப் பணிந்துவிடுகிறது. இது ஒரு நேரடி உதாரணம் அல்ல. காரணம் இங்கே பாதிக்கப்பட்ட நபர் யாரிடமாவது உதவி கேட்பது – அந்த உதவி செய்யக்கூடிய நபர் வில்லனுக்குப் பயந்து உதவியை மறுப்பது – என்பது இல்லை. இதில் ஒரு பகுதியே (வில்லனுக்குப் பணிவது) குருதிப்புனலில் கமலால் காட்டப்படுகிறது. ஆனால், இந்த விஷயத்தை பல தமிழ்ப்படங்களில் காண முடியும்.

நிஜவாழ்விலும் பண்டைய காலத்தில் இந்தியாவிலும் உலகிலும் நிகழ்ந்த போர்க்களங்களில் இந்த சிச்சுவேஷனைக் காணமுடியும். இரண்டாம் உலகப்போர் இப்படித்தான் நிகழ்ந்தது. போலாண்ட் மீதான ஜெர்மனியின் படையெடுப்பை ஃப்ரான்ஸும் இங்க்லாண்டும் எதிர்த்துப் பிரகடனம் செய்ததால்தான் இரண்டாம் உலகப்போர் உருவானது.  மொகலாய ஆட்சியில் எத்தனை ராஜபுத்திர மாகாணங்களின் மீது மொகலாயர்கள் படையெடுத்தனர் என்பதை எண்ணிப் பாருங்கள். அப்போதெல்லாம் பிற மாகாணங்கள் அவர்களின் உதவிக்கு வந்ததுண்டு. அல்லது மொகலாயர்களைக் கண்டு பயந்து உதவாமல் பணிந்ததும் உண்டு.

இந்த வகைக்குக்கீழ் மொத்தம் மூன்று பிரிவுகள் உண்டு.

A1. எதிரியிடமிருந்து தப்பியோடி வந்த நபரோ அல்லது நபர்களோ, தக்க இடத்திடம் தங்களைக் காத்துக்கொள்ள உதவி கேட்பது.

உதாரணம்: ராமாயணத்தில் விபீஷணன் கதை தெரியுமல்லவா? அண்ணன் ராவணனிடம் தப்பித்து, ராமனிடம் வந்து தஞ்சமடைந்தது. இதே கதையை வைத்து தமிழில் பல படங்களில் கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

A2. புனிதமான காரியம் ஒன்றை நிறைவேற்றுவதற்காக உதவியை நாடுதல். இந்தப் புனிதமான காரியம், தடை செய்யப்பட்ட (forbidden) ஒன்றாக இருக்கும்.

உதாரணம்: ஊரால் தடைசெய்யப்பட்டிருக்கும் கோயில் ஒன்றைத் திறக்கச்சொல்லி பக்கத்து ஊரின் நாட்டாமையிடம் உதவி கேட்பது.

A3. இறப்பதற்கான ஒரு இடத்தை வேண்டி உதவி கேட்பது. அந்த இடத்தில்தான் அமைதியாக உயிரை விட முடியும் என்பதால்.

உதாரணம்: மஹாபாரதத்தின் பீஷ்மர், அர்ஜுனனிடம் அம்புப்படுக்கை கேட்டது.  அந்த அம்புப்படுக்கையிலேயே அமைதியாக உயிரை விட்டது.

முதல் பகுதியில் மூன்று பிரிவுகளைப் பார்த்தோம். இப்போது இரண்டாவது பகுதி.

B. வில்லனின் மனம் திடீரென மாற்றம் அடைவது. இதனால் பாதிக்கப்பட்டவரை வில்லன் விட்டுவிடலாம் அல்லது கொல்லவும் செய்யலாம். இதில் வில்லனும் உதவி செய்பவரும் ஒரே நபர்தான். 

இந்த வகை நான்கு வகைப்படும்.

B1. நடுக்கடலில் கப்பல் மூழ்கி, அதிலிருந்து உயிர்பிழைத்தவர்கள் காப்பாற்றப்படுதல் (இதில் வில்லன் என்பது கடல்).

B2. தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தை அவமானப்படுத்தி, அதனால் அவர்களால் ஒதுக்கிவைக்கப்பட்டபின் அவர்களிடமே மன்னிப்பு கேட்பது

B3. செய்த தவறுக்கு மனம் வருந்தி பிராயச்சித்தம் செய்தல். கருணை மனு, பாவமன்னிப்பு இத்யாதி.

B4. ஒரு பிணத்தையோ அல்லது ஒரு புனிதமான பொருளையோ அல்லது ஒரு நினைவுச்சின்னத்தையோ பெற விரும்புவது.

(இந்தப் பகுதியில் உள்ள நான்கு வகைகளுக்கு உதாரணம் தேவையில்லை என்று நினைக்கிறேன். காரணம் அவை நேரடியாகவே இருக்கின்றன).

முதலிரண்டு பகுதிகளைப் பார்த்தபின், இப்போது மூன்றாவது பகுதியைப் பார்ப்போம்.

C. வில்லன், பாதிக்கப்பட்டவர் மற்றும் உதவி செய்பவர் ஆகியவர்களோடு நான்காவது கதாபாத்திரம் ஒன்று – பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் உதவி செய்யும் தகுதி படைத்தவர்களிடம் பேசி உதவியைப் பெற்றுத் தர முயல்வது – என்பதே இந்த மூன்றாவது பகுதி. கிட்டத்தட்ட வக்கீல்களைப் போன்ற கதாபாத்திரம். ஆனால் வக்கீல்களைப் போல் தொழிலே கண்ணாக இல்லாமல், இரக்கத்தால் நிரம்பிய இதயத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் பேசுவது.

இந்த மூன்றாவது பிரிவு, வழக்கப்படி மூன்று வகைப்படுகிறது.

C1. பாதிக்கப்பட்டவர்களின் சார்பில், அவர்களது சுற்றத்தினருக்காக (அல்லது அவர்களது சமுதாயத்துக்காக) சென்று யாராவது பேசி உதவியைப் பெற முயற்சித்தல்.

C2. ஒரு உறவினரிடம் இன்னொரு உறவினரின் சார்பில் யாராவது சென்று உதவி கேட்பது

C3. தனது தாயை வஞ்சித்த கள்ளத் தகப்பனிடம் அவனது மகன் சென்று நியாயம் கேட்பது (அல்லது தாயின் காதலன் அல்லது முன்னாள் கணவனிடம் யாரேனும் சென்று பேசி சேர்த்துவைக்க முயலுவது அல்லது இந்த ரீதியிலான கதைகள்). இதற்கு உதாரணம் மிஸ்டர் பாரத், அமைதிப்படை போன்ற படங்கள்.

இவைதான் போல்டியின் முதல் சிச்சுவேஷனான ‘உதவி கேட்டு இறைஞ்சுவது’ என்பதில் உள்ள மூன்று பிரிவுகள் மற்றும் அவற்றின் உட்பிரிவுகள்.

கறுப்பில் bold செய்யப்பட்டுள்ள A, B & C ஆகியவையே மூன்று பிரிவுகள். அவற்றின்கீழ் A1, A2, A3 மற்றும் B1, B2, B3, B4 மற்றும் C1, C2 & C3 ஆகியவை இந்த மூன்று பிரிவுகளின் உட்பிரிவுகள் என்பது படிக்கும்போதே தெரிந்திருக்கும்.

போல்டி புத்தகம் எழுதிய காலமான 1895ல் இந்த முதலாவது சிச்சுவேஷனை இலக்கிய உலகம் மறந்துவிட்டது என்று அவர் குறிப்பிடுகிறார். பண்டைய கால நாடகங்கள் (சோஃபோக்ளிஸின் பல நாடகங்களை உதாரணமாக அளிக்கிறார் போல்டி) பலவற்றில் இந்த சிச்சுவேஷன் எடுத்தாளப்பட்டிருக்கிறது என்று சொல்லிவிட்டு, தற்காலத்தில் இதனை இலக்கியம் மறந்தது ஒரு துன்பியல் சம்பவம் என்ற அங்கலாய்ப்போடு இந்த முதலாம் சிச்சுவேஷனைப் பற்றிய அத்தியாயத்தை முடிக்கிறார்.

Situation 2: Deliverance – விடுவித்தல் (அல்லது) காப்பாற்றுதல்

இந்த இரண்டாம் சிச்சுவேஷனுக்கும் நமக்குத் தேவையானவை மூன்று கதாபாத்திரங்கள்.

கதாபாத்திரம் 1: வில்லன்.

கதாபாத்திரம் 2: பாதிக்கப்பட்ட அப்பாவி. வில்லனால் மிரட்டப்படுபவர்.

கதாபாத்திரம் 3: அப்பாவியை வில்லனிடமிருந்து காப்பாற்றும் நபர்

இந்த சிச்சுவேஷன், முதலாவது சிச்சுவேஷனின் நேர் எதிர். அதாவது, முதல் சிச்சுவேஷனில் பாதிக்கப்பட்ட நபர் யாரிடமாவது இறைஞ்சி,  அந்த நபர் இந்த ஆளுக்கு உதவலாமா அல்லது வில்லனுக்குப் பயந்து ஓடிவிடலாமா என்று யோசிப்பதைப் பார்த்தோம். ஆனால் இதில் யாராவது பாதிக்கப்பட்டவுடன் தானாகவே ஹீரோ வந்து குதித்து, வில்லனை அடி பின்னியெடுத்து அப்பாவியை விடுவிப்பது பற்றி சொல்லப்படுகிறது.

இந்த சிச்சுவேஷனுக்கு உதாரணம் தேவையா? பழைய படங்களில் எம்.ஜி.ஆர் இந்த சிச்சுவேஷனில் பின்னிப் பெடலெடுத்ததை நாம் எத்தனை முறை பார்த்திருக்கிறோம்? அதன்பின் ரஜினி இதே ரோலை தனது டெம்ப்ளேட்டாகவே ஆக்கிக்கொண்டவர். குறிப்பாக, எங்க வீட்டுப் பிள்ளை படம் என்னால் மறக்கவே முடியாது. அதில்தான் இந்த டெம்ப்ளேட் அட்டகாசமாக வெளிப்பட்டிருக்கும். ‘எங்களை காப்பாத்த யாருமே இல்லையா?’ என்று பண்டரிபாய் வசனம் பேசும்போது காட்சி கட் ஆகி, ‘நான் இருக்கேன். பயப்படாதீங்க’ என்று ஹீரோ எம்.ஜி.ஆர் வீராவேசமாக சொல்லிவிட்டு சண்டையிடும் காட்சி வரும். அதைப் பார்ப்பதற்கே ஜாலியாக இருக்கும். இந்த ரீதியிலான தமிழ்ப்படங்களில் அதுதான் வெளிப்படையான டெம்ப்ளேட்டுடன் வந்த படம் என்று நினைக்கிறேன். அதே படத்தில் நம்பியாரை சவுக்கால் விளாறும் எம்.ஜி.ஆரை மறக்க முடியுமா?

இங்கே ஒரு குறிப்பு – இந்தப் படத்தில்தான் ‘மறுபடியும் மொதல்லருந்தா?’ என்ற டயலாக் முதன்முதலில் வருகிறது. எம்.ஜி. ஆர் பேய்த்தீனி தின்னும் காட்சியில் பயந்தாங்கொள்ளி எம்.ஜி.ஆர் வந்து இட்லி ஆர்டர் செய்யும்போது சர்வர் சொல்லும் டயலாக் இது.

இந்த சிச்சுவேஷன் மொத்தம் இரண்டு வகைப்படும்.

A. தண்டிக்கப்பட்ட அப்பாவியைக் காப்பாற்ற யாராவது தோன்றுதல்

தண்டனை கொடுத்தல் என்பது இங்கே சட்டப்படி தண்டனை கொடுத்தல் (மட்டும்) அல்ல. வில்லனால் எங்காவது ஒரு வீட்டில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு பெண்ணை ஹீரோ வந்து தானாகவே காப்பாற்றுவது இந்தப் பிரிவின் கீழ் வருகிறது.  இதேபோல் சிறையிலிருக்கும் அப்பாவியை ஒரு வக்கீல் தானாகவே முன்வந்து வாதாடி விடுவிப்பது (To kill a mockingbird), எதிரி நாட்டு சிறையில் இருக்கும் ஒற்றனைக் காப்பாற்றுவது (இணைந்த கைகள்) போன்ற ஒன்லைன்களை இந்த சிச்சுவேஷனிலிருந்து டெவலப் செய்யமுடியும்.

B (1) – பதவியிழந்த தந்தையையோ தாயையோ மறுபடியும் அதே பதவியில் அவர்களின் பிள்ளைகள் அமரவைப்பது

B(2) – முன்னர் செய்த உதவிக்குக் கைமாறாகவோ அல்லது பணத்துக்காகவோ நண்பர்களோ அல்லது அந்நியர்களோ ஒரு கதாபாத்திரத்தைக் காப்பாற்றுவது

Chivalry என்ற ஒரு பதம் உண்டு. பண்டையகாலத்தில் வாந்த வீரர்களுக்கு இது ஒரு இன்றியமையாத பண்பு. வீரம், பணிவு, பரிவு, கருணை, கௌரவம் போன்ற பண்புகளின் கலவையே chivalry. இந்தப் பதத்தையே இந்த இரண்டாவது சிச்சுவேஷனான Deliverance என்பதற்கு உதாரணமாக போல்டி தருகிறார். அதாவது, கதாநாயகன் இப்படிப்பட்டவனாக இருப்பான். அவனது பண்புகளால் தானாகவே சென்று ஆபத்தில் இருப்பவர்களைக் காப்பான்.

[divider]

இரண்டு சிச்சுவேஷன்கள் இப்படியாக முடிகின்றன. பாக்கி இருப்பது இன்னும் 34. அவற்றை இந்த ரீதியில் பார்த்தால் வேறு எதுவுமே எழுத இயலாது என்பதால், படுவேகமாக, சுருக்கமாக மீதம் இருப்பவைகளைப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். அடுத்த கட்டுரையில் சந்திப்போம்.

இந்த சிச்சுவேஷன்களுக்குத் தகுந்த உதாரணங்கள் எதாவது இதைப்படிக்கும் நண்பர்களுக்குத் தோன்றினால் கமெண்ட்களில் அவற்றை எழுதலாம். படிப்பவர்களுக்கு இந்த உதாரணங்கள் உதவும்.

தொடரும்…

  Comments

9 Comments

  1. Karthick Nagendran

    முதல் சுச்சுவேசனுக்கு தாம் தூம் ஒரு சிறந்த எ.கா இதில் ஜெயம் ரவிக்கு ரஸ்யாவில் லட்சுமி ராய் உதவி செய்வது மேலும் ஜெயம் ரவி போலிஸ்லிருந்து தப்பி ஓடுவதால் லட்சுமி ராய் பயந்து விலகுவது மறுபடியும் ரவி மீது இரக்கப்பட்டு உதவி செய்ய வருவது.
    இரண்டாவது சுச்சுவேசனுக்கு தமிழ் பட வரலாற்றையே சொல்லலாம், தமிழ் திரையுலகின் டெம்லேடில் இதும் ஒன்று, இதற்க்கு மிகச்சிறந்த எ.கா கில்லியை சொல்லலாம் ஹிரோ விஜய் தேவையே இல்லாமல் திரிஸாவை காப்பாற்றுவது அதுவே அப்படத்தின் மூலக்கதை

    Reply
    • Rajesh Da Scorp

      நல்ல உதாரணங்கள். தாம் தூம் பற்றி எனது இன்புட் என்னவாக இருக்கும் என்றால், வால் கில்மர் நடித்த ‘The Saint’ திரைப்படத்திலிருந்து சில காட்சிகள் இப்படத்தில் சுடப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். இருந்தாலும் உதாரணங்களை இந்தப் படத்திலிருந்து தருவது தவறே இல்லை. மிக்க நன்றி கார்த்திக்.

      Reply
  2. Rajesh Da Scorp

    நல்ல உதாரணங்கள். தாம் தூம் பற்றி எனது இன்புட் என்னவாக இருக்கும் என்றால், வால் கில்மர் நடித்த ‘The Saint’ திரைப்படத்திலிருந்து சில காட்சிகள் இப்படத்தில் சுடப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். இருந்தாலும் உதாரணங்களை இந்தப் படத்திலிருந்து தருவது தவறே இல்லை. மிக்க நன்றி கார்த்திக்.

    Reply
  3. இந்த பதிவை எப்படி அணுகுறதுனு குழப்பமா இருக்கு. நீங்க சொன்ன படங்கள் போக, பவர் ஸ்டார் படங்களில் இருந்து நிறைய மொக்க+நல்ல படங்களை எப்பிடியும் எதுனா ஒரு சூழ்நிலைக்குள் அடக்கிவிட முடியும் தான. இல்லாத குறியீட கண்டுபுடிக்கிற மாதிரி படங்கள(நாடகங்கள்/நாவல்கள்/கதைகள் அதையும் சேர்த்துக்குவோம். போல்டி அதை மனசுல வெச்சுதான எழுதியிருக்கார்) இதுபோல அணுகுவதால், ஒருவித one-dimensional பார்வை வராதா….தவிர, எந்தவிதத்தில் படங்கள் பற்றி நமது பார்வையை இது விசாலப்படுத்தும்னு நெனைக்கிறீங்க…….இதெல்லாம் யோசிச்சிருபீங்க…அதைத்தாண்டி தொடரா இத்த எழுதக் காரணம் ?

    Reply
    • Rajesh Da Scorp

      படங்கள் பற்றிய நம்ம பார்வையை இது விசாலப் படுத்தாமல் இருக்கலாம். ஆனால், படங்கள் எந்தெந்த காடகரியில் அடங்குதுன்னு ஓரளவாவது இது தெரியப்படுத்துதுன்னு நினைச்சேன். கூடவே, பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே ஒன்லைன்கள் பத்தி ஒரு ஆசாமி எழுதி வெச்சிருக்காரு என்பதையும் கொஞ்சம் சொல்லலாம்னு தோணிச்சி. அதான் இது. போல்டி ஆக்சுவலா பல பண்டையகால நாடகங்களின் உதாரணங்கள் பல கொடுத்துடுக்காரு. அந்த நாடகங்க, இப்போதைய படங்களோட டைரக்டா காரலேட் ஆவுது. இன்னொண்ணு – இந்த ஒன் லைன்கள் இனிமே திரைக்கதை எழுத நினைப்பவங்களுக்கு மிக மிக மிக லைட்டான ஒரு guidanceஆ கூட இருக்கலாம்னு தோணிச்சி.

      Reply
  4. viruchigam

    the life of David Gale-Kevin Spaceyயின் காதாப்பாத்திரம் journalist இடம் உதவி கேட்பது-இது எந்த ரகம்-இதில் வில்லனே இல்லையே.

    situation 1-B-3:10 to Yumaவில் Russell Croweவின் காதாப்பாத்திரம்-ஆனால் இது B1,B2,B3,B4 என்பவற்றில் எந்த வகை என்று தெரியவில்லை,நேரம் இருந்தால் விளக்கவும்.

    தமிழில் இவ்வாறு கட்டுரைகள் எழுதுவதற்க்கு நன்றி.பத்திரிக்கைகளில் எழுதலாமே.

    Reply
    • Rajesh Da Scorp

      Super. லைஃப் ஆஃப் டேவிட் கேல் படத்தின் உதாரணம், இதோ அடுத்த கட்டுரையில் வரக்கூடிய சிச்சுவேஷன் நம்பர் 7 – Falling Prey to Cruelty or Misfortune என்பதன் உதாரணம். அதுலயும் குறிப்பா An innocent is made the victim of ambitious intrigue.என்ற சப் கேடகரியின் உதாரணம் பாஸ்.

      அதேபோல், 3:10 டு யூமா உதாரணம் அட்டகாசம். கச்சிதமா புடிச்சீங்க.. அந்த நாலு வகைலயும் இது அடங்காது. அந்த சிச்சுவேஷன் B – வில்லன் மனமாற்றம் அடைவது என்ற ஜெனரல் சிச்சுவேஷன்லயே இது வந்துருது.. அப்படி எடுத்துக்க வேண்டியதுதான்.

      பத்திரிக்கைகள் பத்தி – நானா அப்ரோச் செய்ததில்லை இதுவரை. அதனால் நண்பர்கள் நடத்தும் இணையப் பத்திரிக்கைகளில் எழுதிக்கிட்டு இருக்கேன். விரைவில் அதைப்பத்தி போஸ்ட் போடுறேன்.உங்க கருத்துக்கு மிக்க நன்றி விருச்சிகம் (கருந்தேள் ப்லாக்ல விருச்சிகத்தோட கமெண்ட்)….

      Reply
      • viruchigam

        என் ராசி விருச்சிகம் அதுதான்.பதில் எழுதியமைக்கு நன்றி.

        Reply
        • Rajesh Da Scorp

          Me too boss 🙂

          Reply

Join the conversation